இந்த வலைப்பதிவில் தேடு

புதன், ஜூலை 30, 2025

தவறுகளுக்கு வருந்துகிறோம்...

பொதுவாகவே நாளிதழ்கள் ஒற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; விருப்பத்திற்கிணங்க அதைத் தவிர்த்துவிடுகின்றன. ஒரு நாளிதழின் தலைப்புகளில் மட்டும் தென்படும் தவறுகளைப் பார்க்கலாம் என்று முடிவுசெய்து, நாளிதழைத் திருப்பினால் இரண்டு மூன்று பக்கங்களுக்குள்ளாகவே நமக்கு அயர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. ஆனால், தவறுகளுடன் நாளிதழ்களை அச்சாக்கிக் கடைத்தெருவுக்கு விற்பனைக்கு அனுப்பிவிடுவதற்கு அயர்ச்சிகொள்வதேயில்லை நிறுவனங்கள். 

அந்த, இந்த, எந்த என்பவை நிலைமொழியில் இருந்து, வருமொழியில் க,ச,த,ப என்னும் எழுத்துகளில் சொல் தொடங்கினால் ஒற்றிடலாம். ஒற்றிடுதல் பெரும்பிழையன்று. 

 

உலகின் எந்தத் தலைவரும் போரை நிறுத்தவில்லை

கச்சத்தீவை என்னும் சொல்லில் இரண்டாம் வேற்றுமை இடம்பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தாரைவார்த்து என்னும் சொல் வந்துள்ளது. ஆகவே, ஒற்றிடலாம். 

கச்சத் தீவைத் தாரைவார்த்துத் தமிழக மீனவர்களுக்குத் துரோகம்

சிறப்பு என்னும் சொல் வன்றொடர்க் குற்றியலுகரச் சொல். ஆகவே, அங்கேயும் ஒற்றிடலாம். 

சிறப்புப் பிரிவு

இலங்கைக் கடற்படையினரால்...

இந்தத் தலைப்பில் துவக்கம் என்று பிரசுரிக்காமல் தொடக்கம் என்றும் பிரசுரித்திருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது. 

குடியரசுத் தலைவருக்குக் கால நிர்ணயம் செய்த தீர்ப்பை எதிர்த்த வழக்கு

புலிகளைக் காப்பதன் மூலம்

செல்போனைப் பறித்த

சாதியக் கொலைகளைத் தடுக்க...

பரிந்துரைக் கடிதத்தைத் தாக்கல்செய்தல் வேண்டும்

வங்க இளைஞர்கள் இருவர் கைது

எழுவாய் பன்மையாக இருக்கும்போது, தாம் என்னும் பன்மை இடம்பெற்றிருத்தல் வேண்டும்.

தீவிரவாதிகள்தாம்


தமிழ் நம் தாய்மொழி. அதை முறையாக எழுதுதல் நல்லது. எழுதத் தெரியாதவர்கள் எனில் மன்னித்துவிடலாம்; தெரிந்தும் எழுதாமல் விடுபவர்களை என்ன செய்வதோ? பிழைதிருத்தும் பழக்கம் வழக்கத்திலிருந்து இன்னும் ஒழிந்துவிடவில்லைதானே?

சனி, ஜூலை 26, 2025

தலைப்பிலேயே ’த’வைக் காணோம்

பொதுவாகவே, நாளிதழ்களில் ஏகப்பட்ட பிழைகள் தென்படுகின்றன. அத்தகைய பிழைகளைக் கவனிக்கக்கூட நேரமில்லாமல் எல்லோரும் இயல்பாக வாசித்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றுப் பிழையைக்கூட விட்டுவிடலாம். எழுத்துப் பிழைகளே மலிந்துவிட்டன என்பது வருந்தம் தரத்தான் செய்கிறது.  

இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழைப் பிரித்து வாசித்தபோது, தலைப்பிலேயே தென்பட்ட இந்தப் பிழை கண்ணை உறுத்தியது. நாளிதழில் யாருக்குமே கண்ணை உறுத்தவில்லை போலும். அப்படியே பிரசுரித்திருக்கிறார்கள். 


எங்கே பிழை எனத் தேடுகிறீர்களா... தலைப்பைப் பாருங்கள்...  


திங்கள், ஜூலை 21, 2025

விக்ரம் சுகுமாரன்: மதயானைக் கலைஞன்


மரணிக்கப்போவது எங்கள் உடல்கள்; நாங்களல்ல – பாலுமகேந்திரா

இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் மணிரத்னம் ஆகியோரது பிறந்தநாள்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்த 2025 ஜூன் 2 அன்று காலையில், எதிர்பாராத அதிர்ச்சியாக இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் மரணச் செய்தி திடுமென வந்து விழுந்தது. மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் அப்படி என்னதான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ? எனத் தனது ஜே.ஜே:சில குறிப்புகள் நாவலில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி கேள்வி எழுப்பியிருப்பார். அந்த நாவலை வாசித்த பின்னர் பல அகால மரணம் அந்தக் கேள்வியை நினைவூட்டிச் செல்லும். ஆனாலும், சிலரது மரணம் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சில நொடிகள் சித்தத்தைக் கலங்கவைத்துவிடும். அப்படிச் சட்டென மனத்தில் கனத்த கல்லெறிந்த மரணம் இயக்குநர் விக்ரம் சுகுமாரனுடையது.

அவருடன் ஏற்பட்ட சிறு அறிமுகம் நட்பென்று சொல்லத்தக்க நிலையை அடைந்ததற்கு அவரே காரணம். அவரை அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் செல்வ புவியரசனுடன் தற்செயலாகச் சந்தித்தபோது, இதுதான் அவரை நேரில் இறுதியாகப் பார்க்கும் சந்தர்ப்பம் என்பதற்கான எந்தத் தடயத்தையும் மனம் உணரவே இல்லையே? வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது எனக் கேட்ட கவிஞர் கண்ணதாசனும், நடிகர் முத்துராமனும் அடுத்தடுத்த நாள்களில் மறைந்த செய்தியைச் – முன்னவர் 1981 அக்டோபர் 17 அன்றும், பின்னவர் அக்டோபர் 16 அன்றும் - எட்டு வயதில் கேள்விப்பட்டபோது, மரணம் பற்றிய எந்தவொரு அடிப்படை அறிதலும் புரிதலும் ஏற்பட்டிராத அந்த வயதில் ஏதோ ஓர் இனம்புரியாத கலக்கத்தை உணர முடிந்தது. கண்ணதாசன் 54 வயதிலும் முத்துராமன் 52 வயதிலும் உலகிலிருந்து விடைபெற்றிருந்தனர். அந்த வயதுக்குள் பெரும் புகழையும் தம் துறையில் மதிப்பு மிக்க இடத்தையும் சம்பாதித்துக்கொண்டனர். விக்ரம் சுகுமாரனுக்கும் இயற்கை சற்றுக் கருணை காட்டியிருக்கலாம். அவர் தனது துறையில் இன்னும் ஏராளம் சாதிக்க வேண்டியவர் அந்த ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆனால், இயற்கை கருணை காட்டாதது திரைத்துறைக்கு இழப்பென்றுதான் உணர்வு சொல்கிறது.

தமிழ்நாட்டில் ஒருவரது சராசரி ஆயுள் காலம் தற்போதைய நிலவரப்படி 75 வயது என்னும் சூழலில் அவர் இன்னும் ஐம்பது வயதைக்கூடத் தொட்டிருக்கவில்லை. அவரது சுய விவரத் தகவல்கள் பொதுவெளியில் தெளிவாக இல்லை. அவரது வயது 47, 48, 49 என வெவ்வேறுவிதமான தகவல்களே கிடைக்கின்றன. ஏப்ரல் 11 அன்று பிறந்த அவரது பிறப்பு குறித்த தகவல் விக்கிபீடியாவில் கூட ஒழுங்காக இல்லை. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மதயானைக் கூட்டம் என்னும் ஒரு திரைப்படத்தின் மூலம் நிலையான இடம்பெற்றுவிட்ட ஓர் இயக்குநருக்கு இதுதான் நிலையா? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திரைப்படத் துறையானது அரைகுறை நடிகர்கள்கூட மாநிலத்தை ஆள ஆசைப்படும் அளவுக்கு அரசியல்ரீதியான செல்வாக்கைப் பெற்றுத் தரும் களமாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ள சூழலிலும், இப்படியான நிலைமை தொடர்வது என்பது ஆவணப்படுத்துதலில் தமிழர்தம் சுணக்கத்தையே சுட்டுகிறது.


மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான ஜெயக்கொடித் தேவர் அப்படத்தில் தன் மகளுக்கு நடத்திவைத்த சிறப்பான திருமணத்தை, நினைத்த அளவுக்குச் சிறப்பாகச் செய்துவைக்க இயலவில்லையே எனும் மனத்தாங்கலில் மாரடைப்பால் உயிர்விட்டிருப்பார். திரைப்படக் கலைமீது பேரார்வம் கொண்டிருந்த விக்ரம் சுகுமாரனும் மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்லிவிட்டுச் சென்னைக்குப் பேருந்தில் திரும்பிய வேளையில் மாரடைப்பால் உயிரை விட்டிருந்தார். இன்னும் தம் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் படைப்பொன்றை உருவாக்கும் வாய்ப்பு கிட்டவில்லையே என்னும் மனத்தாங்கல் அவருக்கும் இருந்திருக்கக் கூடும். தமிழ்த் திரைப்பட உலகுக்குப் பெருமைசேர்க்கும் பல படங்களை உருவாக்கும் திறன் மிக்க படைப்பாளி அவர் என்பது மரணத்துக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. எந்த எதிர்க்கேள்வியுமற்று இயற்கையின் ஏவலுக்குப் பழகிய விசுவாசமான வேலையாள்தானே மரணம்?

இயக்குநர் ருத்ரய்யா, S. கணேச ராஜ் வரிசையில் இரண்டு படங்களை இயக்கி அதில் ஒன்றால் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் இடம்பிடித்துவிட்ட திருப்தியில் சென்றுவிட்டாரோ என்னவோ? அவள் அப்படித்தான் மூலம் ருத்ரய்யாவும் சின்னத்தாயி வழியே S. கணேச ராஜும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நிலைத்துவிட்டர்கள். ருத்ரய்யா இரண்டாவதாக இயக்கிய கிராமத்து அத்தியாயம், S. கணேச ராஜின் மாமியார் வீடு இரண்டும் ரசிகர்கள் மனத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதவை. இவர்கள் இருவருக்கும் இல்லாத சிறப்பு விக்ரம் சுகுமாரனுக்கு உண்டு. இவர்கள் இருவராவது தமது படங்களுக்கு இளையராஜாவின் இசையைப் பக்க பலமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால், விக்ரம் சுகுமாரனோ எந்தப் பெரிய தொழில்நுட்பக் கலைஞரையும் சாராது தனது கலைத் திறனை மட்டும் நம்பிக் களமிறங்கி அதில் வெற்றியை நோக்கி நகர்ந்தவர்.

தமிழ் சினிமாவில் பாரதிராஜா பரம்பரை என்று சொல்லக்கூடிய அளவில் இயக்குநர்கள் அவரிடம் பணியாற்றிவிட்டுத் தனியே இயக்குநராகியிருக்கிறார்கள். மணிவண்ணன், கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலரைக் குறிப்பிட முடியும். அதே போல் பாலுமகேந்திராவிடமிருந்தும், பாலா, சீனு ராமசாமி, வெற்றிமாறன் வரிசையில் இயக்குநரானவர் அவர். தனது ஜூலி கணபதி படத்தை, ‘தமிழ் சினிமாவை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கும் என் இளைய தலைமுறைக்கு’ சமர்ப்பித்த பாலுமகேந்திராவின் சீடர்களில் ஒருவர் விக்ரம் சுகுமாரன். பாலுமகேந்திராவின் கதைநேரம் உள்ளிட்ட சில படைப்புகளில் பணியாற்றியுள்ளார். பின்னர் வெற்றிமாறனுடனும் பணியாற்றி, அவரது பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களின் உருவாக்கத்தில் பங்களித்து விடைபெற்றுத் தனியே இயக்குநரானவர் விக்ரம் சுகுமாரன். போர்ச் சூழலால் வதைபட்ட இலங்கையிலிருந்து பாலுமகேந்திரா திரைப்படத்துறைக்கு வந்திருந்தார் என்றால், விக்ரம் சுகுமாரனோ வறட்சி வாட்டியெடுக்கும் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அத்துறைக்கு வந்தவர்.


“என்னுடைய சினிமாவிலே ஏதோ ஒரு தனித்தன்மை இருக்கிறது என யாராவது சொன்னால் அது எனக்கும் இலக்கியத்துக்குமான பரிச்சயம்” என்கிறார் பாலு மகேந்திரா ஒரு நேர்காணலில். அப்படிப்பட்ட இயக்குநரிடம் பாடம் பயின்ற விக்ரம் சுகுமாரன் உலக இலக்கியம், உலகத் திரைப்படம் என்றெல்லாம் கதைபேசாமல் உள்ளூர் படங்களான கிழக்குச் சீமையிலே, தேவர் மகன் போன்ற படங்களைப் பார்த்தே திரைத்துறைக்கு வந்ததாகக் கூறியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் போன்றவர்கள் மேடையில் ஏறி உலகப் படம், உலக இலக்கியம் என்றெல்லாம் பேசுவதைக் கேட்பதற்குப் பெரிய வியப்பாக இருக்கும். அதைவிட வியப்பு அவர்களது படங்களைப் பார்க்கும்போது ஏற்படும். அதற்குக் காரணம் உலக இலக்கியம், உலக சினிமா என வீறாப்பாகப் பேசும் அவர்களது படங்களில் அவற்றின் சிறு தடயமும் தென்படாத வகையில் அசல் தமிழ் சினிமாவை உருவாக்கிவிடுவதே. ஆனால், பேராரவாரமின்றி விக்ரம் சுகுமாரன் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினரின் பண்பாட்டை விமர்சனரீதியில் திரைக்கதையாக்கி அதை ஒரு கலை ஆவணமாக மதயானைக் கூட்டம் என்னும் பெயரில் படைத்துள்ளார். சாதிப் பெருமிதம் பொங்கிய கிழக்குச் சீமையிலே, தேவர் மகன் போன்ற படங்கள் பெரிய வெற்றியைப் பெற்ற தமிழ்நாட்டில் சாதியை விமர்சித்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பது நகைமுரணே.

இயக்குநர் விக்ரம் சுகுமாரனை நேர்காணல் ஒன்றுக்காக நுங்கம்பாக்கத்தில் இராவண கோட்டம் திரைப்பட அலுவலகத்தில் சந்தித்த வேளையில், அவர் திரைப்படத் துறைக்கு வந்த கதையை மிகவும் எளிமையாக, வெள்ளந்தியான மொழியில் விரிவாகப் பேசினார். மிகவும் சரியான விதத்தில் உருவாக்கப்பட்டும் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட திரைப்படமான மதயானைக் கூட்டம் வெளியான வேளையில் அது சரிவரக் கவனிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. தமிழ்த் திரைப்படத்தில் வழக்கமாக வெளிப்படும் மிகைப்படுத்துதல் எதுவுமின்றி மிகவும் நுட்பமான முறையில், திரைக்கதை அமைத்து அவர் உருவாக்கிய முதல் படமான அது வெளியான தருணத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டிருந்தால் விக்ரம் சுகுமாரன் என்னும் இயக்குநர் அப்படம் போன்ற மேலும் பல படங்களைத் தந்திருக்கக்கூடும். ஆனால், இயற்கையின் கணக்கு வேறுவிதமாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அவர் இறுதியாக இயக்கிய தேரும் போரும் படம் என்னவானது என்பது விடையற்ற கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.

நுண்ணுணர்வுகளால் இழைக்கப்பட்ட நுட்பமான ஒரு திரைப்படத்தைக் கண்ணுக்குத் தெரியாமல் கழுத்தை நெரித்த சமூகத்தை எதிர்கொண்டதாலோ என்னவோ விக்ரம் சுகுமாரன் அடுத்து உருவாக்கிய இராவண கோட்டம் அந்த அளவுக்கு நுட்பமாக உருவாக்கப்படாமல் வழக்கமான தமிழ்ப் படப் பாதையில் பயணித்துவிட்டது. ஒரு கலைஞன் சுதந்திரமான மனநிலையில் சிந்தித்துக் கதை திரைக்கதையை எழுதி, உயிரோட்டமான வசனங்களைப் படைத்துப் படமாக்கினால் உருவாகும் படத்துக்கும், அதே கலைஞன் சமூகத்தின் அழுத்தத்துக்கு உட்பட்டு உருவாக்கும் படத்துக்குமான வேறுபாட்டை எளிதில் உணர வேறெதுவும் செய்ய வேண்டாம். அடுத்தடுத்து, மதயானைக் கூட்டத்தையும், இராவண கோட்டத்தையும் பார்த்தால் போதும். ஒரு படைப்பாளிக்கு ஏற்படும் நெருக்கடியை உணர்ந்துகொள்ளலாம். இவ்வளவுக்கும் விக்ரம் சுகுமாரனின் இரண்டாம் படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். தமிழ்த் திரைப்பட உலகில் திரைக்கதை மன்னன் எனக் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் தன் மகனுக்கு நல்ல படம் ஒன்றை உருவாக்கித்தரும் பொறுப்பை விக்ரம் சுகுமாரனிடம் வழங்கியிருந்தார் என்றால் விக்ரம் சுகுமாரனின் திரைக்கதை மீது அவர் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்திருப்பார். அந்தப் படமும் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருந்தது.

விக்ரம் சுகுமாரன் தனது மதயானைக் கூட்டம் படத்துக்கு ஒரு நேர்மறையான விமர்சனம்கூட வரவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். ஆனால், சுப. குணராஜன் காட்சிப்பிழை இதழில் எழுதிய சாதீய சினிமாவும் கலாச்சார சினிமாவும் என்னும் கட்டுரை அப்படத்தை நேர்மறையான கண்ணோட்டத்துடன் அணுகி, அதன் இனவரைவியல் கூறுகளையும்,படமாக்க உத்திகளையும் செய்நேர்த்தியையும் தெளிவாகச் சுட்டிக்காட்டியது. அதே தலைப்பில் உருவாக்கப்பட்ட நூலிலும் இந்தக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. ஆவணத்தின் துல்லியமும் புனைவின் நேர்த்தியும் சரியான விகிதத்தில் கலந்து அசலான திரைப்படமாக உருவாக்கப்பட்டிருந்த அத்திரைப்படத்தைச் சரியாக அடையாளம் கண்டுகொண்ட விமர்சனம் அது.

(2025 ஜூலை காக்கைச் சிறகினிலே இதழில் வெளியானது) 

ஆதலினால் ஏடெழுதும் வாழ்க்கையிலே…

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் இந்து தமிழ் திசை வணிகத்துக்கு வலுச்சேர்க்கவும்; தமிழ்ப் பற்றுக் கொண்ட நாளேடாய்க் காட்டிக்கொள்ளவும் ‘தமிழால் இணைவோம்’ என்னும் சொற்றொடரைத் தனது நாளேட்டின் முதல் பக்கத்தில் தலைப்புக்கு நடுவில் இலச்சினையில் அச்சிட்டுள்ளது. சம்ஸ்கிருதத்தால் சங்கமமாவோம் எனத் துணைத் தலைப்பிடும் சூழல் நம் நிலத்தில் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி ஒருவேளை துணைத் தலைப்பிட்டு நாளேடு இப்போது அளிக்கும் செய்திகளையே அளித்திருந்தாலும், பெரிய வேறுபாடு தோன்றியிருக்காது. பெரும்பாலான நாள்களில், தமிழ்ச் சமூகத்தின் நலனுக்காக நடத்தப்படும் தோற்றம்தரும் வகையில் இந்நாளேட்டின் இணைப்பிதழ்க் கட்டுரைகளும், நடுப்பக்கக் கட்டுரைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரசுரமாகும் அதே நேரத்தில் இந்நாளேட்டின் செய்திகளும் செய்திக் கட்டுரைகளும் நுண்ணரசியலில் தோய்த்து எழுதப்படும். நாளேட்டின் செய்திகளைத் தொடர்ந்து வாசிக்கும் எவரொருவரும் எளிதில் இந்த அரசியலைப் புரிந்துகொள்ள இயலும். அப்படியொரு செய்திக் கட்டுரையை இந்நாளேடு 2025 ஜூலை 13 அன்று தனது கடைசி பக்கத்தில் பிரசுரித்திருந்தது.

கட்டுரையின் தலைப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – பின்னுக்குத் தள்ளப்படும் நவீன அறிவு. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இந்தச் செய்திக் கட்டுரையை எழுதியிருப்பதாக நாளேடு தெரிவிக்கிறது. 2025 ஜூலை 12 அன்று மாநில அரசால் நடத்தப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வை விமர்சித்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. மேலோட்டமாக வாசித்துப் பார்க்கும்போது, இளந்தலைமுறைமீது அக்கறையுடன் எழுதப்பட்ட கட்டுரையாகத் தோற்றம் தருகிறது. ஏனெனில், முதல் பத்தியில் தேர்வு நடத்தப்பட்ட விதத்தை வாழ்த்தித் தொடங்கும் கட்டுரை, பெரும்பாலும் நேர்மறையான எண்ணங்களைப் பதிவுசெய்வதே நோக்கம் என்னும் மயக்கத் தொனியிலேயே எழுதப்பட்டுள்ளது. கட்டுரையைச் சற்றுக் கவனத்துடன் வாசிக்கும்போது, அதில் இடம்பெற்றுள்ள சில வாக்கியங்களும், ஐயங்களும் நம் சிந்தையைக் கிளறிவிடுகின்றன; கட்டுரையில் பொதிந்துவைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளைக் கண்டுகொள்ளத் தூண்டுகின்றன. கட்டுரையின் தலைப்பைக் கவனித்தீர்கள் எனில், பின்னுக்குத் தள்ளப்படும் நவீன அறிவு என்னும் சொற்றொடர் புதிர்க்கதவைத் திறக்கும். அறிவில் என்ன, நவீன அறிவு தொல்லறிவு எனத் தோன்றக்கூடும். தொழில்நுட்பம்சார் அறிவைத்தான் கட்டுரையாளர் நவீன அறிவு என எழுதியுள்ளார். அப்படியென்றால், தொல்லறிவு என்பது தொல்காப்பியம் தொடங்கிப் புழங்கிவரும் தமிழ் மொழியின் இலக்கண அறிவென்பதை எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.

முதலில் வாக்கியங்களைக் குறித்து விவாதிக்கலாம். அடுத்ததாகக் கட்டுரையின் ஐயங்களை அலசலாம். “நாளுக்கு நாள் வெகுவேகமாக மாறிவரும் அறிவியல் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் திறன், மிக நிச்சயமாக, நம் தமிழுக்கு இருக்கிறது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ‘இலக்கணம்’ என்கிற குடுவைக்குள் இளம் தலைமுறையின் தாய்மொழி அறிவை அடைக்க முயற்சிப்பது ஏன்?” என்றொரு வினாவை எழுப்பியுள்ளார் கட்டுரையாளர். இவ்வாக்கியத்தில் காணப்படும் பிழைகளைக் கண்டு பதறாதீர்கள், அதைப் பின்னர் விளக்கலாம். முதலில் இந்த வாக்கியத்தை எப்படி எழுத முடிந்தது, இந்த வாக்கியம் எப்படி நாளேட்டின் ஆசிரியர் முதலிய அனைவர் கண்ணையும் மறைத்து வெளிப்பட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

உலகின் மிகவும் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் இலக்கணத்தை, அம்மொழியை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டிய பொறுப்புமிக்க இளந்தலைமுறை கற்றுத் தெளிய வேண்டியதன் அவசியம் உணர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இலக்கணம் தொடர்பான வினாக்களை எவ்வளவு எளிதாகக் கட்டுரையாளர் மடைமாற்றிக் காட்டுகிறார். தாய்மொழியின் இலக்கணத்தை அறிந்துகொள்ளாமல் எப்படி அந்தத் தாய்மொழியில் தெளிவைப் பெற முடியும்? இலக்கணம் என்பது இதிகாசங்களிலும் புராணக் கதைகளிலும் இடம்பெறும் குடுவைக்குள் அடைபட்ட பூதம் போன்ற புனைவுச் சரக்கா? இதில் என்ன ஆச்சரியமென்றால், இந்தக் கட்டுரை வெளியாகியுள்ள இதே நாளேட்டின் நடுப்பக்கத்தின் இறுதியில், இந்நாளேடு நடத்தும் பதிப்பகம் உருவாக்கி விற்றுவரும் ‘இலக்கணம் இனிது’ என்னும் நூலின் விளம்பரமும் இடம்பெற்றுள்ளது. தன் கையை எடுத்துத் தன் கண்ணையே குத்துவது போன்ற காரியமல்லவா இது? பதிப்பக விற்பனைக்கு வேட்டுவைக்கும் வேலையை நாளேடு செய்யலாமா? கட்டுரையாளருக்கு இது தெரியாமல் போகலாம். ஆனால், நாளேட்டின் செய்தி ஆசிரியர், ஆசிரியர் உள்ளிட்டோர் இப்படியொரு முரணைக் கவனித்திருக்க வேண்டுமே?

மேலே இரட்டை மேற்கோள் குறிகளுக்கிடையே குறிப்பிட்டுள்ள நாளேட்டு வாக்கியத்தில் தென்படும் பிழைகளைப் பார்க்கலாம். ‘இதையெல்லாம்’ என்னும் ஒரு சொல்லைக் கட்டுரையாளர் எழுதியுள்ளார். இந்தச் சொல் ‘இதை என்றோ’, ‘இவற்றை எல்லாம்’ என்றோ எழுதப்பட்டிருக்கவோ பிரசுரிக்கப்பட்டிருக்கவோ வேண்டும். ‘தொழில்நுட்ப தேவைகளுக்கு’ என்று அடுத்தடுத்து இடம்பெற்றிருக்கும் சொற்களுக்கு இடையே ஓர் ஒற்றெழுத்து இட்டிருக்க வேண்டும். ‘முயற்சிப்பது’ என்னும் ஒரு சொல்லைக் கட்டுரையாளர் பயன்படுத்தியுள்ளார். அவ்விடத்தில் ‘முயல்வது’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். முயல் என்பது வேர்ச்சொல். ஆகவே, முயற்சிப்பது என்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். வினாத் தாளில் இடம்பெற்றுள்ள பல திரிசொற்களைக் குறிப்பிட்டுள்ள கட்டுரையாளர், “இவற்றையெல்லாம் மீட்டெடுக்கும் முயற்சியில் தவறில்லை. ஆனால் அதற்கான களம் இதுவல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதி, ‘ஆனால், அதற்கான களம் இதுவன்று’ என எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், ‘அல்ல’ என்பது பன்மைக்குரிய பயனிலை. கட்டுரையாளர் ஒருபோதும் குடுவைக்குள் தாய்மொழி அறிவைப் புதைத்திராதவராக இருக்கலாம். இப்படி மொழிரீதியாகப் பல பிழைகளைக் கொண்ட ஒரு கட்டுரை, இலக்கண அறிவு தேவையா என்பது குறித்து வினா எழுப்புவது நகைப்பைத் தருகிறது.

வினாத்தாளில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர் என்று சாதிய அடையாளம் தவிர்த்ததைப் பாராட்டும் கட்டுரையாளர், டாக்டர் நடேச முதலியார், திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை ஆகியோர் பெயரின் சாதிப் பெயரையும் திருத்தி இருக்கலாம் என அங்கலாய்க்கிறார். அதுவும் ‘திவான் பகதூர் பவானந்தம் பிள்ளை’ எனும் பெயரை நாளேடு ‘பகவான் பகதூர் பவானந்தம் பிள்ளை’ எனப் பிரசுரித்துள்ளது. எப்போதும் பகவான் நினைவோ என்னவோ? இல்லம் தேடிக் கல்வி, விடியல் பயணம் போன்ற கொள்கை சார் கேள்விகளைப் பற்றிக் கூறி இப்படித்தான் இருக்கும் எனத் தம்மைத்தாமே சமாதானம் செய்துகொள்கிறாராம் கட்டுரையாளர். அரசுப் பணிக்கு வரும் ஒருவர் அரசுத் திட்டங்கள் சார்ந்த விவரங்களை அறிந்திருக்கிறாரா இல்லையா எனச் சோதிப்பது இயல்புதானே? அத்தகைய திட்டங்கள் சார்ந்த கேள்விகளைக் கண்டு ஏன் உச்சி வேர்க்கிறதோ, முதுகு அரிக்கிறதோ? ஒருவேளை வினாத் தாளில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா என்னும் பெயர்கள் இடம்பெற்றிருந்தது அதற்குக் காரணமாயிருக்குமோ?

ஒரு கட்டுரையிலேயே இத்தனை பிழைகள் எனில் நாளேட்டின் எஞ்சிய பக்கங்களில் எத்தனை எத்தனையோ? இப்படிப் பிழைகள்சூழ் செய்திகளைப் பிரசுரிக்கும் நாளேடுகள் மலிந்த சூழலில் இளந்தலைமுறையின் இலக்கண அறிவை, தொல் தமிழ்ச் சொற்கள் ஆகியவை குறித்தெல்லாம் தேர்வுகளின் வழியே சோதிப்பது ‘தெய்வக் குற்றமா’? மேலே சுட்டப்பட்ட பிழைகள் கட்டுரையாளர் செய்யாதவனவாக இருக்கலாம். ஏனெனில், ஒருவேளை கட்டுரையாளர் சரியாக எழுதி, நாளேட்டின் தரப்படுத்தலுக்கு உட்பட்டு வெளிவரும் வேளையில் பிழைபட்டிருக்கலாம். நூற்றாண்டுப் பெருமை கொண்ட குழுமக் கூடத்திலிருந்து வெளிவரும் ஒரு நாளேடு தொல் மொழி குறித்து இத்தனை பிழைகளுடன் செய்திக் கட்டுரை வெளியிடுவதை வாசித்துவிட்டு வாளாவிருக்க இயலுமா? 

வெள்ளி, ஜூலை 18, 2025

எமர்ஜென்சி எனும் நெருக்கடி நிலை

இந்தியாவின் பிரதமராகவிருந்த, இரும்புப் பெண்மணி என அறியப்பட்டிருந்த இந்திரா காந்தி ஆட்சியின் போது, 1975 ஜூன் 25 அன்று இந்தியா கண்ட எமர்ஜென்சி அதன் பின்னான அரசியலை ஒரு புரட்டு புரட்டியுள்ளது. நாட்டின் கருத்துரிமைக்கு வேட்டுவைத்த எமர்ஜென்சி குறித்த இலக்கியப் பதிவுகள் மிகச் சிலவே. அவற்றில் ஒன்று அசோகமித்திரன் எழுதிய இன்று. 

நாவலின் தலைப்பு இன்று என்றாலும் அது எக்காலத்துக்குமானது என முன்வைக்கப்படுகிறது. தேவிபாரதி போன்ற எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகளை ஒப்பிடுகையில் இதை நாவல் என்று சொல்லவே முடியவில்லை. அவ்வளவு சிறிய நாவல். கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட இன்று நாவலையே படித்தேன். முதலில் நாவலில் தென்பட்ட பிழைகளைத் தாம் சொல்ல வேண்டும். வாக்கியப் பிழை, ஒருமை பன்மைப் பிழை என பக்கத்துக்கு ஒன்று தென்பட்டது. இதற்குக் காரணம் எழுத்தாளரா பதிப்பகமா என்பது தெரியவில்லை. வாசிக்கும் வேளையில் கண்ணில் வந்து விழும் துரும்புகள் போல் பிழைகள் உறுத்திக்கொண்டேயிருந்தன. 

பிழைகள் காரணமாகவோ நாவல் காரணமாகவோ தெரியவில்லை. இதுவரை அசோகமித்திரன் நாவல்கள் தந்திருந்த இதத்தை இந்நாவல் தரவில்லை. இலக்கியரீதியிலேயே இதம் என்னும்  சொல்லைத் தந்துள்ளேன். மற்றபடி அசோகமித்திரன் நாவல்களில் நொய்மைகளுக்குப் பஞ்சமிருக்காது என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. 

வாழ்வை அதன் சிக்கலைச் சற்று மேட்டிமைத்தனத்துடன் அதே வேளையில் மத்தியதரவர்கத்தின் கையறுநிலையிலேயே கண்டு பதிவுசெய்பவராகவே தோற்றம் கொள்கிறார் அசோகமித்திரன். பெரிய சிக்கல் இல்லாத தமிழ்த் தொடர்களைக் கையாண்டு தான் நாவல்களை நகர்த்திச்செல்கிறார். ஆனால், உள்ளடக்கரீதியாக அவருக்குச் சூழல்மீது உள்ள ஒவ்வாமை அதீதக் கசப்பாக எழுத்துகளின் அடியே நீங்காத வடுவாக வெளிப்பட்டுள்ளது. போராட்டங்கள் குறித்த அவரது பார்வை இந்நாவலில் சற்றுக் கீழாகவே உள்ளது. எது எதற்கோ போராடுகிறார்கள் இவை எல்லாம் தேவையா எனும் சத்தம் வெறும் முனகலாகக் கேட்கிறது. 

நாவலின் பின்னட்டைக் குறிப்பு இந்நாவலைக் கூறுவது போல் வடிவரீதியில் பெரிய முற்போக்கான நாவலாக இதைக் கருத இயலவில்லை. நெருக்கடி நிலை எப்படியான எண்ணத்தை இந்தியாவுக்குத் தந்ததோ அப்படியான எண்ணத்தைத்தான் இந்நாவலும் தந்துள்ளது. இவை எல்லாம் ஏன் ஏற்படுகின்றன இவற்றால் என்ன நன்மை என்னும் ஒருவித அலுப்பும் சலிப்புமான எண்ணத்தையே இந்நாவல் தோற்றுவிக்கிறது. நிராசையும் கசப்புமான சூழலில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரங்கள் மூச்சுவிடவே அல்லல்படுகின்றன. வாசிக்கும்போது நாமும்கூட இழுத்து இழுத்து மூச்சுவிட வேண்டியதிருக்கிறது.   

அசோகமித்திரனின் நல்ல நாவல் என முன்மொழியப்பட்டாலும், நாவலை வாசித்த பின்னர் அதை வழிமொழியும் வாய்ப்பை நாவல் தரவில்லை. மற்றபடி நெருக்கடி நிலை குறித்து வாசிக்க வேண்டிய நாவலே. என்னதான் இருக்கிறது என்பதாவது வாசிப்பில் தெரிந்துவிடுமே.  

செவ்வாய், மே 20, 2025

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

வர வர தமிழ்ப் படங்கள் பார்க்கும் ஆசையே விட்டுப்போய்விடும்போல. ஏற்கெனவே கொரோனா காலத்துக்குப் பிறகு தியேட்டரில் போய் படம் பார்க்கும் பழக்கம் கிட்டத்தட்ட போய்விட்டது. 2023 ஆம் ஆண்டில் தியேட்டரில் இரண்டு படங்கள் பார்த்தேன். அதில் ஒன்று தமிழ்ப் படம். அது உதயநிதி நடித்து மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன். படம் சுமார் ரகம். அடுத்த ஆண்டான கடந்த ஆண்டில் அதாவது 2024இல் இவ்வளவுக்கு விளக்கம் எழுதுவதற்குப் பதில் 2024இல் என்றே எழுதியிருக்கலாம். சரி விடுங்கள் எழுதியாயிற்று இருந்துவிட்டுப் போகட்டும். 

2024இல் தியேட்டரில் பார்த்த ஒரே படம் லப்பர் பந்து. அந்தப் படத்தைப் பார்த்தபோது, முள்ளும் மலரும் படம் நினைவில் எழுந்தது. அதே கருதான். அதில் அண்ணன் தங்கை. இதில் அப்பா மகள். கிரிக்கெட் அது இதுன்னு படம் போரடிக்காமல் போனது என்றபோதும், புதிதாக படத்தில் ஒன்றுமில்லை என்ன எண்ணமே வந்தது. படத்தில் ஒரே காதல் சோகப் பாடலில் அப்பா மகள் இருவரையும் கொண்டு காட்சி அமைத்திருந்தது மட்டுமே புதுமையாக இருந்தது. 

இந்த ஆண்டில் இதுவரை பார்த்த எந்தத் தமிழ்ப் படமும் பெரிதாக ஈர்ப்புக்குரியதாக இல்லை. அதுவும் இப்போது தியேட்டருக்குச் செல்வதே இல்லை. படம் வெளியான நான்கு வாரத்தில் படம் ஓடிடியில் வந்துவிடுகிறது. ஆகவே, வீட்டிலிருந்தே படத்தைப் பார்த்துவிட முடிகிறது. தியேட்டருக்குச் செல்வதே தேவையில்லாத ஆணியாகிவிட்டது. முந்தைய வாக்கியத்தில் தேவையில்லாத ஆணி என்னும் பயன்பாட்டைப் போலவே முழுப் படத்திலும் வசனம் இடம்பெற்றிருந்த படம் அஜித் குமார் நடித்த   Good Bad Ugly. படம் Good ஆக இல்லாவிட்டாலும் Bad ஆகவாவது இருந்திருக்கலாம். ஆனால், Ugly ஆக இருந்தது. 

படம் முழுக்க அண்ணன் யார் தெரியுமா அண்ணன் யாரு தெரியுமான்னு உதார் இருந்துகிட்டே இருக்கு. படத்துலயோ ஒரு சரக்கும் இல்ல. எந்தத் தைரியத்துல இப்படியெல்லாம் படம் எடுக்குறாங்கன்னுதான் தோணுச்சு. ஜெயில் காமெடி குரு சிஷ்யன் படத்துல ஏற்கெனவே பார்த்துட்டோம். நாயகி வில்லன்களை நொறுக்கச் சொல்லும் காட்சி நல்லவனுக்கு நல்லவன் படத்திலேயே பார்த்துவிட்டோம். படம் முழுக்க கலர் கலரா ட்ரெஸ் போட்டுட்டு ஸ்டைலா வலம் வர்றாரு அஜித். அதுதான் நடிப்புன்னா அஜித்தோட நடிப்பு பிரமாதம்னு சொல்லணும். 

சரி இதுதான் இந்த லட்சணம்னு டூரிஸ்ட் ஃபேமிலி படம் நல்லாருக்கும்னு எல்லாரும் சொல்றாங்களேன்னு அதப் பார்க்க உட்கார்ந்தா அது அதுக்கு மேல. கொலையா கொல்றாய்ங்க. முன்னாடி தொலைக்காட்சியில செவ்வாய்க்கிழமை நாடகம் வருமே அது மாதிரியான மாடர்ன் ட்யூஸ்டே டிராமா. நெஞ்சை அநியாயத்துக்கு நக்கி நக்கி தோல உரிச்சு தொங்கவிட்டுட்டாங்க. படம் நல்லா இல்லன்னு சொன்னா நமக்கு மனிதநேயமே இல்லன்னு குரூரமா சொல்வாங்க. ஆனா, படம் நல்லாவே இல்லன்னு கூசாம சொல்லலாம். அந்தச் சின்ன பையன் மட்டும் படத்துல ஆறுதல். அதுவும் இல்லாட்டி சூர மொக்கைன்னு துணிஞ்சு சொல்லலாம். 

விக்ரம் நடித்த வீர தீர சூரன் நல்ல கமர்ஸியல் படம். நீட்டான திரைக்கதை. படம் எந்தத் தொய்வும் இல்லாம இருந்துச்சு. நடிகர் விக்ரமை எல்லை மீறாமல் வரையறைக்குள் வைத்து படத்தை எடுத்த விதத்துக்கே இயக்குநருக்கு ஒரு சபாஷ் சொல்லணும். ஏனெனில், அண்மைக்காலத்தில் நடிகர் விக்ரம் திரையில் பத்து கமலஹாசனா பரிணாமம் எடுக்கிறார். தாங்க முடியல. ஆனால், இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு இயல்பானது. எந்தவிதமான மிகையும் இல்லாமல் அப்படியே மலர்ந்த அதிகாலைபோல் உறுத்தலின்றி இருந்தது. இதுவும் நடிப்புதான் சார். இப்படி நடிச்சா போதும், தங்கலான் மாதிரி அநியாயத்துக்கு நடிச்சா ரசிகர்கள் பாவம் இல்லயா? கொஞ்சம் அவங்க நிலைமையையும் யோசிச்சுப் பாருங்க. வெளியில தொல்லை தாங்க முடியாம தியேட்டருக்கு வர்ற அவன ரத்தம் கக்க வைக்கிறது நல்லாவா இருக்கு?  விக்ரம் நடிச்ச இந்தப் படம் சரியா ஓடல்லன்னு சொல்றாங்க. ஏற்கெனவே முன்னாடி அவர் நடிச்ச மஜா படமும் அப்படித்தான். நல்லா இருந்துச்சு ஆனா படம் ஓடல. அவர் நடிச்ச சாமி, தூள் மாதிரி கரம் மசாலாதான் ரசிகருக்குப் பிடிக்குது போல.

புதன், ஏப்ரல் 30, 2025

இலக்கற்ற வாசிப்பு சரியா, தவறா?

இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கும் உங்களிடம் அவன் உரையாடத் தொடங்குகிறான். நீங்கள் ஆணா, பெண்ணா அவனுக்கு நீங்கள் உறவா நட்பா பகையா எதுவும் அவனுக்குத் தெரியாது. ஒருவேளை இப்போதே நீங்கள் இந்தப் பதிவை வாசிப்பதிலிருந்து விலகியிருக்கலாம். ஆனாலும், அவன் உங்களுடன்தான் உரையாடுகிறான். இது ஒரு விதமான மாய விளையாட்டு. யாருமே இல்லாத சூழலிலும் யாரையாவது உருவகித்துக்கொண்டு உரையாடுகிறான். அந்த யாரோ நீங்களாக இருக்கலாம்; நீங்களாக இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவனது உரையாடல் தொடங்கிவிட்டது.

