ஜெயராஜ், பென்னிக்ஸ் |
அண்மையில் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தையும் மகனும் காவல் துறை அதிகாரிகளின் சித்திரவதையைத் தொடர்ந்து, உயிரிழந்துள்ள விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையினரின் அத்துமீறல் சாமானிய மக்களைக்கூடக் கோபம் கொள்ளவைத்துள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் தமிழ்த் திரைப்படங்களில் உருவாக்கப்பட்ட போலீஸ் கதாபாத்திரங்கள் குறித்தும், அவை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்தும் பலமான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. சமூகத்தில் எந்தத் தீங்கு நடைபெற்றாலும் அதில் திரைத்துறையைத் தொடர்புபடுத்த வேண்டுமா என்று கேட்கலாம். ஆனால், நம் சமூகத்தில் திரைப் பிரபலங்களுக்கு இருக்கும் செல்வாக்கு, புறந்தள்ளக்கூடியதல்ல. திரைப்படங்களில் முப்பது நாற்பது ஆண்டுகள் நடித்த அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அரசியலில் இறங்கி, ஆட்சியைப் பிடிக்க நடிகர்கள் துணிந்து கால்பதிக்கும் காலம் இது. இப்படியான காலத்தில் திரைத்துறையினரது பங்களிப்பு குறித்துக் கேள்வி எழுவதும் இயல்பான ஒன்றுதான்.
ஆக்ரோஷமான காவல் துறை அதிகாரிகளை நாயகர்களாகக் கொண்டு நான்கைந்து படங்களை உருவாக்கியவர் இயக்குநர் ஹரி. “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்றா பார்க்கிறியா?” என்று ஆக்ரோஷமாக நடிகர் சூர்யா, ஹரியின் ‘சிங்கம்’ படத்தில் பேசிய வசனம் தமிழர்களின் காதைப் பதம் பார்த்தது. இவரது ‘சாமி’ திரைப்படத்தில் ‘நான் போலீஸ் இல்ல பொறுக்கி’ என, டெபுடி கமிஷனர் ஆஃப் போலீஸ் திருநெல்வேலி, ஆறுச்சாமி வெறியுடன் முழங்குவார். ‘சாமி’ திரைப்படத்தில் ஆறுச்சாமி வலக் காலால் செங்கலை உதைக்க அது படுவேகமாகப் பாய்ந்து சென்று தவறிழைத்த காவல்துறை அதிகாரி அமர்ந்திருக்கும் போலீஸ் ஜீப்பின் கண்ணாடியைத் துளைத்துச் செல்லும்.
நிஜத்தில் இப்படிச் செங்கல்லை உதைத்திருந்தால் அந்த நடிகரின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். குறைந்தது ஒரு மாதமாவது மருத்துவமனையில் கட்டுப் போட்டுப் படுத்திருப்பார். யதார்த்தத்துக்குச் சற்றும் பொருந்தாமல் இப்படித்தான் திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரங்கள் அயோக்கியர்களைத் தெறிக்கவிடுபவையாகவும் அநீதி கண்டு பொறுக்க முடியாமல் நீதியை நிலைநாட்டத் துடிப்பவையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால், நிஜத்தில் பெரும்பாலான காவலர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்? காவல்துறையைப் பெருமைப்படுத்திப் படங்களை உருவாக்கிய இயக்குநர் ஹரியே அதற்காகத் தான் வேதனைப்படுவதாகத் தெரிவித்துள்ளார் எனில், காவல் துறையினரைத் திரைத்துறை எந்த அளவுக்கு விதந்தோதியுள்ளது என்பது தெள்ளத்தெளிவு.
ஆறுச்சாமிக்கெல்லாம் அப்பன் என்று சொல்லத்தக்க பாத்திரத்தில் நடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். ‘மூன்று முகம்’ திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த டி.எஸ்.பி. அலெக்ஸ் பாண்டியன் ‘ஷீலா ஷீலா’ என மனைவியை அழைத்தபடி திரையில் நடந்துவரும்போதே தீப்பொறி பறக்கும். மிடுக்கும் கம்பீரமும் குரலில் தொனிக்க முறுக்கிவிட்ட இரும்புக் கம்பி போல் விரைப்புடன் அவர் நடந்துவரும் காட்சிகளில் திரையரங்குகளில் விசில் சத்தம் காதைக் கிழிக்கும். மனைவியிடமே இப்படி நடந்துகொள்கிறார் என்றால் வில்லன்களை விட்டா வைப்பார், சும்மா பந்தாடிவிட மாட்டாரா? அலெக்ஸ் பாண்டியனின் ஆர்ப்பாட்டத்தை வெளிப்படுத்த, இப்படத்தில் காவல் நிலையத்தில் வில்லன் செந்தாமரையிடம் அவர் பேசும் காட்சி ஒன்றுபோதும். இதே ரஜினி காந்த் நடித்த ‘தர்பார்’ படத்தில் மனித உரிமை அதிகாரிக்கே மிரட்டல் விடுப்பார். அதை விடுங்கள், மணி ரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த ‘தளபதி’ படத்தில் தவறிழைத்த காவல் துறை அதிகாரியை நடு ரோட்டில் கையை வெட்டும் சூர்யா கதாபாத்திரம். “தப்பு செஞ்சா வெட்டு அவன் கையை இனி ஒரு பொண்ணத் தொடுவானா” என வீரம் சொட்டச் சொட்ட வசனம் பேசுவார் ரஜினி காந்த். இந்த ரஜினி காந்த் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது செய்தியாளர்களிடம் என்ன பேசினார், எப்படிப் பேசினார் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
திரையில் போலீஸ் அக்கிரமத்தைத் தட்டிக்கேட்ட ரஜினி காந்த் நேரில் அரசின் கரத்தை வலுப்படுத்தும் மனிதராகத்தான் முகம் காட்டினார் என்பதை மறந்துவிடக் கூடாது. ஏனெனில், ஏறக்குறைய 20 படங்களில் போலீஸ் கதாபாத்திரமேற்று நடித்த ரஜினிக்குத் திரையில் எப்படி நடிக்க வேண்டும், நேரில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற தெளிவு உண்டு. இந்தத் தெளிவு பார்வையாளர்களுக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி. பார்வையாளர்கள் திரையில் போலீஸ் கதாபாத்திரங்களின் அடாவடியை ரௌடிகளை அடக்கியாளும் துணிவை நேரிலும் பார்க்க விரும்பத் தான் செய்கிறார்கள். ஆனால், நேரில் அப்படியெல்லாம் செய்துவிட முடியாது என்னும் புரிதல் பெரும்பான்மையான பார்வையாளர்களிடம் இல்லை. அதிலும், இளவயதில் காவல் துறையில் பணியில் சேரும் அதிகாரிகளிடம் இந்தப் புரிதல் எந்த அளவுக்கு இருக்குமோ? திரைக்கும் நிஜத்துக்குமான வேறுபாடு அறியாத இளைஞர்களிடம் அதிகாரமும் ஆயுதமும் கிடைக்கும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவை மக்களைப் பாதுகாக்க என்னும் எண்ணத்தைவிட அவற்றைப் பயன்படுத்திப் பார்க்கும் ஆவலை இப்படியான திரைப்படங்கள் தூண்டிவிடுகின்றன.
திரைப்படங்களில் அவர்கள் கண்ட ஆர்ப்பாட்டமான, துடிப்பான வசனங்கள் அவர்களை உசுப்பேற்றியுள்ளன. ஆனால், திரையில் போலீஸ் கதாபாத்திரங்கள் வீராவேசமாகவும் நெருப்பைக் கக்குவது போலவும் பேசுவதும் சண்டையிடுவதும் தங்களைவிட வலுவான மனிதர்களிடம், சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆள்களிடம். திரையில் போலீஸ் கதாபாத்திரங்களிடம் வெளிப்படும் வன்முறைக்கு நியாயமான காரணத்தை இயக்குநர்கள் புகுத்திவிடுவார்கள். எந்த நியாயம் இருப்பினும், ஒரு மனிதரை அடிப்பதோ, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதோ மனித உரிமைகளுக்கு எதிரான செயல் என்பதை போலீஸ் கதாபாத்திரங்களும் புரிந்துகொள்வதில்லை; பெரும்பாலான நிஜக் காவலர்களும் புரிந்துகொண்டதுபோல் தெரியவில்லை.
