விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தால் ஒரு வேளை பொங்கல் என்பது உற்சாகமான கொண்டாட்டமாக இருந்திருக்கலாம். ஆனால் ஒன்னாம் தேதி சம்பளம் வாங்கிய பெற்றோருக்கு மகனாகப் பிறந்ததால் பொங்கல் என்பது ஒருபோதும் உவப்பூட்டும் கொண்டாட்டமாக இருந்ததில்லை. பள்ளிப் பருவத்தில் நண்பர்களின் வீடுகளுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. கட்டியாய் பச்சரிசி சோறு பருப்பு பொங்கிவழியும் சாம்பாருடன் காய்கறிகளைச் சேர்த்து உண்ட நாள்கள் மட்டுமே நினைவில் உள்ளன. ரஜினி காந்தின் விசிறியாக இருந்ததால் ஏதாவது ஒரு திரைப்பட வாசலில் தான் பொங்கல் விடியும். மன்னன், பணக்காரன் போன்ற ஒருசில படங்கள் பார்த்த நினைவு உள்ளது. மன்னன் படம் ஸ்ரீபாக்கியலட்சுமி தியேட்டரில் வெளியானது. காலையில் நான்கரை மணிக்கெல்லாம் படம் தொடங்கிவிட்டது. ஏழு மணிக்கெல்லாம் படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். என்னவோ சொர்க்கத்திற்கே போய்விட்டு வந்தது போன்ற நினைப்பு. அன்று முழுவதும் தூங்கியே கழித்தேன். 1991 என்று ஞாபகம்.
ரஜினி காந்தின் ரசிகனாக இருந்ததை இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது. முதன்முதலில் மாவீரன் படம் தென்காசியில் ரிலீஸானது. அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். 1986 நவம்பர் 1, தீபாவளி அன்று அப்படம் வெளியானது. நடிகர் ரஜினி காந்த் முதன்முறையாகத் தயாரித்த திரைப்படம் அது. 70 எம்எம்மில் வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் அது. ஆனால், சில பிரிண்ட் மட்டுமே 70MM பிற இடங்களில் சாதாரணமான திரைப்படமாகவே வெளியானது. அமிதாப் நடித்த மர்த் என்னும் இந்திப் படத்தின் ரீமேக் தான் மாவீரனானது. அந்தப் படத்தின் ஆடியோ கேஸட்டில் ரஜினி காந்த பேசிய பேச்சு நீண்ட நாள்களாக மனத்தில் நிலைபெற்றிருந்தது. ஆலமரம் போன்ற எனது அத்தனை வளர்ச்சியும் ரசிகர்களாகிய உங்களையே சேரும் என்பார். இதோ அந்த மாவீரனின் குரல் இப்போது கூட எங்கோ ஒலித்துக்கொண்டிருக்கிறது என ரஜினி பேசவும் ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு என்ற பாடல் மலேசிய வாசுதேவனின் குரலில் ஒலிக்கத் தொடங்கும். (http://www.youtube.com/watch?v=98oPEtvmPUw)
நன்றி: www.envazhi.com |
அந்தத் தீபாவளிக்கு பாக்கியலட்சுமியில் மாவீரன் என்றால் பரதனில் அம்மன் கோவில் கிழக்காலே. மாவீரனைவிட இரண்டு மூன்று நாட்கள் அதிகமாக அம்மன் கோவில் கிழக்காலே படம் ஓடியது. அப்போது மிக வருத்தமாக இருந்தது. ஏனெனில், அம்மன் கோவில் கிழக்காலே செகண்ட் ரிலீஸ்தான். ஆனால், மாவீரன் தென்காசியில் ரிலீஸ், இருந்தும் அது குறைவான நாட்களே ஓடியது. அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் விஜயகாந்தை நடிகை ராதா சாட்டையால் அடிப்பார். மாவீரனில் அம்பிகா ரஜினியைச் சாட்டையால் அடிப்பார்.
ரஜினி காந்த் தயாரித்த மாவீரன் படுதோல்விப் படம். மாவீரன் வெளியான தீபாவளி அன்று நான் நண்பன் கோமதிநாயகத்தின் அண்ணன் ரமேஷுடன் தியேட்டருக்குச் சென்றேன். அங்கு நண்பன் காசிமும் வந்திருந்தான். பாக்கியலட்சுமி தியேட்டரை இப்போது இடித்து பிஎஸ்எஸ் காம்ப்ளக்ஸ் என மாற்றிவிட்டார்கள். மாற்றியபிறகு மங்காத்தா படம் அங்கு பார்த்தேன். பாக்கியலட்சுமி தியேட்டருக்குப் படம் பார்க்கப் போன நாள்களில் பல இன்னும் நினைவில் பசுமையாய் உள்ளன. தியேட்டரில் டிக்கெட் வாங்கி உள்ளே முன்பகுதியில் காத்திருப்போம். தியேட்டரை மூடியுள்ள கதவில் உள்ளே சிறு கதவு வழியே திறந்து பார்த்தால் தியேட்டரின் திரை தெளிவாகத் தெரியும். தீர்ப்பு படத்தின் இறுதிக்காட்சியில் இடம்பெறும் ஜீப் சேஸிங் காட்சியை அந்த துவாரக் கதவு வழியே பார்த்ததை இப்போதுகூடத் துல்லியமாக நினைவுகூர முடிகிறது. பாக்கியலட்சுமியில் தனியாகப் பார்த்த முதல் படம் தங்கைக்கோர் கீதம். அப்போது இலஞ்சியிலிருந்து தென்காசிக்குப் பேருந்துக் கட்டணம் வெறும் நாற்பது பைசா. கையில் ஒரு ரூபாய் இருந்தால் போதும் படம் பார்த்துவிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக