சினிமாக் கனவில் தினந்தோறும் தலைநகரங்களில் அடைக்கலமாகும் இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளம். தமிழ்நாட்டில் வீட்டைவிட்டு ஓடிவரும் இளைஞர்களில் பலர் தேசத்தைக் காக்க ராணுவத்தில் சேரவில்லை என்றால் பெரும்பாலும் கலையைக் காக்க சினிமாவில்தான் சேருகிறார்கள். அதிலும் காதலில் தோல்வி அடைந்த இளைஞர்களுக்குப் பிரதான இலக்கு சினிமாதான். ஒரு பெரிய நடிகராகவோ இயக்குநராகவோ ஆன பின்னர்தான் சொந்த ஊர் திரும்ப வேண்டும் எனச் சங்கல்பம் எடுத்துக்கொள்வார்கள். பள்ளி, கல்லூரிகளில் யாராவது ஒரு அமெச்சூர் நாடகத்தில் நடித்துவிட்டாலோ ஏதாவது ஒரு உப்புமா நாடகத்தை எழுதிவிட்டாலோ அவ்வளவுதான், அவரது கதை முடிந்தது. அடுத்த சத்யஜித் ரே, அடுத்த அமிதாப் என்ற கனவில் கோடம்பாக்கத்துக்கு ரயிலேறிவிடுவார். இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடே இல்லை. இப்படி வருபவர்களில் பத்து சதவீதத்தினர்கூட வெளிச்சத்துக்கு வருவதில்லை. ஏனெனில், சினிமா என்னும் பரமபதத்தில் ஏணிகள் சொற்பமே, அதிகமும் பாம்புகள்தாம். இடையில் எத்தனையோ இழப்புகள். அத்தனையையும் தாங்கிக்கொண்டு ஆயுள் முழுக்க இரண்டு மணி நேர சினிமா ஒன்றில் பங்களித்துவிட வேண்டும் எனக் காத்திருக்கிறார்கள். அறிவு இதை அபத்தம் எனலாம்; உணர்வு மட்டுமே இதைப் புரிந்துகொள்கிறது.
கே. பாலசந்தரின் கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய ‘சர்வம் சுந்தர’த்தில் (1964) சினிமா முயற்சியில் தோற்றுப்போய் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலைபார்க்கும், மிகவும் சுமாரான தோற்றம் கொண்ட நாகேஷ் ஒரு காதல் காரணமாக மீண்டும் முயன்று பெரிய நடிகராகிவிடுகிறார். படத்தில் அவரது காதல் கைகூடாது. பி.மாதவன் இயக்கிய ‘ராமன் எத்தனை ராமனடி’யில் (1970) கிராமத்தில் ஜமீன்தாரின் தங்கையான கே.ஆர்.விஜயாவைக் காதலித்திருப்பார் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த, வெகுளித்தனமான சிவாஜி கணேசன். இதனால் ஜமீன்தார் நம்பியாரால் அவமானப்படுத்தப்படும் சிவாஜி கணேசன் பெரிய நடிகராகும் லட்சியத்துடன் சென்னைக்கு வந்துவிடுகிறார்; படபடவென அடுத்தடுத்த காட்சிகளில் வெற்றிகரமான நடிகராகிவிடுகிறார். எந்தக் காதலியைக் கரம் பற்றுவதற்காக அவர் நடிகரானாரோ அந்தக் காதலியை அவர் மீண்டும் சந்திக்கும்போது அவர் மற்றொருவரின் மனைவி.
இதே பி. மாதவனின் இயக்கத்தில், ஷோபா, சிவகுமார் நடித்து வெளிவந்த படம் ‘ஏணிப்படிகள்’ (1979). இதில் ஒரு கிராமத்து தியேட்டர் ஒன்றில் குப்பை பெருக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செல்லக்கண்ணுவுக்கு சினிமா எனும் சொர்க்க வாசல் திறக்கிறது. அவளை முன்னேற்ற அவளுடைய காதலன் மாணிக்கம் உறுதுணையாக இருக்கிறான். ஆனால், செல்லக்கண்ணு, கமலாதேவி என்னும் நட்சத்திரமாக மாறத் தொடங்கியபோது அவளுடைய அண்ணனும் அண்ணியும் மாணிக்கத்தைத் தந்திரமாக வெளியேற்றிவிட்டு அவளது புகழ் வெளிச்சத்தில் குளிர்காய்கிறார்கள். இந்தத் தந்திரத்தை எல்லாம் அறிந்த கமலா தேவி தற்கொலை செய்துகொண்டு செல்லக்கண்ணுவாக மாறித் தன் மாணிக்கத்தைக் கரம்பற்றுகிறாள். இந்தப் படம் தெலுங்கில் கே.விஸ்வநாத் இயக்கிய ‘சீதாம்மாலக்ஷ்மி’ படத்தின் மறு ஆக்கம்தான். வசனத்தை மகேந்திரன் எழுதியிருப்பார்.
இந்தப் படங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் காதல் காரணமாகச் சில கதாபாத்திரங்கள் நடிகர்களாகிறார்கள். பிரவீணா பிலிம் சர்கியூட் என்னும் நிறுவனத்தின் பெயரில் கே.பாக்யராஜ் தயாரித்து இயக்கிய ‘தாவணிக்கனவுக’ளில் (1984) தன் தங்கைகளைக் கரையேற்றுவதற்காகக் கதாநாயகனாக முயல்வார் பாக்யராஜ். கதாநாயகனாக மாறிக் கைநிறையச் சம்பாதிப்பார். தன் தங்கைகளுக்கு டாக்டர், இன்ஜினீயர் என மாப்பிள்ளைகளை வரிசையில் கொண்டுவந்து நிறுத்தியிருப்பார். ஆனால், அவர்களோ தங்களது கஷ்ட காலத்தில் உதவிய டெய்லர், போஸ்ட்மேன் போன்ற சாதாரணர்களையே கரம்பற்ற விரும்புவார்கள். இதுதான் படம் சொன்ன செய்தி. ஆனால், மக்கள் அந்தச் செய்தியைக் கேட்கவே விரும்பவில்லை; படம் தோல்வியடைந்தது. பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயி’லில் விஜயன் ஏற்றிருந்த பட்டாளத்தார் போன்ற கேப்டன் என்னும் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். திரைக்கதையில் கேப்டன் கதாபாத்திரம் சுப்ரமணியனுக்கு உதவியிருக்கும். படத்தைப் பொறுத்தவரை சிவாஜியால் பாக்யராஜுக்கு உதவியில்லை. சிவாஜியை இயக்கியாகிவிட்டது என்னும் பெருமை மட்டுமே அவருக்கு மிச்சம்.
மலையாளத்தில் வெளியான ‘கட்டப்பனையிலே க்ருதிக் ரோஷன்’ (2016) படத்தின் சில காட்சிகளில் ‘தாவணிக்கனவுக’ளை நினைவுக்கு வந்தது. இப்படத்தில், விஷ்ணு உண்ணிகிருஷ்ணனை சினிமாவில் கதாநாயகனாக்க அவருடைய தந்தை முயல்வார். ஏனெனில், அவர் சினிமா நடிகராக விரும்பியிருப்பார். ஆனால், அது நடைபெறாமல் போனதால் தன் மகனை எப்படியும் நடிகனாக்க ஆசைப்படுவார். திருடனாகவே சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அவருக்கோ கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதே விருப்பம். இறுதியில் கதாநாயகனாக ஆகிவிடுவார். இந்தப் படத்தில் ஒரு காட்சி உண்டு. இயக்குநர் ஒருவர் தன் மனைவியுடன் ஹோட்டலுக்கு வருவார். அதைப் பார்த்த விஷ்ணு அவரிடம் போய் வாய்ப்பு கேட்கலாம் எனச் செல்வார். ஆனால், இயக்குநரோ குடும்பப் பிரச்சினை ஒன்றின் காரணமாக மனம் வெதும்பிய நிலையிலேயே அங்கு வந்திருப்பார். விஷ்ணுவைக் கண்டபடி திட்டி அனுப்பிவிடுவார். இதுதான் யதார்த்தம். அதன் பின் அந்த இயக்குநரே அந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட விஷ்ணுவுக்குக் கதாநாயகன் வாய்ப்பளிப்பார். இது திரைக்கதைக்கான சுவாரசியம். சின்னச் சின்ன திருப்பங்கள், சுவாரசியங்கள், நகைச்சுவைக் காட்சிகளுடன் கூடிய சாதாரணமான திரைப்படம் இது. படத்தின் திரைக்கதையும் விஷ்ணு உண்ணிகிருஷ்ணன்தான். படத்தை இயக்கியிருப்பவர் நாதிர்ஷா.
