இந்த வலைப்பதிவில் தேடு

சனி, செப்டம்பர் 21, 2019

ஒத்த செருப்பு



மாசிலாமணி (பார்த்திபன்) ஒரு கொலை செய்ததாகக் கூறி காவல் துறையினர் அவரை ஒரு அறையில் இருத்தி விசாரணை நடத்துகிறார்கள். அரிதான உடல்நலப் பிரச்சினையால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கும் அபாயம் நிலையில் இருக்கும் மாசிலாமணியின் மகன் மகேஷையும் அழைத்துவந்துவிட்டார்கள். இந்த விசாரணை வழியே மாசிலாமணியின் குடும்பம், வாழ்க்கை என ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகிறது. தொடர்ந்து பல கொலைச் சம்பவங்கள் அரங்கேறியதாகத் தெரியவருகிறது. அந்தக் கொலைகளுக்கும் மாசிலாமணிக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதைச் சொல்கிறது ஒத்த செருப்பு.

முழுக்க முழுக்க பார்த்திபனின் ராஜ்ஜியம்தான். அவருக்கு முழு ஒத்துழைப்பு அளித்திருக்கிறது தொழில்நுட்பக் குழு. மாசிலாமணி ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத வகையிலேயே விசாரணைக்குப் பதில் அளிக்கிறார். ஆனால், அவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டதாக இருக்கிறது. திரையில் பார்த்திபன் மட்டுமே தெரிகிறார். எஞ்சிய கதாபாத்திரங்களை நாம் குரல்வழியே தான் அடையாளம் காண முடிகிறது.

ஒரே அறை, ஒரே நடிகர் என்பதையெல்லாம் தாண்டி சுமார் இரண்டு மணி நேரம் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டுவிடுகிறது திரைக்கதை. அழகான மனைவி, அன்பான குழந்தை, சிறிய குடும்பம் என்ற ஒரு கூட்டைக் கலைத்துவிடுகிறார்கள் மனிதர்கள் சிலர். அந்த மனிதர்கள் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள். அவர்களுக்கு என்ன முடிவு ஏற்பட்டது என்பதையெல்லாம் தனி மனிதராக இருந்து திறமையான திரைக்கதை வழியே நல்ல திரைப்படமாக்கியிருக்கிறார் பார்த்திபன்.

இசை முக்கியப் பங்கை வகிக்கிறது. மாசிலாமணியின் தவிப்பையும் பாசத்தையும் காதலையும் காமத்தையும் பார்வையாளர்களுக்கு உணர்த்துவதில் பின்னணியிசை முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ரசூல் பூக்குட்டி படத்துக்குப் பெரிய அளவில் உதவியிருக்கிறார். படத்தின் பெரும்பான்மையான சம்பவங்கள் திரையில் நிகழாமல் நம் மனத்திரையிலேயே நிகழ்கின்றன. அதனால் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் புதுமையானது.

சமூகத்தில் நிலவும்பொருளாதாரரீதியான பாகுபாடுகள் காரணமாக ஒரு சிறிய குடும்பம் என்னவிதமான பாதிப்புகளைச் சந்திக்கிறது என்பதையே திரைக்கதை தனது மையமாகக் கொண்டிருக்கிறது. உணர்வுபூர்வமான திரைக்கதையை உருவாக்கியிருப்பதால் பார்வையாளர்களால் மாசிலாமணியின் விவரிப்பின் வழியே அவனுடைய வாழ்க்கையை முழுமையாக உணர்ந்துகொள்ள முடிகிறது.



நடிகர்பார்த்திபனும் தனது பங்கை முழுமையாக உணர்ந்து திரைக்கதையாசியரும் இயக்குநருமான பார்த்திபனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். சற்றே மனப் பிறழ்வுக்கு உள்ளானவர் போல் அவரது நடவடிக்கை காணப்பட்டாலும் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்கிறார். மனைவி உஷாவின் அழகை விவரிக்கும்போதும், உஷாவுக்கும் தனக்குமான காதல் உறவை எடுத்துச்சொல்லும்போதும் மாஞ்சா நூல் மூலம் கழுத்தை அறுத்ததாகச் சொல்லும்போதும் தான் ஒரு நல்ல நடிகர்தான் என்பதை நிரூபிக்க முயன்றிருக்கிறார். விசாரணையின் போது காவல்துறையினருக்குப் பதில் அளித்துக்கொண்டே தன் மகன் சாப்பிட்டானா, மருந்துகள் எடுத்துக்கொண்டானா என்பதை எல்லாம் விசாரித்து அறிந்துகொள்ளும் பாசமிக்கத் தந்தையாகவும் நடந்துகொள்கிறார். 

எதற்குமே பயன்படாத ஒத்த செருப்பைத் தனது புத்திசாலித்தனத்தால் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவுகிறார் மாசிலாமணி. சட்டம் ஏழைகளை ஒருவிதமாகவும் செல்வந்தர்களை ஒருவிதமாகவும் அணுகுவதைக் கேள்விகேட்கிறார்.சமகாலத்தொழில்நுட்ப வளர்ச்சி என்ன மாதிரியான தாக்கத்தை ஒரு சமூகத்தில் ஏற்படுத்துகிறது என்பதை அழகாகவும் நாசூக்காகவும் வெளிப்படுத்திவிடுகிறார் பார்த்திபன்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜிஒரே அறைக்குள் பல கோணங்கள் வழியே காட்சிப் படுத்தி படத்துக்கு என்ன தேவையோ அதை மிகச் சரியாக அளித்துள்ளார். ‘இத்துப் போன உறவைவிட அத்துப் போன உறவே மேல்’ என்பது போன்ற பல வசனங்கள் நெகிழ்ச்சியைத் தருவதாக உள்ளன.  பார்த்திபனுக்கே உரிய நக்கல் நையாண்டி, நெகிழ்ச்சி நிறைந்த உரையாடல் படத்தைச் சுவாரசியமாக நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது. கணவன் தரப்பில் எந்தத் தவறும் காட்டப்படாமல் மனைவி தரப்பையே முழுக் குற்றவாளியாக்கியது சற்று நெருடலாக இருக்கிறது. மற்றபடி தமிழ்த் திரைப்பட உலகில் மேற்கொள்ளப்பட்ட அரிய முயற்சி என்னும் வகையில் பெரிதாகக் கவர்கிறது இந்த ஒத்த செருப்பு.

சனி, செப்டம்பர் 14, 2019

அவர் ஒரு பொன்மாலைப் பொழுது

அஞ்சலி: (ராபர்ட்) ராஜசேகரன்

தொலைக்காட்சித் தொடரில் ராபர்ட் ராஜசேகரன்
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த இயக்குநரும் நடிகருமான ராஜசேகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்னும் செய்தி செப்டம்பர் 8 அன்று ஊடகங்களில் வெளியானது. அந்தச் செய்தியைக் கண்ட உடன், சிறுவயதில் பார்த்த, பெரிய வெற்றியைப் பெற்ற ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ (1987) என்னும் படம் நினைவில் வந்தது. அந்தப் படத்தை ராபர்ட்டுடன் இணைந்து ராஜசேகரன் இயக்கியிருந்தார்.

பதினோறாம் வகுப்பு தொடங்குவதற்கு முந்திய நாளில், குற்றாலம் அருகிலுள்ள இலஞ்சியிலிருந்து சுமார் அறுபது கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருநெல்வேலிக்குச் சென்று ராயல் திரையரங்கில் வெளியாகியிருந்த அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். அப்போது, அந்தப் படத்தின் இயக்குநர் பெயரோ பிரபு என்னும் பெயரில் ‘நிழல்கள்’ (1980) படத்தில் ராஜசேகரன் நடிகராக அறிமுகமாகி யிருந்தார் என்பதோவெல்லாம் தெரியாது. பிரபு நடித்த படம் என்ற அளவிலேயே அது பதிந்திருந்தது.



காதலில் தோல்வியடைந்த டேவிட், காதலர்களான ராஜாவையும், ரேகாவையும் சேர்த்துவைப்பதுதான் கதை. ராஜாவாக அறிமுகமான ராம்கி தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார்; ஆனால், ரேகாவாக அறிமுகமான நர்மதாவை அதன் பிறகு எந்தப் படத்திலும் பார்த்ததாக நினைவிலில்லை. வில்லனாக நடித்திருந்த செந்தாமரை நீளமாக வளர்ந்திருக்கும் தனது கேராவை (கிருதாவை) அடிக்கடி கைகளால் அழுத்தமாகப் பிடித்துத் தடவிவிட்டுக்கொண்டேயிருப்பார். அது அந்தப் படத்தில் அவரது மேனரிஸம். சின்னி ஜெயந்த், குமரி முத்துசுதா சந்திரன், சபிதா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த படத்தின் பாடல்களை எழுதி, இசையமைப்பாளராக அறிமுகமானார் எஸ்.ஏ.ராஜ்குமார். அவரது குரலில் ஒலித்த ‘ஏ புள்ள கருப்பாயி’ பாடலும்‘கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே’ பாடலும் அவரைக் கவனிக்கச் செய்தன. 

சமீபத்திய ஆண்டுகளில் வீட்டுக்கு வரும்போது, ராஜசேகரன், பாசமிகு அப்பாவாகத் தன் பிள்ளைகளிடம் இதமான குரலில், நெகிழ்வான அன்பில் பிரியத்தைக் கொட்டிக்கொண்டிருக்கும் காட்சிகளைத் தொலைக்காட்சித் தொடர்களில் பார்த்திருக்கிறேன். இவற்றுக்கிடையே முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் ஓடிவிட்டன. 

தமிழ்த் திரைத்துறையில் நான்கு ராஜசேகர்கள் அறியப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் பி.எஸ்சி. என்னும் பட்டத்தால் அறியப்படும் ராஜசேகர். ரஜினிகாந்தையும் கமல் ஹாசனையும் இயக்கியவர். ரஜினி நடித்த ‘தர்மதுரை’ படத்தின் நூறாம் நாளன்று மரணமடைந்தவர். மற்றொருவர் ‘டாக்டர்’ என்பதால் கவனிக்கப் பட்டவர். பாரதிராஜாவின் ‘புதுமைப்பெண்’ணில் அறிமுகமானவர்; ‘இது தாண்டா போலீஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம்பெற்றவர். மூன்றாமவர் ‘பாரதி’ படத்தை இயக்கியவர், இந்திய ஆட்சிப்பணியில் இருந்து திரைப்படத் தணிக்கைத் துறையிலும் பங்களித்த ஞான.ராஜசேகரன். இறுதியானவர் (ராபர்ட்) ராஜசேகரன். இந்த ராஜசேகரனுக்குக் கவனம் தருவது அவரது பெயருடன் இணைந்திருந்த ராபர்ட் என்னும் அவரது நண்பரின் பெயர்.

பாலைவனச்சோலை


சென்னை தரமணியில் அமைந்திருக்கும் அரசு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படித்த இரட்டையரான ராபர்ட்டும் ராஜசேகரனும் இணைந்து பணியாற்றிய முதல் படம் ‘குடிசை’ (1979). ஜெயபாரதி இயக்கிய இந்தப் படத்தில் ராஜசேகர் ராபர்ட் என்னும் பெயரில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றிய படம் ‘ஒரு தலை ராகம்’ (1980). இந்தப் படத்திலிருந்து அவர்கள் பரவலாக ராபர்ட் ராஜசேகரன் என்றே அறியப்பட்டி ருக்கிறார்கள். ‘குடிசை’, ‘ஒரு தலை ராகம்’ இரண்டு படங்களிலுமே ஒளிப்பதிவாளர்கள் என்னும் பொறுப்பைத் தாண்டி படத்தின் உருவாக்கத்தில் பலவிதங்களில் உதவியிருக்கிறார்கள். சினிமா என்னும் கலையை நேசித்ததன் விளைவாகவே இது சாத்திய மாகியிருக்கிறது.

இருவரும் இணைந்து இயக்கிய முதல் படம் ‘பாலைவனச்சோலை’ (1981). நாலைந்து ஆண் நண்பர்கள், அவர்களுடன் வந்துசேரும் ஒரு பெண் கதாபாத்திரம் என்னும் ஒரு போக்கைத் தமிழ்த் திரைக்கு அறிமுகப்படுத்திய திரைப்படம் இது. தெருவோரப் பையன்கள் என்னும் ஓர் அம்சத்தையும் இந்தப் படம்தான் அறிமுகம் செய்துவைத்திருக்கிறது. ‘அந்தி மழை’ இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் ராஜசேகரனே இதைக் குறிப்பிட்டிருக்கிறார். எழுபதுகளில் எழுந்துவந்த புதிய அலையின் தொடர்ச்சியாக மலர்ந்த திரைப்படம் இது. திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றை இருவரும் சேர்ந்து மேற்கொண்டிருந்தாலும் கதையை ராஜசேகரனே எழுதியிருக்கிறார்.

மனசுக்குள் மத்தாப்பு


இந்தப் படத்தின் ‘ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு’, ‘மேகமே மேகமே’ போன்ற வைரமுத்துவின் வரிகளில் சங்கர் கணேஷ் இசையில் மலர்ந்த பாடல்கள் இன்றைக்கும் பாலைவன மனங்களில் சோலையைக் கொண்டுவருபவை. ‘ஒன் ஃப்ளு ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட்’ என்னும் அமெரிக்கப் படத்தின் தழுவலில் உருவாக்கப்பட்ட மலையாளத் திரைப்படம் ‘தாளவட்டம்’. பிரியதர்ஷன் இயக்கிய இந்தப் படத்தைத் தமிழில் ‘மனசுக்குள் மத்தாப்பு’ (1988) என்னும் பெயரில் ராபர்ட் ராஜசேகரன் இயக்கினர். இந்தப் படம் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தை நினைவூட்டக்கூடிய  கதையமைப்பைக் கொண்டது. 

இந்தப் படத்தில் டாக்டர் கீதா என்னும் வேடத்தில் நடிக்க வந்தார் சரண்யா. மனோதத்துவ நிபுணராக வேடமேற்றிருந்த சரண்யா படத்தில் தன் காதலி மறைவால் மனநலம் பாதிக்கப்பட்ட பிரபுவைக் குணப்படுத்துவார்; அதே நேரத்தில் பிரபுவுக்கும் சரண்யாவுக்கும் காதல் மலர்ந்திருக்கும். படத்தின் கதை இப்படிப் போகும்.

நிஜத்தில் பின்னர் ராஜசேகரன் சரண்யாவை மணந்துகொண்டார். ஆனால், அந்த மண வாழ்வு நீடிக்கவில்லை; மண முறிவு ஏற்பட்டிருக்கிறது. சரண்யாவை விட்டுப் பிரிந்துவிட்டார். ‘தாரா’ என்பவரை மணந்துகொண்ட ராஜசேகரன் இறக்கும்வரை அவருட னேயே வாழ்வைக் கழித்திருக்கிறார். திருமணமே செய்துகொள்ளாத ராபர்ட் 2018-ல் மரணமடைந்தார்.

நிழல்கள் 


புது இயக்குநர்களும் பெரும் இயக்குநர்களும் இளையராஜா வின் இசையை நம்பிய காலத்தில் இவர்கள் தங்களது படங்களுக்கு இளையராஜாவைப் பயன்படுத்திய தாகத் தெரியவில்லை. தொடக்க காலத்தில் சங்கர் கணேஷையும் பின்னர் எஸ்.ஏ.ராஜ்குமாரையுமே இசையமைப்பாளர்களாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அநேகமாக அனைத்துப் படங்களிலும் வசனத்தை என். பிரசன்ன குமார் எழுதியிருக்கிறார். மிகத் திறமையான வசனகர்த்தாவாக அறியப்பட்டிருந்த பிரசன்ன குமார் 2008இல் தனது 49ஆம் வயதில் காலமானார். இவரது மரணம் அதிர்ச்சியைத் தந்ததொரு மரணமே. 

சர்வதேசத் திரைப்பட தரவுத் தளமான ஐ.எம்.டி.பியில் ராஜசேகர் B.Sc., ராபர்ட் ராஜசேகரன் இவர்களை இருவரையும் குழப்பிக்கொண்டு அவர்கள் இயக்கிய, ஒளிப்பதிவு செய்த படங்களின் விவரங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ராஜசேகரனுக்கென்று விக்கி பீடியாவில் கூட ஒரு பக்கம் உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. திரைத் துறையை ஆத்மார்த்தமாக நேசித்துத் தன் வாழ்நாளை அதிலேயே செலவிட்ட மனிதர்களுக்கு இத்தகைய விபத்து நேர்வது பெரும் சோகம்தான். ஆனாலும், இங்கே இதுதான் யதார்த்தம். கலை எத்தனையோ கலைஞர்களின் உயிரைக் குடித்துதான் தனது ஜீவனைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பது யதார்த்தத்தின் குரூரம்.

இந்து தமிழ் திசை நாளிதழில் 13.09.2019 அன்று வெளியானது. 


ஞாயிறு, செப்டம்பர் 08, 2019

மகாமுனி: உலகத் தரத்துக்கு ஆசைப்படும் உள்ளூர் சினிமா


தனியார் டிராவல்ஸில் ஓட்டுநராக இருக்கும் மகாதேவன் (ஆர்யா). வண்ணமயமான வாழ்க்கை வாழ ஆசைப்படும் இளம் மனைவி விஜி (இந்துஜா), மகன் பிரபாவுடன் சராசரியான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். முத்துராஜ் (இளவரசு) என்னும் உள்ளூர் அரசியல்வாதிக்காகச் சில அடிதடி, கொலை போன்றவற்றுக்கான திட்டம் போட்டுக் கொடுக்கிறார். அதில் ஏற்பட்ட பகை காரணமாக மகாவையும் எதிரிகள் கொல்லத் துடிக்கின்றனர்.

ஈரோடு அருகே கிராமம் ஒன்றில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டபடி குழந்தைகளுக்கு வாழ்க்கைக்கான கல்வியைக் கற்றுக்கொடுத்துவருகிறார் ஒடுக்கப்பட்ட சமூகத் தாய் வளர்க்கும் முனிராஜ் (ஆர்யா). பிரம்மச்சாரியாகவே வாழ்க்கையை நகர்த்தும் முனிராஜின் வாழ்வில் குறுக்கிடுகிறார் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த தீபா (மஹிமா நம்பியார்). இதை விரும்பாத தீபாவுடைய தந்தை ஜெயராம் (ஜெயபிரகாஷ்) முனியைக் கொல்ல நினைக்கிறார்.

மகா, முனி இருவரும் என்ன ஆகிறார்கள் என்பதே மகாமுனியாக விரிகிறது.


மௌன குரு படத்தின் மூலம் கவனம் பெற்ற சாந்தகுமார் சமகால அரசியல், சாதிய ஒடுக்குமுறை போன்ற விஷயங்களின் வழியே திரில்லர் படமொன்றையே மறுபடியும் தந்திருக்கிறார். வழக்கமான வன்முறைப் படங்களுக்கான திரைமொழியைத் தவிர்த்துருப்பதால் படம் கவனிக்கவைக்கிறது. இயக்குநர் மகேந்திரனின் ஜானி போன்ற ஒரு தன்மையுடன் படம் நகர்கிறது. மிக நிதானமாகவே காட்சிகள் நகர்கின்றன. ஒருவிதமான தீவிரமான கதை சொல்லல் பாணியிலேயே திரைக்கதை அமைந்துள்ளது. சமகால அரசியலை ஒரு சரடாகவும், சமகால சமூகத்தின் சாதியப் பார்வையை மற்றொரு சரடாகவும் பிணைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.   

படத்தின் தொடக்கத்தில் மனநிலைக் காப்பகத்தில் காணப்படும் ஆர்யா தொடர்பான காட்சிகள் படத்தைக் குறித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் தொடர்ந்துவரும் காட்சிகள் பெரிதாகக் கவராமல் மந்த கதியில் நகர்கின்றன. ஓரளவு படம் நம்மைப் பிடித்து இருத்துவதற்கே முக்கால் மணி நேரம்வரை ஆகிவிடுகிறது. தெருமுனை திருமூர்த்தி கதையில் திருப்பமான கதாபாத்திரம் என்றபோதும் அவர் தொடர்பான மேடைப் பேச்சு காட்சி சுவாரசியமற்று உள்ளது.

ஆர்யாவுக்குச் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம். மகாவானாலும் சரி, முனியானாலும் சரி இரண்டிலுமே அவசியமான உடல்மொழியுடன் மென்மையான குரலில் நிதானமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


முத்துராஜின் மனைவி மிகையாக நடித்திருக்கிறார். மகாவின் மனைவியான விஜியாக வரும் இந்துஜா நடிப்பில் ஒரு செயற்கைத் தனம் தென்படுகிறது. முனியை விரும்பும் தீபாவான மஹிமா நம்பியார் பத்திரிகையாளர், ஆதிக்க சாதியில் பிறந்தபோதும் ஆதிக்கத்தை வெறுப்பது போன்றவற்றை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். தந்தை மீது கொண்ட கோபத்தில் அவருக்கு வேலையாள் எடுத்துச் செல்லும் மதுவைப் பிடிங்கிப் படபடவெனக் குடித்துவிட்டு பாட்டிலைப் போட்டு உடைத்துவிட்டுப் பேசும் அழகு தமிழுக்குப் புதிது.

மேடையில் தாறுமாறாகப் பேசும் திருமூர்த்தியை அழைத்துவரச் செய்து துடைப்பத்தால் சாத்தும் காட்சியும் நன்றாக இருக்கிறது. திருமூர்த்தியைக் கொல்லும் முடிவால் படத்தில் திரைக்கதையின் பாதை மாறுகிறது. மகாவின் அளவுக்கு மீறிய பணிவு இயல்புக்கு மாறானதாக இருக்கிறது.

படத்தில் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் சரமாரியாகத் தென்படுகின்றன. உதாரணத்துக்கு, கத்தியால் அவ்வளவு ஆழமாகக் குத்துப்பட்ட மகா ஏதோ முள் குத்தியைப் போல் அதைப் பிடுங்கிவிட்டு இயல்பாக நகர்வதை நம்ப முடியவில்லை. வன்முறை தொடர்பான படம் என்றபோதும் முடிந்தவரை திரையில் வன்முறைத் தவிர்த்திருப்பது நன்று. சாதிய ஆணவக் கொலை முயற்சிக்கு விஷப் பாம்பைப் பயன்படுத்தியிருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. கத்தியால் குத்துவது, துப்பாக்கியால் சுடுவது போன்றவற்றில் இல்லாத ஒரு மென்மைத் தன்மை பாம்பின் விஷத்தில் இருக்கிறது. சாதியம் உதிரத்தில் விஷம் போல் பரவும் என்பதைக் குறிப்பதுபோலும் உள்ளது.


அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு, எஸ்.தமனின் இசை, சாபு ஜோசப்பின் படத் தொகுப்பு ஆகியவை படத்துக்கு உறுதுணை புரிந்திருக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மௌனகுருவில் கைவப்பட்டிருந்த நேர்த்தி மகாமுனியில் தவறியிருக்கிறது. ஹாலிவுட் கிளாஸிக் தன்மையில் படத்தை உருவாக்க முயன்றிருக்கிறார் சாந்தகுமார் ஆனால், அவர் நினைத்த உயரத்தைப் படம் தொட்டிருக்கிறதா என்பது சந்தேகமே. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்துடன் வரும்போது அது முந்தைய படத்தைவிடச் சிறப்பாக இருந்திருந்தால் மகாமுனியைக் கொண்டாடியிருக்கலாம்.