இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், செப்டம்பர் 28, 2020

பாசமிகு அண்ணனும் தம்பியும்


நடிகை குஷ்பூ தமிழில் அறிமுகமான படம் தர்மத்தின் தலைவன். குஷ்பூவுக்கு முதல் படம் ஆனால், தேவர் பிலிம்ஸுக்கு இதுதான் கடைசிப் படம். ரஜினியின் ஆஸ்தான இயக்குநர் எஸ்பி.முத்துராமன் இயக்கிய படம் இது. திரைக்கதை வசனம் எழுதியிருந்தவர் பஞ்சு அருணாசலம். இந்தியில் 1978இல் வெளியான கஸ்மே வாடே என்ற அமிதாப் படத்தின் மறு ஆக்கப்படம் இது. தமிழில் பெரிய வெற்றி இல்லை என்றாலும் வெற்றிப் படமிது. தேவர் பிலிம்ஸுக்குப் படம் லாபத்தையே சம்பாதித்துக்குக் கொடுத்திருக்கிறது.
 

ரஜினி காந்த் இரட்டை வேடங்களில் நடித்த படங்களில் ஒன்று இது. பாலு என்ற பாலசுப்ரமணியன் என்னும் கல்லூரிப் பேராசிரியராகவும் ஷங்கர் எனும் ரௌடியாகவும் ரஜினி காந்த் நடித்திருக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நடிகை சுஹாசினி நடித்துள்ளார். மனதில் உறுதி வேண்டும்  படத்தில் வங்காளக் கடலே என்ற பாடலுக்கு சுஹாசினி ரஜினிகாந்த், விஜய காந்த், சத்யராஜ் ஆகியோருடன் ஆடிப்பாடுவார். அதற்குப் பிறகு அந்த மூவருடன் அவர் நடித்துவிட்டார். ரஜினியுடன் இந்தப் படம். விஜய் காந்துடன் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், சத்ய ராஜுடன் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு. 

கதையில் ஆக்‌ஷனுக்குப் பெரிய வாய்ப்பில்லை. ஆனால், ஷங்கர் என்னும் கதாபாத்திரம் ரௌடி என்பதால் ஆங்காங்கே சில சண்டைகள் இடம்பெற்றுள்ளன.  நடிகர் நாசர், ரகுபதி என்னும் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். குரு சிஷ்யன் படத்துக்குப் பிறகு ரஜினியும் பிரபுவும் சேர்ந்து நடித்த படம் இது. பாலு பணியாற்றும் கல்லூரியிலேயே படிக்கிறார் அவருடைய தம்பியான ராஜு (பிரபு). ராஜு படித்து முடித்து செட்டிலான பிறகு திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனக் காத்திருக்கிறார்கள் பாலுவும் சுமதியும் (சுஹாசினி). 

கல்லூரியில் ரகுபதிக்கும் ராஜுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. அந்தத் தகராறு முற்றிவிடுகிறது. பிரபுவை பெங்களூரு அனுப்பிவிடலாம் என்று பாலு முடிவெடுக்கிறார். அந்த வேளையில் ஏற்பட்ட அடிதடி சண்டையில் எதிர்பாராதவிதமாக பாலு இறந்துவிடுகிறார். இறக்கும் தருவாயில் சுமதிக்குத் திருமணம் செய்துவைக்க ராஜுவிடம் கோரிவிட்டுச் சாகிறார். பாலு இறந்த சேதி அறிந்த சுமதி பித்துப் பிடித்ததுபோல் ஆகிவிடுகிறார். சுமதியின் நிலைமை என்னவாயிற்று அண்ணனுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை ராஜுவால் காப்பாற்ற முடிந்ததா என்று செல்கிறது மீதிப் படம். 

படத்தின் முதல் பாதியில் வேட்டி சட்டையில் அமைதியாக ரஜினி வருவார். அதற்கு நேரெதிராக பிற்பாதியில் ஜீன்ஸ் அணிந்து, பையில் மது பாட்டிலோடு எந்நேரமும் உலவார். அப்படியே அண்ணனை உரித்துவைத்ததுபோல் இருக்கும் ரௌடியைத் தன் அண்ணன்போலவே நினைத்து அன்பு செலுத்துகிறார் ராஜு. ராஜுவுடைய காதலி தேவியாக குஷ்பூ நடித்திருக்கிறார். ராஜுவின் அந்தப் பாசம் ஷங்கருக்குப் புதிது.  ஆகவே, முதலில் ராஜுவிடம் விலகினாலும் கொஞ்சம்கொஞ்சமாக ராஜுவுடன் ஒட்டிக்கொள்கிறார் ஷங்கர். வழக்கமாகவே ரஜினி படங்களில் இடம்பெறும், 'நீ என்ன என்னன்னு சொன்ன?' என்ற கேள்வி இதிலும் உண்டு. 

சுமதி கதாபாத்திரத்துக்குப் பெரிய வேலை இல்லை. அவரது திருமணம்தான் படத்தின் பிரதானச் சிக்கல். ஆசையுடன் காதலித்த அத்தான் இறந்தபின்னர் அவரையே எண்ணி எண்ணி அவரது படத்தை வரைவதிலேயே தனது வாழ்நாளைக் கழிப்பதில் பிரியம் கொண்ட பத்தாம்பசலித்தனமான பாத்திரம் அது. அத்தான் சாயலில் உள்ள ரௌடியை முதலில் வெறுக்கிறார் சுமதி. தெரு நீரும் கங்கை நீரும் ஒன்றா என்று கேள்வியெல்லாம் கேட்கும் சுமதி இறுதியில் தெரு நீரைக் கங்கை நீராகக் கொள்வதுடன் படம் முடிவடைகிறது.  படமும் மிகவும் சுமாரான படம்தான். இப்போது பார்க்கவே இயலவில்லை. ஞாபக மறதியை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளை இப்போது பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.    

படத்தின் தணிக்கைச் சான்றிதழ் 1988 செப்டம்பர் 23 அன்று பெறப்பட்டிருக்கிறது. படம் வெளியான நாள் செப்.29 என்று படத்தின் ஆங்கில விக்கிபீடியா பக்கம் தெரிவிக்கிறது. தென்மதுரை வைகை நதி பாடல் காரணமாகவோ என்னவோ படம்   மதுரையில் 136 நாட்கள் ஓடியுள்ளது. மதுரை சிந்தாமணி, சோலைமலை என்னும் இரண்டு தியேட்டர்களில் படம் வெளியாகியிருக்கிறது. இளையராஜாவின் இசையில் தென் மதுரை வைகை நதி, முத்தமிழ்க் கவியே வருக ஆகிய பாடல்கள் சுகமானவை. நான் தட்டிக் கேட்பேன் ஆனால் கொட்டிக் கொடுப்பேன் என்னும் பஞ்ச் டயலாக் படத்தில் உண்டு. 

சனி, செப்டம்பர் 26, 2020

பாடிப் பறந்த கிளி...

தோற்றம்: 1946 ஜூன் 4 மறைவு: 2020 செப்டம்பர் 25

ஆளுமைகளில் பலரை கரோனா அழைத்துக்கொண்டுவிட்டது. அரசியல் துறையில் திமுகவைச் சேர்ந்த ஜே.அன்பழகனின் மரணம் போல் திரைத்துறையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மரணம் எல்லோரையும் கடுமையாகப் பாதித்துள்ளது. 

கரோனா விழிப்புணர்வுக்காக ரசிகர்கள் வேண்டி விரும்பிக் கேட்ட பாடல்களைப் பாடி கரோனாவை ஆக்கபூர்வமாக எதிர்கொள்ளத் தூண்டியவர். ஆகஸ்ட் முதல் வாரத்தில் மருத்துவமனையில் சென்று சேர்ந்தார். எஸ்பிபி என எல்லோராலும் பிரியத்துடன் அழைக்கப்படும் அவரது பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தது போலவே அவரது நடத்தையும் எப்போதும் ரசிகர்களால் வியந்தோதப்படுகிறது. மனிதாபிமானத்துடன் எல்லோரிடமும் நடந்துகொள்பவர் அவர் என்பதால் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  

மிக எளிதாக சிகிச்சை பெற்றுவிட்டுத் திரும்பிவிடலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், இயற்கை வேறுவிதமான கணக்குப் போட்டிருக்கிறது. அவருக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்தார்கள். அவரை மருத்துவமனையில் இருந்து மீட்டுக்கொண்டுவந்துவிட வேண்டும் என்ற எண்ணம் இசை ரசிகர்களுக்கும் இருந்தது. ஆனால், அது நடைபெறாமல் போனது சோகம்தான். 

செப்டம்பர் 24 அன்றே எஸ்பிபி பற்றி வந்த தகவல்கள் நம்பிக்கையளிக்கக்கூடியதாக இல்லை. செப்டம்பர் 25 அன்று மருத்துவமனையில் காவலர்கள் குவிக்கப்பட்டார்கள். இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு வந்தது எல்லாம் சேர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையைக் குறித்த கவலையை அதிகரித்தது. அதுவும் பாரதிராஜாவின் பேட்டி கிட்டத்தட்ட எஸ்பிபி நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டாரோ எனும் எண்ணத்தை உறுதிசெய்தது. 

அதே போல் சில நிமிடங்களுக்குப் பிறகு சன் டிவி நியூஸில் மதியம் 1:20 அளவில் எஸ்பிபியின் மரண செய்தி ஒளிபரப்பானது. மதிய உணவு நேரத்தில் தட்டில் சோறு போட்டுக் குழம்பு ஊற்றும் தருணத்தில் இந்தச் செய்தி வெளியானது. அதன் பிறகு வீட்டில் நிம்மதியாக உணவு உண்ணும் சூழல் வாய்க்கவில்லை. அம்மா புலம்பிக்கொண்டே இருந்தார். அவரால் எஸ்பிபியின் மரணத்தை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.  இதைப் போன்ற எண்ணங்களால் உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் பீடிக்கப்பட்டிருந்தனர். புதிய தலைமுறை செய்தி அலைவரிசையில் அவரது உடல் மண்ணைப் போட்டு மூடும் வரை எஸ்பிபியின் இறப்பை நேரலை செய்தார்கள். இந்த அளவுக்கான நேரலை அவசியம்தானா என்ற எண்ணத்தையே அது ஏற்படுத்தியது.

தன் குரலால் எல்லோரையும் மகிழ்வித்த அந்த மனிதர் இனி ஒரு பாடலையும் பாட முடியாது என்னும் உண்மை எல்லோரையும் உறையவைத்துவிட்டது. இதுவரை அவர் பாடிய பாடல்களே பல தலைமுறைகளுக்குத் தாங்கும் என்றபோதும் இனி அவர் பாட மாட்டார் என்பதே ரசிகர்களின் மனத்தைக் கலங்கச் செய்கிறது.  அவரது பாடல்களில் ஆறுதலைத் தேடுகிறார்கள். எல்லா அலைவரிசைகளும் அவரது மறைவை மறக்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த இரண்டு நாட்களாகக் காற்றலை எங்கும் எஸ்பிபியின் பாடல்களே கலந்துள்ளன. பாடல்கள் உள்ளவரை அவரது நினைவும் இருக்கும். 


வெள்ளி, செப்டம்பர் 25, 2020

பூங்காற்று திரும்புமா?



மனசுக்குள் காயம் ஏற்படும்போதெல்லாம்

ஒரு மாயக் கரம் வந்து

மருந்து போட்டுவிட்டுப் போகிறது

அந்தக் கம்பீரமலை கலங்கி அழும்போதெல்லாம்

கண்ணுக்குத் தெரியாத சுட்டுவிரல் ஒன்று

தொட்டுத் துடைத்துவிட்டுப் போகிறது

முகம் காட்ட மறுக்கும் குயிலின் முகவரி தேடி
மனசு மத்துக்குள் சிக்கிய தயிராய்த் தத்தளிக்கிறது...

என்று நீளும் வைரமுத்துவின் முன்னுரையைத் தொடர்ந்து ஒலிக்கும், முதல் மரியாதை திரைப்படத்தின் பூங்காற்று திரும்புமா... பாடல்.
தனித்தனி ஃப்ரேம்களில் சிவாஜியும் ராதாவும் தோன்றிப் (மலேசியாவும் ஜானகியும்) பாடிக்கொண்டே வருவார்கள். பாடல் முடிவடையும் ஷாட்டில் இருவரும் ஒரே ஃப்ரேமுக்குள் அடங்குவார்கள்.


நிலத்தைப் பார்த்தபடி வாட்டத்துடன் பாடலைத் தொடங்கும் சிவாஜி, முடிக்கும்போது முகம் காட்ட மறுத்த குயிலின் முகத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் முகம் மலர்வார்.
ராதாவை இரண்டு கண்களாலும் 'அடடே நீ தானா அது' என்பது போல் சின்னதாக ஒரு பார்வை பார்ப்பார். இமைகள் மட்டும் சேர்ந்து பிரிவது அழகு. சிவாஜிக்கு ஈடுகொடுத்து ராதாவும் பிரியத்தைப் பார்வையில் பரிமாறுவார். இடையில் இருமுறை வானில் பறவை ஒன்று சிறகசைக்கும் ஷாட் இடம்பெற்றிருக்கும். அது காதல் பறவை, வானத்தின் விளிம்புகளுக்கிடையே பறந்தபடியே இருக்கும் என்று பாரதிராஜா சொல்கிறாரோ என்று தோன்றும்.
சிவாஜியின் மனம்போல் குளிந்த நீரால் நிரம்பிய குளத்தில் துடுப்பால் கிளறியபடி ராதா பரிசலில் வருவார். அந்தி வானத்தையோ அடர் வனத்தையோ அலையாடும் கடலையோ பார்த்தது போன்ற மனநிறைவைத் தரும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான பாடல் இது. பாரதிராஜா ரசனைக்காரர்தான் என்பதை மௌனமாகச் சொல்லிச் செல்லும் இந்தப் பாடல் மலேசியா வாசுதேவன் பாடியவற்றில் சிறந்த ஒன்று.

பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா என்ற மூவேந்தர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் காற்றலையில் தவழத் தொடங்கிய பாடல் இப்போதும் வான்வெளியில் கம்பீர நடைபோடுகிறது.

வெள்ளி, செப்டம்பர் 11, 2020

சின்னத்திரையல்ல, சின்னதிரை


சின்னத்திரை என்றே பெரும்பாலானோர் எழுதுகிறார்கள். நாளிதழ்களும் அப்படியே குறிப்பிடுகின்றன. ஆனால், சின்னதிரை என்றுதானே எழுத வேண்டும்? பெயரெச்சத்தில் ஒற்று மிகாது என்பது விதி அல்லவா? சின்னத்திரை என்று எழுதினால் சின்னம்+திரை என்று ஆகிவிடும். ஆனால், சிறிய திரை என்பதைக் குறிப்பிடவே சின்ன திரை என எழுதுகிறோம். ஆகவே, இதை ஒன்று இல்லாமல் தான் எழுத வேண்டும். அதுதான் முறை.

பொதுவாகத் தமிழ்த் திரைப்படங்கள்மீது தமிழர்களுக்கு ஆர்வம் உள்ள அளவுக்கு மரியாதை கிடையாது. ஆனால், அப்படியான துறையில்கூட, சின்னதம்பி, பெரியதம்பி, சின்னதம்பி பெரியதம்பி எனத் திரைப்படங்களின் தலைப்புகள்கூட, ஒற்றின்றிச் சரியாகத்தாம் அமைந்திருந்தன. எனும்போது, அறிவுவழங்குவதாகக் கருதிக்கொள்ளும் நாளிதழ்களும் பத்திரிகைகளும் தமிழை முறையாக எழுத வேண்டாமா?


பலரும் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். என்றாலும் பிழையே தொடர்வது பிழைதானே?

ஞாயிறு, செப்டம்பர் 06, 2020

அஃறிணை உயர்திணை வேறுபாடு தெரியுமா?

"சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்குவது ஆசிரியர்களே"

இன்றைய நாளிதழ் ஒன்றில் மேற்கண்ட தலைப்பு இடம்பெற்றிருந்தது. 

இந்தத் தலைப்பு கீழ்க்காணும் வகையில் அமைந்திருந்தால் அது சிறப்பு:

"சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குபவர் ஆசிரியரே"

இரண்டு தலைப்புகளுக்கும் என்ன வேறுபாடு? நாளிதழின் தலைப்பில் ஆசிரியரை அஃறிணை ஆக்கியிருக்கிறார்கள்; ஆனால், ஆசிரியர் உயர்திணை. 

சனி, செப்டம்பர் 05, 2020

இடஒதுக்கீடா, இட ஒதுக்கீடா?


தமிழில் மெய்யெழுத்து எப்படிச் சொல்லுக்கு முதலில் இடம்பெறாதோ அப்படி உயிரெழுத்து சொல்லுக்கு இடையில் இடம்பெறாது. ஆகவே, மறு ஆய்வு, இட ஒதுக்கீடு என்று இந்தச் சொற்களைப் பிரித்துதான் எழுத வேண்டும்.

மறுஆய்வு, இடஒதுக்கீடு என்று சேர்த்து எழுதுதல் பிழை.
வரஇல்லை என்று எழுதுகிறோமா? வரவில்லை என்றுதான் எழுதுவோம். அதேபோல் மறு ஆய்வு என்பதை ஒரே சொல்லாக எழுத வேண்டுமெனில் மறுவாய்வு என எழுதலாம். இட ஒதுக்கீடு என்னும் சொல்லை, இடவொதுக்கீடு என எழுதலாம். இவற்றைப் பள்ளியில் உடம்படுமெய் எனப் படித்திருக்கிறோம். ஆனால், பயன்படுத்துவதுதான் இல்லை.
ஆசிரியர்களை நினைவுகூருவதுடன் அன்னைத் தமிழையும் நினைவுகூரலாம். மொழிதான் அறிவுபெறுவதற்கான அடிப்படைக் கருவி. கருவி காப்போம்! அறிவு சேர்ப்போம்!

லேட்டஸ்ட்

இலக்கற்ற வாசிப்பு சரியா, தவறா?

தொடர்பவர்

பார்வையாளர்

41,737