தொழில்நுட்பக் கல்வி முடித்துப் பெரிய கனவுடன் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞனுக்கு அரசியல்வாதிகளால் ஏற்படும் தொல்லைகளும் அதனால் அவரது சொந்த வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுமான பயணமே என்.ஜி.கே.
நந்த கோபாலன் குமரன் சுருக்கமாக என்.ஜி.கே. ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுவருகிறார். கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்க்கிறார்; இளம்பெண்ணுக்கு வேலை பெற்றுத்தர முயல்கிறார். இப்படி ஒரு கதாநாயகன் செய்ய வேண்டிய எல்லா சமூக நலப் பணிகளிலும் ஈடுபடுகிறார். இவரது நல்ல செயல்களால் தங்கள் பிழைப்பு பாதிக்கப்பட்டதாக நம்பும் உள்ளூர் வியாபாரிகள் அவரை எச்சரிக்கிறார்கள். ஆனால் அடிபணிய மறுக்கிறார் என்.ஜி.கே. ஆகவே, இவரது விவசாய நிலம் எரிக்கப்படுகிறது. உதவி கேட்டு உள்ளூர் எம் எல் ஏவிடம் (இளவரசு) செல்கிறார். என்.ஜி.கே. தேர்தல் நேரத்தில் பயன்படுவார். என்பதால் எம்.எல்.ஏ உதவுகிறார். உடனே வேலை முடிகிறது. இதைக் கண்ட என்.ஜி.கே. அரசியல்வாதிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை உணர்ந்து தானும் அரசியலுக்கு வர முற்படுகிறார். அதற்காக அவர் மேற்கொள்ளும் பகீரதப் பிரயத்தனங்களே என்.ஜி.கே.
முதன்மைக் கதாபாத்திரமான என்.ஜி.கே.வின் இலக்கு என்ன என்பது அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். இயக்குநருக்குத் தெரிந்திருக்க வேண்டாமா? அரசு, அரசாங்கம், அரசியல் போன்றவை குறித்து பாமரருக்கு என்ன புரிதல் இருக்குமோ அந்தப் புரிதல்கூட இல்லாமல் வெகுமக்கள் திரளுக்கான கருத்துகளை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். என்.ஜி.கே, முதல்வராகவே ஆகிவிடுவதெல்லாம் டூ மச் செல்வராகவன். அதிலும் மேடையில் சூரியா பேசும் காட்சி அபத்தம். பெரிய பிரசங்கமே நிகழ்த்துகிறார். தெளிவில்லாத திரைக்கதை, நேர்த்தியற்ற கதாபாத்திரச் சித்தரிப்புகள் ஆகியவை காரணமாகப் படத்தின் காட்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அலுப்பைத் தருகின்றன.
அரசியல்வாதியிடம் அவமானப்படுவது, மனைவியின் சந்தேகப்பார்வையை எதிர்கொள்வது. குடும்பத்தினரிடம் தனது கனவுக்கான அங்கீகாரத்தைக் கோருவது என சூர்யா தனது நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்த முயல்கிறார். அவரது நடிப்புக்குத் தீனி போடும் காட்சிகள் உள்ளன. ஆனால், அவரது கதாபாத்திரச் சித்தரிப்பு பலவீனமாக உள்ளதால் அவரது நடிப்பு முழுக்க வீணாகப்போகிறது.
சாய்பல்லவி கணவனை உயிருக்குயிராக நேசிக்கும் மனைவியாக வந்துபோகிறார். என்.ஜி.கே வாழ்வில் வானதி (ரகுல் பிரீத் சிங்) வந்த பின்னர் அவர்களுக்கிடையேயான உறவை நினைத்துத் தன் வாழ்வில் நிம்மதியை இழக்கும் கதாபாத்திரம் அவருக்கு. சூர்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் அவர் புதுப்பேட்டை தனுஷை நினைவுபடுத்துகிறார்.
செல்வராகவன் திரைப்படங்களில் தலைகாட்டும் எக்ஸெண்ட்ரிக் தன்மை இதிலும் சாய் பல்லவியிடமும் சூர்யாவிடமும் அவ்வப்போது தலைகாட்டுகின்றன. ஆனால், அது படத்துக்கு வலுச்சேர்ப்பதற்குப் பதிலாகப் பலவீனமாக வெளிப்படுகின்றன. சாய் பல்லவி தனிப்பட்டவகையில் தன் நடிப்பு வாழ்க்கையில் என்.ஜி.கே. முக்கியமானது என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ரசிகர்களைப் பொறுத்தவரை இது பத்தோடு பதினொன்று.
படத்தின் பல காட்சிகள் மிகவும் செயற்கையாக உள்ளன. உதாரணம்: என்.ஜி.கே விவசாயம் குறித்து விதந்தோதி பேசும் காட்சி, வானதிக்கும் சூர்யாவுக்குமான டூயட் பாடல் காட்சி. வானதியின் கதாபாத்திரத்தை அவ்வளவு பயங்கரமாக அறிமுகப்படுத்திவிட்டு அவர் சூர்யாவைப் பார்த்த உடன் காதல் வயப்படுபவராகக் காட்சிப்படுத்தியிருப்பது உச்சபட்சக் கொடுமை.
பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி, பாலாசிங், உமா பத்மநாபன், நிழல்கள் ரவி என அநேக நடிகர்கள் நடித்துள்ளனர். ஓரளவு நல்ல நடிகர்களை மோசமாக நடிக்கவைத்துள்ளதில் செல்வ ராகவன் பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளார்.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு படத்துக்குத் தேவையானதைத் தந்திருக்கிறது. இசை யுவன் சங்கர் ராஜா. பின்னணியிசையில் என்னென்னவோ செய்திருக்கிறார். புரட்சிகரமான வரிகளைக் கொண்ட பாடல்கள் திடீர் திடீரென்று வந்து பயமுறுத்துகின்றன. எதிலும் மனம் ஒட்டாதபடி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகளை நாங்கள் சமாளித்துக்கொள்கிறோம் இத்தகைய அமெச்சூர் சினிமாக்காரர்களிடமிருந்து அரசியல் படங்களை யாராவது காப்பாற்ற வேண்டும் என நினைக்கவைத்து விடுகிறார் செல்வ ராகவன். ஒரு காட்சியில் ‘பாய் சைல்ட்’ என ஒரு வசனம் வருகிறது. மேல் சைல்ட் என்றால் ஓகே அதென்ன பாய் சைல்ட்? இப்படியான வசனத்தை எழுதிவிட்டு வெட்கமே இல்லாமல் அரசியல் குறித்து பிரசங்கம் செய்வதற்கெல்லாம் பெரிய துணிச்சல் வேண்டும் மிஸ்டர் செல்வராகவன்.
புதுப்பேட்டை அவலை நினைத்து என்.ஜி.கே. உரலை இடித்திருக்கிறார் செல்வராகவன். நசுங்கியதென்னவோ ரசிகர்களின் தலைகள்தாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக