சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தரது சிலை சென்னை ஐஸ் ஹவுஸ் அருகே கடற்கரைச் சாலையில் கடலை நோக்கியபடி கம்பீரமாக நிறுவப்பட்டுள்ளது. தற்போதைய விவேகாநந்தர் இல்லமான ஐஸ் ஹவுஸ் அந்தக் காலத்தில் பிரபலமான வக்கீலான பிலகிரி அய்யங்காருக்குச் சொந்தமானது. அக்கட்டடத்தில் தான் விவேகாநந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அக்கட்டடத்திற்கருகே மேடை அமைக்கப்பட்டு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. எனவே1963இல் அவருடைய நூற்றாண்டு விழாவின் போது அவரது சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது. முதலில் ஜவஹர்லால் நேரு தான் இச்சிலையைத் திறந்துவைப்பதாக இருந்தது. ஆனால் நேரு காலமாகிவிட்டதால் 1964ஜூனில் டாக்டர் ராதாகிருஷ்ணன் இச்சிலையைத் திறந்துவைத்தார். விவேகாநந்தர் இல்லத்திலும் விவேகாநந்தரின் சிலை ஒன்று உள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவில் நடைபெறவுள்ள 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்துகொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்னும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. 1902ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார்.
தங்குத்தூரி பிரகாசம் பந்துலு
பந்துலு சென்னை மாகாணப் பிரதமராக 30.04.1946 முதல் 23.03.1947 வரை பதவிவகித்துள்ளார். அவரது அமைச்சரவையில் வி வி கிரி தொழிற்துறை மந்திரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆலோசகர் ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட மதுவிலக்கை பந்துலு மீண்டும் கொண்டுவந்தார். ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிந்தபோது அதன் முதல்வராக 01.101953முதல் 15.11.1954வரை பதவிவகித்துள்ளார் இவர். சென்னையில் சைமன் கமிஷன் பகிஷ்காரம் இவரது தலைமையில் நடைபெற்ற இடத்திலேயே இவருக்குச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இவரது சிலையை நிறுவுவதில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். விடுதலைப் போராட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்டவர் இவர். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பிரகாசம் பந்துலு ஸ்வராஜ்யா என்னும் ஆங்கிலத் தினசரி பத்திரிகையை சென்னையில் நடத்தி விடுதலைப் போருக்கு மாபெரும் சேவை செய்தார். ஆகஸ்ட் 23, 1872இல் பிறந்த ஆந்திர கேசரி பந்துலு மே 20, 1957இல் காலமானார்.
கோபால கிருஷ்ண கோகலே
கோபால கிருஷ்ண கோகலேவின் சிலை பல்கலைக்கழக செனட் கட்டடத்தின் முன்னே அமைக்கப்பட்டுள்ளது. காந்தியால் அவரது அரசியல் குரு என அழைக்கப்பட்டவர் கோகலே. காந்தியின் அழைப்பின் பேரில் 1912இல் தென்னாப்பிரிக்கா சென்றுவந்தவர் கோகலே. இவர் மகாராஷ்டிராவிலுள்ள ரத்னகிரி மாவட்டத்தின் கோதலக்கில் மே 9, 1866 அன்று பிறந்தவர். மிதவாதியாக இருந்தபோதும் நாட்டின் நன்மையைப் பொறுத்தவரையில் எதையும் யாருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடியவரல்ல. கல்விக்காக ஸ்ரீ கோகலே செய்த பொதுத்தொண்டு மிக மிக அதிகமான அளவிலானது. அதன் காரணமாகவே அவரது சிலை செனட் மண்டபத்தின் முகப்பில் இடம்பெற்றிருப்பது மிகப் பொருத்தமான ஒன்று. கோகலே பிறர் நலனுக்காக வாழ்ந்தவர். 1905ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேந்தெடுக்கப்பட்டார். அப்போது இந்திய ஊழியர் சங்கத்தைத் தோற்றுவித்தவர் கோகலே. சென்னை ராயப்பேட்டையில் இதன் கிளை இருக்கிறது. தனது 49ஆவது வயதில் பிப்ரவரி 19, 1915 அன்று பம்பாயில் காலமானார் கோகலே.
இந்தியாவின் துணைப் பிரதமராக விளங்கிய பாபு ஜெகஜீவன் ராமின் சிலை சென்னை கடற்கரைச் சாலையில் உழைப்பாளர் சிலை எதிரே எழிலகக் கட்டடத்தின் முகப்பில் பல்கலைக்கழகத்தைப் பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை 1990ஆம் ஆண்டு முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் அப்போதைய ஜனாதிபதி ஆர். வெங்கடரமணன் திறந்துவைத்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரான ஜெகஜீவன் ராம் பீஹாரில் அர்ரா அருகேயுள்ள சந்த்வாவில் 1908, ஏப்ரல் 5 அன்று பிறந்தார். அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோருக்கான அமைப்பை 1935இல் உருவாக்குவதற்கு முக்கியப் பங்காற்றியவர். 1946இல் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவையின் மிக இளைய அமைச்சர் இவர். அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட அமைச்சரவையில் தொழிற்துறை அமைச்சராக இருந்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் விவசாயத்துறை அமைச்சராகவும் இரயில்வே துறை அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளார் இவர். 1947, ஆகஸ்ட் 16இல் ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் கருத்தரங்கில் இந்தியப் பிரதிநிதியாக காந்தியவாதி டாக்டர் அனுக்ரஹா நாராயண் சின்ஹாவுடன் சென்று கலந்துகொண்டார். தற்போதைய மக்களவை சபாநாயகரும் முதலாவது பெண் சபாநாயகருமான மீரா குமார் இவரது மகள். பாபு ஜெகஜீவன் ராம் ஜூலை 6, 1986இல் புதுதில்லியில் வைத்துக் காலமானார்.
டாக்டர் அம்பேத்கர்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் (தற்போதைய மத்தியப்பிரதேசம்) ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14ஆவது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தார். டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915இல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்னும் ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப் பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்னும் ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்னும் ஆய்வுரைக்கு 1921இல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923இல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் போராடினார். 1930இல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்டார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக “இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. காந்திஜி இதை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931இல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே “புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக்கொள்ளப்பட்டன. வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956இல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951ஆம் ஆண்டு “இந்து சட்டத் தொகுப்பு மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டபொழுது அதை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6இல் காலமானார்.