இந்த வலைப்பதிவில் தேடு

சனி, செப்டம்பர் 15, 2018

அண்ணா எனும் திராவிடப் பேரறிஞர்


பெரியாரும் அண்ணாவும்

தமிழர்களால் அண்ணா என அன்போடு அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாத்துரை 1909ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 அன்று காஞ்சிபுரத்தில் பிறந்தார். ஆய்த எழுத்தைக் கொண்ட தமிழ் மொழியை ஆயுதமாகப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக மற்றும் அரசியல் விடுதலைக்கு பாடுபட்டவர் அறிஞர் அண்ணா. ஏழை எளியவர்களின் நலம் காக்க பாடுபட்டதாலேயே மக்கள் அவர் பெயரில் உள்ள துரையை அகற்றி விட்டு அண்ணா என்றே பிரியத்துடன் அழைக்கின்றனர்.

ண்ணாவுக்கென்று பெரிய குலப்பெருமை எதுவுமில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் வர் புகழைப்பாடாத அரசியல் கட்சிகளோ தனிமனிதர்களோ ல்லை. அறிஞர் அண்ணா தம்மை நீதிக்கட்சிக்காரர் ஆகவும் சுயமரியாதை இயக்கத்தினராகவுமே காட்டிக்கொண்டார். நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாதாரின் அரசியல் உரிமையை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்டது. தமிழ்ச் சமுதாயத்தில் பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகப் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார்.

அண்ணாசாலை அண்ணாசிலை

அறிஞர் அண்ணா கல்லூரி நாள்களிலேயே எழுதத் தொடங்கினார். என்றாலும் விடுதலை பத்திரிகையில் அவர் எழுதத் தொடங்கியதற்குப் பிறகு தான் அவரது கருத்தின் வெளிச்சம் தமிழகத்தில் சுடர்விட்டது. 'விடுதலை'யில் எழுதுவதற்கு முன்பாக அவர் மேயர் பாசுதேவ் நடத்திய 'பாலபாரதி'யிலும், காஞ்சி மணி மொழியார் நடத்திய 'நவயுக'த்திலும் எழுதியிருந்தார். 'ஆனந்தவிகட'னில் அவரது ஒரு சிறுகதையும் வெளியாகி இருந்தது. இவையெல்லாம் அவர் எழுத்தின் முழுப் பரிமாணத்தை வெளியில் கொண்டுவர அடிப்படையாய் அமைந்தன.

எழுதுவது போலவே அவர் மேடையில் பேசினார். பேச்சில் ஒரு 'சங்கீத லயம்' இருந்தது. அவர் படித்ததையெல்லாம் பேசுவதில்லை. தேவையானதை மட்டுமே பேசுவார். இன்னும் பேசமாட்டாரா என்று எண்ணும்போது அவர் பேச்சை முடித்து விடுவார். அதுதான் அண்ணா. அதுதான் அவரது சிறப்பும். காரம் மிக்க பேச்சும் சாரம் மிக்க எழுத்தும் அண்ணாவின் தனிப்பெருமைகள். 

அவர் தொடங்கி நடத்திய வார ஏடுகளான 'திராவிடநாடு' இதழிலும், 'காஞ்சி' இதழிலும் கட்சியினரோடு தொடர்புகொள்ள 'தம்பிக்குக் கடிதம்' எழுதினார். இப்படி எழுதப்பட்ட மொத்த கடிதங்களின் எண்ணிக்கை மட்டும் 290.

அண்ணாவும் கலைஞரும்

ண்ணா பொதுவாழ்க்கைக்கு, திருப்பூரில் 1934இல் நடைபெற்ற செங்குந்தர் 2 ஆவது வாலிபர் மாநாட்டில்தான் அறிமுகமானார். அங்கேதான் அவர் பெரியாரை முதன்முதலில் சந்தித்தார். சுமார் 35 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கையில் அறிஞர் அண்ணா தமிழகத்து அரசியலை அடியோடு மாற்றிக்காட்டினார். எதிர்க்க ஆளே இல்லை என்ற நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் அடையாளம் தெரியாத ஒன்றாக மாற்றியதில் அண்ணாவின் பங்கு முக்கியமானது.

1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சித் தோற்று காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் ஆனார். அவர் இந்தியை விருப்பப் பாடமாகப் பள்ளிகளில் கொண்டுவந்தார். இதனால் முதல் இந்தி எதிர்ப்புப் போர் 1937 மற்றும் 1938 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. தேர்தலில் தோற்றிருந்த நீதிக்கட்சிக்கு இப்போராட்டம் புத்துணர்ச்சி அளித்தது. இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அறிஞர் அண்ணாவுக்கு நான்கு மாதங்கள் சிறை தண்டனை கிடைத்தது. போராட்டத்திலோ மறியலிலோ கலந்துகொள்ளாத அண்ணா கைதுசெய்யப்பட்டார். ஏன்? சென்னை கதீட்ரல் சாலையில் இந்தி திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் நிகழ்த்திய  அனல் தெறித்த பேச்சுக்காக.

மேடையில் அண்ணா

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டுத் திராவிடர் கழகமாக 1944இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அண்ணா திராவிடர் கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற நினைத்தார்; பெரியார்க்கு அதில் விருப்பம் இல்லை. இதன் விளைவால்தான் தி.மு.. உதயமாகியது. 1949இல் அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார். உடனடியாகத் தேர்தலில் அவர் போட்டியிட விரும்பவில்லை. அறிஞர் அண்ணா அவசரப்படவில்லை. தனிநாடு கோரிக்கையை முன்வைத்து 1957 தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 இடங்களை வென்றது. 1962 தேர்தலில் திமுக சார்பாக 50 பேர் வெற்றி பெற்றனர்.

அண்ணாவின் திமுகவுக்குப் பலம் பெருகியது; மக்கள் செல்வாக்கு கூடியது. 1966இல் இல்லஸ்டிரேடட் வீக்லியில் அண்ணாவின் பேட்டி வெளியானது.தன் முன்னுரையில், உலகப் பந்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார்" என்று குறிப்பிட்டது இல்லஸ்டிரேட்ட் வீக்லி. அண்ணாவின் பெருமைக்கு பெருமை சேர்த்தது அந்தப் பத்திரிகை.

அறிஞர் அண்ணா புத்தகங்ளை மிக வேகமாகப் படிக்கக் கூடியவர். அவரது மரண படுக்கையில்கூட 'மாஸ்டர் கிரிஸ்டியன்' எனும் ஆங்கில நாவலைப் படித்துக்கொண்டிருந்தவர். இதன் தமிழ் மொழி பெயர்ப்பை, 'புரட்சித்துறவி' எனும் தலைப்பில் குமுதம் பத்திரிகை, அண்ணா மரணமடைந்த சில நாள்களுக்குப் பிறகு வெளியிட்டது.

அண்ணா முதல்வராக

ஏழை எளியவர்களை முன்னேற்றுவதும் தமது மொழி, இனத்திற்கு தனி அடையாளம் காண்பதுவுமே அவரது அரசியல் குறிக்கோளாக இருந்தது. இதனால்தான் தமிழக ஆட்சியை மக்கள் மனமுவந்து அண்ணாவிடம் தந்தனர். 9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது. அறிஞர் அண்ணா தமது ஆட்சிக் காலத்தில் மூன்று சாதனைகளைச் செய்தார். தமிழ்நாடு எனப் பெயர் மாற்றினார்; இரு மொழிக் கொள்கையைச் சட்டமாக்கினார்; சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி ஆகும் விதத்தில் சட்டத் திருத்தம் மேற்கொண்டார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சென்னை அடையாறு மருத்துவமனையில். 3-02-1969ஆம் தேதி இரவு 12:22 மணிக்கு மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிடிவியில் பணியாற்றியபோது, 2012ஆம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளுக்காக எழுதியது. 

வியாழன், செப்டம்பர் 06, 2018

இமைக்கா நொடிகள்

 

நகரத்தில் அடுத்தடுத்து தொடர்கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. சிபிஐ அதிகாரி அஞ்சலி கொலைகாரனைக் கண்டுபிடிக்க முயலும்போது, ஏற்கெனவே அவரால் கொல்லப்பட்ட குற்றவாளி ருத்ராதான் இந்தக் கொலைகளையும் செய்வதாகத் தகவல் வருகிறது. அதிர்ச்சிகொள்ளும் அஞ்சலி சீரியல் கொலைகாரரைப் பிடிக்கும் முயற்சியை முடுக்கிவிடுகிறார். கொலையாளியை அஞ்சலி பிடித்தாரா, கொலைகளுக்குக் காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கிறது இமைக்கா நொடிகள்.

வழக்கமான த்ரில்லர் படத்தில் காணப்படும் எந்த விறுவிறுப்பும் இல்லாமல், விருதைக் குறிவைத்து எடுக்கப்படும் சராசரித் தமிழ்ப் படத்தைப் போல் மிக நிதானமாக நகர்கிறது படம். திரைக்கதை விவாதங்களின்போது எழுப்பப்படும் அடிப்படையான சந்தேகங்களைகூட நிவர்த்திசெய்யாமல் லாஜிக் பற்றிய கவலையற்றுப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. ஞானமுத்து துணிச்சல்காரர். அவரைவிடத் துணிச்சல்மிக்கவர் இப்படத்தைத் தைரியமாகத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் .


சிபிஐ அதிகாரியாக நடிக்க முயன்றிருக்கிறார் நயன்தாரா. அதர்வா முரளிக்கு ஒரு டாக்டர் வேடம். கோட், ஸ்டெதஸ்கோப் போன்றவை உதவியால் அவரை டாக்டர் என நம்மால் நம்ப முடிகிறது. படத்தில் ராஷி கன்னா என்றொரு கதாநாயகியும் உண்டு. நாயகன் நாயகி இருப்பதால் காதலும் உண்டு. காதல் இருப்பதால் டூயட் உண்டு. பிரிவுத் துயர் உண்டு. எதுவுமே ரசிகர்களைச் சிரமப்படுத்திவிடக் கூடாது என்பதில் இயக்குநர் கவனமாக இருந்திருக்கிறார். இதெல்லாம் போதாதென்று விஜய் சேதுபதி வேறு. அவரும் வந்தது முதல் போவது வரை பேசிக்கொண்டே இருக்கிறார்.

இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் படம் முழுக்க பவனி வருகிறார். ஒரு சிங்கம் போல் வசனம் பேசிக்கொண்டு அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் அவர் ஒரு திறமையான இயக்குநர் என்பதையே மறக்கடித்து அவர் அச்சுஅசல் ஒரு தமிழ் நடிகர் என்பதை மனத்தில் நிறுத்துகிறது. படத்தின் திரைக்கதையையும் எழுதி இயக்கியிருக்கும் அஜய், அதீத ஆர்வத்தின் காரணமாக சில படங்களுக்கான கதையைக் கொண்டு ஒரு படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் காட்சிகளைத் தான் எடுத்திருக்கும் தரத்தை உணர்ந்து படத்துக்கு இமைக்கா நொடிகள் எனப் புத்திசாலித் தனமான டைட்டிலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.


படத்தின் வசனத்தை எழுதியிருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். தற்போதைய தொலைக்காட்சித் தொடர்களுக்குத் தேவைப்படும் அளவுக்குத் தரமான வசனங்களை ஒரு திரைப்படத்துக்கு எழுதிய பெரிய மனது அவருக்கு. பத்திருபது வருடங்களுக்கு முன் வெளிவந்த படத்தில் எப்படித் தரமான வசனங்களை எழுதினாரோ அந்தத் தரத்துக்குக் கொஞ்சமும் குறையாமல் வசனத்தைப் பட்டைதீட்டியிருக்கிறார். படத்தில் சீரியஸான காட்சிகள் சிரிக்கவைக்கின்றன; காமெடிக் காட்சிகள் சீரியஸாக்குகின்றன. இது ஒரு புதுமையான முயற்சி.  இதற்காக இயக்குநருக்குத் தனி பாராட்டு.

படத்தை முடிந்தவரை தூக்கிநிறுத்த ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர். படத்தின் காட்சிகளைத் தொழில்நுட்பரீதியில் பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் படத் தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன். படத் தொகுப்பின் நேர்த்திக்காக இல்லாவிடினும் அவரது பொறுமைக்காகப் பாராட்டப்பட வேண்டியவர். பின்னணி இசையமைத்துப் பாடல்களையும் தந்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா. இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. மனிதர் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். நமக்குத்தான் விலா நோகிறது. இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்களைக் கொண்ட இந்தப் படத்தை இரு பாகங்களாகக் கொடுக்காமல் ஒரே பாகமாகக் கொடுத்ததில் இயக்குநரது பரந்த மனது தெரிகிறது. இமைக்கா நொடிகள் தமிழ் சினிமாவின் தரத்தை நிச்சயமாக சில அடிகள் நகர்த்தும். எதிர்த் திசையில் என்பது தான் சோகம்.

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்

பார்வையாளர்

41,792