எகிப்திய-ஆஸ்திரிய இயக்குநர் அபு பக்கர் ஷாகி எகிப்தின் தலைநகரான கெய்ரோவைச் சேர்ந்தவர். அடிப்படையில் ஆவணப்பட இயக்குநரான அவருடைய முதல் முழு நீளத் திரைப்படம் ‘யோமெடின்’. தீர்ப்பு நாள் என்று பொருள் படும் இந்தப் படம் 2018-ம் ஆண்டு கான் பட விழாவில் முதலில் திரையிடப்பட்டது. விமர்சகர்களின் பெருவாரியான வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் அந்த ஆண்டில் ஆஸ்கருக்கு அனுப்பப்படுவதற்கான எகிப்தியப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது; ஆனால், ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படவில்லை.
இயக்குநர் ஷாகி 2008-ம் ஆண்டில் ‘த காலனி’ என்னுமோர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தொழுநோய் காலனி ஒன்றில் வாழும் தொழுநோயாளிகள் பற்றிய படமிது. அந்தத் தொழுநோயாளிகளை நேர்காணல்செய்து அதை ஆவணப்படுத்தியிருந்தார். இந்தப் பட உருவாக்கத்தின்போது, ஷாவ்கிக்குக் கிடைத்த அனுபவங்கள் காரணமாகத் தொழுநோயாளிகளின் வாழ்க்கைக் கதைகளை அடிப்படையாக வைத்து முழு நீளத் திரைப்படம் ஒன்றை உருவாக்கும் எண்ணம் வந்திருக்கிறது. ஆனால், அது படமாவதற்குப் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.
‘யோமெடின் திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் பெஷேய். எகிப்தின் தொழுநோய் காலனியில் சிறுவயதிலேயே தந்தையால் கொண்டுவந்து விடப்பட்டவர் அவர். நோய் குணமானதும் வந்து அழைத்துக் கொள்வதாகக் கூறிச் சென்ற தந்தை அதன் பின்னர் வரவேயில்லை. தொழுநோயிலிருந்து பெஷாய் விடுபட்டுவிட்ட போதும் அவருடைய முகத்தில் தொழுநோய் விட்டுப் போயிருந்த தழும்புகளும் கைகளின் விரல்கள் மடங்கிய தோற்றமும் அவரை பிறரிடமிருந்து விலக்கிவைக்கப் போதுமானவையாக இருந்தன. பொதுச் சமூகம் முகச்சுளிப்புடனேயே பெஷாயை எதிர்கொள்ளப் பழகியிருந்தது. எல்லோரையும்போல் அவரும் ஒரு மனிதர் தான் என்பது அவருக்கு எளிதாகப் புரிந்திருந்தது. ஆனால், தோற்றக் குறைபாடற்ற ஒருவருக்கும் அது ஒழுங்காகப் புரியவில்லை. அவர்கள் பெஷாயை விநோதமாகப் பார்த்தார்கள். அவரைப் போன்றே ஆதரவற்ற மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அவருடைய மனைவியாக இருந்தார். அவரும் உயிர்நீத்த பிறகு இந்தப் பரந்த உலகத்தில் தனித்துவிடப்பட்டவராகிறார் பெஷாய். சுமார் 40 வயதைத் தொட்ட நிலையில் மனம் தனிமையை ஆழமாகவும் அழுத்தமாகவும் உணர்கிறது. இந்தத் தனிமையைப் போக்கிக்கொள்ளத் தனது குடும்பத்தினரைச் சந்தித்தால் போதும் என்ற எண்ணம் பெஷாயிக்கு வருகிறது. அவர்கள் தன்னைத் தம்முடன் இணைத்துக்கொள்வார்கள் என்ற ஆசையுடன் அவர்களைத் தேடிச் செல்கிறார்.
எகிப்தின் வடக்கு மூலையிலிருந்து தெற்கு மூலைக்கு அவர் சென்றால்தான் குடும்பத்தினரைப் பார்க்க முடியும். அவரை யாரும் சக மனிதனாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதால் தன்னிடம் இருக்கும் ஒரு கழுதை பூட்டப்பட்ட பழைய வண்டியில் செல்ல முடிவெடுக்கிறார். அவ்வளவு நீண்ட தொலைவு பயணப்படுவதற்குத் தோதான வாகனமல்ல அது. அதன் தோற்றமே எப்போது காலைவாருமோ என்றிருக்கும். அவர் பழைய பொருட்களைச் சேகரித்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் தன் வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தார். அதற்குப் பயன்படுத்திய வண்டி அது. குறைவான தொலைவுக்கே அது தாங்கும் என்றபோதும், துணிவுடன் அதில் புறப்படுகிறார் பெஷாய். அவருடனே வந்து ஒட்டிக்கொள்கிறான் ஒபாமா என்னும் ஆதரவற்ற சிறுவன். விரட்டிவிட்ட போதும் அவன் விலகாமல் அவருடன் வருவேன் என அடம்பிடித்து உடன் வருகிறான். இந்த இருவரும் இணைந்து செல்லும் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் மனிதர்களும் சம்பவங்களுமாகவுமே அனுபவம் தருகிறது யோமெடின்.
படத்தின் தொடக்கத்தின் பெஷாயின் முகத்தை நம்மால் சட்டென்று இயல்பாகப் பார்க்க இயலவில்லை. எகிப்தின் குப்பைக் கூளம் நிறைந்த, காய்ந்துபோன அந்த வறண்ட பூமியை எப்படி வேண்டா வெறுப்பாகப் பார்க்கிறோமோ அப்படித்தான் பெஷாயையும் பார்க்க முடிகிறது. ஆனால், படம் நகர நகர பெஷாய் நம்முடன் ஒட்டிக்கொள்கிறார். தொழுநோய்த் தழும்புகள் நிறைந்த அந்த முகத்தை நம்மால் இயல்பாகப் பார்க்க முடிகிறது. அவருடைய முகம் குளோஸ் அப் காட்சியில் காட்டப்படும்போது நன்கறிந்த நண்பரைப் பார்ப்பதுபோல் நம்மால் அவரைப் பார்க்க முடிகிறது. படம் இதைத் தான் குறிப்புணர்த்த முற்படுகிறது. படத்தின் இசையும் ஒளிப்பதிவும் நம்மை பெஷாயுடனும் ஒபாமாவுடன் அழைத்துச் செல்கின்றன.
பெஷாய் வேடமேற்றிருந்த ரேடி கமால் பிறவி நடிகரல்ல; அவர் தொழுநோய் காலனியில் இருந்தவர்தான். ஆனால், ஒரு நடிகரைவிட அழுத்தமாக அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களிடம் கொண்டுசேர்த்திருக்கிறார். சிறுவன் ஒபாமா, படத்தில் வரும் கால்களற்ற மனிதர் போன்ற பலர் திரைக்குப் புதிதானவர்கள். அதனாலேயே இது ஒரு திரைப்படம் என்பதைத் தாண்டி ஒரு அன்னியோன்யமான உணர்வைத் தருகிறது.
மனிதர்கள் எல்லோருக்குமே சக மனிதர்களால் நேசிக்கப்பட வேண்டும் என்றும் தம்மைப் பற்றிய நினைவுகளைப் பிறர் கொண்டிருக்க வேண்டும் என்றும் தானே விரும்புவார்கள். பெஷாய்க்கும் அந்த ஆசைதான் இருந்தது; அந்த ஆசை மட்டுமே இருந்தது. அவர் செல்லும் வழியில் பல தடைகள் வந்தபோதும் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டார். அவருடைய குடும்பம் கூட அவரை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் அவர் அங்கிருக்கவில்லை. அவர்கள் ஏற்றுக்கொண்டதே அவருக்குப் பெரிய நிம்மதி. அதன் பின் எந்த வெட்கமுமற்று பொதுவெளியில் பிரவேசிக்கும் தைரியம் அவருக்கு வந்து விட்டது. பொதுவெளியில் பிற மனிதருடன் இயல்பாகக் கலந்துகொள்வதைவிட வேறு என்ன தேவைப்படப் போகிறது ஒரு மனிதருக்கு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக