கல்லுப்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் கருப்புதுரை (மு.ராமசாமி). நோயில் விழுந்து நீண்ட நாட்களாகப் படுத்த படுக்கையில் கிடப்பவரைப் பராமரிக்க முடியாமல் அவரைத் தலைக்கு ஊற்றி கருணைக் கொலை செய்துவிடக் குடும்பத்தினர் முடிவுசெய்கிறார்கள். இதைக் கேட்டு பதறும் முதியவர் வீட்டிலிருந்து வெளியேறிவிடுகிறார். செங்கோட்டை செல்லும் பேருந்தில் புறப்படும் முதியவர் அது இடையில் ஒரு கிராமத்தில் பழுதாகி நிற்கவும், அங்குள்ள கோயிலுக்கு வருகிறார். அங்குள்ள மண்டபத்தில் தங்குகிறார். அங்கே ஏற்கெனவே தங்கியிருக்கும் குட்டி (நாகவிஷால்)என்னும் ஆதரவற்ற சிறுவன் முதலில் பெரியவரைப் போட்டியாகக் கருதுகிறான். பின்னர் அவர்கள் இருவருக்குமிடையே ஆத்மார்த்தமான பிரியம் உண்டாகிறது. காணாமல் போன கருப்பு துரையைக் குடும்பத்தினர் தேடுகிறார்கள். கருப்பு துரை குடும்பத்துக்குத் திரும்பினாரா, சிறுவனுடன் எஞ்சிய வாழ்வைக் கழித்தாரா என்னும் கேள்விக்கு விடை தருகிறது கேடி எ கருப்புதுரை.
தான் ஆசை ஆசையாக வளர்த்த தன் பிள்ளைகளே தன்னைக் கொல்ல நினைக்கிறார்களே என்னும் வேதனையில் வாடும் கருப்புதுரை, குட்டியின் பிரியத்தில் நெகிழ்கிறார். குட்டிக்கும் பெரியவரின் அன்பு இனம்புரியாத இன்பம் தருகிறது. இவர்களுக்கு இடையேயான பிரியமான பயணமான திரைக்கதை எதிர்பாராத முடிவைத் தந்து முற்றுப் பெறுகிறது. வழக்கமாக இந்த மாதிரியான நெகிழ்ச்சியான பயணப் படத்தில் முடிந்தவரை ரசிகர்களை அழவைத்துவிட வேண்டும் என இயக்குநர் விரும்புவார். ஆனால், இந்தப் படம் முழுவதுமே சின்னச் சின்ன நகைச்சுவையால் சுவாரசியமாக நகர்ந்துவிடுகிறது.
கிராமத்தின் ரம்மியமான சூழலில் வாழ்வைத் தங்களுக்குப் பிடித்தவகையில் முதியவரும் சிறுவனும் கடத்தும்போது, பின்னணியில் அவ்வப்போது சென்றுகொண்டிருக்கும் ரயில் பரபரப்பான பிறரது வாழ்க்கையை உணர்த்தியபடி செல்வது அழகு.
பெரியவரைப் பிரிந்துசெல்லும்போது அவருக்கு ஒன்றும் தெரியாது கவனித்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லும்படி குட்டி போகும் காட்சி நெகிழ்ச்சி. என் ஆத்தாகூட என்ன இப்படிக் கவனிச்சுக்கிடலடா என்று கருப்பு துரை குட்டியிடம் கூறும் காட்சி உருக்கம். இப்படிப் பல தருணங்களை படத்தில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் மதுமிதா.
மு.ராமசாமி, நாகவிஷால் இருவரும்தான் படத்தை முழுவதும் தாங்கிச் செல்கிறார்கள். சிறுவனாக இருந்தாலும் பெரிய மனிதத் தோரணையுடன் நடந்துகொள்ளும் குட்டியிடம் பிரியத்தை வெளிப்படுத்தும்போது, ஒவ்வொரு முறையும் பிரியாணியைச் சுவையாக ரசித்து உண்ணும்போது, தன் முன்னாள் காதலியை வீடு தேடிச் சென்று காணும்போது என அனைத்துக் காட்சிகளிலும் முழுமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கருப்புதுரையை கேடி எனச் சுருக்கமாக அழைப்பதில் தொடங்கி, அவரை அன்பால் மிரட்டுவது, அவரது நடவடிக்கைகளுக்குப் பொருள் புரியாமல் தவிப்பதுவரை எல்லாக் காட்சிகளிலும் ராமசாமிக்கு ஈடு கொடுத்துப் பெரிய நடிகர்போலவே நடித்திருக்கிறார் நாகவிஷால்.
கூத்துக் கலைஞராக வரும் குணாபாபு, பிரியாணிக் கடைக்காரர், கருப்புதுரையின் காதலியாக வரும் மூதாட்டி எனப் பல துணைக் கதாபாத்திரங்களும் கவனத்தை ஈர்க்கின்றன.
ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் கெம்புராஜ் கிராமத்தின் அழகை அழகாகவே காட்டியிருக்கிறார். இரவுக் காட்சிகள் ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன. காட்சிகளில் தென்படும் இருளும் ஒளியும் இணைந்து நேரடியாகச் சம்பவங்களைப் பார்ப்பது போன்ற எண்ணத்தைத் தருகிறது.
விஜய் வெங்கட்ரமணனின் கச்சிதமான படத் தொகுப்பில் படம் எந்த இடத்திலும் தேவையற்ற நீட்சியைக் கொண்டிருக்கவில்லை. பின்னணியிசையும் உறுத்தாத வகையில் அமைந்துள்ளது.
படத்தின் மிகப் பெரிய கரும்புள்ளி ஈசன் கதாபாத்திரம். அது எதற்கு என்றே புரியவில்லை. நீண்ட நாட்களாகப் படுக்கையில் கிடந்த பெரியவர் திடீரென எழுந்து பழையபடியே நடமாடுவதை நம்புவது சற்றுக் கடினமாகவே உள்ளது. நல்ல ஆரோக்கியமானவர்களைக் கருணைக்கொலை செய்வார்களா, உறவுகளிடமிருந்து விலகி வரும் பெரியவர் மீண்டும் அதே போன்ற உறவை ஏற்படுத்திக்கொள்வாரா போன்ற கேள்விகள் எழவே செய்கின்றன.
இவற்றையெல்லாம் மீறி, உறவு என்றால் எப்படி இருக்க வேண்டும், முதியவர்களிடம் ஆதரவற்றவர்களிடமும் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் போன்றவற்றை போதிக்காமல் உணர்த்தியவகையில் கே.டி.(எ) கருப்புதுரை சிறப்புத் துரையாக ஜொலிக்கிறார்.