“தேனீக்களைப் பார்த்து சம்பாதிக்கிறது எப்படின்னு கத்துக்கிறான் வியாபாரி, மலருக்கு மலர் தாவுறது எப்படின்னு கத்துக்கிறான் காமுகன், உரிமைகளைப் பறிக்கிறவங்கள ஒண்ணாக்கூடி எதிர்ப்பது எப்படின்னு கத்துக்கிறான் லட்சியவாதி…” இந்த வசனத்தை எழுதியிருப்பவர் மு.கருணாநிதி. படம் பாலைவன ரோஜாக்கள். இப்படியான லட்சியவாதிகளும் சாதனையாளர்களும் வாழும் இதே உலகத்தில்தான் ஒருவேளை உணவுக்குக்கூடக் கடும் போராட்டம் மேற்கொள்ளும் மீனவர் போன்ற சாதாரணர்களும் வாழ்கிறார்கள். சினிமாவின் கருப்பொருளாக லட்சியவாதிகளும் இருக்கலாம், சாதாரணர்களும் இருக்கலாம்.
பெரும்பாலான சினிமா ரசிகர்கள் பார்த்திருக்கக்கூடிய இத்தாலிப் படமான பைசைக்கிள் தீவ்ஸ் ஒரு சாமானியனின் கதையே. 1948-ம் ஆண்டு வெளியான இது, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான ரோம் நகரத்து மக்களின் அவல வாழ்க்கையை அச்சு அசலாகப் படம்பிடித்திருந்தது. சாமானியக் குடும்பத்தின் சிரமப்பாட்டை யதார்த்த பாணிக் காட்சிகளால் வடித்திருந்தார் இயக்குநர் விட்டோரியோ டி சிகா. ஓர் எளிய கருப்பொருளைக் காலகாலத்துக்குமான ஒரு கலைப் பொருளாக எப்படி மாற்றலாம் என்பதற்கு இந்தப் படம் உதாரணம். எல்லாத் துன்பங்களும் நிறைந்திருந்த வாழ்க்கைதான் என்ற போதும் அவற்றை நம்பிக்கையுடன் கடக்கலாம், கடக்க வேண்டும் என்று இப்படம் சொல்லும் செய்தி துன்பத்தில் உழல்பவர்களின் தோளைத் தழுவி ஆறுதல் தரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். வேலையின்மை, மதம், போராட்ட இயக்கம், சோதிடம், கலை என அனைத்துவிதமான விஷயங்களையும் படத்தின் பயணத்தில் நீங்கள் எதிர்கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் ஒரு மனிதநேய உணர்விழை பிணைத்திருக்கும். அதன் ஆதார சுருதி உங்கள் இதயத்தை வருடியபடியே இருக்கும்.
சினிமாவுக்கான இதன் திரைக்கதை உருவாக்கமும் நேர்த்தியானது. மிகவும் பிரயாசைப்பட்டு சைக்கிளை மீட்டு, அதில் சென்று வேலையில் ஈடுபடும்போது, அந்த சைக்கிளை ஒருவர் திருடிவிட்டுச் செல்கிறார். இந்த வறியவனது சைக்கிள் திருட்டுப் போய்விடுகிறதே என்ற பதற்றம் பார்வையாளர்களிடம் தொற்றுகிறது. இறுதிவரை அது கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடன் பார்வையாளர்கள் படத்தைத் தொடர்கிறார்கள். இறுதிவரை சைக்கிள் கிடைக்கவில்லை. ஆனால், சைக்கிளைத் தேடி தன் மகனுடன் செல்லும் ரிச்சிக்கு வாழ்க்கை நம்பிக்கையைக் கற்றுத் தருகிறது. தன் வாழ்வாதாரமான சைக்கிளே கிடைக்கவில்லையே என அவன் ஒரு சைக்கிளைத் திருடும் அளவுக்குத் துணிந்துவிடுகிறான். ஆனால் அதிலேற்படும் தோல்வி, அவமானம் ஆகியவை அவனைப் பாதிக்கிறது. எனினும் அவற்றால் அவன் நொடிந்துபோய்விடவில்லை. தன் மகனின் பிஞ்சுக் கரங்களை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு வாழ்வின் பயணத்துக்கு ஊக்கத்துடன் தயாராகிறான். அவன் மக்கள்திரளில் ஒருவன். ஆனால், மக்கள் திரளுக்கான செய்தியை மவுனமாக மொழிந்துவிட்டுச் செல்கிறான். இந்தத் திரையாக்க நுணுக்கம்தான் இப்படத்தை உன்னதப் படைப்பாக்குகிறது. அதனால்தான் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் இப்படத்தைப் பார்க்கிறோம்; பேசுகிறோம்; விவாதிக்கிறோம்.
பைசைக்கிள் தீவ்ஸின் பாதிப்பில் 2001-ல் உருவான சீனப் படம் பீஜிங் பைசைக்கிள். இதிலும் படத்தின் மையம் சைக்கிள்தான். புறநகர்ப் பகுதியிலிருந்து பணியின் நிமித்தம் பீஜிங் நகருக்கு வரும் பிஞ்சு இளைஞனின் கனவுகளும் அவற்றைப் பறிக்க முயலும் யதார்த்தத்துடனுனான அவனது போராட்டமுமே படமாகக் காட்சிகொள்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வாழ்க்கையைச் சொல்லும் அவசியம் பைசைக்கிள் தீவ்ஸுக்கு இருந்தது என்றால் பீஜிங் பைசைக்கிளோ உலகமயத்தின் சூழலைச் சொல்லும் நிலையில் இருந்தது. அனைத்தும் நிறுவனமயமாகிவிட்ட சூழலில் வெளிவந்த படம் இது. ஆகவே, கல்வி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் தனிநபர்களது வாழ்வில் ஏற்படும் தாக்கத்தையும் பாதிப்பையும் இப்படத்தின் வழியே பார்வைக்கு வைக்கிறார் இயக்குநர் வாங் சியாஸ்ஹுவாய்.
கொரியர் நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சேர்கிறான் க்யூய். தனது மேன்மையை வெளிப்படுத்த அவனுக்கு சைக்கிளை வழங்குகிறது அது. ஆனால் அதற்கான விலையை அவனது தினசரி ஊதியத்தில் சிறிது சிறிதாகப் பிடித்துக்கொள்கிறது. சுமார் ஒரு மாத காலத்துக்குப் பின்னர் அந்த சைக்கிள் அவனுக்குச் சொந்தமாகிறது. சைக்கிள் அவனுக்குச் சொந்தமான அன்று தன் சைக்கிளைத் திருட்டுக்கொடுத்துவிடுகிறான். இதன் பின்னரான திரைக்கதை பைசைக்கிள் தீவ்ஸிலிருந்து மாறுபட்டது.
ஆனால் பைசைக்கிள் தீவ்ஸ் ரிச்சியைப் போல் க்யூயிக்கு சைக்கிள் கிடைக்காமல் போகவில்லை. தன் சைக்கிளைக் கண்டுபிடித்துவிடுகிறான். ஆனால் அதை விலைக்கு வாங்கியிருப்பவன் ஜியான் என்னும் ஒரு மாணவன். அவன் பணம் கொடுத்து அந்த சைக்கிளை வாங்கியிருக்கிறான். அதன் மூலம் ஒரு காதலியும் அவனுக்குக் கிடைக்கிறாள். இப்போது சைக்கிளை உரிமை கொண்டாடுகிறான் க்யூய். இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகள்தாம் எஞ்சிய படத்தை நகர்த்துகின்றன. ஜியானின் காதலி மற்றொரு சைக்கிள் சாகசக்காரனை விரும்பி அவனுடன் தோழமையைப் பேணுகிறாள். அதைத் தாங்கிக்கொள்ள இயலாத ஜியானுக்கு க்யூயின் துன்பத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவன் சைக்கிளை அவனிடமே தந்துவிடுகிறான். ஆனால் சைக்கிள் சாகசக்காரனின் நண்பர்களால் துரத்தப்படுகிறான். க்யூய், ஜியான் இருவருமே அவர்களால் தாக்கப்படுகிறார்கள். எந்தப் பாவமும் அறியாத க்யூயின் வாழ்க்கை ஏன் இவ்வளவு சிரமத்துக்கு உள்ளாக வேண்டும்? தாக்கப்படும்போது, நான் எதுவுமே செய்யவில்லை என அழுகையின் ஊடே அவன் சொல்லிக்கொண்டே இருக்கிறான் ஆனால் அவனைத் தாக்கும் கும்பலின் செவிகளை அந்தச் சொற்களால் ஊடுருவ இயலவேயில்லை. அந்தச் சொற்கள் பார்வையாளரின் இதயத்தை கனக்கச் செய்கின்றன. அவனது சைக்கிளையும் அவர்கள் கடுமையாகத் தாக்குகிறார்கள். அஃறிணைப் பொருளான சைக்கிளைத் தாக்கும் அளவுக்கான வன்மம் எப்படி அவர்களுக்கு உருவாகிறது? எளிய மனிதர்கள்மீது தாக்குதல் நடத்தும் இந்தச் சாகசக்காரர்களை யார் தண்டிப்பது? இப்படியொரு சமூகத்தின் இழிநிலையை இயக்குநர் மவுனமாகக் காட்சிப்படுத்துகிறார். இறுதிக் காட்சியில், சிதைக்கப்பட்ட தன் சைக்கிளைத் தன் தோளில் சுமந்தபடி நகரத்தின் சாலை வழியே செல்கிறான் க்யூய். அது காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் எல்லா ஒடுக்குதலையும் மீறி எளிய மனிதன் சமூகத்தில் கம்பீரமாகத் தன் வாழ்வைத் தொடர முடியும் என்னும் நம்பிக்கை விதையைப் பார்வையாளரிடம் விதைக்கிறது.
இந்த இரு படங்களின் சாயலையும் கொண்டு உருவான பொழுதுபோக்குப் படம் என்ற எண்ணத்தைத் தான் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் தந்தது. வட சென்னையின் இயல்பான மனிதர்களை அவர்களின் குணாதிசயங்களுடன் அது சித்தரித்திருந்தது. ஆக, சாமானியர்களைக் குறித்த அநேகக் கதைகளும் நம்மிடையே கொட்டிக்கிடக்கின்றன. கதைகள் என்றால் எழுதியவை மட்டுமல்ல; பார்த்தவை; கேட்டவை போன்ற அனைத்துமே. அவற்றில் ஒரு கதையைத் திரைக்கதை எப்படிக் கையாள்கிறது, திரையில் அதை எப்படி இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்பதைப் பொறுத்தே ரசிகர்கள் அதை ரசிக்கிறார்கள் அல்லது ஒதுக்குகிறார்கள்.
< சினிமா ஸ்கோப் 23 > < சினிமா ஸ்கோப் 25 >