இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், ஜூலை 04, 2022

உத்திரமாய் மனதில் விழுந்த காதல்


நேற்றிரவு மனம் ஒருநிலையில் இல்லை. அண்மைக்காலமாகவே அடிக்கடி அப்படியொரு மனநிலை வாய்த்துவிடுகிறது. எதையுமே செய்யாமல் இருப்பது தொடர்பான ஒருவிதமான அலுப்பை மனம் உணர்கிறது. இரவில் ஏதாவது ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். என்ன படம் பார்ப்பது என ஒரு முடிவுக்கு வராமலேயே மடிக் கணினியைத் திறந்தேன். அது என்னை ப்ரீஃப் என்கவுண்டர் என்னும் படத்தைப் பார்க்கச் சொன்னது. படத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர் அது குறித்த விவரங்களைப் பார்த்தேன். 

டேவிட் லீன் இயக்கிய பிரிட்டிஷ் படம் இது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த ஆண்டில், 1945இல் வெளிவந்திருந்த படம். என்கவுண்டர் என்னும் சொல்லை வைத்துப் படம் கொலை தொடர்பானது என மனம் முடிவுசெய்திருந்தது. ஆனால், படம் திருமணத்துக்கு வெளியேயான காதல் தொடர்பானது. கறுப்பு வெள்ளைப் படம். வெறும் எண்பத்தாறு நிமிடங்கள்தாம் படம். 

லாரா என்னும் நடுத்தரவர்க்கத்துப் பெண்மணிக்கும் அவர் யதேச்சையாக ரயில் நிலையத்தில் சந்திக்கும் அலெக் என்னும் டாக்டருக்கும் இடையில் உருவாகும் காதல் தான் படத்தின் மையப் பொருள். லாராவுக்கு ஓர் அழகான குடும்பம் உள்ளது. அன்பான கணவர், ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகள். அவள் வாரம் தோறும் வியாழக் கிழமை அன்று அருகிலுள்ள நகரத்துக்குச் சென்று ஷாப்பிங், ரெஸ்டாரெண்ட், சினிமா எனப் பொழுதைக் கழிக்கிறாள். அப்படி வெளியே செல்லும் போதுதான், அலெக் உடன் அவளுக்கு நட்பு உருவாகிறது. 

ஒருநாள் ரயில் நிலையத்தின் தூசு ஒன்று அவள் கண்ணில் விழுந்துவிடுகிறது. அதை எடுக்கும் முயற்சியில் அவளுக்கு உதவுகிறான் அலெக். கண்ணிலிருந்த தூசை எடுத்த அலெக் உத்திரம் போன்ற காதலை மனதில் போட்டுவிடுகிறான். முதல் சந்திப்பில் காதலாகவெல்லாம் அது மாறவில்லை. ஓர் அறிமுகம் மட்டுமே அப்போது கிடைக்கிறது. அறிமுகம் மெதுமெதுவாக நட்பாக மாறி, ஒரு கட்டத்தில் காதலாகக் கனிந்துவிடுகிறது. அலெக்குக்கும் குடும்பம் உள்ளது. மனைவியைப் பற்றிச் சொல்கிறான். ஆனால், அவனது குடும்பம் திரையில் காட்டப்படவில்லை. 


ஒரு வியாழக்கிழமை இருவரும் படத்துக்குச் செல்கிறார்கள். இன்னொரு முறை காரில் உலாப் போகிறார்கள். அருகிலுள்ள கிராமத்துக்குச் செல்கிறார்கள். அங்குள்ள ஆற்றுப் பாலத்தில் சிறிது நேரம்  செலவிடுகிறார்கள். இப்படி அவர்களது உறவு ஆழமாக வேர் விட்டு விடுகிறது. லாராவுக்கும் இந்தக் காதல் முதலில் தித்திப்பாகத்தான் இருக்கிறது. நாளாக நாளாக தான் செய்வது சரியா என்ற கேள்வி எழுந்துவிடுகிறது. இப்போது, இந்தக் காதல் தொடர்ந்தால் தனது வாழ்வு என்ன ஆகும் என்ற கேள்வி மனதில் எழ அச்சமும் நிம்மதியின்மையும் அவளை அலைக்கழிக்கின்றன. ஆனாலும், வியாழன் தோறும் அலெக்கைப் பார்க்காவிட்டால் அவளுக்கு மனம் இருப்புக்கொள்வதில்லை. தவறென்று தெரிந்தும் மனம் அதையே நாடுவதை எப்படித் தவிர்க்க என அந்தப் பேதைப் பெண்ணுக்கும் டாக்டர் பட்டம் பெற்ற அந்த ஆணுக்கோ தெரியவில்லை. ஆனாலும், எல்லா உறவுக்கும் ஒரு முடிவு வந்துதானே ஆகவேண்டும். அவர்கள் காதலுக்கும் ஒரு முடிவு வந்துவிடுகிறது. அந்த முடிவை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் படத்தில் பாருங்கள். 

படத்தில் ரயில் நிலையம், அதன் பயணியர் உணவகம், திரையரங்கம், லாரா வீடு ஆகியவையே திரும்பத் திரும்ப இடம்பெறுகின்றன. கறுப்பு வெள்ளைப் படம் என்பதால் இயல்பாகவே காட்சிகள் ஈர்க்கின்றன. பயங்கரமான ஒலியெழுப்பியபடி தூசு பரப்பி ரயில் விரைந்து செல்லும் காட்சி அப்படியே மனதில் ஒட்டிக்கொள்கிறது. ஒரு நடுத்தர வயதுக்குரிய பெண்மணியின் உணர்வுகளை எல்லாம் அப்படியே நடிப்பில் கொண்டுவந்து, ஒரு பெண்மணியின் வாழ்வை நேரில் பார்ப்பது போன்ற எண்ணத்தைக் கொண்டுவந்துவிடுகிறார் லாராவாக நடித்திருக்கும் செய்லா ஜான்சன். அலெக்கின் நண்பருடைய அபார்ட்மெண்டில் ஓர் இரவு நேரத்தில் அலெக்குடன் லாரா இருக்கும்போது, அலெக்கின் நண்பர் திரும்பிவந்துவிடுகிறார். அலெக் பின் கதவு வழியே லாராவை அனுப்புகிறான். அந்த இரவில் அவளுடைய மனம் படும் பாடு... காதல் ஒரு பக்கம் சுயமரியாதை இழப்பு தந்த வலி ஒரு பக்கம் என அவளைத் துன்புறுத்துகிறது. 

நோயல் கவர்டு எழுதிய ஸ்டில் லைஃப் என்னும் நாடகமே இந்தப் படமாக உருமாறியுள்ளது. படத்தின் திரைக்கதையை நோயல் கவர்டு தான் எழுதியுள்ளார். அலெக்குடன் இறுதியாக விடைபெறும் தருணத்தில் சிவபூஜையில் கரடி போல் வந்து சதா பேசிக்கொண்டே இருக்கும்போது, லாராவின் தவிப்பை வசனங்களேயின்றி வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் நோயல் கவர்டு. தனது காதலனை இனி ஒருபோதும் பார்க்க முடியாது என்பதால் இறுதியில் அவனோடு விடைபெறும் தருணத்தை வாழ்வின் உன்னதத் தருணமாக நினைத்து எதிர்கொள்ளத் தயாராகும் லாராவால் அதை அப்படி எதிர்கொள்ள முடியவில்லை. தோழி ரூபத்தில் அந்தத் தருணம் தடைப்படுகிறது. அந்தக் கணம் உயிரை விட்டுவிடலாமா என்னும் எல்லைக்கே போய்விடுகிறாள் லாரா. 


மத்தியதர வயதில் வந்த காதல் லாராவையும் அலெக்கையும் பள்ளி மாணவர்கள் போல செயல்பட வைக்கிறது. அவர்கள் மனம் அந்தக் காதலின் உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறது. காதல் பூரணமாக அரும்பிய பின்னர் இது சரிப்பட்டுவருமா என்ற வேதனைத் தழல் நெருப்பை அள்ளி மனத்தில் வீசுகிறது. காதலுக்குப் பின்னான காதல் தொடர்பாக சமூகம் என்ன சொல்லும், அது சரியாக வருமா என்ற தனிமனிதர்களின் தத்தளிப்பு இன்னும் தொடரும் சூழலில் தானே உலகம் உள்ளது. அப்படியொரு தடுமாற்ற உணர்வுக்கும் தன்னிலை மறக்கச் செய்யும் காதல் உணர்வுக்கும் இடையில் அல்லாடும் மனிதர்களைப் பற்றிய படமா இது இருப்பதால் என்றென்றைக்குமான படமாகிறது. 

1946 ஆம் ஆண்டில் நடைபெற்ற கேன் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருதுவென்ற திரைப்படம் இது. டேவிட் லீன் இயக்கிய ஆலிவர் ட்விஸ்ட், த ப்ரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய், லாரென்ஸ் ஆஃப் அரேபியா, டாக்டர்  ஷிவாகோ, ரேயான்ஸ் டாட்டர் ஆகிய படங்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்தவை. அகத்தில் நிகழும் மாற்றங்களை, எண்ணவோட்டங்களைக் காட்சிகளில் வெளிப்படுத்தி, உயர்தர திரைப்பட அனுபவம் தருவதில் மாஸ்டர் டேவிட் லீன். தன் கணவனிடம் லாரா வாக்குமூலம் போலச் சொல்வதாகத் தான் திரைக்கதை  அமைந்துள்ளது. அவளது மனவோட்டங்களையும் நினைவோட்டங்களையும் ஒரு நேர்த்தியான திரைக்கதைக்குள் கொண்டுவந்து அதை எப்போதும் பார்ப்பதற்கான சினிமாவாக மாற்றியதில் டேவிட் லீன் தனித்துத் தெரிகிறார்.     

செவ்வாய், ஏப்ரல் 12, 2022

விரும்புகிறேன்

யூடியூபில் பழைய படங்களை அவ்வப்போது பார்ப்பது வழக்கம். அப்படி ஒரு படத்தைப் பார்ப்பதற்கு ஏதாவது ஒரு தூண்டுகோல் தேவைப்படும். அந்தப் படத்தைப் பற்றி எதையாவது கேள்விப்பட்டால் பார்க்கத் தோன்றும். அண்மையில் வெளிவந்த டாணாக்காரன் படத்தில் சாதி தொடர்பான காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் நடித்த பழையபடத்தில் அவர் சாதிப்பெயரைப் பெருமையுடன் சொல்லும் காட்சியையும் விக்ரம் பிரபு சாதி பற்றிக் கேட்பதன் அபத்தத்தைச் சொல்லும் காட்சியையும் இணைத்து ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதைக் கண்டவுடன் இதைப் போல் சாதி தொடர்பான ஒரு காட்சியை விரும்புகிறேன் படத்தில் பார்த்த நினைவுவந்தது. எனவே, அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற  எண்ணம் வந்து. யூடியூபில் தேடினால் படம் கிடைத்தது. 

சுசி கணேசன் இயக்கிய முதல் படம் இது. ஆனால், படம் காலதாமதமாகத் தான் வெளியானது. அதற்குள் அவர் ஃபைவ்ஸ்டார் படத்தை இயக்கிவிட்டார் என ஞாபகம். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் சுசி கணேசன். இவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் மௌனகுரு, மகாமுனி ஆகிய படங்களை இயக்கிய சாந்தகுமார். படம் வந்தபோதே பார்த்திருக்கிறேன். பொதுவாகத் தமிழ்ப் படங்களில் பாரதிராஜா பாதிப்பிலான கிராமங்களைத்தாம் அதிகம் பார்க்க முடியும். ஆனால், சுசி கணேசன் காட்டிய கிராமம் முற்றிலும் வேறான ஒரு கிராமமாக இருந்தது. 

படத்தின் கதைக் களமும் புதிது. கதாநாயகனாக பிரசாந்த்  நடித்திருந்தார். பிரசாந்தை நடிகராகப் பார்க்க முடிந்த படங்களில் இதுவும் ஒன்று. சிநேகாவின் அறிமுகப் படம் இது. ஆனால், அவர் நடித்த என்னவளே இதற்கு முன்னரே வெளியாகிவிட்டது. நடன இயக்குநர் கலாவின் உறவுக்காரப் பெண்ணான சிநேகா இந்தப் படத்தில் வசீகரமான கிராமத்துப் பெண்ணாக வலம்வருகிறார். தந்தைக்கு அடங்கிய அப்பாவின் பெண்ணான தவமணி- அவரது கதாபாத்திரப் பெயர் இதுதான் - காதல் பிறந்தபிறகு துணிச்சலும் தைரியமும் கொண்ட பெண்ணாக மாறிவிடுகிறார். இரண்டின் சுபாவங்களையும் இயல்பாகச் செய்திருந்தார் சிநேகா. 

சுசி கணேசன் எழுதிய வாக்கப்பட்ட பூமி என்னும் நாவலே இந்தப் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கண்ணின் கடைப்பார்வையைக் காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் இளைஞர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்னும் கவிதை வரிகளுக்குத் தகுந்த காட்சியாக்கம் ஒன்று படத்தில் உண்டு. கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவில் ஒரு கிராமத்தின் வேறுபட்ட தோற்றங்களைப் படம் காட்சிப்படுத்தியிருந்தது. தீயணைப்பு வீரர் சிவனாகப் படத்தில் நடித்திருந்தார் பிரசாந்த். தீயணைப்பு வீரரான தந்தை பணியின்போது மரணமுற்றதால் அந்த வேலையில் சிவன் சேர வேண்டியதாகிவிடும். அவருக்கு இரண்டு தம்பிகள். இருவரையும் கரையேற்றும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வார். அதே போல் தவமணிக்கும் இரண்டு தங்கைகள். அம்மா இல்லாத குடும்பம் அவர் அம்மா நிலையிலிருந்து தங்கைகளைக் கரையேற்ற வேண்டியதிருக்கும். இவர்கள் இருவருக்கும் காதல் முளைத்துவிடுகிறது. அந்தக் காதல் அவர்களை என்ன செய்தது, இவர்கள் காதலால் தவமணி வாழ்ந்த கிராமம் என்ன ஆனது என்பதைப் படம்  கூறும். 

நல்ல காரியத்துக்காக ஒன்றுசேராத கிராமம் காதலைப் பிரிக்க ஒன்றுசேரும். சாதி என்னும் பித்து கிராமத்து மனிதர்களின் மனங்களில் எவ்வளவு கேட்டைக் கொண்டுவந்துசேர்க்கும் என்பதையும் படம் தெரிவிக்கும். காதல் காட்சிகளும் பாடல்களும் காட்சிப்படுத்தியிருந்த விதமும் ரசனைக்குகந்தவை. ஈஸ்வரி ராவ் ஏற்றிருந்த லதா என்னும் கதாபாத்திரம் மிகவும் ஈர்ப்புக்குரிய ஒன்று. தினந்தோறும் படத்தில் வரும் ரேணுகா கதாபாத்திரம் போல் இதுவும் சுவாரசியமான பாத்திரப் படைப்பு. நாசர், லிவிங்ஸ்டன், ஸ்ரீமன், செந்தில், வினுச்சக்ரவர்த்தி எனப் பல நடிகர்கள் படத்துக்கு உயிரூட்டியிருந்தனர்.    

என்னதான் கிராமத்துக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி ஒடுங்கி நடந்த பெண்ணாக இருந்தாலும் காதல் தோன்றிவிட்டால் அவர் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் துணிவு பெற்றிடுவார் என்னும் கருத்துக்குப் படம் வலுச்சேர்த்திருந்தது. இசை தேவா. பாடல்கள் சில முணுமுணுக்கவைக்கும். சிநேகாவின் கள்ளம்கபடமற்ற அழகை ஆனந்தின் கேமரா வாழையிலை விருந்தாகத் திரையில் காட்சி படுத்தியிருந்தது. படம் போரடிக்காமல் செல்கிறது. இடையிடையே பாடல்கள் அடிக்கடி வந்தபோதும்,  அவையும் காட்சி விருந்தாக அமைவதால் பார்க்க முடிகிறது. படத்தின் பெண் கதாபாத்திரங்கள் சுவாரசியமானவை. வில்லத்தனமான தந்தை  தரும் தண்டனை விநோதமானது. மகள் காதலனுக்கு எழுதிய கடிதத்தை ஊரறிய வாசிக்கச் செய்யும் காட்சி அதற்கோர் உதாரணம். அந்தக் கடிதத்தை வாசிக்கும் குட்டி தங்கை பார்வையாளர்களை ஈர்த்துவிடுவார். குடும்பக் கடமை இருந்த இருவருக்கிடையே காதல் முளைத்தால் கடமை என்னவாகும், காதல் என்னவாகும் என்ற கேள்விக்கெல்லாம் விடையாக இருக்கும் படம். வழக்கமான பொழுதுபோக்குப் படம் என்றபோதும், அந்த எல்லைக்குள் மாறுபட்ட காட்சியனுபவத்தைத் தந்துவிட வேண்டும் என்ற இயக்குநரின் முனைப்பு படத்தை மாறுபட்டதாக்கிவிடும். நேரம் கிடைத்தால் தாராளமாக ஒருமுறை பார்க்கக்கூடிய படம் விரும்புகிறேன்.