எதிர்ப் பாலினத்தைச் சேர்ந்த, ஈர்ப்புமிக்க ஆசிரியர் ஒருவர் சற்றென்று மாணவரின் மனதுக்குள் குடிபுகுந்துவிடுவார். இங்கு வயது வேறுபாடு என்பது எப்போதுமே இரண்டாம்பட்சம்தான். என்னதான் மரபு வேலியிடப்பட்டிருந்தாலும் ஏதோ ஓர் ஆசிரியர் ஒரு மாணவியின் மனத்திலும் ஏதோ ஓர் ஆசிரியை ஒரு மாணவன் மனத்திலும் பிரியத்தை விதைக்கத்தான் செய்வார். இது அடிப்படையான ஓர் உளவியல் அம்சம். இந்தப் பிரியம் புற்றுக்குள் பாம்பாகச் சுருண்டுகிடக்கும்போது, யாருக்கும் சிக்கலில்லை. இது படமெடுத்து ஆடத் தொடங்கினால் அப்போது பிரச்சினை வரும். அப்படிப் பிரச்சினையானால் அது திரைக்கதையாகும்; திரைப்படமாக மாறும்.
குடும்பக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட படங்களையே அதிகம் இயக்கியவரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் சாரதா (1962). இந்தப் படத்தில் இரண்டு விஷயங்களைக் கையாண்டிருப்பார். ஒன்று ஆசிரியர் மாணவர் காதல்; மற்றொன்று நாயகனின் ஆண்மையிழப்பு. இரண்டுமே சிக்கலான விஷயங்கள். இதை அநாயாசமாகக் கையாண்டிருப்பார். மரபைக் கட்டிக்காக்கும் செல்வந்தரான, சாரதாவின் தந்தை வேடமேற்றிருந்த எஸ்.வி.ரங்காராவ் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைத் தன்வயப்படுத்தியிருப்பார். ரங்காராவ் ஏற்பது போன்ற கதாபாத்திரங்களை இப்போது திரைக்கதையில் கொண்டுவந்தால் அவற்றை ஏற்று நடிக்கத் தகுந்த நடிகர்களே இல்லை. பார்த்த மாத்திரத்தில் மரியாதையும் அன்பும் செலுத்தவைக்கும் ஆகிருதி கொண்டவர் அவர்.
கே.வி.மகாதேவன் இசையில் ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால், மணமகளே மணமகளே வா வா போன்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைத் திரை ரசிகர்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள். கிராமங்களில் மணமுடிந்த பின்னர் மணமகள், மணமகன் வீட்டில் அடியெடுத்துவைக்கும் வேளையில் மணமகளே மணமகளே வா வா என்னும் இந்தப் பாடலைத்தான் ஒலிக்கவிடுவார்கள். இதில் என்ன பெரிய வேடிக்கை என்றால், இந்தப் படத்தில் நாயகனது பிரச்சினை காரணமாக நாயகனும் நாயகியும் கூடலின்பம் துய்த்திருக்கவே மாட்டார்கள். எந்த இன்பமும் அனுபவிக்காத அந்த மணமகள் கன்னியாகவே மரித்தும்விடுவார்.
பாடம் எடுக்கவந்த ஆசிரியர் சம்பந்தத்தைக் காதலித்து, தந்தையின் எதிர்ப்பை மீறி அவரையே மணம்புரிந்தும்விடுகிறார் சாரதா. மணவறையில் கைபிடித்தவனின் மார்பில் சாய்வதற்காகப் பள்ளியறையில் காத்துக்கிடந்த சாரதாவின் நெஞ்சில் ஈட்டிபோல் இறங்குகிறது கல்லூரியில் அவனுக்கு ஏற்பட்ட விபத்து. இனி அவன் கணவனல்ல; கணவன் மாதிரி. தன் கையாலாகாத நிலையை அறிந்த கணவன் சம்பந்தம், சாரதாவுக்கு மறுமணம் செய்துவைக்க விரும்புகிறான். சாரதாவிடமிருந்து மணவிலக்கு பெற்று, அவளுடைய மாமனையே மணமகனாக்குகிறான் சம்பந்தம். எல்லோரும் ஏற்றுக்கொண்டபோதும், சாரதாவால் இன்னொரு திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தன்னை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்துவிடுகிறாள். பார்த்த மாத்திரத்தில் இந்த கிளைமாக்ஸ் பெரிய ஏமாற்றம் தருகிறது. பெண்ணின் பெருமை என்னும் பெயரில் அந்தக் கதாபாத்திரத்தைக் கழுவில் ஏற்றிவிடுகிறார்களே என்ற எண்ணமே வருகிறது. நிதானமாக யோசித்துப் பார்த்தால் தமது கட்டுக்களிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளப் பெண்கள் முன்வராத வரையில் எந்த முயற்சியும் வீண்தான் என்பதைப் படம் உணர்த்துவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
சாரதாவின் இரண்டு முக்கிய அம்சங்களின் சாயலில் தமிழில் இரண்டு படங்கள் பின்னர் வெளியாகியுள்ளன. ஒன்று கே.பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான சுந்தரகாண்டம் (1992), மற்றொன்று ஆர்.பார்த்திபன் இயக்கத்தில் வெளியான பொண்டாட்டி தேவை (1990). சாரதாவில் நாயகனுக்கு விபத்து காரணமாக ஏற்பட்ட குறை பொண்டாட்டி தேவையில் நாயகிக்கு நோவு காரணமாக ஏற்பட்டிருக்கும். திருமணத்தன்று அதைத் தெரிந்துகொள்ளும் நாயகி திருமணத்தைத் தவிர்க்கிறாள். ஆனாலும் இடைவிடாமல் முயல்கிறார் நாயகன். எனவே, நாயகனுக்காக ஒரு அறுவை சிகிச்சைக்கு நாயகி தன்னை ஒப்புக்கொடுக்கிறார். அந்த சிகிச்சை வெற்றிபெற்றால் அவர் பூரண குணமடைவார்; ஒருவேளை தோல்வியுற்றாலோ பூவுலகிலிருந்து விடைபெறுவார். ஆனால், நாயகன் அந்த அறுவை சிகிச்சையைத் தடுத்து நிறுத்தி நாயகியை மனைவியாக்கிக்கொள்கிறார். திரையில் நாயகி அஸ்வினியை நோயிலிருந்து காப்பாற்றிய பார்த்திபனால் நிஜத்தில் அவரை நோயிலிருந்து காப்பாற்ற இயலவில்லை. 2012-ம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று தனது 45-வது வயதில் பரிதாபமாக உயிரிழந்தார் அவர்.
பொண்டாட்டி தேவை படத்தின் இறுதியில், தாம்பத்திய உறவு இல்லாததால் இவர் தாய்க்குப் பின் தாரமல்ல; தாய்க்குப் பின் தாயே என்ற வியாக்கியானமும் தருகிறார் இயக்குநர். ஆனால் இதெல்லாம் சாத்தியமா என்னும் கேள்வி எழுகிறது. படமும் எடுபடவில்லை. காரணம், இது யதார்த்தத்துக்குச் சற்றும் பொருந்தாத முடிவு. சாரதா எழுப்பிய கேள்வி படத்தை வலுவாக்குகிறது, பொண்டாட்டி தேவையில் எழும் கேள்வி படத்துக்குக் குழிபறித்துவிடுகிறது.
சுந்தரகாண்டத்துக்கு வருவோம். கமல்ஹாசன் நடித்த சூரசம்ஹாரம் திரைப்படத்துக்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் சுந்தர காண்டம் என்பார்கள். பெயர் சரியில்லை என்பதால் மாற்றிவிட்டார்கள். ஆனால், அந்தப் படம் தோல்வி கண்டது; சுந்தரகாண்டமோ வெற்றிபெற்றது. எப்போதுமே சீன்களைப் பிடிப்பதில் பாக்யராஜ் மன்னர். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. காட்சிகளை யதார்த்தமாகத்தான் அமைப்பார் ஆனால், அவை ஒருபோதும் யதார்த்தத்தில் நடைபெறச் சாத்தியமில்லாத சினிமாக் காட்சிகளாகவே அதே நேரத்தில் ரசனைக்கு உத்தரவாதமளிப்பவையாகவே இருக்கும். தன்னுடன் படித்த நண்பன் இன்னமும் படிக்கும் பள்ளிக்கே ஆசிரியராக வருவார் சண்முகமணி. இது அக்மார்க் சினிமாத்தனம்; ஆனால் சுவாரசியம். பிரியா என்னும் இலங்கைத் தமிழ்ப் பெண்தான் படத்தின் பிரதான கதாபாத்திரம். படு சுட்டிப் பெண். பாடமெடுக்க வந்த ஆசிரியர் சண்முகமணிமீது அவளுக்குக் காதல் பிறந்துவிடுகிறது. கவுரமான ஆசிரியர் தொழிலுக்கு இழுக்கு ஏற்படும்படி ஓர் ஆசிரியர் நடந்துகொள்ள முடியுமா? ஆகவே, சண்முகமணி தடாலடியாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். ஆனாலும் காலைச் சுற்றிய பாம்பாகத் தொடர்கிறார் பிரியா. இந்தத் திரைக்கதையை பாக்யராஜ் அவரது பாணியில் கலகலப்பாகவே கையாண்டிருப்பார். ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதிக்கும் அளவுக்குப் படம் முழுவதும் பிரியாவின் சுட்டித்தனங்கள் நிரம்பி வழியும். அவை ஏன் அப்படி அமைந்தன என்பதற்கு விடையாக அமைக்கப்பட்டிருக்கும் கிளைமாக்ஸ். சட்டென்று ஒட்டுமொத்த தட்பவெப்பமும் தலைகீழாக மாறிவிடும். இதைப் போன்ற திரைக்கதை உத்திதான் பார்த்திபனின் சரிகமபதநி படத்தில் கையாளப்பட்டிருக்கும். நெகிழ்வாகச் சென்றுகொண்டிருக்கும் திரைக்கதையைச் சட்டென்று முறுக்கேற்றும் உத்தி அது. ஆனால், படம் பெரிதாகப் போகவில்லை. சரிகமபதநி படத்தின் ஐம்பதாவது நாளன்று அப்பாடா ஐம்பதாவது நாள் என்று சுவரொட்டி அச்சடித்து ஊரெங்கும் ஒட்டியிருந்தார் அவர்.
பிரியாவின் ஆசை மாஸ்டரின் மனைவியாக வேண்டும் என்பதுதானே. அதற்கு மாஸ்டரின் மனைவியே ஒத்துக்கொண்டு தாலி எல்லாம் வாங்கி வருகிறாள். ஆனால், அதற்கு முன்னர் அவள் விடைபெற்றுவிடுகிறாள். கிளைமாக்ஸில் எந்த உறுத்தலுமின்றி, எந்தக் கேள்வியும் எழாமல் படத்தைப் பார்த்துவிட்டுச் சந்தோஷமாகக் கலைந்துவிடுவார்கள் ரசிகர்கள்.
ஆசிரியர் மாணவர் காதலை மையமாகக் கொண்டு ஜி.என்.ரங்கராஜனின் திரைக்கதை, இயக்கத்தில் சார் ஐ லவ் யூ (1991) என்னும் ஒரு படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் இன்னொரு அதிர்ச்சிகரமான திருப்பமும் உண்டு. மாணவி காதலித்த ஆசிரியர் அந்த மாணவியுடைய தாயின் முன்னாள் காதலர். பாடம் கற்றுக்கொடுக்க வந்த ஆசிரியருக்கும் மாணவருக்கும் காதல் வரும்போது, அது பலத்த எதிர்ப்பைச் சந்திக்கும். அதுவும் காதலே என்று புரிந்துகொள்வோர் மிகச் சிலரே. அந்தக் காதலைக் கையாளவே ஒரு பக்குவம் வேண்டும். மரபு மறுக்கும் விஷயத்தை மரபு ஏற்கும்வகையில் சொல்லும், துணிச்சலும் சாமர்த்தியமும் இருந்தால் மட்டுமே இதில் கைவைக்க வேண்டும்.
< சினிமா ஸ்கோப் 37 > < சினிமா ஸ்கோப் 39 >