இந்த வலைப்பதிவில் தேடு

ரஜினிகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினிகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 02, 2025

ரஜினியோட ராசி நல்ல ராசி


நட்சத்திர நடிகர்களுக்குத் தங்களது நூறாம் படம் குறித்து பெரிய கனவுகள் இருப்பதுண்டு. சிவாஜி கணேசனின் நூறாவது படம் நவராத்திரி. 1964 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று படம் வெளியாகியுள்ளது. சிவாஜி கணேசன் ஒன்பது வேடத்தில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தில் நடிகை சாவித்திரி அவரை விழுங்கி ஏப்பம் விட்டுச் சென்றுவிடுவார். படம் மிகப் பெரிய வெற்றி என்கின்றன தகவல்கள். 

எம்.ஜி.ஆரின் நூறாம் படம் ஒளிவிளக்கு. 1968 ஆம் ஆண்டில் செப்டம்பர் 20 அன்று இப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது ராண்டார் கை. எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் இருந்த வேளையில் இந்தப் படத்தின் இறைவா உன் மாளிகையில் பாடல் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் எல்லாம் ஒலிக்கவிடப்பட்டது. 

சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்கள் போலவே நடிகர் சிவகுமாருக்கும் நூறாம் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி. 1979 மே 18 அன்று படம் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது. தேவராஜ் மோகன் இயக்கிய இந்தப் படம் விமர்சனரீதியான வரவேற்பையும் பெற்ற படம். 

கமல் ஹாசன் நடித்த நூறாம் படம் ராஜபார்வை. 1981 ஏப்ரல் 10 அன்று வெளியாகியுள்ளது. ஹாசன் பிரதர்ஸ் என்னும் பெயரில் கமல் முதன் முதலில் தயாரித்த இந்தப் படம் படுதோல்வி. வசூல் ரீதியில் வெற்றிபெறாத இந்தப் படம் விமர்சனரீதியில் கமலுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்தப் படம்  வசூலை வாரிக்குவிக்காதபோது, ரசிகர்களின் நினைவில் நின்றுவிட்ட படம். 

நடிகர் ரஜினிகாந்த் நடித்த நூறாம் படம் ஸ்ரீராகவேந்திரர். ரஜினியின் விருப்பப்படி படத்தை கே.பாலசந்தர் தயாரித்தார்; எஸ்பி.முத்துராமன் இயக்கினார். ராகவேந்திர சாமிகள் மீது ரஜினி கொண்டிருந்த பற்றும் பாசமும் இப்படி ஒரு படத்தை உருவாக்க வைத்தது. படம் 1985 செப்டம்பர் 1 அன்று வெளியானது. படம் தோல்விப் படம் தான். விமர்சனரீதியிலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ரஜினிக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் வேண்டுமானால் இது நல்ல படம் என்ற எண்ணத்தைக் கொடுத்திருக்கும். மற்றபடி ரஜினியின் நூறாம் படமாக இருந்திருந்தபோதும், இது பத்தோடு பதினொன்று, அவ்வளவுதான். 

ரஜினி ஆசையோடு எதைச் செய்தாலும் அது உருப்படாது. ரஜினி முதலில் தயாரித்த மாவீரன் படு தோல்வி. நூறாம் படமான ஸ்ரீராகவேந்திரர் தோல்வி. முதல்முதலில் கதை, திரைக்கதை எழுதித் தயாரித்த வள்ளி தோல்வி. எஸ்பி.முத்துராமனுக்காக அவர் செய்துகொடுத்த பாண்டியன் படம் தோல்வி. ஆன்மிக அனுபவமாக உருவாக்கிய பாபா படு தோல்வி. இப்படி ரஜினி விருப்பத்தோடு எதைச் செய்தாலும் அது வெற்றிபெற்றதே இல்லை என்பதன் பெரிய எடுத்துக்காட்டு அவரது ஆன்மிக அரசியல். அது தோற்றுவிக்கப்படாமலேயே படு தோல்வியடைந்தது. 


திங்கள், நவம்பர் 01, 2021

அண்ணாத்த ரஜினி இனியாவது விழித்துக்கொள்வரா?

 


ரஜினி காந்த் என்னும் பெயருக்கும் அவரது ஸ்டைலுக்கும் தமிழ்நாட்டில் பெரிய சந்தை மதிப்பு உள்ளது. அதை அறுவடை செய்வதில் இன்னும் தயாரிப்பாளரிடையே போட்டியே இருக்கிறது. வயது எழுபதைத் தொட்டிருந்தாலும் ரஜினியைக் காண அவருடைய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதெல்லாம் சரிதான். ஆனால், ரஜினி என்னும் தனித்துவத்துக்காக மட்டும் ரசிகர்கள் படம் பார்த்த நிலைமை மாறிவிட்டது. அந்த மாற்றம் இரண்டாயிரத்தின் தொடக்கத்திலேயே நிகழ்ந்துவிட்டது. அந்த உண்மையை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறது அண்ணாத்த.

ரஜினி ரசிகர்களிடையே ரஜினி மீதான தங்கள் மரியாதையையும் அன்பையும் அநியாயத்துக்குச் சுரண்டுகிறார்களோ என்ற எண்ணத்தையே அண்ணாத்த திரைப்படம் அழுத்தமாக உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் சிறு நகரங்களிலுள்ள ரஜினி ரசிகர்கள்கூடக் குறைந்தது இருநூறு ரூபாய் செலவழித்தே படம் பார்க்க முடிந்தது. ரஜினியின் ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் மிகச் சாதாரண வருவாய் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்திச் சம்பாதித்த பணம்தான் ரஜினியின் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசாக மாறுகிறது. அண்ணாத்த படத்தை முதல் நாள் பார்த்த ரசிகர்கள் பலருக்கு அடிவயிற்றில் அடித்ததுபோல் இருந்தது. “அண்ணாத்த நமக்குக் கிடைக்கலடா நாமதான் அண்ணாத்தக்குக் கெடச்சிட்டோம்” என்று படத்தின் தொடக்கத்தில் வில்லன் பேசும் வசனத்தையே ரசிகர்களும் சொல்லும்படியாகிவிட்டது.  அதனால் தான் பாபாவின் பாதையில் படுபாதாளத்துக்கு அண்ணாத்த செல்கிறது.

புத்தாயிரத்தில் வந்த முதல் ரஜினி படம் பாபா. 2002இல் வெளியானது. முதல்நாளிலேயே படம் தோல்வியடைந்தது. சூப்பர் ஸ்டார் என்னும் மிகப் பெரிய பிம்பத்தின் மீது விழுந்த பலமான அடி அந்தப் படத்தின் தோல்வி. அந்தத் தோல்வியைத் துடைத்தெறிய மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன ரஜினிக்கு. சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியே அவரை மீண்டும் குரல் உயர்த்திப் பேசவைத்தது. ஆனால், அதை வெறும் ரஜினி படம் என்று சொல்லிவிட முடியாது. அந்தப் படத்தின் தலைப்பே நாயகி வேடத்தை முன்னிலைப்படுத்தியது. அதற்கு முன்னதாக வெளியான படையப்பா படத்திலும் நீலாம்பரி கதாபாத்திரமே பெயர் வாங்கியது என்றபோதும் படத்தின் தலைப்பு படையப்பாதான். ஆனால், சந்திரமுகி என்னும் தலைப்பு வைக்க ரஜினி ஒத்துக்கொண்டதே அவரது நிலைமை அவருக்குப் புரியத் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறிதான். இனியும் தான் சூப்பர் ஸ்டார் அல்ல; தனக்காக மட்டுமே ரசிகர்கள் வருவார்கள் என்பதை மறந்துவிட வேண்டியதுதான் என்பதை ரஜினிக்கு உணர்த்திய படமாக அமைந்தது சந்திரமுகி. அதற்கு முன்னர் நாயகிப் பாத்திரத்தின் தலைப்பில் வெளியான ரஜினி படம் 1978இல் வெளியான ப்ரியாதான்.

சந்திரமுகிக்குப் பின்னர், சிவாஜி, எந்திரன் போன்ற படங்களில் ஷங்கர் என்ற இயக்குநரின் சூத்திரம் ரஜினியின் கணக்கில் வரவுக்கு வழிவகுத்தது. அடுத்து, அவரது பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று வெளியான ஒரே ரஜினி படமான லிங்கா அவருக்குக் கடும் தலைவலியாக அமைந்தது. இனி என்ன செய்யப்போகிறார் ரஜினி என்னும் கேள்வி அவரைத் துரத்தியது. அதன் பின்னர்தான் புதிதாக வந்த இயக்குநர்களின் வசம் தனது படத்தை ஒப்படைக்கத் தொடங்கினார். கபாலி, காலா ஆகிய படங்களை பா.இரஞ்சித் இயக்கினார். படம் பெரிய வெற்றிபெறாவிட்டாலும் ரஜினியின் வழக்கமான மசாலாப் படங்களாக அவை அமையாமல், ரஞ்சித்தின் கைவண்ணத்தில் சற்றுப் புது மாதிரியான சித்திரமாக அவை அமைந்தன. அந்த ஆசுவாசத்தில் பழைய ரஜினியை மீண்டும் காட்டுகிறோம் என்னும் பெயரில் பேட்ட, தர்பார் என்னும் இரண்டு படங்கள் வெளியாயின. இரண்டும் மாபெரும் வெற்றிப்படங்கள் என்று ரஜினி தரப்பினரைத் தவிர யாரும் நம்பவில்லை. 

இப்படியான நிலையில் மீண்டும் ஒரு வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார் ரஜினி. கடுமையான உடல்நலப் பிரச்சினை வாட்டியபோதும் தனது சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நியாயம் சேர்க்க வேண்டிய சூழலில் அண்ணாத்தவை ரஜினி முடித்துக்கொடுத்தார். தொடர்ந்து அஜித்தை வைத்து வெற்றிப்படங்களைக் கொடுத்த சிறுத்தை சிவாவை இயக்குநராக நியமித்துக்கொண்டார்.  வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் என்பதால் தன் வேலை சுலபம் என நினைத்திருக்கலாம் ரஜினி. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பதால் தன் வேலை சுலபம் என நினைத்துவிட்டார் இயக்குநர்.

சினிமா தோன்றிய காலத்தில் சொல்லப்பட்டிருந்தால்கூட மறுக்கப்பட்டிருக்கும் ஒரு கதையை ரஜினி ஓகே செய்திருக்கிறார். அவர் ஓகே செய்த காரணத்தால் அப்படியான பழங்கதைக்கும் திரைக்கதை எழுதிவிட்டார் இயக்குநர்; அதில் ரஜினியை நடிக்கவும் வைத்துவிட்டார்; அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் என்னும் பெரிய நிறுவனம் பெரும் பொருள் செலவில் தயாரித்திருக்கவும் செய்கிறது. ரஜினி ரசிகர்களை இவர்கள் மிகவும் எளிதான இலக்காகக் கருதிவிட்டார்களா?

பாபா தொடங்கி அண்ணாத்த வரையான ரஜினி படங்களின் வெற்றி தோல்விகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால், பெரும்பாலானவை படுதோல்வி என்னும் முடிவுக்கு வர முடிகிறது. படம் மாபெரும் வெற்றி என ஊடகங்களில் செய்தி வருவதும், படம் வெளியான சில நாள்கள் மட்டுமே வசூல் இருந்தது அதன் பின்னர் படம் பெரிதாகச் சம்பாதித்துத் தரவில்லை என்ற குரல் எழுவதும் வாடிக்கையானது. ஆக, ரஜினி படங்களின் வெற்றி தோல்வி என்பது ஆண்டவன் மட்டுமே அறிந்த ரகசியமாகவே இன்றுவரை உள்ளது. எவ்வளவு நாள் தான் ஊடகங்களின் உதவியுடன் வெற்றியை ஜோடிக்க முடியும்?

நாயகனாக மட்டுமே நடித்து இனியும் ரசிகர்களை ஏமாற்ற முடியாது ரஜினி. தனது வயதுக்கேற்ற வேடங்களைத் தேர்வு செய்து நடிப்பது அவருக்கும் அவரை இன்னும் ரசிக்கும் ரசிகர்களுக்கும் நல்லது. அதை அவர் விரும்பாமல் இன்னும் டூயட் பாட விரும்பினால் அவர் ஓய்வுபெற்றுவிடுவதே மேலானது. ஆனால், நடிப்பின் மீது தாகம் கொண்ட ரஜினி ஓய்வு என்பதை விரும்ப மாட்டார். அவருக்காக நல்ல கதையம்சத்துடன் திரைக்கதையை உருவாக்கும் இளைஞர்கள் கோடம்பாக்கத்தில் இன்னும் திரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் ரஜினி தன்னை ஒப்படைக்க வேண்டும். இயக்குநர்கள், ஹீரோயின்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை மாற்றியபோதும் ரஜினி மாறாமல் இருப்பதை ரசிகர்கள் பொறுத்துக்கொள்வார்கள்; கதையும் அப்படியே மாறாமல் அண்ணத்த போல் ரஜினியைப் பல ஆண்டுகள் பின்னே இழுத்துச் செல்பவையாக இருந்தால் அது ரஜினி, தன் ரசிகர்களுக்குச் செய்யும் நியாயமாக இருக்காது. மேலும் ரஜினியின் பெயர் சொல்ல 16 வயதினிலே, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், தர்மதுரை, தளபதி, பாட்ஷா உள்ளிட்ட பல படங்கள் உள்ளன. இனிப் புதிதாக ரஜினி நடித்துப் பெயரைச் சம்பாதிக்க வேண்டும் என்னும் நிலைமை அவருக்கு இல்லை.

இல்லாதவனுக்கு அள்ளிக் கொடுத்துப் பாரு அந்த சாமியே சந்தோஷப்படும் என அண்ணாத்த படத்தில் ரஜினி பேசுவதுபோல இனியும் வெற்று வசனங்களைப் பேசுவது நலம்பயக்காது.  ரஜினியின் கிரீடத்தில் மேன்மேலும் வைரக் கற்களைப் பதிக்க வேண்டுமே ஒழிய அதில் கரி அள்ளிப் பூசுதல் அழகாகாது. இனி ஒரு அண்ணாத்த வந்தால் அதன் பின்னர் ரஜினியை அந்த ஆண்டவனால்கூடக் காப்பாற்ற முடியாது.

இன்மதி இணையதளத்தில் வெளியானது. 


 

 

ஞாயிறு, செப்டம்பர் 26, 2021

‘அண்ணாத்த’ அரசியல் எடுபடுமா?


தமிழ்த் திரையுலகில் மின்னிய நட்சத்திரங்களின் வரிசையில் முதன்மையான இடம் ரஜினி காந்துக்கு உண்டு. சற்றேறக்குறைய நாற்பது ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நாயகனாகவே நடித்தும், நடிகைகளுடன் டூயட் பாடியும் முத்திரை வசனங்களை முழங்கியும் வரும் ரஜினி காந்தின் படங்கள் இன்றுவரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைச் சம்பாதித்துக்கொடுத்துள்ளன என்றே சொல்லப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் அவரது படங்கள் படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன என்பதும் மறுக்கவியலா உண்மை. உதாரணங்களாக மாவீரன், ஸ்ரீராகவேந்திரர், பாண்டியன், உழைப்பாளி, அருணாசலம், பாபா, லிங்கா போன்ற படங்களைக் குறிப்பிட முடியும்.

ரஜினி காந்த் தனது படங்களை வெற்றிபெற வைக்கக் கையாண்ட உத்திகளில் ஒன்று அரசியல். ரஜினியின் நிஜ அரசியல் அவரது காலைவாரிவிட்டுவிட்டபோதும், அவரது சினிமா அரசியல் அவருக்குப் பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. அது இந்தத் தீபாவளி நாளில் வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தைக் கரைசேர்க்குமா? ஏன் இப்படி ஒரு கேள்வி என்றால், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது, 1996இல் வெளியான முத்து திரைப்படம் தொடங்கி இதுவரை ரஜினி காந்த் தான் அரசியலில் ஈடுபடப்போவதாக இலைமறைகாயாகப் படங்களில் உணர்த்தியோ திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் மேடைகளில் பேசியோ அவற்றை வெற்றிக்கோட்டை நோக்கி நகர்த்திவந்தார். முதன்முறையாக இப்போது அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று உறுதியாக அறிவித்த நிலையில் அவரது படம் ஒன்று வெளியாகப் போகிறது. இந்தச் சூழலில் அரசியலுக்கும் அவருக்கும் முகிழ்த்த உறவிழை குறித்த நினைவை ஓட விடுவோம்.    

கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் (1975) திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் இரண்டு மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் முன்னணி நடிகர் என்னும் இடத்தைக் கடந்து தமிழ்நாட்டின் முதன்மை நட்சத்திரமானார். திரைப்படங்களில் கிடைத்த தொடர் வெற்றி காரணமாகத் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்ட பெயரானது ரஜினி காந்த். எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்த காலத்தில் திரைத்துறையில் புகழ்க் கொடியைப் பறக்கவிட்ட ரஜினி காந்த் மீது அரசியல் காற்றுவீசத் தொடங்கியது எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர்தான்.

1987இல் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ஊர்க்காவலன்  திரைப்பட வெற்றிவிழாவின் போது, ‘வரவிருக்கும் தேர்தலில் ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்னும் பொருள் தொனிக்கும் வகையில் அவர் பேசியது நாளேடுகளில் செய்தியானது. இப்படி மேடையில் அரசியல் பேசினாலும், அதற்கு அடுத்த ஆண்டில் 1988இல் வெளியான ராஜாதி ராஜா திரைப்படத்தில், “எனக்குக் கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம்” எனப் பாடி நடித்திருந்தார் அவர். ஜானகி எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த ரஜினியின் பேச்சு அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஜானகி எம்.ஜி.ஆருக்கு எதிர்நிலையிலிருந்த ஜெயலலிதாவுக்கு உவப்பாக இருந்திருக்கவில்லை. மேலும், 1989 சட்டமன்றத் தேர்தலில் ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. இதனால் ரஜினியின் வாழ்த்து ஜெயலலிதாவின் பார்வையில் கேலிக்கு ஆளானது. இதுதான் ஜெயலலிதா, ரஜினி இருவருக்குமிடையேயான மோதலுக்குத் தொடக்கப்புள்ளியாக இருக்கக்கூடும். 

அதைத் தொடர்ந்து 1989 தீபாவளி நாளில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் ரஜினிகாந்த் பணத் திமிர் படைத்த மாமியாரின் கொட்டத்தை அடக்கும் மாப்பிள்ளையாக நடித்திருந்தார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்தப் படத்தின் பெரிய அளவிலான வெற்றியே ரஜினியின் ‘சினிமா வெற்றிக்கு அரசியல் முலாம்’ என்னும் உத்திக்கு உந்து சக்தியைக் கொடுத்திருக்க வேண்டும். திரைக்கு வந்து சுமார் பதினைந்து ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் அவர் வேறொரு திசைக்கு நகர வேண்டிய தேவையும் எழுந்தது. அதற்கு உதவியது அரசியல்.   

1990இல் வெளியான அதிசயப் பிறவி என்னும் திரைப்படத்தில் ரஜினியைக் காட்டி, நடிகர் சோ, “பூவுலகில் இந்த முகத்துக்கு ஏகப்பட்ட மதிப்பு இவரைப் போன்றவர்கள் போட்டிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று அரசியல்வாதிகளே அஞ்சி நடுங்குகிறார்கள்” என வசனம் பேசுவார். அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வமே இல்லாத ரஜினி காந்த் இப்படியான வசனங்களை ஏன் அனுமதித்தார்? ரசிகர்களை உசுப்பேற்றி அவர்களைத் தன் பிடியிலேயே வைத்திருக்க இத்தகைய வசனங்களும் காட்சிகளும் அவருக்கு உதவின. எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் எல்லாம் ஆண்டவன் செயல் எனப் பூடகமாகச் சொல்வதன் மூலம் அவரால் தன் ரசிகர்களை எப்போதும் பரவச நிலையிலேயே வைத்திருக்க முடிந்தது.

1991 ஆம் ஆண்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் பகுதியிலேயே ரஜினிகாந்தும் குடியிருந்துவந்தது இந்த அரசியல் விளையாட்டுக்கு மிகத் தோதாகிப்போனது. முதலமைச்சர் வீட்டுக்கு வரும்போதும் போகும்போதும், போக்குவரத்து நிறுத்திவைக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. ரஜினி என்னும் திரை நட்சத்திரம் இந்த விவகாரத்தை வெறுமனே கடக்க இயலாமல் தடுமாறினார். ஒருமுறை அவர் காரிலிருந்து இறங்கிச் செல்ல ஊடக வெளிச்சத்தில் அது சட்டென்று தமிழ்நாட்டுக்கான செய்தியானது. இது முதலமைச்சர் ஜெயலலிதாவின் பார்வைக்கும் சென்றிருக்கும். இப்படியான சம்பவங்களால் ரஜினி அரசியல் துறையில் குறுக்கீடு நிகழ்த்தியது காலத்தின் கட்டாயமானது. அந்தக் காலத்தில் வெளியான மன்னன், பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிகாந்த் பேசிய முத்திரை வசனங்களுக்கு அரசியல் சாயம் பூசி மகிழ்ந்தனர் ரஜினி ரசிகர்கள். முத்தாய்ப்பாக 1993 இல் வெளியான உழைப்பாளி படத்தில், “நேத்து என்னைக் கூலியா வச்சிருந்தான்; இன்னக்கி நடிகனாக்கியிருக்கான்; நாளக்கி…” என்று வசனம் பேசிச் சிரிப்பார் ரஜினி. ரசிகர்கள், தலைவா நாளக்கி நீ முதல்வர் என்று சொல்லி பூரிப்படைந்தார்கள். இவையெல்லாம் ரஜினிகாந்த் செவிகளையும் சென்றடைந்திருக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் அரசியல் தனது சுபாவத்துக்கு ஒத்துவராதது என்பதை ரஜினி அறிந்திருந்தபோதும், அரசியல் முலாம் பூசிய வசனங்கள் படங்களை வெற்றிபெற வைக்க உதவும் என்னும் நம்பிக்கையில், அவற்றை ஓர் உத்தியாகத் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினார் அவர். 1995ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று நடைபெற்ற பாட்ஷா பட விழாவில் வெடி குண்டு கலாச்சாரம் குறித்துப் பேசியபோது, சட்டென்று அனைவரது பார்வையும் அவர்மீது விழுந்தது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கும் அவருக்குமான உரசல் அதிகரித்தது.  அதன் பின்னர் 1996ஆம் ஆண்டுக்கான தேர்தலின்போது, ரஜினிக்கான அரசியல் பிரவேச வாய்ப்புகள் பிரகாசமாக இருந்ததாக ரஜினி அரசியல் ஆலோசகர் என்ற நிலையிலிருந்த சோ ராமசாமி முதலான அரசியல் பார்வையாளர்கள் கருதினர். ஆனால், ரஜினியோ அந்த வாய்ப்பில் பிரமாதமாகச் சொதப்பினார். அரசியலில் இறங்காமல், குரல் கொடுத்ததுடன் ஒதுங்கி நின்றுவிட்டார். அதன் பின்னர் ரஜினி காந்த் நடித்த படங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு இரண்டு மூன்று படங்கள் வெளிவந்த காலம் போய் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் வெளியாகத் தொடங்கியது.

ஐம்பது வயதைத் தொட்ட நிலையில், அதுவரை திரைப்படங்களில் வசனம் பேசிய ரஜினி காந்த் மேடைகளில் வசனம் பேசத் தொடங்கினார். பாமக எதிர்ப்பு, காவிரி நீர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் வரை அரசியல் நிகழ்வுகள் பற்றிக் கருத்துகள் தெரிவிப்பார். அதைத் தொடர்ந்து அவரது படங்களும் வெளியாகும். ஆகவே, ஊடகங்கள் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்களைக் கட்டுரைகளாக எழுதித் தள்ளின. எப்படியும் ரஜினி காந்த் அரசியலுக்கு வந்துவிடுவார் என நம்பிய அவரது ரசிகர்கள் அவரது படத்தைத் தொடர்ந்து பார்த்துவந்தனர்.

ரஜினியின் இந்த உத்தி எல்லா நேரத்திலும் அவரைக் காப்பாற்றியது என்று சொல்ல முடியாது. ஆனாலும், எல்லா நேரத்திலும் ரஜினி இந்த உத்தியை பயன்படுத்துவதை வாடிக்கையாக்கினார். ஏனெனில், தான் நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதை அறிவிக்காமல், உள்ளங்கையைப் பொத்தியபடியே பூடகமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த். இப்போது முதன் முறையாக அரசியல் தொடர்பாகக் கையைவிரித்துள்ள நிலையில் அவரது படமான அண்ணாத்த திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னரான ஒரு சூழல் இது. அரசியல் என்னும் சுழலில் மாட்டிக்கொள்ளும் முன்னர் ரஜினி என்ற நடிகருக்கு இருந்த அதே வரவேற்பு இப்போதும் உள்ளதா என்பதை அண்ணாத்த வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. இப்போதுகூட முற்றுப்புள்ளி வைத்த அரசியல் அரசியல் நாடகத்துக்கு ஒரு காற்புள்ளிவைத்து, சிறு கல்லெறிந்து பார்க்கிறார். வழக்கம்போல் ரஜினியிடம் ரசிகர்கள் ஏமாறுவார்களா, ரஜினி ரசிகர்களிடம் ஏமாறுவாரா? அண்ணாத்த ஒரு பாட்ஷாவாகுமா பாபாவாகுமா என்பதைப் பொறுத்தது அது.

இன்மதி இணையதளத்துக்காக எழுதி அதில் வெளியான கட்டுரை. 

செவ்வாய், ஜனவரி 05, 2021

பணி ஒப்பந்தத்தின் பத்தாவது ஷரத்து

இது ஒரு நகைச்சுவைக் கதை என்பதால் யாரும் லாஜிக் பார்க்காதீர்கள். ஆனால், கதையைப் படித்து முடித்த பின்னர் உங்களுக்குச் சிரிப்பு வராவிட்டால் கவலைப்படாதீர்கள். இப்படியொரு கதையை எப்படி நகைச்சுவைக் கதை என்று சொன்னான் இந்த மடையன் என்று நினைத்துச் சிரித்துக்கொள்ளுங்கள். அப்போது இது நகைச்சுவைக் கதை என்பது உறுதிப்பட்டுவிடும். ஏனென்றால், நீங்கள்தான் சிரித்துவிட்டீர்களே! 

இந்தக் கதை நடந்து சுமார் மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகள் இருக்கும். ஆனாலும் இப்போதுள்ள சூழலுக்கும் பொருந்திப்போகும்வகையில் கதை இருக்கிறது என்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு. சரி கதைக்குள் போவோமா? கதையைக் கவனமாகப் படியுங்கள். கதையின் இடையிடையே நகைச்சுவைக்கான சாத்தியங்கள் ஒளிந்துள்ளன. அவற்றைத் தவறவிட்டுவிட்டால் கதையைப் படித்து முடித்த பின்னர் உங்களுக்குச் சிரிப்பு வராமல் போய்விடக் கூடும். அப்படிக் கதையைப் படித்து முடித்த பின்னர் சிரிப்பு வராதவர்களுக்காகவே முதல் நான்கு வாக்கியங்கள். கதையைப் படித்து முடித்தபின்னர் சிரிப்பவர்கள் முதல் நான்கு வாக்கியங்களைப் படிக்கத் தேவையில்லை. ஆனால், பழக்கதோஷத்தில் முதலிலேயே படித்துவிட்டீர்கள் என்றால் பரவாயில்லை. அதற்காக வருந்தாதீர்கள். ஒரு நகைச்சுவைக் கதையைப் படித்துவிட்டு அதிலும் அதற்காகச் சிரித்துவிட்டு வருத்தப்படுவது நன்றாக இருக்காது அல்லவா? 

எப்படா அலுவலகம் திறக்கும் என்றாகிவிட்டது அவனுக்கு. சுமார் பத்து மாதங்கள் அடைத்தே வைத்துவிட்டார்கள். இன்றுதான் அலுவலகத்தைத் திறக்கிறார்கள். நிறுவனம் தொடங்கிய நாள் முதல் இந்தப் பத்து மாதங்கள்தான் நிறுவனம் நல்ல லாபமீட்டியதாகவும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடவே இன்று அலுவலகம் திறக்கப்பட்டதாகவும், கொண்டாட்டம் முடிந்த பின்னர் மீண்டும் அலுவலகம் மூடப்பட்டுவிடும் என்றும் செய்தி கசிந்தது. அது உண்மையா பொய்யா என்று ஒருவருக்கும் தெரியவில்லை. யாரிடமும் கேட்கவும் யாருக்கும் தைரியமில்லை. ஏனெனில், சில மாதங்களுக்கு முன்னர் ஏன் இன்னும் அலுவலகம் திறக்கப்படவில்லை என்று தன் மனதுக்குள் கேள்வி கேட்ட ஊழியன் ஒருவன் உடனே பணியிலிருந்து நீக்கப்பட்டான். தான் மனத்தில் நினைத்திருந்ததை எப்படி அலுவலகம் கண்டுபிடித்தது என்பது அந்த ஊழியனுக்குத் தெரியவேயில்லை. ஆனால் அவன் மனத்துக்குள் நினைத்தது அதுதான் என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அதுபோலவே அலுவலகத்துக்கும் தெரிந்திருந்தது. இந்த மாயம் எப்படிச் சாத்தியமாயிற்று என்ற கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. எனவே, எவருக்கும் எந்தக் கேள்வியும் நாவில் எழவேயில்லை. எல்லாரும் அநியாயத்துக்கு மௌனம் காத்தார்கள். பொதுவான விஷயம் என்றால் சும்மா பிச்சு உதறும் சூராதி சூரர்களும் அலுவலக விஷயமென்றால் அமைதியாகிவிடுவார்கள். மற்றபடி அவர்கள் அனைவருமே புரட்சியாளர்கள்தாம். 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்றுதான் அலுவலகம் திறந்ததால் எல்லாரையும் போல் அவனும் உற்சாகத்துடன் அலுவலகத்துக்குச் சென்றான். அவன் அலுவலகத்தில் நுழையும்போது, அவனது கையைப் பிடித்துக்கொண்டு அழகான பெண்மணி ஒருத்தியும் அவன் தோளோடு தோள் உரசி வந்தாள். நீண்ட நாள்களாகத் திருமணமே செய்யாமல் இருந்தவன் யாரோ ஓர் அழகியின் பிடியில் விழுந்துவிட்டான் போல என அனைவரும் கருதினார்கள். ஆனால், மனைவியை அவன் ஏன் அலுவலகத்துக்கு அழைத்து வந்தான் என்பதுதான் அவர்களில் சிலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை பணி ஒப்பந்தத்தின் பத்தாவது ஷரத்தை அவன் படித்துப் பார்க்காமலே கையெழுத்திட்டிருப்பான் போல என்று அவர்களில் சிலர் நினைத்துக்கொண்டார்கள். 

அவன் மேலாளர் அறைக்குச் சென்றான். அதுவரை குனிந்து கணக்குவழக்குகளைக் கவனித்துக்கொண்டிருந்தவர், ஏதோ உள்ளுணர்வு உறுத்த சட்டென்று நிமிர்ந்து பார்த்தார். அந்த அழகி மட்டுமே அவர் கண்ணுக்குத் தெரிந்தாள். அடுத்த சில நிமிடங்களில் அவர் வாயைத் துடைக்க நாலைந்து கைக்குட்டைகள் தேவைப்பட்டன. நீண்ட நேரத்துக்குப் பின்னர்தான் அவனைப் பார்த்தார். அவனைப் பார்த்தவுடன் சற்றென்று அவருக்குப் பதற்றம் ஏற்பட்டது. மனைவியைத் தான் நீண்ட நேரமாக வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டோமே எனப் பதறினாரோ என்னவோ? ஆனால், அவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்காகத் தான் மனைவியை அழைத்துவந்ததுபோல் நடந்துகொண்டான். 

பெரிதாக எந்த வேலையும் நடைபெறவில்லை. மாலையாகிவிட்டது. வீட்டுக்குக் கிளம்பும் நேரம் வந்துவிட்டதால் அவன் மனைவியுடன் புறப்பட ஆயத்தமானான். வெளியே செல்ல எத்தனித்தபோது, அலுவலக செக்யூரிட்டி அவனை மட்டுமே போக அனுமதித்தான். அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்திவிட்டான். அவனுக்கு ஏன் என்று புரியவில்லை. அப்போதுதான் காலையில் நண்பர்கள் சிலர் தன்னை ஆச்சரியத்துடன் பார்த்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவர்களிடம் கேட்கலாம் என நினைத்தவனை செக்யூரிட்டி அழைத்துப் போய் காரணத்தைச் சொன்னார். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் எப்படி அந்த ஷரத்தைக் கவனிக்காமல் இருந்தான் என்று புரியவில்லை. அதில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது அலுவலகத்துக்குக் கணவனையோ மனைவியையோ அழைத்து வந்தால் அவர்கள் அலுவலக அடிமை ஆக்கிக்கொள்ளப்படுவார்கள் என. இப்படி ஏற்கெனவே அடிமையாக்கப்பட்டவர்கள் அந்த அலுவலகத்தில் ரகசிய அறையில் பணியில் உள்ளார்களாம். ரகசிய அறையில் என்ன பணி நடைபெறுகிறது என்பது ரகசியமாதலால் யாருக்கும் அதுபற்றித் தெரியாதாம். 

இந்த அலுவலகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேல் வேலை பார்த்த அவனுக்கு இந்த ஷரத்தோ இந்த விஷயமோ தெரியாமல் இருந்திருக்கிறது. ஆண்டுதோறும் அவன் பணி ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறான். ஆனால், அப்படியோர் ஆபத்தான ஷரத்தைக் கவனிக்காமலே இருந்திருக்கிறான். எப்படியும் சட்டம் என்றால் சட்டம்தான். அலுவலகம் அதன் சட்டதிட்டங்களை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனவே, வேறு வழியில்லாமல் அவன் தனியே அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான். 

அவன் பின்னாலேயே வந்த அலுவலக நண்பன் அவனிடம் இப்படியாகிவிட்டதே உன் நிலைமை என வருத்தப்பட்டான். அப்போது ராஜகுமாரன் படத்தில் செந்தில் சிரித்ததுபோல் இடி இடியெனச் சிரித்தான் அவன். நண்பனுக்கோ ஆச்சரியம். இப்படியொரு துன்பகரமான சூழலில் உனக்கு எப்படிச் சிரிப்பு வருகிறது என்று கேட்டான். அப்போது, அவன் சொன்னான், தான் அழைத்துவந்தது தன் மனைவி அல்ல என்றும் மேலாளருடைய மனைவிதான் என்றும். அப்படியென்றால் மேலாளருக்கு அது எப்படித் தெரியாமல் போயிற்று என நண்பன் லாஜிக்காகக் கேட்டான். அலுவலகத்தில் இருந்த காரணத்தால் கடமையே கண்ணாகச் செயல்படும் மேலாளர் தன் மனைவியின் முகத்தைச் சுத்தமாக மறந்துவிட்டார். அவர் வீட்டுக்குப் போனதும் இருக்கிறது வேடிக்கை என்று கூலாகச் சொன்னான் அவன். இதை எப்படி நம்புவது என்று கேட்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்குப் பணி ஒப்பந்தத்தின் பத்தாவது ஷரத்து பற்றி எதுவும் தெரியவில்லை என்பதே பொருள். சரி இந்தக் கதைக்கு ஏன் ரஜினி காந்த் படம் என யாராவது நினைத்தீர்களா? நினைத்தீர்கள் எனில் முதல் வாக்கியத்தைப் படியுங்கள் காரணம் தெரியும். 

வியாழன், நவம்பர் 05, 2020

தளபதி: சில நினைவுகள்

உலகப் பொருளாதாரம் இந்தியாவுக்குள் காலைவைக்கத் தொடங்கிய வேளை அது. 1991 நவம்பர் 5 அன்று தான் ரஜினிகாந்த் நடித்த தளபதி’ திரைப்படம் வெளியானது. தளபதி’ படத்தை வைத்து பலவகையான வியாபாரமும் முன்னெடுக்கப்பட்டது. தளபதி காலண்டர், தளபதி டி ஷர்ட், தளபதி தொப்பி எனப் பல பொருட்கள் வியாபாரத்துக்கு வரலாயின. தென்காசியில் பரதன், வாஹினி இரண்டு திரையரங்கிலும் தளபதி’ திரைப்படம் வெளியானது. பரதன் இப்போது இடிக்கப்பட்டுவிட்டது. வாஹினி திரையரங்கு இருந்த இடத்தில் ஏதோ ஷோபா கம் பெட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த ஆண்டு கமல் நடித்து வெளியான குணா’ தாய்பாலா திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது. தாய் பாலா இப்போதைக்கு இயங்கிவருகிறது. இன்னும் எவ்வளவு காலம் இது நீடிக்குமோ?

தீபாவளியன்று இருபது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி ஓபனிங் ஷோ பார்த்தோம். அதுவரை தென்காசியில் எந்தப் படத்துக்கும் அப்படி அதிகத் தொகை கொடுத்து டிக்கெட் வாங்கியதில்லை. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் எந்தப் பண்டிகை என்றாலும் தியேட்டர்களில் டிக்கெட்டின் அசல் விலைக்கே டிக்கெட் கிடைத்துவந்தது. கூட்டம் அதிகமாக இருந்தாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றால் போதும் டிக்கெட் கிடைத்துவிடும். சைக்கிள் டோக்கனுக்கான கட்டணம் ஒரு ரூபாய். ஆகவே, நானூறு ஐந்நூறு டிக்கெட்டுகள் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்குக் கிடைத்துவந்தது. அந்த நடைமுறையை மாற்றியது தளபதி’. அன்றே வாஹினியிலும் நண்பர்களுடன் படம் பார்த்தேன். எனக்குத் தெரிந்து தளபதி’ படத்தைப் பத்துப் பன்னிரண்டு ஊர்களில் பார்த்திருப்பேன். சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்னும் பாடல் தொடங்கியதும் ஒரு கூட்டமே அப்படியே எழுந்து வெளியில் போய்விடும். படத்தின் ஓபனிங் காட்சியிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றது. 

ஜப்பானிய சாமுராய் போன்ற உடையில் ரஜினியை அந்தப் பாடல் காட்சியில் உலவவிட்டிருந்தார் மணிரத்னம். அந்தத் தீபாவளிக்கு வெளியான தினமலர் தீபாவளி மலருடன் ரஜினியின் ஆளுயர ஃபுளோ அப் ஒன்றைத் தந்தார்கள். அதில் இந்தத் தளபதி’ தோற்றத்தில் தான் ரஜினிகாந்த் காட்சியளித்தார். மலையாளத்தில் வெளியான தளபதி’ படத்தில் இறுதிக் காட்சி மாற்றியமைக்கப்பட்டிருந்தது என்றும் அந்தக் காட்சியில் ரஜினி இறந்து மம்முட்டி உயிருடன் இருப்பார் என்றும் அப்போது வதந்தி உலவியது.    

மகாபாரதத்தின் கர்ணன் கதாபாத்திரத்தின் பாதிப்பில் தளபதி’ படத்தை உருவாக்கியதாக மணி ரத்னம் கூறியிருக்கிறார். ஆனால், இந்தப் படம் ஒருவகையில் நாயகனின் உல்டாதான். நாயக’னில் ஒருவர் என்றால் தளபதி’யில் இருவர். மற்றபடி அதே நிழலுலக தாதாக்களின் வாழ்க்கைதான் படத்துக்குச் சம்பவங்களாயிருந்தன. ரஜினியை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருந்த படம் தளபதி’. 

ஆனால், படம் மிகப் பெரிய வெற்றியா என்பது சந்தேகம்தான். ஓரளவுக்குப் பெயர் சொல்லும்படி ஓடியதே தவிர, ரஜினி, மம்முட்டி இணையின் நடிப்பு, மணிரத்னத்தின் இயக்கம், இளையராஜாவின் அட்டகாசமான பாடல்கள், சந்தோஷ் சிவனின் அமர்க்களமான ஒளிப்பதிவு ஆகியவை காரணமாக எகிறியிருந்த எதிர்பார்ப்பைப் படம் பூர்த்திசெய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். படம் தீபாவளி அன்று வெளியானாலும் படத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சி போகியையும் அதைத் தொடர்ந்து பொங்கல் திருவிழாவையுமே நினைவூட்டியது. படம் பொங்கலுக்கு வெளியாகியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். 

படத்தில் அடிக்கடி ரஜினி காந்த் தனியாகச் சென்று அமர்ந்துவிடுவார். பின்னணியில் சூரியன் தகதகக்கும். சூர்ய புத்திரன் கர்ணன் என்பதால் சூர்யா கதாபாத்திரத்தையும் அப்படியே உருவாக்கியிருந்தார் மணிரத்னம். இப்படியான காட்சி உருவாக்கங்கள் படத்துக்கு ஒரு சர்வதேசத் தன்மையை அளித்திருந்தன. இருபது வயதில் பார்த்தபோது பெரிய மயக்கத்தைத் தந்த தளபதி’ நாற்பது வயதில் பார்த்தபோது எந்தக் கிறக்கத்தையும் தரவில்லை. விடலைத்தனத்தின் துறுதுறுப்பின்போது ரசனைக்குரியதாக இருந்த படம் நாற்பதின் நிதானத்தில் ரசிக்க முடியாமல் போனது. இதுதான் மணிரத்னம் எனும் இயக்குநரின் மகிமை. 

1990 தீபாவளியின் போது ரஜினி காந்த் நடித்த எந்தப் படமும் வெளியாகியிருக்கவில்லை. ஆகவே மதுரை ரஜினி ரசிகர்கள் அந்த தீபாவளியைத் துக்க நாளாகக் கருதி சுவரொட்டி அடித்து ஒட்டியிருந்தார்கள். இந்தத் திரைப்படம் வெளியானபோது செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தமிழக ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது. அப்போதே ரஜினிக்கும் ஜெ.வுக்குமான உரசல் ஏற்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து வந்த மன்னன்’ திரைப்படத்தில் விஜய சாந்தி ஏற்று நடித்த கதாபார்த்திரம் ஜெயலலிதாவுடன் பொருத்திப்பார்க்கப்பட்டு ரஜினி ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது.

தளபதி’யின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தும் ரஜினி நடிக்க மணிரத்னம் இயக்கத்தில் யாரடா நீ மன்மதா?’ என்னும் பெயரில் படம் ஒன்று வெளியாகக் கூடும் என அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின என நினைவு. 29 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாளை நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமான பல சம்பவங்கள் மன அலைவரிசையில் அகப்படுகின்றன. எல்லாவற்றையும் எடுத்திடவோ எழுதிடவோ இயலவில்லை என்பது பெரும் சோகம். 

திங்கள், செப்டம்பர் 28, 2020

பாசமிகு அண்ணனும் தம்பியும்


நடிகை குஷ்பூ தமிழில் அறிமுகமான படம் தர்மத்தின் தலைவன். குஷ்பூவுக்கு முதல் படம் ஆனால், தேவர் பிலிம்ஸுக்கு இதுதான் கடைசிப் படம். ரஜினியின் ஆஸ்தான இயக்குநர் எஸ்பி.முத்துராமன் இயக்கிய படம் இது. திரைக்கதை வசனம் எழுதியிருந்தவர் பஞ்சு அருணாசலம். இந்தியில் 1978இல் வெளியான கஸ்மே வாடே என்ற அமிதாப் படத்தின் மறு ஆக்கப்படம் இது. தமிழில் பெரிய வெற்றி இல்லை என்றாலும் வெற்றிப் படமிது. தேவர் பிலிம்ஸுக்குப் படம் லாபத்தையே சம்பாதித்துக்குக் கொடுத்திருக்கிறது.
 

ரஜினி காந்த் இரட்டை வேடங்களில் நடித்த படங்களில் ஒன்று இது. பாலு என்ற பாலசுப்ரமணியன் என்னும் கல்லூரிப் பேராசிரியராகவும் ஷங்கர் எனும் ரௌடியாகவும் ரஜினி காந்த் நடித்திருக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நடிகை சுஹாசினி நடித்துள்ளார். மனதில் உறுதி வேண்டும்  படத்தில் வங்காளக் கடலே என்ற பாடலுக்கு சுஹாசினி ரஜினிகாந்த், விஜய காந்த், சத்யராஜ் ஆகியோருடன் ஆடிப்பாடுவார். அதற்குப் பிறகு அந்த மூவருடன் அவர் நடித்துவிட்டார். ரஜினியுடன் இந்தப் படம். விஜய் காந்துடன் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், சத்ய ராஜுடன் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு. 

கதையில் ஆக்‌ஷனுக்குப் பெரிய வாய்ப்பில்லை. ஆனால், ஷங்கர் என்னும் கதாபாத்திரம் ரௌடி என்பதால் ஆங்காங்கே சில சண்டைகள் இடம்பெற்றுள்ளன.  நடிகர் நாசர், ரகுபதி என்னும் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். குரு சிஷ்யன் படத்துக்குப் பிறகு ரஜினியும் பிரபுவும் சேர்ந்து நடித்த படம் இது. பாலு பணியாற்றும் கல்லூரியிலேயே படிக்கிறார் அவருடைய தம்பியான ராஜு (பிரபு). ராஜு படித்து முடித்து செட்டிலான பிறகு திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனக் காத்திருக்கிறார்கள் பாலுவும் சுமதியும் (சுஹாசினி). 

கல்லூரியில் ரகுபதிக்கும் ராஜுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. அந்தத் தகராறு முற்றிவிடுகிறது. பிரபுவை பெங்களூரு அனுப்பிவிடலாம் என்று பாலு முடிவெடுக்கிறார். அந்த வேளையில் ஏற்பட்ட அடிதடி சண்டையில் எதிர்பாராதவிதமாக பாலு இறந்துவிடுகிறார். இறக்கும் தருவாயில் சுமதிக்குத் திருமணம் செய்துவைக்க ராஜுவிடம் கோரிவிட்டுச் சாகிறார். பாலு இறந்த சேதி அறிந்த சுமதி பித்துப் பிடித்ததுபோல் ஆகிவிடுகிறார். சுமதியின் நிலைமை என்னவாயிற்று அண்ணனுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை ராஜுவால் காப்பாற்ற முடிந்ததா என்று செல்கிறது மீதிப் படம். 

படத்தின் முதல் பாதியில் வேட்டி சட்டையில் அமைதியாக ரஜினி வருவார். அதற்கு நேரெதிராக பிற்பாதியில் ஜீன்ஸ் அணிந்து, பையில் மது பாட்டிலோடு எந்நேரமும் உலவார். அப்படியே அண்ணனை உரித்துவைத்ததுபோல் இருக்கும் ரௌடியைத் தன் அண்ணன்போலவே நினைத்து அன்பு செலுத்துகிறார் ராஜு. ராஜுவுடைய காதலி தேவியாக குஷ்பூ நடித்திருக்கிறார். ராஜுவின் அந்தப் பாசம் ஷங்கருக்குப் புதிது.  ஆகவே, முதலில் ராஜுவிடம் விலகினாலும் கொஞ்சம்கொஞ்சமாக ராஜுவுடன் ஒட்டிக்கொள்கிறார் ஷங்கர். வழக்கமாகவே ரஜினி படங்களில் இடம்பெறும், 'நீ என்ன என்னன்னு சொன்ன?' என்ற கேள்வி இதிலும் உண்டு. 

சுமதி கதாபாத்திரத்துக்குப் பெரிய வேலை இல்லை. அவரது திருமணம்தான் படத்தின் பிரதானச் சிக்கல். ஆசையுடன் காதலித்த அத்தான் இறந்தபின்னர் அவரையே எண்ணி எண்ணி அவரது படத்தை வரைவதிலேயே தனது வாழ்நாளைக் கழிப்பதில் பிரியம் கொண்ட பத்தாம்பசலித்தனமான பாத்திரம் அது. அத்தான் சாயலில் உள்ள ரௌடியை முதலில் வெறுக்கிறார் சுமதி. தெரு நீரும் கங்கை நீரும் ஒன்றா என்று கேள்வியெல்லாம் கேட்கும் சுமதி இறுதியில் தெரு நீரைக் கங்கை நீராகக் கொள்வதுடன் படம் முடிவடைகிறது.  படமும் மிகவும் சுமாரான படம்தான். இப்போது பார்க்கவே இயலவில்லை. ஞாபக மறதியை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளை இப்போது பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.    

படத்தின் தணிக்கைச் சான்றிதழ் 1988 செப்டம்பர் 23 அன்று பெறப்பட்டிருக்கிறது. படம் வெளியான நாள் செப்.29 என்று படத்தின் ஆங்கில விக்கிபீடியா பக்கம் தெரிவிக்கிறது. தென்மதுரை வைகை நதி பாடல் காரணமாகவோ என்னவோ படம்   மதுரையில் 136 நாட்கள் ஓடியுள்ளது. மதுரை சிந்தாமணி, சோலைமலை என்னும் இரண்டு தியேட்டர்களில் படம் வெளியாகியிருக்கிறது. இளையராஜாவின் இசையில் தென் மதுரை வைகை நதி, முத்தமிழ்க் கவியே வருக ஆகிய பாடல்கள் சுகமானவை. நான் தட்டிக் கேட்பேன் ஆனால் கொட்டிக் கொடுப்பேன் என்னும் பஞ்ச் டயலாக் படத்தில் உண்டு. 

திங்கள், டிசம்பர் 01, 2014

ருத்ரய்யா: அவர் ஓர் அத்தியாயம்

முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த, 27,000 அடிகள் நீளம் கொண்ட அந்தப் படத்தில் 39 காட்சிகளே இடம்பெற்றிருந்தன. ஆனால் அவை அனைத்தும் தனித்துவமான காட்சியமைப்பைக் கொண்டவை, முன்னுதாரணமற்றவை. 


 முதன்மைக் கதாபாத்திரங்களில் கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா ஆகிய மூவரும் நடித்திருந்த போதும் ஒளிப்பதிவாளர், இயக்குநர் எனப் படத்தின் பிரதான தொழில்நுட்பக் குழுவினர் அனைவருமே புதுமுகங்கள்.அந்தப் படக் குழுவினருக்குத் தொடர்ந்து படங்கள் கிடைத்திருந்தால் தமிழ் திரைப்பட வரலாற்றில் பெயர் சொல்லத்தக்கப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும். 

திரைப்பட ரசிகர்கள் அனைவரும் பார்த்திருக்கும் தமிழ்ப் படமாக 'அவள் அப்படித்தான்' (1978) இருக்கும். அது வெளியான காலத்தில் மட்டுமல்ல இப்போது பார்த்தாலும்கூட அப்படி ஒரு கதையைக் கையாளும் துணிச்சலோ பக்குவமோ சமூகப் பார்வையோ இப்போதைய இளம் தமிழ் இயக்குநர்களுக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே. 

படித்த, மத்திய தர வர்க்க இளைஞர்களுக்கும் சமூகத்திற்குமிடையேயான குழப்பமான உறவை, சமூகத்துடன் அவர்களுக்கு ஏற்படும் முரணை, ஆண் - பெண் உறவில் ஏற்படும் அகச் சிக்கலை கச்சிதமாகவும் நுட்பமாகவும் பேசிய படம் அது. பெண்ணியம், பெண் சுதந்திரம் போன்ற சிந்தனைகளை முன்னெடுத்த தமிழ்ப் படங்களில் முதன்மையான படமென அதைச் சுட்டலாம். 

திரைக்கதைகளுக்கான இலக்கணங்களாகத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வந்த மரபுகளை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டுப் படார் படாரென உண்மைகளைப் போட்டுடைக்கும் வசனங்கள், எண்ணிக்கையில் அதிகமான அண்மைக் காட்சிகள் எனத் புதிய காட்சிப்படுத்துதலைக் கொண்டிருந்த படம் அவள் அப்படித்தான். 



மத்திய தரப் பெண்களின் மனப் போராட்டத்தை, வாழ்வியல் சிக்கலைப் பாலசந்தர் அதிகமாகக் கையாண்டிருந்தாலும் சினிமாவின் அழகியல் கூறுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டால் ருத்ரய்யாவின் 'அவள் அப்படித்தான்' முன்னணிக்கு வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. நமது சமூகத்தின், உறவுகளின், ஊடகத்தின் போலித் தனங்களை எல்லாம் ஈவு இரக்கமின்றி உறித்துப் போட்ட துணிச்சல்காரர் அப்படத்தை இயக்கிய ருத்ரய்யா. 

சேலம் அருகே உள்ள ஆத்தூரைச் சேர்ந்தவர் அவர். சினிமா கனவுகள் அவரைத் தூங்கவிடாமல் துரத்தியதால் அவர், சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை இயக்கம் பிரிவில் சேர்ந்து படித்தார். படித்து முடித்த பின்னர் குமார் ஆர்ட்ஸ் என்னும் பெயரில் சினிமா நிறுவனத்தைத் தொடங்கினார். முதலில் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் என்னும் கதையைப் படமாக்க முடிவு செய்திருந்தார். நடிகர் கமல் ஹாசன் நடிப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. தன் கதையைப் படமாக்க தி. ஜானகிராமன் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் அப்படக் கனவு கலைந்துபோனது. 

அடுத்து ருத்ரய்யாவின் மனதைத் துளைத்தெடுத்த கதையே அவள் அப்படித்தான். அனந்துவின் சீரிய ஒத்துழைப்பில் எழுத்தாளர் வண்ணநிலவன், இயக்குநர் கே.ராஜேஷ்வர், ஒளிப்பதிவாளர் நல்லுசாமி, ஞானசேகரன் போன்றோரின் உதவியுடன் அப்படத்தை ருத்ரய்யா இயக்கினார். படமும் வெளியானது. ஆனால் பெரிய வரவேற்புக் கிடைக்கவில்லை. ஆனால் படம் வெளியான ஒருசில நாட்களின் இப்படத்தைப் பார்த்த புகழ்பெற்ற இயக்குநர் மிருணாள் சென் படத்தின் சிறப்பைப் பாராட்டிப் பேட்டி கொடுத்தார். அதன் பின்னர் படம் சொல்லிக்கொள்ளுமளவுக்கு ஓடியது. 


வசூலில் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் கூட இப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மறுக்க முடியாத படமாக நிலைபெற்றுவிட்டது என்பது இயக்குநர் ருத்ரய்யாவுக்குக் கிடைத்த உண்மையான வெற்றியே. 1980-ல் வெளியாகி பெரிய தோல்வியைச் சந்தித்த கிராமத்து அத்தியாயம் அவரது இரண்டாவது படமும் இறுதிப் படமுமானது. தமிழ்த் திரையில் ருத்ரய்யாவுக்குக் கிடைத்தது ஓர் அத்தியாயம் மட்டும்தான் என்பது கசப்பான உண்மை. ஆனால் அந்த ஓர் அத்தியாயத்தை ஒரு வரலாறாக மாற்றிய பெருமையுடன் அவர் 18.11.2014 அன்று மறைந்துவிட்டார். 

தி இந்து இணையதளத்தில் வெளியானது

தொடர்பவர்