இத்திரைப்படம் 1984 ஆகஸ்டு 10 அன்று வெளியாகியுள்ளது. அன்றுதான் தாத்தா இறந்த நாள். அந்த ஆண்டு தேர்தல் டிசம்பர் 24 அன்று நடைபெற்றுள்ளது. தேர்தலின்போது, திமுக சார்பில் அச்சிடப்பட்டிருந்த, நண்பரின் நலிவு நீங்கிட நலமார்ந்த வாழ்த்துகள், நாட்டின் நலிவு நீங்கிட உதயசூரியனுக்கு வாக்குகள் என்னும் வாசகங்களைக் கொண்ட, சுவரோட்டியை இலஞ்சியின் சுவர்களில் பார்த்துள்ளேன். எம்ஜிஆரும் கலைஞரும் அருகருகே இருப்பது போன்ற படம் போட்டு அந்தச் சுவரொட்டி அச்சிடப்பட்டிருந்தது. இது குறித்து 2014இல் ஒரு பதிவிட்டுள்ளேன்.
தேர்தல் முடிவுகள் டிசம்பர் 28 அன்று வெளியாகியுள்ளன. அன்றைய மாலை நாளிதழைத்தான் நான் பார்த்திருக்க வேண்டும். கணக்குப்படி பார்த்தால் அப்போது நான் ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் படம் பார்க்கப் போயிருக்கிறேன். சரி இனி படம் குறித்த விஷயத்திற்கு வருவோம்.
படத்தின் கதை, வசனம், பி.கலைமணி. மணிவண்ணன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஒரு வில்லை வளச்சு வச்ச புருவமோ பாடல் காட்சியை முன்னர் பார்த்த நினைவு அப்படியே பசுமரத்தாணி போல் உள்ளது. இப்படத்தின் சோலை புஷ்பங்களே பாடல் அப்போது, இலங்கை வானொலியில் நீண்ட நாள்களாக முதலிடம் பிடித்த பாடலாக இருந்தது. நேயர்களின் வாக்குகள் அடிப்படையில் டாப் டென் பாடல்கள் போல ஒரு வரிசையில் பாடல்கள் ஒலிபரப்பப்படும். அதில் இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது. பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். பி.சுசிலாவும் கங்கை அமரனும் பாடியுள்ளனர்.
இப்போது படத்தைப் பார்த்தபோது, சில காட்சிகள் மனத்தில் பதிந்திருந்ததை உணர முடிந்தது. குறிப்பாக, நடிகர் சந்திரசேகர் கையில் ஊன்றுகோலுடன் சண்டையிடும் காட்சி; நடிகை தாராவின் பின்னர் வாத்துகள் போகும் காட்சி... இவை ஓரிரு எடுத்துக்காட்டுகள்.
படம் இப்போது பார்க்கவும் சுவாரசியமாகத்தான் இருந்தது. உணர்வுபூர்வமான திரைக்கதை. மனசவிட மாங்கல்யத்தை முக்கியமா நெனைக்கிற தலைமுறை உள்ளிட்ட வசனங்கள் கலைமணியின் எழுத்துத் திறமையைக் காட்டுகின்றன. படத்தை இயக்கிய வகையில் மணிவண்ணனின் முத்திரையைப் பார்க்க முடிகிறது. படத்தில் வேண்டுதல் தொடர்பான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்தக் கோவிலில் மனதார வேண்டிக்கொண்டு அதை ஒரு காகிதத்தில் எழுதி அங்கே உள்ள மரத்தில் கட்டித் தொங்கவிட்டால் அது அப்படியே நிறைவேறும் என்பது நம்பிக்கை. அங்கே படத்தின் நாயகனும், நாயகியும் ஒரு காரியத்தை எண்ணித் தனித் தனியே வேண்டிக்கொள்வார்கள். ஆனால், அந்த இரண்டுமே பலிக்க மாட்டா.
முரளி, தாரா, வினுச்சக்ரவர்த்தி, ஒய்.விஜயா, காந்திமதி, செந்தில், ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கோணக் காதல் கதைதான். ஆனால், காதல் கைகூடாவிட்டாலும் கவலைப்பட ஏதுமில்லை. வாழ்க்கை காதலைவிட மிகவும் பெரியது என்பதை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக