படத்தின் கதை மிகவும் எளிமையானது. ஒரு சிற்றூரின் சிறிய சபை, அதன் போதகர், அந்தச் சபையின் அங்கத்தினர்கள், அவர்களது மனோபாவங்கள் ஆகியவற்றைச் சுற்றிய சம்பவங்களே படமாக்கப்பட்டுள்ளன. இதை வைத்துக்கொண்டு, நம்பிக்கை, விசுவாசம், அன்பு, கருணை, போன்ற நற்குணங்களையும், வஞ்சம், விரோதம், வெறுப்பு போன்ற தீக்குணங்களையும் ஆராய்கிறது திரைப்படம்.
அம்பரி கோர்ட் என்னும் அந்தச் சிற்றூரின் சபைக்குப் பாதிரியாக வருகிறார் அந்த இளைஞர். பூஞ்சையான உடல் வாகு. எப்போதும் துயரத்தில் தோய்ந்தெழுந்தது போன்ற மூஞ்சி. பாதிரியாருக்குரிய அங்கியின்றி அவரைப் பார்த்தல் அரிது. இறை நம்பிக்கையை இதயம் முழுவதும் பரவவிட்ட மனிதர் அவர். தனது நாள்களின் ஒவ்வொரு நிகழ்வையும் அவர் தனது டைரியில் குறித்துவைக்கிறார். அந்த நிகழ்வுகளே காட்சிகளாக விரிகின்றன.
1951இல் வெளிவந்துள்ள திரைப்படம் இது. இதில் நடித்துள்ள பாதிரி கிறிஸ்துவை நினைவூட்டுகிறார். படம் பெரிய ஆன்மிக அனுபவத்தைத் தரக்கூடியதாக அமைந்துள்ளது. மிகத் தீவிரமான படம்தான். பார்வையாளரைச் சுவாரசியப்படுத்தும் எந்த அம்சமும் இல்லாத படம். எந்தக் காட்சியில் வேண்டுமானாலும் விருப்பமில்லாத பார்வையாளர் வெளியேறிக்கொள்ளலாம் என்ற முடிவெடுத்த பின்னர் படத்தை ப்ரஸ்ஸான் இயக்கியிருப்பார் என்றே தோன்றுகிறது.
இளம் பாதிரியுடன் யாருமே இல்லை. அவர் தனித்திருக்கிறார். அவரது உடல்நலமும் உவப்புக்குரியதாக இல்லை. ரொட்டியும் ஒயினும் மட்டுமே அவரது உணவு. அவற்றைத் தவிர வேறு எதுவும் அவருக்கு ஒத்துக்கொள்வதில்லை. ஒரு நாளில் அவருக்குப் பரிசாகக் கிடைக்கிறது முயல் கறி. அதைக் கூட அவரால் சமைத்துச் சுவைக்க இயலாது என்பதுதான் அவரது நிலைமை. வயிற்று உபாதை அவரை அடிக்கடி வாட்டி எடுக்கிறது. சபையிலோ அங்கத்தினர்களது நடவடிக்கை அவரை வேதனைப்படுத்துகிறது. முதியவர் ஒருவர் அவருடைய மனைவியின் இறுதிக் காரியத்துக்குச் சல்லிக்காசுகூடத் தர முடியாது எனச் சாதிக்கிறார். ஏழைகளை வதைக்காதீர்கள் என வாதிடுகிறார். எல்லோருக்குமான கட்டணம் எதுவோ அதுதான் அவருக்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. சபையின் கடமைகளை நிறைவேற்றுவதில் பாதிரிக்குச் சமூகத் திறமைகள் போதுமான அளவு இல்லை என அவரது மூத்த பாதிரிகளும் சபையோரும் கூறுகிறார்கள். ஆனால், பாதிரியோ இறை நம்பிக்கையில் ஊறித் ததும்புபவர். ஆனாலும், இரவுகளில் துயரம் கவியும் தருணங்களே அவரது துணையாய் உள்ளன.

புனித சமயச் சடங்கான திடப்படுத்துதல் தொடர்பான வகுப்புகளில் கலந்துகொள்ளும் சிறுமிகளில் செராஃபிதா என்னும் சிறுமி ஒருத்தி மட்டும் துடிப்பாக இருக்கிறாள். பாதிரியின் கேள்விக்குச் சமயம் சார்ந்த சரியான பதிலைக் கூறுகிறாள். தம் சீடர்களிடம் ரொட்டியைப் பிய்த்து உண்ணத் தந்தபோது, நீங்கள் உண்ணும் இந்த ரொட்டியானது எனது உடம்பு என்றும் ஒயினை அருந்தத் தந்தபோது, நீங்கள் அருந்தும் இந்த ஒயின் எனது ரத்தம் என்றும் கூறியதை நினைவுபடுத்தும் வகையில் அனுசரிக்கப்படும் சடங்குதான் திடப்படுத்துதல் என்கிறாள். பாதிரியின் உள்ளம் நிறைகிறது. ”எப்படி உன்னால் மட்டும் இப்படிச் சரியான பதிலைக் கூற முடிகிறது” எனப் பாதிரி கேட்கிறார். ”உங்களது அழகான கண்கள் தாம் காரணம்” என்கிறாள் செராஃபிதா. கதவுக்கு வெளியே பிற சிறுமிகள் சிரிக்கிறார்கள். பாதிரிக்கு என்னவோ போல் ஆகிவிடுகிறது. பாதிரி மௌனமாகக் கடக்கிறார் அந்தத் தருணத்தை. ஆனால், அவரது மனபாரம் அதிகரிக்கிறது. அவர்கள் ஏன் இவ்வளவு விரோத பாவம் காட்டுகிறார்கள் என டயரி எழுதுகையில் கேள்வி எழுப்புகிறார்.
செரஃபிதாவின் நடவடிக்கைகள் பாதிரிக்குக் கவலையை உண்டாக்குகின்றன. ஒரு நாள் பாதையோரத்தில் தோழிகளுடன் நிற்கும் அவளை சைக்கிளில் சென்ற பாதிரி பார்க்கிறார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் துள்ளிக் குதித்து ஓடும் செரஃபிதா தனது பள்ளிப் பையைத் தூக்கி சேறும் சகதியுமான நிலத்தில் எறிந்துவிட்டுப் போகிறாள். அதை எடுத்து அவளிடம் கொடுப்பதற்காக அவளுடைய வீட்டுக்குப் போகும் இளம் பாதிரிக்கு அங்கே எந்த மரியாதையும் கிடைக்கவில்லை; அவரது உதவி மதிக்கப்படவில்லை. மிகவும் பாராமுகத்துடன் அவர் நடத்தப்படுகிறார். செரஃபிதாவால் பாதிரி மிகுந்த வாதைக்கு ஆளாகிறார். தனது ஜெபம் குறைந்துவிட்டதோ என்னும் ஐயம் பாதிரிக்கு ஏற்படுகிறது. அதே செரஃபிதா பின்னொரு நாளில் மயங்கி சேற்றில் வீழ்ந்து கிடக்கும் பாதிரியைத் தொட்டுத் தூக்கித் துடைத்துப் பணிவிடை செய்து அனுப்புகிறாள். அப்போது அந்தச் சபையின் அங்கத்தினர்கள் எல்லோரும் பாதிரியைக் குடிகாரர் என்றே நினைக்கிறார்கள். அந்தச் சூழலில் செரஃபிதா அவரை அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறார்.
அந்த சபைக்குட்பட்ட மாளிகையில் ஃபெரெண்ட் சீமான் ஒருவர் வசிக்கிறார். மாளிகையின் சீமாட்டி சிறுவயதில் இறந்துவிட்ட தன் மகனை எண்ணியே துக்கத்துடன் நாள்களைக் கழிக்கிறார். சீமானுக்கும் வீட்டின் பணிப்பெண்ணான லூயிஸுக்கும் ரகசிய உறவு இருக்கிறது. இந்த உறவு காரணமாக சீமானின் பெண்ணான சந்தால் லூயிஸை இழிவுபடுத்துகிறாள். வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள் பருவப் பெண்ணான சந்தாலைக் கலக்கப்படுத்துகின்றன; அவளது நடத்தையில் கடினத்தன்மை கூடுகிறது. இது தொடர்பான தீர்வுக்கு முயல்வதாக சந்தாலிடம் கூறுகிறார் இளம் பாதிரி. அதற்காக, சந்தாலின் தாயிடம் பேசப்போன அன்று அந்த உரையாடலை நிகழ்த்த முடியாத அளவுக்குப் பாதிரியின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது- இவ்வளவுக்கும் நல்ல உடல்நிலையுடன் தான் அந்த மாளிகைக்குள் நுழைந்தார், என்னவோ திடீரென உடல்நிலை மோசமானது. மிகத் தீவிரமான உடல்நிலைக் கோளாறு என்பதை பாதிரி உணர்கிறார். ஏற்கெனவே இதைப்போல் ஆறு மாதங்களுக்கு முன்னரும் உடல் நலம் கெட்டிருந்தது அவரது நினைவுக்கு வருகிறது.
டார்ஸி என்ற இடத்தின் பாதிரியார் தந்த அறிவுரையின்படி டாக்டர் தெல்பெந்தெவைப் பார்க்கப் போகிறார் இளம் பாதிரி. அவரது உடலநலனைப் பரிசோதித்த டாக்டர் மிகவும் பலவீனமாக உள்ளதாகக் கூறுகிறார். மிகக் குறைவாக உணவு உண்ணும் காரணத்தாலேயே இப்படியான பாதிப்பு ஏற்பட்டதாகவும் நிலைமை மோசமாக உள்ளதாகவும் அவர் பாதிரியிடம் தெரிவிக்கிறார். ”ஆல்கஹால் என்ன ஆனது” என வினவுகிறார். ”ஆல்கஹாலா” என பாதிரி அதிர்ச்சியாகிறார். ”நீ குடித்ததைக் கேட்கவில்லை நீ பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னர் உனக்காகச் செலவிடப்பட்ட ஆல்கஹால்” என்கிறார் டாக்டர். அவர் இயேசுவின் ரத்தம் குறித்துக் கேள்வி எழுப்புவதாக உணர்ந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. ”உனது கண்கள் நம்பிக்கைமிக்கவை, விசுவாசத்தை வெளிப்படுத்துபவை” என்று கூறும் டாக்டர், ”நீ, டார்ஸியின் பாதிரியார், நான் மூவரும் ஒரே இனம்” என்கிறார். அநீதியை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்கள் என்னும் பொருளில் அப்படிக் கூறுகிறார். டாக்டர் தனக்கு இறை நம்பிக்கை இல்லை என்கிறார். ஆழ்ந்த வருத்தத்தால் காயம்பட்டிருக்கும் மனத்தால் டாக்டர் அப்படிப் பேசுவதாக இளம் பாதிரி உணர்கிறார்.

ஒரு நாள் வழியில் டார்ஸியின் பாதிரியாரைச் சந்திக்கிறார் இளம் பாதிரி. அவர் ஆயர்களுக்குப் பாதிரியின் மீது நம்பிக்கை இல்லை என்கிறார்; பாதிரிக்கு விவேகம் இல்லை என்றும் கூறுகிறார். அவரது மிகப் பெரிய திட்டங்கள் சூழலுக்கு ஒத்துவராதவை அவற்றில் நம்பகத்தன்மை இல்லை என்பதைப் போன்ற கருத்தைத் தெரிவிக்கிறார். இவையெல்லாம் இயேசு கிறிஸ்துவை விமர்சிப்பதுபோலத்தான் உள்ளன. அவரது அன்பு என்பது நமது சமூகச் சூழலுக்கு ஒத்துவருமா எனக் கேள்வி கேட்பதுபோல் தான் இருக்கிறது. உலகம் புரியாத பிள்ளை என்பதைப் போல் இளம் பாதிரியைக் குறிப்பிடுகிறார் டார்ஸியின் பாதிரியார். இந்தக் காட்சியைக் காணும்போது, பகைவரை நேசிக்கச் சொன்ன இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை மானசீகமாக நம்மால் தரிசிக்க முடிகிறது, அதே நேரத்தில் அதை ப்ரஸ்ஸான் எள்ளிநகையாடுவதாகவும் தோன்றுகிறது.
ஒருநாள் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து தேவாலயம் சென்று ஜெபிக்கிறார். இதயத்தை நொறுக்கும்படியான உருக்கமான ஜெபத்தில் ஈடுபடுகிறார். அன்று காலையில் அவருக்கு மோசமான தாளில் பெயர் குறிப்பிடப்படாமல் எழுதப்பட்ட ஒரு கடிதம் வருகிறது. அவருக்கு வருத்தப்படுவதாகத் தெரிவித்த அந்த மொட்டைக் கடிதம் அவரை அந்தச் சபையை விட்டு வெளியேறும்படி எச்சரிக்கிறது. அவரது நலத்தை முன்னிட்டே அவரை வெளியேறச் சொல்வதாகவும் எவ்வளவு விரைவில் வெளியேற முடிகிறதோ அவ்வளவு விரைவில் வெளியேறுவது நல்லது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் இருந்த கையெழுத்தும், ஃபெரண்ட் வீட்டுப் பணிப்பெண் லூயிஸ் கையில் உள்ள பைபிளிலிலிருந்த கையெழுத்தும் ஒரே போல் உள்ளன. அதன் பின்னர் அவரால் முழு மனத்துடன் ஜெபிக்க இயலவில்லை. ஆனால், நுரையீரலுக்குக் காற்றுப் போல, குருதிக்கு பிராண வாயு போல அவருக்கு ஜெபம் தேவையாயிருக்கிறது. தான் தனித்துவிடப்பட்டதாக பாதிரி உணர்கிறார். எப்போதும் போன்ற அதே தனிமை, அதே ஆழ்ந்த, படுதீவிர, கலக்கம் தரும் வகையிலான அமைதி. தடைகளை உடைக்கும் நம்பிக்கை காலாவதியாகிவிட்டதோ என்ற உணர்வு அவருக்கு எழுகிறது. கையில் இருக்கும் லாந்தர் விளக்கை ஊதி அணைக்கிறார். கடவுள் தன்னைவிட்டு விலகிவிட்டாரோ என அவருக்குத் தோன்றுகிறது.
தனது கடமைகளிலிருந்து தான் வழுவிவிடவில்லை என்று நினைக்கிறார். தனது உடல் நலம் மேம்பட்டால் தனது பணிகளை இன்னும் எளிதாக நிறைவேற்ற முடியும் என நம்புகிறார். இந்த நிலையில் டாக்டர் தெல்பெந்தே மர்மமான முறையில் இறந்துபோகிறார். அது தற்கொலை எனும் பேச்சும் ஊருக்குள் உலவுகிறது. அவரது மரணம் டார்ஸியின் பாதிரிக்குத் தாங்கவொண்ணாத வேதனையைத் தருகிறது. அவர் தற்கொலை செய்துகொண்டாரா என இளம் பாதிரி டார்ஸியின் பாதிரியாரிடம் கேட்கிறார். ”டாக்டர் ஏமாற்றமடைந்திருந்தார், அவரது நோயாளிகள் அவரை விட்டுவிட்டுச் சென்றனர் மொத்தத்தில் தனது தொழிலில் மீண்டும் ஜொலிக்க முடியும் என்னும் நம்பிக்கையை இழந்துவிட்டார்” என்கிறார் பாதிரியார். அதை அப்படியே கேட்கும் நிலையில் இளம் பாதிரி இல்லை. டார்ஸியின் பாதிரியார் கூறிய சொற்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல் இருக்கிறது இளம் பாதிரிக்கு. அவர் இதுவரை அனுபவித்தறியாத மிகுந்த மன வேதனைக்கு ஆளாகிறார். ”உண்மையிலேயே டாக்டர் தற்கொலை செய்துகொண்டாரா?” என மீண்டும் கேட்கிறார். ”என்னிடம் கேட்காதே கடவுள்தான் நீதிபதி அவருக்குத்தான் தெரியும்” என்கிறார் டார்ஸியின் பாதிரியார். ”நாம் போரில் ஈடுபடுகிறோம்; எதிரியை எதிர்கொள்ள வேண்டியதுதான். ’எதிர்கொள்ள வேண்டியதுதான்…’ என்பது அவரது கொள்கை அதை அடிக்கடி டாக்டர் சொல்வார் நினைவிருக்கிறதல்லவா” என்று சொல்லிவிட்டுப் பாதிரியார் செல்கிறார். இந்தக் காட்சியின்போது, ஒலிக்கும் தேவாலய மணி பெருஞ்சோகத்தை, வேதனையை வெளித்தள்ளுகிறது. இளம் பாதிரி சற்று நேரம் அங்கேயே நின்றுவிட்டு மெதுவாக அங்கிருந்து நகர்கிறார். மழையின் நீர் நிலத்தடிக்குப் போவதைபோல் பாதிரியாரது சொற்கள் இளம் பாதிரியின் உள்ளத்தின் ஆழத்தில் சென்று புதைகின்றன.
எனது நம்பிக்கையை நான் இழந்துவிடவில்லை. இந்தத் திடீரான, குரூரமான மனக் கசப்பு மிகுந்த அனுபவம் எனது நரம்புகளைப் பாதித்துள்ளது; என்னைச் சஞ்சலப்படுத்தியுள்ளது ஆனால் எனது நம்பிக்கை மாறாமல் அப்படியேதான் இருக்கிறது என்று நினைக்கிறார் இளம் பாதிரி. இவ்வாறு நினைத்தபோதே தன்னை யாரோ அழைத்தது போல் இருக்கிறது என அவருக்குத் தோன்றுகிறது. மெதுவாக எழுந்துசென்று ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்கிறார். அங்கே யாரும் இருக்க மாட்டார்கள் என்று உணர்ந்தும் அப்படிப் பார்க்கிறார்.
பாதிரியைச் சந்திக்க வருகிறாள் சந்தால். அவளது உரையாடலில் அவளுக்கு அவளுடைய தந்தை மீதும் தாய் மீதும் அவள் கொண்ட வெறுப்பு வெளிப்படுகிறது. பணிப்பெண் மீதான கோபத்தை வெளிப்படுத்துகிறாள். அவளைக் கொன்றுவிடுவேன் அல்லது என்னை மாய்த்துக்கொள்வேன் எனக் கடுங்கோபம் வெளிப்பட மொழிகிறாள். வெறுப்பைக் கைவிடச் சொல்கிறார் பாதிரி. அவளைப் பாவமன்னிப்பு கூண்டுக்கு நகர்த்திச் செல்கிறார். ஆனால், அவளோ பாவமன்னிப்பு பெறத் தான் விரும்பவில்லை என்கிறாள். எனக்கு வேண்டியது நீதி என்பது உங்களுக்கு நன்கு தெரியும் என்கிறாள். தன் தாய் ஒரு கோழை என்கிறாள். தனக்கு மகிழ்ச்சியானவற்றைக்கூடச் செய்துகொள்ள முடியாதவள் என்கிறாள். பணிப்பெண்ணும் தந்தையும் என்ன சொன்னாலும் நம்புபவள் என்கிறாள். தந்தைமீதும் மரியாதை இல்லை என்கிறாள். அவர்கள் எல்லோரையும் வெறுக்கிறேன் என்கிறாள். அவள் உதடுகள் வெளிப்படுத்தாத வார்த்தைகளையும் அவரால் உணர முடிகிறது.
அவள் பையில் மறைத்துவைத்திருக்கும் கடிதத்தைக் கொடு எனக் கேட்கிறார் பாதிரி. அவள் மறுக்காமல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, கண்டிப்பாக நீங்கள் ஒரு பிசாசாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டுச் செல்கிறாள். அவள் சென்ற பின்னர், அந்தக் கடிதத்தை பாதிரி வாசிக்காமல் நெருப்பிலிட்டு எரிக்கிறார். அது அவள் தன் தந்தைக்கு எழுதிய தற்கொலைக் குறிப்பு என்பதாகக் காட்சியில் உணர்த்தப்படுகிறது. அவளது உக்கிரமான கண்களில் தற்கொலைத் தடயத்தைப் பாதிரி உணர்கிறார். தான் ஒன்றுக்கும் பயனற்ற துக்ககரமான பெரிய மதிப்பில்லாத பாதிரி என அவருக்குத் தன்னைப் பற்றிய ஓர் எண்ணம் ஏற்படுகிறது. அவள் கூறியவற்றைக் காது கொடுத்துக் கேட்டிருக்கக் கூடாது என்றும் அவருக்குத் தோன்றுகிறது. கடவுள் அவளைத் தண்டிப்பதாக அவர் நினைக்கிறார். மனிதர்கள் குறித்த எதுவும் தனக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவும் இயலாது என்று அவருக்குத் தோன்றுகிறது.
சந்தாலிடம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் பொருட்டு சீமாட்டியை வீட்டில் சென்று சந்திக்கிறார் பாதிரி. சந்தால் எதுவும் விபரீதமாகச் செய்துகொள்வாளோ எனப் பயப்படுவதாகச் சொல்கிறார். அவளுக்கு மரண பயம் அதிகம் என்கிறாள் சீமாட்டி. அப்படிப்பட்டவர்கள் தங்களை மாய்த்துக்கொள்வார்கள் என்கிறார் பாதிரி. அப்படிப் பிறர் உங்களிடம் சொல்லியிருக்கக் கூடும் எனச் சொல்லும் சீமாட்டி நீங்கள் மரணத்துக்குப் பயப்படுகிறீர்களா என வினவுகிறாள். கணவனின் துரோகம், மகளின் வெறுப்பு போன்றவற்றுக்குத் தானா பொறுப்பு என்பதைப் போன்ற கேள்விகளை எழுப்புகிறாள் சீமாட்டி. நல்லது கெட்டதுகளில் நாம் ஒருவரில் ஒருவர் பிணைக்கப்பட்ட விதத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால் நம்மால் வாழவே முடியாது என நான் நம்புகிறேன் என்கிறார் பாதிரி. மரணம், அன்பு, கடவுள் நம்பிக்கை போன்ற விஷயங்கள் குறித்து இருவரும் உரையாடுகிறார்கள். அதன் வழியே ஆன்மிக உலகின் பல சாளரங்கள் திறந்துகொள்கின்றன.
பாதிரி கடவுளின் மேன்மையை எடுத்துச் சொல்கிறார். கடவுளிடமிருந்து வெகுதூரம் விலகியிருந்த சீமாட்டி கடவுள்தன்மையைப் புரிந்துகொள்கிறார். தனது மகனின் மரணம் காரணமாகக் கடவுளிடமிருந்து விலகியிருந்த அவர் வேறு திசைக்குத் திரும்புகிறார். தனது கழுத்தில் அணிந்திருந்த மகனின் படம் கொண்ட டாலர் கோக்கப்பட்டிருந்த சங்கிலியை அறுத்து நெருப்பில் எரிகிறார். என்ன பைத்தியக்காரத்தனம் என்கிறார் பாதிரி. என்னை மன்னியுங்கள் என்கிறார் சீமாட்டி. கடவுள் யாரையும் துன்புறுத்துவதில்லை என்கிறார் பாதிரி. நாம் ஒருவரோடொருவர் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறார் என்கிறார். கடவுள் அன்பின் எஜமானன் அல்ல அன்பே அவர்தான் என்றும் கூறுகிறார் பாதிரி. சீமாட்டி வேதனையுடன் முழங்கால் படியிட்டுத் தலையைக் கவிழ்கிறார். அமைதி ஆட்கொள்ளட்டும் எனப் பாதிரி ஜெபித்து அவர் சிரசின் மேல் சிலுவைக்குறியிடுகிறார்.
பாதிரி வீட்டுக்கு வரும்போது, தோட்டக்காரர் ஒரு சிறிய பொதியை அவரிடம் கொடுக்கிறார். அதில் சீமாட்டி நெருப்பில் எரிந்த சங்கிலியிலிருந்த வெற்று டாலரும் அவரது கடிதமும் இருக்கின்றன. இறந்துபோன மகனின் பயனற்ற நினைவு எல்லாவற்றிலிருந்தும் விலக்கித் தன்னைத் தனிமைக்குள் தள்ளிவிட்டது என்றும் அதிலிருந்து அடுத்த குழந்தை தன்னை வெளியே இழுத்துவிட்டிருக்கிறது போல் தெரிகிறது என்றும் எழுதிய கடிதத்தைப் பாதிரி வாசிக்கிறார். ஒரு பொறுப்பிலிருந்து தான் வழுவவில்லை என்ற நிம்மதி சீமாட்டிக்குக் கிடைத்ததைக் கடிதம் தெரிவிக்கிறது. பாதிரி தன்னை அமைதியடையச் செய்ததை நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார் சீமாட்டி. நாம் இனி சந்தித்துக்கொள்வோமா என்று தெரியவில்லை எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சீமாட்டி அன்றிரவு இறந்துவிடுகிறார்.
துயரமிகு பின்னணியிசை ஒலிக்க பாதிரி சீமாட்டியின் மாளிகையை நோக்கி வியர்க்க விறுவிறுக்க ஓடுகிறார். சீமாட்டியின் முகத்தில் புன்னகை உறைந்திருக்கலாம் என நம்பிய பாதிரி புன்னகை அரும்பியிராத முகத்தையே பார்க்கிறார். கைகளை உயர்த்தி அவள் அமைதிகொள்ள ஜெபித்து, அப்படியே முழங்கால் படியிடுகிறார். தன் வேலையை முடித்துவிட்டு மீண்டும் மாளிகைக்குச் செல்கிறார். சீமாட்டியின் சடலத்தின் நெற்றியில் கைவைத்து அவள் அமைதிகொள்ள வேண்டுகிறார்.
மறுநாள் மாளிகைக்குச் செல்கிறார். அங்கே சந்தால் அவரை அழைத்துச் செல்கிறாள். பணிப்பெண் வீட்டை விட்டுப் புறப்பட்ட செய்தியைச் சொல்கிறார். சீமாட்டியின் இருக்கையில் சந்தால் அமர்கிறார். தான் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவிக்கிறாள். தான் விரும்பியது தனக்குக் கிடைத்துவிட்டதாகக் கூறுகிறாள். நீ இப்போது இருப்பது போலவே தொடர்ந்து இருந்தால், நீ யாரையாவது ஒருவரை வெறுத்துக்கொண்டே இருப்பாய்… உண்மையில் நீ வெறுப்பது பிறரையல்ல உன்னையே என்கிறார் பாதிரியார். நான் விரும்பியது நடக்கவில்லை எனில் நானே என்னை வெறுக்கத்தான் செய்வேன் என்கிறாள் அவள் ஆங்காரத்துடன்.
சீமாட்டியின் மரணத்துக்குப் பாதிரி காரணம் என்று அந்தச் சிற்றூர் நம்புகிறது. ஆனால், சீமாட்டி மன அமைதியுடன்தான் மரணமடைந்துள்ளார் என்பது, சீமாட்டியை அவளது மன இறுக்கத்திலிருந்து விடுவிடுத்து இறைவனுக்கு அருகில் கூட்டிவந்துள்ள பணியைச் செய்துமுடித்த பாதிரிக்கு மட்டுமே தெரியும். அதற்குச் சான்றாக, பாதிரிக்குச் சீமாட்டி எழுதிய கடிதம் உள்ளது. பாதிரியோ அந்தக் கடிதத்தைக் காட்டி தனது தரப்பை நிரூபிக்க விரும்பவில்லை. அப்படியே இருந்துவிடுகிறார்.
பாதிரியின் உடல்நிலை மிகவும் மோசமாகிறது. அருகிலுள்ள நகரத்துக்கு சிகிச்சைக்காகச் செல்கிறார். நகரத்துக்குச் செல்வதற்காக ரயில் நிலையத்துக்கு பாதிரியை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்கிறான் சந்தாலின் உறவுக்கார இளைஞன். அந்த இரு சக்கர வாகனப் பயணம் பாதிரிக்கு ஒரு சாகசம் போல் தோன்றுகிறது. மிகச் சன்னமான நேரமே நிகழ்ந்தாலும் பாதிரியின் வாழ்வில் அந்தப் பயணம் பொருள்மிக்கதாகிறது. அதன் பின்னர் அவர் மருத்துவரைப் பார்க்கிறார். பாதிரிக்குப் புற்றுநோய் இருப்பது உறுதியாகிறது. பழைய நண்பர் ஒருவரைப் பார்க்கச் செல்லும் பாதிரி அங்கேயே உயிரை விட்டுவிடுகிறார்.
மொத்தத்தில், பாதிரியின் வாழ்க்கை பல கேள்விகளை எழுப்பிவிடுகிறது. எல்லோருக்கும் நல்லவராக நடக்க முயன்ற பாதிரியை ஏன் ஒருவரும் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. பாதிரியைப் போன்றவர்கள் கதி இதுதானா? உலகம் சிறக்க அன்பொன்றே வழி என்று சொன்ன கிறிஸ்துவின் எண்ணம் தவறா? இந்த உலகம் நல்லவர்களுக்கானதில்லையா? மிகச் சரியான மனிதரான அந்தப் பாதிரி ஏன் மிகத் தவறான மனிதராகப் புரிந்துகொள்ளப்பட்டார்?
அந்தச் சிறிய ஊர் என்பதை முழு உலகமாகவும் அதன் அங்கத்தினர்களை உலக மக்களாகவும் பாதிரியை கிறிஸ்துவாகவும் கொள்ளும்போது, படம் விரிந்த தளத்தில் பொருள்தருகிறது.
படத்தில் இரண்டு மரணங்கள் இடம்பெறுகின்றன. ஒன்று, டாக்டர் தெல்பந்தேவின் மரணம், அது தற்கொலை எனச் சொல்லப்படுகிறது. அவர் கடவுள் நம்பிக்கையற்ற மனிதராகவே காட்டப்படுகிறார். அடுத்தது சீமாட்டியின் மரணம். அவர் கடவுளை உணர்ந்து அவர் அருகில் சென்ற வேளையில் மரணமடைகிறார். ஆனால், அவரது முகத்தில் இறப்புக்குப் பின்னர் ஒரு சிறிய புன்னகைகூட இல்லை. இவை எல்லாம் சேர்ந்து ப்ரஸ்ஸான் கடவுள் தொடர்பாக என்ன சொல்ல வருகிறார் என்பதைப் பற்றிக் கோடிட்டுக் காட்டுகின்றன. அதைச் சிந்திக்கும் வேளையில் நமக்குப் படம் வெவ்வேறு போதனைகளைத் தருகிறது. அவற்றுக்காகத் தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டியதிருக்கிறது.
*