இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

குங்பூ பாண்டா 3: கரடியின் தொடரும் அதிரடி!

(தி இந்துவில் 26.02.2016 அன்று வெளியானது)


‘குங்பூ பாண்டா’ அனிமேஷன் படம் 2008-ல் வெளியானது. உடல் பருத்த போ என்னும் பாண்டா கரடியின் வீர சாகச அட்டகாசம் உலகமெங்கும் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் வாரிக்குவித்தது. இதைத் தொடர்ந்து ‘குங்பூ பாண்டா-2’ திரைப்படம் 2012-ல் வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த ‘குங்பூ பாண்டா’ வரிசைப் படங்களில் மூன்றாம் படமான ‘குங்பூ பாண்டா-3’ அமெரிக்காவிலும் சீனாவிலும் ஜனவரி 23 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதிலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ள விலங்குகளின் சாகசக் காட்சிகள் நம்ப முடியாத வகையிலான அதிசய உலகத்தை நமது கண் முன்னே கொண்டுவருகின்றன. ஜனவரி 19 அன்று வெளியான இந்தப் படத்தின் டிரெயிலரே நம்மை மெய்மறக்கச் செய்கிறது. இதுவரை இந்த டிரெயிலரை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கவரக்கூடிய வகையிலேயே இந்த ‘குங்பூ பாண்டா’ படமும் இருக்கிறது. ஜோனாதன் ராபர்ட் எய்பெல், கிளன் பெர்கர் ஆகியோர் திரைக்கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தை ஜெனிபர் யூ நெல்சன் அலெஸாண்ட்ரோ கர்லானி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். ‘குங்பூ பாண்டா-3’ படத்துக்கு ஜேக் ப்ளாக், ப்ரயான் க்ரான்ஸ்டன், டஸ்டின் காஃப்மேன் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

தன் இனத்தில் தான்தான் கடைசி வாரிசு என நம்பும் பாண்டா கரடியான போ, தன் தந்தையைக் கண்டுபிடிக்கிறது. பாண்டாவின் பூர்விகக் கிராமத்துக்குப் போவை அழைத்துச் செல்கிறார் தந்தை. அப்போது போவும் அதன் நண்பர்களும் பாதுகாத்துவந்த அமைதிப் பள்ளத்தாக்கு, எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகிறது. தப்பிப் பிழைத்த போர் வீரர்கள் போவைத் தேடிச் செல்கிறார்கள் என்று போகிறது கதை.

ஏற்கெனவே வெளியான ‘குங்பூ பாண்டா’ படங்களைப் போலவே இந்தப் படமும் முழுப் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். 145 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கலக்கலான கிராஃபிக்ஸ் காட்சிகளை 3 டி எஃபக்டில் உருவாக்கியிருக்கிறார்கள். ட்ரீம்வொர்க்ஸ் அனிமேஷன் நிறுவனமும், ஓரியண்டல் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றன. ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் படத்தை விநியோகிக்கிறது. இந்தியாவில் இந்தப் படம் மார்ச் 10 அன்று வெளியாகவிருக்கிறது. அனிமேஷன் பட ரசிகர்கள் தவறவிட மாட்டார்கள் என்பதை ட்ரைலரே உறுதிசெய்கிறது.

திங்கள், பிப்ரவரி 22, 2016

இடமோ சிறுசு, இல்லமோ பெருசு

(2016 பிப்ரவரி 21 அன்று தி இந்துவில் வெளியானது)


நகரத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோரின் பிரச்சினை வீடு சார்ந்ததாகவே இருக்கிறது. வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை வாடகையாகக் கொடுத்தும் நிம்மதியாக வசிக்க வழியில்லை என்ற வருத்தத்தைப் பலரும் வெளிப்படுத்துகிறார்கள். புறாக் கூண்டு போன்ற அபார்ட்மெண்ட்களை விலை கொடுத்து வாங்குவதே பெரும் போராட்டமாக இருக்கிறதே என்ற முணுமுணுப்புகள் எழுந்துகொண்டேயிருக்கின்றன. குறைந்த இடத்தில் பார்ப்பதற்கும் வசிப்பதற்கும் போதுமான அளவில் வீடு கிடைத்தால் பெரிய வரம் என்ற நினைப்பு எழாதவர்கள் இருக்க இயலாது. இந்த எதிர்பார்ப்பை உணர்ந்து கட்டுநர்களும் முடிந்த அளவில் குறைந்த இடத்தில் போதுமான வசதியை அளிக்க முயன்றுவருகிறார்கள். ஆனால் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அவ்வளவு எளிதில் பூர்த்திசெய்துவிட முடியாது.

உலகமெங்கிலும் நகரப் பகுதியில் குறைந்த இடத்தில் வசதியான வீடு என்னும் தேவை பெருகிக்கொண்டே இருக்கிறது. வீட்டுத் திட்டங்களை வடிவமைக்கும் வடிவமைப்பாளர்களும் தங்கள் அறிவைக் கூர்தீட்டி புதுமையான முறையில் நவீனமாக வீடுகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறார்கள். ரஷ்யாவைச் சேர்ந்த கான்ஸ்டண்டின் எண்டலேசிவ் என்னும் விஷுவலைஸர் வீட்டின் உள்ளலங்காரத்தில் புதுமையான உத்திகளைப் பிரயோகித்துவருகிறார். 400 சதுர மீட்டர் பரப்புக்குள் அடங்கும் வீடுகளையே மிகவும் விசாலமானதாகக் காட்டும் வகையில் அமைத்துவிடுகிறார் அவர்.

அவர் கட்டிய மொத்தமே 344 சதுர அடி பரப்பு கொண்ட ஒரு வீட்டில் ஹாலிலேயே படுக்கையறை அமைந்திருக்கிறது. ஆனால் படுக்கையறைக்குக் கண்ணாடிச் சுவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். பார்ப்பதற்கு அது தனியான அறையாகத் தெரியாமல் ஒட்டுமொத்தமாகப் பெரிய அறையாகத் தெரியும். ஆனால் படுக்கையறையும் தனியாக அமைந்திருக்கும். சிறிய உத்திதான் ஆனால் நம் கண்ணே நம்மை ஏமாற்றிவிடும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக அதை அமைத்துவிடுகிறார்.

வசீகரமான இரண்டு நாற்காலிகள் ஒரு சிறிய டைனிங் டேபிள் ஆகியவற்றைப் போட்டு மனங்கவரும் ஒரு டைனிங் ஏரியாவை உருவாக்கிவிடுகிறார். அந்த டைனிங் அமைப்பே விருந்தினர்களை எளிதாகக் கவர்ந்திழுத்துவிடும். மிகவும் ஒடுங்கிய சமையலறையில் இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தி அவை மிகவும் திறந்தவெளியில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறார். அதிக இடம் இல்லாவிட்டால்கூட சமையலறையில் ஒரு அமைதி எப்போதும் இருப்பது போன்று இது தோற்றம்கொள்கிறது.

மிகச் சிறிய குளியலறையில் அவர் வெள்ளை மார்பிள்களைக் கொண்டு இழைத்துவிடுகிறார். ஆகவே அந்தச் சிறிய குளியலறையே மிகவும் ஆடம்பரமான ஒன்றாக நம்மை எண்ணவைத்துவிடுகிறது. அந்தக் குளியலறையின் ஒரு மூலையில் செல்லம் போல் ஒரு ஷவர். அதைக் கண்ணாடிச் சுவர்களை வைத்து மறைத்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது அறைக் குளியலே ஆனந்தக் குளியலாகத் தோன்றிவிடும். அந்த அளவு வசீகரமாக அதை அமைத்திருக்கிறார். மிகவும் சிறிய இடம் என்பதால் அதை எளிதில் சுத்தப்படுத்தலாம். ஆக, குளியலறை எப்போதும் சுத்தமாகவும் அழகாகவும் காட்சி தரும்.

அடிப்படைத் திட்டத்தைப் பெரிதும் மாற்றாமல் அழகிய, ஆடம்பர, அறைக் கலன்களையும், சுவரின் வண்ணங்களையும் மாற்றி அல்ட்ரா மாடர்ன் தோற்றத்தில் மற்றொரு வீட்டையும் உருவாக்கியிருக்கிறார். அவரது செயல்திட்டம் ஒன்று தான். மிகச் சிறிய இடத்தில் கண்ணுக்கு அழகான வசிப்பதற்கு வாகான வீட்டை அமைக்க வேண்டும் என்பதுதான். குறைந்த இட வசதி வீடு எப்படிக் கட்டுவது என யோசிப்பவர்கள் இதைப் போன்ற நிபுணர்களின் உத்தியைப் பின்பற்றினால் சிறப்பான வீட்டை அமைத்துவிடலாம்.

சேதுபதி

சேதுபதி (விஜய் சேதுபதி) நேர்மையான இன்ஸ்பெக்டர். அழகான மனைவி (ரம்யா நம்பீசன்) அன்பான குழந்தைகள் என சராசரியான குடும்பம் அவருடையது. அவரது காவல் நிலைய எல்லைக்குள் சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் சரமாரியாக வெட்டிக் கொளுத்தப்படுகிறார். இந்த வழக்கைத் துப்பு துலக்கும்போது அதன் பின்னணியில் வாத்தியார் என்ற பெரிய மனிதர் இருப்பது தெரியவருகிறது. வாத்தியாரின் குடும்ப பிரச்சினை காரணமாக அவருடைய மருமகனுக்குப் பதில் சுப்புராஜ் கொல்லப்பட்டதை சேதுபதி கண்டுபிடிக்கிறார். இது தொடர்பாக சேதுபதிக்கும் வாத்தியாருக்கும் மோதல் உருவாகிறது. இந்த மோதலின் காரணமாக சேதுபதி வேலையைத் தற்காலிகமாக இழக்கிறார். மீண்டும் சேதுபதி வேலையில் சேர்ந்தாரா, வாத்தியார்தான் வென்றாரா என்பதை விவரித்துச் செல்கிறது சேதுபதி.

சேதுபதி அடர்த்தியான முறுக்கு மீசையுடன் ஆண்மைமிக்க தோற்றம் காட்டி நேர்மைத் திமிர் கொண்ட போலீசாக வலம் வருகிறார். அடிக்கடி மீசையை வீரத்துடன் தடவிவிட்டுக்கொள்கிறார். குடும்பத்தில் மனைவியுடன் குறும்பில் ஈடுபட்டு குண்டாத்தி எனப் பிரியத்துடன் கொஞ்சும் ஆசைக் கணவனாகவும், குழந்தைகளுடன் சரிக்குச் சரி விளையாடும் பாசத் தந்தையாகவும் இருக்கும் விஜய் சேதுபதி  காவல் நிலையத்திலோ டெரரான இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அந்தந்த நேரத்தில் அந்தந்த மனிதராக மாறிவிடுகிறார். கணவனையும் குழந்தைகளையும் உலகமாகக் கருதும் சராசரியான நடுத்தரவர்க்க மனைவி வேடம் ரம்யா நம்பீசனுக்கு. அதில் அவர் அழகுடன் பொருந்திப்போகிறார். சின்ன சின்ன ஊடல் காட்டி வசீகரிக்கிறார்.

வாத்தியாராக வரும் வேல ராமமூர்த்தி ஊருக்குப் பெரிய மனிதர். ஆனால் தன் வழியில் யாராவது குறுக்கிட்டாலோ எந்த நிலைக்கும் கீழிறங்கி எதிரிகளைப் பந்தாடும் தாதாவாக வந்துசெல்கிறார்.

எந்தப் புதுமையும் இல்லாத பழைய கதை என்பதால் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காகத் திரைக்கதையில் சில திருப்பங்களைச் சேர்த்திருக்கிறார்கள். அவற்றுக்குத் திரையரங்கில் பெரிய வரவேற்பும் கிடைக்கிறது. மிரட்டலான போலீஸ் அதிகாரியாக சேதுபதி அறிமுகமாகும் காட்சி, வாத்தியாரைப் பயமுறுத்தும் விதத்தில் வரும் சேதுபதி அவரை எதுவுமே செய்யாமல் விட்டுவிட்டுச் செல்லும் காட்சி, மேலும் விசாரணை கமிஷன் முன்பு காவலர் பொய் சொல்வதும் அதன் பின்னணிக் காட்சிகளும் ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்தின் தேவையைப் பூர்த்திசெய்திருக்கிறது. ஸ்ரீகர்பிரசாத்தின் எடிட்டிங் திரைக்கதையில் வேகத்துக்கு உதவியுள்ளது. பல இடங்களில் காட்சிகளின் உணர்வை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பின்னணியிசை நெளியவைக்கிறது. மிரட்டலான போலீஸ் கதைப் படம் என்றாலும் இவ்வளவு பயங்கரமான இசையா என எண்ணவைக்கிறது. பாடல்கள் எவையும் படத்துடன் ஒன்றவேயில்லை. திரைக்கதையின் வேகத்துக்குத் தடையாகவே பாடல்கள் அமைந்துள்ளன. சேதுபதி வீட்டில் இல்லாத வேளையில் வாத்தியாரின் ஆட்கள் அவருடைய வீட்டுக்கு வந்து மிரட்டும் காட்சியில் சின்னப் பையன் துப்பாக்கியால் சுட்டு ஆட்கள் பயந்து ஓடுவது திரைக்கதையில் வித்தியாசமாக இருந்தாலும் நம்ப முடியவில்லை.

சேதுபதி சஸ்பெண்ட் ஆன பின்னர் கதையில் பெரிய சம்பவங்கள் எவையுமே இல்லை. சின்ன சின்ன திருப்பங்கள் மூலமாக மட்டும் கதை நகர்வதால் திரைக்கதை சிறிது தளர்ந்துவிடுகிறது. விசாரணை என்ற பெயரில் நான்கைந்து பேரை சேதுபதி சுட்டு வீழ்த்துவது கேள்விக்குள்ளாகவில்லை. ஆனால் அவரது காவல் நிலையத்தில் அவரது துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டால் மாணவன் காயம்படுவது அவ்வளவு பெரிய விஷயமாகிவிடுகிறது. இது திரைக்கதையில் பெரிய அபத்தம். மொத்தத்தில் இயக்குநர் அருண் குமாரின் சேதுபதி ரசிகர்களின் நினைவில் நிற்கும் போலீசாக இல்லை என்றாலும் சேதாரமில்லாமல் தப்பிவிட்டான்.

ஞாயிறு, பிப்ரவரி 21, 2016

இயேசுவின் பால்ய காலம்!

(2016 பிப்ரவரி 19 அன்று தி இந்துவில் வெளியானது)


இயேசுவின் வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த திரைப்படங்களுக்கு உலகெங்கிலும் பெரும் வரவேற்பு எப்போதுமே இருக்கிறது. இந்த வரவேற்பை அவ்வப்போது ஹாலிவுட் அறுவடை செய்துகொள்கிறது. அந்த வகையில் இயேசு பற்றிய புதிய ஹாலிவுட் திரைப்படம் ஒன்று மார்ச் 11 அன்று வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஏழு வயதான இயேசு மிகப் பெரிய ஆன்மிக ஆளுமையாக உருவானது வரையான சம்பவங்களின் சித்திரிப்புகள் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. ‘த யங் மெஸையா’ என்னும் பெயர் கொண்ட இந்த ஹாலிவுட் படம் ஆன் ரைஸ் (Anne Rice) என்னும் எழுத்தாளரின் ‘கிறிஸ்ட் த லார்டு: அவுட் ஆஃப் ஈஜிப்ட்’ என்னும் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இயேசுவின் ஏழு வயதில் அவரது குடும்பம் எகிப்திலிருந்து மீண்டும் நாசரேத்துக்கு வந்த பின்னர் இயேசு எதிர்கொண்ட சம்பவங்களின் புனைவுக் காட்சிகள் திரைக்கதையாக்கப்பட்டுள்ளன. தனது பிறப்பு குறித்த மர்மத்தை அறிய இயேசு விருப்பம் கொள்கிறார். பரலோகப் பிதாவின் மகனாக இயேசு இருந்தபோதும் பிற குழந்தைகளிலிலிருந்து அவர் எப்படி மாறுபட்டார், அவரது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட போராட்டங்கள், தனது படைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளுதல் எனப் படத்தின் பயணம் அமைகிறது.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி, ‘த பாத் ஆஃப் 9/11’ என்னும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சைரஸ் நௌராஸ்டேக் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். குழந்தைப் பருவம் முதல் பருவ வயதுவரை இயேசு கொண்டிருந்த இறை நம்பிக்கையைப் பரிசுத்த வேதாகமம் எப்படிச் சித்தரிக்கிறதோ அப்படியே யதார்த்தமாக இந்தப் படமும் சித்தரிப்பதாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இயேசுவின் கதையைப் புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் தங்கள் முயற்சிக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்றும் இயக்குநர் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆடம் கிரீவ்ஸ் நீல், சீன் பீன், டேவிட் ப்ராட்லி உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ‘த பேஷன் ஆஃப் ஜீசஸ் கிறைஸ்ட்’ திரைப்படத்துக்கு இசையமைத்த ஜான் டெப்னி இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ஜோயல் ரான்சம் எனும் ஒளிப்பதிவாளர். இயேசுவின் குழந்தைப் பருவம் முதல் பருவ வயது வரையான வாழ்க்கைப் பாதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும் அது அதிகமாகத் திரையில் வெளிப்படவில்லை என்பதாலும் இந்தப் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

திங்கள், பிப்ரவரி 15, 2016

மயக்கும் மாடுலர் கிச்சன்கள்


வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாய்க்கு ருசியாக உணவளிப்பதை நாம் விரும்பிச் செய்வோம். நமது விருந்தோம்பல் மீது நமக்கு அதிக அளவிலான பெருமிதம் உண்டு. விருந்துக்கு அடிப்படையான உணவைச் சமைக்கும் சமையலறையும் நமது வீட்டின் முக்கியப் பகுதி. ஒரு வீட்டின் சமையலறை எப்படிப் பராமரிக்கப்படுகிறது என்பது நமது பண்பாட்டு நடவடிக்கைகளில் மிகவும் முக்கியத்துவத்துடன் கவனிக்கப்படும். சமையலறை சரிவரப் பேணப்படாத வீடுகளுக்குச் சமூகத்தில் பெரிய மதிப்பு கிடைக்காது.

பாரம்பரியமான வீடுகளின் அமைப்பே மாறிவருவதால் நமது பாரம்பரிய சமையலறைகளும் கால ஓட்டத்தில் தமக்குரிய அடையாளத்தை மாற்றிக்கொண்டுவருகிறது. நவீனத்தை நோக்கிச் சமூகம் நகரும்போது இதைப் போன்ற புற அடையாளங்கள் மாறிக்கொண்டே வருவதைத் தவிர்க்க முடியாது. இப்போது அமைக்கப்படும் நமது வீடுகளில் நவீன சமையலறைகள் அமைக்கப்படுவதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

அஞ்சறைப் பெட்டிகளும் மட்பாண்டங்களும் நிறைந்திருந்த பாரம்பரிய சமையலறைகளை இப்போது பார்க்க விரும்பினால் அருங்காட்சியகம்தான் செல்ல வேண்டும். நவீன சமையலறைகளில் புகைகூடப் படிவதில்லை. சமையற்கட்டின் சுவிட்சு போர்டுகளில் புகையும் எண்ணெய்ப் பிசுக்கும் படிந்து என்ன நிறத்தில் அமைக்கப்பட்ட போர்டும் கறுப்பு நிறத்துக்கு மாறிவிடும் என்ற கவலை இல்லை. நவீன சமையலறை வடிவமைப்பு குறைந்த இடத்தில் பல வசதிகளை வாரி வழங்கும் வகையில் அமைக்கப்படுகிறது. சமையலறையை மிகப் பெரிதாக அமைக்க வேண்டிய அவசியம் நவீன சமையலறைகளில் இல்லவே இல்லை. குறைவான இடத்தில் தேவையான அலமாரிகளை வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ள முடிகிறது. மேலும் சமையலறையின் தோற்றமும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக அமைந்துவிடுகிறது.

சமையலறையின் மேடை மிகவும் வசீகரமாக அமைக்கப்படுகிறது. மேடையிலேயே சமையல் எரிவாயு அடுப்பானது பதிக்கப்படுகிறது. மேடையில் மீது துறுத்திக்கொண்டு அடுப்பு அமையாமல் அடக்க ஒடுக்கமாக, பார்வைக்குப் பாந்தமாக அது அமைந்துவிடுகிறது. அதன் மீது அமைக்கப்படும் நவீன புகைபோக்கி புகையைச் சமையலறையிலிருந்து நாசூக்காக அப்புறப்படுத்திவிடுகிறது. நவீன புகைபோக்கி, அடுப்புக்கு மேலேயே அமைக்கப்படுவதால் சமையலின்போது ஆவியாகும் எண்ணெய்ப் புகையும், சப்பாத்தி போன்ற உணவைத் தயாரிக்கும்போது ஏற்படும் புகையும் அப்படியே மேலுக்குச் சென்று வீட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டுவிடுகிறது. இதனால் சமையலறையில் புழங்குவோர் கண் எரிச்சலின்றி, தும்மலின்றி நிம்மதியாக வேலை செய்ய முடியும்.

சமையல் மேடையின் கீழே உள்ள இடத்தை அழகாக மரப் பலகைகளால் அழகுபடுத்தி விதவிதமான இழுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. சமையலுக்குத் தேவையான உப்பு, புளி, மிளகாய் போன்ற சமையல் பொருள்களும் காய்கறிகளும் வைப்பதற்கு அவசியமான அலமாரிகள் உள்ளடங்கி அமைக்கப்படுகின்றன. சமையல் பாத்திரங்களை வைப்பதற்கும் இதிலேயே இடம் கிடைத்துவிடுகிறது. சமையல் கருவிகளான மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோவேவ் அவன் போன்றவற்றை எல்லாம் அழகாக வைப்பதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விடுகின்றன.

இப்படிச் சமையலுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் மிகவும் நவீன முறையில் அமைத்துவிடுவதால் பாரம்பரியமான சமையலறை போன்று சமையலுக்குப் பின்னர் சமையலறையைச் சுத்தப்படுத்தும் பெரும் பணியை மிக எளிதாகச் செய்துவிட முடிகிறது. பாத்திரங்களைக் கழுவுவதற்கு மேடையில் ஓரத்திலேயே கழுவு தொட்டி அமைத்துவிடுகிறார்கள். அவ்வப்போது சமையல் வேலைகளுக்கிடையே பாத்திரங்களைக் கழுவி அதனதன் இடத்தில் இருத்திவிட்டு இயல்பாகப் பிற வேலைகளைக் கவனிக்க இயலும்.

இத்தகைய நவீன சமையலறைகளை உங்கள் பொருளாதார வசதிக்கேற்ப விதவிதமாக அமைத்துக்கொள்ள முடியும். விதவிதமான வண்ணங்களில் கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும் வகையில் அமைவதா சிறந்த சமையலறை? அது பார்ப்பதற்கு அழகாகவும் சுத்தமாகவும் இருந்தால் மட்டும் போதுமா? சமையல் வேலைகளை எளிதில் செய்யும் வகையில் அமைந்திருப்பது அவசியம் அல்லவா? அப்படியான நவீன சமையலறையைத் தகுந்த நிபுணர்கள் கொண்டு அமைக்க வேண்டும். செலவு சிறிது அதிகம் ஆகும் என்றாலும் அதன் வசதிகளைக் கருத்தில் கொண்டு பொருளாதாரம் ஒத்துழைத்தால் நவீன சமையலறையை அமைத்துக்கொள்ளலாம்.

பிப்ரவரி 13 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, பிப்ரவரி 14, 2016

விலங்குகளுக்காக ஒரு மாநகரம்!



ஹாலிவுட்டின் அனிமேஷன் படங்கள் உலகெங்கும் வரவேற்பைப் பெற்றவை. அதிலும் வால்ட் டிஸ்னியின் தயாரிப்பு என்றால் கேட்கவே வேண்டாம். குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திழுக்க வல்ல அனிமேஷன் படங்களைத் தயாரிப்பதில் மன்னர்கள் அவர்கள். அந்த வரிசையில் வெளிவர இருப்பதுதான் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸின் பிரம்மாண்ட 3 டி அனிமேஷன் படமான ஸூடோபியா (Zootopia).

இந்தப் படத்தில் விலங்குகளான ஒரு நகரம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஸூடோபியா என்னும் இந்த நகரத்தைப் போன்ற ஒரு நகரத்தை நீங்கள் வேறெங்கும் பார்க்க முடியாது. குளு குளு என்ற இந்த நகரத்தில் எந்தச் சூழலிலிருந்து வரும் விலங்கும் தங்க இயலும். பெரிய விலங்கு சிறிய விலங்கு என்ற பேதமற்று அனைத்தும் ஒன்றாக வசிக்கும் சூழல் இங்கு உள்ளது. மனிதர்கள் வசிக்கும் நகரத்தைப் போன்றே இந்த நகரத்திலும் காவல்துறை துறை உண்டு. காவல்துறை துறை அதிகாரியான ஜுடி ஹாப்ஸ் என்னும் முயலுக்கு விலங்குகளைக் கட்டி மேய்ப்பது சாதாரண வேலையில்லை என்பது தெரிகிறது. ஒரு முக்கியமான வழக்கைத் துப்புதுலக்க வேண்டிய தேவையும் வருகிறது அவருக்கு. இப்படிப் போகிறது கதை.

ஜுடி ஹாப்ஸுக்குப் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் குட்வின் குரல் தந்திருக்கிறார். கான் ஆர்டிஸ்ட்டான நிக் வைல்ட் என்னும் நரிக்குப் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேஸன் பேட்மேன் குரல் கொடுத்திருக்கிறார். பைரோன் ஹவார்டு, ரிச் மோர் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். விலங்குகளின் சாகச விளையாட்டுகளைப் பார்க்கத் தயாரானவர்களுக்காக மார்ச் 3 அன்று 3டியிலும் திரைக்கு வருகிறது ஸூடோபியா.

பிப்ரவரி 12 தி இந்து நாளிதழில் வெளியானது

செவ்வாய், பிப்ரவரி 09, 2016

திருலோகம் என்றொரு கவி ஆளுமை

சங்கப் பாணர்களின் நீட்சியான கவிஞர்


பலன் எதிர்பாராமல் அரும்பெரும் பணிகளில் ஈடுபடுவது சென்ற தலைமுறையினரில் பெரும்பாலானோர் கொண்டிருந்த மாண்பு. எல்லாமே பிரதிபலன் நோக்கிய செயல்பாடுகள் எனச் சமூகம் பயணிக்கும் வேளையில் மாண்புடன் விளங்கிய அந்தத் தலைமுறையினரின் குணநலன்களை வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் கடமை தற்காலத் தலைமுறையினருக்கு உண்டு. அதிலும் கலை சார்ந்த செயல்பாடுகளில் தன்னைப் பிணைத்திருப்போர் தன்னலம் கருதாமல் செய்ய வேண்டிய அரும் பணி இது. அப்படிப்பட்ட ஆளுமைகள் பற்றிய செய்திகள், தகவல்கள், சம்பவங்கள் அடங்கிய வாழ்க்கை வரலாற்றைப் புதிய தலைமுறையினர் அறிந்துகொண்டால்தான் நமது பண்பாடும் பாரம்பரியமும் கட்டிக் காக்கப்படும். உதயமாகும் தலைமுறை தனது கடந்த கால மனிதர்கள் பற்றிய செய்திகளை அறியும்போது, தான் எத்தகைய பாரம்பரியத்தில் பிறப்பெடுத்திருக்கிறோம் என்று பெருமிதமும் பிரியமும் கொள்ளும். அரிய ஆளுமைகளை அறியவைக்க வேண்டிய தருணத்தின் தேவையை உணர்ந்து அதை நிறைவேற்றியுள்ளார் ரவிசுப்பிரமணியன். ஆளுமைகளை வெவ்வேறு வகையில், தான் அறிந்த கலை வெளிப்பாட்டின் மூலம் ஒரு கலைஞன் அறியச் செய்யலாம். ரவிசுப்பிரமணியன் ஆவணப்படம் என்ற வடிவத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.

சங்ககாலப் பாணர்களின் நீட்சி போல் கவிதைகள் பாடிய கவிஞர், சிறுபத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட திருலோக சீதாராம் குறித்த ஆவணப்படத்தை எழுதி இயக்கி நம் முன் படைத்திருக்கிறார் ரவி. மகாகவி பாரதியாரை, அவரின் கவிதைகளை, பொதுமக்களிடம் கொண்டுசேர்த்த வ.ராமசாமி ஐயங்கார்., ஜீவா, பாரதிதாசன் வரிசையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சீதாராமுக்கும் வலுவான இடம் உண்டு என்பதை ஆவணப்படம் சுட்டுகிறது. இலக்கிய நுட்பங்களை அறிந்திருந்தது போலவே இசையின் நுட்பங்களையும் புரிந்துவைத்திருந்ததால், எழுத்தாகவும் உரையாகவும் அல்லாமல் தன் இனிய குரலால் பாரதியின் பாடல்களை உயிர்ப்புடன் பாடி அவற்றின் சாரத்தைப் பரப்பியிருக்கிறார் சீதாராம். பாரதியாரை நேரில் சந்தித்திராதபோதும் அவரது பாடல்கள் வழி அரும்பிய அதிசய உறவாக பாரதியார் - சீதாராம் உறவு இருந்திருக்கிறது. செல்லம்மா பாரதியின் உயிர் பிரிந்ததே சீதாராமின் மடியில்தான் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் சீதாராமின் நெருங்கிய நண்பரும் தமிழறிஞருமான தி.ந.ராமச்சந்திரன்.

சீதாராமின் தனிநபர் கவிதை வாசிப்பை 1967-ல் நேரில் கேட்ட எழுத்தாளர் அசோகமித்திரன், கவிதை வாசிப்பைத் தான் அனுபவித்த மிகச் சில சந்தர்ப்பங்களில் இது ஒன்று என்கிறார். புதுக்கவிதைகளைக்கூட உள்ளார்ந்து ரசித்து வாசித்தார் சீதாராம் என வியக்கிறார் அவர். ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை தயாரித்திருக்கும் இந்த ஆவணப்படத்தில், கரிச்சான்குஞ்சு, க.நா.சு, தி.ஜானகிராமன், வெங்கட் சாமிநாதன், ஜெயகாந்தன் போன்றோரின் மேற்கோள்கள், பாரதியார், பாரதிதாசன், திருலோக சீதாராம் ஆகியோரின் பாடல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி திருலோக சீதாராமின் இலக்கிய வாழ்க்கையையும் லௌகீக வாழ்வின் சில தருணங்களையும் காட்சிச் சித்தரிப்புகளின் உதவியுடன் விவரித்திருக்கிறார் ரவிசுப்பிரமணியன்.

டிராட்ஸ்கி மருதுவின் ஓவியங்களும் சிபி சரவணனின் ஒளிப்பதிவில் நிலக்காட்சிகளும் இயற்கை அழகின் பின்புலமும் சீதாராமின் காலத்து நிகழ்வுகளைச் சித்தரிக்கும் காட்சிகளில் ரவிசுப்பிரமணியனுக்குப் பெருமளவில் உதவியுள்ளன. ஆவணப் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் ஆழமான இசை அனுபவத்தைச் சாத்தியமாக்குகின்றன. திவாகர் சுப்பிரமணியன் இசையில் ஒலிக்கும் பாரதியார் பாடல்களின் மெட்டுகளும் ‘ஆத்திசூடி இளம்பிறை அணிந்து’ எனத் தொடங்கும் சர்வ சமயப் பிரார்த்தனைப் பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதமும் ஆவணப் படத்துக்கு வேறு வண்ணங்களை அளிக்கின்றன.

பாரதி போலவே அவரின் தாசரான பாரதிதாசனையும் பிரியத்துடன் நேசித்திருக்கிறார் சீதாராம். பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கு’ நூலை முழுவதும் மனப்பாடம் செய்து சீதாராம் மேடையில் நிகழ்த்தும் உரையை வியந்தோதுகிறார் பாரதிதாசனின் புதல்வர் மன்னர் மன்னன். அந்த உரையைக் கேட்ட அனுபவத்தை மெயிசிலிர்க்க விவரிக்கிறார் சீதாராமின் சீடர் சக்தி சீனுவாசன். பாரதிதாசனுடன் முரண்பட நேர்ந்த ஒரு சமயத்தில் சீதாராம், “அய்யா கவிஞரே நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை ஆனால் உமது கவிதைகள் எங்களுக்குத் தேவை” எனக் கூறி பாரதிதாசனை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். அந்த முரண்பாட்டுக்குப் பின்னர் பாரதிதாசன், பக்கத்து வீட்டிலிருந்து பிராமணரான சீதாராமுக்குத் திருநீறு வாங்கித் தரச் செய்திருக்கிறார். சீதாராமும் அங்கே விருந்து உண்டிருக்கிறார். திராவிட இயக்கத் தலைவரான அண்ணாத்துரை, ‘அக்ரஹாரத்து அதிசயப் பிறவிகளில் இவரும் ஒருவர்’ என சீதாராமைப் பாராட்டியிருக்கிறார். கொள்கை மாறுபாடு, கருத்து முரண்பாடு போன்றவை தனிநபர்களின் உறவையும் கலா ரசனையையும் சிறிதும் சேதாரப்படுத்தவில்லை. இந்தப் பண்பு இப்போது என்னவாகியிருக்கிறது எனச் சிந்திக்கத் தூண்டுகிறது படம்.

சுரதா, சுஜாதா போன்ற எழுத்தாளர்களின் முதல் படைப்பை வெளியிட்டது சீதாராமின் சிவாஜி இதழே. தன் படைப்புகளைப் பிரசுரிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டாமல் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார் சீதாராம். இப்படியான தகவல்கள் பொதிந்த இந்த ஆவணப் படம் மூலம் நம் மனதில் உருவாகும் சீதாராம் குறித்த பிம்பத்தில் இலக்கியம் சார்ந்த, தனிநபர் மாண்பு சார்ந்த பெருமிதம் நிரம்பி வழிகிறது. எப்படிப்பட்ட ஆளுமை அவர் என்னும் வியப்பு மேலிடுகிறது. திருலோக சீதாராம் பற்றிய விமர்சனக் கருத்துகள் ஆவணப்படத்தில் இல்லையென்றாலும், பார்வையாளர்களிடம் அவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிப்ரவரி 7 தி இந்து நாளிதழில் வெளியானது

திங்கள், பிப்ரவரி 08, 2016

பினாமி மூலம் வீட்டுக் கடன் பெறுகிறீர்களா?


நடுத்தரவர்க்கத்தினரின் வீட்டுக் கனவை நனவாக்குவதில் வீட்டுக் கடனுக்கு முக்கியப் பங்குண்டு. வீடு வாங்க விரும்புவர்களின் நினைவுக்கு முதலில் வருவது வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்கள்தான். நகரங்களிலும், மாநகரங்களின் புறநகர்ப் பகுதியிலும் விரைந்து எழுப்பப்பட்டுவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்கவும், கிராமப் பகுதிகளில் தனி வீடுகளை வாங்கவும் பெரும் துணை புரியும் இந்த வீட்டுக் கடன்களை சில பினாமி நபர்களும் பெற்றுவிடுகிறார்கள் என்பது தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் புகார்.

பினாமிக் கடன் (Ghost Loan) எனப்படுவது இரண்டு விதங்களில் பொருள்படுத்தப்படுகிறது. ஒன்று வங்கியின் பதிவேடுகளில் மட்டும் காணப்படும் கடன், அந்தக் கடனை யாருமே பெற்றிருக்க மாட்டார்கள். மற்றொன்று உண்மையான பயனாளி யாரோ ஒருவராக இருக்க மற்றொருவரின் பெயரில் கடன் பெறப்பட்டிருக்கும். இந்த பினாமிக் கடன் பற்றிய தொடர்ந்து எழுப்படும் சந்தேகங்கள் தொடர்பாக சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ்.எஸ்.முத்ராவிடமும் கேள்வி எழுப்பப்பட்டது.

பினாமிக் கடன் விவகாரத்தை ரிசர்வ் வங்கி மிகக் கவனத்துடன் கண்காணித்து வருவதாகக் கூறிய அவர், இது தொடர்பாக புகார் எதுவும் வரும்போது அந்தப் புகார் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு உண்மையை அறிய முடியும் என்றும் தெரிவித்தார்.

வீட்டுக் கடன்களில் பினாமிக் கடன்கள் தொடர்பான புகார்கள் எழும்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று எழுந்த கேள்விக்குப் பதில் தெரிவிக்கும்போது, வீட்டு வசதித் துறையின் விவகாரங்களைப் பொறுத்தவரையில் அந்தப் பொறுப்புகளைத் தேசிய வீட்டுவசதி வங்கியே அதைக் கவனித்துவருவதாகவும் ஆனால் வீட்டுக் கடனை ரிசர்வ் வங்கி கவனித்துவருவதாகவும் முத்ரா தெரிவிக்கிறார்.

வீட்டுக் கடன் விவகாரங்களை மிகவும் கவனமாக ரிசர்வ் வங்கி கவனித்துவருகிறது என்றும், அதிக அளவிலான புகார்கள் வரவில்லை என்றும் அது தெரிவித்திருக்கிறது. வீட்டுக் கடன்களைப் பொறுத்தவரை செயலூக்கம் பெறாத முதலீடுகள் மிகவும் சொற்பமே என்று குறிப்பிடும் ரிசர்வ் வங்கி, வங்கிக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும் நிலையில் அவை இல்லை என்பதையும் அது தெரிவிக்கிறது.

ஆனால் ரிசர்வ் வங்கிக்குப் பெரும் தலைவலியாக மாறிவிடும் அளவுக்கு பினாமிக் கடன்கள் பெருகி செயலூக்கம் பெறாத முதலீடுகளாக அவை திரண்டுள்ளன என்று கூறப்படுகிறது. கட்டுநர்கள் கடன் வாங்குவதற்காக டம்மியான நபர்களை ஏற்பாடு செய்வதாகவும், அவர்கள் வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பித்து, வங்கிக் கடன் பெற்ற பிறகு அந்தத் தொகை டம்மிகளிடமிருந்து கட்டுநர்களுக்குச் சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக டம்மியான நபர்கள் கமிஷனாக சுமார் 4-6 சதவீதத் தொகையைப் பெற்றுக்கொள்வதாகவும் தெரிகிறது. கோடிக்கணக்கான தொகையை முதலீடாகப் பெற கட்டுநர்களுக்கு இப்படியான டம்மி நபர்களை ஏற்பாடு செய்யும் தரகர்கள் அல்லது நிதிநிறுவனர்கள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி நிதி திரட்டி கட்டுமானங்களை உருவாக்கும் கட்டுமான அதிபர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இத்தகைய கடன்கள் பெற்று அடுக்குமாடிகளை உருவாக்கும்போது அது இந்தத் துறையை வளர்க்க உதவாது என்றும் வீட்டுக் குடியிருப்பு உருவாக்கும் திட்டங்களை மேற்கொள்ளும் கட்டுநர்களைத் தொடர்ந்து தள்ளாட்டத்திலேயே வைத்திருக்கும் என்றும் கட்டுமானத் துறையின் நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். ஆனால் கட்டுநர்கள் இப்படியான குற்றச்சாட்டை மறுக்கிறார்கள். இவ்வளவு பெரிய தொகையை கமிஷனுக்குப் பெறுவது என்பது வர்த்தக நோக்கில் பயனற்றது என்றும் வீட்டுக் கடன் வழங்கல் வங்கிகளின் பாதுகாப்பான முதலீடு என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

தற்போது ரியல் எஸ்டேட் துறை அவ்வளவு வலுவாகவும் வசதியாகவும் இல்லாத நிலையில், தங்களவது வர்த்தக பரிவர்த்தனைகளை மேம்படுத்த நிதி திரட்டுவதில் கட்டுநர்கள் ஆர்வம்காட்டி வரும் சூழலில் இதைப் போன்று எழும் குற்றச்சாட்டுகளில் ரிசர்வ் வங்கி முழுக் கவனத்தையும் செலுத்தி ஆராய வேண்டும் என்றே ரியல் எஸ்டேட் துறையின் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிப்ரவரி 6 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, பிப்ரவரி 07, 2016

சும்மா அதிருதுல்ல...!


பயங்கரவாதத் தாக்குதலை அடிப்படையாக வைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் பாணிப் படங்களை உருவாக்குவது ஹாலிவுட்டுக்குக் கைவந்த கலை. வெள்ளை மாளிகைமீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய படமாக 2013-ல் வெளியானது ஒலம்பஸ் ஹேஸ் ஃபாலன் என்னும் திரைப்படம். இரண்டு மடங்குக்கு மேல் வசூலை வாரிக் கொடுத்த இந்த ஹாலிவுட் படத்தின் தொடர்ச்சியாக வரும் மார்ச் மாதம் திரைக்கு வர இருக்கிறது லண்டன் ஹேஸ் ஃபாலன் என்னும் ஹாலிவுட் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம்.

இங்கிலாந்து பிரதமரின் இறுதிச் சடங்கு லண்டனில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அனைவரும் அங்கே திரண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அங்கே வருகை தந்திருக்கும் உலகத் தலைவர்களை ஒழித்துக்கட்ட தீவிரவாதக் கும்பல் ஒன்று திட்டமிடுகிறது. லண்டன் நகரமே போர்க்களம் போல் மாறிவிடுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாத திகில் நிமிடங்களில் மூழ்கிக் கிடக்கிறது லண்டன். அமெரிக்க உளவுத் துறையுடன் இணைந்து பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடிக்கும் பெரும் பொறுப்பை அமெரிக்க அதிபர் ஏற்றுக்கொள்கிறார்.

அமெரிக்க அதிபருக்கு பிரிட்டிஷ் உளவுத் துறையும் உதவுகிறது. ஆனால் பிரிட்டிஷ் உளவுத் துறையின் ஏஜெண்ட் யாரையும் நம்பத் தயாராக இல்லை. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் அந்தப் பொறுப்பை எப்படி எதிர்கொள்கிறார்? தாக்குதல் திட்டம் வெற்றிபெறுகிறதா? தலைவர்கள் காப்பாற்றப்படுகிறார்களா? என்ற கேள்விகளுக்கான பதில்களை ஆக்‌ஷன் கலந்து த்ரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குநர் பபேக் நஜாபி. ஈரானில் பிறந்த பபேக் சுவீடனில் அகதியாகத் தஞ்சமடைந்தவர்.

அமெரிக்க உளவுத் துறையின் தலைவர் மைக் பேனிங் என்னும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெரார்டு பட்லர். அமெரிக்காவின் அதிபராக நடிகர் ஏரோன் எக்ஹார்டும் துணை அதிபராக நடிகர் மோர்கன் ஃப்ரீமேனும் வேடமேற்றிருக்கிறார்கள். 10.5 கோடி அமெரிக்க டாலர் செலவில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் டிரெயிலர் வெளியானது இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதைப் பார்த்திருக்கிறார்கள். இது வெறும் டிரெய்லர்தான் அதைப் பார்த்தாலே சும்மா அதிருது எனும்போது மெயின் பிக்சரைப் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

பிப்ரவரி 5 தி இந்து நாளிதழில் வெளியானது

வெள்ளி, பிப்ரவரி 05, 2016

ஒட்டால்

அன்புள்ள தாத்தாவுக்கு..!



இருள் சூழ்ந்த அறையில்,மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், அந்தப் பிஞ்சுச் சிறுவன் கண்ணீர் நிரம்பிய எழுதுகோலால் கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறான். திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழாவில் (2015) இறுதியாகத் திரையிடப்பட்ட ‘ஒட்டால்’ இப்படித்தான் தொடங்குகிறது. பார்வையாளர்களைத் தன்வசம் ஈர்த்துக்கொண்ட ‘ஒட்டால்’ விருதுக் குழுவையும் விட்டுவைக்கவில்லை. அந்தத் திரைப்பட விழாவின் உயரிய விருதுகள் நான்கைப் பெற்றிருந்தது. இருபதாண்டு காலத் திருவனந்தபுரத் திரைப்பட விழா வரலாற்றில் வேறெந்தப் படமும் தொட்டிராத சிகரம் இது எனச் சிலாகிக்கப்பட்டது. இந்தியாவில் ஒரே நேரத்தில் முதன்முதலாகத் திரையரங்குகளிலும் இணையத்திலும் வெளியிடப்பட்ட இப்படம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில், 10.01.2016 அன்று உட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்பட்டது. 

ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்காவ் 1886-ல் எழுதிய ‘வான்கா’ சிறுகதையின் அடிப்படையில் ‘ஒட்டா’லை உருவாக்கியிருக்கிறார், இலக்கியப் பிரதிகளைத் திரைப்படமாக்குவதில் வேட்கை கொண்ட இயக்குநரான ஆர்.ஜெயராஜ். கேரளாவின் குட்டநாடு பகுதியில் ஏழ்மை ததும்பும் வாழ்க்கை நடத்தும் வாத்து மேய்ப்பவரான 70 வயது தாத்தாவுக்கும் (மீனவரான குமரகோட்டம் வாசுதேவன்), 8 வயதுப் பேரனான குட்டப்பாயிக்கும் (ஆஷந்த் கே ஷா) இடையேயான உணர்வுப் பிணைப்பு, இயற்கைக்கும் அவர்களுக்குமான உறவு என்ற தடங்களின் மேலேயே படம் பயணிக்கிறது. வாத்து மேய்க்க தாத்தாவுடன் படகில் செல்லும் பேரன் இயற்கையான சூழலிலே பொழுதைக் கழிக்கிறான். சிறுவனுக்குக் கல்வி கற்க விருப்பம். ஆனால் பள்ளி செல்லவோ கல்வி கற்கவோ அவர்களது பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை. ஏனெனில் கடன் தொல்லை தாள முடியாமல் குடும்பத்துடன் உயிரைவிடத் துணிந்த தகப்பனும் தாயும் அதிர்ஷ்டவசமாக மாண்டுவிட, துரதிர்ஷ்டசாலியான சிறுவன் மட்டும் பிழைத்துக்கொள்கிறான்.



ஏழைகள் பரோபகாரிகள், செல்வந்தர்கள் சுயநலவாதிகள். கற்க வழியில்லாத சிறுவர்களைக் கூலித் தொழிலில் தள்ளிவிடுவதற்காகத் திரியும் மனிதர்கள் துளிக்கூட இரக்கமற்றவர்கள். இப்படியான கொடூரர்களிடம் மாட்டிக்கொள்ளும் சிறுவர்கள் படும்பாட்டைச் சொன்னால் மாத்திரமல்ல நினைத்தாலே போதும் நெஞ்சம் விம்மும். இத்தகைய சிறுவர்கள் நம்பிக்கையுடன் வாழ்வை அணுக வேண்டும். நம்பிக்கை மாத்திரம் போதும், அவர்கள் தாமாக வளர்ந்து, எழுந்து, நிமிர்ந்துநின்றுவிடுவார்கள். காலத்தால் அழியாக் காவியமாக, கவித்துவமான கேமரா மொழியில் ஜெயராஜ் படைத்திருக்கும் ‘ஒட்டால்’ இதைத்தான் காட்சிப்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் ஜெயராஜ்
இயற்கையான சூழலில் குட்டப்பாயிக்குக் கிடைக்கும் வாழ்வு மகோன்னமானது. எம்.ஜே.ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவில், வலசைப் பறவைகள் வந்துசெல்லும் நீர்நிலைகள் நிரம்பிய, பசுமையான, குளுமையான, வளமான குட்டநாட்டைக் காணும்போது இப்படி ஓரிடத்தில் வாழ்க்கை அமையவில்லையே என்ற ஏக்கம் எவருக்கும் எழும். குட்டநாடு பின்புலத்தில் உயிரோட்டமான திரைக்கதையை எழுதிய ஜோஷி மங்கலாத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவில் சிறந்த படத்துக்கான தேசிய விருதும் படத்துக்குக் கிடைத்தது. ஆனால் குட்டப்பாயிக்குக் குட்டநாட்டில் வாழக் கொடுத்துவைக்கவில்லை. தமிழகத்தின் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்றில் அவன் மாட்டிக்கொள்கிறான். தனக்குப் பின்னர் அவன் நிராதரவாக நின்றுவிடக் கூடாதே எனக் கலங்கும் தாத்தா அவனை வலுக்கட்டாயமாகப் பணிக்கு அனுப்பிவிடுகிறார்.


தீப்பெட்டித் தொழிற்சாலையில் சிறுவனுக்குச் சரியாகச் சோறு கிடைப்பதில்லை; ஓய்வும் கிடைப்பதில்லை. அந்தக் கொட்டடியிலிருந்து மீளத் துடிக்கிறான் சிறுவன். தன்னை விடுவித்துச் செல்லும்படி தாத்தாவுக்கு உணர்வுபூர்வமான கடிதத்தை அவன் எழுதி முடிக்கும்போது படமும் நிறைவுபெறுகிறது. பார்வையாளர்கள் கண்ணீர் சிந்தாமல் திரையரங்கிலிருந்து திரும்ப முடியாது என்பதில் ஜெயராஜ் கொண்ட உறுதியைக் காட்சிகள் புலப்படுத்துகின்றன. ஒருவேளை கண்ணீர் வரவில்லை என்றால் பிழை கண்களில்தான் படத்திலல்ல. இயற்கை மீதான நேசம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித நேயம், குழந்தைத் தொழிலாளர்கள் எனப் பல்வேறு சமூக அக்கறைகள் பேரொளி பாய்ச்சும் இந்தப் படம் செல்லும் இடங்களில் எல்லாம் விருதுகளை வாரி எடுத்துவருவதில் வியப்பென்ன?

சிறிய மாற்றங்களுடன் தி இந்து நாளிதழில் வெளியானது 

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்