மார்டின் பிரகத் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘பெஸ்ட் ஆக்டர்’ (2010) திரைப்படத்தில் பள்ளிக்கூட ஆசிரியரான மோகனுக்கு சினிமா ஆசை இருக்கும். நிம்மதியான ஆசிரியர் வேலையை விட்டு எதற்காக நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்வியை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அவரும் சினிமா வாய்ப்புக்காகப் பல படிகளில் ஏறி இறங்குவார். ஒரு கேங்க்ஸ்டர் வேடத்தில் நடிப்பதற்காக உண்மையிலேயே ஒரு கொட்டேஷன் குழுவில் இணைந்துவிடுவார். அதனால் பல சிக்கல்கள் உருவாகும். அனைத்திலிருந்தும் விடுபட்டு இறுதியில் நாயகனாகிவிடுவார். ஒரு நடிகனுக்கு அடிப்படையில் என்ன தேவை என்பதை உணர்த்தும்வகையிலான திரைக்கதை இது.
அனீஷ் உபாசனா இயக்கத்தில் 2012-ல் வெளியான ‘மேட்னி’ திரைப்படத்தில் ஒரு புதுவிதமான கதைக் களம். இதில் சினிமா ஆசை கொண்ட நாயகன் ஆச்சாரமான இஸ்லாமிய குடும்பத்துப் பிள்ளை. குடும்பச் சுமை காரணமாக வேலை தேடி நாயகி நகரத்துக்கு வருகிறாள். இருவரும் ஒரு சினிமாவில் நடிக்கும் சூழல் அமைகிறது. நல்ல கதைப் படம் என நம்பி அதில் நடிக்கிறார்கள். ஆனால், அந்தப் படம் திரைக்கு வரும்போது துண்டுப் படங்கள் இணைக்கப்பட்ட சதைப் படமாக மாறிவிடுகிறது. இதனால் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பங்களைச் சொல்வதே இந்தப் படம்.
ஒரு திரைக்கதையில் சினிமா ஆசை கொண்ட கதாபாத்திரங்கள் பெரும்பாலும் வெற்றியடைந்துவிடுகின்றன. ஏனெனில், திரைப்படம் வாழ்வு குறித்தான நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்பதே அதன் ஆதார மரபு. ஆனால், யதார்த்தத்தில் சினிமாவுக்காக வாழ்வைத் தொலைத்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த யதார்த்தத்தைப் புரியவைக்கும் கதைகளைக் கொண்ட படங்களுக்கு உதாரணங்கள்தாம் ‘மேட்னி’ போன்றவை. இவை உங்களுக்குள் நம்பிக்கையை விதைப்பதில்லை; இந்தப் பாதை இப்படியும் அமையலாம் கவனமாக இருங்கள் என உங்களை எச்சரிக்கின்றன. எல்லா எச்சரிக்கைகளையும் மீறி சினிமாக் கதவுகளைச் சில கால்கள் வந்தடையும்; கைசோர அதன் கதவுகளைத் தட்டிப் பார்க்கும். அவர்களின் வாழ்வு விருதால் நிறையுமா விருதாவாகுமா என்பதே உண்மையில் சுவாரசியமான திரைக்கதை.
< சினிமா ஸ்கோப் 42 > < சினிமா ஸ்கோப் 44 >