இந்த வலைப்பதிவில் தேடு

புதன், ஜூன் 29, 2016

சினிமா ஸ்கோப் 5: ஆறிலிருந்து அறுபது வரை

குஷி படத்தில் விஜய், ஜோதிகா
சினிமா பேசத் தொடங்கிய நாள் முதலே அழுத்தமான கதைகளைக் கொண்ட திரைப்படங்களையே நாம் ரசித்துவந்திருக்கிறோம். அதிலும் சுவாரசியமான திருப்பங்களும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களும் கொண்ட கதைகளே நமக்குத் திருப்தி அளிக்கின்றன. சினிமா தொடங்கிய பத்து நிமிடத்துக்குள் கதை ஆரம்பிக்கவில்லை என்றால் நெளியத் தொடங்கிவிடுகிறோம். கதை ஆரம்பிப்பது என்றால் அந்தப் படத்தின் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ வேண்டும். படத்தின் எஞ்சிய பயணத்தைத் தீர்மானிக்கும் வலுவான காட்சி ஒன்று தொடக்கத்தில் இடம்பெற்றுவிட வேண்டும். உதாரணமாக எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான ‘குஷி’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், காதலனும் காதலியும் சேர்ந்துவிடுவார்கள் என்று கதையின் முடிவைச் சொல்லியே படத்தைத் தொடங்கினார் இயக்குநர்.

காதலர்கள் இணைந்துவிடுவார்கள் என்று தெரிந்தபோதும் அவர்கள் எப்படி இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களைத் தொடர்ந்து படம் பார்க்கவைத்தது, ரசிகர்கள் படத்தின் இறுதிவரை ஆர்வத்துடன் அமர்ந்திருந்தார்கள். ஆக, படம் தொடங்கிய அந்தப் பத்திருபது நிமிடங்களுக்குள் திரையரங்கில் ஆர்வத்துடன் கூடியிருக்கும் ரசிகர்களைத் திரைப்படம் எந்த வகையிலாவது தன் வசப்படுத்திவிட வேண்டும். இந்தப் படம் பார்ப்பதற்கு உகந்தது, நமக்கானது என்ற நம்பிக்கையை அது விதைத்துவிட வேண்டும். இல்லையென்றால் ரசிகர்கள் திரைப்படத்திலிருந்து உணர்வுரீதியாக விலகிவிடுவார்கள். பின்னர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களைத் திரைப்படத்துடன் பிணைப்பது இயலாத காரியமாகிவிடும்.

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படக் காட்சி

ரசிகர்களுடன் அந்தரங்கமான உறவைப் பேணும் சினிமாவுக்கான கதை மிக எளிமையாக, உணர்வுபூர்வமானதாக இருந்தால் போதும். அறிவுஜீவித்தனமான கதையைவிட உணர்வுபூர்வமான கதையே ரசிகர்களைக் கவர்கிறது. உலகம் முழுவதுமே எளிய கதைகள்தாம் பெரிய அளவில் வரவேற்கப்படுகின்றன. சில்ட்ரன் ஆஃப் ஹெவன், பைசைக்கிள் தீவ்ஸ், சினிமா பாரடைசோ என எந்தப் படத்தை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். அவற்றின் கதைகள் எளிமையானவை, உணர்வுகளால் பொதியப்பட்டவை. சில்ட்ரன் ஆஃப் ஹெவனில் ஒரு சாதாரண ஷூதான் படத்தின் மைய இழை. தன் இரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக ஷூ வாங்கித் தர வழியில்லாத ஏழைக் குடும்பம், அவர்களுடைய உணர்வுப் போராட்டம், ஷூவால் அந்தக் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் இவைதான் அந்தப் படம். இந்தப் பிரச்சினையை உலகின் எந்த நாட்டினரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இந்தக் குடும்பத்துக்கு ஒரு விடிவு காலம் வந்துவிடாதா, அவர்கள் வாழ்வில் மேம்பட்டுவிட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு வந்துவிடுகிறது. எனவே படத்தை ஆர்வத்துடன் பார்க்கத் தயாராகிவிடுகிறார்கள். அவர்களுக்கும் திரைப்படப் பாத்திரங்களுக்கும் இடையே வெள்ளித்திரை மறைந்துவிடுகிறது. நம்மில் ஒருவர் என்று கதாபாத்திரங்களுடன் உறவை மானசீகமாக ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அப்படியான ஓர் உறவு ரசிகர்களுக்கு உருவாகிவிட்டால் போதும். அதன் பின்னர் எதையும் பார்க்க அவர்கள் தயாராக இருப்பார்கள். சாமானிய மனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் அன்றாடச் சம்பவங்களோடும் சிக்கல்களோடும் ரசிகர்கள் தங்களை எளிதில் பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். 


ஆட்டோகிராஃப் படத்தில் சேரன், பத்மப்ரியா

இயக்குநர் சேரனின் ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் பெரிய காதல் காவியமல்ல. சேரனும் தமிழகத்து சத்யஜித் ராய் அல்ல. எனினும் சாதாரணமான அந்தப் படம் பெரிய வெற்றியை ஈட்டியது. அந்தக் கதையை சினிமாவுக்கான கதை அல்ல என்றே பலர் தட்டிக்கழித்ததாகச் செய்திகள் வெளியாயின. ஆனால் தம் வாழ்வில் பல காதல்களைக் கடந்துவந்த ரசிகர்கள், அந்தப் படத்தின் கதைநாயகனுடன் தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைந்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது தங்கள் படம். தங்கள் வாழ்வைச் சொல்லும் படம். அவ்வளவுதான். அதனால்தான் சேரனின் அமெச்சூர்தனமான நடிப்பையும் மீறி அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இத்தகைய உணர்வு கொந்தளிக்கும் திரைப்படங்களுடன் நாம் எளிதாகப் பிணைப்பு கொள்கிறோம். தமிழில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த படங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் தனது படங்களின் கதைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர். மதுரை வீரன், நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப் பெண் என அவரது எல்லாப் படங்களும் அனைவரையும் ஈர்க்கும் வகையிலான கதைகளைக் கொண்டவை. அப்படியான கதைகளைத் தேர்வுசெய்வதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.

ஏழைப் பங்காளன் என்ற தனது கதாபாத்திர வார்ப்புக்கு உதவும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதைகள்மீது ஆர்வம் காட்டினார். அவர் ஒரு ஆபத்பாந்தவன் என்னும் நம்பிக்கையை அவரது திரைப்படப் பாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் விதைத்தன. அதனால்தான் அவரால் அவ்வளவு ரசிகர்களை ஈர்க்க முடிந்தது. அவருடைய கதாபாத்திரங்களைப் போலவே எம்.ஜி.ஆரும் இருப்பார் என்ற நம்பிக்கையை அந்தப் படங்கள் உருவாக்கின. ஆகவே அவரால் சினிமாவைக் கடந்தும் வெற்றிகளைப் பெற முடிந்தது. 


எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர்.

ஒரு படத்தின் கதை வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்பதைவிட அது எல்லோரையும் கவரக்கூடியதாக, உணர்வுபூர்வமானதாக இருக்க வேண்டும். சினிமாவுக்குக் கதை எழுத முற்படுபவர் வாழ்க்கை சார்ந்த அனுபவத்தைப் பெற்றிருத்தல் நல்லது. வாழ்க்கையைத் துளித்துளியாக அனுபவித்துப் பார்த்த ஒருவருக்குத் தான், அதை ரசமான சம்பவங்களாக மாற்றும் ரசவாதம் கூடிவரும். அத்தகைய ரசவாதம் கூடிய கதைகளே திரைப்படத்தில் மாயாஜாலங்களை ஏற்படுத்தும். ஒரு கதையைச் சொல்லும் விதத்தில்தான், அதாவது திரைக்கதையின் அமைப்பில்தான், அது மாறுபடுகிறது. ஒரு கதை எப்படி எழுதப்பட்டிருக்கிறதோ, அப்படியே அது திரையில் சொல்லப்படுவதில்லை. ஆகவே சினிமாவுக்குக் கதை எழுத மூளையைக் கசக்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் கதாசிரியர் இதயத்தில் உணர்வு நிரம்பியிருக்க வேண்டும்.

கதைகளில் அன்பு, பிரியம், பாசம், காதல், பிரிவு, துரோகம், எதிர்ப்பு, வீரம் போன்ற பல சங்கதிகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமைத்துத் தர வேண்டும். இவற்றை உள்ளடக்கிய கதைகளை எழுதினால் போதும், சுவாரசியமான திரைப்படத்துக்கு உத்தரவாதம் உண்டு. தீவிர இலக்கியப் படைப்பை உருவாக்கத் தேவைப்படும் மொழியியல் நிபுணத்துவம் சினிமாவுக்குக் கதை எழுத அவசியமல்ல. எல்லோருக்கும் புரியும்படி சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாக, நேரிடையாக விவரிக்கத் தெரிந்தால் போதும். கதையை எழுதிவிடலாம். பெரிய பெரிய வாக்கியங்கள், வாசகன் அறிந்திருக்காத புதிய புதிய சொற்கள் என எழுத்தாளர் தன் மொழி அறிவை எல்லாம் கொட்டி எழுதுவது போன்ற முயற்சி சினிமாக் கதை எழுதத் தேவையில்லை. இதனாலேயே யார் வேண்டுமானாலும் கதையை எழுதிவிடலாம் என நம்பிப் பலர் மோசம் போகிறார்கள். அதுதான் சோகம். புத்திசாலித்தனமான ரசிகர்கள் சினிமாவை இன்னும் அறிவுபூர்வமாக அணுகாமல் உணர்வுபூர்வமாகவே அணுகுகிறார்கள் என்பதை மறந்துவிடலாகாது.

புதன், ஜூன் 22, 2016

சினிமா ஸ்கோப் 4: சொல்ல மறந்த கதை

பாபா படத்தில் நடிகர் ரஜினிகாந்த்


ஒரு படம் பார்க்கிறோம், அது குறித்து எழும் முதல் கேள்வி படம் எப்படி என்பதே. பதில் சொல்கிறோம். அடுத்த கேள்வி, கதை என்ன என்று வந்து விழும். ஏனெனில், கதைக்குச் சமூகம் கொடுக்கும் முக்கியத்துவம் அவ்வளவுநமக்குக் கதை கேட்கப் பிடிக்கும். பாட்டியிடம் கேட்ட கதை, அம்மா சொன்ன கதை, அப்பா கூறிய கதை நண்பர்களுடன் பேசிய கதைகள் என வாழ்நாள் முழுவதும் கதைகளாகவே பேசுகிறோம். வாழ்வில் நாம் கடந்த சம்பவங்களைச் சிறிது புனைவு கலந்து கதைகளாகவே பிறரிடம் சொல்கிறோம். கதைகளைப் பேசுவதிலும் பகிர்ந்துகொள்வதிலும் கேட்பதிலும் நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.

எனவே, நம்மைப் பொறுத்தவரை சினிமாவும் நன்றாகக் கதை சொல்ல வேண்டும் எனவே விரும்புகிறோம். அது கதை சொல்லும் ஓர் ஊடகம்தானே. என்ன ஒன்று, சினிமாவில் கதை காட்சியாகவும், இசையாகவும், சிறு வசனம் வழியேயும், அரங்கப் பொருள் மூலமாகவும் என வெவ்வேறு வகைகளில் சொல்லப்படுகிறது. சிறுகதையிலோ நாவலிலோ கதையாசிரியர் எல்லாவற்றையும் எழுத்தில் விவரித்துத் தருவார்மனத்திரை உதாரணமாக, கதையில், “அவன் பத்திரிகையொன்றைப் புரட்டிக்கொண்டு அறை ஒன்றில் அமர்ந்திருந்தான். வெளியே வாகனங்கள் விரைந்துகொண்டிருந்தன. இன்னும் அவளைக் காணவில்லை. வழக்கமாக இதற்கு முன்னரே வந்து வீட்டின் வேலைகளை முடித்திருப்பாள். ஏன் அவள் இன்னும் வரவில்லை என்ற கேள்வி அவன் மனத்தை அரித்துக்கொண்டே இருந்ததுஎன்று எழுதப்பட்டிருந்தால் வாசகர்கள் அவற்றுக்கான காட்சியைத் தாங்களே தங்கள் மனத்திரையில் உருவாக்கிப் பார்த்துக்கொள்வார்கள்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

அவனுக்கும் அவளுக்கும் என்ன உறவு, அந்த அறை எப்படி இருந்தது, வெளியே என்ன மாதிரியான வாகனங்கள் சென்றுகொண்டிருந்தனஇதையெல்லாம் அவர்கள் மனம் காட்சிகளாக உருவாக்கும். தாங்கள் கடந்து வந்த அத்தகைய தருணம் ஒன்று சிந்தனையில் வந்து போகும். இவையெல்லாம் சேர்ந்த கலவையான உணர்வை அந்தக் கதை தரும். ஆக வாசகரின் கற்பனைக்கு வேலை உண்டுஆனால், சினிமாவில் அந்தக் கற்பனையை இயக்குநர் தலைமையிலான படக் குழுவினர் உருவாக்கித் தர வேண்டும். பார்வையாளரின் வேலை எளிது. ஐநூறு, அறுநூறு பக்கங்களில் சொல்லப்படும் வாழ்க்கை வரலாற்றை இரண்டரை மணி நேரத்துக்குள் சினிமாவில் சொல்லிவிட முடியும்.

இப்படிச் சொல்ல முடிவதாலேயே அது அதிகக் கற்பனையைக் கோரும் கடினமான பணியாகவும் மாறிவிடுகிறது. அதுதான் இயக்குநரின், படக் குழுவினரின் முன்னர் உள்ள பெரும் சவால். அதை அவர்கள் எப்படி நிறைவேற்றி முடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததே சினிமாவின் கலைரீதியான வணிகரீதியான வெற்றி அமைகிறதுஒரு படத்தின் முதல் வேலை எதுவென்று நினைக்கிறீர்கள்? கதையைத் தேர்வு செய்வதுதான். கதையைச் சிலர் தாங்களே எழுதுகிறார்கள். சிலர் பிறரிடம் பெறுகிறார்கள். தமிழ் சினிமாவில் கதை சொல்லத் தெரிந்தால்தான் திரைப்படம் இயக்கும் வாய்ப்பே கிடைக்கும் என்பதுதான் இன்றுவரை நிலைமை. ‘இயக்குநருக்கும் கதைக்கும் என்ன தொடர்பு, கதை என்பது கதையாசிரியனின் வேலை அல்லவா?’ என்று எந்தத் தயாரிப்பாளரும் கேட்பதுமில்லை.


நடிகர் கமல்ஹாசன்

ஒரு நல்ல கதையை உங்களால் தயாரிப்பாளரோ அவரைச் சேர்ந்தவர்களோ ரசிக்கும்படி சொல்லத் தெரியவில்லை என்றால் உங்களது இயக்குநர் கனவு வெறும் பகல் கனவுதான். நீங்கள் வைத்திருக்கும் கதை என்ன என்று கேட்டால் ஓர் உதவி இயக்குநர்ஓபன் பண்ண உடனே...’ எனத் தொடங்கி படத்தின் திரைக்கதையை ஷாட் பை ஷாட்டாகச் சொல்லத் தொடங்கிவிடுவார். அவருடைய விவரிப்பில் படத்தின் திரைக்கதையைத்தான் நீங்கள் கேட்டிருப்பீர்கள். கதைக்கும் திரைக்கதைக்குமான புரிதல் இந்த அளவிலேயே இருக்கிறதுஇந்தப் புரிதல் இல்லாமலேயே படங்கள் உருவாக்கப்படுகின்றன, ரசிக்கப்படுகின்றன. சமீபத்தில் வெளியான 'இறைவி' வரை இந்தச் சிக்கல் இருக்கிறது. கதைக்குப் பொருத்தமான திரைக்கதை அதில் அமைக்கப்படவில்லை. கதையின் அழுத்தத்தை உணராமலே கனமான அந்தக் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர்எனவே, திரைக்கதையைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் போயிருக்கிறது. ஒரு கதையை எதற்காகச் சொல்கிறோம், எப்படிச் சொல்லப் போகிறோம் என்பது போன்ற தெளிவு இல்லாவிட்டால் இயக்குநரின் பாடு சிக்கலாகிவிடும். இதை உணர்ந்துகொள்ள உதவும் சமீபத்திய உதாரணம் இறைவிஆக, எண்சாண் உடம்புக்குத் தலை எப்படியோ அப்படியே செல்லுலாய்ட் சினிமாவுக்குக் கதை. எவ்வளவு பெரிய நடிகர்கள் நடித்தாலும் ஒரு படத்தின் கதை ரசிகர்களுக்குத் திருப்தி தரவில்லை என்றால் அந்தப் படத்தை ரசிகர்கள் புறக்கணித்துவிடுகிறார்கள்.

ரஜினிகாந்த் பெரிய சூப்பர்ஸ்டார்தான். அவர் நடிக்க வேண்டாம், வந்து நின்றாலே போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்று கதை பேசுவார்கள். ஆனால், அவர் நடித்த எல்லாப் படங்களும் வெற்றிபெற்றவையா? அவர் ஆன்மிகக் கனவுடன் உருவாக்கிய 'பாபா' அவருக்கு மிகப் பெரிய தோல்வியாகத்தான் அமைந்தது. இவ்வளவுக்கும் அந்தப் படத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் பங்கும் இருந்தது. அந்தப் படத்துக்காக ராமகிருஷ்ணனை அழைத்து வந்ததையே ஒரு கதை போல் சொல்வார்கள். ஆனால் கதையில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பெரிய நடிகர் படத்துக்குக் கதை எதற்கு என்பார்கள். எப்போது? படம் வெற்றிபெறும்போது. அதே நடிகரின் படம் தோற்கும்போது, கதையே இல்லாமல் எப்படி ஒரு படம் வெற்றிபெறும் என்று கேட்பார்கள்அதனால்தான்நான் யானையல்ல, குதிரைஎன்று வசனம் பேசிய ரஜினிகாந்த், லிங்காவில் கிடைத்த அனுபவம் காரணமாக, புதுக் கதையும் பார்வையும் தேவை என்பதை உணர்ந்திருக்கிறார்; ரஞ்சித் என்னும் புது இயக்குநரைத் தேடி வந்திருக்கிறார். இங்கே ரஜினிகாந்தும் அவருடைய படங்களும் வெறும் உதாரணங்கள்தான். இது எந்த நடிகருக்கும் பொருந்தும்


எழுத்தாளர் சுஜாதா

ஆகச் சிறந்த நடிகர் என மதிக்கப்படுபவர் கமல்ஹாசன், அவரே கதை எழுதுவார்; திரைக்கதை எழுதுவார்; வசனம் எழுதுவார்; பாடல் எழுதுவார்; என்றாலும் எப்போதும் யாராவது ஓர் எழுத்தாளரைப் பக்கத்தில் வைத்துக்கொள்வார். சுஜாதா, பாலகுமாரன், கிரேசி மோகன், ஜெயமோகன் எனப் பலர் கமலின் படத்துக்குப் பங்களித்திருக்கிறார்கள். இவர்களின் கதைத் திறமையையும் எழுத்துத் திறமையையும் முடிந்த அளவு கமல் கறந்துவிடுகிறார்அதுதான் அவரது கெட்டிக்காரத்தனம். ஆக, ஒரு படத்தின் வெற்றியை எது வேண்டுமானாலும் தீர்மானிக்கலாம். ஆனால், தோல்வியை மோசமான கதை தீர்மானித்துவிடும். அதனால்தான் கதை பற்றி இவ்வளவு கதைக்க வேண்டியிருக்கிறது. வசூலைப் புறந்தள்ளிவிட்டு யோசித்தால் எந்த நடிகருக்கும் பெயரை வாங்கித் தந்த படம் அழுத்தமான கதை கொண்டதாகவே இருக்கிறது.

10.06.2016 அன்று தி இந்துவில் வெளியானது

< சினிமா ஸ்கோப் 3 >                                 < சினிமா ஸ்கோப் 5 >

புதன், ஜூன் 15, 2016

சினிமா ஸ்கோப் 3: இன்று நேற்று நாளை

தமிழ்த் திரைப்படத் துறை தொழில்நுட்பரீதியில் பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது. அந்தத் தொழில்நுட்பத்தை அவசியப்பட்ட தருணத்தில் அவசியப்படும் காரணத்துக்காக மட்டும் பயன்படுத்துகிறார்களா? பல தருணங்களில் சம்பந்தமே இல்லாத காட்சிகளில் எல்லாம் தொழில்நுட்பத்தின் குறுக்கீடு தென்படும். கற்பனை வளத்தைக் காட்சியாக மாற்றத் தொழில்நுட்பம் பயன்பட வேண்டும், அதை விடுத்து எல்லாத் தவறுகளையும் தொழில்நுட்பத்தால் சரிப்படுத்திவிடலாம் என்னும் மூடநம்பிக்கை வளர்ந்துவிட்டது.

வைதேகி காத்திருந்தாள் படத்தில் விஜய்காந்த்
உள்ளடக்கம் சார்ந்து பெரிய அளவிலான மெனக்கெடுதல் இல்லாததால் அவர்களது ஆற்றல் தொழில்நுட்பத்தின் பக்கம் சாய்ந்துவிட்டது என்றே தோன்றுகிறது. இளைஞர்களிடம் அளப்பரிய ஆற்றல் குவிந்து கிடக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் அதிலொரு பகுதியை உள்ளடக்கம் சார்ந்தும் செலவிட வேண்டியது அவசியமாகிறது. அப்படிச் செயல்படுத்தும் வேளையில் தொழில்நுட்ப ரீதியில் அவர்களைப் பிரமிப்போடு பார்க்கும் நம்மால் உள்ளடக்கம் சார்ந்தும் பிரமிப்போடு பார்க்க முடியும்.

சமகால வாழ்வின் ஆழமின்மை, அடர்த்தியின்மை சினிமாவிலும் ஊடுருவியிருக்கக்கூடும். ஆனால் தமிழ் சினிமா அவ்வளவு சிறப்பாக இல்லை என்னும் குற்றச்சாட்டு சினிமா தொடங்கிய நாள் முதலாகவே இருந்துவருகிறது. முன்னர் வந்த படங்கள் இப்போதைய படங்களைவிடப் பரவாயில்லை என்னும் வகையிலேயே இளைஞர்கள் தங்களின் முந்தைய தலைமுறைக்குப் பெயர்வாங்கிக் கொடுக்கிறார்கள்.

இந்த வகையில் அடங்காமல் ஆண்டுக்கு ஓரிரு நல்ல படங்கள் வெளியாகி சினிமாத் துறையின் பெயரைக் காப்பாற்றிவருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இதே நிலைதான் தொடர வேண்டுமா என்பதே ஆதங்கம். வெகுவாகச் சிரமப்பட்டு எடுக்கப்படும் திரைப்படத்தை அதே அளவு சிரமப்பட்டா பார்வையாளர்கள் பார்க்க வேண்டும்?

அகிரா குரோசோவா, ஸ்டான்லி குப்ரிக், பொலான்ஸ்கி என்று உலகளவிலான இயக்குநர்களின் படத்தை எல்லாம் பார்த்த பின்னர் எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படங்களின் தரம் எப்படி இருக்கிறது? திரைப்பட அறிவை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் படங்களைப் பார்ப்பதை விட்டுவிட்டு எந்தப் படத்தின் காட்சி நமக்குப் பயன்படும் என்ற பயன்பாட்டு நோக்கத்துக்காகப் படங்கள் பார்க்கப்படுகின்றனவோ? கலைப்படங்கள் காலைவாரும் என்று வணிகப்படம் எடுக்கிறார்களா? வணிகப் படங்களாவது ஒழுங்கான படங்களாக உள்ளனவா?

வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதி

சமீபத்தில் ஆர். சுந்தர்ராஜனின்வைதேகி காத்திருந்தாள்படத்தை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. ஒரு குவளை நீர் கிடைக்காததால் காதலியை இழந்தவனும், குளம் நிறைய நீர் இருந்ததால் கணவனை இழந்தவளும் இணைந்து ஒரு காதல் ஜோடியைச் சேர்த்துவைக்கிறார்கள்இந்த ஒரு வாக்கியம்தான் படத்தின் கதை. அந்தக் கதையிலேயே ரசிகர்களை ஈர்த்துவிடும் மாயம் இருக்கிறது. ஒரு குவளை நீரால் காதலியை இழந்த வெள்ளைச்சாமி ஊருக்கெல்லாம் தண்ணீர் எடுத்து ஊற்றிக் காலத்தைக் கழிக்கிறான். திருமண நாளன்றே அதுவும் ஒருமுறைகூடக் கணவன் முகத்தைப் பார்க்காமலே அவனை இழக்கிறாள் நாயகி வைதேகி.

ஆகவே அந்தக் கணவனின் முகம் பார்வையாளருக்கும் காட்டப்படுவதில்லை. படத்தின் ஒரு காட்சியில் ராமகிருஷ்ணரும், சாரதா அம்மையாரும் இணைந்திருக்கும் ஒளிப்படம் ஒன்று இடம்பெற்றிருக்கும். வெள்ளைச்சாமியையும் அவனுடைய வைதேகியையும் குறிக்கும் வகையில் அந்த ஒளிப்படம் மவுனச் சான்றாக இருக்கும்கைம்பெண்கள் மீதான பரிவுடன் மூடநம்பிக்கையைச் சாடும் காட்சியும் படத்தில் உண்டு. இவ்வளவுக்கும் இது ஒரு பொழுதுபோக்குப் படமே. ஒரு கலைப் படம் என்ற மகுடம் தரிப்பதற்கு ஏற்றதன்று. ஆனால் தேர்ந்தெடுத்த கதைக்கு இயக்குநர் நியாயம் செய்திருக்கிறார். தொழில்நுட்பம் வளர்ந்து கிடக்கும் இன்றைய நாட்களில் இப்படியான படங்களாவது பெருகியிருக்க வேண்டும்; ஆனால் குறைந்துகொண்டே வருகின்றன.

இந்தப் படத்தை நமக்கு நினைவுபடுத்துவது, ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ என்னும் வசனம். எனில் எங்கே பிழை? பார்வையாளரிடமா, படைத்தவரிடமா? பார்வையாளர்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட் தேவைப்படும்போது நிலவுக்கு எதற்குப் பயணம் செல்ல வேண்டும் எனப் படைப்பாளிகள் எண்ணிவிடுகிறார்களோதமிழின் தற்கால இயக்குநர்களில் பெயர்வாங்கிய இயக்குநர்கள் எல்லாம் உலக அளவிலான தரத்தில் படத்தைப் படைத்தவர்களா? இல்லை. ஆனால் தாங்கள் உருவாக்கும் படத்தை உலகத் தரத்துக்கு உயர்த்திவிட வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர்கள். அவ்வளவுதான். ரசிகர்கள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள்.

அந்த முனைப்பு அவர்களுக்கும் தெரிகிறது, எனவே படம் சற்றேறக்குறைய இருந்தாலும் அதைப் போற்றிப் புகழ்கிறார்கள். விமர்சகர்கள் கறார் தன்மையுடன் அணுகும் ஒரு படத்தை ரசிகர்கள் கரிசனத்துடன் அணுகுவதற்கு இதுதான் காரணம். இவர்களுக்கு ரசிக்கத் தெரியாது என்று நினைப்பது சரிதானா? படைப்பைத் தாண்டி, படைப்பாளி மீதும் பரிவு காட்டுபவனுக்கு நியாயம் செய்ய வேண்டாமா?

சினிமாவுக்குக் கதை எதற்கு? சுவாரசியமான திரைக்கதை இருந்தால் போதாதா? திரைக்கதைக்கு அடிப்படையே கதைதான். ஒரு வாக்கியமோ ஒரு பத்தியோ ஒரு பக்கமோ எப்படியும் ஒரு திரைக்கதையை ஒரு கதையாக மாற்றிவிடலாம். அழுத்தமான கதை அமைந்துவிட்டால் போதும் உருப்படியான படத்துக்கு உத்தரவாதம் உண்டு. படமாக்கத்தில் அடிப்படையான சில தவறுகள் இருந்தால்கூட ரசிகர்கள் அவற்றைப் பெரிதுபடுத்துவதில்லை.

கடலோரக் கவிதைகள் படத்தில் சத்யராஜ்

உதாரணம்: கடலோரக் கவிதைகள். அந்தப் படத்தின் கதைக் களம் கன்னியாகுமரி மாவட்டத்தின் முட்டம். ஆனால் படத்தின் பாஷையோ குமரித் தமிழல்ல, பொதுத் தமிழ். அடிப்படையிலேயே சிக்கல். ஆனால் படத்தைத் தூக்கிப்பிடிக்கும் வலுவான கதை படத்தை உயிர்ப்பு மிக்கதாக மாற்றியது. இவ்வளவுக்கும் அது ஒரு ரொமாண்டிக் வகைப் படம்தான். ஆனால் இன்றுவரை பேசப்படும் படமாகவும் அது உள்ளது. கதை எழுதிய கே.ராஜேஷ்வர் இயக்கிய படங்களைவிட அவருக்குப் பெயர்வாங்கித் தந்தது இந்தக் கதை.

இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா போன்றோரிடமிருந்து இளம் இயக்குநர்கள் கற்க வேண்டிய பிரதான பாடம் இது. இந்த இயக்குநர்கள் கதையை எழுதுவதில் தங்கள் ஆற்றலை வீணாக்கவில்லை. தங்களைக் கவர்ந்த ஒரு கதைக்குப் பொருத்தமான திரைக்கதையை அமைத்து, அதை ரசனைமிகு, அழகியல்கூடிய திரைப்படமாகத் திரையில் மலரவிட்டார்கள். இதனால் அவர்களால் வீரியத்துடன் திரைப்படங்களை உருவாக்க முடிந்தது.

கதையைச் சொற்களால் விளக்க வேண்டும், திரைப்படமோ காட்சிகளால் நகர வேண்டும். சிறந்த கதையாசிரியர் சொற்களை வீணாக்க மாட்டார். சிறந்த இயக்குநர் தேவையற்ற ஒரு ஃபிரேமைக் கூடத் திரைப்படத்தில் அனுமதிக்க மாட்டார்.

கடலோரக் கவிதைகள் படத்தில் ரேகா

நீங்கள் ரசித்துப் பார்த்த எந்தப் படத்தை வேண்டுமானாலும் நினைவுபடுத்திப் பாருங்கள், அதன் கதை வலுவானதாக அமைந்திருக்கும். அதனால்தான் அது உங்கள் ஞாபகத்தில் நிலைத்திருக்கும். ஒரு படத்தைப் பார்த்த பின்னர் அதன் கதையை உங்களால் எளிதாக, உணர்வுபூர்வமாகச் சொல்ல முடிந்தால் அது உங்களைப் பாதித்திருக்கிறது, உங்கள் உணர்வுடன் கலந்திருக்கிறது, அது சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கிறது என்பது பொருள். அப்படியான தமிழ்ப் படங்கள் நாளையாவது வெளிவர வேண்டும்.

2016 ஜூன் 3 அன்று தி இந்துவில் வெளியானது