இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, டிசம்பர் 29, 2013

போராட்டங்களாலான வாழ்க்கை

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2013



டிசம்பர் 17 அன்று பார்த்த திரைப்படம் Wałęsa, Man of hope. போலந்து அதிபர் லேக் வலேசா பற்றிய வரலாற்றைச் சித்திரித்த திரைப்படம் இது. ஆனால் ஒரு திரைப்படத்திற்குரிய அத்தனை சுவாரசியத்துடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. ஒரு சாதாரண எலக்ட்ரீசியனாக இருந்து தொழிற்சங்கப் போராட்டங்கள் வழியாக ஒரு நாட்டின் அதிபராக உயர்ந்த மனிதரைப் பற்றிய கதை. ஒவ்வொரு முறை போராட்டத்திற்காகப் போகும்போதும் தனது கைக்கடிகாரத்தையும் மோதிரத்தையும் கழற்றிக்கொடுத்து நான் திரும்பி வரவில்லை என்றால் இவற்றை விற்று வாழ்க்கைச் சமாளி என்று தெரிவித்துப் போகிறார் வலேசா. இந்தக் காட்சி ஒரு சில இடங்களில் மீண்டும் மீண்டும் வருகிறது. இப்படியான சித்திரிப்பு படத்திற்கு கலைத் தன்மையை அளிக்கிறது.


பொதுவாழ்வுக்கு தன்னை அர்ப்பணித்த மனிதனின் குடும்பம் அனுபவிக்கும் அத்தனை துயரத்தையும் வலேசாவின் குடும்பம் அனுபவிக்கிறது. வலேசாவிடம் மேற்கொள்ளப்படும் நேர்காணல் வழியே போராட்ட வாழ்க்கை காட்சியாக விரிந்துசெல்கிறது. நோபல் பரிசு வாங்க தான் செல்ல முடியாத நிலையில் தன் மனைவியை அனுப்பிவைக்கிறார் வலேசா. விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரைச் சோதனையிடும் போது அனைத்து உடைகளையும் களைந்த நிலையில் நோபல் பதக்கத்தை துணியால் மறைக்கும் காட்சி இயக்குநரை அடையாளம் காட்டுகிறது. 


அறிவுஜீவிகள் மணிக்கணக்காகப் பேசி எடுக்கும் முடிவை தான் ஒரு சில நொடிகளில் எடுத்துவிடுவதாக வலேசா குறிப்பிடும் காட்சியில் அரங்கில் உற்சாகம் பெருகியது. ஒரு கதாநாயகத் தனத்துடன் ஒரு பக்கத்திலிருந்து பார்த்ததைப் போன்று படமாக்கப்பட்டிருந்தது. வலேசாவின் போராட்டங்களுக்கு கிடைத்த பிற ஆதரவோ அது தொடர்பான பெரிய விவரங்கள் படத்தில் பதிவுசெய்யப்படவில்லை. 


87 வயது இயக்குநர் இயக்கிய படம் என்பதால் படுத்திவிடக் கூடாதே என்று பயம் இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்தபின்னர் படத்தில் வெளிப்பட்டிருந்த உற்சாகம் இயக்குநர் மீதான மதிப்பை அதிகப்படுத்தியிருந்தது. 

வியாழன், டிசம்பர் 26, 2013

கடினமும் கசப்புமான வாழ்க்கை

சர்வதேச திரைப்பட விழா 2013



திங்களன்று (2013 டிசம்பர் 16) மாலை உட்லண்ட்ஸில் பார்த்த படம் In bloom.  ஜியார்ஜியா நாட்டுப் படம். வேறொரு படம் திரையிடுவதாக இருந்தது. ஆனால் கடைசியில் மாறுதல் ஏற்பட்டு இந்தப் படம் திரையிடப்பட்டது. தெளிவான திரைக்கதையைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த திரைப்படம் இது. இரண்டு தோழிகள் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களது குடும்பங்கள், சமூகச் சூழல், நாட்டில் நிலவும் சிக்கல்கள், மனிதர்களின் கண்மூடித்தனம், மனிதர்களிடையே நிலவும் போலித்தனம் போன்ற பல்வேறு விஷயங்களை விமர்சனத்துடன் மிகவும் நுட்பமாக வெளிப்படுத்தியது இந்தப் படம். தொடக்க காட்சியில் ரேஷனில் ரொட்டி வாங்க நிற்கும் கும்பலும் அங்கே நடக்கும் களேபரமும் நமது சூழலை ஒத்திருந்தது. காதலியின் பாதுகாப்புக்கு காதலன் ரிவால்வரை வழங்குகிறான். அதை ஒரே முறை அதுவும் ரௌடித்தனத்திற்கு எதிரான மிரட்டலுக்கு மட்டுமே பயன்படுத்தும்படியான காட்சியமைப்பு. 

அஹிம்சையை வலியுறுத்துகிறது படம். தான் நேசிப்பவனிடமிருந்து தன்னை தட்டிப்பறித்து கட்டாய மணம் புரிகிறான் ஒருவன். அந்தப் பெண்ணுக்கு அதைத் தட்டிக்கேட்க முடியவில்லை. அந்த அத்துமீறலுக்கு தன்னை ஒப்புக்கொடுக்கிறாள். தோழியின் திருமணத்திற்கு வந்த சின்னப் பெண்ணிற்கு தோழியின் போக்கும் அங்கும் நிலவும் போலித்தனமும் எரிச்சலை உண்டாக்குகிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக அவள் போடும் ஆட்டம். கோபத்தை கலையம்சத்துடன் வெளிப்படுத்துகிறது. 


தன் கணவனே தனது காதலனை கொன்றது அறிந்து ஆத்திரத்துடன் அவனைக் கொல்லத் துடிக்கும் தோழி. ஆனால் ரிவால்வரின் குண்டுக்கு வேலை இல்லை. அந்த ரிவால்வர் மௌனமாக நீருக்குள் மூழ்குகிறது. வன்முறைக்கு விடை வன்முறை அல்ல என்பதை படம் உணர்த்துகிறது.  


படத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்த பெண்ணின் தந்தை கதாபாத்திரம் சிறையில் இருப்பது போன்று சித்திரிப்பு இடம்பெற்றிருக்கிறது. ஆனால் கடைசி வரை அந்தப் பாத்திரம் பார்வையாளர்களுக்கு காட்சியாவது இல்லை. இறுதியில் தனது தந்தையைப் பார்க்க அந்தப் பெண் சிறைக்கு செல்வதுடன் படம் நிறைவு பெறுகிறது. 

திங்கள், டிசம்பர் 23, 2013

அமைதியின் அழகு

சர்வதேச திரைப்பட விழா

15.12.2013 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு கேஸினோ திரையரங்கில் The photograph படம் பார்த்தோம். போலந்து நாட்டைச் சேர்ந்த படம். மிக இயல்பான படம். திரைக்கதையில் பெரிய திருப்பங்கள் என எவையும் இல்லை. ஆனால் தீவிரமான சம்பவங்களைக் கொண்ட படம். 


ஒரு சாதாரணக் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை காட்சிகளாக வரித்திருந்தது இப்படம். பல இடங்களில் அமைதியின் அழகை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பார்வையாளனுக்கான இடத்தை அளிப்பதில் மௌனக் காட்சிகளுக்கு ஈடுஇணையே இல்லை. படத்தைப் பார்வையாளன் மனத்தில் ஓட்டிப் பார்க்க வாய்ப்பளிப்பவை பின்னணி இசைகூட இன்றி மௌனமாக நகரும் சட்டகங்களே. சத்தங்களால் பூசப்படாமல் மௌனங்களால் மெருகேற்றப்பட்டிருந்த காட்சிகள் மனத்திற்கு அமைதியையும் திரைப்படம் பார்த்த முழு ஆசுவாசத்தையும் அளித்தன. தன் தாய் கர்ப்பம் தரித்திருக்கும் போது அவளை நெருங்கி நின்று அணைத்தபடி நிற்கிறான் அந்நிய ஆண் ஒருவன். இப்படி ஒரு புகைப்படம் 17 வயது இளைஞனுக்குக் கிடைக்கிறது. அதன் விவரம் அறிய அவன் பயணப்படுகிறான். பயணத்தின் முடிவில் பல அனுபவங்களைப் பெற்றவனாகிறான். அந்த அனுபவங்கள் வாயிலாக ஒரு வாழ்க்கை விவரிக்கப்பட்டது. 

அடுத்ததாக உட்லண்ட்ஸில் Puppy love என்னும் திரைப்படம். 


இது சொல்லிக்கொள்ளும்படியான படம் அல்ல. பதின்பருவ வயது பெண்ணின் பாலியல் செயல்பாடுகள் பற்றிய படம். அவளது தோழி ஒருத்தி வந்த பின்னர் அவள் வாழ்வில் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தாம் கதை. 

அடுத்து பார்த்த சீனப் படம் A Touch of Sin. கேன் பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்ற படம், அப்படி இப்படி என ஏகத்துக்கு இப்படம் குறித்த செய்திகள் கசிந்திருந்தன. ஆனால் படம் ஏமாற்றமான ஒன்றே. 


மிஷ்கின் டைப் படம் எனக்கூடச் சொல்லலாம். சமகால சீனா அரசியல் பொருளாதார சமூக மட்டத்தில் மிகவும் சீரழிந்துபோய் உள்ளது என்பதை காட்சிகளால் சொல்லிய படம். ஆனால் பார்த்துப் பார்த்து சலித்துப்போன காட்சிகளால் ஆன இப்படம் மிகவும் சுமாரான படமே.

இறுதியாக பார்த்த படம் Young and Beautiful  . 


இப்படத்தில் 17 வயது பெண் ஒருத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். ஒரு சுவாரசியத்திற்காக அதில் ஈடுபடுகிறாள். வீட்டில் உள்ளவர்களுக்கு இது எதுவுமே தெரிவதில்லை. ஒருமுறை தனது முதிய வாடிக்கையாளரை சந்திக்க விடுதிக்குச் சென்றபோது அவர் இவளுடன் கூடலில் ஈடுபட்ட தருணத்தில் உயிரை விட்டுவிடுகிறார். எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் செய்வதறியாது அவ்விடத்தை விட்டு ஓடி விடுகிறாள். இதைத் தொடர்ந்து அவள் எதிர்கொள்ளும் சிக்கல்களே படம். 

சனி, டிசம்பர் 14, 2013

ஈரம் கசியும் பாறை

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா




சென்னை சர்வதேசத் திரைப்பட விழா நேற்று (12.12.2013) அன்று தொடங்கியது. இன்று உட்லண்ட்ஸ் தியேட்டரில் இத்தாலியப் படமான Salvo (சல்வோவோ சால்வோவோ) பார்த்தோம். ஃபேபியோ கிராஸ்ஸடோனியோவும் அண்டோனியோ பியாஸாவும் இப்படத்தின் இயக்குநர்கள். வசனங்களுக்கு வேலையே இல்லை. ஆட்கொல்லி ஒருவனின் மனத்தில் கசிந்த அன்பைச் சொல்லும் கதை. விரோதம் காட்ட வேண்டியவன் மீது பரிவு கொள்ள நேர்ந்த சூழல். மனிதர்களின் குணாதிசயங்களை எப்போதுமே விளங்கிக்கொள்ள இயலாது. இப்படத்தின் கரு கிட்டத்தட்ட ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்னும் படத்தின் கரு தான். ஆனால் ஓநாய் ஓலமிட்டது. சல்வோவின் மெல்லிய வெளிப்படுத்தல் மனத்திற்குள் ஓலமிடுகிறது. மௌனத்தின் வலுவை உணர்த்துகிறது படம். 

மேகத்தை எப்படி விவரிக்க

சென்னை சர்வதேச திரைப்பட விழா



இன்று சென்னை திரைப்பட விழாவில் காலையில் ராணி சீதை அரங்கில் எல்லீஸ் ஆர் டங்கன் குறித்த An American in Madras என்னும் ஆவணப்படத்தை பார்த்தேன். எல்லீஸ் பற்றிய நல்ல காட்சிபூர்வ ஆவணம். இயக்குநர் பற்றிய படமென்றாலும் தமிழ்த் திரைப்படம் அரசியல் எனப் பல விஷயங்களைத் தொட்டுச் சென்றது படம். எல்லீஸ் ஆர் டங்கன் ரெட்டை நாடி என்பதால் எம்ஜிஆரை கதாநாயக வேடத்திற்கு ஒப்பந்தம் செய்ய மறுத்துள்ளார் கருணாநிதி தான் வற்புறுத்தி எம்ஜிஆரை நடிக்க வைத்துள்ளார். நல்ல சூரியனை படமாக்கி அதை நிலவாக காட்டிய செய்தி டங்கனின் படைப்புத்திறனை வெளிப்படுத்தியது. திரையிடல் முடிந்த பின்னர் அரங்கில் பேசிய முக்தா வி சீனிவாசன் தான் எல்லீஸ் ஆர் டங்கனுடன் சென்று மந்திரி குமாரி நாடகத்தைப் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். பத்திரிகையாளர் ஞாநி ஆவணப்பட இயக்குநரிடம் ஏன் கருணாநிதியை நேர்காணல் செய்யவில்லை எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த இயக்குநர் கருணாநிதியைப் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் நேர்காணல் அளிக்கவில்லை எனக் குறிப்பிட்டார். முக்கியமான ஆவணப்படம். 


அடுத்ததாக கேசினோ திரையரங்கில் Like father, Like son என்னும் ஜப்பானியப் படம் பார்த்தேன். தங்கள் குழந்தை தங்களுடைய குழந்தை இல்லை என்பதை அக்குழந்தையின் ஆறு வயதில் பெற்றோர் அறிகின்றனர். மருத்துவமனையில் குழந்தை மாறிவிட்டது. தாங்கள் வளர்த்த குழந்தைக்கும் தங்கள் சொந்தக் குழந்தைக்கும் இடையில் மாட்டிக் கொண்டு பெற்றோர் படும் அவதியே படம். பல இடங்களில் தொய்வு. சொந்த ரத்தம் என்பதைவிட வளர்த்த பாசம் தான் அதிகம் என்னும் வகையில் படம் அமைந்திருந்தது. கை கொடுத்த தெய்வம், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற தமிழ்ப்படங்களில் இம்மாதிரியான விஷயம் கையாளப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது.


அடுத்ததாக உட்லண்ட்ஸில் How to Describe a Cloud என்னும் படம் பார்த்தேன். மாயத்தன்மை கொண்ட படம். பார்வை பறிபோன தாய்க்கும் மகளுக்கும் இடையிலான பாசத்தையும் அம்மகளது காதலையும் சுற்றி படத்தின் சித்திரிப்பு அமைந்திருந்தது. காட்சிகள் மெதுவாக நகர்ந்தன ஆனால் தீவிரமாக இருந்தன. ஒளிப்பதிவு இசை ஆகியவை படத்தை வழக்கமான படத்திலிருந்து மாறுபட்டதாக காட்டியது. மர்மம், புதிர் நிறைந்த மனித வாழ்வை உணர்த்தும்விதத்தில் படம் அமைந்திருந்தது.


இறுதியாக உட்லண்ட்ஸில் Waiting for the Sea என்னும் ரஷ்யப் படத்தைப் பார்த்தேன். நம்பிக்கையை வலியுறுத்திய படம். தட்பவெப்பம் சரியில்லை என்பதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என வற்புறுத்தியும் கடலுக்கு செல்கிறான் கடலோடி ஒருவன். அவனுடன் அவனது மனைவியும் செல்கிறாள். புயல் வந்து அனைவரையும் மூழ்கடித்துவிடுகிறது. கடலோடி மட்டும் தப்பித்துவிடுகிறான். பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் தனது கடற்கரை ஊருக்கு வருகிறான். கடல் என்பதே அங்கு இல்லை. எல்லாம் பழங்கதை. இயற்கை மாற்றத்தால் கடல் சுத்தமாக வற்றிவிட்டது. அவன் மீண்டும் கரையில் ஒதுங்கி துருப்பிடித்துப் போன கப்பலைச் சரிசெய்து கடலில் தொலைந்த மனைவியைக் கண்டுபிடித்துவிட முடிவுசெய்து போராடுகிறான். ஊரே அவனைப் பைத்தியக்காரன் என்று முடிவுசெய்துவிடுகிறது. அவன் தனது நம்பிக்கையில் வென்றானா என்பதே படம். 


 (படங்களைப் பற்றிய சிறு குறிப்புகளே இவை.)

ஞாயிறு, டிசம்பர் 01, 2013

சிலைகளும் பேசும்

சர் பிட்டி தியாகராய செட்டி 

சென்னை மாநகராட்சி கட்டடம்

சென்னை மாநகராட்சிக் கட்டடத்தின் முன்னே நுழைவாயில் வருவோருக்கு முகம் காட்டி வெள்ளைவெளேரென நின்றிருப்பது வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி தியாகராய செட்டியின் சிலை. மெட்ராஸ் மாகாணத்தின் ஏகாட்டூரில் தெலுங்கு செட்டி குடும்பத்தில் 1852, ஏப்ரல் 27 அன்று பிறந்த இவர் சிறந்த வழக்கறிஞர், தொழிலதிபர், புகழ் பெற்ற அரசியல்வாதி. சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் இவர். 1916இல் பார்ப்பனர் அல்லாதாரின் நலன் பேண நீதிக்கட்சியை டி எம் நாயரோடு இணைந்து தொடங்கியவர். இக்கட்சியின் கொள்கைகளைப் பரப்ப 1927இல் ஜஸ்டிஸ் என்னும் பத்திரிகைத் தொடங்கி நடத்தினர் இருவரும். டி.எம். நாயர் தான் இப்பத்திரிகையின் முதல் ஆசிரியர். தென்னிந்திய வர்த்தக சபையைத் தொடங்கியவர்; 1910முதல் 1921வரை அதன் தலைவராகவும் இருந்தவர் தியாகராய செட்டி. 1882இலிருந்து 1923வரை சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக இருந்தார்.  ஏழை மக்கள் கல்வி கற்க வசதியாக வண்ணாரப்பேட்டையில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். அந்தப் பள்ளிதான் இப்போது தியாகராய கல்லூரி என்னும் பெயரோடு விளங்கிவருகிறது.

இந்தத் தியாகராய கல்லூரியின் உள்ளே இவரது சிலை ஒன்று உள்ளது. 1985, செப்டம்பர் 28 அன்று அப்போதை தொழிற்துறை அமைச்சர் கே.ராஜாராம் திறந்துவைத்த சிலை இது. அந்நிகழ்ச்சிக்கு தியாகராய கல்வி அறக்கட்டளையின் தலைவர் விஎம்ஜி ராமகண்ணப்பன் தலைமை தாங்கினார்; பி. சிதம்பரம் முன்னிலை வகித்தார். இந்தச் சிலை கும்பகோணம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ராமசாமி அன்பளிப்பாக வழங்கியது.  இக்கல்லூரிக்கு அருகிலேயே இவரது பெயரில் சென்னை மாநராட்சி பூங்கா ஒன்றை நிறுவியுள்ளது. இப்பூங்காவிலும் இவரது மார்பளவு சிலை ஒன்று உள்ளது.


1920இல் முதன்முறையாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி பெரும் வெற்றி பெற்றது. அப்போதைய சென்னை கவர்னர் லார்டு வெலிங்டன் தியாகராய செட்டியை பிரதராகப் பதவியேற்று மந்திரிசபை அமைக்கச்சொன்னார். ஆனால் இவரோ அப்பதவி தனக்கு வேண்டாமென மறுத்துவிட்டார். சென்னை வரலாற்றில் தனக்கென நீங்கா இடத்தைப் பிடித்துக்கொண்ட இவர் 1925 ஏப்ரல் 28 அன்று காலமானார்.   

சர் பிட்டி தியாகராய செட்டி (சீனியர்) 

சென்னை வண்ணாரப்பேட்டை தியாகராய கல்லூரி வளாகத்தில் சர் பிட்டி தியாகராய செட்டி (சீனியர்) சிலை உள்ளது. பிப்ரவரி 9, 2004இல் கல்லூரி குழுத் தலைவர் பி. தியாகராயன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் திறந்து வைத்த சிலை இது. 

பி. ராமசாமி செட்டி 

 சென்னை வண்ணாரப்பேட்டை தியாகராய கல்லூரியின் நிறுவனர் திரு பி ராமசாமி செட்டி. இவரது சிலை இக்கல்லூரியின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை 1955, அக்டோபர் 6 அன்று அப்போதைய சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சர் லட்சுமணசாமி முதலியார் திறந்துவைத்துள்ளார்.  பிட்டி தியாகராய செட்டி (சீனியர்), சர் பிட்டி தியாகராய செட்டி இருவரும் 1897இல் வடசென்னையில், வண்ணாரப்பேட்டையில் வட சென்னை இந்து பள்ளியைத் தொடங்கினர். செட்டி சகோதரர்கள் மரணத்திற்குப் பின் தியாகராய செட்டி இந்து பள்ளி என அழைக்கப்பட்டது அந்தப் பள்ளி. ஜூன் 1947இல் இப்பள்ளியின் மாணாக்கர் எண்ணிக்கை 1600ஆக இருந்தது. எனவே இப்பள்ளியை கல்லூரியாக உயர்த்தினால வட சென்னை பகுதி மக்களுக்கு உயர் கல்வி கிடைக்கும் என நம்பியதால் ராமசாமி செட்டி இண்டர்மீடியேட் கோர்ஸோடு 1950இல் தியாகராய    கல்லூரியைத் தொடங்கினார். 1954இல் முதல் நிலை கல்லூரியானது இது. 1963முதல் 1965வரை இக்கல்லூரி மேலாண்மைக் குழுத் தலைவராக முன்னாள் முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் இருந்துள்ளார். 1907இல் பிறந்த ராமசாமி செட்டி 1954 மே 28இல் காலமானார்.

புதன், நவம்பர் 27, 2013

காத்திருப்பின் கணங்கள்

வாழ்வு காத்திருப்புகளால் ஆனது. வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தருணங்களில் காத்திருக்கிறோம். அப்படியான காத்திருப்புகளில் பயணத்தின் பொருட்டு காத்திருப்பதும் உண்டு. இந்தப் பதிவில் இடம்பெற்றிருக்கும் ஒருசில புகைப்படங்கள் அப்படியான காத்திருப்புகளில் க்ளிக்கியவை. இவை வெறும் க்ளிக்குகள் மட்டுமே. கேமராக் கோணம் காட்சிகளின் வெளிப்பாடு குறித்தெல்லாம் புரிதல் இன்றி தான் தோன்றித்தனமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

மின் நகரிலிருந்து காசிமேஜர் புரம் செல்லும் சாலை

நன்னகரம் கோயில் ஓர் அதிகாலைப் பொழுதில் 

செங்கோட்டை ரயில் நிலையம் 

செங்கோட்டை விஸ்வநாதபுரம் ரயில்வே கிராஸிங்

கேட் பூட்டியிருப்பதால் காத்திருப்போர்

தாம்பரம் ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் விரைவு ரயில்
சேப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் வண்டியில் படுத்து உறங்கும் முதியவர்
திருவல்லிக்கேணி பாரதி சாலை

சென்டிரல் ரயில் நிலையம் அருகே எடுக்கப்பட்டது

பழவந்தாங்கல் ரயில் நிலையம்


வியாழன், அக்டோபர் 03, 2013

தங்க மீன்கள்

பரிசுத்த அன்பில் நீந்தும் மீன்கள்

சமூகச் சிக்கல்களின் மையத்திலிருந்து தனது முதல் திரைப்படமான கற்றது தமிழின் ஆதி இழையை இயக்குநர் ராம் தேர்ந்தெடுத்திருந்தார். மென்பொருள் துறையினரால் சமூகத்தில் ஏற்பட்டிருந்த அழுத்தமான தாக்கத்தை உள்வாங்கியிருந்த கற்றது தமிழ் முழுமையான திரைப்படமாகப் பரிமளிக்கவில்லை. சில குறைகளைக் கொண்டிருந்தபோதிலும் சமகாலத்தின் ஒரு பிரச்சினையை அந்தத்  திரைப்படம் அலச முற்பட்டது. தங்க மீன்கள் ராமின் இரண்டாம் படம். இதன் வெளியீடு தொடர்பாக நாளிதழ்களில் பிரசுரமாகியிருந்த விளம்பர வாசகங்கள் இதை அதீதப் புனைவு வரிசைப் படமாக எண்ணவைத்திருந்தன. ஆனால் திரைப்படத்தை எதிர்கொண்ட மனத்தில் இப்படம் உருவாக்கிய அதிர்வுகள் அசாதாரணமானவை.



நிசப்த அரங்கின் திரையில் அலைந்துகொண்டேயிருந்த தங்க மீன்கள் இதுவரையான தமிழ்த் திரைப்படங்கள் பயணப்பட்டிராத பாதையைத் துலக்கமாக்கியது. தொடக்கத்திலிருந்தே தீவிரமான உணர்வுகளும் பதற்றத்தின் துளிகளும் தளும்பிய காட்சிகளில் கசிந்த துக்கம் ஆழ் மனத்தில் நோவேற்படுத்தியது. இடைவேளை வரையான காட்சி அமைப்புகளில் காணப்படும் இறுக்கமும் அடர்த்தியும் இதுவரை எந்தத் தமிழ்த் திரைப்படத்திலும் சாத்தியப்பட்டிருக்காதவை. அதன் பின்னர் படத்தைக் கோத்திருந்த மைய இழையில் அவ்வப்போது சிறிது தளர்வும் இறுதியில் முழுமையான தளர்வும் ஏற்பட்டிருந்தன. படத்தின் ஒட்டுமொத்த அழுத்தத்தையும் உச்சக்கட்ட போதனைக் காட்சி சட்டென வெளியேற்றியதால் சலிப்பும் வருத்தமும் உருவாயின. 

மனக்கூட்டுக்குள் சுருங்கிக்கொள்ளும் மனிதர்களின் சராசரிப் பதற்றங்களையும் பரிதவிப்புகளையும் விசும்பல்களையும் கேவல்களையும் இயலாமைகளையும் ஏமாற்றங்களையும் பிரியங்களையும் நேர்த்தியான காட்சிமொழியாக்கிய நுட்பத்தில் ராம் வித்தியாசப்படுகிறார். பழுக்கக்காய்ச்சிய வார்த்தைகளின்  வாதைக்காளான உள்ளங்களின் கொப்பளங்கள் காட்சிகளில் நிணம் பரப்புகின்றன. தனக்கென சுய அடையாளமின்றி ஏதோ ஒரு கிராமத்திலோ நகரத்திலோ அன்றாட வாழ்வை நகர்த்துவதிலேயே ஆயுளைக் கழிக்கும் வறியவர்களின் அவலங்களே சிந்தையை நிறைக்கின்றன. 



நல்லாசிரியர் விருது பெற்ற தகப்பனுக்குப் பிறந்த தலைமகன் கல்யாணி. முறையாகக் கல்வி கற்காத அவன் சரியான வயதில் காதல் வயப்பட்டுவிடுகிறான். இளவயதிலேயே மணம் முடித்தும்விடுகிறான். வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான வருமானம் இல்லை என்ற சூழலில் அப்பனோடு ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துகிறான். தந்தையிடம் போதிய வருமானமும் தேவையான அளவு சொத்தும் உள்ளன. தங்கை மென்பொருள் துறையில் கார்டு நிறையச் சம்பாதிக்கிறாள். ஆனால் கல்யாணி தன் பிரிய மகளின் படிப்புச் செலவுக்கே திணறுகிறான். படத்தின் தொடக்கக் காட்சியில் சிறு மகளுடன் மரணம் குறித்து உரையாடும் தந்தையைக் காணும்போதே மனம் துணுக்குறுகிறது. அர்த்தம் பொதிந்த நறுக்குத் தெரித்த உரையாடலுக்கான வெளியைத் தமிழ்த் திரைப்பட பரப்பில் பார்ப்பது அரிதிலும் அரிது. அப்படியொரு வெளி தங்க மீன்களில் திறந்துகிடக்கிறது.

செல்லம்மாவின் சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் வாழ்வின் முழுமையை உணர்கிறான் கல்யாணி. எனவே எந்த விகற்பமுமின்றி முகத்தில் வெள்ளிப்பூச்சுடன் சில்வர் மேனாக மகளிடம் கதை பேசியபடியே சைக்கிளில் ஊருலா வருகிறான். மகளை மட்டுமின்றி எல்லாக் குழந்தைகளையும் அவன் நேசிக்கிறான். கடன் கேட்கச் சென்ற இடத்தில் நண்பனுடைய மகன் ஆசையாய்க் கேட்ட வெண்ணிலா கேக்கை மறுமுறை ஞாபகமாக வாங்கிச்செல்ல அவனால் முடிகிறது. செல்லம்மா புத்திசாலிப் பெண். அவள் நேயமிக்க கல்விக்கு ஏங்குகிறாள். ஆங்கில வழிக் கல்வி அவளது உலகத்துடன் சுத்தமாகப் பொருந்தவில்லை. எனவே மந்தமானவளாகப் புரிந்துகொள்ளப்படுகிறாள். கற்பதில் பரிவுடன் கூடிய அன்பு அவளுக்குத் தேவைப்படுகிறது. அதைத் தருபவனாகத் தந்தை இருக்கிறான். 


சாமி படத்தின் முன்பு மகளுக்குத் தேவையான பள்ளிக் கட்டணத்தைக் கல்யாணியின் தந்தை வைத்திருக்கும் காட்சியில் சாமி படத்தின் இடத்திலிருந்து சம்பவத்தை கேமரா படம்பிடித்துள்ள தன்மை பொருள் பொதிந்தது. பேத்தியின் படிப்புக்கு உதவும் தாத்தா போகிறபோக்கில் மகனின் சுய மரியாதையைச் சீண்டிவிடுகிறார். பணத்தை எடுக்க மனமின்றித் தானே கட்டிக்கொள்வதாகத் தெரிவித்துக் கல்யாணி மகளுடன் வெளியேறுகிறான். குழந்தை செல்லம்மா போகும்வழியில் தன் தோழி நித்யஸ்ரீயிடம் தனக்கொரு பூ கேட்க அவள் அதை இயல்பாய் எடுத்துத் தருகிறாள். அடுத்தடுத்து வரும் இந்தக் காட்சிகள் பெரியவர்களின் உலகத்திற்கும் சிறுவர்களின் உலகத்திற்குமிடையேயான முரணை உள்வாங்க உதவுகிறது. இப்படிப் பல செய்திகளை அதிகாலைப் புலர்வது போன்று நுட்பமாக உணரச்செய்கிறது படம். 

இரவில் கல்யாணியும் வடிவும் ரயிலடியில் பேசிக்கொள்ளும் காட்சியில் தண்டவாளத்தில் தடதடத்து ஓடும் ரயிலின் ஓசை பதற்றமான கதாபாத்திரங்களின் மனநிலையோடு பார்வையாளனின் மனநிலையை ஒன்றுகூட்டுகிறது. தினசரி நிகழ்வுகளில் இயல்பாக ஒலிக்கும் ஓசைகளைப் பொருத்தமான தருணத்தில் பின்னணி இசையாக மீட்டியதால் திரைப்படத்தின் ஜீவன் பெருகுகிறது.


ஆசிரியர் எவிட்டாவின் ஆதரவாகப் பழகும் தன்மை செல்லம்மாவைக் கவர்ந்துவிடுகிறது. பள்ளியிலிருந்து திடீரென விலகிவிட்ட எவிட்டாவிடம் பேச செல்லம்மா விரும்பியதால் அவரது வீட்டிற்குக் கல்யாணி தேடிப்போகும் காட்சி குறிப்பிடத்தக்க ஒன்று. நமது சமூகச் சூழலைக், கீழ் மத்திய தரக் குடும்பத்துப் பெண்களின் தாம்பத்திய வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காட்சி அது. அந்தக் காட்சி உருவாக்கப்பட்ட நேர்த்தியில் அது மேன்மையானதாக மாறியுள்ளது. நேரிடையான வசனங்கள் இல்லாமல் கதாபாத்திரங்களின் சுருக்கமான உரையாடல், அங்க அசைவுகள், ஆழமான பார்வைகள் ஆகியவற்றின் மூலம் கதாபாத்திரங்களின் அக நெருக்கடியை  அப்படியே உணர்த்துகிறார் இயக்குநர். சந்தேகக் குணம் கொண்ட கணவனின் ஆக்கிரமிப்புக்குள் ஒடுங்கிப்போன சராசரிப் பெண்ணாக எவிட்டா வந்துநிற்கிறாள். பின்புலச் சுவரில் குழந்தையைச் சுமந்திருக்கும் கன்னி மரியாளின் படம் மாட்டப்பட்டிருக்கிறது. எவிட்டா திக்கித் திணறி செல்போனில் ஒருசில வார்த்தைகள் பேசுகிறாள். அப்போது வெளிப்படும் ஆசிரியருக்கும் மாணவிக்குமான அன்பு சந்தேகக் குணம் கொண்ட கணவனின் அழுக்குகளை அகற்றிவிடுகிறது. இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டது போன்ற தரிசனம் கிடைக்கிறது.  உலக இலக்கியங்கள் வலியுறுத்தும் பிரதிபலன் பாராத இந்த எளிய அன்புதான் உலகமயமாக்கலில் சிக்கித் தவிக்கும் நவீன மனத்தின் தற்காலத் தேவை என்பதை மௌனமாக உணர்த்தும் இந்தக் காட்சி நிச்சயமாகத் தமிழ்த் திரைப்படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.

குடும்பம், சமூகம் ஆகியவற்றின் சூழல்கள் காரணமாக எந்த நேரத்திலும் மீட்சி எல்லைக்கு வெளியே சென்றுவிடக்கூடிய அபாயகரமான மன அழுத்தத் தருணங்களை அடிக்கடி எதிர்கொள்கிறான் கல்யாணி. அந்த மனப்போராட்டம்தான் அவனை மற்றவர்களிடமிருந்து தள்ளிவைக்கிறது. தந்தையும் தன் மகன்மீது பாசங்கொண்டவர்தான். ஆனால் பொருள் தேட இயலாத மகன் குறித்த ஆற்றாமையைத் தான் அவரும் வெளிப்படுத்துகிறார். அயலானின் ஆயிரம் சொற்கள் உருவாக்காத வடுவை நெருக்கமானவனின் சிறு விசனம் ஏற்படுத்திவிடுமே? ஓலங்களைவிட விசும்பலின் தீவிரம்தானே மனத்தை ஓய்வற்று உழலவிடுகிறது.


இயலாமையின் வெம்மையும் தவிப்பின் வெதும்பலும் வெளியேற வழியின்றி உள்ளுக்குள்ளேயே அலைமோதுவதால் மனம் அடையும் வேதனைத் துயரைப் பார்வையாளனால் உணரமுடிகிறது. தந்தையுடன் சரிசெய்ய இயலாத அளவிலான பிணக்கு கொண்ட கணத்தில் வீட்டை விட்டு வெளியேற முடிவுசெய்து, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போதே தன்னுடன் வந்த காதல் மனைவியைக் கல்யாணி அழைக்கும்போது அவள் மறுப்பதுடன் குழந்தையையும் தர மறுத்துக் கதவை அழுத்தமாக மூடிவிடுகிறாள். மூடிய கதவின் முன்னர் முட்டி மோதி “நான் என்ன தப்பு செய்தேன்” என மாசுபட்ட சமூகச் சூழலில் மாசுபடாத கல்யாணி கதறுகிறான். திறமையற்ற காரணத்தால் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த கதறலாக அது இருப்பதால் உக்கிரத்துடன் ஒலிக்கிறது.

காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் திரைக்கதைக்கு நூறு சதவிகிதம் பொருத்தமாக அமைத்துவிட்டதால் பார்வையாளனை இயக்குநர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வெவ்வேறு நிலங்களுக்கு அவரது விருப்பம் போல் அழைத்துச்செல்ல முடிகிறது. கேள்விகளற்றுத் தொடர்கிறான் பார்வையாளன். காட்சிகளின் பின்னணியில் எழும் ஒலிகள், திரையில் வரும் அஃறிணைப் பொருள்கள் ஆகியன காட்சிகளின் உணர்வைப் பார்வையாளனிடம் பரிவோடு கொண்டுசேர்க்கின்றன.


கல்யாணி கடன் பெறுவதற்காக மலையாளியான தன் நண்பன் முருகன் வீட்டின் பூட்டிய கதவுக்கு முன்னால் காய்ந்த சருகுகளைப் பார்த்தவாறு கையைப் பிசைந்தபடி காத்திருக்கிறான். முற்றத்தில் குழந்தைகள் அழகான தமிழ்ப் பாட்டுக்கு ஆனந்தமாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் ஆங்கிலப் பாடலுக்கு ஒழுங்காக ஆடத் தெரியவில்லை என்ற காரணத்தால் பிஞ்சு மகள் ஆசிரியையிடம் திட்டு வாங்கி மனம் வெதும்பிக்கொண்டிருக்கிறாள். மனம் உடைந்து அழுதுகொண்டே பசுமையான தோப்புகளின் பின்னணியில் செல்லம்மா வருகிறாள். பிரபஞ்சத்தின் ஊடே அவளின் அழுகை மட்டும் சின்னஞ்சிறு பறவையின் கேவலாக ஒலிக்கக் கண்ணெதிரே தெரியும் அந்தத் தொலைதூரக் காட்சி ஒளிப்பதிவாளர் அர்பிந்த் சாராவை மனத்துக்கு மிக நெருக்கத்தில் கொண்டுவருகிறது.  இருளும் ஒளியும், பசுமையும் வெறுமையும், மேடும் பள்ளமுமான களங்களாலும் ஆவேசமும் அமைதியும், சந்தோஷமும் துக்கமுமான உணர்வுகளாலும் வனையப்பட்ட காட்சிகளை அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவு உறுத்தலின்றிக் காட்சிப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சராசரியான வாழ்வு நடத்தக்கூடப் பணமற்றுக் கல்யாணி கொச்சிக்குச் செல்ல முருகன்தான் மறைமுகக் காரணம். அயல் நாட்டில் பிறந்த டால்ஃபின் ஆண்ட்டி கொச்சியில் கலைப்பொருள்கள் வர்த்தகத்தில் ஏகத்திற்குச் சம்பாதிக்கிறார். தன் தந்தைக்கு உதவ நினைக்கும் மகளுக்குத் தொலைக்காட்சி தொடர் ஒன்று திருடக் கற்றுத் தருகிறது. செல்லம்மாவின் விருப்பமான வோடோஃபோன் விளம்பர நாயைப் பெற டால்ஃபின் ஆண்ட்டி, எங்கோ வயநாட்டில் வாழும் பழங்குடியினப் பெரியவர் ஆகியோரின் உதவி தேவையாக உள்ளது. இத்தகைய காட்சிகள் ஒவ்வொன்றும் முரண்கள் நிறைந்த  வாழ்வின் நிதர்சனங்கள். எளிய மனிதனின் சுதந்திரமான வாழ்வைத் தாறுமாறாகக் கலைத்துப்போடுவதில் சமூகம் பெரும் பங்காற்றுகிறது என்னும் அரசியல் கருத்து பூடகமாக உணர்த்தப்படுகிறது.


ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும் பள்ளியில் குழந்தைகளுக்கு நேரும் இன்னல்கள், பெற்றோர் சந்திக்கும் பள்ளி நிர்வாக அராஜகம், மரியாதையின்மை, சுரண்டல் என அதன் அத்தனைப் பக்கங்களையும் மிகத் தெளிவாகக் காட்சிகள் புலப்படுத்துகின்றன. செல்லம்மாவுக்கு மறு தேர்வுக்கான ஒப்புதல் தரும்போது அதற்கும் சேர்த்துக் கட்டணத்தை வசூலிப்பவராகத்தான் பள்ளித் தலைமை ஆசிரியர் இருக்கிறார். குறைந்த ஊதியம் பெறும் ஸ்டெல்லா போன்ற ஆசிரியர்களின் மன உளைச்சல் குழந்தைகள்மீது வேறு விதமாகப் பாய்கிறது.  ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் செல்லம்மா மட்டுமல்ல அரசுப் பள்ளியில் படிக்கும் பூரி நித்யஸ்ரீயும் சரியாகப் படிக்கவில்லை என அவள் தாய் திட்டியதால் இறந்துவிட முடிவுசெய்கிறாள். ஆனால் மனசுக்குப் பிடித்த பூரிக்காகக் கடினமான ஓரிரவைப் பொறுத்துக்கொள்கிறாள். 

நல்லாசிரியர் விருது பெற்ற நன்கு சம்பாதித்த தந்தையைவிடப் படிப்பைப் பாதியில் துறந்த, போதுமான அளவு சம்பாதிக்காத தந்தையான கல்யாணி நல்ல தந்தை என்னும் பெயரை எளிதில் பெற்றுவிடுகிறான், காரணம் குறைகளைப் பெரிதுபடுத்தாத தூய அன்பு. கல்விக் கட்டணமான இரண்டாயிரம் ரூபாய், வோடோஃபோன் நாய்க்கான அலைச்சல் ஆகியவற்றிற்கு நேரடியான பொருள் கொள்வது அவசியமல்ல என்பதைப் பார்வையாளன் முதல்முறையே புரிந்துகொள்வது சந்தேகமே.


“நானும் செல்லம்மா மாதிரி தானே” எனக் கல்யாணியிடம் ஃபோனில் கெஞ்சுவது, “செல்லம்மாவைத் திருடின்னு சொல்லாதீங்க மாமா” எனக் கண்டிப்புடன் கூறுவது, சுய மரியாதையைவிட முடியாமலும் மாமியாரின் குத்தல் பேச்சுகளைச் சகிக்க முடியாமலும் மருகுவது என அனைத்து உணர்ச்சிகளையும் அளவாக வெளிப்படுத்தியுள்ளார் வடிவாக நடித்துள்ள ஷெல்லி.

“ஆச்சி எப்பம்பா சிரிச்சிருக்கா” என்று பெரிய மனுஷ தோரணையில் பேசுவது, “மிஸ் மிஸ்” எனப் பதறுவது, அந்நியோன்யமான ஆணிடம் அவனது நேசத்தை விழையும் பெண் கொஞ்சிக் குழைந்து பேசுவது போல் தன் தகப்பனிடம் பேசுவது, சொக்கியிடம் மனவருத்தங்களை எல்லாம் சொல்லிவிட்டுக் குளத்தில் குதிக்கத் தயாராவது, தந்தைக்குக் காய்ச்சல் என அவன் சொன்னவுடன் ஆடும் ஊஞ்சலில் இருந்து இறங்கி அனுசரனையுடன் அதைச் செவிமெடுப்பது எனப் பலவித உணர்ச்சிகளையும் இயன்றவரை எல்லை மீறாதபடி கையாண்டுள்ளாள் செல்லம்மா வேடமேற்றுள்ள சாதனா.


கோபமான இடங்களிலும் பாசமான சந்தர்ப்பங்களிலும் வசனங்கள்  நறுக்கென வந்து விழுகின்றன. நாகர்கோயில் அருகே உள்ள வீராணி ஆளூர், அச்சன்கோவில், வயநாடு, கொச்சி, செஞ்சி எனக்  கதைக்குப் பொருத்தமான களங்களை ராம் தேர்வு செய்துள்ளார். உலகமயமாக்கலால் நலிவடைந்த சிறு தொழில், தனியார் பள்ளிகளின் சுரண்டல், விளம்பரங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றின் பாதிப்பு, பழங்குயினர் வாழ்வு போன்ற சமூகக் காரணிகளின் தாக்கத்தை வெறும் புள்ளிகளாக அங்கங்கே வைத்துள்ளார் ராம். நம்பிக்கையும் பொறுமையும் கொண்ட பார்வையாளன் புள்ளிகளை இணைத்து ஓவியத்தை ரசித்துக்கொள்கிறான். ஆகவே அவனது ஆழ்மன இண்டு இடுக்குகளிலெல்லாம் நீந்திக்கொண்டேயிருக்கின்றன இந்தத் தங்க மீன்கள்.

காலச்சுவடு அக்டோபர் 2013 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.

சனி, செப்டம்பர் 28, 2013

ஆனா ஆவன்னா...

சர்வதேச எழுத்தறிவு நாள் செப்டம்பர் 8

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். எழுத்தறிவு என்பது வாழ்க்கையை நடத்த தேவைப்படும் அடிப்படை அறிவு. பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் பாடங்களைப் படிக்காவிட்டாலும் இந்த அடிப்படை அறிவு வாழ்வதற்கு அவசியமான ஒன்று. எழுத்து மூலமாகச் சொல்லப்படும் ஒரு விஷயத்தை படித்து, புரிந்துகொள்வதுடன் அடிப்படையான கணக்கிடுதல் போன்றவற்றை உள்ளடக்கியது எழுத்தறிவு.  

எழுத்தறிவு அவ்வளவு முக்கியமா என்றால் கண்டிப்பாக, அது நமது அடிப்படை உரிமை. வாழ்க்கையை கடைசிவரை வாழ நமக்கு கைகொடுப்பது அது தானே. (எங்கு சென்றாலும் அது அவசியம் அல்லவா. பேருந்தில் சென்றால் ஊர் பெயர் பார்க்கத் தெரிய வேண்டும், கடைக்குச் சென்றால் பொருள்களை விலை கொடுத்து வாங்கி பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் அடிப்படை அறிவு தேவை என்பதை மறுக்க முடியாதே. அந்த அடிப்படை அறிவு இல்லாவிட்டால் நாம் ஒவ்வொரு விஷயத்திற்கும் மற்றவரைச் சார்ந்து இருக்க வேண்டிய ஆரோக்கியமற்ற நிலைமை உருவாகிவிடும்.)


ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவருக்கும் எழுத்தறிவு இருப்பது அவசியம் தானே. ஆனால் இன்னும் உலகில் முழுமையான நூறு சதவிகித எழுத்தறிவு வரவில்லை. ஒன்றும் ஒன்றும் எத்தனை எனக் கேட்டால் ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட இரண்டு என எளிதாகச் சொல்லிவிடும். ஆனால் எழுத்தறிவு முற்றிலும் இல்லாத மக்களுக்குச் சொல்லத் தெரியாது. அதற்குக் கூட அவர்களுக்கு மற்றவர்களின் துணை தேவை.

ஆகவே அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்களாக மாற வேண்டும் என்பதற்காக எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்த சர்வதேச எழுத்தறிவு நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 8 அன்று கொண்டாடப்படுகிறது. முதன்முதலில் 1966ஆம் ஆண்டு இந்த நாள் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் இது அரசு விடுமுறை நாள் அல்ல. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு முழக்கத்தின் அடிப்படையில் இந்த நாள் கொண்டாடப்படுவது வழக்கம், இந்த ஆண்டின் முழக்கம் 21ஆம் நூற்றாண்டுக்கான எழுத்தறிவு. அடிப்படை எழுத்தறிவு குறித்த விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை முன்னிறுத்துவதே இந்த முழக்கத்தின் நோக்கம்.

உலகத்தில் சுமார் 400 கோடி பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். ஆனால் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் இன்னும் 77.4 கோடி பேர், குறைந்தபட்ச எழுத்தறிவு பெறாதவர்களாகவே உள்ளனர். இதில் 12.3 கோடி பேர் 15 இலிருந்து 24 வயதுக்குட்பட்டவர்கள். ஆண்களில் ஐந்தில் ஒருவரும் பெண்களில் மூன்றில் இருவரும் எழுத்தறிவு பெறவில்லை. உலகம் எங்கும் தொடக்க கல்வி பெற வேண்டிய நிலையில் உள்ள 25 கோடி குழந்தைகள் எழுத்தறிவு திறன் அற்றவர்களாக உள்ளனர். இவர்களும் எழுத்தறிவு பெறுவது அவசியமல்லவா. இதற்காகத் தான் கல்வி, அறிவியல், பண்பாட்டுக்கான ஐநா அமைப்பான யுனெஸ்கோ எழுத்தறிவு தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகிறது. இப்படி எல்லாம் கொண்டாடுவது மட்டும் எழுத்தறிவை வளர்த்திடுமா? அது எப்படி வளரும். அதற்காக எழுத்தறிவு தருவது தொடர்பான நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின். அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த உந்து சக்தியும் தேவை என்பதால் அவற்றில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு உலக எழுத்தறிவு விருது வழங்கப்பட்டுவருகிறது. மொத்தம் ஐந்து விருதுகள் இவ்வாறு வழங்கப்படுகின்றன.


ஒன்று, யுனெஸ்கோவின் கன்பூஷியஸ் விருது

2005ஆம் ஆண்டு முதல் சீன அரசு சீன அறிஞர் கன்பூஷியஸ் பெயரில் மூன்று விருதுகள் அளித்துவருகிறது. வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் இவற்றுடன் ரொக்கமாக தலா 20 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது 13 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். அதனுடன் சேர்ந்து சீனாவின் எழுத்தறிவு திட்டங்களுக்கான ஆய்வுப் பயண வாய்ப்பும் அளிக்கப்படும். கிராமப்புற பெண்கள், குழந்தைகள் எழுத்தறிவை மேம்படுத்திய அரசு சாரா நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

 அடுத்தது, யுனெஸ்கோவின் மன்னர் செஜாங் எழுத்தறிவு விருது

மன்னர் செஜாங் பெயரில் இரு விருதுகள் 1989இலிருந்து வழங்கப்பட்டுவருகின்றன. இதை வழங்குவது தென்கொரிய அரசு. கொரிய எழுத்துகளை 1443ஆம் ஆண்டு உருவாக்கிய மன்னர் பெயரில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் இவற்றுடன் ரொக்கமாக தலா 20 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது 13 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். பல்வேறு மொழிகளில் எழுத்தறிவுக்கு ஆதரவு நல்கும் நிறுவனத்திற்கு இந்த விருது வழங்கப்படும்.

எழுத்தறிவு திட்டத்தைச் சிறப்புடன் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு இந்த விருதுகளைப் பெறும் தகுதி உண்டு. விண்ணப்பிக்கும் நிறுவனங்களில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.







இந்தியாவின் எழுத்தறிவு 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 74.04 சதவிகிதமாகும். 2001இல் 65.38 சதவிகிதமாக இருந்த எழுத்தறிவு சுமார் 9 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஆண்கள் எழுத்தறிவு 82.14 சதவிகிதம்., பெண்கள் எழுத்தறிவு 65.46 சதவிகிதம். இந்தியாவிலேயே அதிகமாக கேரள மாநிலம் 93.9 சதவிகித எழுத்தறிவு பெற்று முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் எழுத்தறிவு 80.3 சதவிகிதம் ஆகும். எழுத்தறிவு பெற்ற ஆண்களின் சதவிகிதம் 86.8, பெண்களின் சதவிகிதம் 73.9 ஆகும். சென்னையின் எழுத்தறிவு 90.18 சதவிகிதம். ஆண்களின் எழுத்தறிவு 93.7 சதவிகிதம் பெண்களின் எழுத்தறிவு 86.64 சதவிகிதம்.


ஆல் இந்தியா ரேடியோவுக்காக எழுதியது.

வெள்ளி, செப்டம்பர் 27, 2013

ஜன கண மன என ஜதி சொல்லும் நேரம்...

2003ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் செப்டம்பர் 10 சர்வதேச தற்கொலைத் தடுப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ”அவமானம்: தற்கொலைத் தடுப்பின் மிகப் பெரிய தடை” ("Stigma: A Major Barrier for Suicide Prevention.") என்பதே இந்த ஆண்டுக்கான மையப்பொருள் அல்லது கரு. தற்கொலைத் தடுப்புக்கான சர்வதேச அமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து உலக தற்கொலைத் தடுப்பு நாளை அனுசரிக்கிறது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் முக்கிய மனநலப் பிரச்சினையாக தற்கொலை உள்ளது. வளரும் நாடுகளிலும் தற்கொலை செய்துகொள்தல் அதிகரித்துவருகிறது. உலகம் எங்கும் நடைபெறும் மரணங்களில் தற்கொலை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். உலகத்தில் ஒவ்வோர் ஆண்டும் பத்து லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். சராசரியாக 40 விநாடிகளுக்கு ஒருவர் தற்கொலைசெய்துகொள்கிறார். கொலை, போர் ஆகியவற்றால் இறப்பவர்களைவிட அதிகமானோர் தற்கொலையால் உயிரிழக்கிறார்கள். தற்கொலையால் இறப்பவர்களைவிட அதிகமானோர் தற்கொலை முயற்சியை மேற்கொள்கிறார்கள்.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரத்து நானூற்றி நாற்பத்தைந்து பேர் (1,35,445) தற்கொலை செய்துள்ளார்கள். தினசரி 371 பேர் அதாவது 242 ஆண்களும் 129 பெண்களும் தற்கொலையால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் பதினாறாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தியேழு பேர் (16,927) தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்துகொண்டவர்களில் 37 சதவிகிதத்தினர் தூக்கிட்டுக்கொண்டனர், 29.1 சதவிகிதத்தினர் விஷம் குடித்துள்ளனர், 8.4 சதவிகிதத்தினர் தீயிட்டுக்கொண்டனர். தமிழ்நாட்டில் 5,393 பேர் தூக்கிட்டும், 3,459 பேர் விஷம் குடித்தும், 2,349 பேர் தீயிட்டும் தற்கொலை செய்துகொண்டனர். சென்னையில் மட்டும் 282 பேர் தீயிட்டுத் தற்கொலை புரிந்துள்ளனர்.

தற்கொலை செய்துகொள்பவர்கள் பெரும்பாலும் மனநலப் பாதிப்பின் காரணமாகவே இந்த முடிவுக்கு வருகிறார்கள். அடுத்த இருபது வருடங்களுக்குள் மனநலப் பிரச்சினை காரணமாக உருவாகும் நோய்கள் உலக நோய்களுள் 25 சதவிகிதமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்று நோயைவிட இதய நோயைவிட மனநலம் சார்ந்த நோய்களே உலகத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். தற்கொலை செய்பவர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்யும் தருணத்தில் உடல்நல, சமூக ஆர்வலர்களின் ஆலோசனைகளை நாடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தேவையான நேரத்தில் போதுமான உதவிகள் கிடைப்பதில்லை.



தற்கொலை எண்ணம் மூளும் சமயத்தில் அன்புக்குரியவர்கள் அருகில் இல்லாததால் பலர் மனத்தில் அந்த எண்ணம் உருவாகிறது. மனநலப் பாதிப்புடன் அவமான உணர்வும் சேர்ந்து தற்கொலை எண்ணத்தை வலுப்படுத்திவிடுகிறது. அவமானம் என்னும் உணர்வு பல சமூகங்களில் வேரோடியுள்ளது. பொதுவாக கல்வி அறிவு இல்லாதது அதாவது அறியாமையே அவமானம் என்னும் உணர்வு தோன்றுவதற்கு முக்கியக் காரணமாகும். அறியாமை காரணமாக உருவாகும் அவமானம் என்னும் உணர்வை முறையான கல்வி நிகழ்ச்சிகளின் மூலம் அகற்றிவிடலாம். பொதுவாக ஒரு சமூகத்தில் வயது சார்ந்த கல்வி சார்ந்த, மதம் சார்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே இது காணப்படும். மனநலம் பாதிக்கப்பட்டுத் தற்கொலை எண்ணம் கொண்டோரிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இத்தகைய கல்வி நிகழ்ச்சிகளின் நோக்கம்.

ஆனால் அவமான உணர்வை வெற்றிகொள்ள அறிவு மட்டும் போதாது. பொதுவாக பல சமூகங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட, தற்கொலை எண்ணம் கொண்ட தனிநபர்கள் குறித்து எதிர்மறையான எண்ணம் உள்ளது. மனநலப் பாதிப்பு, தற்கொலை எண்ணம் குறித்த கல்வியால் இத்தகைய எதிர்மறை எண்ணத்தை மாற்ற முடியாது. உண்மையைச் சொன்னால், மனநலப் பாதிப்புக்குள்ளாகி தற்கொலை எண்ணம் கொண்ட நோயாளிகளைக் கையாளும் மனநல நிபுணர்களே நோயாளிகள் குறித்த எதிர்மறை எண்ணங்களையும் முன்முடிவுகளையும் கொண்டுள்ளார்கள். இதன் விளைவாக தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு நெருக்கடி நேரத்தில் கிடைக்க வேண்டிய அனுசரணையான உதவிகள் கிடைக்காமல் போகின்றன. ஒரு சமூகத்தின் கலாச்சாரங்களில் ஊடுருவியிருக்கும் இந்த எதிர்மறையான எண்ணங்களை மாற்ற பெரும் முயற்சிகள் தேவை. கூடவே மனநல நிபுணர்கள் வழங்கும் சிகிச்சை முறைகளிலும் மாற்றம் வேண்டும்.

அவமானம் என்னும் உணர்வு காரணமாகவே மனநலப் பாதிப்பு காரணமாகத் தற்கொலை எண்ணம் கொண்ட தனிநபர்களது சுதந்திரம் விஷயத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இத்தகைய பாரபட்சம் தனிநபர், சமூகம், நிறுவனம் மட்டங்களில் உருவாகிறது. தற்கொலை முயற்சியைக் குற்றமாகக் கருதுவது இத்தைய பாரபட்சத்திற்கு உதாரணம்.



தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டவர்கள் தகுந்த நேரத்தில் சிகிச்சை பெற்றதன் மூலம் உயிர் பிழைத்து பழைய வாழ்க்கைக்கு திரும்புவதை இத்தகைய பாரபட்சமான எண்ணம் தடுத்துவிடும். மேலும் தற்கொலை முயற்சியைக் குற்றமாகப் பார்ப்பது என்பது மனநலப் பாதிப்பு கொண்ட தற்கொலை எண்ணம் உடையவர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும். பிழைத்தால் தண்டனை கிடைக்கும் என்பதாலேயே கண்டிப்பாக இறந்துவிட வேண்டும் என எண்ண வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்த உடல்நலப் பிரச்சினைகளை ஒப்பிடும் போது தற்கொலைத் தடுப்பு விஷயத்தில் அரசின் நிதி ஒதுக்கீடு குறைவான அளவிலேயே உள்ளது. இந்த விஷயத்தில் நிதிதிரட்டு முயற்சியும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஏனெனில் தற்கொலை அவமான காரியம் என்பதால் தற்கொலைக்கு எதிரான முயற்சிகளுக்கு நிதி தர தனிநபர்களோ, அரசுகளோ, சர்வதேச நிறுவனங்களோ பெரிய ஆர்வம் காட்டுவதில்லை.

சமூகத்தில் நிலவும் அவமானம் என்னும் உணர்வை ஒழிப்பதில் அனைவரும் ஒன்று திரண்டு புதிய உத்திகளைக் கையாண்டு பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்த உலக தற்கொலைத் தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவமானம் என்னும் உணர்வை ஒழிக்காதவரை தற்கொலையைத் தடுப்பது கடினம். இந்த வருடத்தின் தற்கொலைத் தடுப்பு தினத்தை முன்னிட்டு சர்வதேச தற்கொலை தடுப்பு நிறுவனம் சைக்கிளில் உலகம் முழுவதையும் சுற்றும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.


தற்கொலை தடுப்பில் சிறப்பாக பணிபுரிபவர்களை ஊக்குவிக்க, ஸ்டெங்கல் ஆராய்ச்சி விருது, ரிங்கல் சேவை விருது, ஃபார்பெரோ விருது, டி லியோ நிதி விருது ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

ஆல் இந்தியா ரேடியோவுக்காக எழுதியது.

வெள்ளி, ஜூன் 07, 2013

சூது கவ்வும்

அதர்ம தர்மம்



 தமிழ்த் திரைப்படங்கள்மீது நம்பிக்கை முற்றிலும் தூர்ந்து போகும்போது ஏதோவொரு படம் வெளியாகி நம்பிக்கையூட்டும். அந்த நிழலில் சில காலம் இளைப்பாற முடியும். சுப்ரமணியபுரம், ஆடுகளம் என்னும் அந்த வரிசையில் சூது கவ்வும் திரைப்படத்தை இருத்த முடிகிறது. நயன்தாராவுக்குக் கோயில் கட்டிய பகலவன், ஜாக்குவார் காரை ஓட்டிப்பார்க்கும் விருப்பத்தால் வேலையைப் பறிகொடுத்த சேகர், பெண்ணின் நயவஞ்சகத்திற்குப் பலியாகி வேலையிழந்த கேசவன், இல்லாத காதலியை இருப்பதாகப் பாவித்து இன்புறும் ஆள்கடத்தல்காரனான தாஸ் ஆகிய நால்வரும் சந்தித்துக்கொள்வதும் பின்னர் நிகழும் சுவாரசியமான சம்பவங்களும் தாம் சூது கவ்வும். 

நன்கு வாய்விட்டுச் சிரிக்கச்செய்யும் பல காட்சிகளைக் கொண்ட இத்திரைப்படத்தை வெறுமனே நகைச்சுவைப் படம் என்னும் கூண்டுக்குள் அடைக்க மனம் ஒப்பவில்லை. வன்முறைச் சம்பவங்களற்ற, பாலியல் சித்தரிப்புகளற்ற, ‘விளிம்புநிலை மனிதர்கள்’ இல்லாத புதிய முயற்சி இப்படம். சமகாலச் சமூக அபத்தங்களின் மீது கொண்ட கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் மற்ற படங்களில் இருந்து இது வித்தியாசப்படுகிறது. இந்தப் படத்தின் மைய உத்தி மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் கமல் ஹாசன் கையாண்டதுதான் என்றாலும் எக்ஸ்பிரஸைச் சூது கவ்வும் அநாயாசமாக முந்துகிறது. இயக்குநரை மீறிக் கமலிடம் துறுத்திக்கொண்டிருந்த அறிவுஜீவித்தனம் படத்தைப் புத்திசாலித்தனமாக்காமல் பார்த்துக்கொண்டது. ஆனால் இயக்குநர் நலன் குமரசாமியிடம் வெளிப்பட்டுள்ள குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் இதை ஒரு மாறுபட்ட படமாக்குகிறது. 

பெரு நகரில் வாழும் சராசரி இளைஞர்களின் உலகம் அப்படியே பதிவாகியுள்ளது. தாகமெடுக்கும்போதெல்லாம் பீர் குடிக்கும் இளைஞர்கள் ஆக்ஸிஜனைவிட அதிகமாக நிகோடினைச் சுவாசிக்கின்றனர். இவர்களுக்கு அறச்சிக்கல்கள் எழுவதேயில்லை. அந்தந்த கணத்தில் வாழ்ந்துவருகிறார்கள். வேலை குறித்து படத்தில் வெளிப்படும் தியரியைச் சதாசர்வகாலமும் மரபில் மூழ்கிக் கிடக்கும் பொதுமனம் புரிந்துகொள்வது துர்லபம். பொதுச்சமூகம் உயர்வாகக் கருதும் பல விஷயங்கள் இப்படத்தில் எள்ளலுக்கு ஆளாகியுள்ளன. நடிகர்கள் மட்டுமன்றி நடந்தது என்னன்னா அருமைப்பிரகாசம், துரும்பிலும் இருப்பரில் வரும் நேர்மைக் குசும்பு என நலனின் குறும்படங்களில் இடம்பெற்ற சில விஷயங்கள் சூது கவ்வும் படத்தில் தலைகாட்டுகின்றன. சினிமா கிறுக்கைச் சித்தரித்த ஒரு படம் எடுக்கணும், சொதப்பலான படமெடுப்பைக் கூறும் உண்மையைச் சொன்னா, நெஞ்சுக்கு நிதி, என்கவுண்டர் பற்றிய தோட்டா விலை என்ன, ஒரு வீட்டில் பேய் இருந்துச்சாம் போன்ற பல குறும்படங்களில் தனித்தனியே கிடந்த பல உத்திகளை இயக்குநர் நலன் இப்படத்தில் ஒன்றுசேர்த்துள்ளார். நேர்த்தியான திரைக்கதை ரசிகர்களை எந்தவகையிலும் குழப்பக் கூடாது என்பதற்கு உதாரணம் இப்படம். திரைக்கதையில் சீரான தொடர்பு உள்ளது. படத்தின் பிற்பகுதியில் வரும் கோடம்பாக்கம் தாதாவுக்கு முற்பகுதியிலேயே குறிப்பு உண்டு. படத்தில் மிக இக்கட்டான சமயத்தில் விரைவாகக் காரைக் கடத்தும்போதும் அதை எங்கே விட்டுச்செல்வோம் என்பதை உரிமையாளரிடம் தெரிவித்துவிட்டே செல்கிறார்கள் தாஸ் அண்ட் கோ.


பல காட்சிகளில் தீவிரமான விஷயங்களை இயல்பாகத்  தெரிவித்துவிட்டுக் காட்சி நகர்ந்துவிடுகிறது. அருமைப் பிரகாசம் அம்மா தந்த பணம் ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழும்போது அதைப் பிடிப்பதற்காக ஓர் எளியவரின் வேட்டியைப் பணம் கொடுத்துப் பெறும் காட்சி ஒட்டுமொத்தச் சமூகத்தின் இழிநிலையையும் மவுனமாகக் கேள்விக்குள்ளாக்குகிறது. பிரத்யேகக் கவனத்தை ஈர்க்கும் வகையில் படமாக்கப்படாத அந்தக் காட்சியை அலட்சியமான பார்வையாளன் எளிதில் தவறவிட்டுவிடுவான். ஆனால் அது ஆழமான சமூக விமர்சனம். இதைப் போன்ற சிறிய விஷயங்களில் வெளிப்பட்டிருக்கும் புரிதல்கள் படத்தின் மீது மரியாதைகொள்ளச் செய்கிறது. தாங்கள் கடத்த திட்டமிட்ட அருமைப் பிரகாசத்தை மற்றொரு குழுவினர் காரில் கடத்திச் செல்லும் காட்சியில், ‘அவங்க பின்னாடியே வர்றாங்க’ எனக் கூறப்படும்போது தாஸ், ‘நாம முன்னால போறோம்’ என்பார். ‘ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்’ எனக் கேட்கையில் ‘நிறைய வித்தியாசம்’ என்பார். அதே போல், தாஸ் நண்பர்களுடன் போலீஸ் வேனில் அமர்ந்திருக்கும் காட்சியில், “குற்றவாளிகளைத் தான் என்கவுண்டரில் போட முடியும் நிரபராதிகளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” என்பார். இத்தகையவை நகைச்சுவைப் படத்திற்கான வசனங்கள் அல்ல. வீரியமான சமூக விமர்சனத்தின் வெளிப்பாடு இவை. 

அருமைப் பிரகாசத்தின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த பின்னர் அதைப் பிரதி எடுக்க ஆட்டோவில் செல்லும் காட்சியும் குறிப்பிடத்தக்க ஒன்று. தங்களது பிரச்சினைகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற மிதப்பின் கணத்தில் வீடியோ கேசட் தவறி விழுந்து சிதையும்போது பின்னணியில் ஒலிக்கும் டன்டணக்கா நாம் கொள்ளும் அபத்தமான நம்பிக்கைகளைக் கேலிசெய்கிறது. நேர்மையான அமைச்சரின் இடத்தைக் கள்ளத்தனத்தைப் பிசிறு தட்டாமல் செயல்படுத்தும் அமைச்சரின் மகனே பறித்துக்கொள்ளும்போது அறம் குறித்த வரையறைகள் காலாவதியாகின்றன. அறம் குறித்த நிலைப்பாடு ஆளாளாளுக்கு வேறுபடுவதை மிகவும் நுட்பமாக இத்திரைப்படம் காட்சிப்படுத்தியுள்ளது. நேர்மை என்பது புகழுக்கான உத்தி என்பதை நாசூக்காக உணர்த்தும் இப்படம் ஊழலையும் நேர்மையையும் ஒரே தட்டில் வைக்கிறது. 

நலனின் ஒரு படம் எடுக்கணும் குறும்படத்தில் வரும் ஒரு வசனம்: “முடிந்தவரை இம்ப்ரூவ் பண்ணிட்டு பெர்பெக்ஷனை நோக்கி போயிட்டேயிருக்கணும்” என்பது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை நலனுக்கு அது முற்றிலும் பொருந்திப்போகிறது. இந்தப் படம் பல காட்சிகளில் லாஜிக்கை மீறியுள்ளது. லாஜிக்கை மீறாமல் எந்தத் திரைக்கதையையும் உருவாக்க முடியாது. எதற்காக, எதை உணர்த்துவதற்காக லாஜிக்கை மீறுகிறோம் என்பதுதான் முக்கியமானது. பாக்யராஜின் வெற்றிப்படமான அந்த 7 நாட்களில் மிகப் பெரிய லாஜிக் மீறல் இருக்கும். ஆனால் திரைக்கதையின் பலத்தின் முன்னே அது பலவீனமாகியிருக்கும். காதலனுடன் சேர்த்துவைப்பதாகத் தெரிவித்துத் தான் ராஜேஷ் அம்பிகாவை மரண வாசலில் இருந்து அழைத்துவருவார். ஆனால் இறுதிக்காட்சியில் அம்பிகாவை ராஜேஷ் காதலனுடன் அனுப்பிவைக்க மாட்டார். அங்கு லாஜிக்கை மீறிய திரைக்கதை தான் வெற்றிபெற்றது. சூது கவ்வும் திரைப்படத்தைப் பொறுத்தவரை லாஜிக் மீறல் குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் படத்தில் பெரும்பாலான வெளிப்படைக் காட்சிகள் உள்ளுறைக் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. இப்படி ஓர் அமெச்சூர்தனமான ஆள்கடத்தல்காரனா என்று கேள்வி எழுந்தால், இதற்கே இப்படி ஆத்திரப்படுகிறீர்களே உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு அபத்தங்கள் என்னும் பதில் கேள்வி அங்கே தொக்கி நிற்கிறது. அத்தகைய கேள்விகளை உருவாக்குவதுதான் முக்கியம் எனும்போது லாஜிக்குகளை மீறுவது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. 


பெண்ணே இல்லாத திரைக்கதையில் வணிகத்திற்காகவும் சுவாரசியத்திற்காகவும் ஷாலு என்னும் கதாபாத்திரத்தைப் பயன்படுத்தியிருக்கும் விதம் புத்திசாலித்தனமான உத்தி. சின்னச் சின்ன குறும்பு நடிவடிக்கைகளால் பார்வையாளர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார் ஷாலு. ஒரு கட்டத்தில் அதை ஓரங்கட்டிவிட்டு அப்படியே விட்டுவிடவுமில்லை இயக்குநர். இறுதியில் ஷாலு போன்ற ஒரு பெண்ணை தாஸ் கடத்துகிறார். அமைச்சரின் மகள் அவர். அத்துடன் படம் நிறைவுபெறுகிறது. ஆனால் பார்வையாளனிடம் படம் தொடர்கிறது. வழக்கமாகப் பணம் கொடுத்தால் தாஸ் ஆளை விட்டுவிடுவார். இப்போது அது நடக்குமா? ஏனெனில் தாஸின் ஷாலு அவள். ஒரு காலத்தில் தாஸுடன் ஷாலுவின் பிம்பம் இருந்தது. இப்போது அவரிடம் ஷாலுவே இருக்கிறார். ஆனால் பிம்பத்தில் தாஸைச் சந்தோஷப்படுத்திய ஷாலு நிஜத்தில் அவரைக் குஷிப்படுத்த முடியாது. ஏனெனில் அவருக்கு தாஸ் வெறும் கடத்தல்காரன். இந்தச் சிக்கல் தான் நமது வாழ்க்கை. இதை இப்படியும் உணர்த்தலாம் என்பதே மரபூறிய  மண்டையில் உறைக்காது. 

சினிமா, அரசியல், சோதிடம், செய்தி அலைவரிசை எனக் கிடைத்த எந்த இடத்தையும் இயக்குநர் விட்டுவைக்கவில்லை. சின்ன சின்ன இடங்களில் கூடத் தனது முத்திரை பதிக்கத் தவறவில்லை நலன். செய்தி அலைவரிசையின் அடிப்பகுதியில் வார்த்தைகளாக நகரும் ராஜ கம்பீரம் திடீர் மரணம், பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தமிழில் படமெடுக்க ஆர்வம் போன்ற செய்திகளே அதற்கு எடுத்துக்காட்டுகள். நேர்மையாக இருப்பது தவறல்ல ஆனால் அதற்கு ஓர் எல்லை உண்டு. ஒரு கட்டத்திற்கு மேல் அது உளவியல் சிக்கல் தான். ஞானோதயம் கதாபாத்திரம் லஞ்சம் வாங்க மறுப்பது சரி. ஆனால் மகனை மீட்க கட்சி தந்த நிதியைத் திரும்பக் கொண்டுபோய்க் கொடுப்பதைக் கட்சியாலேயே சகித்துக்கொள்ள முடியாது என்பதுதான் எதார்த்தம். நீதிமன்றக் காட்சிகளில் வழக்கமாக வாய்மையே வெல்லும் எனக் காந்தி படம் மாட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒரே ஒரு திருவள்ளுவர் படம் மட்டும் தான். அவர் உலகப்பொதுமறை எழுதியவர், திருக்குறளில் எல்லாச் சிக்கலுக்கும் தீர்வு உண்டு என்பதால் அது தீவிர எள்ளல்.  

விறைப்புடன் வசனம் பேசிய டி. எஸ். பி. சௌத்ரி, அனல் பரப்பிய அலெக்ஸ் பாண்டியன், கழுத்து நரம்பு வெடிக்கப் பேசிய வால்டர் வெற்றிவேல் எனத் தமிழகத்து முன்னோடி போலீஸ் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் பிரம்மா தந்தது ஊமை அடி. தாஸைப் பொறுத்தவரை ஆள்கடத்தல் என்பது ஆத்மார்த்தம் தரும் வேலை. ஆள்கடத்தலை எந்தக் குறுக்குப்புத்தியும் இல்லாமல் மிகவும் நேர்மையாகச் செயல்படுத்துகிறார் தாஸ். ஆனால் ஊழல் மிகுந்த அரசியல்வாதி சட்டத்திற்குட்பட்ட ஆட்சி நடத்துகிறார். இந்த முரணில் வெளிப்படும் புத்தி சாதுர்யம் திரைக்கதையை மெருகேற்றியுள்ளது. படித்தவர்களின் திமிர், அறியாமை, பேராசை ஆகியவற்றைக் கேசவன் கதாபாத்திரம் மூலம் அம்பலப்படுத்துகிறார் இயக்குநர். அமைச்சர் மகன் அருமைப் பிரகாசத்தைக் கடத்தும் முடிவுக்கும், அது சொதப்புவதற்கும் மறைமுகக் காரணம் கேசவன் தான். திரைக்கதையில் கதாபாத்திரங்கள், வசனங்கள் ஆகியவை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நடிகர்கள் தங்களுக்கான கடமையைச் சரியாக நிறைவேற்றியுள்ளனர். விஜய் சேதுபதி தாஸ் கதாபாத்திரத்தை நூறு சதவிகிதம் உயிரோட்டமாக்கியுள்ளார். வங்கியில் மேலாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு பந்தாவாகத் திரும்பும் ஒரு காட்சி போதும், மாமா பின்ற மாமா எனச் சொல்லவைக்கிறார். நம்பிக்கையூட்டும் நடிகராக விஜய் சேதுபதி தென்படுகிறார்.



நம்பிக்கை கண்ணன் ஒரு காட்சியில் கூறுவார்: “நீங்க செய்யுறது தப்பு தான் ஆனால் அதில் ஒரு நேர்மை இருக்கிறது. அமைச்சர் செய்தது சரிதான் ஆனால் அதில் ஒரு துரோகம் உள்ளது” என்று. இந்த நகை முரணை அறக்கோட்பாடுகளால் எளிதில் விளக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் சூது கவ்வும் லாவகமாக விளக்குகிறது. அதுதான் இப்படத்தின் வெற்றி. திரையரங்கில் பார்வையாளர்களை ரசித்துச் சிரிக்கவைக்கும் பல வசனங்கள் கிரேஸி மோகன் தனமானவை அல்ல. கதாபாத்திரங்கள் தங்களுக்குள் நிகழ்த்தும் இயல்பான உரையாடல் பார்வையாளனுக்கு உற்சாகத்தைத் தருகிறது. அலுவலகங்களுக்கு மட்டும்தான் ஞாயிறு விடுமுறையா ஆள்கடத்தலுக்கும் விடுமுறைதான் என்பது தாஸுக்கு இயல்பானது ஆனால் பார்வையாளர்களுக்கு அது ரசனையான நகைச்சுவையாகிறது. இப்படத்தில் கதாபாத்திரங்கள் அனைத்தும் அவற்றின் அதிகாரம் களைந்த நிலையிலே பயன்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர், காவல் துறை அதிகாரி போன்ற அனைவரும் மனிதர்களாக மட்டுமே வலம் வருகின்றனர். 

இசை, ஒளிப்பதிவு போன்றவை தேவைக்கேற்பப் பயன்பட்டுள்ளன. காசு, பணம், துட்டு, money பாடல் வண்ணமயமாக இருந்தாலும் படத்தில் வேகத்தடையே. தமிழ்த் திரையுலக மேதைகள் எல்லாம் வறட்டுத்தனமான படங்களைத் தொடர்ந்து உருவாக்கும் நேரத்தில் யாரோ ஓர் இளம் இயக்குநர் புத்துணர்ச்சியான படத்தைத் தரும்போது மனம் ஆசுவாசம் கொள்கிறது. முதல் படத்துடன் தனது முத்திரையை நிறுத்திக்கொள்ளாமல் இயக்குநர் நலன் தொடர்வது தமிழ்த் திரையுலகிற்கு நலம்பயக்கும்.

ஜூன் மாதக் காலச்சுவடு இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரை இது