வெகுளி வெள்ளச்சாமியோட புரோகிராம் கிண்டலா கேலியாவுக்கு நல்ல டிஆர்பி ரேட்டிங் கிடைக்குதுன்னு எல்லாருமே சொல்றாங்க. வெள்ளைக்கு இதெல்லாம் நம்பவே முடியல. முதலில் வேலை தேடி அலைஞ்ச காலம் கண்ணு முன்னால வரும். ஒரு முறை ஒரு சினிமா கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். ஒரு படத்தோட பூஜை அன்னக்கி வெள்ளப் பூசணியில் நாணயங்கள் போடுறதுக்காக அது மேல கேக் சைஸ்ல வெட்டி எடுத்துட்டு வான்னு வெள்ளைட்ட சொன்னாங்க. வெள்ளக்குப் புத்தி கொஞ்சம் மந்தமா இருந்தாலும், சொன்னத கரெக்டா செய்வான். கேக் மாதிரி வெட்டணும் அவ்வளவு தானேன்னு போன வெள்ள ஒரு தாம்பாளத்தில் பூசணியை வைத்து துண்டு துண்டா கூறு போட்டு டைரக்டர் முன்னால் கொண்டுபோய் பெருமையோட வச்சுட்டான். அங்க நின்ன அத்தனை பேரும் சிரிச்சிட்டாங்க. வெள்ளக்கு எதுவும் வெளங்கல. ஆனா அன்னக்கே அவன வேலையை விட்டுத் துரத்திட்டாங்க.
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2025
கிண்டலா, கேலியா?
வெகுளி வெள்ளச்சாமியோட புரோகிராம் கிண்டலா கேலியாவுக்கு நல்ல டிஆர்பி ரேட்டிங் கிடைக்குதுன்னு எல்லாருமே சொல்றாங்க. வெள்ளைக்கு இதெல்லாம் நம்பவே முடியல. முதலில் வேலை தேடி அலைஞ்ச காலம் கண்ணு முன்னால வரும். ஒரு முறை ஒரு சினிமா கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். ஒரு படத்தோட பூஜை அன்னக்கி வெள்ளப் பூசணியில் நாணயங்கள் போடுறதுக்காக அது மேல கேக் சைஸ்ல வெட்டி எடுத்துட்டு வான்னு வெள்ளைட்ட சொன்னாங்க. வெள்ளக்குப் புத்தி கொஞ்சம் மந்தமா இருந்தாலும், சொன்னத கரெக்டா செய்வான். கேக் மாதிரி வெட்டணும் அவ்வளவு தானேன்னு போன வெள்ள ஒரு தாம்பாளத்தில் பூசணியை வைத்து துண்டு துண்டா கூறு போட்டு டைரக்டர் முன்னால் கொண்டுபோய் பெருமையோட வச்சுட்டான். அங்க நின்ன அத்தனை பேரும் சிரிச்சிட்டாங்க. வெள்ளக்கு எதுவும் வெளங்கல. ஆனா அன்னக்கே அவன வேலையை விட்டுத் துரத்திட்டாங்க.
வியாழன், ஆகஸ்ட் 28, 2025
இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?
ரயில் திரிசூலத்தைக் கடந்த நேரத்தில் அந்தப் பெரியவர் அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.
“நீங்க ரயில்வேல வேலை பாக்குறீங்களா?”
அவன் தலையை மறுத்து ஆட்டியபடியே, “இல்லையே” என்றான்.
“ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் வச்சிருக்கீங்களா” எனும் அடுத்த கேள்வியை எறிந்தார்.
அப்போது, அவன் அவரைக் கூர்ந்து கவனித்தான். அவரது முதுகுச் சட்டையை மீறி நூலைக் காண வழியில்லை. ஆனால், பிடரியில் சிறிய அளவில் தென்பட்ட குதிரை வால் போன்ற மயிர்க் கற்றையைக் காண முடிந்தது. அவர் இன்னார் என்பதை உணர்ந்துகொண்டதால் சிறு திருவிளையாடலை நடத்த விரும்பினான்.
“நீங்க யாரு, உங்ககிட்ட நான் டிக்கெட் எடுத்தேனா இல்லையான்னு ஏன் சொல்லணும்?”
“நான் சாதாரணமாத்தான கேட்கிறேன், ஏன் கோபப்படுறீங்க?”
“நான் கோபப்படலைங்க... சாதாரணமாத்தான் சொல்றேன்... உங்ககிட்ட ஏன் நான் டிக்கெட்டைக் காட்டணும்?” மூஞ்சியில் புன்னகை தவழச் சொன்னான்.
அவனது பேச்சால் அவருக்கு எரிச்சலும் கோவமும் ஏற்பட்டிருக்க வேண்டும்.
“டிக்கெட் எடுத்தீங்களா?” அதிகாரத் தொனியில் வாலிமீது ராமன் அம்பெய்தது போல் கேள்வியை வீசினார்.
அவன் சிரித்துக்கொண்டே, “இல்லை” என்று உதட்டைப் பிதுக்கிக் காட்டினான்.
“டிக்கெட் எடுக்கல... ஃப்ர்ஸ்ட் கிளாஸ்ல போறீங்க... வாழ்க வளமுடன்” என்று வஞ்சகப் புகழ்ச்சியில் வாழ்த்தியபடி குரோம்பேட்டையில் இறங்கிச் சென்றார்.
அந்த மனிதர் அவன் உள்ளத்தைச் சோற்றகப்பை போல் கிளறிவிட்டார். அவன் மனதில் தந்தை பெரியார் விஸ்வரூபமெடுத்தார். அந்தப் பெரியவர் சின்னதொரு கடுகு போல உள்ளங்கொண்ட மனிதராகத் தோற்றம் கொண்டார். இது நடந்தது 2025இல் எனில், 1925இல் நிலைமை எப்படி இருந்திருக்கும்?
பெரியார் ஏன் கைத்தடியைக் கடுங்கோவத்துடன் சுழற்றினார் என்பது புரிகிறதா? இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறான்னு யாராவது சொல்லத்தான் செய்றாங்க. ஆனால், யதார்த்தம் வேறு மாதிரியாகத்தானே உள்ளது.
செவ்வாய், ஆகஸ்ட் 26, 2025
இங்கேயும் ஒரு கங்கை
இத்திரைப்படம் 1984 ஆகஸ்டு 10 அன்று வெளியாகியுள்ளது. அன்றுதான் தாத்தா இறந்த நாள். அந்த ஆண்டு தேர்தல் டிசம்பர் 24 அன்று நடைபெற்றுள்ளது. தேர்தலின்போது, திமுக சார்பில் அச்சிடப்பட்டிருந்த, நண்பரின் நலிவு நீங்கிட நலமார்ந்த வாழ்த்துகள், நாட்டின் நலிவு நீங்கிட உதயசூரியனுக்கு வாக்குகள் என்னும் வாசகங்களைக் கொண்ட, சுவரோட்டியை இலஞ்சியின் சுவர்களில் பார்த்துள்ளேன். எம்ஜிஆரும் கலைஞரும் அருகருகே இருப்பது போன்ற படம் போட்டு அந்தச் சுவரொட்டி அச்சிடப்பட்டிருந்தது. இது குறித்து 2014இல் ஒரு பதிவிட்டுள்ளேன்.
தேர்தல் முடிவுகள் டிசம்பர் 28 அன்று வெளியாகியுள்ளன. அன்றைய மாலை நாளிதழைத்தான் நான் பார்த்திருக்க வேண்டும். கணக்குப்படி பார்த்தால் அப்போது நான் ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் படம் பார்க்கப் போயிருக்கிறேன். சரி இனி படம் குறித்த விஷயத்திற்கு வருவோம்.
படத்தின் கதை, வசனம், பி.கலைமணி. மணிவண்ணன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஒரு வில்லை வளச்சு வச்ச புருவமோ பாடல் காட்சியை முன்னர் பார்த்த நினைவு அப்படியே பசுமரத்தாணி போல் உள்ளது. இப்படத்தின் சோலை புஷ்பங்களே பாடல் அப்போது, இலங்கை வானொலியில் நீண்ட நாள்களாக முதலிடம் பிடித்த பாடலாக இருந்தது. நேயர்களின் வாக்குகள் அடிப்படையில் டாப் டென் பாடல்கள் போல ஒரு வரிசையில் பாடல்கள் ஒலிபரப்பப்படும். அதில் இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது. பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். பி.சுசிலாவும் கங்கை அமரனும் பாடியுள்ளனர்.
இப்போது படத்தைப் பார்த்தபோது, சில காட்சிகள் மனத்தில் பதிந்திருந்ததை உணர முடிந்தது. குறிப்பாக, நடிகர் சந்திரசேகர் கையில் ஊன்றுகோலுடன் சண்டையிடும் காட்சி; நடிகை தாராவின் பின்னர் வாத்துகள் போகும் காட்சி... இவை ஓரிரு எடுத்துக்காட்டுகள்.
படம் இப்போது பார்க்கவும் சுவாரசியமாகத்தான் இருந்தது. உணர்வுபூர்வமான திரைக்கதை. மனசவிட மாங்கல்யத்தை முக்கியமா நெனைக்கிற தலைமுறை உள்ளிட்ட வசனங்கள் கலைமணியின் எழுத்துத் திறமையைக் காட்டுகின்றன. படத்தை இயக்கிய வகையில் மணிவண்ணனின் முத்திரையைப் பார்க்க முடிகிறது. படத்தில் வேண்டுதல் தொடர்பான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்தக் கோவிலில் மனதார வேண்டிக்கொண்டு அதை ஒரு காகிதத்தில் எழுதி அங்கே உள்ள மரத்தில் கட்டித் தொங்கவிட்டால் அது அப்படியே நிறைவேறும் என்பது நம்பிக்கை. அங்கே படத்தின் நாயகனும், நாயகியும் ஒரு காரியத்தை எண்ணித் தனித் தனியே வேண்டிக்கொள்வார்கள். ஆனால், அந்த இரண்டுமே பலிக்க மாட்டா.
முரளி, தாரா, வினுச்சக்ரவர்த்தி, ஒய்.விஜயா, காந்திமதி, செந்தில், ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கோணக் காதல் கதைதான். ஆனால், காதல் கைகூடாவிட்டாலும் கவலைப்பட ஏதுமில்லை. வாழ்க்கை காதலைவிட மிகவும் பெரியது என்பதை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், ஆகஸ்ட் 19, 2025
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சில குறிப்புகள்
பாஜக அரசியல் ஆளுமையை வேட்பாளராக நிறுத்தியுள்ளது எனில், இந்தியா கூட்டணி அரசியலில் ஈடுபடாத ஒருவரை வேட்பாளராகக் கொண்டுவந்துள்ளது. எப்படியும் வெற்றிபெறப் போவது சி.பி.ராதாகிருஷ்ணன் தான் எனும்போது, அரசியல் சாராத ஒருவரை நிறுத்தியிருப்பதன் மூலம் இந்தியா கூட்டணி சரியாகவே நகர்ந்துள்ளது.
1998 நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் 4,49,269 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரான கே.ஆர். சுப்பையனை 1,44,676 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டவர். என்னடா, பாஜக அவ்வளவு வாக்குகளை எப்படிப் பெற்றது என அதிசயிக்காதீர்கள். அந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது பாஜக. அடுத்த தேர்தலில் அதாவது 1999 நாடாளுமன்றத் தேர்தலில் அதே கோயம்புத்தூரில் சி.பி.ராதா கிருஷ்ணன் 4,30,068 வாக்குகளைப் பெற்று, அவரை அடுத்த வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ஆர். நல்லகண்ணுவைவிட 54,077 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றிருந்தார்.
மீண்டும் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன் 1,64,505 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதா கிருஷ்ணனைத் தோற்கடித்தார். அந்தத் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகள் 3,40,476. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 3,88,911 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். 2019 ஆம் ஆண்டும் கோயம்புத்தூர் தொகுதியிலேயே போட்டியிட்டார் சி.பி.ராதாகிருஷ்ணன். அப்போது அவர் 3,92,007 வாக்குகள் பெற்று வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டார்.
2023 ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அப்போது, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களையும் கூடுதல் பொறுப்பாக அவர் கவனித்துக்கொண்டார். அதன் பிறகு மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.
ஜூலை 21 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் உடல்நலக் காரணங்களைக் கூறி குடியரசு துணைத் தலைவராகவிருந்த ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானது.வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்டு 21. வேட்பாளர்கள் ஆகஸ்டு 25 வரை தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது. வாக்குகள் அன்றே எண்ணப்படும்.
பாஜகவின் அரசியல் நாடகம் வெற்றிபெறாது
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக முன்னிருத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஆகஸ்டு 18 அன்று வெளியானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை அதுவும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஒரு நெருக்கடியைத் தரலாம் என பாஜக நினைக்கிறது.
வழக்கம்போல் பாஜக நடத்தும் அதே அரசியல் நாடகம்தான் இது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நிறுத்துவதால் திமுக அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என பாஜக கோருகிறது. ஆனால், அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரரான ராதாகிருஷ்ணன் திராவிட சித்தாந்தத்துக்கு எதிரானவர்.
மேலும், ஒருவர் தமிழர் என்பதற்காகவே அவரை ஆதரிக்க இயலுமா? அவர் தமிழ்நாட்டுக்கு என்ன செய்வார்? திராவிட சித்தாந்தம் குறித்த அவரது அணுகுமுறை என்ன? புரிதல் என்ன? என்பவற்றை ஆழ்ந்து பரிசீலித்துத்தானே முடிவெடிக்க இயலும்.
திராவிட சித்தாந்த புரிதல் உள்ள எந்தத் தமிழரும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திமுக சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என நினைக்க மாட்டார். கொங்குப் பகுதியின் வாங்குவங்கிக்கான கணக்காகவே பாஜக சிபிஆரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது என்பதை அரசியலில் அடிப்படை அறிவு உள்ள எவரும் புரிந்துகொள்ள முடியும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி சிவா இந்தியா கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் வதந்தி ஒன்று நேற்று முதலே சமூக ஊடகங்களில் உலவுகிறது. அப்படி அவர் நிறுத்தப்பட்டால் அது சரியான நகர்வாகவே இருக்கும். தமிழர் என்பதால் ராதாகிருஷ்ணனை ஆதரிக்கக் கோரும் பாஜக அப்போது எதுவும் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். பாஜக வேட்பாளரைத் தவிர்ப்பதற்கு ஒரு நியாயமான காரணம் திமுகவுக்குக் கிடைத்துவிடும்.
ஒரு வேளை அப்படி இல்லாத பட்சத்திலும் இந்தியா கூட்டணியின் சார்பில் வேறு ஒரு வேட்பாளரே நிறுத்தப்படும் பட்சத்திலும் திமுக ராதாகிருஷ்ணனை ஆதரிக்காமல் தவிர்ப்பதே தமிழ்நாட்டு நலனுக்கு நல்லது.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப்போன ஒருவரால் ஒருபோதும் தமிழ்நாட்டுக்கு எந்த நல்லதும் நடைபெறப்போவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வாகப் போவதால் தமிழ்நாட்டுக்கு அதனால் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.