இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, மே 08, 2016

சபாஷ் நாயுடு: பிறர் வாட ஒரு செயல்




கமல்ஹாசன் கைதேர்ந்த நடிகர். அவர் வெறும் நடிப்புக் கலைஞர் மட்டுமல்ல. சினிமாவின் அத்தனை துறைகளிலும் தன் முத்திரையைப் பதிப்பவர். ஒரு சினிமாவின் தொடக்கம் முதல் இறுதிவரை உடனிருந்து அதைச் செழுமைப்படுத்தி, தன்னால் முடிந்த அளவு செய்நேர்த்தியை வெளிப்படுத்தி, அதை அற்புதமான காவியமாக்குவதில் வல்லவர். கடந்த ஆண்டில் அவர் படைத்த திரைக் காவியம் ‘உத்தமவில்லன்’, வெற்றியைப் பெறாவிட்டாலும் இன்னும் பல ஆண்டுகள் கழித்து அதன் மகத்துவம் ரசிகர்களுக்குத் தெரியவரலாம். அதன் பிறகு ‘பாபநாசம்’, ‘தூங்காவனம்’ என இரண்டு படங்களைக் கொடுத்துத் தனது ரசிகர்களைத் திருப்திபடுத்திவிட்டார்.

இந்த ஆண்டில் இதுவரை கமலின் புதுப் படம் குறித்த தகவல் இல்லையே என அவரது ரசிகர்கள் தவித்துப்போயிருந்தனர். இந்நிலையில் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அவர் ஏப்ரல் 29 அன்று வெளியிட்டார். ஒரு சினிமாவை எப்படி விளம்பரப்படுத்தினால் அது ரசிகர்களை ஈர்க்கும் என்னும் நுட்பம் அறிந்தவர் அவர். ‘சபாஷ் நாயுடு’ என அவர் படத் தலைப்பை அறிவித்த அடுத்த நிமிடத்திலிருந்து சமூக வலைத்தளங்களில் இந்தத் தலைப்பில் தொனிக்கும் சர்ச்சை குறித்த விவாதங்கள் பெருகத் தொடங்கின. தன் புதுப் படம் மீதான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டதில் கமல் என்னும் நடிகர் வெற்றிபெற்றுவிட்டார். தமிழ்த் திரைப்படங்களில் அம்மா, நட்பு, காதல் சென்டிமென்ட் போல் சர்ச்சை சென்டிமென்ட்டும் வெற்றிக்கு வழிவகுக்கக்கூடிய ஒன்று. இதன் ருசியை ஏற்கெனவே நன்கு அறிந்தவர் இயக்குநர் கமல் ஹாசன்.


கமல் ஹாசனின் ‘தேவர் மகன்’ (1992) படத் தலைப்பு தொடர்பாக அப்போது எந்த சர்ச்சையும் எழுந்ததாக நினைவிலில்லை. படம் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்றது. ஆனால், அதன் பின்னர் தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கேலி செய்யும் வகையிலும் ஆதிக்கச் சாதியினர் தங்கள் பெருமையை உலகுக்கு அறிவிக்கும் வகையிலும் அப்படத்தின் பாடல்களும் காட்சிகளும் பயன்பட்டன என்பது வருத்தமும் கோபமும் தரும் யதார்த்தம். ‘தேவர் மகன்’ படத்தின் இறுதியில் என்னவோ கமல் விமர்சனக் கருத்துகளைத்தான் வைத்திருப்பார். படம் சொல்லும் செய்தியும் வன்முறைக்கு எதிரானதுதான். ஆனால், படம் நெடுகிலும் தென்பட்ட சாதிப் பெருமிதம் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது என்பது கசப்பான உண்மை. ‘அறிவுரை சொன்னால் நானே கேட்க மாட்டேன்’ எனக் கமலே நேர்காணல்களில் சொல்கிறார். தனக்கு அறிவுரை மீது நம்பிக்கை இல்லை என்றும் பகர்கிறார். இந்நிலையில், திரைப்படத்தின் இறுதியில் அவர் சொல்லும் அறிவுரையைச் சாதாரண ரசிகர் புரிந்துகொண்டுவிடுவார் என நாம் எதிர்பார்ப்பதில் எந்த நியாயமுமில்லை.

‘தேவர் மகன்’ படம் ஏற்படுத்திய தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், அவர் தன் படம் ஒன்றுக்கு ‘சண்டியர்’ எனும் பெயரைத் சூட்டியபோது விழித்துக்கொண்டனர். சண்டியர் என்னும் சொல் தங்களை எந்த அளவுக்குப் பதம் பார்க்கும் என்பதை உணர்ந்துகொண்ட அவர்கள் தொடக்கத்திலேயே அந்தத் தலைப்புக்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆனால், கமல் ஹாசன் அந்த எதிர்ப்பை கலைக்கும் கலைஞனுக்கும் எதிரான கண்டனமாக உணர்ந்துகொண்டாரோ என்னும் சந்தேகம் ஏற்படும்வகையில் நடந்துகொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் பயத்தையோ அவர்களது கலக்கத்தையோ அவர் உணர முற்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, படத்தின் தலைப்பை மாற்றுவதில் விருப்பமற்று இருந்தார். ஆனால், தொடர்ந்த கண்டனங்களால் வேறு வழியின்றி இறுதியில் படத்தின் தலைப்பை மாற்றினார். இந்தப் படப் பெயர் மாற்றம் தொடர்பான நக்கல் தொனிக்கும் கமலின் உரையாடல் ஒன்று இணையதளங்களில் இப்போதும் காணக் கிடைக்கிறது. கமலுக்கும் தார்மிகக் கோபம் இருக்கும்தானே?


பிறகு பிரேம் நடித்த ‘வர்றார் சண்டியர்’ என்னும் படத்தின் பெயருக்கும், ‘சண்டியர்’ என்றே பிறகு வேறொருவரால் எடுக்கப்பட்ட படத்துக்கும் எதிராக எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. எனவே, ‘இது கமலுக்கு மட்டுமே இழைக்கப்படும் அநீதி’ என்று கமல் ரசிகர்கள் குரல் கொடுத்தனர். ஆனால், ஒரு சொல்லையோ கருத்தையோ யார் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இன்னும் திரைப்பட மாயையில் சிக்கிச் சுழலும் தமிழகத்தில் இது போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை கமல் போன்ற ஆளுமைகள் கையாளும்போது மனம் பதறுகிறது. ஏன் கமலிடம் இந்த எதிர்பார்ப்பு? அவரை நாம் வெறும் நடிகராக மட்டும் பார்க்கவில்லை.

சமூகத்தின் மாற்றங்களுக்குக் குரல் கொடுக்கும் முன்மாதிரி மனிதராகத் தன்னைக் காட்டிக்கொள்வதில் கமல் பெரிய விருப்பத்துடன் இருக்கிறார். எய்ட்ஸ் நோயாளிகளுக்கான விளம்பரப் படத்தில் நடிக்கிறார், பெண் சிசுக்கொலையை எதிர்த்துக் காணொலியில் குரல் எழுப்புகிறார். பிரதமர் ஒரு திட்டத்தை அறிவித்தால் தானும் சென்று ஊரைச் சுத்தப்படுத்த முனைகிறார். தேர்தல் நெருங்கினால் வாக்குக்குப் பணம் வாங்கும் வாக்காளர்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறார். தன் மன்றங்களின் மூலம் பல நற்பணிகளைச் செய்துவருகிறார். இப்படியான நடவடிக்கைகளால் கமல் சமூக அக்கறை கொண்ட கலைஞராகவும் மதிப்பிடப்படுகிறார். அதனால்தான் அவர் ‘சபாஷ் நாயுடு’ போன்ற சாதிப் பெருமிதப் பெயரைச் சூட்டும்போது அனைவரும் கொந்தளிக்கிறார்கள்.


மும்மொழிகளில் தயாராகும் தனது படத்துக்கு தெலுங்கு, தமிழ் இரண்டுக்கும் பொதுவாக ‘சபாஷ் நாயுடு’ எனப் பெயர் வைப்பது சினிமா உருவாக்கத்தில் அவருக்கு உதவியாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் இத்தகைய சாதிப் பெருமிதப் பெயரால் ஏற்பட வாய்ப்புள்ள பின்விளைவுகள் பற்றிய அக்கறையின்றி கமல் போன்ற சமூக அக்கறை கொண்ட கலைஞர், மானிடத்தின் மகத்துவம் பற்றி முழங்கும் ஒருவர் கடந்துபோக முடியுமா என்பதே நமக்கு எழும் கேள்வி. படத்தின் கதைக்கு இந்தத் தலைப்புதான் தகுந்தது என்றுகூட கமல் சொல்லவில்லை. தெருவின் பெயரில் சாதி இருக்கிறது, உங்கள் பெயரின் பின்னே சாதி இருக்கிறது எனச் சொல்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டியதிருக்கிறது. சர்ச்சைக்குரிய தலைப்பை வைத்துவிட்டுப் படம் வெளியாகும் வரை அதன் மூலம் கிடைக்கும் விளம்பரத்தை அனுபவித்துவிட்டு இறுதியில் படம் வெளியாகும் சமயத்தில் படத்தின் பெயரை மாற்றிக்கொள்ளலாம் என்று செயல்படும் நடிகராக கமல் இருக்க மாட்டார் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் மீதம் இருக்கிறது.

1 கருத்து: