இந்த வலைப்பதிவில் தேடு

புதன், ஜூன் 01, 2016

சினிமாஸ்கோப் 1: ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

(இந்து தமிழ் திசை நாளிதழின் இந்து டாக்கீஸ் இணைப்பிதழில் இது தொடராக வந்தது. மொத்தம் 45 வாரங்கள் வெளிவந்த இந்தத் தொடரில் பல உலக, இந்திய, தமிழ்ப் படங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. திரைக்கதை குறித்த தொடர் என்றபோதும் திரைப்படங்கள் குறித்த செய்திகள் அதிகமும் இடம்பெற்றுள்ளன.) 

காதலிக்க நேரமில்லை
காதலிக்க நேரமில்லை படத்தின் ஓஹோ புரொடக்‌ஷன்ஸையோ அதில் செல்லப்பாவாக நடித்த நாகேஷையோ அவ்வளது எளிதில் மறந்துவிட முடியாது. தனது பட நிறுவனத்தின் மூலம் தமிழ்ப் படங்களைத் தயாரித்து, இயக்கி, ஹாலிவுட் சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து, அவர்களையும் இனி தமிழ்ப் படங்களை மட்டுமே பார்க்கவைப்பது என்ற சங்கல்பத்துடன் கனவுலகில் சஞ்சரித்து வரும் கதாபாத்திரம் அது. அவரது ஒரே பிரச்சினை கதைதான். அதுமட்டும் கிடைத்தால் உலக சினிமா அளவுக்குப் பல படங்களை உருவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இப்போது திசையெங்கும் ஓஹோ புரொடக்‌ஷன்ஸ், தெருவெங்கும் செல்லப்பாக்கள். ஆனால், காதலிக்க நேரமில்லை நாகேஷுக்கு இருந்ததுபோல் இவர்களுக்குக் கதைகளைப் பற்றிய கவலை இல்லை. ஏனெனில் ஃபிலிம் இல்லாமலே படமெடுக்க முடிகிறது எனும்போது கதையில்லாமல் படமெடுக்க முடியாதா என்ற அளவு கடந்த ஊக்கத்துடன் செயல்படுகிறார்கள் இவர்கள். தமிழ்க் கடவுள் முருகரைப் போன்றவர்கள் இவர்கள். முருகருக்கும் இவர்களுக்குமான ஒரே வித்தியாசம் அவர் உலகைச் சுற்றியது பழத்துக்காக. இவர்கள் சுற்றுவது படத்துக்காக என்பது மாத்திரமே. இங்கே சில விநாயகர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தமிழ்ப் படங்களிலிருந்தே புதிய தமிழ்ப் படங்களை உருவாக்குவதில் வல்லமை படைத்தவர்கள். அப்படிப் படங்களை உருவாக்கி வெற்றியும் பெறுகிறார்கள்; பெயரும் வாங்குகிறார்கள்.

சத்யஜித் ராய்
ஆனால், இதையெல்லாம் மீறி தமிழ்ப் பட உலகில் கதைகளுக்குத் தட்டுப்பாடு என்பது பற்றிப் பலர் பல சந்தர்ப்பத்தில் எழுதியிருக்கிறார்கள். புதிய புதிய கதைகளுக்காக இயக்குநர் கனவு காணும் இளைஞர்கள் இரவெல்லாம் விழித்திருந்து மூளையைக் கசக்குகிறார்கள். பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, புரிகிறதோ புரியவில்லையோ பல உலக சினிமாக்களைப் பார்க்கிறார்கள்; நண்பர்களுடன் விவாதிக்கிறார்கள். ஏதாவது ஒரு சிறு பொறி தட்டினால் போதும் அடுத்த சத்யஜித் ராய் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் போராடுகிறார்கள். அதே நேரத்தில், தமிழிலக்கியத்தில் மிகச் சிறந்த படைப்புகள் எழுதப்பட்டுள்ளன என்பதையும் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டும். தமிழிலக்கியத்திலும் தமிழிலும் இவ்வளவு செழுமையான படைப்புகள் காணப்படும் போதிலும், தமிழ்த் திரைப்படங்களுக்கு ஏன் கதைப் பஞ்சம் என்பது இயல்பாக எழும் கேள்வியே. நல்ல கதைகளைத் தேடும் சினிமாக்காரர்களுக்கு இலக்கியத்தில் பரிச்சயமில்லையா என்றால் அப்படியும் அல்ல. திரைத்துறையின் இளைஞர்கள் பலர் நல்ல இலக்கியப் பரிச்சயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சென்னைப் புத்தகக் காட்சியின்போது அவர்களில் அநேகரைப் பார்க்கலாம். நல்ல நாவல்களைத் தேடி அவர்கள் கண்கள் அலைபாய்ந்துகொண்டேயிருக்கும். பிரபல இயக்குநர்களும் நடிகர்களும் இலக்கியவாதிகளை நாடி வருவதும், அவர்களது இலக்கிய அறிவை சினிமாவுக்குப் பயன்படுத்திக்கொள்வதும் நடைமுறைப் பழக்கமாகியிருக்கிறது.

முள்ளும் மலரும்
இந்த நேரத்தில் நல்ல இலக்கியப் படைப்பு மட்டும் இருந்தால் நல்ல சினிமா உருவாகிவிடுமா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தரமான இலக்கியப் படைப்பு திரைப்படமாக மாறும்போது, கதை தந்த வாசிப்பனுபவத்தையோ திருப்தியையோ திரைப்படம் தரவில்லை என்பதே நடைமுறை யதார்த்தம். உதாரணமாக ‘மோக முள்’ளைச் சொல்லலாம். ஆனால் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட பல படங்கள் சிறந்த படங்களாக மாறியிருக்கின்றன என்பதையும் மறுத்துவிட முடியாது. பீம்சிங்கின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, இயக்குநர் மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’, சமீபத்தில் வெளியான வெற்றி மாறனின் ‘விசாரணை’ என அவற்றுக்கும் உதாரணங்கள் உள்ளன. இவை இரண்டுக்கும் இடையே சில நுட்பமான வேறுபாடுகள் உள்ளன. அவற்றை ஆராய்ந்து பார்த்தால் ஒரு நாவல் திரைப்படமாவதில் ஏற்படும் வெற்றி தோல்வி பற்றி ஓரளவு உணர்ந்துகொள்ளலாம்.
புதுமைப்பித்தன்
நாவல் என்பதை வாசிப்புக்காக எழுதுகிறார்கள். தீவிர இலக்கியப் படைப்புகளில் அக உணர்வுகள் ஆக்கிரமித்து நிற்கின்றன. அதை வாசிக்கும் வாசகர் தனது மனதில் கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்துவிடுகிறார், அவற்றைத் திரைப்படத்தின் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ரசிகருக்கு அதில் ஒருவித அதிருப்தியே ஏற்படுகிறது, அவரால் படத்துடன் ஒன்ற முடியாது. எனவே அதிலிருந்து விலகிவிடுகிறார். நாவல்போல் படம் இல்லை என்ற ஒற்றை வரியுடன் முடித்துவிடுகிறார். ஆகவே ஒரு நாவலைப் படிக்கும்போது அதை சினிமாவாக்க வேண்டுமா, முடியுமா என்பதைச் சிந்திக்க வேண்டும். புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’யையும் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்க’ளையும் ஒப்பிட்டுப் பாருங்கள் அப்போது புரியும் திரைப்படத்தின் பலம். ‘சிற்றன்னை’ புதுமைப்பித்தனின் சீரிய படைப்பு என்று சொல்வதற்கில்லை. ஆனால் ‘உதிரிப்பூக்கள்’ தமிழின் சிறந்த படைப்பாக முன்வைக்கப்படும் ஒன்று என்பதை மறுக்க இயலாது. ‘சிற்றன்னை’யை வாசிக்கும்போது மகேந்திரனுக்கு ஏற்பட்ட உணர்வு, சுந்தரவடிவேலு என்னும் கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவையே உதிரிப்பூக்களின் அடிப்படை. அவற்றை வைத்துக்கொண்டு தேர்ந்த சினிமா எடுத்தது மகேந்திரனின் திறமை. இலக்கியப் படைப்பு சுத்தமான தங்கம் போன்றது. அதை அணிகலனாக்கச் சிறிதளவு செம்பு சேர்த்துத் தான் ஆக வேண்டும். அப்படிச் சேர்க்கும்போது அந்தச் செம்பின் அளவும் குணாம்சமும் தங்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படியான பாதிப்பு நேர்மறையானதாக இருக்க வேண்டும் அதைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு திரைக்கதையாசிரியருக்கும் இயக்குநருக்கும் இருக்கிறது. இயக்குநருக்கு வாழ்க்கை குறித்த புரிதலும் அனுபவமும் இருக்கும் நிலையில் நல்ல படைப்பை அவரால் நல்ல சினிமா ஆக்கிவிட முடியும், இல்லை என்றால் சிரமம்தான். இந்த நடைமுறை ஆரோக்கியமானது, ஆனால் சற்றுக் கடினமானது.

காதலும் கடந்து போகும்
இதைவிட எளிதான வழி எதுவும் இல்லையா என்றால் இருக்கிறது, அதுதான் கொட்டிக் கிடக்கும் உலக சினிமாக்கள். ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்களைப் பார்த்து அவற்றை அப்படியே வெற்றிப் படைப்புகளாக உருவாக்கிவிடுவது. ‘தூங்காவனம்’, ‘காதலும் கடந்து போகும்’, ‘தோழா’ என இவற்றுக்கும் அநேக உதாரணங்கள் உள்ளன. இப்படி உலகப் படங்களின் மறு ஆக்க உரிமையை முறையாக வாங்கி, அவற்றைத் தமிழ் ரசிகரைக் கவரும் வகையிலான படங்களாக உருவாக்கலாம். அப்படி உருவாகும்போது, நமது நிலம், பண்பாடு, வாழ்வியல் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல் உலக சினிமாவை அப்படியே நகலெடுக்கும் ஆபத்து உள்ளது. அதைக் களையாவிட்டால் உருவாகும் திரைப்படம் ரசிகருக்கோ இயக்குநருக்கோ நன்மை பயக்காது.

2016 மே 20 அன்று தி இந்து நாளிதழில் வெளியானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக