கோடிக்கணக்காகப் பணம் போட்டு எடுத்த படங்கள் எல்லாம் பார்க்க நாதியில்லாமல் அநாதையாய் தியேட்டரில் அல்லாடும் காலத்தில் சாமியார் நித்தியானந்தா தமிழ் நடிகையுடன் கூடிக் குலவும் கொஞ்சல் காட்சிகள் சன் டிவி உபயோகத்தில் தமிழக மக்களின் வரவேற்பரையில் பலப்பல காட்சிகளைக் கண்டுவிட்டது. சரச சாமியார் நித்தியானந்தா போல் எத்தனை யெத்தனை சாமியார்கள் இப்படி கையும் களவுமாக மாட்டினாலும் சாமியார் பின்னால் போகும் கூட்டங்கள் திருந்தவா போகிறது. பணம் கொட்டிக் கொழிக்கும் தொழில் சாமியார் தொழில். சுத்தமான காவியுடை. முகத்தில் மந்தகாசப் புன்னகை. வசியப்படுத்தும் வசீகர மொழி. வேறென்ன வேண்டும். சாமியார்கள் காட்டில் மழைதான். சில சமயங்களில் அல்ல பல சமயங்களில் இந்த சாமியார்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. மகாநதியில், எப்படி ஒரு நல்லவனுக்குக் கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் ஒரு கெட்டவனுக்கு கிடைக்குது?ன்னு கதாநாயகன் ஆதங்கப் படுவதுதான் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது.
எப்படிப் பெண்கள் மிகச் சரியாக ஏமாற்றுபவர்களை அடையாளம் கண்டு ஏமாறுகிறார்களோ ஆச்சரியமாக இருக்கிறது. தெரியாமல் ஏமாறுகிறார்களா தெரிந்தே ஏமாறுகிறார்களா. ஒரு சாமியார் மாட்டிக்கொண்டால் தொடர்ந்து புகார்களை வாரியிறைக்கும் பெண்கள் அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்கள்? முகம் மழித்த சாமியார்கள் உறுப்பையும் அறுத்துக் கொண்டவர்கள் எனச் சமூகம் இன்னமும் நம்புகிறதா? பொதுவாக ஆன்மிகத்தில் அதிகப்படியான நாட்டம் கொண்டவர்களுக்கு சமூகத்தில் கிடைக்கும் அந்தஸ்து இத்தகைய தடுமாற்றங்களுக்கு பின்னணிக் காரணமாக இருக்கலாமோ? கோவிலுக்குப் போகிறேன் சாமியாரைப் பார்க்கப் போகிறேன் எனும்போது யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரப்போவதில்லை என்பது ஒரு கவசமாக இருக்கிறதா? சொத்துகளை வாரிக்குவிப்பவன் சுகத்தில் மூழ்கித் திளைப்பவன் எப்படி முற்றும் துறக்க முடியும்? அவன் எப்படி நமது கஷ்டங்களை தீர்க்க முடியும்? ஆண்களோ பெண்களோ ஏதோவொரு எதிர்ப்பார்ப்போடு தானே சாமியார்களை நாடுகின்றனர். உண்மையான சாமியார்கள் இருக்கும் இடமே யாருக்கும் தெரியப் போவதில்லை. நித்தியைப் போன்றவர்கள் இன்னும் எவ்வளவு பேர்கள் உள்ளனர். கூட்டத்தைச் சேர்க்கும் எல்லாச் சாமியார்களுமே ஒருவகையான அயோக்கியர்கள் தாம். மக்கள் விழித்துக்கொள்ளாதவரை இத்தகு சாமியார்கள் காட்டில் அடைமழைதான்.
சாமியார்களின், பெண்களின் பாலியல் வேட்கைகளில் எந்தத் தப்புமில்லை. ஆனால் போலியான வேஷங்கள் எதற்காக யாரை ஏமாற்ற... நம் சமூகத்தின் போலியான முகம் தொடர்ந்து பல வகைகளில் பொதுச்சபையில் கிழிந்து தொங்குகிறது. இதைப் போன்ற விஷயங்களில் புலனாய்வுப் பத்திரிகைகளின் பங்கு மகத்தானது. கிளுகிளுப்பான காட்சிகளை வழவழப்பாக வண்ணப்பக்கங்களில் வாரி இறைத்துத் தம் கல்லாவை நிரப்பிக்கொள்ளும். குழந்தைகள் ஆண்கள் பெண்கள் என அனைவரும் ஒன்றுகூடி அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் நமது வரவேற்பரையில் பலான காட்சிகள் அரங்கேறுவதைப் பற்றி நமக்கு எந்த வருத்தமும் வரப்போவதில்லை. வடுமாங்காய் போன்ற பாடல்களை ஒலிக்க விட்டு குழந்தைகள் ஆடுவதை ரசிக்கும் தவறை நம்மில் யார் செய்யவில்லை. பாலியல்ரீதியான நமது போலித் தனங்கள் களையப்பட வேண்டியதை நாம் உணரப்போவது எப்போது. அதுவரை இதைப் போன்ற சாமியார்களின் கதை நமது ரகசிய ஆசைகளுக்குத் தீனியாகவே வீசப்படுகிறது.
நித்திமீது அநியாயமாகப் பாய்கிறார்கள். கைதுசெய்யச் சொல்லிக் கூப்பாடு போடுகிறார்கள். சட்டப்படி அவர் எந்தத் தவறும் செய்ததாகத் தெரியவில்லை. அவருக்குப் பிடித்த பெண்ணோடு தனியறையில் அந்தப் பெண்ணின் விருப்பத்தோடு இருப்பதில் என்ன பிழை. தனது உடம்பானது அவருக்கான காணிக்கை என ரஞ்சிதா நினைத்திருக்கலாம். இது அவர்கள் இருவர் சம்பந்தப் பட்ட விஷயம். அவர்களது அந்தரங்கத்தைப் படம் பிடித்து அதை அரங்கேற்றியது ஒரு வகையான ஊடக வன்முறை. ரஞ்சிதாவுக்கும் நித்திக்குமான காதல் கலந்த காம விளையாட்டை கடைபரப்பி தனது டிஆர்பியை உயர்த்திக்கொண்டது சன் டிவி. தமிழ்க் கலாச்சாரம் பறிபோய்விட்டதாகப் பதறுகிறார்கள். அப்படியொன்று இருக்கிறதா என்ன. காமத்தை ஒழுக்கம் சார்ந்து பார்ப்பதால் வரும் பிழை இது. இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி ஏமாற்றப்போகிறார்களோ தெரியவில்லை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான தொடர்பு குறித்து அவர்கள் தாம் முடிவு செய்ய வேண்டும். சமூகமல்ல.
அன்புள்ள செல்லப்பா,
பதிலளிநீக்குவணக்கம். பாவம் நித்தி.எத்தனை நாளைக்குத் தான் நல்லவனா நடிக்கிறது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஊடகங்கள் செய்யும் வேலை அருவருப்பானது.இந்தப் பதிவு அவசியமானது.
நன்றி கவிதா. படித்ததற்கும் பதிந்ததற்கும்
பதிலளிநீக்குமன அழுத்தத்துக்கு மருந்து தேடி தான் இந்த மாதிரி ஆசாமிகளிடம் மக்கள் சென்றிருப்பார்கள். நித்யனின் இந்த "ஜீவன் முத்தி" காட்சிகளை கண்டு மேலும் மன அழுத்தம் அதிகமான மக்கள் பாவம். சக மனிதர்களை அன்பு செய்தலே ஜீவன் முத்தி என்பதை உணர்ந்தாலே இந்த மாதிரி ஆசாமிகளின் தேவை இருக்காது.
பதிலளிநீக்குசக மனிதன் தான் அவர்கள் கண்ணுக்குத் தெரியவே மாட்டானே. வீட்டுத்துளசி வீர்யம் தெரியவா போகிறது.
பதிலளிநீக்கு