சென்னை சர்வதேச திரைப்பட விழா 2013
டிசம்பர் 17 அன்று பார்த்த திரைப்படம் Wałęsa, Man of hope. போலந்து அதிபர் லேக் வலேசா பற்றிய வரலாற்றைச் சித்திரித்த திரைப்படம் இது. ஆனால் ஒரு திரைப்படத்திற்குரிய அத்தனை சுவாரசியத்துடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. ஒரு சாதாரண எலக்ட்ரீசியனாக இருந்து தொழிற்சங்கப் போராட்டங்கள் வழியாக ஒரு நாட்டின் அதிபராக உயர்ந்த மனிதரைப் பற்றிய கதை. ஒவ்வொரு முறை போராட்டத்திற்காகப் போகும்போதும் தனது கைக்கடிகாரத்தையும் மோதிரத்தையும் கழற்றிக்கொடுத்து நான் திரும்பி வரவில்லை என்றால் இவற்றை விற்று வாழ்க்கைச் சமாளி என்று தெரிவித்துப் போகிறார் வலேசா. இந்தக் காட்சி ஒரு சில இடங்களில் மீண்டும் மீண்டும் வருகிறது. இப்படியான சித்திரிப்பு படத்திற்கு கலைத் தன்மையை அளிக்கிறது.
பொதுவாழ்வுக்கு தன்னை அர்ப்பணித்த மனிதனின் குடும்பம் அனுபவிக்கும் அத்தனை துயரத்தையும் வலேசாவின் குடும்பம் அனுபவிக்கிறது. வலேசாவிடம் மேற்கொள்ளப்படும் நேர்காணல் வழியே போராட்ட வாழ்க்கை காட்சியாக விரிந்துசெல்கிறது. நோபல் பரிசு வாங்க தான் செல்ல முடியாத நிலையில் தன் மனைவியை அனுப்பிவைக்கிறார் வலேசா. விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரைச் சோதனையிடும் போது அனைத்து உடைகளையும் களைந்த நிலையில் நோபல் பதக்கத்தை துணியால் மறைக்கும் காட்சி இயக்குநரை அடையாளம் காட்டுகிறது.
அறிவுஜீவிகள் மணிக்கணக்காகப் பேசி எடுக்கும் முடிவை தான் ஒரு சில நொடிகளில் எடுத்துவிடுவதாக வலேசா குறிப்பிடும் காட்சியில் அரங்கில் உற்சாகம் பெருகியது. ஒரு கதாநாயகத் தனத்துடன் ஒரு பக்கத்திலிருந்து பார்த்ததைப் போன்று படமாக்கப்பட்டிருந்தது. வலேசாவின் போராட்டங்களுக்கு கிடைத்த பிற ஆதரவோ அது தொடர்பான பெரிய விவரங்கள் படத்தில் பதிவுசெய்யப்படவில்லை.
87 வயது இயக்குநர் இயக்கிய படம் என்பதால் படுத்திவிடக் கூடாதே என்று பயம் இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்தபின்னர் படத்தில் வெளிப்பட்டிருந்த உற்சாகம் இயக்குநர் மீதான மதிப்பை அதிகப்படுத்தியிருந்தது.