பாடப் புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. இப்போது தின மலர் என்னும் நாளிதழை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. ஆனால், அதன் அரசியல் புரியாத அந்தச் சிறுவயதிலேயே சிறுவர் மலர் வாசித்தானா என்பது நினைவில் இல்லை. ஆனால், வாரமலரை வாசித்திருக்கிறான். இப்போது அரைவேக்காட்டுத்தனமாகத் தோன்றும் அந்து மணி பதில்கள் எல்லாம் அப்போது வாசித்திருக்கிறோம் என்பதை நினைத்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
ரத்னபாலா வாசித்தது நினைவில் உள்ளது. புத்தகங்களுக்காகப் பிறர் வீடுகளுக்குச் செல்வதும் அப்போதே தொடங்கியிருக்கிறது. அந்தச் சிற்றூரில் பேருந்து வந்துசெல்லும் ஒரே சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குச் சிறுவயதில் போயிருக்கிறான். ஒரே தூசி மயமாக அந்த வீடு அவனது நினைவில் புரள்கிறது. அதன் நுழைவாயிலின் வளைவுகள் தூசி படிந்து ஒரு புராதனத் தோற்றத்தைக் கொண்டிருக்கும். வாழ்ந்துகெட்ட ஒரு வீட்டுக்கான சாயலை அந்த வீடு கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது. அந்த வீட்டையும் அங்கே வாசித்த புத்தகங்களையும் மனத்தில் முறையாகத் தொகுக்க அவனால் முடியவில்லை. அந்த வீடு தொடர்பான காட்சிகள் துண்டுதுண்டாக வேகவேகமாக மாறிக்கொண்டே வருகின்றன. வெவ்வேறு காட்சிகள் அடுத்தடுத்து இடம்பெறுகின்றன மனத்திரையில்.
உண்மையில் இவையெல்லாம் அவன் கடந்தவந்த பாதையா இல்லை அவனையே அறியாமல் மனம் புனையும் ஒரு புனைவா என்றுகூடத் தோன்றுகிறது. அங்கே ஒரு பெண்மணி சக்கர நாற்காலியில் அங்கும் இங்கும் செல்வார். அந்த வீட்டுக்குப் புத்தகம் வாங்கவே சென்றுள்ளான். அந்த மனிதர்களின் பெயர் எதுவும் நினைவில் இல்லை; அங்கே வாசித்த புத்தகங்கள் நினைவில் இல்லை. ஆனால், அங்கே வாசித்த நினைவை மனம் தக்கவைத்துள்ளது. இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் இப்படியான நினைவுகளுக்காகவா அங்கே சென்றான்? படிக்கும் காலத்தில் எத்தனையோ தகவல்களை நினைவில் தவறவிட்டு மதிப்பெண்களை இழந்திருக்கிறான். மதிப்பெண்களைப் பெற்றுதரவியலாத எத்தனையோ நினைவுகளை மறக்காமல் வைத்திருக்கிறானே? இந்த மடத்தனங்கள் எல்லாம் இல்லாமல் வாழ்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?
மனிதர்களிடம் மனிதர்களை உறவுகொள்ள வைக்கும் மனித நேயம் தான் எழுத்துக்கும் வாசிப்புக்கும் அடிப்படை என்றபோதும், அவனைப் பொறுத்தவரையில் அவனுடைய வாசிப்பு அவனை மனிதரிடமிருந்து அந்நியப்படுத்துகிறதோ என்ற அய்யம் எழும்வேளையில் திடுக்கிட்டு வாசிப்பை நிறுத்திவிடுகிறான். ஆனாலும், வாசிப்பு அவனைக் கைவிடவில்லை. இளைப்பாற ஏதாவது ஓரிடம் தேவைதானே? அப்படியோரிடமாக இன்றுவரை புத்தகங்கள் தானே இருக்கின்றன.
அவன் வேலையில்லாமல் திரிந்த ஒரு காலத்தில் நண்பர் ஒருவர் அவன் கையிலிருந்த புத்தகம் ஒன்றைப் பார்த்துவிட்டு இந்த வெட்டி வேலையை விட்டுவிட்டு ஒரு நல்ல வேலையில் சேரலாமே என்று கேட்டார். அவனுக்கு அவரது கேள்வியின் பொருள் புரிந்தது. ஆனால், அவரது வேண்டுகோளுக்குச் செவிசாய்க்க முடியவில்லை. வாசிப்பது அப்படியொரு குற்றமாகத்தான் இன்னும் தமிழ்ச் சமூகத்தில் பார்க்கப்படுகிறதோ என்னும் அய்யம் இன்றுவரை நீங்கவில்லை. நீங்கள் கைநிறையச் சம்பாதிக்கும் வேலையில் இருந்துவிட்டு வாசித்தால் உங்களைப் பெருமையாகப் பேசுவார்கள். அதே நேரத்தில் வாசிப்பதையே வேலையாக வைத்திருந்தால் உங்களை மனிதராகக்கூடப் பார்க்க மாட்டார்கள்.
இலக்கற்ற வாசிப்பு சரியா தவறா என்ற யோசனைகளைத் தாண்டி அவனது பொழுதுகளை அவையே எடுத்துக்கொள்கின்றன. வாசிப்பதும் குறிப்பு எடுப்பதுமாக இருக்கிறான். அவற்றை எல்லாம் என்ன செய்வான்? அவனிடம் கேட்டால் அவனுக்கும் தெரியாது. ஆனால், அவை ஏதோ ஒரு திருப்தியைத் தருகின்றன என நம்புகிறான். அந்த திருப்தி என்பது அர்த்தமற்ற ஒன்றல்லவா என நீங்கள் சிரிக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் அவற்றை அவன் லட்சியம் செய்வதில்லை. அவனுக்கு அது பிடித்திருக்கிறது அல்லது அது பிடித்திருக்கிறது என நம்புகிறான்.
வாசிப்பதைப் பொறுத்தவரை தேடித் தேடி வாசிப்பதோ ஒரு குறிப்பிட்ட பொருள் கொண்ட புத்தகங்களை மட்டும் வாசிப்பதே என்றோ எந்த வரையறையும் இல்லை. கைக்குக் கிடைத்ததை வாசிப்பான். ஒரு நூலைக் கையிலெடுத்தால் அதை முடித்துவிட்டுத் தான் மறுவேலை என்னும் வழக்கம் அவனிடம் இல்லை. பல நூல்களை ஆர்வத்துடன் வாசிக்க முயன்றும் சில பக்கங்களைக் கடப்பதற்குள் ஆயாசமாகிவிடும். இந்தப் புத்தகத்தை வாசித்து என்ன செய்யப் போகிறோம் எனத் தோன்றிவிடும் அப்படியே மூடிவைத்துவிடுவான். விலையின்றிக் கிடைக்கும் புத்தகங்களைத் தான் வாசிக்க முடிவதில்லையோ என்ற எண்ணத்தில் கூடுமானவரை புத்தகங்களை விலைக்கு வாங்கிப் படிக்கும் வழக்கத்தைப் பின்பற்றலாம் என முடிவுசெய்து அதைச் செயல்படுத்தியும் பார்த்தான். ஆனால், வாசிப்புக்கும் அதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.
ஒரு நல்ல புத்தகம் அதற்குரிய வாசகரைக் கண்டடைந்து தன்னைத் தானே வாசிக்கச் செய்துகொள்ளும் என்றே எண்ணுகிறான். இது அறிவுக்குப் பொருத்தமாக இல்லாத கூற்றாக இருக்கலாம். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இப்படித்தான் வாசித்திருக்கிறான். ஏதோ ஒரு நாட்டில் பிறந்த ஏதோ ஒரு மொழியில் எழுதிய ஓர் எழுத்தாளரின் நாவலைத் தமிழில் வாசித்து லயித்துக் கிடக்கும் அவனை அவன் வசிக்கும் ஊரில் ஓர் எழுத்தாளரின் ஒரு நூல் சென்றடையவில்லை எனும் போது, ஒரு நூலுக்கும் வாசகருக்குமான தூரத்தை எப்படிப் புரிந்துகொள்வது என அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை.
வாசிப்பு அவனது அறியாமையின் பரப்பை அதிகரித்தபடியே செல்கிறது. எல்லாவற்றையும் அறிந்ததுபோல் மமதை கொண்ட ஒரு வேளையில் புரட்டும் ஒரு நூலின் ஒரு வரி உனக்கு ஒரு எழவும் தெரியாது என்பதை மண்டையில் குட்டியபடி சொல்லும். என்றாவது ஒரு நாள் ஒரு நல்ல வரியை எழுதிவிட மாட்டோமா என்ற அங்கலாய்ப்பு அவனுக்கும் உண்டு. உருப்படியாக எதையாவது எழுதலாமே என நண்பர்கள் ஊக்கப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவனுக்குத் தான் உருப்படியாக எழுதுவது என்றால் என்ன என்பது தெரியவில்லை.
எதற்காக எழுத வேண்டும்; வாசிக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு அவனால் விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை; ஆனால் எழுதுவதும் வாசிப்பதும் அவற்றுக்கான விடைகளைத் தேடிக் கண்டடையும் முயற்சி என்பதை நம்பியே அவற்றைத் தொடர்கிறான்...
இந்தப் பதிவை ஏன் வாசித்தோம்... இதைவிட உருப்படியான எதையாவது செய்திருக்கலாமே என்று சலித்துக்கொள்ளும் உங்களை முன்னிருத்தித்தான் இதை எழுதினான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யாரோ ஒரு மனிதன் எங்கேயோ இருந்து எழுதுகிறான்... அதை யாரோ ஒரு மனிதர் எங்கேயோ இருந்து வாசிக்கிறார் என்பதில் மனிதருக்கு இடையே ஓர் அரூப உறவு முகிழ்க்கிறதே அது போதாதா எழுதுவதற்கும் அதை வாசிப்பதற்கும்... (2024 ஏப்ரல் 30 அன்று ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்த பதிவு)

லேட்டஸ்ட்

தவறுகளுக்கு வருந்துகிறோம்...

தொடர்பவர்