நிஜத்தில் இப்படிக் காவல் துறை அதிகாரிகளால் பணபலம், அரசியல் செல்வாக்கு கொண்ட மனிதர்களிடமோ ஆளுமைகளிடமோ சவாடலாகப் பேசிவிட்டுப் பணியில் இருக்க முடியுமா? ஆனாலும், அவர்கள் உள்ளே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் சினிமா போலீஸ் அவர்களைத் தொடர்ந்து தூண்டிக்கொண்டேதான் இருப்பார். ஆகவே, அவர்கள் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் அதைப் பயன்படுத்திப் பார்க்கிறார்கள். எளியவர்கள் கையில் கிடைக்கும்போது, அதிகாரத்தின் ருசியைச் சுவைக்கிறார்கள். அடிப்பதில் குரூர இன்பம் காண்கிறார்கள். கையில் தரப்பட்டிருக்கும் லத்தியும் இடுப்பில் மாட்டப்பட்டிருக்கும் துப்பாக்கியும் ஆபத்துக் காலத்தில் தங்களைக் பாதுகாத்துக்கொள்வதற்குத்தான் என்பதை மறந்துவிட்டு, எளிய மனிதர்கள்மீது அவற்றைப் பிரயோகப்படுத்தி சமூகத்தின் அச்சுறுத்தலாக மாறுகிறார்கள்.
போலீஸ் அதிகாரி என்றால் அவர் சிரிக்கக்கூட மாட்டார், எப்போதும் இறுக்கமாகவே இருப்பார் என்பது போன்ற சித்திரத்தை உருவாக்கியதில் திரைக்கதாபாத்திரங்களுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த இடத்தில் சத்யராஜ் நடித்த ‘வால்டர் வெற்றிவேல்’ திரைப்படத்தை நினைவுகூருங்கள். திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரங்கள் வணிக வெற்றிக்காக நாயக பிம்பத்துடன் உருவாக்கப்படுகின்றன. அதில் ஆண் நடித்தாலும் சரி பெண் நடித்தாலும் சரி, பெரிய நடிகர் முதல் சிறிய நடிகர்வரை எந்த வேறுபாடும் இல்லை. எல்லாவற்றுக்கும் உதாரணங்கள் உண்டு. விஜயசாந்தி நடித்த, மொழிமாற்றப்படமான ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ போன்றவற்றிலும் போலீஸ் கதாபாத்திரம் அப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கும். இயக்குநர் மணி ரத்னம் உருவாக்கிய ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தில் குடும்பப் பகை காரணமாகத் தனது போலீஸ் பதவியைப் பயன்படுத்தும் அசோக் என்னும் கதாபாத்திரம். இப்படியான காட்சிகள் சராசரியான மனிதர்கள் மனத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தீர்த்துக்கொள்ளலாம் எனும் எண்ணத்தைத் தோற்றுவித்துவிடக்கூடும்.
தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினி பேட்டி |
என்கவுண்டர் என்ற விஷயத்தையே ‘காக்க காக்க’ திரைப்படம் சமூக விரோதிகளை அழிப்பதற்கான குறுக்குவழியாக முன்வைத்தது. ஆனால், வெற்றிமாறன் தான் இயக்கிய ‘விசாரணை’ திரைப்படத்தில் என்கவுண்டர் என்னும் காவல் துறையின் நடவடிக்கையில் அப்பாவிகள் எப்படி வசமாக மாட்டிக்கொள்கிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தார். போலி வழக்குகள் மூலம் சாமானியர்கள் எப்படிச் சிதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு பாலாஜி சக்திவேலின் ‘வழக்கு எண் 18/9’ சரியான உதாரணம். ‘கிருமி’, ‘காளிதாஸ்’ போல் காவல் துறையின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தும் படங்கள்தாம் காலத்தின் தேவை. ஆனால் என்ன, இவை எண்ணிக்கையில் சொற்பம். சமீபத்தில் வெளியான அமேசான் வெப் சீரிஸ் படமான ‘பாதாள் லோக்’கில் முதன்மைக் கதாபாத்திரமான ஹாதி ராம் சௌத்ரியிடம், காவல் துறை அதிகாரி என்பதைத் தாண்டி ஓரளவு மனிதத்தன்மை வெளிப்படும். அப்படியான மனிதத்தன்மையை வெளிப்படுத்தும் வகையிலான படங்கள் உருவாக்கப்பட வேண்டும். சாமானியர்களைப் பாதுகாத்து, சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் துறை தனக்கான பொறுப்பை மறுப்பதோ மறப்பதோ சமூகத்துக்கு ஊறு விளைவிக்கும். சட்டப்படி நடக்க வேண்டிய காவல் துறையினர் சட்டத்தை மீறித் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வது ஆபத்தானது. இவற்றை எல்லாம் உணர்ந்து, பார்வையாளர்களுக்குச் சரியான புரிதலை ஏற்படுத்தும்வகையில் இனியாவது திரைத்துறையினர் தமது போலீஸ் கதாபாத்திரங்களைச் சற்றுப் பொறுப்புடன் உருவாக்கினால் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக