இந்த வலைப்பதிவில் தேடு

சனி, ஜனவரி 25, 2025

கூசாமல் சொல்கிறார்களே?


அண்மையில் தமிழ்நாடு அரசு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதன் வெள்ளிவிழாவை நடத்தியது. இரண்டு நாள்கள் சிறப்பாக விழா நடத்தப்பட்டது. இந்தத் திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டியதே ஆர்.எஸ்.எஸ். தான் என பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் என ஒரு செய்தியை 2025 ஜனவரி 24 நாளிட்ட இந்து தமிழ் திசை நாளிதழ்  வெளியிட்டுள்ளது. 

“கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் மண்டபத்தை அமைத்ததோடு, அருகில் வள்ளுவர் சிலை அமைக்கத் தீர்மானித்த ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் ஏக்நாத் ரானடே, கடந்த 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி, முதல்வர் எம்ஜிஆர், அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரைக் கொண்டு சிலை அமைக்க சிலை நாட்டினார்” என வானதி தெரிவித்ததாக இந்து தமிழ் திசை நாளிதழ் அந்தச் செய்தியில் வெளியிட்டுள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழா பற்றிய செய்தி 1979 மே 1 நாளிட்ட தமிழரசு இதழில் வெளியாகியுள்ளது. 


என்ன ஆச்சரியம் என்றால், வானதி சீனிவாசன் குறிப்பிட்டிருக்கும் அடிக்கல் நாட்டு விழா பற்றிய செய்தி உண்மைதான். ஆனால், அந்த அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்ட ஏக்நாத் ரானடேதான் வள்ளுவர் சிலை அமைக்கவே காரணம் என்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கட்டமைக்கிறார். அது தான் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாக இருக்க வேண்டும். 

ஏனெனில், “ முக்கடல் சந்திக்கும் குமரி முனையில் வான்புகழ் வள்ளுவருக்குச் சிலை அமைக்க 31.12.1975 ஆம் நாளன்று எனது தலைமையில் கூடிய கழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டு, சிலை அமைப்புக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது 1976 ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் கழக அரசு கலைக்கப்பட்டது” என கலைஞர், கோட்டம் முதல் குமரி வரை என்னும் நூலில் இடம்பெற்ற ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். இந்த நூல் குமரியில் வள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டதை ஒட்டி வெளியிடப்பட்டது.


அந்தக் கட்டுரையில் கலைஞர் விரிவாக கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை எழுப்பப்பட்டதன் பின்னணியை எழுதியுள்ளார். அந்தச் சிலையைத் திறக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றிய அனைத்துவிவரங்களையும் அதில் எழுதியுள்ளார். அந்த நூல் பொதுவெளியில் வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியிருக்க வானதி சீனிவாசன் வள்ளுவர் சிலை அமைக்கவே ஆர்.எஸ்.எஸ். தான் காரணம் என்பது போல் எப்படிக் கூசாமல் சொல்லியுள்ளார் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.  

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்