இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், ஏப்ரல் 16, 2019

நட்சத்திர நிழல்கள் 1: சீதா கல்யாண வைபோகமே

நண்டு



நூறாண்டு கடந்துவிட்ட தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பெண் கதாபாத்திரங்கள் உதிக்கின்றன. அவற்றில் பல குறுகிய காலத்திலேயே உதிர்ந்துவிடுகின்றன; சில பார்வையாளர் மனத்தில் உறுதிபெற்றுவிடுகின்றன. அப்படி நீங்காத இடம்பிடித்த கதாபாத்திரங்களில் சிலவற்றைக் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறது இந்தத் தொடர்.

சரியாக 28 ஆண்டுகளுக்கு முன்னர், 1981 ஏப்ரலில் வெளியானது இயக்குநர் மகேந்திரன் இயக்கிய நண்டு திரைப்படம். இதன் நாயகியாக சீதா என்னும் வேடத்தில் நடித்திருந்தார் உதிரிப்பூக்கள் அஸ்வினி. இந்தப் படத்தின் கதையை எழுதியிருந்தவர் எழுத்தாளர் சிவசங்கரி. பெண்களது பிரச்சினைகளை மையப்படுத்தியிருந்த படம் இது. பெரிய சிக்கல்கள் இல்லாத சாதாரணக் குடும்பத்தில் விழும் முடிச்சுகளும் அவற்றை அவிழ்ப்பதற்குமான போராட்டமுமே நண்டு திரைப்படமாகியிருக்கிறது.


சீதா படோடாபமான வீட்டுப் பெண் அல்ல. எளிய குடும்பத்தைச் சேர்ந்தவள். தோற்றத்திலும் நடவடிக்கைகளிலும் எளிமை நிறைந்த பெண் அவள். அடர்ந்த கூந்தல், பரந்த நெற்றி, அகண்ட அர்த்தபுஷ்டியான விழிகள், கூர் நாசி, இதழ் திறந்தால் இனம்புரியாத சோகத்தைக் கொட்டிவிடுமோ என்ற எண்ணம் தோன்றும்படியான தோற்றம் கொண்ட அவள், பல குடித்தனங்கள் வசிக்கும் ஒரு வளவுக்குள் அமைந்த சிறு வீட்டில் வசிக்கிறாள். சீதா இருக்கும் இடம்தேடி வந்துவிடுகிறான் அவளுடைய ராமன்.

தந்தையை இழந்திருந்த சீதாவின் குடும்பத்தில் ஆண்கள் என யாருமே இல்லை. அவளும் அவளுடைய அம்மாவும்தான். இதுபோக அவளுடைய அக்கா சரஸ்வதி. அக்காவின் கணவன் சரஸ்வதியைக் கொடுமைப்படுத்துவதற்காகவே அவளைத் திருமணம் செய்துகொண்டதுபோல் நடந்துகொள்பவன். சீதா பொறுமைசாலி. அதிகாலையில் எழும் வழக்கம்கொண்டவள். கடவுள் நம்பிக்கை கொண்ட அவள் அம்மாவுக்குச் சிறு சிறு உதவிகள் செய்துவிட்டு அலுவலகம் சென்று திரும்புவள். தான் உண்டு தன் வேலை உண்டு என அன்றாட கதியில் சுழல்பவள்.


சீதாவின் மனங்கவர்ந்த நாயகனான ராம்குமார் ஷர்மா பெரிய வீரனல்ல; அவனால் சிவதனுசை வளைக்கவோ முறிக்கவோ முடியாது. தன்னைப் படுத்தியெடுக்கும் இருமலையே வெற்றிகொள்ளத் தெரியாதவன் அவன். சிறுவயது முதல் ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவன். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்து குடும்பத்தால் கிட்டத்தட்ட விரட்டியடிக்கப்பட்டவன். ஆணாதிக்கத் திமிர் கொண்ட தந்தையைப் பெற்ற மகனான அவன்மீது பரிவுகொண்டுதான் சீதா பாசம் செலுத்துகிறாள். இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள். ஒரே வளவில் குடியிருக்கிறார்கள். அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினால் வகைக் காதலல்ல அவளுடையது. ஒருவர் பாரத்தை மற்றவர் சுமக்கும் இயல்பான தன்மை கொண்ட எளிய காதல் அது.

நடுத்தரவர்க்கப் பெண்கள் எதிர்கொள்ளும் அத்தனை துயரங்களையும் சீதாவும் எதிர்கொள்கிறாள். அவளுடைய ஒரே ஆசுவாசம் ராம். ராமின் ஒரே ஆறுதல் சீதா. ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் நட்பாகவும் நடந்துகொள்கிறார்கள். அதற்குக்கூடக் கண் காது வைத்துக் கதை பேசும் அக்கம்பக்கத்தார். பிரச்சினை முற்றிய பொழுதில் ராமைத் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்கிறாள் சீதா. அந்த எளிய விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளவே அவள் பிரயத்தனப்பட வேண்டியதிருக்கிறது. அக்கா கணவன் முதலில் முட்டுக்கட்டை போடுகிறான். மைத்துனியின் வாழ்க்கைக்காகச் சிறு துரும்பையும் கிள்ளிப்போடாதவன் ஆண் என்ற முறுக்குக் காட்டுகிறான்; திருமணத்தை நிறுத்திவிட முடியும் எனச் சவால் விடுகிறான். 


இந்தப் படம்  வெளியாகி கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கடந்துவிட்ட இந்தக் காலத்திலும் இப்படியான ஆண்கள் பல குடும்பத்தில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நெஞ்சில் எழும்போது, மனம் குமுறுகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்கு முகம்கொடுக்க மாட்டாத இத்தகைய ஆண்களின் உருட்டல் மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது என்பதை உணர்த்துவதுபோல், அதுவரை அமைதியாக இருந்த சீதா வாயைத் திறக்கிறாள். “இது எங்கல்யாணம் எல்லாமே என் இஷ்டம். முடிவெடுக்க வேண்டியது நான்தான் நீங்க இல்ல” என வெடிக்கிறாள். இந்தத் திடமான முடிவை எடுக்கும்போது தான் பெண்களின் வாழ்வு மலர இயலும் என்பதைப் படம் அழகாக உணர்த்துகிறது.

அடுத்த சிக்கல் ராம்குமாரின் வீட்டிலிருந்து வருகிறது. திருமணத்துக்கு ஒப்புதல் வாங்க லக்னோ செல்லும் அவனை, பணத் திமிர் பிடித்த தந்தை எனும் பெரிய மனிதர் அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார். ராமுடைய அம்மா தன் கணவனை எதிர்த்து வாயைத் திறக்க முடியாத இந்தியத் தாய். மகனின் துயரத்துக்காகத் தானும் அழுது தீர்ப்பதைத் தவிர அவளாள் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒரு முரட்டு ஆணின் மிரட்டலுக்கு அடிபணிந்து கையைப் பிசைந்துபடி நின்றுவிடுகிறது. இந்தியக் குடும்பங்களில் தலைமை நிலையை எடுத்துக்கொள்ளும் ஆண் எப்படி எல்லாம் சர்வாதிகாரம் செலுத்துகிறான் என்பதற்கான பெரிய உதாரணம் ராமுடைய தந்தையும் சீதாவுடைய மாமனாருமான அந்தப் பெரியவர். அவரது ஆணவம் அவர் வசிக்கும் கம்பீர மாளிகை போல நிமிர்ந்துநிற்கிறது. மரபு, பாரம்பரியம், பண்பாடு என்ற எல்லாமுமாகச் சேர்ந்து அவரை ஆதிக்க நிலையில் கொண்டுபோய் நிறுத்துகிறது; பிறரை அடங்கி நடக்கச் சொல்கிறது. 


ஒருவழியாக எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து சீதா ராமின் கரத்தைப் பற்றுகிறாள் ஒரு மகனையும் பெற்றெடுக்கிறாள். அதன் பின்னர் அவளது வாழ்வின் பிரதான துயரத்தை எதிர்கொள்கிறாள். அந்தத் துயரத்தின் பின்னணியாகவே படம் தலைப்பிடப்பட்டிருக்கிறது. சீதாவின் துயரம் ராம்குமாரின் புற்றுநோய் வடிவில் வந்திருக்கிறது. ராம்குமாரைப் புற்று நோய் தாக்கியிருக்கும் விவரம் அறிந்து அனைவரும் நிலைகுலைந்துபோய்விடுகிறார்கள். எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. சீதா மகிழ்ச்சியாகக் கைபிடித்த ராம்குமாரைப் புற்றுநோய் அழைத்துக்கொண்டுபோய்விடுகிறது. 

சீதாவுக்கு இப்போது ஆறுதல் அவளுடைய ஒரே மகன்தான். அவனை ஆளாக்க வேண்டிய பெரிய பொறுப்பு அவளது தோளில் ஏறிவிடுகிறது. படத்தில் இடம்பெற்ற வசனம் போல் புருஷன் என்பவன் ஒரு வழிப்போக்கன் போலத் தான். அவளது வாழ்வின் ராம் வந்தான்; சில ஆண்டுகள் வாழ்ந்தான். இப்போது காற்றோடு காற்றாகக் கலந்துவிட்டான்.


சீதாவுக்குப் பெரிய பெரிய கனவுகள் இருந்திருக்கவில்லை. அவளது எதிர்பார்ப்பெல்லாம் எளிமையானதும் நிம்மதியானதுமான வாழ்க்கையே. அதுகூட அவளுக்குக் கைகூடவில்லை.. தான் நேசித்த, தன்னைப் புரிந்துகொண்ட ராமனை இழந்தபோதும் சீதா துவண்டுவிடவில்லை; துணிவுடன் தன் வாழ்வைத் தொடர்கிறாள். திருமணம் என்ற சடங்கையும் கணவன் என்ற உறவையும் மட்டுமே நம்பி பெண்கள் வாழ்வை நடத்த வேண்டியதில்லை என்ற எண்ணத்தைத் தருகிறது சீதாவின் வாழ்க்கை. சீதா பெண்களுக்குத் தன்னம்பிக்கை தருகிறாள். அதைத் தவிர நல்ல இலக்கியமும் சினிமாவும் வேறென்ன தந்துவிட முடியும் பெண்களுக்கு?

படங்கள் உதவி ஞானம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக