இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, மார்ச் 07, 2010

தோல் – பாவை - கூத்து


அவள் பெயர் தமிழரசி

பால்ய கால நினைவுகளில் சிக்கித்தவிக்கும் கதாநாயகனின் கதை மீண்டுமொருமுறை படமாகியிருக்கிறது. சற்று வித்தியாசமான படமாக இருக்கும் என நம்பிக்கையோடு சென்றபோதும் தமிழரசி ஏமாற்றிவிட்டாள். வெறுமனே பால்யகால சம்பவங்களைக் காட்சிப்படுத்துவதில் திருப்தி அடைந்துவிட்டார் இயக்குநர். கதைத் தன்மையோடு சேர்ந்து ஒரு முழு வளையமாகாமல் துண்டு துண்டு கண்ணிகளாக படம் சம்பவங்களால் கோக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நசிந்துவிட்ட தோல்பாவைக்கூத்துக் கலையைக் குறித்த பதிவு என்பதற்காக மட்டுமே ஒரு படத்தை ரசிகன் பார்த்துவிடமாட்டான். அழகி தொடங்கி இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இப்படிப்பட்ட படங்களைப் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை. படத்தில் ஆபாசமான வசனங்கள் இல்லை, வன்முறையில்லை, நமது கலாச்சார வடிவமான ஒரு கலையைப் பின்புலமாகக் கொண்டுள்ளது போன்ற பல பாஸிட்டிவான அம்சங்கள் இருந்தும் ஒரு படமாக மனத்தில் தங்கவேயில்லை தமிழரசி.

கதாநாயகன் யார் அவனது குணாதிசயம் என்ன எதுவுமே மனத்தில் படியவேயில்லை. எட்டு வருடங்களாகத் தேடி தமிழரசியைக் கண்டடையும் கதாநாயகனிடம் நாயகி வைக்கிறாளே ஒரு வேண்டுகோள் அது படத்தை நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்துகிறது. தன்னை அடைய வேண்டுமென்பதற்காக ஒரு நெருக்கடியான தருணத்தில் தன்னை வசப்படுத்திய கதாநாயகன் தான் இல்லாமல் வாழ்வான் என்று அவள் எப்படி நினைப்பாள்? தனது தாயை இழந்து தாத்தாவைப் பிரிந்து தனது வாழ்வு திசைமாறிப் போகக் காரணமான அந்தச் சம்பவத்தின் பாஸிட்டிவான அம்சத்தை மட்டும் கதாநாயகி பார்க்கிறாள் அதை மறுபடியும் அனுபவிக்க நினைக்கிறாள் என்றாள் அந்தக் கதாபாத்திரத்தின் மனநிலையைப் புரிந்துகொள்வது குழப்பமாக உள்ளது. அப்படி ஓஷோ மனம் கொண்ட பெண்ணா அவள்?

கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் முறையாக வரையறுக்கப்படவில்லை. கிராமங்களில் வாடகைக்கு டிவி டெக் எடுத்து சினிமா போடுவது 1993இல் சன் டிவி ஒலிபரப்பைத் தொடங்குவதற்கு முன்பு இருந்த ஒரு நடைமுறை, ஆனால் படத்தில் முத்து படம் வந்த பின்பு இத்தகு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முத்து 1996இல் வெளியானது. இதைப் போன்ற விஷயங்களைச் சற்றுக் கவனமாக கையாளாவிட்டால் ரசிகனுக்குத் திருப்தி வராது. ஒரு படமாக முழு வடிவம் பெறாமல் தோல்பாவைக்கூத்து குறித்து ஒரு பதிவாக மட்டுமே படம் மனத்தில் நிற்கிறது. இது படத்தின் வெற்றியா தோல்வியா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக