இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

சினிமா ஸ்கோப் 15: அம்மா


வீராவேசமாக மு.கருணாநிதியின் செந்தமிழ் வசனங்களைப் பேசி சிவாஜி கணேசன் நடித்த ‘மனோகரா’ காலம் முதல் தமிழ்த் திரைப்படங்களில் அம்மா செண்டிமெண்ட்டுக்குத் தனியிடம் உண்டு. தாய் மகன் பாசம் பற்றிப் பல படங்கள் உருகி வழிந்திருக்கின்றன. ‘அம்மா’ என்ற பெயரிலேயே எண்பதுகளில் ஒரு படம் வெளிவந்தது. சரிதாவும் பிரதாப் போத்தனும் நடித்திருப்பார்கள். அந்த அம்மாவுக்குப் பல கஷ்டங்கள் என்பதாக நினைவு. தமிழ்த் திரைப்படங்களில் அம்மா செண்டிமெண்ட் நிரம்பிவழிந்த காரணத்தால் அம்மா பாடல்கள் எனத் தனித் தொகுப்பே பலருடைய திரைப்பாடல் களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளன. அதில் பெரும்பாலான பாடல்கள் இளையராஜா குரலில் அல்லது அவரது இசையமைப்பில் வெளிவந்தவை. ‘மன்னன்’ படத்தில் ஜேசுதாஸ் பாடிய ‘அம்மா என்றழைக்காத’ பாடலுக்கு நடிகர் ரஜினி காந்த் தன் தாய்க்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவார். அந்த வயதில் ஒரு தாய்க்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டினால் அந்தத் தாயின் நிலைமை என்ன ஆகும் என யோசித்ததே இல்லை, ஒருவேளை அவருக்கு ஜன்னிகூடக் கண்டுவிடலாம். இப்படியான மிகைப்படுத்தல்கள் இல்லாமல் உறவையும் அதன் வலுவையும் காட்ட முடியாதா என்ன?



‘சுப்பிரமணிய புரம்’ படத்தில் ஒரு காட்சி வரும். தலைமறைவாக இருக்கும் அழகருக்கு அவன் தாய் உணவு கொண்டுவரும் காட்சி. படம் முழுவதும் தாயும் மகனும் எசலிக்கொண்டேயிருப்பார்கள். அந்தக் காட்சியின் தொடக்கத்தில்கூட ‘எதற்கு உணவு கொண்டு வந்தாய்?’ எனத் தாயைத் திட்டவே செய்வான் அழகர். ஆனால் அந்தக் காட்சி முடியும் தருவாயில் தாய் கிளம்பும்போது ‘அம்மா’ என அழைத்து, ‘பார்த்துப் போ’ என்பான். தருமன் அழகரின் தோளில் ஒரு கையைவைத்து அழுத்துவான். அத்தனை காலமும் அழகருக்குள் ஒளிந்துகிடந்த தாயன்பு அந்தக் கணத்தில் மலை அருவியின் ஒற்றை விழுதாய் நிலத்தைத் தழுவும். இப்படியான காட்சிகளில் கிடைக்கும் சிலிர்ப்பும் திருப்தியும் ‘வளவள’ என்ற வசனங்களிலோ யதார்த்தத்துக்குப் பொருந்தாத காட்சிகளிலோ கிடைக்காது. ராஜ் கிரணின் ‘அரண்மனைக் கிளி’ படத்தில் தாய் மகன் உறவு ஓரளவு யதார்த்தமாகப் படைக்கப்பட்டிருக்கும் என்பதாக ஞாபகம். அதிலும் தாய் இறந்த பின்னர் ராஜ் கிரண் பாடும் இளையராஜாவின் பாடல் காட்சிகள் மிகையானவையே. தமிழ் சினிமாவில் இத்தகைய காட்சிகள் மிகையுணர்ச்சியின் வெளிப்பாடுகளாகவே பல நேரங்களில் அமைந்துவிடுவது தமிழ் சினிமாவின் சாபமோ?



நீள நீளமான வசனங்களாலும் நாடகத் தனமான உடல்மொழிகளாலும் மட்டுமல்ல துண்டு துண்டான வசனங்களாலும் மட்டுப்படுத்தப்பட்ட உடல்மொழியாலும்கூட நாடகத்தனமான உணச்சியைத் திரையில் கட்டமைக்க முடியும் என்பதை மணிரத்னம் ‘தளபதி’ படத்தில் செய்து காட்டியிருப்பார். வசனமே இல்லாத காட்சிகளிலும் ஆறாய்ப் பெருகியோடும் மிகையுணர்ச்சி. ‘சின்னத்தாயவள்’ பாடல் பின்னணியில் ஒலிக்க சூர்யா தன் தாயைக் கோயிலில் பின் தொடரும் காட்சி இதற்கு உதாரணம். அதிலும் இறுதியாகத் தன் தாயின் தலையிலிருந்து உதிரும் பூவை பக்தி சிரத்தையுடன் எடுத்து சூர்யா கைகளில் பொதிந்துகொள்ளும் காட்சி அதன் உச்சம். அதே போல் சூர்யாவை வீட்டில் வந்து அவன் தாய் பார்க்கும் காட்சி ஒன்று உண்டு. ரஜினி காந்த் ஸ்ரீவித்யாவின் மடியில் ஒரு குழந்தைபோல் தலைவைத்துப் படுத்துக்கிடப்பார். இந்தக் காட்சியில் வெளிப்படும் மிகையுணர்ச்சி பார்வையாளர்களை நெளியச் செய்யும்.

ஏன் ‘தளபதி’யில் சூர்யா தன் தாயின் மடியில் தலைவைத்து அழுகிறான்? ஏன் என்றால் ‘கர்ணன்’ படத்தில் கர்ணனின் தாய் குந்தி தேவி தன்னை அவனது தாய் என்று அடையாளப்படுத்தும் காட்சியில் தாயின் மடியில் தலைவைத்துப் படுத்திருப்பான் கர்ணன். ஒரே வித்தியாசம் ‘தளபதி’யில் வசனம் குறைவு, நாடகத்துக்கான உடல்மொழி மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இரண்டிலும் ஆதார சுருதி மிகையுணர்ச்சியே. ஆனால் இத்தகைய காட்சியமைப்புகளால்தான் மணி ரத்னம் பார்வையாளர்களால் சிறந்த இயக்குநராகக் கொண்டாடப்படுகிறார் என்பது நகைமுரணே.


தமிழ்ப் படங்களில் சென்டிமெண்ட் பொங்கிவழியும் அதே வேளையில் லோகிதாஸின் திரைக்கதையில் சிபி மலயில் இயக்கத்தில் மம்மூட்டி, திலகன், முகேஷ், சரிதா உள்ளிட்டோர் நடித்த ‘தனியாவர்த்தனம்’ படத்தை நினைத்துப் பார்க்கும்போது தென்படும் வித்தியாசம் மலையளவு. இவ்வளவுக்கும் ‘தனியாவர்த்தன’மும் வணிகத்துக்காக உருவாக்கப்பட்ட படமே. ஆனால் படமாக்கத்தில், திரைக்கதையின் பயணத்தில், யதார்த்தை உணர முடியும். எந்த இடத்திலும் உணர்ச்சிகள் தம் வரம்பை மீறாது. எடுத்துக்கொண்ட கதையை வலுப்படுத்தும் விதத்திலான வலுவான திரைக்கதை படம் பார்ப்பதை ரசனைபூர்வ அனுபவமாக மாற்றும். பரம்பரை பரம்பரையாகக் குடும்பத்து ஆண்களில் ஒருவருக்கு மனநோய் கண்டுவிடுகிறது. மனநோய் கண்டிருந்த மாமன் இறந்தபிறகு, நல்ல மனநிலையுடன் உலவும் மம்மூட்டிக்கு மனநோய்க் கோளாறு ஏற்பட்டுவிட்டதோ என்று உறவும் சமூகமும் சந்தேகம் கொள்கிறது. இந்தச் சந்தேகக் கண்ணோட்டம் முற்றிவிட மம்மூட்டியை மனநோயாளி என்றே உறவும் சமூகமும் முடிவுகட்டிவிடுகிறது.

அவருடைய மாமன் பூட்டப்பட்ட அறையிலேயே அவரையும் பூட்டிவிட, மம்மூட்டியின் தாய் விஷமருந்தி தற்கொலைசெய்துகொண்டு, மகனுக்கும் விஷம் கொடுத்து கொன்று உலக வாழ்விலிருந்தும் அந்த நகரகத்திலிருந்தும் மகனுக்கு விடைகொடுக்கிறார். இந்தப் படம் 1987-ல் வெளியானது. மனநோயைப் பழமைவாதப் பார்வையுடன் அணுகும் சமூகத்தைத் தோலுரித்துக் காட்டும் இந்தப் படம். மனநோய் குறித்த சமூகத்தின் அறியாமையை அப்பட்டமாக்குகிறது. இப்படியான மாறுபட்ட கதைகளைக் கையாள இன்னும் தமிழில் ஓர் இயக்குநர்கூட முன் வராதது ஆச்சரியம்தான்.  

‘தனியாவர்த்தனம்’ படத்தின் தாய் மகன் உறவு, சாபம், தாய் விஷம் கொடுத்து மகனைக் கொல்தல் ஆகிய அம்சங்களுடன் ‘தளபதி’யின் அநீதியைத் தட்டிக் கேட்கும் அம்சத்தையும், தேவா சூர்யா பிணைப்பையும், இலங்கைத் தமிழர் என்னும் அம்சத்தையும் ஒன்றுசேர்த்து ஒரு படம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். பாலாவின் ‘நந்தா’ நினைவில் தட்டுப்படும். ‘தனியாவர்த்தன’த்தில் தன் மகனைக் கொல்வதற்கு அந்தத் தாய்க்கு நியாயமான காரணம் இருக்கும் ஆனால் ‘நந்தா’வில் தகப்பனின் தொந்தரவால் தாய் படும் பாட்டைச் சகிக்க மாட்டாமல் தந்தையைக் கொன்றுவிடுவான் அந்த மகன். அதனால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பப்படுவான். திரும்பிவந்த பின்னர் அவன் தாய் மீது பிரியத்துடன் வருவான். ஆனால் தாய் அவன் மீது பாசங்கொண்டிருந்தும் அவனைத் தள்ளிவிடுவாள்.  இறுதியில் அவனுடைய தாயே அவனை விஷம் தந்து கொல்வாள். ‘தனியாவர்த்த’னத்தின் திரைக்கதை சீராகப் பயணப்படும். படமாக்கத்தில் சிபி மலயில் வெளிப்படுத்தியிருந்த நேர்த்தி ‘நந்தா’வில் தவறியிருக்கும். இந்தப் படங்களை எல்லாம் ஒருசேரப் பார்க்கும்போது எது நல்ல திரைக்கதை என்பதை எளிதில் உணர்ந்துகொள்ளலாம்.

ஞாயிறு, செப்டம்பர் 04, 2016

சினிமாஸ்கோப் 14: முள்ளும் மலரும்

மனித உறவுக்கும் மனிதநேய உணர்வுக்கும் திரைக்கதைகளில் பிரதான இடம் உண்டு. இந்த உறவு குறித்த சித்தரிப்புகள் நெகிழ்ச்சியாக இருக்கலாம்; ஆனால் அவை உணர்வைச் சுரண்டாமல் இருக்க வேண்டும். அது எப்படிச் சாத்தியம்? நல்ல திரைப்படம் உங்களை ஏங்கி ஏங்கி அழ வைக்காது. அந்தத் திரைப்படத்தில் துக்ககரமான சம்பவங்கள் இருந்தாலும் அது கண்ணீரைக் காணிக்கை கேட்காது. மனம் துன்புறும். படத்தின் தாக்கம் மனத்தில் பாரமாகத் தோன்றும். கண்ணீர்த் துளிகள் சில எட்டிக்கூடப் பார்க்கும். ஆனால், அருவி ஒன்று கண்ணில் புறப்பட்டுக் கன்னத்தைக் கறையாக்காது. மொத்தத்தில் உங்களைச் சிந்திக்கவைக்குமே ஒழிய, கண்ணீர் சிந்தவைக்காது.

அழுகை என்றாலே நமக்கு சிவாஜி கணேசன் நடித்த படங்கள்தான் நினைவுக்கு வரும். அதிலும் அண்ணன் தங்கைப் பாசத்தை மையமாகக் கொண்டு பீம்சிங் உருவாக்கிய ‘பாசமலர்’ (1961) போன்ற படங்கள் பெருந்தாகத்துடன் தமிழ்ப் பார்வையாளர்களின் கண்ணீரைக் குடித்திருக்கின்றன. ஆனால் அழுததில் அந்தத் தலைமுறையினர் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்கள். அவர்களது சூழல் அவர்களை அனுமதித்திருக்கிறது. இன்று இத்தகைய படங்கள் எடுப்பது சாத்தியமல்ல. அது காலத்தின் தேவையுமல்ல.

பாசமான அண்ணன் தங்கைக்காக எதையும் செய்வான் என்று ‘பாசமலர்’ போட்டுவைத்த பாதையில் பயணப்படாத இயக்குநரே இல்லை. அடுக்குமொழி வசனங்களாலும் உணர்ச்சிக் குவியலான காட்சியமைப்புகளாலும் மட்டுமே படத்தை மெருகேற்றிய, தாய்க்குலங்களால் உற்சாகத்துடன் கவனிக்கப்பட்ட டி.ராஜேந்தரே ‘தங்கைக்கோர் கீதம்’, ‘என் தங்கை கல்யாணி’ என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார், என்றால் பார்வையாளர்கள் எவ்வளவு பரந்த மனத்துடன் கண்மூடித்தனமாக அண்ணன் தங்கைப் பாசத்தைப் பார்த்திருக்கிறார்கள்!

‘பாசமலர்’ வெளியாகிய அறுபதுகளின் தொடக்கத்தில் ஒன்பது பாடல்களையும், நெஞ்சைப் பிழியும் சோக ரசம் ததும்பிய காட்சிகளையும் கொண்ட படமாக அதை உருவாக்க முடிந்திருக்கிறது. ஆனால் எழுபதுகளின் இறுதியில் ‘முள்ளும் மலரும்’ படத்தை மகேந்திரன் உருவாக்கியபோது அது ‘பாசமலர்’ போன்ற படமென்று சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கும்.

‘பாசமலர்’ வெளியான 17 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகிறது ‘முள்ளும் மலரும்’. ஆனால் இதன் பயணம் ‘பாசமல’ரைப் போன்றதல்ல, முற்றிலும் மாறானது. நீளமான வசனங்கள், அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளால் பொதியப்பட்டது ‘பாசமலர்’. மிகக் குறைந்த வசனங்கள், மட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சம்பவங்களாலானது ‘முள்ளும் மலரும்’. அதனால்தான் அப்படமும் தமிழ்ப் படங்களின் வரலாற்றில் அழியாநிலை பெற்றிருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களில் வசனம் ஆதிக்கம் செலுத்திவருவதைக் கண்டு வெறுத்துப்போயிருந்த மகேந்திரன் தான் இயக்கிய முதல் படத்தில் வசனங்களைத் தேவையான இடங்களில் மட்டுமே பயன்படுத்தியிருந்தார்.


‘முள்ளும் மலரும்’ படத்தில் தன் கையை இழந்த அண்ணனை (காளியை) தங்கை (வள்ளி) முதலில் காணும் காட்சி ஒன்று வரும். வள்ளி ஆற்றில் தவலைப் பானையைத் தேய்த்துக்கொண்டிருப்பார். தூரத்தில் ஜீப் வரும் காட்சி தென்படும். அண்ணனைப் பார்க்க ஓடி வருவார். காளியும் வள்ளியும் சில அடிகள் தூரத்தில் நிற்பார்கள். ஒருவரையொருவர் ஆழமாகப் பார்ப்பார்கள். இருவரது முக பாவங்களும் தனித் தனிக் காட்சிகளாகக் காட்டப்படும். பின்னணி இசை எதுவுமின்றி மவுனமாக நகரும் காட்சி. வள்ளி நெருங்கி வந்து அண்ணனைக் கட்டிப்பிடிப்பார். அப்போது மகிழ்ச்சியான மனநிலைக்கான பின்னணி இசை ஒலிக்கும். காளியின் இடது புஜத்துக்குக் கீழே கை இல்லாததை உணர்ந்து வள்ளி துணுக்குறுவார்.

பின்னணி இசையில் மெலிதான சோகம் ததும்பும். வள்ளி துக்கம் தாள மாட்டாமல் அழுவாள். காளி, அவளது தோளைத் தட்டியபடி, “என்னடா ஆச்சு ஒண்ணுமில்ல ஒண்ணுமில்லடா ஒண்ணுமில்ல” என்ற வசனத்தை மட்டுமே பேசியபடி அவரை அணைத்துக்கொள்வார். வெறும் முக பாவங்கள், உடல்மொழிகள், பின்னணியிசை ஆகியவற்றைக் கொண்டே காட்சியின் முழு உணர்ச்சி யையும் பார்வையாளனுக்குள் நிரப்புவார் மகேந்திரன். ரஜினியும் ஷோபாவும் மகேந்திரனும் பாலுமகேந்திராவும் இளையராஜாவும் ஒன்றுசேர்ந்து படத்தின் தரத்தை மேலே உயர்த்தியிருப்பார்கள்.

மகேந்திரன் சினிமாவை ஒரு காட்சி ஊடகமாகக் கருதுகிறார் என்பதற்கு இந்த ஒரு காட்சியே சான்று. இதே காளி வேடத்தை சிவாஜி கணேசன் ஏற்க, வள்ளியாக சாவித்திரி நடித்திருந்தால் இந்தக் காட்சிக்கு வசனம் எழுதவே ஒரு கத்தை தாள் தேவைப்பட்டிருக்கும். சிவாஜி போன்ற மேடை நாடகப் பயிற்சி கொண்ட நடிகருக்குத் திரைக்கதை அமைப்பதற்கும் ரஜினி போன்ற வளர்ந்துவரும் (அப்போதைய காலகட்டத்தில்) நடிகருக்குத் திரைக்கதை அமைப்பதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். ஒரு நடிகருக்குத் தகுந்த திரைக்கதை அமைப்பதும் திரைக்கதைக்குத் தகுந்த நடிகரைத் தேர்வுசெய்வதும் இயக்குநரின் சினிமா புரிதலைப் பொறுத்தது. இதைச் சரியாகச் செய்யும்போது இயக்குநருக்குப் பாதி வெற்றி கிடைத்துவிடுகிறது.

அண்ணன் தங்கைப் பாசத்துக்கு உதாரணமாகத் திகழ்கிறது ‘பாசமலர்’. ஆனால் ஒரு புது இயக்குநர் தனது முதல் படத்தை அண்ணன் தங்கைப் பாசம் கொண்டதாக அமைக்கும்போது அது முந்தைய இமாலய வெற்றிபெற்ற படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவதைத் தவிர்க்க இயலாது. ஆகவே அவர் முன் உள்ள சவால் ‘பாசமல’ரை மிஞ்சி ஒரு அண்ணன் தங்கைப் பாசப் படத்தை உருவாக்குவதுதான். அந்தச் சவாலை அநாயாசமாக எதிர்கொண்டு வெற்றியும் பெற்றிருந்தார் மகேந்திரன். இவ்வளவுக்கும் மகேந்திரன் சினிமாவை விரும்பி வந்தவரல்ல. ஆனால் செய்த வேலையை விருப்பத்துடன் செய்தவர்.


உமாசந்திரனின் நாவலைப் படித்த மகேந்திரன் அதை அப்படியே திரைக்கதையாக்கிவிடவில்லை. மகேந்திரனைக் கவர்ந்தது அந்த விஞ்ச் என்னும் புதுக் களமும், காளி கதாபாத்திரமுமே. அதை வைத்துக்கொண்டுதான் தனது திரைக்கதையை அவர் எழுதியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை ‘முள்ளும் மலரும்’ நாவல் அவரது திரைக்கதைக்கான ஒரு தூண்டுகோல். அவ்வளவுதான். ‘முள்ளும் மலரும்’ முழுமையாக மெலோடிராமா வகையிலிருந்து வெளியேறிவிடவில்லை என்றபோதும் வசனத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்ட தமிழ்ப் படமாக அதைச் சுட்ட முடிகிறது. வசனத்தின் வேலையைப் பெரும்பான்மையான காட்சிகளில் இசையே பார்த்துக்கொள்ளும்.

இதற்கு அடுத்தபடியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை இதே அண்ணன் தங்கைப் பாசம் திரைக்கு வந்தது. அந்தப் படம் ‘கிழக்குச் சீமையிலே’. எம்.ரத்னகுமாரின் கதை வசனத்துக்குத் திரைக்கதை எழுதி இயக்கினார் பாரதிராஜா. இந்தப் படத்தில் ஒரு சமூகத்தின் சடங்கு, சம்பிரதாயங்கள் குடும்ப உறவுகளில், குறிப்பாக அண்ணன் தங்கை உறவில் குறுக்கிடுவதைத் தனக்கே உரிய விதத்தில் திரைப்படமாக்கியிருப்பார் பாரதிராஜா.

இது தவிர்த்து, ‘பாசப்பறவைகள்’, ‘பொன்விலங்கு’, ‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’ எனத் தமிழில் வெளியான பெரும்பாலான அண்ணன் தங்கைப் பாசப் படங்கள் மிகையான சென்டிமென்ட் காட்சிகளாலானவை. சத்யஜித் ராயின் ‘பதேர் பாஞ்சாலி’ படத்தில் வெளிப்பட்டது போன்ற யதார்த்தமான சகோதர பாசத்தைத் தமிழ்ப் படங்களில் தேடிக்கொண்டே இருக்கிறோம்.


லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்