இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, மார்ச் 11, 2018

அஞ்சலி: செல்வி அர்ச்சனா என்ற மயில்

அழகு என்றால் முருகு என்பார்கள் உள்ளம் உருகும் பக்தர்கள். படத்திலே பார்த்த முருகனை நேரில் பார்த்தறியாத பரம ரசிகருக்கோ அழகென்றால் முருகனாய் அறிமுகமான ஸ்ரீதேவிதான். அவர் சிறந்த நடிகையா என்று கேட்டால் பட்டென்று பதில் சொல்ல முடியாது. ஆனால், ஸ்ரீதேவி அழகா என்று கேட்டால் சட்டென்று ஆமோதிக்கும் மனம். அவரைவிடச் சிறந்த நடிகைகள் பலரைத் திரையுலகம் சந்தித்திருக்கிறது.

அவர்கள் எவருமே ஸ்ரீதேவியைப் போல் புகழடைந்திருக்கவில்லை என்பதே ஸ்ரீதேவியைத் தனித்துக் காட்டும். தங்களின் அபிமான நடிகை திரையில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை தங்கள் அபிமான நட்சத்திரத்தைத் திரையில் பார்ப்பதே ஓர் அலாதி இன்பம். அந்த இன்பத்தை அள்ளி அள்ளித் தந்ததில் துளியும் குறைவைக்காதவர் ஸ்ரீதேவி. அவரது திரை நடிப்பைவிடத் திரை இருப்பே ரசிகர்களை அமைதிப்படுத்தியது.


தன்னை ரசிகர்கள் அழகுப் பதுமையாக ரசிக்க விரும்புகிறார்கள் என்றே அவரும் நம்பியிருக்கிறார். அறுவை சிகிச்சை செய்யாத மூக்குடன் காட்சி தந்த ஸ்ரீதேவியிடமே ரசிகர்கள் மயங்கிக் கிடந்தார்கள். ஸ்ரீதேவியோ அது போதுமென்று எண்ணவில்லை. ரசிகரை ஈர்த்த தன் அழகுக்கு மூக்கு ஒரு குறை என்று எண்ணி அதை அறுவை சிகிச்சை செய்து மாற்றிக்கொண்டார்.

அவரைப் பொறுத்தவரை ரசிகர்கள் தன்னிடம் எதிர்பார்ப்பதை அவர்கள் எதிர்பார்ப்பதற்கும் அதிகமாகத் தர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கலாம். அதனால்தான் அவர் தொடர்ந்து தனது அழகைப் பராமரிப்பதில் பேரார்வம் காட்டியிருக்கிறார். உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து, பொலிவு கெடாமல் தன்னைப் பராமரித்துவந்திருக்கிறார்.


குழந்தைப் பருவம் முதலே திரையில் அவர் தோன்றிவந்தாலும், குமரியாக அவர் காட்சியான ‘மூன்று முடிச்சு’ அவரது வாழ்க்கைச் சம்பவங்களுடன் ஒத்துப்போகும் ஒரு திரைப்படமாக இப்போது நினைவுகளில் தங்குகிறது. கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் செல்வி என்னும் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். படம் வெளியானபோது ஸ்ரீதேவியின் வயது 13தான். அந்தப் படத்தில் அவர் 18 வயதுப் பெண்ணாக நடித்திருந்தார்.

காதலனை நினைவில் சுமந்தபடி, குடும்பச் சூழல் காரணமாகத் தன்னைவிட அதிக வயது (46) கொண்ட ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும் அபாக்கியவதி அவர். இப்படி ஒரு விபரீத முடிவை எந்தப் பெண்ணாவது எடுப்பாரா என்று நினைக்கச் செய்தாலும், குமரி முதல் காஷ்மீர்வரை வாழ்ந்திருந்த பெரும்பாலான இந்தியக் கன்னிப்பெண்கள் இத்தகைய துயரத்தை வேறுவழியின்றிக் கரம் பற்றியிருக்கிறார்கள் என்பதே வரலாறு. ஸ்ரீதேவியும் இதற்கு விலக்கல்ல.



மூன்று குழந்தைகளையும் கணவனையும் பொறுமையுடனும் பொறுப்புடனும் பராமரிப்பது, போதாக்குறைக்குத் தன்னைவிட வயதில் மூத்த, மகன் ஸ்தானத்தில் உள்ள ரஜினியைத் திருத்துவது - தன் மீது வெறிகொண்டலைந்த ரஜினியை, ‘போடா கண்ணா போ’ என்று விரட்டுவது, ‘டீக்கே’ என அவரது சொல்லாலேயே குத்தலாய்க் கூறுவது - போன்ற காரியங்கள் இந்தியப் பெண்களுக்கேயான குருவி தலையில் வைத்த பனங்காய் சமாச்சாரங்கள்தாம். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தின் பண்புநலன்களை ஸ்ரீதேவி மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார். இதனாலேயே ஸ்ரீதேவியும் ரசிகரின் மனத்தில் எளிதாகப் புகுந்து சிம்மாசனமிட்டிருக்கக்கூடும்.

இயக்குநர் மகேந்திரனின் ‘ஜானி’யில் ஸ்ரீதேவி ஏற்றிருந்த அர்ச்சனா என்னும் பாடகி வேடம் எந்த அளவு எளிமையானதோ அந்த அளவு வலிமையானது. ஆழ்ந்த சோகத்தில் புதைந்த விழிகள், நீடித்த மௌனத்தில் உறைந்த உதடுகள், வலது நாசியின் ஒற்றை மூக்குத்தி, மெல்லிய கழுத்தில் நீளமாகத் தொங்கும் வெள்ளைவெளேரென்ற பாசி, மேட்சிங் ப்ளவுஸ், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புடவையை வலது தோளோடு இழுத்துப் போர்த்திக்கொள்ளும் பாங்கு என அர்ச்சனாவை அர்ச்சனைக்குரிய அம்பாளின் தெய்வ கடாட்சத்துடன் திரையில் காட்டியிருப்பார்கள் அசோக்குமாரும் மகேந்திரனும்.

அர்ச்சனாவின் பாடல் திருடன் ஒருவனைத் திருத்தியிருக்கும்; அவரது காதலோ கொலையாளி ஒருவனை மனிதனாக மாற்றியிருக்கும். இந்தப் படத்தில் ரஜினியிடம் காதலைத் தெரிவிக்கும் காட்சிகளில் அவரிடம் வெளிப்படும் முகபாவமும் உடல்மொழியும் அசாதாரணமானவை. ஏக்கம், தவிப்பு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், பிரியம், படபடப்பு, கொஞ்சமாய்க் கோபம் இவை போன்ற உணர்ச்சிகளுடன் சின்னதாய் ஒரு குழந்தைத் தனம் ஆகியவை கலந்து ஸ்ரீதேவி வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு அர்ச்சனாவையும் அதன் மூலம் ஸ்ரீதேவியையும் ஆயுள் முழுவதும் நினைவில் நிலைத்திருக்கச் செய்யும் வல்லமை கொண்டது.


கனவுகளைக் கண்களில் தேக்கி, காதல் ஏக்கத்துடன் கிராமத்தை வலம்வந்த, பருவத்தின் நுழைவாயிலிலேயே வாழ்வின் பெரும் அனுபவத்தைச் சம்பாதித்த ‘16 வயதினிலே’ மயில் கதாபாத்திரத்தின் அத்தனை அழுத்தங்களையும் அந்தப் பிஞ்சு முகத்துடன் தாங்கியிருப்பார் ஸ்ரீதேவி. தேசிய விருதை மயிரிழையில் தவறவிட்டதாகச் சொல்லப்பட்ட ‘மூன்றாம் பிறை’, ‘மீண்டும் கோகிலா’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ எனத் தொடர்ந்துவந்த பல படங்களில் அவர் உருவாக்கிய சித்திரங்கள் ரசிகர்களுக்கும் அவருக்குமிடையிலான ஓர் உணர்ச்சிப் பிணைப்பை உருவாக்கின.

அழகுச் சித்திரங்களின் அழிவை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? கலை ரசிகர்கள் கலங்கித்தானே போவார்கள்? அதனால்தான் ஸ்ரீதேவியின் இறப்பு ரசிகருக்கு ஈடற்ற இழப்பாகியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ஸ்ரீதேவி நிமித்தம் பொங்கிய உணர்ச்சிப் பிரவாகம் வடிய சில நாட்கள் ஆயின.ஊடகங்களும் ‘கண்ணே கலைமானே’யிலும் ‘செந்தூரப்பூவே’யிலும் ‘காற்றில் எந்தன் கீத’த்திலும் மீண்டும் மீண்டும் ஸ்ரீதேவியை உயிர்ப்பித்துக்கொண்டே இருந்தன.

இறுதி ஊர்வலத்தில்கூட ஸ்ரீதேவியின் முகத்தைப் பார்ப்பதிலேயே துடியாய் இருந்தார்கள் ரசிகர்கள். அழகிய பெண்களின் இறப்பைவிடக் கொடிது அவர்கள் அழகை இழந்துபோகும் நிலை. அந்த வகையில் ஸ்ரீதேவியின் இறப்பு சற்று மேம்பட்டது என்றே சொல்ல வேண்டும். அவர் அழகாய்ப் பிறந்தார்; அழகாய் இருந்தார்; அப்படியே இறந்தும்விட்டார். ஆக, அவருடைய வாழ்வு முழுமதி போன்றதென்றே தோன்றுகிறது.

2018 மார்ச் 4 அன்று இந்து தமிழ் பெண் இன்று இணைப்பிதழில் வெளியானது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக