இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், மார்ச் 08, 2011
வியாழன், மார்ச் 03, 2011
ஆனாலும் அவன் என் நண்பன்
பெரும்பாலான நேரங்களில் என்னை எனக்குப் பிடிக்காது. மனத்திற்குள் சில நேரங்களில் சஹாரா குடிகொண்டுவிடும். உலகத்தின் ஒட்டுமொத்த ஹெச்டூஓவும் ஒரே நொடியில் ஆவியாகிவிட்டது போன்ற எண்ணம் தோன்றும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கானல் நீரைத் தவிர எதுவும் தென்படாது. ஒரு துளி நீருக்கான ஏக்கம் அதிகமாகும். நிறைவேறா ஏக்கம் கடும் சுமையாக மனத்தை வருத்த கண்கள் கலங்கும். வறண்ட தொண்டைக்கு கிடைக்காத நீர் வழிந்தோடும் இளகிய கண்களிலிருந்து. அத்தகைய நேரங்களில் எல்லாம் எப்படித்தான் அவனுக்கு மூக்கு வியர்க்குமோ வந்துவிடுவான். என்ன தான் தனிமையை ரசித்தாலும் விரும்பினாலும் சில நேரங்களில் ஆதரவான ஒரு சொல்லோ பார்வையோ தேவைப்பட்டுவிடுகிறது, அது எங்கிருந்தும் கிடைப்பது அரிது என்பதை உணர்ந்தபோதும் மனம் அறியாக் குழந்தையாக ஆசைப்பட்டுவிடும். அதற்கென்ன தெரியும் அப்பனின் ஒட்டுக்கோவண நிலைமை? இழுத்துப்போர்த்தத் தான் அது சொல்லும்.
சஹாராவில் தண்ணீர் வார்க்க அவன் வந்திருப்பான் என எண்ணிவிடாதீர்கள். அது அவனது பழக்கமில்லை. ஒரு நாளும் அவன் ஆறுதலாகப் பேசியதில்லை ஆனால் என்ன மாயமோ மந்திரமோ அவனது வசைமொழிகூட அவ்வளவு ஆறுதல் தரும். வேதனைப் பொழுதுகளின் வெம்மையைத் தான் அவன் கூட்டுவான். ஆனால் அந்தச் செயலில் ஒரு குளுமை இருக்கும். அது ஒரு விநோதமான மனோபாவம்தான். அவனைக் கொல்ல முடிந்தால் கொன்றுவிடத் துணியும் முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன். ஆனால் எனது துக்கங்களிலிருந்து என்னைக் காப்பாற்ற முதலில் நீளும் கரத்திற்கு அவன் தான் சொந்தக்காரன். என் கிணற்றில் மிக ஆழத்தில் யாரும் அறிய மாட்டார்கள் என்னும் நம்பிக்கையில் நான் மறைத்து வைத்திருக்கும் குற்றங்களையும் அவனது மாயக் கண் கண்டுகொள்ளும். நான் குற்றம் செய்வதில் சமர்த்தன். அவனை எப்படியாவது ஏமாற்றிவிட்டு குற்றம்புரிவேன். நான் குற்றம்புரிய வேண்டும் என்பதற்காகவே ஏமாந்தவனாக நடித்தவனைப்போல் அடுத்த கணம் வந்திடுவான். முதலிலேயே என்னைத் தடுத்திருக்கலாமே என்பேன் ஒன்றுமே அறியாதவன் போல் மெல்ல நகைப்பான். அவன் முன் தோற்றுப்போய் அவமானத்தைத் தாங்கியபடி நிற்க வேண்டும். அவன் சாட்டையை எடுப்பதில்லை. ஆனால் அவன் சாட்டையை நினைத்தாலே உடம்பில் சுளீரென்றிருக்கும்.
வெளிச்சத்தில் சண்டையிட்டு இருட்டில் இணைந்துகொள்ளும் வெட்கமற்ற கணவன் மனைவி போன்ற உறவுதான் அவனுக்கும் எனக்கும். அவன் வந்தால் எரிச்சலாக இருக்கும். அவன் வராவிடிலோ அவன் நினைப்பாகவே இருக்கும். என்னை வெறுத்து எங்கும் போய்விட்டானோ எனக் கவலையாக இருக்கும். அவனிடம் சொன்னால், என்னை நீ நிம்மதியாக விட்டுவிடுவாயா என்ன, என்பது போல் பார்ப்பான். அவன் குறித்த என் நினைவுதான் அவனை இழுத்து வந்ததோ என்றுகூடத் தோன்றும். யாரிடமும் அவனைப் பற்றிக் குறைகூற முடியாது. ஏனெனில் இப்படிப்பட்ட ஒருவனோடு உனக்கென்ன நட்பு அவனை வெட்டிவிடு என வெடுக்கென சொல்லக்கூடும். அந்தச் சொல் அவனை வாட்டாது ஆனால் என்னை வாட்டிவிடும். உலகத்திலேயே மிக அதிகமாக நான் வெறுப்பது அவனைத்தான் ஆனாலும் அவன் என் நண்பன். என்னைவிட அவனை யாரும் நேசிக்க இயலாது. அவனைத் தவிர வேறு யாராலும் என்னை நேசிக்க முடியாது. எனவே தான் காத்திருக்கிறேன் அவனுக்காக... அவனது பிரியத்துக்காக... கிட்டப்போகப்போக எட்டப்போகும் அவனது தோழமைக்காக...
செவ்வாய், மார்ச் 01, 2011
மௌனமாய் உரையாடும் சிலைகள்
தந்தை பெரியார்
சென்னை அண்ணாசாலையில் சிம்சன் எதிரில் அமைந்துள்ளது தந்தை பெரியாரின் சிலை. இந்தச் சிலை பெரியாரின் 96ஆவது பிறந்த தினமான செப்டம்பர் 17, 1974 அன்று நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் க.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றவிழாவில் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி திறந்துவைத்தது. இது தி.மு.க.வின் சார்பில் வைக்கப்பட்ட சிலையாகும். உட்கார்ந்த நிலையில் இச்சிலை அமைந்திருந்தாலும் பெரியாரின் கம்பீரம் அப்படியேதான் இருக்கிறது.
கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று பெரியார் வலியுறுத்துகிறார். ஆனால் கலைஞரோ பெரியாரின் சிலையை அமைத்த பிறகுதான் தனக்கு சிலை என்று அறிவித்துவிடுகிறார். அதனால் பெரியார் “தனக்குச் சென்னையில் சிலைவைக்க கலைஞரை வற்புறுத்துங்கள்” எனக் கூறுகிறார். தனது சிலை அமைக்கப்பட்டால் தானே கலைஞர் சிலையைத் திறக்க முடியும் என்பதால் அவ்வாறு வற்புறுத்தினார் பெரியார். அவரது நோக்கம் தனக்கோ கலைஞருக்கோ சிலைவைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. பகுத்தறிவாளர்கள் அனைவருக்கும் சிலை வைக்க வேண்டும் என்பதுதான். இதனால் அமைக்கப்பட்ட சிலை தான் இந்தப் பெரியார் சிலை.
மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று பார்ப்பனரல்லாதாரால் குறிப்பிடப்படும் ‘இந்து’ நாளிதழ் அலுவலகத்திற்கு அருகில் அமைந்திருப்பதுதான் இதற்கான சிறப்பு. லட்சக்கணக்கான மக்கள் இன்று இச்சிலையை பார்வையிட்டபடிதான் போகிறார்கள், வருகிறார்கள். இப்பொழுது இன்னுமொரு கூடுதல் சிறப்பு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டமன்றம் பெரியார் சிலை முன்னிலையில் இருப்பது.
இச்சிலை திறப்பு விழாவிற்கு கல்வி அமைச்சர் நாவலர் தலைமை, தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் வீராசாமி எம்.எல்.ஏ. வரவேற்புரை, தொடர்ந்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் நீலநாராயணன், மாவட்ட செயலாளர் சீதாபதி ஆகியோர் வழிமொழிந்து பேசினர். நாவலரின் தலைமை உரைக்குப்பின் லட்சசோபலட்சம் மக்களின் உணர்ச்சி வெள்ளத்திடையே தந்தை பெரியாரின் சிலையை முதல்வர் கலைஞர் திறந்துவைத்தார். பெரியார் இயற்கை அடைந்த பிறகு நடந்த சிலை திறப்பு என்பதால் மக்களின் உணர்ச்சி கட்டுக்கடங்காததாக இருந்தது.
பிறகு, அமைச்சர் என்.வி. நடராசன், மேலவைத்தலைவர் சி.பி. சிற்றரசு, திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, அமைச்சர் அன்பழகன் ஆகியோரின் உரைக்குப்பின் கலைஞர் உரையாற்றினார். இச்சிலையை உருவாக்கிய சிற்பி கோவிந்தசாமியின் மகன் பழனிக்கு கலைஞர் கேடயம் கொடுத்துச் சிறப்பித்தார். இந்த சிலை திறக்கப்பட்ட ஏப்ரல் 17ஆம் தேதி காலை பெரியார் திடலில் நடைபெற்ற நூலகத் திறப்பு விழா நிகழ்ச்சியில் “பெரியாரின் இல்லத்தை நினைவுச் சின்னமாக அனுமதிக்க வேண்டும்” என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக்கொண்டு, சிலை திறப்பு விழாவில் ஈரோட்டில் உள்ள பெரியாரின் இல்லத்தை நினைவுச் சின்னமாக்க மணியம்மையார் ஒப்புக்கொண்டார். பெரியாரின் இல்லத்தை நினைவுச் சின்னமாக்குவதற்கான ஒப்புதல் தெரிவிக்கப்பட்ட விழா என்பதால், இந்தச் சிலை திறப்பு விழாவுக்கென ஒரு வரலாறு உண்டு.
கர்மவீரர் காமராஜர்
சென்னை அண்ணாசிலையில் ஜிம்கானா க்ளப் முன்னால் அமைக்கப்பட்டுள்ளது காமராஜரின் முழு உருவச் சிலை. காமராஜர் உயிரோடிருந்தபோது அக்டோபர் 9, 1961 அன்று இச்சிலையைத் திறந்துவைத்தவர் பாரதப் பிரதமர் ஜவஹர் லால் நேரு. இச்சிலையைப் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி ட்ரஸ்ட் பராமரித்து வருகிறது. குமாரசாமி காமராஜ் தமிழ் நாட்டின் முதலமைச்சர்களுள் ஒருவர். காமராஜர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராஜர் பதவியைவிட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் காமராஜர் திட்டம். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்துவிட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை அக்டோபர் 2, 1963 அன்று ராஜினாமா செய்தார். அக்டோபர் 9ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார்.
மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான சத்தியமூர்த்தியைக் காமராஜர் தன் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டிருந்தார். 1936இல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராஜரைச் செயலாளராக்கினார். இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராஜர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத் தான் தன் பணியைத் தொடங்கினார். பெருந்தலைவர் காமராஜர் அக்டோபர் 2, 1973 அன்று காலமானார்.
தோழர் ப. ஜீவானந்தம்
பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தத்தின் சிலை சென்னை தண்டையார் பேட்டை மணிக்கூண்டுக்கு அருகே ஜீவா பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. மார்பளவு சிலை இது. இந்தப் பூங்கா சமீபத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சிலை 30.11.1966 அன்று காமராஜர் தலைமையில் பி.ஸி.ஜோஸியால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. வேறெங்கோயிருந்து இங்கே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் இது. ப. ஜீவானந்தம் ஆகஸ்ட் 21, 1906 இல் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பிறந்தவர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் இவர். ஏறத்தாழ பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகப் படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும் பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர். வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜீவா 1963, ஜனவரி 13 அன்று சென்னையில் காலமானார்.
நான் ஒரு நாத்திகன் என்னும் நூலில் ஜீவா பின்வருமாறு கூறியுள்ளார்:
“அழகும் நிறைவும் கொண்ட ஒரு வாழ்வை சுவர்க்கத்திலன்று, இந்த மாநிலத்திலேயே நிர்மாணிப்பதற்காவே நான் பணிபுரிகிறேன். எல்லாவிதமான அடக்கல், ஒடுக்கல், அடிமைத்தனங்களையும், சுரண்டல் சூறையாட்டங்களையும் இந்தப் பூமண்டலத்திலிருந்து துடைத்து எறிந்துவிட்டு, மனிதனுடைய சிறந்த இன்பத்திற்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத பௌதிகச் சூழ்நிலைகளையும், சாதனங்களையும் படைக்கவே நான் போராடுகிறேன். மனிதத் தன்மையின் மாண்புகளைக் காலடியில் தள்ளி மிதித்துத் துவைக்கும் எல்லா பிற்போக்குத் தீமைகளுக்கும் எதிரிடையான இந்த அறப்போரில் எனது பொருள்முதல்வாதமும், எனது நாத்திகவாதமும் மாபெரும் சக்தியையும், உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டுகின்றன. நான் ஒரு நாத்திகன், காரணம், நான் மனிதனை நேசிக்கிறேன்”
அறிஞர் அண்ணாதுரை
சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் தோட்டம் (தற்போதைய தலைமைச் செயலகம்) முன்னர் வலதுகையை உயர்த்தி வழிகாட்டியபடி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலை. 1968இல் சென்னையில் உலகத் தமிழர் மாநாடு நடைபெற்றது. அப்போது கடற்கரைச் சாலையில் அறிஞர் பெருமக்கள் பத்து பேர்களின் சிலை நிறுவப்பட்டது. “அப்படி பத்து சிலை வைத்ததனால் அந்த அண்ணனின் புகழைப் பார் போற்ற சென்னையிலே சிலை ஒன்று வைத்தபோது ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார் எம் அண்ணா. ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம் அய்யகோ இன்னும் ஓராண்டே நான் உயிர் வாழப்போகிறேனென்று ஓர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது” என அண்ணாவுக்கான இரங்கல் கவிதாஞ்சலியில் கலைஞர் மு கருணாநிதி குறிப்பிடுவது இச்சிலையைத் தான். இச்சிலை நிறுவப்படுவதில் அண்ணாவுக்கு விருப்பமில்லை. ஆனால் எம்ஜிஆரும் கருணாநிதியும் சேர்ந்து எடுத்த பெரு முயற்சியின் காரணமாகவே இச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையை எம்ஜிஆர் நன்கொடையாகக் கொடுத்துள்ளார். 1968 ஜனவரி முதல் நாளன்று டாக்டர் சர் ஏ ராமசாமி முதலியார் இச்சிலையைத் திறந்துவைத்தார். அண்ணா உயிரோடு இருக்கையில் இச்சிலை திறந்துவைக்கப்பட்டது. ஆனால் சிலை திறந்த அடுத்த ஆண்டே பேரறிஞர் அண்ணா மறைந்துவிட்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)