அஸீஸ் பே சம்பவம்
“பிறப்பு, இறப்பு என்னும் இரண்டு பெரும் தனிமைகளுக்கு இடைப்பட்ட சிறிய சாகசமே வாழ்க்கை. நம் இருப்பை வடிவமைக்கும் முழுமையிலிருந்து விலகுவதுதான் மானுடத்தின் கதை. ஓர் உடம்பிலிருந்து பிறப்பதன் மூலம் பெரிய முழுமையிலிருந்து விலகுகிறோம். இப்படியாகத் தொடங்கும் அந்தச் சாகசம் மரணம் எங்கே நமக்காகக் காத்திருக்கிறதோ அங்கே முடிவடைகிறது” என்கிறார் துருக்கி எழுத்தாளர் அய்ஃபர் டுன்ஷ். இவரது அஸீஸ் பே ஹேடசேசி என்னும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதையே அஸீஸ் பே சம்பவம். துருக்கிய கதைசொல்லும் திறனின் செவ்வியல் உதாரணமான இந்தச் சிறுகதை அய்ஃபர் டுன்ஷுக்கு மிகப் பரவலான வாசகர்களை உருவாக்கித்தந்துள்ளது.
தன் முழுவாழ்க்கையைச் செலவிட்டும் மனத்திலிருந்து களைந்தெறிய முடியாதபடி மரியத்தின் மீது தான்கொண்டிருந்த மாசற்ற கடுங்காதல் ஏற்படுத்திய தீராக் காயம் தரும் வேதனைமிகு நினைவுகளைக் கடக்க இயலாமல் தனிமையின் உக்கிரத்தில் வீழ்ந்தழிந்துபோன இசைக் கலைஞன் அஸீஸ் பேயை மையமாகக் கொண்டு விரிகிறது கதை. அவனது தம்புராவிலிருந்து புறப்படும் மெல்லியதும் துயரங்களைக் கசியவிடுவதுமான துக்கம் தோய்ந்த இசை ஸேகியின் மது விடுதியில் நடைபெற்ற அந்தத் துயரச் சம்பவத்தில் அடங்கி ஒடுங்கும்வரை இஸ்தான்புல்லிலிருந்து பெய்ரூட்வரை இழைத்து நெய்யப்பட்ட இந்தக் கதையின் அத்தனை பக்கங்களிலும் ஒலிக்கிறது. பெரும்பாலானோர் வாழ்வில் கடந்துசெல்லும் தவிர்க்க இயலாத, மிகச் சாதாரணக் காதல் கதைக்குள் பரவிக்கிடக்கும் இழைகளும் மனித உணர்வுகள் குறித்த துல்லியமான பதிவுகளும் ஏற்படுத்தும் மயக்கங்களிலிருந்து நாம் விடுபட வெகுநேரம் பிடிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் வாசித்தபோது மனத்தில் தளும்பி நின்ற அதே உணர்வை மீண்டும் ஒருமுறை ஊற்றெடுக்கவைத்தது இந்த நெடுங்கதை. காலச்சுவடில் வெளியான மிக்கேயிலின் இதயம் நின்றுவிட்டது என்னும் டுன்ஷின் சிறுகதையையும் இந்நேரத்தில் நினைவுகூர விரும்புகிறது வாசிப்பில் புத்துணர்ச்சி கண்ட மனம்.
மிகப் பெரும்பாடுபட்டு முழுமையான ஓவியமொன்றைத் தீட்டி அதன் பகுதிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றிவைக்க மாயத்தன்மை பெறும் ஓவியம்போல் தோற்றம்கொள்கிறது இந்தக் கதையின் கூறுமுறை. அஸீஸ் பேயின் வாழ்வை விதி குழப்பிப்போட்டது. அதைப் போன்றே கதையிலும் நிகழ்வுகளைக் கையாண்டு காதல், திருமணம், வாழ்வு, தனிமை, இசை போன்றவை குறித்த விஷயங்களை அடர்த்தியுடன் பகிர்ந்துள்ளார் டுன்ஷ். காமமும் காதலும் ததும்பி மிளிர வேட்கைப் பெருமூச்சுகள் வெளிப்படப் பெருமுலைப் பெண்கள் எழுதியனுப்பிய கடிதங்களைச் சுருதி பேதங்களாகக் கருதியொதுக்கிய அஸீஸ் பே மரியத்தால் தானும் அப்படியொரு வேட்கைமிகு நிலையை எய்துவோமென ஒருபோதும் எண்ணியிருக்க மாட்டான். மரியத்தின் ஆழங்காண முடியாத கறுத்த கண்களின் பெரும் பள்ளத்தில் விழுந்துகிடந்த அவனது ஆன்மாவை மீட்கும் வழியைக் கடைசிவரை அவனிடம் மறைத்துவைத்து மாயவிளையாட்டுக்காட்டிய விதியின் சாட்டைச் சொடுக்குதலில் வாழ்வின் அத்தனை ஐஸ்வர்யங்களையும் சௌந்தர்யங்களையும் இழந்துநின்றான் அஸீஸ் பே. புறக்கணிப்பின் கொடுங்கசப்பை நினைவிலிருந்து அகற்ற முடியாமல் தவித்தவன் நாசிக்குள் அதன் காடியான நெடி மிதந்துகொண்டேயிருந்தது.
தனது சிறிய சாகசத்தின் இறுதிக் கணங்களைக் கடந்துகொண்டிருக்கும் சமயத்தில், எப்போதும் தலையை வானத்தை நோக்கியேவைத்திருக்கும் வீறாப்புமிக்க இசைக் கலைஞனான அஸீஸ் பே ஊதா நிற சாட்டின் துணியாலான கைப் பகுதி கிழிபட்டுத் தொங்கும் கோலத்தில் தட்டுத் தடுமாறி வீட்டிற்குள் வந்தமர்கிறான்; கோல்டன் ஹார்ன் ஏரியின் மேற்பகுதியில் பிரதிபலிக்கும் நிலவின் பிம்பத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்; வெப்பமிக்க பெய்ரூட் நகரில் மரியத்துடன் கழிந்த அந்த மூன்று நாட்கள்தாம் அவனது நினைவைச் சுரண்டுகின்றன. அஸீஸ் பேயை மணந்திருக்கிறோம் என்பதை நம்ப முடியாமல் முதலிரவில் தன்னுடன் படுத்துக்கொண்டிருப்பது அஸீஸ் பே தானா என்னும் சந்தேகத்தால் அடிக்கடி எழுந்து பார்த்தவள் வுஸ்லாத். அவனை எதிர்பார்த்து ஜன்னல் முன்னால் சாய்வு நாற்காலியில் அமர்ந்து அதே கோல்டன் ஹார்ன் ஏரியைக் கண்ணெதிரில் நிறுத்தியே தனது தனிமையை, வெறுமையைக் கொன்றவள் அவள். அந்த அன்பு மனைவி வுஸ்லாத் குறித்த ஞாபகங்கள் அவனுள் புரளவில்லை. கால ஓட்டத்தில் கரைந்துபோன மரியத்தின் காதல் பற்றியே காலமெல்லாம் கவனமெடுத்திருந்த அஸீஸுக்கு வுஸ்லாத்தின் உண்மையான பிரியத்தை உணர்ந்துகொள்ள வாய்ப்பில்லாமலே போயிற்று.
அந்தத் துயரச் சம்பவத்தின் முக்கியக் காரணகர்த்தாவான ஸேகி, ‘அபி அபி’ என அன்புடன் அஸீஸை அழைத்துவந்து அவனது தம்புரா இசை மூலம் தனது வியாபாரத்தை வளர்த்து மகிழ்ந்திருந்தான். அஸீஸ் தன்னுடன் வரச் சம்மதித்திருந்த காரணத்தால் நன்றிக்குரியவனாகவும் பெருமையுடன் நடந்துகொள்பவனாகவும் இருந்தான். தொடர்ந்த துக்கப் பாடல்களால் விடுதியின் வாடிக்கையாளர்கள் குறைந்துவந்ததால் தனது வியாபாரம் நசிந்துபோவதைக் காணச் சகிக்காமல் அந்த இரவில் தானே தன்னை நம்ப முடியாத அளவுக்கு அஸீஸிடம் கடுமையாக நடந்துகொண்டான். எனவேதான் தனது செய்கை சரியா தவறா என்னும் மனக்குழப்பத்தில் தன்னுடைய மனைவியிடம் அதேவிதமான கேள்விகளை மாற்றி மாற்றிக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனது செய்கையின் நியாயங்களை அவன் உணந்துகொள்ளும் வகையில் யாராவது எடுத்துக்கூறிவிட்டால் போதும் அவனுக்குள்ளிருந்து அவனைக் கொஞ்சம்கொஞ்சமாகச் சிராய்ப்புக்கொள்ளவைக்கும் அந்த வேதனையிலிருந்து அவன் மீண்டெழுந்துவிடுவான். ஆனால் கேட்பவர்களுக்குப் போதையேற்றும் மீட்டல்களைத் தம்புராவின் தந்திகளில் மென்மையான சிறகுகளைக் கொண்ட பறவைகளைப் போலத் தவழவிடும் பெருமைமிக்க தம்புராக் கலைஞனான அஸீஸின் குழந்தைத்தனமான ஒன்றன்மீது ஒன்றாகப் பிணைந்திருந்த உறைந்துபோன கைவிரல்களைப் பிரித்துவிட ஒருவரும் இல்லாததுபோலவே ஸேகியை வேதனையிலிருந்து விடுவிக்கவும் அங்கு ஒருவருமில்லை.
மரியத்தின் கண்களில் அலை பாய்ந்துகொண்டிருந்த, தோற்றப் பிழையான காதலை அஸீஸ் பே கண்டு அதன் பின்னே பயணத்தைத் தொடங்கித் தனது அழிவிற்கான பாதையைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். பல்வேறு திருப்பங்களைக் கொண்ட அந்தப் பாதையின் முதல் திருப்பம் மரியம் பெய்ரூட் நகருக்குப் பிழைப்புக்காகக் குடும்பத்தோடு புறப்படுவது. அத்தோடு அவனை அவள் மறந்திருந்தால் இந்தக் கதை யாருமே அறியாதவண்ணம் காற்றோடு காற்றாக மறைந்திருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு நிகழாதது நமது அதிர்ஷ்டம்; அஸீஸ் பேயின் துரதிர்ஷ்டம். விளையாட்டுப் போல் கடிதமொன்றில் மரியம் விடுத்திருந்த அழைப்பு அவனைக் கிறங்கச் செய்துவிட்டது. பெருமுலைப் பெண்களிடம் சிக்காமல் அவர்களை உதா சீனப்படுத்திவிட்டு எளிதாகக் கடந்ததைப் போன்ற எச்சரிக்கையுடன் இந்தக் கடிதத்தின் அழைப்பை உதறியிருந்தால்கூட வாழ்வின் பின்னாளையச் சங்கடங்களிலிருந்து அஸீஸ் பே தப்பித்திருப்பான். பெய்ரூட் நகரில் மரியத்தின் மறக்கடிப்பால் ஏற்பட்ட மனவேதனையைப் போக்க இஸ்தான்புல்லில் வசிக்கும் தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொள்ள அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் இஸ்தான்புல்லிலிருந்து பெய்ரூட்டுக்குப் புறப்பட்டபோது வீட்டில் உருவான கடுமையான வாக்குவாதங்களுக்குப் பின்னர் வீட்டைவிட்டு அவன் வெளியேறியபோதே அவனது அம்மா அதிர்ச்சியில் மாண்டுவிட்டிருந்ததைப் பின்னர்தான் அறிந்துகொள்கிறான் அஸீஸ். அவனுக்குச் சிறு சலுகைகூடக் காட்டாமல் ஒதுங்கிக்கொண்டது விதி. கடும் சூறைக்குத் தாக்குப்பிடிக்கமாட்டாமல் தன்னை முழுவதுமாக இழந்த குடிசை போலானான் அஸீஸ் பே. சிதிலமடைந்த அவனது வாழ்வுக்கு அவன் எந்தவிதத்திலும் பொறுப்பாளி அல்ல; ஆனால் அத்தனை சிதிலங்களும் அவனாலேயே ஏற்பட்டன.
ஒரு கட்டத்தில் தான் தன் தந்தையைப் போல மாறிக்கொண்டிருப்பதாக உணர்ந்து அதிர்கிறான் அஸீஸ். அவனுடைய தந்தை அஸீஸ் பேயின் அம்மாவைக் காதலித்து மணம்புரிந்திருந்தார். முறிந்துபோன காதல் நினைவில் இருந்தபோதும் அவரால் மறுபடியும் காதல்வயப்பட முடிந்திருந்தது. தோல்வியுற்ற காதலின் வேதனையைத் தள்ளிவைத்துவிட்டு மணம்புரிந்து, தொடர்ந்து வேலைக்குச் சென்று குடும்பத்தைப் பராமரித்து, குடித்து, எஞ்சிய நாள்களை எல்லாம் வேடிக்கை மனிதர் போலக் கழித்துப் பிறகுதான் மறைந்திருந்தார் அவர். ஆனால் அஸீஸ் பேயால் மரியத்தின் கண்களையோ அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தையோ முறிந்துபோன அந்தக் காதலின் வலியையோ கடைசிவரையிலும் மறக்கவே முடியவில்லை. இங்குதான் வழக்கம் போல் அலுவலகம் சென்று சம்பாதித்து, வாழ்ந்து, மடிந்த எழுத்தரிடமிருந்து வேறுபட்டு நிற்கிறான் விளையாட்டாகத் தான் தொட்ட தம்புராவையே தனக்கான அடையாளமாக மாற்றிக்கொண்ட கலைஞன் அஸீஸ் பே.
அகாலத்தில் மறைந்துவிட்டிருந்த தன்னுடைய தாத்தாவின் தம்புராவைச் சிறுபிராயத்தில் விளையாட்டுப் பொருளாகவே எடுத்துவைத்து விளையாடிக்கொண்டிருந்தான் அஸீஸ் பே. தந்தையைக் கவர்ந்திராத அந்த இசைக் கருவி அஸீஸை ஈர்த்தது. மரியத்தால் வஞ்சிக்கப்பட்டு அநாதைபோல் மொழி தெரியாத அந்தப் பெய்ரூட் நகரில் தினசரி உணவுக்கே வழியற்ற கொடுமையை விதி அவனுக்கு நேர்ந்துவிட்டபோது மனத்துயராற்ற அந்த இசைக் கருவியை எடுத்து மீட்டுகிறான் அஸீஸ் பே. அந்த மீட்டல் அவனுக்கு டோராஸ் வடிவில் மற்றொரு வாழ்வைத் திறந்துவைத்துக் காத்திருந்தது. தத்தளித்த வாழ்வில் தப்பிப் பிழைக்கச் செய்த அதே தம்புராதான் அந்தத் துயரச் சம்பவத்துக்குக் காரணமான சோகப் பாடல்களுக்கான இசையை வழியவிட்டு அவனை ஒரேயடியாக மூழ்கடித்ததும் என்பது முரணே.
தனது காதல் கைகூடாமல்போயிருந்தால் அதிலிருந்து அஸீஸ் மீண்டு வந்திருக்கக்கூடும்; ஆனால் மரியம் நம்பிக்கையோடு வரவழைத்தபின் கைவிட்டுவிட்டுப் போய்விட்டாள். அவனுக்கு மிகத் தீவிரமாகத் தென்பட்ட அந்தக் காதல் அவளுக்கு வெறும் விளையாட்டாக மட்டுமே நின்றுவிட்டதால் ஏற்பட்ட மனவருத்தம் அவனுக்குள் நிலைபெற்றுவிட்டது. தான் விரும்பிய எளிய பொம்மை கிடைக்காவிட்டால் தனக்குக் கிடைத்த அனைத்து வகை அரிய பொம்மைகளையும் தூக்கி எறியும் குழந்தைபோலானான் அஸீஸ். அவனுக்குள்ளே பரவிவந்த துக்க அலைகளில் சிக்கிக்கொள்வதில் அவன் பிரியம் கொண்டான். துக்கம் அவனுக்குப் போதை தந்தது. இன்னும் இன்னும் ஆழமாகத் துக்கத்துக்குள் இறங்கிக்கொண்டே இருந்தான். தனது துக்கத்தைத் தம்புராவின் மீட்டல் வழியே உலகுக்குப் பரப்பி அதைத் தனது துக்கத்தோடு ஒன்றிணைக்கும் வேட்கையில் துக்கத்தை விட்டு வெளியேறத் துடிக்கும் புற உலகை மறந்தான். அவனோடு முரண்பட்ட புற உலகத்தை அவனுக்கு எதிராக மாற்றமுற்பட்ட விதி ஸேகியின் மதுபான விடுதியில் தனது கடைசி பாணத்தை அஸீஸ்மேல் பாய்ச்சிய பின்னர் “எல்லாம் முடிந்தது.”
இந்த இசைக்கலைஞனின் அனைத்துப் பிராயங்களையும் மன உணர்வுகளையும் மிகத் தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறார் அய்ஃபர் டுன்ஷ். எங்கோ துருக்கியில் நடைபெற்ற கதை என்பதாக அல்லாமல் நமக்கு நெருக்கமான ஒருவனாக அஸீஸை நம்மால் அடையாளம் காண முடிகிறது. கதை விவரிப்பில் டுன்ஷ் பயன்படுத்தியிருக்கும் நவீன மொழி நடை நம்மை வசீகரிக்கிறது. இவரது சிறுகதையான சக்ன 1989இல் கம்ஹுரியத் நாளிதழ் நடத்திய ‘யூனஸ் நாடி சிறுகதைப் போட்டி’யில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றது. 2001இல் வெளியான இவரது “நீ ஆக்கிரமிக்கப்படாமலிருந்தால் என் பெற்றோர் உன்னைப் பார்வையிடுவர் - எழுபதுகளில் எங்கள் வாழ்க்கை” என்னும் வாழ்க்கைக் குறிப்பு நூல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பால்கன் நாடுகள் வழங்கும் சர்வதேச விருது 2003இல் இந்நூலுக்கு வழங்கப்பட்டது. இதன் அரபி மொழியாக்கம் சிரியாவிலும் லெபனானிலும் வெளியானது. துருக்கியைச் சார்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரான சையத் ஃபைக் எழுதிய சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு ‘வானத்து மேகம்’ என்னும் திரைக்கதையையும் இவர் எழுதியுள்ளார். இது படமாக்கப்பட்டுத் துருக்கித் தொலைக்காட்சி அலை வரிசையில் 2003இல் ஒளிபரப்பானது.
இத்தகு சிறப்புகளைப் பெற்றுள்ள அய்ஃபரின் கதையைத் தமிழ்க் கதை போல் உணரச் செய்துள்ளார் சுகுமாரன். அஸீஸின் மனவோட்டங்களின் நெழிவுசுளிவுகளையும் ஏற்ற இறக்கங்களையும் உயர்வுதாழ்வுகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களாலான அடர்மிகு வாக்கியங்களின் வழியே நமக்கு மிகவும் நெருக்கமாக்கியுள்ளார் சுகுமாரன். செறிவுமிக்க நடைகொண்ட இந்தக் கதையின் துயரார்ந்த பரவசம் நம்மை முழுவதுமாக ஆக்கிரமித்து நிற்கும் அதே சமயத்தில் மொழிபெயர்ப்பைப் படிக்கும் உணர்வைத் துளிக்கூட அரும்பவிடாமல் செய்ததன் மூலம் சுகுமாரன் தனித்துத் தெரிகிறார். இதன் பின்புலமாகவுள்ள மொழியாக்கம் குறித்தான அவரது அக்கறையும் அவதானிப்பும் மூலத்தை வாசித்த வாசகனுக்குக் கிட்டிய வாசக அனுபவத்தைத் தமிழில் வாசிப்பவனுக்கும் உருவாக்கித் தந்துவிட வேண்டுமென்ற யத்தனிப்பும் இணைந்து இப்படைப்போடு வாசகன் கொள்ளும் உறவை அர்த்தமுள்ளதாக்கிவிடுகின்றன. மனத்தின் ஈரமிக்க, பசுமையான ஊற்றுக்கண்களை உருத் தெரியாமல் செய்துவிடும் படைப்புகளால் சோர்ந்து போயிருக்கும் வாசக மனங்களில் கிறங்கவைக்கும் நறுமணம்கொண்ட இலக்கிய வாசனையைக் கொண்டு வந்து சேர்த்துள்ளார் சுகுமாரன்.
அஸீஸ் பே சம்பவம்
அய்ஃபர் டுன்ஷ்
தமிழில்: சுகுமாரன்
பக். 96. விலை: ரூ.50 (மே 2011)
வெளியீடு
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி)லிட்.
669, கே. பி. சாலை
நாகர்கோவில் - 629 001
காலச்சுவடு ஜனவரி 2012 இதழில் வெளியாகியுள்ள மதிப்புரை இது. அதன் இணைய இணைப்பு இதோ http://kalachuvadu.com/issue-145/page137.asp