ஜெர்மனியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பல்கேரியா நாட்டின் நதியோரக் கிராமம் ஒன்றுக்கு நீர் மின் நிலையம் அமைக்கும் பணிக்காக வருகிறார்கள். அந்தக் கிராமம் கிரீஸ் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ளது. தொழிலாளர்களின் தலைவனான வின்செண்ட் சற்று ஆணவத்துடனும் மேட்டிமைத் தனத்துடனும் நடந்துகொள்பவனாக இருக்கிறான். அந்தக் குழுவில் ஒருவனாக இருக்கிறான் மெயின்ஹார்டு. தனிமை விரும்பியான அவனது வாழ்க்கை சிக்கல் நிறைந்தது. முன்னாள் ராணுவத்தினான அவன், உறுதியான உடலமைப்பையும் அடர்ந்த மீசையையும் ஆழமான யோசனையைத் தேக்கிவைத்திருக்கும் முகத் தோற்றத்தையும் பெற்றிருப்பவன். சகோதரனை இழந்த, ஒண்டிக்கட்டையான அவன், சிறிது பணம் சேர்ப்பதற்காக அந்த வேலையில் தன்னை இணைத்திருக்கிறான்.
இயக்குநர் வலேஸ்கா கிரியிபா |
வின்செண்ட், மெயின்ஹார்டு இருவருக்கும் ஆரம்பம் முதலே அவ்வளவாக ஒத்துப்போகவில்லை. தன் குழுவுடன் பெரிதாக ஒத்துப்போக இயலாத மெயின்ஹார்டு அந்தக் கிராமத்தின் மனிதர்களுடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகத் தொடங்குகிறான். அன்னிய நாட்டில் அன்னிய மனிதர்கள் என்ற எண்ணம் மெது மெதுவாக விலகி அவர்களுடன் ஓர் அன்னியோன்யத்தை உணரத் தொடங்குகிறான் மெயின்ஹார்டு. அவனையும் கிராமத்தினரையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது குதிரை ஒன்று. அந்தக் குதிரை மூலமாகத் தான் அவர் ஊராரோடு பரிச்சயம் கொள்கிறான். முதலில் அவனுக்கு சிகரெட் கூட தர மறுக்கும் ஊரார் சிறிது சிறிதாக நெகிழ்ந்து கொடுக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத உறவின் இழை உருவாகிறது. அது ஒருவிதமான பிணைப்பை உருவாக்குகிறது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆட்ரியான் என்பவருக்குச் சொந்தமான குதிரை அது. அவருடன் நட்பு கொள்கிறான் மெயின்ஹார்டு.
ஆட்ரியானுக்கும் மெயின்ஹார்டுக்கும் இடையில் உருவான நட்புக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான். ஆட்ரியானின் குதிரை விபத்தொன்றில் சிக்கி உயிருக்குப் போராடும் நிலையில், அதன் வேதனையைத் தீர்க்க துப்பாக்கியை எடுக்கிறான் ஆட்ரியான், ஆனால், அந்தக் காரியத்தை ஆட்ரியானுக்காக மெயின்ஹார்டு ஒரே விசை அழுத்தலில் குதிரைக்குப் பெரிய விடுதலையளிக்கிறான்.
பல்கேரிய மொழியில் பேசும் ஊராருக்கும் ஜெர்மன் மொழியில் பேசும் மெயின்ஹார்டுக்கும் மலரும் உறவுக்கு பாஷை ஒரு தடையாகவே இருக்கவில்லை. மனிதர்களின் மனசும் மனசும் பேசிக்கொள்ளும் சுகந்தவாசம் படத்தை மணக்கச் செய்கிறது. மெயின்ஹார்டுக்கு குதிரையேற்றப் பயிற்சி அளிக்கிறான் வான்கோ. அவனுடைய அம்மா, அப்பா இருவருமே வெளிநாட்டில் பணிக்குச் சென்றுவிட்டார்கள். அவன் மற்றொரு குடும்பத்தினர் பராமரிப்பில் வாழ்ந்துவருகிறான்.
நதிக்குக் குளிக்க வரும் வியரா போரிஸ்வா என்னும் பெண்ணுக்கும் வின்செண்டுக்கும் சிறு மோதல் வருகிறது. அவளிடம் சற்றுக் கடுமையாக நடந்துகொள்கிறான் வின்செண்ட். ஆனாலும் அவளை அவனுக்குப் பிடித்திருக்கிறது. பெண்கள் பற்றிய யோசனையிலேயே நேரத்தைச் செலவிடுபவனாக இருக்கிறான் வின்செண்ட். ஆனால் அவனுக்குக் கிடைக்காத வியரா அது பற்றிய பெரிய சிந்தனையற்ற மெயின்ஹார்டுக்குக் கிடைக்கிறாள். ஒருநாள் மாலை நேரத்தில் வியராவுடன் பேசிக்கொண்டே வரும் மெயின்ஹார்டுக்கு விடைதரும் வேளையில், “இன்னும் சில தூரம் அவளுடன் வரக் கூடாதா, தன் மீது நம்பிக்கை இல்லையா” எனக் கேட்கிறான் மெயின்ஹார்டு. அவள் சிரித்தபடியே அவனை அழைத்துச் செல்கிறாள். மெல்லிய வெளிச்சம் கசியும் இரவு நேரத்தில் ஆளற்ற வனாந்தரப் பகுதியில் அவர்கள் தனியே உரையாடுகிறார்கள்; அதன் முடிவில் இருளும் ஒளியும் கலப்பதுபோல் இயல்பாகக் கலக்கிறார்கள்.
இப்படியான வெவ்வேறு சம்பவங்கள் வழியே படம் ஒரு கதையைச் சொல்கிறது. படத்தின் சில அடுக்குகள் போர், வன்முறை ஆகியவை குறித்தும் பேசுகின்றன. அதில் வேதனை இருக்கிறது, சோகம் இருக்கிறது; அன்பு இருக்கிறது; விருப்பம் இருக்கிறது வெறுப்பு இருக்கிறது; மொத்தத்தில் எல்லாம் கலந்த வாழ்க்கை இருக்கிறது. பெரிய திருப்பங்களற்ற மிக மெதுவாக நகரும் திரைக்கதையே படத்தை வழிநடத்திச் செல்கிறது. ஆனால், பிரியத்துக்குரிய நண்பருடன் ஏதோவொரு பானத்தை அருந்தியபடியே மௌனமும் சொற்களும் கலந்து உரையாடும் சுகம் தரும் வகையில் படம் காட்சியாக்கப்பட்டிருக்கிறது.
இந்து தமிழ் திசை நாளிதழின் இந்து டாக்கீஸ் இணைப்பிதழில் 2019 ஏப்ரல் 19 அன்று வெளியானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக