இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2020

புதுவசந்தம் பாடிய எஸ்.ஏ.ராஜ்குமார்

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஏ.ராஜ்குமார் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். 1964 ஆகஸ்ட் 23 அன்று செல்வராஜன் கண்ணம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் அவர். அவரது இசையில் ஒலித்த ‘பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா…’ என்ற ‘புதுவசந்தம்’ படப் பாடல் அதுவரையிலான தமிழ்த் திரைப்படத்தின் பாடல்களிலிருந்து வேறுபட்டு ஒரு புத்துணர்வைத் தந்தது. ‘இது முதன்முதலா  வரும் பாட்டு’, ‘ஆயிரம் திருநாள்’, ‘போடு தாளம் போடு’ போன்ற பாடல்களும் அலுக்க அலுக்கக் கேட்டு ரசித்தவை. ஆனால், அது இவரது முதல் படமல்ல. இந்தப் படத்துக்காகவும் இதன் கன்னட மறு ஆக்கப் படமான ‘ஸ்ருதி’க்காகவும் இவர் ஃபிலிம்பேர் விருதுபெற்றிருக்கிறார். பதின் பருவத்தில் கேட்ட இந்தப் படத்தின் பாடல்களில் தொனித்த தனித்துவம் காரணமாக இவை மனத்துக்கு நெருக்கமாக இருந்தன. கதாபாத்திரங்களுக்குத் தேவையான ஜீவனைச் சுமந்து வந்த இசை என்பதால் இருக்கலாம்.

‘லாலல்ல லலலா லாலல்ல லலலா’ என்னும் விக்ரமன் படத்துக் குழுவோசை கேட்கும்போதெல்லாம் மனம் தானாக எஸ்.ஏ.ராஜ்குமாரை நினைந்து மீளும். பாடல்களின் சிறப்பைச் சேர்க்கும் விதமாக இப்படியான குழுவோசையை அதிகப்படியாகப் பயன்படுத்தியவர் இவர். விக்ரமன் படத்து இசையமைப்பாளர் என்று இவர் அறியப்பட்டபோதும் இவரை முதலில் அறிமுகப்படுத்தித் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தவர்கள் ராபர்ட் ராஜசேகரன் இரட்டை இயக்குநர்கள். தெக்கத்தி நகரங்களிலும் கிராமங்களிலும் செல்லும் வாகனங்களில் இளையராஜாவின் பாடல்களுக்கு இணையாக எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த பாடல்களும் இசை சேவை செய்தன.

இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலத்தில் சங்கர் கணேஷ், சந்திரபோஸ் போன்றோரைப் போல ஓர் இசையமைப்பாளராக அறிமுகமாகிப் பல வெற்றிகளைப் பெற்றவர் இவர். டி.ராஜேந்தரைப் போல இவரும் ஒரு கவிஞனாக இருப்பதால் இசையமைப்பாளராக அறிமுகமான தொடக்க காலத்தில் இவர் இசையமைத்த படங்களில் பெரும்பாலான பாடல்களை இவரே எழுதியுள்ளார். பல பாடல்களுக்குத் தொடக்கத்தில் இசைக்காக இவர் எழுதிய டம்மியான வரிகளே இறுதிப்பாடலாக வடிவம் பெற்றுள்ளனவாம். பழனிபாரதி, முத்துலிங்கம் போன்ற பாடலாசிரியர்களுடன் இணைந்து ஒவ்வொரு வரியாக ஒருவர் மாற்றி ஒருவர் எழுதிய அனுபவமும் இவருக்கு இருந்திருக்கிறது.


சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக 36 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்திருக்கிறார். ‘பூவே உனக்காக’ இவரது ஐம்பதாம் படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனக்   கிட்டத்தட்ட 250 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ‘ஆனந்தம்’ திரைப்படத்தில் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ என்னும் பாடல் மூலம் பிரபலக் கவிஞர் யுகபாரதியைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியவர் இவர்தான். இதைப் போல் பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்தி ஆனந்தமடைந்தவர் ராஜ்குமார்.   

அவர் முதன்முதலில் இசையமைத்த ‘சின்னபூவே மெல்லபேசு’ படம் 1987 ஏப்ரல் 17 அன்று வெளியானது. ராபர்ட் ராஜசேகரன் இயக்கிய, கல்லூரிக் காதலைக் கதைக் களமாகக் கொண்ட இந்தப் படத்தில் அவரது இசைக்கு முக்கியப் பங்குண்டு. படத்தில் மொத்தம் பத்துப் பாடல்கள். சோகம், கும்மாளம், டூயட், கலாட்டா எனப் பல வகையான சூழலுக்கு ஏற்ற பாடல்களைத் தந்து அசத்தியிருப்பார் எஸ்.ஏ.ராஜ்குமார்.  எஸ்.பி.பாலசுப்ரமணியன், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், எஸ்.பி.ஷைலஜா ஆகியோருடன் சுந்தர்ராஜன், தினேஷ் எனும் பாடகர்களையும் அறிமுகப்படுத்தியிருந்தார். தினேஷ் பாடிய ‘கண்ணே வா பாடிவருவது உன் கீதம்’ பாடலை கம்ப்யூட்டர் துணையுடன் உருவாக்கியிருப்பார். அந்தப் பாடல் உருவாக்கத்தில் உதவியவர் அவரது கீ போர்டு பிளேயரான திலிப். திலிப் வேறு யாருமல்ல ஏ.ஆர்.ரஹ்மான்தான்.   இந்தப் படத்தின் அசோசியேட் இசையமைப்பாளர் வித்யாசாகர். ‘ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படுதாயி’ என்னும் சோகப் பாடலை எஸ்.ஏ.ராஜ்குமாரே பாடியிருப்பார். இசையமைப்பாளர்களுக்கேயான தனித்துவமான குரலில் அந்தப் பாடல் இரவில் ஏகாந்தத்துக்கு ஏற்றது. இந்தப் படத்தை திருநெல்வேலி ராயல் தியேட்டரில் பார்த்திருக்கிறேன்.


இதே ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியான ‘வீரன் வேலுத்தம்பி’ படத்தில் கலைஞர் மு. கருணாநிதி எழுதிய ‘சுருளு மீசைக்காரனடி’ பாடலை இவர் பாடியுள்ளார். ‘பாடல்கள் என்பவை காலத்தின் கண்ணாடி. பாடல்களில் வெளிப்படும் இலக்கியம் அழிந்துவிட்டால் இசை அழிந்துவிடும்’ என்று கூறும் ராஜ்குமார் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோர் உருவாக்கியிருந்த மரபின் இழையைப் பின்பற்றிப் பின்னணியிசையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பார். ‘புது வசந்தம்’ படத்தில் சாலையோரம் பாடிக்கொண்டிருக்கும் முரளி குழுவினரின் இசைக்கருவிகளைக் காவலர்கள் லாரியில் அள்ளிப்போட்டுக் கொண்டு செல்லும்போது, பின்னணியில் ஒலிக்கும் இவரது, ‘தந்தானா தந்தானா தந்தானானேனா’ பின்னணிக்குரல் அந்தக் காட்சியின் உணர்வைப் பார்வையாளர்களிடம் எளிதில் கொண்டு சேர்க்க உதவியது.  

‘இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை’ என்னும் பாடல் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் நான்குமுறை இடம்பெறும். இதே படத்தில் ‘இருபது கோடி நிலவுகள் சேர்ந்து பெண்மை ஆனதோ’ என்னும் மேற்கத்திய சாயல் கொண்ட வைரமுத்து எழுதிய பாடல் குறிப்பிடத்தகுந்தது. ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ பாடல் ‘சூர்யவம்சம்’ படத்தில் மூன்றுமுறை இடம்பெறும். ‘சூர்யவம்சம்’ படத்துக்காகத் தமிழக அரசின் விருதைப் பெற்றிருக்கிறார். ஒரே பாடலை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்தும் இந்தப் போக்கு எல்லாம் இப்போது திரைப்படங்களில் பார்க்க இயலாதவை.

இயக்குநர்கள் ராபர்ட் ராஜசேகரன், விக்ரமன் ஆகியோரது முதல் படங்களுக்கு இசையைத் தந்திருந்த இவர்தான் கே.எஸ்.ரவிகுமார், லிங்குசாமி, எழில், ராஜகுமாரன், எஸ்.பி.ராஜ்குமார் ஆகியோரது முதல் படங்களுக்கும் இசையமைத்தவர். 

நடிகர் விஜயின் ‘பூவே உனக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பிரியமானவளே’ போன்ற படங்களுக்கும் அஜித் நடித்த ‘அவள் வருவாளா’, ‘ராஜா’ போன்ற படங்களுக்கும் இசையமைத்தவர் இவர். ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘வானத்தப்போல’, ‘பிரியமான தோழி’, போன்ற படங்களும் ‘போறவளே பொன்னுத்தாயி’ (‘இரயிலுக்கு நேரமாச்சு’), ‘பொன் மாங்குயில்’ (‘மனசுக்குள் மத்தாப்பு’) ‘மனம் பாடிட நினைக்கிறதே’ (‘பறவைகள் பலவிதம்’) ‘செவ்வந்தி மாலை கட்டு’ (‘தங்கத்தின் தங்கம்’), ‘பூவே இது காற்றின் கீதம்’ (‘முதல் பாடல்’), ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா’ (‘பெண்ணின் மனதைத் தொட்டு’), ‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு’ (‘மறுமலர்ச்சி’) போன்ற பாடல்களும் எஸ்.ஏ.ராஜ்குமாரை இசை ரசிகர்களின் நினைவில் கொண்டுவந்து சேர்த்துக்கொண்டே இருக்கும். அவருடைய பிறந்தநாளான இன்று அவரை மனதார வாழ்த்துவோம்.  

இந்து தமிழ் திசை இணையத்தில் வெளியான கட்டுரை.

சனி, ஆகஸ்ட் 08, 2020

பைரவி: ரஜினியை ஸ்டாராக்கிய சூப்பர் படம்

‘பைரவி’ திரைப்படம் 1978-ம் ஆண்டில் வெளியாகியுள்ளது. இதே ஆண்டில் வெளியான ‘முள்ளும் மலரும்’ போல் இதுவும் ஓர் அண்ணன் தங்கைப் படமே. ‘பைரவி’ வெளியாவதற்கு முன்னரே ரஜினி, ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘16 வயதினிலே’, ‘காயத்ரி’ போன்ற பல வெற்றிகரமான படங்களில் நடித்துவிட்டார். ஆனால், தனியான கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் என்பதே M.பாஸ்கர் M.A. இயக்கிய ‘பைரவி’யின் தனிச் சிறப்பு.

படத்தில் ரஜினியின் பெயர் மூக்கையன். அவருக்கு ஒரு தங்கை. அவளது பெயர்தான் பைரவி (கீதா). தாயற்ற குடும்பம். ஒரு நாள் குடிகாரத் தந்தை வைத்திருந்த பணத்தை எடுத்துத் தங்கைக்கு உணவு வாங்கி வருகிறான் சிறுவனான மூக்கையன். இதில் ஆத்திரமடைந்த தந்தை அரிவாளை எடுத்துக் குழந்தைகளை வெட்ட வருகிறார். அவரிடமிருந்து தப்பித்து வரும் மூக்கையன் நதியோரம் கிடந்த பரிசலில் தங்கையை அமர்த்தி, பரிசலை ஓட்டி வருகிறான். நதியின் சுழலில் மாட்டிய பரிசல் கவிழ்கிறது. மூக்கையனும் பைரவியும் நதியில் விழுகிறார்கள். மூக்கையன் பிழைத்துவிடுகிறான். தங்கை பெயர் சொல்லிக் கதறிப் பார்க்கிறான். ஆனால் பதிலேதுமில்லை. தங்கை இறந்துவிட்டதாகக் கருதி, துயரத்துடன் தான் ஒதுங்கிய கிராமத்துக்கு வருகிறான்.

அந்த ஊரின் பண்ணையார் குடும்பத்துப் பெண்மணி அவனுக்கு அடைக்கலம் தருகிறார். தன் மகன், மகளுடன் மூக்கையனையும் வளர்க்கிறார் அவர். அந்த நன்றிக்கடனுக்காகவே அவன் வயதையொத்த பண்ணையார் ராஜலிங்கம் (ஸ்ரீகாந்த்) கூடவே இருக்கிறான் மூக்கையன். அவருக்கு எதிராக யாரும் ஒரு சொல் சொன்னாலும் மூக்கையன் வெகுண்டெழுந்துவிடுவான். அவனது அநீதிகளுக்குத் துணைபோகிறான். பழியேற்றுக்கொள்கிறான். ராஜலிங்கத்தின் தங்கை மீனா (Y.விஜயா). அவளுக்கு அண்ணன் செயல் பிடிக்கவேயில்லை. மூக்கையன் மேல் பரிதாபமேகொள்கிறாள்.

அதே கிராமத்தைச் சேர்ந்த பவுனுக்கு (ஸ்ரீபிரியா) மூக்கையன் மீது காதல். அவளும் சொல்லிப் பார்க்கிறாள் ஆனால், மூக்கையன் முதலாளி விசுவாசத்தை விடுவதாக இல்லை. ராஜலிங்கத்துக்கு எதிராக நடந்துகொள்பவர்களை காட்டு பங்களாவில் அடைத்துவிடுவது மூக்கையனின் வழக்கம். அப்படியொரு நாளில், பக்கத்து ஊர் கன்னிப்பெண்ணான பாக்கியம் என்பவளைக் கரும்பு திருடியதற்காகக் காட்டு பங்களாவில் அடைக்கச் சொல்கிறான் ராஜலிங்கம். மூக்கையன் அப்படியே செய்கிறான். மூக்கையனுக்குத் தெரியாமல் அந்தப் பெண்ணைப் பாலியல் வல்லுறவுசெய்துவிடுகிறான் ராஜலிங்கம். மயக்கமுற்ற அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். பாக்கியத்தின் அண்ணன்கள் மாணிக்கமும் (சுதிர்), பழைய பண்ணை பஞ்சாட்சரமும் (சுருளி ராஜன்) அவளைக் காப்பாற்ற முயல்கிறார்கள். அவர்கள் குறித்து அறிய வந்த மூக்கையனுக்கு, தன் தங்கை பைரவி சாகவில்லை, பாக்கியம்தான் பைரவி என்ற உண்மை தெரியவருகிறது. சொந்தத் தங்கை சீரழியக் காரணமாகிவிட்டோமே என்று வருந்துகிறான்.

தன் முதலாளியிடம் தங்கைக்கு வாழ்க்கை தருமாறு கோருகிறான். அப்போதுதான் ராஜலிங்கத்தின் சுயரூபம் மூக்கையனுக்குத் தெரியவருகிறது. பாக்கியத்தை மூக்கையன்தான் வல்லுறவு செய்தான் என்று பழியை அவன்மீது போட்டு அவனைச் சிறைக்கு அனுப்புகிறான் ராஜலிங்கம்.  சிறையிலிருந்து தப்பிய மூக்கையன் ராஜலிங்கத்தைப் பழிவாங்கப் புறப்படுகிறான். மருத்துவமனையிலிருந்த பாக்கியத்தைக் கொன்று அந்தப் பழியையும் மூக்கையன் மேல் போடுகிறான் ராஜலிங்கம். தன் தங்கையைச் சீரழித்துக் கொன்ற மூக்கையனைப் பழிக்குப் பழி வாங்குவேன் என்று சூளுரைக்கிறான் மாணிக்கம்.  மாணிக்கத்திடம் மூக்கையன் மாட்டினானா, ராஜலிங்கத்தை அவனால் பழிவாங்க முடிந்ததா என்பதையெல்லாம் எஞ்சிய படம் விவரிக்கிறது.

படத்தைத் தயாரித்திருக்கும் கலைஞானம் எழுதிய கதைக்குத் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதியுள்ளார் மதுரை திருமாறன். கதையம்சம் வலுவாக உள்ள படம்தான். நகைச்சுவைக்காக சுருளிராஜன், வி.கே.ராமசாமி, மனோரமா ஆகியோர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். நகைச்சுவை பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ‘உனெக்கெல்லாம் எதுக்கு மீசை’ என்று மனோரமா கேட்கையில், ‘தானா வளருது யூரியா போட்டா வளர்க்கேன்’ என சுருளி சொல்வது நயமான பதில். வீரத்துக்கு அடையாளமான ஜல்லிக்கட்டு இந்தப் படத்தில் நகைச்சுவைக்குப் பயன்பட்டுள்ளது.

ரஜினிக்கு நல்ல கதாபாத்திரம். ரசிகர்களை ஈர்க்கும்படியான வேடம். முதலாளிக்கு விசுவாசமாக இருந்தும் சொந்தத் தங்கை மீது அவன் நடந்துகொண்ட விதம் ரஜினிக்கு ஆத்திரமூட்டும்போது அவர் விஸ்வரூபம் எடுக்கிறார். அப்போது பேசும் வசனங்களும் நடிப்பும் ரஜினியின் இமேஜை உயர்த்தியதில் பெரும்பங்காற்றியுள்ளன. இடக் கண்ணை மூடிக்கொண்டு உடல்மொழியில் ரஜினி காட்டும் ஸ்டைல் கவரக்கூடியது. தான் ஒரு சூப்பர் ஸ்டார்தான் என்பதை நிரூபிக்க தனக்குக் கிடைத்த வாய்ப்பை ரஜினி சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.  

இளையராஜாவின் இசையில் ‘கட்டபுள்ள குட்ட புள்ள…’ என்னும் காதல் பாடலும், ‘நண்டூருது நரியூருது…’ என்னும் சோகப் பாடலும் இப்போது கேட்டாலும் அலுக்காதவை. ரஜினிக்கு டி.எம்.சௌந்திரராஜனின் குரல்தான். இந்தப் படத்தை எண்பதுகளின் இறுதியில் ஏதோ ஒரு கோயில் திருவிழாவுக்காக திருநெல்வேலி மாவட்டம், இப்போது தென்காசி மாவட்டம், இலஞ்சியில், திரை கட்டி படம் போட்டபோது பார்த்திருக்கிறேன். அதன் பின்னர் இப்போது யூடியூபில் பார்த்தேன். படம் அலுப்பேற்படுத்தாமல் இப்போதும் சுவாரசியமாகப் பார்க்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ரஜினி நடித்த ’வேலைக்காரன்’, ’முத்து’ போன்ற படங்களில் ரஜினி ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கு இந்தப் படத்தின் மூக்கையன் கதாபாத்திரம் தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும்.  படத்தில் நட்பு இருக்கிறது, காதல் இருக்கிறது, அண்ணன் தங்கைப் பாசம் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து ஒரு முழுமையான வணிகப்படமாக்கியதில் பாஸ்கரின் இயக்குமும் முக்கியப் பங்குவகிக்கிறது. ரஜினி காந்த் சிறையிலிருந்து தப்பித்து வரும் காட்சியில் கட்டவிழ்த்து ஓடி வரும் குதிரையையும் ரஜினியையும் மாற்றி மாற்றிக் காட்டும் காட்சியில் இயக்குநரின் முத்திரை தென்படுகிறது.   

தன்னைத் தேடிக்கொண்டு போலீஸ் ஸ்ரீபிரியா வீட்டுக்கு வந்து விசாரிக்கும்வேளையில், மரத்தடியில் மறைந்திருப்பார் ரஜினி.  அப்போது  நல்ல பாம்பு ஒன்று வர அதைக் கையில் பிடித்துக்கொண்டு, படமெடுத்தாடும் அதன் தலையில் தட்டுவார். ரஜினி ரசிகர்களைப் பெரிதும் கவரும் வகையில் காட்சி அமைந்திருக்கும். பாம்பைப் பிடித்தபடி ரஜினி மரத்தடியில் மறைந்திருக்கும் காட்சியை சுவரொட்டியில் பயன்படுத்தியுள்ளார் அப்படத்தின் சென்னை விநியோகஸ்தரான கலைப்புலி தாணு. அது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் சுவரொட்டிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினி என தாணு அச்சிட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறார். அந்த சூப்பர் ஸ்டார் என்னும் முன்னொட்டு இன்றுவரை ரஜினியின் பெயரை அலங்கரிக்கிறது.

இந்தப் பாம்புக் காட்சியில் பல் பிடுங்காத பாம்பே பயன்படுத்தப்பட்டிருந்ததாம். அதை முதலில் அறியாத ரஜினிகாந்த் காட்சியில் நடித்துவிட்டார். அடுத்து அவருக்கு உண்மை தெரிந்தபோது, பல் பிடுங்காத பாம்பைப் பிடித்துக்கொண்டு நடிக்கப் பயந்துள்ளார். ஆனால், பாஸ்கர் தொடர்ந்து காட்சியின் முக்கியத்துவம் கருதி பாம்பைப் பிடிக்க வலியுறுத்தியதுடன் எப்படிப் பிடிக்க  வேண்டும் என பல் பிடுங்காத பாம்பைப் பிடித்து நடித்துக் காட்டியுள்ளார். அதன் பின்னரே ரஜினி அந்தக் காட்சியில் நடித்துக்கொடுத்திருக்கிறார். 

ரஜினி ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டியதொரு தொடக்கக் காலப் படம் பைரவி.

சனி, ஆகஸ்ட் 01, 2020

பாஸ்கர்: ஒரு தனித்துவ இயக்குநர்


பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா எனப் பரவலாக அறியப்பட்ட இயக்குநர்களது படங்களைப் பற்றிப் பலரும் எழுதுகிறார்கள். ஆகவே, அவர்களது படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன. உலக சினிமா குறித்தும் உலக இயக்குநர்கள் குறித்தும்கூடத் தமிழிலே பல கட்டுரைகள் கிடைக்கின்றன. ஆனால், தமிழ்த் திரைப்படங்களில் பங்களிப்புச் செய்துள்ள இயக்குநர்கள் சிலரது படங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் கிடைப்பதில்லை. கரோனா கால ஊரடங்கு நேரத்தில் அவர்களில் சிலரது படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஆகவே, அப்படியான சிலரைப் பற்றியும் அந்தச் சிலரது படங்களைப் பற்றியும் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன். 

முதலில் இயக்குநர் எம்.பாஸ்கர் பற்றிப் பார்க்கலாம். ஆலமரத்துக்குக் கீழே எதுவுமே வளராது என்று இயக்குநர் எம்.பாஸ்கர் தனது ‘பௌர்ணமி அலைகள்’ படத்தில் வசனம் ஒன்றை எழுதியிருப்பார். இந்தப் பழமொழி எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், அதைச் சரியான விதத்தில் சரியான இடத்தில் வசனமாகக் கையாண்டிருப்பார் அவர். தங்கள் படங்களுக்காகக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியவர்கள் என பாக்யராஜையும் டி ராஜேந்தரையும் முன்னிறுத்தும் பலருக்கும் பாஸ்கர் பெயரை அந்த வரிசையில் ஒன்றாக நிறுத்தத் தோணாது. காரணம்  மேலே வாசித்த அந்தப் பழமொழிதான். யாரிந்த பாஸ்கர்? 

பாஸ்கரைப் பற்றிய உடனடி அறிமுகம் வேண்டுமென்றால் இவர்தான் ரஜினி காந்த் முதலில் கதாநாயகனாக நடித்த ‘பைரவி’ படத்தை இயக்கியவர். 1978 ஜூன் 2 அன்று வெளிவந்தபைரவிமகத்தான வெற்றிப் படமாக அமைந்தது. ரஜினிகாந்தின் நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. எனது பள்ளிப் பருவங்களில் இவரது படங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். சட்டப் பிரச்சினைகளைக் கதைக் கருவாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கியவர் இவர் என்பது மட்டும் மனத்தில் பதிந்துபோயிருந்தது. இவரைப் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடியபோது, அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன். விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் 1935 ஏப்ரல் 3 அன்று, வி.எஸ்.மாரியப்பன் - ஜானகி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை முடித்திருக்கிறார். இயக்குநர் ஸ்ரீதரின் உதவியாளராகத் திரையுலகில் நுழைந்திருக்கிறார். இயக்குநர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், தூயவன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார். 

இதன் பின்னர்தான் இவருக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் படம் ’இன்னும் ஒரு மீரா’ என விக்கிபீடியா குறிப்பிடுகிறது. ஆனால், அது தவிர்த்து வேறு எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் அவர் இயக்கிய படம்தான் ’பைரவி’. இந்தத் திரைப்பட வாய்ப்பு முதலிலேயே இவருக்குக் கிடைத்துவிடவில்லை. முதலில் இயக்குநர் பட்டாபிராமனுக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் மறுத்திருக்கிறார். ஆகவே, பாஸ்கருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. ’பைரவி’ படத்தைத் தயாரித்த கலைஞானம் ரஜினியைக் கதாநாயகனாக்கியதால் அவருக்கு ஆதரவு தருவதாக வாக்களித்திருந்த சாண்டோ சின்னப்பா தேவர் கையைவிரித்துவிட்டார். அப்போது வில்லனாக நடித்துவந்த ரஜினியைக் கதாநாயகனாக்கியது தேவருக்கு உவப்பாயில்லை என்பதே காரணம். படம் வெற்றிபெறுமா என்னும் சந்தேகத்தின் காரணமாகவே கலைஞானத்துக்கு தேவர் உதவவில்லை. ஆனால், முன்வைத்த காலை பின்வைக்க விரும்பாத கலைஞானம் ரஜினிதான் கதாநாயகன் என்று உறுதியாக இருந்தார். இந்தச் சூழலில்தான் எம். பாஸ்கரை இயக்குநராக்க அவர் முடிவுசெய்திருக்கிறார். 


ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்காக முத்துராமனை அணுகியிருக்கிறார்கள். ஆனால், அவரும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் இதே முத்துராமன் ரஜினிக்கு வில்லனாக ’முரட்டுக்காளை’யில் நடித்திருந்தார். ஆகவே, அதுவரை நாயக பாத்திரத்தில் நடித்துவந்த ஸ்ரீகாந்தை அணுகி வில்லனாக நடிக்கச் சம்மதம் கேட்டிருக்கிறார்கள், அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். படத்தின் டைட்டிலில் முதலில் ஸ்ரீகாந்த் பெயர்தான் இடம்பெறும். அதற்குக் கீழேதான் ரஜினி காந்தின் பெயர் வரும். இப்படித்தான் ’பைரவி’ படம் உருவாகியிருக்கிறது. படத்தின் விநியோகஸ்தரான தாணு இந்தப் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி என விளம்பரம் செய்திருந்தார். படமும் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது.  

ஏறக்குறைய ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரை எடுத்து, திரைக்கதையை உருவாக்கி அதற்குப் பின்னர் அந்தத் திரைக்கதையை நண்பர்களிடம் படித்துக்காட்டி, அதை மேம்படுத்தி, பின்னர்தான் படப்பிடிப்புக்குச் செல்வார், எம்.பாஸ்கர் என இவரைப் பற்றி நடிகர் சிவகுமார் கூறியிருக்கிறார் எனத் தகவல் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. பாஸ்கரின் இயக்கத்தில் சிவகுமார் ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’, ‘தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’, ‘பௌர்ணமி அலைகள்’, ‘பன்னீர் நதிகள்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ’பைரவி’யும் இந்த நான்கு படங்களுமே எம். பாஸ்கரின் திரைப்படங்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. இதன் பின்னர் கார்த்திக் நாயகனாக நடிக்க ‘சட்டத்தின் திறப்பு விழா’, ‘சக்கரவர்த்தி’ ஆகிய படங்களை உருவாக்கியுள்ளார். மொத்தம் 11 படங்களை இயக்கியுள்ளார். பிரமாதமான இயக்குநர் என்று இவரை முன்வைக்க இயலாவிடினும் தனித்துவமான இயக்குநர் என்று சொல்லத்தக்க வகையில் படங்களை உருவாக்கியுள்ளார். ’விஷ்ணு’, ’காதல் ரோஜாவே’, ’தோட்டா’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நான்கு முறை செயலாளராக இருந்துள்ளார். இவரது திருமணத்துக்கு சிவாஜி கணேசன் தன் துணைவியாருடன் சென்று கலந்துகொண்டிருக்கிறார். பாஸ்கர் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்திருக்கவில்லை என்றபோதும், பாஸ்கர் மீது கொண்ட அன்பு காரணமாகவே இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு அவர் சென்றிருக்கிறார்.


2013 ஜூலை 12 அன்று மாரடைப்பால் இவர் மரணமடைந்துள்ளார்.

லேட்டஸ்ட்

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

தொடர்பவர்