இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, மார்ச் 01, 2015

முருகனுக்கு மொட்டை போடும் பிங்க் தமிழன்


ஒருமுறை கடற்கரையில் வைத்து பிங்க் தமிழன் தீநரியின் ஆவேசப் பேச்சை வெகுளி வெள்ளைச்சாமி கேட்டான். நரம்பெல்லாம் வெடிப்பது போன்ற உணர்ச்சிமிக்கப் பேச்சு அது. அன்று கால் போன போக்கில் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தான் வெள்ளை. கடற்கரையில் யாரோ ஒரு போதகர் “உலகை ரட்சிக்க அவர் வருவார் பாவிகளே மனந்திரும்புங்கள்”என்று கண்களை மூடி திறந்து மூடி திறந்து பேசிக்கொண்டிருந்தார்.

சிறிது தூரம் தள்ளிச் சென்றால் ‘கியூபாவில் தோழர்களே’ என்னும் சத்தம் காதைப் பிளந்தது. ஒரு மேடையில் நாற்பது ஐம்பது பேர் முண்டியடித்துக்கொண்டிருக்க, மெலிந்த ஒருவர் உணர்ச்சிகரமாகக் கைகளை ஆட்டி ஆட்டிப் பேசிக்கொண்டிருந்தார். எதிரே நான்கைந்து பேர் நின்று ஆர்வத்துடன் உரையைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் கண்கள் தொலைதூரத்தில் புரட்சியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. வெள்ளை பயந்துபோய் அங்கிருந்து நகர்ந்தான். அப்போது அவனைக் கவ்விப்பிடித்துக்கொண்டது, தீநரியின் ஆவேச உரை.

கடற்கரையில் பெரிய பதாகைகள் தென்பட்டன. ‘தமிழ்ப் பந்தங்களை இடரிலிருந்து காக்கும்‘ நீங்கள் அந்நியர்’ கட்சியின் தலைவர் தோழர் பிங்க் தமிழனின் ஆபாசப் பேச்சு' என்று வாசித்தவன் ஒரு கணம் திடுக்கிட்டான். ஆவேசப் பேச்சு என்பது பின்னர் தெரிந்தது. ‘தன்னுடைய தலைவரும் வருவார் வருவார்’ என்று தீநரி கழுத்து நரம்பு புடைக்கத் தமிழர்களுக்கு உணர்வூட்டிக்கொண்டிருந்தார். உணர்ச்சிவசப்பட்ட கூட்டம் கடலதிரக் கைதட்டியது. ‘அவருடைய தலைவர் எங்கேயும் வெளிநாட்டுக்குப் போயிருக்கிறாரா?’ என்று வெள்ளை அப்பாவியாய்க் கேட்டான். அப்போது ஒருவன் வெள்ளையை எரித்துவிடுவது போல் பார்த்தான். வெள்ளை இயல்பிலேயே பயந்தாங்கொள்ளி. எனவே பயந்துபோய் ஒதுங்கிவிட்டான்.

வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் உச்ச நடிகரின் படத்தைத் தாங்கிய பனியன்களை அணிவதைப் பற்றித் தமிழ் மக்களை உணர்வற்றவர்கள் எனக் கூறி மேடையில் தீநரி கொதித்துக்கொண்டிருந்தார். அவருடைய பனியனில் ஒரு நடிகரின் படம் இருக்கிறதே என வெள்ளைக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அருகிலிருந்த நண்பர் ஒருவரிடம், ‘தீநரியின் பனியனில் உள்ள நடிகர் யார்?' என்று கேட்டான். அவர் வெள்ளையை மேலும் கீழும் பார்த்தார். தான் ஏதோ தவறாகக் கேட்டுவிட்டோம் என்பதை வெள்ளை உணர்ந்தான். அவர் மேல்நாட்டுப் புரட்சியாளர் என்று அந்த நண்பர் கூறினார். ‘ஏன் தமிழ்ப் புரட்சியாளர் படம் தீநரிக்குக் கிடைக்கவில்லை’ என்னும் கேள்வி வெள்ளையின் மனதில் எழுந்தது. ‘தமிழின் முதல் புரட்சியாளர் தனக்கென்று தனி நாடு கேட்ட என் பாட்டன் வேலவன்’ என்று கூறும் தீநரி, ஏன் அவர் படம் போட்ட பனியனை அணியவில்லை என்று வெள்ளைக்குக் குழப்பமாக இருந்தது.

தீநரி மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால், வெள்ளை தன் கையில் தீநரியின் ஆவேசமான முகத்தைப் பச்சை குத்திக்கொண்டான். ஒரு முறை உறக்கத்தில் அதைப் பார்த்தவன் ஒரு கணம் திடுக்கிட்டுப் பயந்துவிட்டான். பின்னர், பச்சை குத்திக்கொண்டதை உணர்ந்து ஆசுவாசமானான். பிள்ளைகளுக்கு உணவூட்ட அவன் மனைவி வெள்ளையின் கையில் உள்ள தீநரியின் படத்தைத்தான் பயன்படுத்துவாள். ‘பூச்சாண்டி பாரு பூச்சாண்டி பாரு’ என்னும் சொற்களைக் கேட்டு சலித்துப் போயிருந்த குழந்தைகளுக்கு இந்தப் படம் உண்மையிலேயே புதிதாக இருந்தது.
இளைஞர்களுக்கு உணர்வூட்டவும் குழந்தைகளுக்கு உணவூட்டவும் தீநரியின் சேவை அவசியமாக இருந்தது.

சமீபத்தில் தீநரியின் ஆவேசப் பேச்சுக்காக அரசு அவரைச் சிறையில் அடைத்தது. ஆனாலும் சிறையைத் தீநரி பயிற்சிக்களமாக எடுத்துக்கொண்டார். சிறையில் கைதிகளிடம்கூட அவர் பேசக் கூடாது என அரசு தடை விதித்துவிட்டது. சிறைக் கைதிகள் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள் என்பதால் தீநரி, அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிறையில் அவர் கும்பி என்னும் படத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டார்.

என் பெரும் பாட்டன் ராவணன், முதல் தமிழ்ப் போராளி என் பூட்டன் வேலவன், என் பாட்டி கண்ணகி, என் சிறு பாட்டன் வள்ளுவன் என எல்லோரையும் தாத்தா, பாட்டி, அக்கா, அண்ணன் என உரிமையோடு தமிழ்ப் பிள்ளை தீநரி பேசுவார். அவரைத் தவிர வேறு யார் அப்படிப் பேசியிருந்தாலும் ஏதோ நட்டு கழன்ற கேஸுன்னு ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோயிருப்பாங்க. ஆனால் தீநரி அவற்றைப் பேசும்போது, தமிழ் உணர்வு ஆறாய்ப் பெருகி ஓடும். தீநரி தன் மனைவியைக்கூட உரிமையுடன் சகோதரி என்றே அழைப்பார். ஒரு கூட்டம் கணவனை அண்ணா என அழைக்கும்போது மனைவியைச் சகோதரி என அழைப்பதில் என்ன தவறு என இறுமாப்போடு தீநரி மீசையைத் தடவியபடி கேள்வி கேட்கும்போது அவரிடம் ஒளிரும் அறிவுச் சுடர் பெருமிதம் கொள்ளவைக்கும்.

தீநரி நரம்பு புடைக்கப் பேசும்போதெல்லாம் வெள்ளைக்குப் பாவமாக இருக்கும். தீநரி மேடையில் உணர்ச்சிவசப்பட்டுக் கூக்குரலிடும்போதெல்லாம் அவருடைய நரம்புகளுக்கு ஏதேனும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று வெள்ளைக்குப் பயமாக இருக்கும். வெள்ளை எல்லாக் கடவுள்களையும் வேண்டிக்கொள்வான். மாதத்துக்கு ஒருமுறை புரட்சியாளர் வேலன் குடிகொண்டிருக்கும் காய்நீ கோவிலுக்குப் போய் தீநரியின் நலத்துக்காக மொட்டை அடித்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டான் வெள்ளைச்சாமி.

தி இந்துவில் வெளியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக