தமிழ்மொழி மூலமாக உலக இலக்கியப் பரிச்சயம்கொண்ட வாசகனின் நீண்ட கால
எதிர்பார்ப்பு அன்று பூர்த்தியடைந்தது. அருந்ததி ராய் எழுதிய தி காட் ஆஃப் ஸ்மால்
திங்ஸ் புக்கர் பரிசுபெற்றதிலிருந்தே அந்நாவல் குறித்த பாராட்டு மொழிகளும் அதன்மீது
தூற்றப்படும் அவதூறுகளும் எண்ணிக்கையில் அடங்காதவை. 28 ஜூலை 2012 வரை 38 மொழிகளில்
பெரும் வாசகப் பரப்பை அடைந்திருந்த நாவல் அன்று தமிழிலும் வெளியாகி வாசகர்களின்
எண்ணிக்கையை மேலும் சில அல்லது பல ஆயிரங்கள் அதிகரித்துக்கொண்டது- வெளியான அன்றே
விற்றுத்தீர்ந்த பிரதிகள் அதற்குச் சான்று. இப்போது 39 மொழிகளில் வெளியான நாவல்
என்னும் பெருமையையும் அது பெற்றுள்ளது. அருந்ததி ராயின் சின்ன விஷயங்களின் கடவுள்
தன்னுடன் மேலும் 3 நூல்களை இணைத்துக்கொண்டு அரங்கேறியது. கிறிஸ்தவர்களின் மற்றொரு
பக்கத்தைத் தோலுரித்த கடவுள் வெளியாக மேடை அமைத்துத் தந்தவர்கள் கிறிஸ்தவ
அமைப்பினர் என்பது பகைவனையும் நேசிக்கக் கற்றுக்கொடுத்த கிறிஸ்துவின் வார்த்தைகள்
வெறும் போதனைகளாகச் சுருங்கிவிடவில்லை என்பதை உணர்த்தியது. அதை உறுதிசெய்வது போல்
அருந்ததி ராயைச் சமூக நீதிக்கான குரலை வலுவாக வெளிப்படுத்துபவர் என ஜான்
அலெக்ஸாண்டர் புகழ்ந்துரைத்து வரவேற்புரை நிகழ்த்தினார்.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள டான் போஸ்கோ பள்ளியின் ஒலிக்காட்சி அரங்கில் அந்தச்
சனிக்கிழமை மாலையில் முதலில் மலர்ந்தது காமத்திப்பூ. இதிலிருந்து சில கவிதைகளை ஏற்ற
இறக்கங்களோடு ரசித்துதான் வாசித்தார் சுகிர்தராணி. அந்த அரங்கில் காமம் குறித்த தன்
அவதானிப்பை, காதலுக்கும் காமத்திற்குமான விலக்க முடியாத நெருக்கத்தை, மனம் சார்ந்த
புனிதமும் உடம்பு சார்ந்த இழிவும் கட்டமைக்கப்பட்ட வரலாற்றைச் சொற்களால்
அடுக்கிக்கொண்டே போனார் அருந்ததி ராய் வெளியிட்ட காமத்திப்பூவைப் பெற்றுக் கொண்ட
பிரபஞ்சன். ஆண்குறியினரின் அபத்தங்களையும் யோனி கொண்டோரின் சிறப்புகளையும் அரங்கைச்
சற்றே சலன மடையச் செய்யும் விதத்தில் அவர் வெளிப்படுத்தினார். இறுதியாக யோனியை
ஆயுதமாகக் கொண்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பை எழுதியதன் மூலம் ஔவையார், ஆண்டாள்
வரிசையில் அடுத்த கவிஞர் சுகிர்தராணிதான் என மொழிந்து தன் உரையைப் பிரபஞ்சன்
நிறைவுசெய்தார். யோனியை ஆயுதமாக்கிய கவிஞர் எனப் பிரபஞ்சனால் புகழப்பட்ட
சுகிர்தராணி பிரியம் வழிந்த அணைப்பை அவருக்குக் காணிக்கையாக்கினார். அரங்கில்
நெகிழ்ச்சி அடங்கச் சில நிமிடங்கள் பிடித்தன.
அடுத்ததாகக் காலச்சுவடு நவயானா இணைந்து வெளியிட்டிருக்கும் பீமாயணம் என்னும்
மொழிபெயர்ப்பு நூல் அரங்கின் மேடைக்கு வந்தது. சமூக விடுதலைக்கும் தீண்டாமைக்கும்
குரல் கொடுத்த அம்பேத்கரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரங்கள் மூலமாக
உணர்த்தும் புத்தகம் அது. வண்ணச் சித்திரங்களுக்கும் குழந்தைகளுக்குமான தீராப்
பிணைப்பை உணர்த்தும் விதத்தில் அதைப் பெற்றுக்கொண்டவர்கள் சோனியா, திருமூர்த்தி
என்னும் குழந்தைகள். நூலை அருந்ததி ராய் வெளியிட்டார். நவயானா ஆனந்த் இந்த நூலில்
இடம்பெற்றிருக்கும் சித்திரங்கள் குறித்த விளக்கங்களை அளித்தார். அடுத்ததாக வெளியான
ராஜா சாண்டோ ஒரு பதிப்பு நூல். பேசும் படம் என்னும் இதழை நடத்திய டிவி ராமநாத்
எழுதிய இந்த நூலை டிராட்ஸ்கி மருது வெளியிட்டார். இந்தியா முழுவதும்
சுற்றித்திரிந்து கலை வளர்த்த ராஜா சாண்டோவின் நூலைச் சென்னை முழுவதும்
மிதிவண்டியில் - மிகச் சமீபத்திலிருந்து மோட்டார் வாகனத்தில் - சுற்றித் திரிந்து
புத்தகங்களை வாசகர்களிடம் சேர்ப்பிக்கும் நண்பர் பரிசல் செந்தில்நாதன்
பெற்றுக்கொண்டதும் பொருத்தமானதே. இந்நூல் குறித்து உரையாற்றிய தியடோர் பாஸ்கரன்
மௌனப்படக் காலத்தின் சிறப்பைப் பற்றிச் சில வார்த்தைகள் மொழிந்தார். டிராட்ஸ்கி
மருது உரை நிகழ்த்தியபோது, ஆளுமைகளின் பதிவு குறித்த அவசியத்தைச் சுட்டினார். பதின்
பருவத்தில்தான் பார்த்து ரசித்த ஒளிப்பதிவாளர் சுப்பாராவ் போன்ற ஆளுமைகள்
குறித்தும் ஓரிரு சம்பவங்கள் குறித்துமான சில ஞாபக துணுக்குகளைப்
பகிர்ந்துகொண்டார்.
இறுதியாக வெளியிடப்பட்டது சின்ன விஷயங்களின் கடவுள். வெளியிட்டவர் சுகுமாரன்,
பெற்றுக்கொண்டவர் கலீஸியன் எழுத்தாளர் மரியா ரெமோண்ட். தமிழறியாத இவர் வாசித்த
கொஞ்சு தமிழ் உரையை அரங்கினர் ரசித்தனர் என்பதன் வெளிப்பாடுதான் சுகுமாரன்
அவருக்குத் தெரிவித்த கைகுலுக்கலுடன் கூடிய பாராட்டு. இந்நூல் வெளியீடு குறித்த பல
விவரங்கள் விரிவாக இதே இதழில் தொடர்ந்த பக்கங்களில் வெளியாகியுள்ளன. இறுதியாக
மைக்கேல் அமலதாஸ் நன்றியுரை நிகழ்த்தினார். அரங்கை வடிவமைத்திருந்த ரோஹிணி மணி,
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நிகழ்வில் இடம்பெற்ற ஒளிப்படக் காட்சிக்குப் பின்னணிக்
குரல் கொடுத்த சிந்து, விட்டு விடுதலையாகி என்னும் பாரதியின் பாடலைப் பாடிய ரவி
சுப்பிரமணியன் போன்ற பலரது துணையுடனும் பார்வையாளர்களின் ஒத்துழைப்புடனும்
எளிமையாகவும் சிறப்பாகவும் நிறைவேறியது காலச்சுவடு பதிப்பகத்தின் இவ்வெளியீட்டு
நிகழ்வு. இந்த மாலையின் நினைவைப்போல், பள்ளிக் குழந்தைகள் உருவாக்கிய, ஆசிரியர்
எஸ். டி. ராஜ் அணிவித்த ஏலக்காய் மாலையின் மணமும் சில நாட்களுக்கு அருந்ததிக்குள்
கமழ்ந்துகொண்டிருக்கக் கூடும்.