ரசனையைக் கெடுக்கும் மலையாள அரசியல்
எவ்வளவோ படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையிருந்தும் கையிலேயே படம் கிடைத்தாலும் கூட பல திரைப்படங்களை பார்க்க முடிவதில்லை. இயல்பான சோம்பேறித்தனம். சும்மா மேற்சுவரை பார்த்துக்கொண்டே கற்பனையில் ஆழ்ந்திருப்பதில் ஒரு சுகம். பன்றி சாக்கடையில் புரள்வது போன்றது அது. இதை எல்லாம் மீறி சில சமயங்களில் ஒருசில படங்களை பார்த்துவிட முடிகிறது. சமீபத்தில் அப்படி பார்த்த ஒரு படம் உஸ்தாத் ஹோட்டல் என்னும் மலையாளப்படம். அன்வர் ரஷீத் இயக்கிய திரைப்படம் இது. ஒருநாள் அதிகாலை இரண்டரை முதல் ஐந்து மணி வரை தூக்கம் தொலைத்த இரவில் இந்தப் படத்தை பார்த்தேன்.
பொதுவாக மலையாளப்படங்களில் பெரிய அளவிலே காட்சிபூர்வ ரசனை இருக்காது என்ற மேம்போக்கான புரிதலை தகர்க்கும் விதமாக அமைந்திருந்தன காட்சிகள். கோழிக்கோடு பகுதி இஸ்லாமிய வாழ்க்கையின் கூறுகளை தன்னகத்தே கொண்டு படம் நகர்ந்தது. பெரிய அளவிலான சம்பவங்கள் எவையும் இல்லை என்றாலும் பார்ப்பதற்கு எந்தத் தடையும் இல்லாமல் படத்தின் நகர்வு இயல்பாக அமைந்திருந்தது. படத்தின் கதை அது இது என்று எல்லாவற்றையும் எழுத இது அப்படத்தின் மீதான விமர்சனம் அல்ல. இப்படம் குறித்து என்னை பாதித்த சில நினைவுகள் அவ்வளவே. எனவே மிக விரிவாக இதில் எதையும் எழுதிவிட ஆசையுமில்லை, முயற்சியும் இல்லை.
ஒரு பிரம்மாண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே அமைந்திருக்கும் சிறிய உணவகம் தொடர்பானது தான் இப்படத்தின் கதை. திலகன் அந்த உணவகத்தை நடத்துகிறார். பேரனோடு திலகனுக்கு உள்ள நெருக்கமும் மகனோடு திலகனுக்கு உள்ள விலகலும் நேர்த்தியாக படமாக்கப்பட்டிருந்தன. மகன் தன்னை புறக்கணித்து பேசும் ஒரு காட்சியில் கையால் கழுத்தை நீவிவிட்டு நகரும் போது அந்த கதாபாத்திரத்தின் அத்தனை இயலாமை அதை அப்படியே உள்வாங்கிக்கொள்ளும் பாங்கு ஒரு வித ஒட்டாத்தன்மை, புறக்கணிப்பு என அத்தனை உணர்ச்சியையும் ஒரே ஒரு உடல் அசைவில் வெளிப்படுத்திவிடுகிறார்.
சமைக்க போன இடத்தில் மணமகளோடு காதல் கொண்டு அவளையே கரம் பற்றியவர் திலகன். கிட்டத்தட்ட அதே வாழ்க்கை திரும்புகிறது பேரனுக்கும். உணவின் முக்கியத்துவத்தை அழகான காட்சிகள் மூலம் திரைப்படமாக அளித்திருக்கிறார்கள் .ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளது படம் . ஆனால் படத்தில் வெளிப்பட்டிருக்கும் குரூரமான மலையாள அரசியல் படத்தின் மீது ஒருவித வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறது. தமிழன் ஒருவன் பசிக் கொடுமையின் காரணமாக தனது மலத்தையே உண்ணுகிறான் என காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குநர்.
தமிழ்த்தேசியவாதியாகவோ தமிழன் என்ற பெருமையோ இல்லாத சாதாரண மனிதனுக்கே எரிச்சலை ஊட்டும் விதமாக அமைந்துவிட்டது இந்தக் காட்சி. அருகருகே இருந்தும் அன்றாட வாழ்வியல் தேவைகளுக்காக ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் மாநிலங்களாக இருந்தும் ஆழ்மனதில் இவ்வளவு வெறுப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது இந்த திரைப்படம். எனது புரிதல் தவறாகக்கூட இருக்கலாம் தவறாக இருந்தால் உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் சரியாக இருந்தால்...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக