இந்த வலைப்பதிவில் தேடு

புதன், ஜனவரி 26, 2011

சொல்லுக சொல்லில்

கரைகளை இணைத்து நிற்கும்பாலம்
திடுமென அறுந்துவிடுகிறது
மிகச் சரியாகப் பாலத்தின் ஆணிவேரை
ஒற்றைச் சொல் பலமாகத் தாக்கிவிடுகிறது
சொல்லின் நோக்கம் பாலத்தின் வீழ்ச்சியல்ல என்பதை
அது உணர்த்தும் முன்னமே தவிடுபொடியாகிவிடுகிறது பாலம்.

மீண்டும் மெல்ல மெல்லப்
பல தருணங்களில் பதமான சொல்லெடுத்து
இதங்களில் தோய்த்து தோய்த்து
பாலத்தை உருவாக்குவதற்குள்
அடுத்த சொல்லைப் பிரசவிக்க ஆயத்தமாகிவிடுகிறான் பிரிவிளவரசன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் கைதவற விடும் பொருளெனச்
சொல் விழுகிறது
வெடிமருந்துக் குவியலில் வீழும் நெருப்புப் பொறியாய்

வெடித்த சத்தமில்லை
புகையும் நெருப்பும் இல்லை
பொசுங்கிய பறவை நாசியில் மட்டும் நெடிக்குப் பஞ்சமில்லை

கவனமாகக் கையிலெடுத்துப் பூங்கொத்தாய்
முன்னரொரு நாள் நீட்டிய சொல்லொன்று
இன்றேன் சாட்டையாய் மாறி தானாய்ச் சுழலத் தொடங்கிவிட்டது.

கைக்குள் சிக்கவில்லை
வலைக்கும் வாகில்லை
கரைக்கு மீளவில்லை
கடலில் பிணத்தை மிதக்கவிட்டு
மீனாய் மாறி
நீலக் கடலுக்குள் பயணப்படுகிறது
அந்த விபரீதச் சொல்

ஞாயிறு, ஜனவரி 16, 2011

கனவுக்கும் வெற்றிக்குமான இடைவெளி

எப்போதோ எழுதிய பதிவு. இப்போது வலையேற்றம் செய்துள்ளேன். ஏன் இதை இப்போது வலையேற்றம் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு இப்போது தான் அது தோன்றியது என்பதே பதில். காலச்சுவடுக்காக எழுதப்பட்டது இது. ஆனால் அப்போது இதழில் இடம்பெறவில்லை, அதற்கான தகுதி ஏதேதோ காரணங்களால் இல்லாததாகக் கருதப்பட்ட பதிவு இது. இந்நிகழ்வு தொடர்பான பதிவை பொறுப்பாசிரியர் தேவிபாரதி எழுத அது காலச்சுவடு ஜூன் 2008 இதழில் பிரசுரமானது. அதைப் படிக்க விரும்புபவர்களுக்கென அதன் இணைப்பை கீழே தந்திருக்கிறேன்.

http://www.kalachuvadu.com/issue-102/page58.asp

கனவுகளோடு தொடங்கி எட்டு இதழ்கள் நடத்திய சுந்தர ராமசாமியின் காலச்சுவடைத் தொடர்ந்து நடத்தி நூறு இதழ்கள்வரை கொண்டுவந்திருக்கும் தருணத்தை நினைவுகூரும்விதமாக எட்டு நூல்களைப் பதிப்பித்து அவற்றை வெளியிடும் நிகழ்ச்சியாக ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வைக் காலச்சுவடு 19.04.2008 அன்று சென்னை தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபைத் திரையரங்கில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு இளம் வாசகர்கள் முதல் மூத்த எழுத்தாளர்கள்வரை, பலர் வந்திருந்தனர். பத்துப் பதினைந்து பேர்களுக்கே திணறும் தற்போதைய இலக்கியச் சூழலில் ஒருநாள் நிகழ்வுக்குத் தேவையான அளவு ஆள்கள் வந்திருந்ததே ஆறுதலான விஷயமாகப்பட்டது.

எல்லா விழாக்களும் ஏதோ ஒன்றைக் குறித்தோ குறிவைத்தோ நிகழ்த்தப்படுகின்றன. இடைவிடாத எதிர்ப்புகளைத் தாங்கிக்கொண்டு தனது பயணத்தில் இவ்வளவு தூரத்தைத் தீவிர இதழ் ஒன்று கடந்து வந்திருப்பதைக் கொண்டாடும் விதத்தில் பதிப்புச் செய்திருப்பதும் அவசியமான ஒன்றென்றேபடுகிறது. வலியது வாழும் வர்த்தக உலகத்தில் வாய் பேசா மௌனிகளால் வாழ இயலாச் சூழல் நிலவுகிறபோது வெற்றிகளை உரத்துக்கொண்டாடுவதில் பிழை இல்லை. ஆனாலும், வெற்றி குறித்த ஆனந்தத்தோடு நின்றுவிடாமல் சுராவின் கனவிற்கும் இப்போது அடைந்துள்ள வெற்றிக்கும் உள்ள உறவைப் பரிசீலிப்பது மாற்றுக்கருத்துக்கு மதிப்பளிக்கும் இதழுக்கு அத்தியாவசியமான தேவை. விமர்சனத் தராசுகள் தாறுமாறாய்த் தடம்புரண்டு தவிக்கும் இலக்கியச் சூழலில் ஏதோ ஒரு வகையிலான விமர்சனங்களை உருவாக்குவதே ஆரோக்கியமான விஷயம். நிகழ்வில் மணா, கடற்கரய் ஆகியோருக்கு இதழ் பற்றிய விமர்சனத்தை எடுத்துவைக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

முதல் அமர்வின் தொடக்க நிகழ்ச்சியாகக் காலச்சுவடு முதல் இதழ்த் தலையங்கம் நாடக ஆளுமை சண்முகராஜாவால் வாசிக்கப்பட்டது. சு.ராவின் தலையங்கம் சிந்தனையைத் தூண்டியது. இப்போது காலச்சுவடு அடைந்திருக்கும் வெற்றியைத்தான் சு.ரா கனவு கண்டாரா? காலச்சுவடின் தனிக்குணங்களாக முதல் தலையங்கத்தில் அவர் குறிப்பிட்ட விஷயங்கள் இப்போது நடைமுறையில் உள்ளதா? இவை குறித்துச் சிந்திப்பது இந்தக் கணத்தில் மிக முக்கியமானது. எல்லாவற்றிலும் தென்படும் சடங்குகளைத் தீவிர குணத்துடன் எதிர்த்த சு.ராவின் பெயரைச் சொல்லிக்கொண்டு வெறும் சடங்குகளாக எவற்றையும் நடத்திவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவதே அவருக்குச் செலுத்தும் மரியாதையாக இருக்கும் என்ற சிந்தனையே ஏற்பட்டது. சரியோ தவறோ மனத்தில் பட்ட உண்மையை யாருக்காகவும் பாரபட்சம் காட்டாமல் எழுதத் தூண்டிய சு.ரா மீது ஏற்படும் மரியாதை அசலானதாகவே உள்ளது. பின்னர், காலச்சுவடின் பயணம் குறித்து அரவிந்தன் கட்டுரை வாசித்தார்.

காலச்சுவடு நடத்திய சுந்தர ராமசாமி 75 பரிசுப் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு தர அழைக்கப்பட்டிருந்தார் அசோகமித்திரன். வென்றவர்களும் காலச்சுவடில் நீண்ட காலம் சிறப்பாகப் பணியாற்றி வரும் பி. சிவக்குமார், நாகம், லோகநாதன் ஆகியோரும் பரிசளித்துக் கௌரவிக்கப்பட்டனர். அசோகமித்திரன் பரிசுகளைப் பக்குவமாகக் கொடுத்தார். உண்மைகளைத்தான் போட்டு உடைத்துவிடுகிறார். ஆனால், அதை அவர் உடைக்கும் விதம் தனி அழகு. இந்த மேடையில் அந்த வாய்ப்பில்லை.

ஆ. இரா. வேங்கடாசலபதி பாரதி கருவூலம் என்னும் பெயரில் 1904 முதல் 1916வரை ஹிந்துவில் வெளியான பாரதி கடிதங்களைத் தொகுத்துள்ளார். இந்நூலை ஹிந்து ராம் வெளியிட பா. மதிவாணன் பெற்றுக்கொண்டார். சதானந்த் மேனன், ஊர்வசி புட்டாலியா போன்ற பத்திரிகையாளர்கள் உரையாற்றினர். மாற்றிதழ் குறித்த பல்விதமான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சிமுடியும் வரையிலும் பாரதி கருவூலம் புத்தகத்தைப் பக்கம்பக்கமாகப் புரட்டியபடியே மேடையில் மௌனமாக, பொறுமையாக அமர்ந்திருந்தார் அசோகமித்திரன். ஹிந்து ராம் பேசும்போது தேச விடுதலை, பெண்கள் விடுதலை குறித்த பாரதியின் வீரியமிகு எழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டார். நூல்களைப் பதிப்பிப்பது குறித்துக் காற்றில் கணக்குப் போட்டே காற்றோடு காற்றாய்க் கரைந்துவிட்ட பாரதியின் எழுத்துக்கள் இன்னும் பலருக்குச் சுவாசம் அளிப்பதே அதன் சிறப்பு. அச்சில் பார்க்கும் ஆசையில் பிறந்த எழுத்தல்ல அவரது எழுத்து, அகத்தில் கனன்ற நெருப்பு உமிழ்ந்த எழுத்தென்பதால்தான் இது சாத்தியப்படுகிறது.

கிடைத்த வாய்ப்பைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொண்டார் மணா. துதிபாடலுக்கோ தூற்றுதலுக்கோ போகாமல் விமர்சனத்தை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தினார். காலச்சுவடு பற்றிய விமர்சனத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் தற்போதைய இலக்கிய உலகின் போலித்தனத்தைச் சொல்லிச் சென்றார். அரசியல்ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் பத்திரிகைச் சுதந்திரத்தை மதிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகள் அரசியல்ரீதியான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளாமல் பத்திரிகைகள்மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியை ஒன்றிணைந்து தட்டிக்கேட்க வேண்டும் என்ற உணர்வு தொனிக்கப் பேசினார்.

1981இல் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டில், சூழ்ந்திருந்த ஆபத்துகளை மீறித் துண்டறிக்கை மூலம் கண்டனத்தைப் பதிவுசெய்திருந்த துணிச்சல், தஞ்சையில் ஜெயலல¤தா ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த இலங்கையைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட அது குறித்த கண்டனத்தைப் பதிவுசெய்யும் விஷயத்தில் காணாமல் போயிருந்தது குறித்த அதிருப்தியைத் தெரிவித்தார் மணா. ஆளும்வர்க்கத்திற்கெதிரான தீவிரப் பத்திரிகைகளின் குரல் வலுவிழந்து பலவீனமாக உள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பினார். மாற்றுக் கருத்துகளை ஏதாவது ஒருவகையில் முடக்கத் துடிக்கும் அரசியல்வாதிகள், வாரித்தூற்றும் இலக்கியத் தோழர்கள் இதற்கிடையில் இலக்கை நோக்கி முன்னேறும் இதழ்மீது அவரது விமர்சனக் கருத்தையும் வைக்கத் தவறவில்லை. விவாதத்தை விவாதமாகப் புரிந்துகொள்ளாமல் தனிப்பட்ட விரோதமாக உள்வாங்கிக்கொள்ளும் இலக்கியப் போக்கு உயிர்க்கொல்லி.

வாசகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பைப் பெற்றிருந்தபோதிலும் காலச்சுவடு சம்பாதித்திருக்கும் கெட்ட பெயருக்குக் காரணமென்ன என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான விடையெனத் தான் கண்டறிந்ததையும் பகிர்ந்துகொண்டார். சு.ராவின் காலச்சுவடில் ராமஜென்ம பூமி விஷயமாக ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் எழுதிய கட்டுரையும் கண்ணன் நடத்தும் இப்போதைய இதழில் பெரியார் குறித்து ரவிக்குமார் செப்டம்பர் 2004இல் எழுதிய கட்டுரையும் அதற்கான காரணங்களாக இருக்கலாமோ எனச் சந்தேகப்படுவதாகச் சொன்னார் மணா. ஜி. எஸ். ஆர். கட்டுரையில் தனக்கு உடன்பாடு இல்லை என்ற செய்தியை அதே இதழில் பதிவுசெய்திருந்தார் சு.ரா. ஆனால், ரவிக்குமார் கட்டுரை குறித்த எந்த மறுப்பையும் கண்ணன் வெளியிடாத சூழலில் அது காலச்சுவடின் கருத்தாக இருக்கக்கூடுமோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துவதாகக் கூறினார். சிறுபத்திரிகைகள் சமூக அரசியல் நெருக்கடிகளைச் சரிவரப் பதிவுசெய்யாத சூழலே நிலவுவதாகக் குறிப்பிட்டார். மணா பேசிச் சென்றவுடன் கண்ணன் மேடைக்கு வந்து மணா உரையில் தகவல் பிழை இருந்ததாகவும் தான் ரவிக்குமார் கட்டுரை அவரது சொந்த கருத்தே என்பதை இதழில் தான் பதிவுசெய்திருப்பதாகவும் தனது வெந்து தணியும் அவதூறுகள் கட்டுரை அதைக் குறித்து விரிவாகப் பேசியிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், அது நேரிடையான பதிலாகத் தென்படவில்லை. ஏனெனில் சு.ரா அதே இதழில் தெரிவித்திருந்த மறுப்பைக் கண்ணன் செய்தாரா என்பதே மணாவின் கேள்வி. நுண்ணுணர்வு கொண்ட எழுத்தாளன் ஒருபோதும் பத்திரிகை நடத்தக் கூடாது என சு.ரா நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்ததாக மணா கூறினார். உலக விஷயங்களையெல்லாம் அலசித்தள்ளும் எழுத்தாளர்கள் பெயர்களுக்கும் பிரசுரத்திற்கும் காட்டும் முனைப்பு குறித்த அதிருப்தியால் இத்தகு எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். காலச்சுவடு இதழை நடத்தியதில் மிகப்பெரிய பெருமிதம் அவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதாகவும் அவர் தெரிவித்தார். நுண்ணுணர்வு கொண்ட எழுத்தாளருக்குப் படைப்பாளிகள் தரும் பரிசு இதுதான். காலச்சுவடு வெளியிட்ட சிறப்புப் பகுதிகள் மற்றும் நேர்காணல்கள் போதுமான பங்களிப்பை இலக்கிய உலகிற்குச் செய்திருப்பதாகவும் கூறினார். ஆனாலும், அவற்றின் காரணமாகக் காலச்சுவடுமீது வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களையும் நினைவுகூர்ந்தார். இதழ் குறித்த ஆக்கபூர்வமான விமர்சனங்களை அவர் தெரிவித்திருப்பதாகத் தோன்றியது.

அடுத்து, காலச்சுவடில் வெளியான நேர்காணல்கள் தொகுக்கப்பட்ட காலச்சுவடு நேர்முகம் (2000-2003) என்னும் நூலை மணா வெளியிட இமையம் பெற்றுக்கொண்டார். காலச்சுவடு பெண் படைப்புகள்(1994-2004) என்னும் நூலை மாலதி மைத்ரி வெளியிட சுகிர்தராணி பெற்றுக்கொண்டார். லதா எழுதிய சிறுகதைகளான நான் கொலை செய்யும் பெண்கள் என்னும் நூலை சுகுமாரன் வெளியிட கவிதா பெற்றுக்கொண்டார். சந்தியாவின் முத்தம் என்னும் நூலை ஞானக்கூத்தன் வெளியிட ப்ரேமா ரேவதி பெற்றுக்கொண்டார். கவிதாவின் முதல் கவிதை நூல் இது. காலை அமர்வின் இறுதியில் பெண் எழுத்து குறித்த கலந்துரையாடலில் சுகுமாரன், ஞானக்கூத்தன், சுகிர்தராணி, மாலதி மைத்ரி ஆகியோர் கலந்துரையாடினர்.

மதிய அமர்வின் தொடக்கமாகச் சன்னல் என்ற சுந்தர ராமசாமியின் சிறுகதை நாடகமாக நிகழ்த்தப்பட்டது. முக்காலி என வசனம் வருகிறது மேடையில் வைக்கப்பட்டிருந்த ஸ்டூலுக்கு நான்கு கால்கள் இருந்தன. சிறுகதை வாசிக்கும்போது இப்படிப்பட்ட தவறுகள் நிகழ வாய்ப்பில்லை. அடுத்து, காலச்சுவடு பற்றிய விமர்சனத்தை கடற்கரய் வைத்தார். அதில் நட்பு நிழலாடியதே ஒழிய விமர்சன முகம் வெளித் தெரியவில்லை.

பின்னர், சு.ரா நடத்திய காலச்சுவடின் முழுத்தொகுப்பை ஆர். வி. ரமணி வெளியிட சிபிச்செல்வன் பெற்றுக்கொண்டார். சொல்லில் அடங்கா வாழ்க்கை காலச்சுவடு சிறுகதைகள் (2000-2003) என்னும் நூலை சல்மா வெளியிட சின்னசாமி பெற்றுக்கொண்டார். காலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம் (1994-2007) என்னும் நூலை கிருஷ்ணனாந்த் வெளியிட, குளச்சல் மு. யூசுப் பெற்றுக்கொண்டார். மதிய அமர்வில் தமிழ் ஊடகங்களில் இஸ்லாம் என்னும் கலந்துரையாடல் நிகழ்ந்தது. இதில் கிருஷ்ணனாந்த், சல்மா, ஆ . இரா. வேங்கடாசலபதி, களந்தை பீர்முகம்மது ஆகியோர் கலந்துகொண்டனர்.

காலச்சுவடு அறிவித்திருந்த விவரணப்போட்டியின் முடிவு வாசகர்கள் வேண்டுகோளுக்கிணங்க தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் கலந்துகொண்ட படங்களுள் அயோத்திதாசப் பண்டிதர் குறித்துப் பாரி. செழியன் எடுத்திருந்த ஆவணப்படத்தின் சில பகுதிகள் திரையிடப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் திரையிடப்பட்ட, நீ யார்? சு.ராவுடன் பயணித்தது போன்ற உணர்வைத் தந்தது. சக மனிதன் மீது காட்டும் வாஞ்சையும் படைப்பில் காட்டும் கறார்தன்மையும் அவருக்கான குணச்சித்திரத்தை இயல்பாக எடுத்துக்காட்டுகின்றன. சு.ராவின் கவிதையைக் காட்சிப்படுத்திய நவீன நாடகம் அந்த ஆவணப் படத்தின் பலமற்ற கண்ணி. நவீன நாடகமா எல்லா வார்த்தையையும் இருமுறை சொல்லியிருப்பார்களே என நண்பர் ஒருவர் சொன்னார். மொழி குறித்து சு. ராவிடம் தென்படும் புரிதல் இந்தத் தலைமுறைக்கான மிகப் பெரிய பாடம். இளவேனிலுடன் சு.ரா இடம்பெறும் காட்சிகள் இயல்பாகவும் அழகாகவும் பதிவாகியுள்ளன. நேர்காணப்படும் ஆளுமைகளின் பெயர் போட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும். ஏதோ வீட்டிற்கு வரும் விருந்தாளிக்குக் காத்திருந்ததைப் போல அவர் மரணத்திற்குக் காத்திருப்பதை சர்வ சாதாரணமாகப் பகிர்ந்துகொள்கிறார். மரணம் குறித்த புரிதல்தான் மற்ற எழுத்தாளர்களைப் போல வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்ற பிரம்மையில் மிதக்காமல் வயது வித்தியாசமின்றி உயர்வு தாழ்வின்றி அன்பைப் பொழிய வைத்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பிறப்பின் காரணமாக ஏற்பட்ட இலக்கியத் தாக்குதல்கள் கொள்கைகளின் காரணமாக உறவுகளின் விரோதம் இவை எல்லாவற்றையும் மீறி மனிதர்கள் மீது பிரியம் காட்டியிருக்கிறார் என்பதே அவர்மீது பிரியத்தைக் கூட்டுகிறது. சடங்குகளை மறுதலித்த அவரது வைராக்யம் குறிப்பிடத்தக்கது. அது குறித்த நேர்காணலில் ந. முத்துசாமியின் கூற்றிலும் உண்மையுள்ளது. மதம் என்ற சடங்குகள் இல்லையென்றாலும் ஏதோ ஒருவிதச் சடங்கு மனப்பான்மைக்குள் மனிதர்கள் சிக்கித் தவிப்பதை அவர் குறிப்பிடுகிறார். தனக்கே உரிய அங்கதம் தொனிக்க அசோகமித்திரன் மரணத்தின் பெயரில் நடத்தப்படும் சடங்குகள் மீது தனக்கும் நம்பிக்கையில்லை, அவை அர்த்தமற்றவை என்றார்.

அர்ப்பணிப்பு உணர்வும் செய்நேர்த்தியும் மூத்த எழுத்தாளர்களோடு மங்கிப்போய்விடக் கூடாது எனப் பயமாக உள்ளது. தனது படைப்பைத் தன்னால் தொடங்கப்பட்ட பத்திரிகைக்கு அனுப்பும்போதுகூடப் பிரசுரிக்கத் தகுதியுடையதாக இருப்பின் மட்டுமே பிரசுரிக்கவும் எனக் குறிப்பு எழுதிய சு.ரா போன்றவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை வாசகன் அளித்துவிடுகிறான். அதைப் போன்ற மரியாதையை அர்ப்பணிப்பு உணர்வற்ற, சமூக அக்கறையில்லாமல், தான் எழுத்தாளன் என்பதால் கவனிக்கப்படுகிறோம் என்ற பிரக்ஞையின்றி, சுய விருப்பு வெறுப்புகளின் வெளிப்பாடாக எழுதித் தீர்க்கும் எழுத்தாளர்களும் எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. இப்படிப்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களை இன்னும் காசு கொடுத்து வாங்குவதே அவர்களுக்கான மரியாதைதான்.

திரையிடல்களோடு நிகழ்வு முற்றுப்பெற்றது. நிகழ்வைப் பழ. அதியமானும் ஆ . இரா. வேங்கடாசலபதியும் ஒருங்கிணைத்தனர். புகழுரைகளுக்கும் மாற்றுக்கருத்துகளுக்கும் மத்தியில் தனது இடையறாத பயணத்தைத் தொடர்கிறது காலச்சுவடு.

புதன், ஜனவரி 12, 2011

வாசகன் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம்

சென்னை புத்தகக் காட்சி 2011

புத்தகங்கள் மூலம் சமூகத்தில் மாற்றங்கள் கொண்டுவர விரும்பினான் பாரதி. புத்தகங்களை வைத்துப் பல்வேறு கணக்குகள் போட்டான் அவன். எல்லாம் காற்றோடு காற்றாகக் கலந்து போயிற்று. அறிவுக்களஞ்சியங்கள் எனப் புத்தகங்கள் போற்றப்படுகின்றன. உலகமயமாதல் வழிவந்த நுகர்வோர் கலாச்சாரம் காரணமான சீரழிவு புத்தகங்களையும் விட்டுவைக்கவில்லை. முப்பத்து நான்காம் புத்தகக் கண்காட்சி சென்னையில் நடந்துவருகிறது. பதிப்பகங்கள் நல்ல அறுவடை நடத்துகின்றன. எழுத்துக்கள் நல்ல விலை போகின்றன. மேலோட்டமாக யோசிக்கையில் நல்ல விஷயம் தானே எனத் தோன்றும். ஆனால் அதன் பின்னணி குறித்து ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் ஏமாந்த வாசகனை வைத்து வலைபின்னுவதை உணர முடியும். எவ்வளவோ செலவு செய்கிறோம் புத்தகங்கள் வாங்குவதற்கா யோசிக்க வேண்டும் என்ற அப்பாவி வாசகன் தலையில் குடம் குடமாக மிளகாயை அரைக்க இந்தப் பதிப்பகங்கள் தயங்குவதே இல்லை. சமூக அக்கறையோடு தாங்கள் செயல்படுவதாக பெயர் பண்ணிக்கொண்டு வாசகனைச் சுகமாகச் சுரண்டுகின்றன அவை. ஆண்டுதோறும் புத்தகச் சந்தையில் தங்கள் வியாபாரம் கொடிகட்டுவதாகப் பறைசாற்றும் பதிப்பகங்கள் ஊழியர்கள் தங்களுக்கான சம்பள உயர்வு குறித்துப் பேசும் போது மட்டும் பஞ்சப்பாட்டு பாடத் தவறுவதே இல்லை.

பதவிக்காக அரசியல்வாதிகளைச் சுற்றி வாலாட்டியபடியே செல்லும் நபர்களுக்கும் புத்தகங்கள் போடுவதற்காக பதிப்பாளர்களுக்கு வால் பிடிக்கும் கூட்டங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அதிகாரத்திற்கான கனவு எல்லோருக்குமே இருக்கிறது. எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கார்ப்பரேட் கனவுகளோடு தாம் பதிப்பகங்களும் நடைபோடுகின்றன. ஆட்சியாளர்களின் தவறுகளைத் தட்டிக்கேட்கும் பத்திரிகைகளுக்குத் தங்கள் தவறு தெரிவதில்லை. சமூக அக்கறையோடு எழுதிய முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துக்கள் அவர்களது வாரிசுகளுக்கு அமுதசுரபியாக மாறிவிடுகிறது. எதுவும் தவறில்லை என்ற மனோபாவம் நமக்கு வந்து வாய்த்துவிட்டதால் நாம் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டு விடுகிறோம்.

அடுத்தவர் தவறு சுட்டிக்காட்டுவதில் பிரியப்படும் உள்ளங்களுக்குத் தங்கள் தவறு சுட்டிக்காட்டப்படும் போது அதை ஏற்றுக்கொள்ளும் துணிவு இருக்குமா எனத் தெரியவில்லை. அதிகாரமையத்துக்கான ஒரு வாய்ப்பாக அறிவுத்துறையும் மாறியுள்ளது நமது அவலம் என்றுதான் சொல்ல வேண்டும். புனிதமான துறைகளாக மதிக்கப்பட்ட மருத்துவம் கல்வி போன்றவற்றைத் தொடர்ந்து எழுத்துலகத்தைவைத்து காசு பண்ணும் கூட்டங்கள் அதிகரித்துவிட்டன. வாசகன் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ அய்யோ என்று போவான எனப் பாடினான் பாரதி. ஆனால் காலம் இப்போது அப்படி இல்லை. படித்தவனின் சூதும் வாதும் ஆஹா ஓஹோ எனப் புகழப்படும் காலம் இது.

சனி, ஜனவரி 01, 2011

விரையும் நகரத்தில் வீற்றிருக்கும் சிலைகள்




சென்னை வானொலி நிலையத்தில் ஒரு நிகழ்ச்சிக்கென நண்பர் பழ.அதியமான் சென்னையில் உள்ள சிலைகள் குறித்து ஒரு கட்டுரை கேட்டிருந்தார். அதற்கென எழுதப்பட்ட கட்டுரை இது.
பரபரப்பான நகரத்தினிடையே அமைதியாக இருந்தபடி நகரத்தின் நடவடிக்கைகளுக்கு மௌன சாட்சியாக இருக்கும் சென்னை நகர சிலைகள் பற்றிய தகவல்கள் சார்ந்த குறிப்புகள் இவை. மக்கள் வெகு ஜோராகப் புழங்கும் இடங்களில் கம்பீரமாய் வீற்றிருந்த போதும் எத்தனையோ ஜோடிக் கண்களில் காட்சியாகத் தெறித்து விழுந்த போதும் ஒவ்வொரு சிலைகளுக்குமான பின்னணியை அறிவதற்கு அடுத்து அடுத்து என அலைய வைக்கும் நகர வாழ்க்கை நமக்கு இடம் தருவதில்லை. தினந்தோறும் நாம் கடந்து செல்லும் இடத்தில் கொலு வீற்றிருக்கும் சிலைகள்மீது நமது கவனம் குவிக்கப்படாமல் இருப்பதற்கு அவை குறித்த தகவல்கள் நமக்குத் தெரியாதது ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு சிலை எதனால் நிறுவப்படுகிறது, சிலையாக வெயிலிலும் மழையிலும் காயும் ஆளுமையின் அருமை பெருமைகள் என்னென்ன என்பன குறித்து நாம் ஏதாவது அறிந்திருந்தால் அந்தச் சிலை மீது நம் கவனம் குவியலாம். நாடு சுதந்திரம் அடைந்து அறுபதாண்டுகள் கடந்த பின்னரும் விடுதலைக்கு முந்தைய பிரிட்டிஷார் சிலருக்கு வைக்கப்பட்ட சிலைகள் ஒன்றிரண்டு இன்னும் நகரை அலங்கரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட சிலைகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
மேஜர் ஜெனரல் சர் தாமஸ் மன்றோ
முதலில் சென்னையின் மவுண்ட் ரோட்டில் தீவுத்திடலுக்கு முன்னர் கம்பீரமாக வீற்றிருக்கும் மேஜர் ஜெனரல் சர் தாமஸ் மன்றோவின் சிலை பற்றி பார்க்கலாம். பெரும்பாலான அரசியல் பேரணிகள் இந்த இடத்திலிருந்து தான் தொடங்குகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும் தகவலே. சிலையாக குதிரைமீது கம்பீரமாக அமர்ந்தபடியிருக்கும் தாமஸ் மன்றோ 1820 முதல் 1827வரை சென்னை மாகாண கவர்னராக இருந்துள்ளார். பொதுவாக குதிரை மீது அமர்ந்துள்ள நிலையில் போர்வீரர்களுக்குத் தான் சிலை வைக்கப்படும். ஆனால் போர்வீரனாக இல்லாவிடினும் சான்றோனாக உயர்ந்த குணமுடையவனாக இருப்பவனைத் தங்களுக்குச் சமமாகக் குதிரைமீது அமரவைத்து அழைத்துச் செல்வது ரோமாபுரி அரசர்களின் பழக்கம். இத்தகு சான்றோர்களின் சிலைகளுக்கு ஈக்வெஸ்ட்ரியன் சிலைகள் என்பது பெயர். இத்தகையதொரு சிலை தான் தாமஸ் மன்றோவினுடையது. புராதன கால ரோமர்களின் சிற்ப சாத்திரத்தையொட்டி உருவான சிலை இது. இத்தகு சிலைகள் உலகில் நான்கு ஐந்து இடங்களில் மட்டுமே உள்ளதாகத் தெரிகிறது. இச்சிலையை லண்டனின் எஃப் சான்ட்ரீ என்பவர் 1838இல் உருவாக்கியுள்ளார். இச்சிலையின் பெரிய குறையென குதிரையில் ஏற அவசியமான சேணம் வடிவமைக்கப்படாதது சொல்லப்படுகிறது. இக்குறை காரணமாக மன அவஸ்தைக்குள்ளாகி இச்சிற்பி இறந்ததாகவும் கூறப்படுகிறது.
மே 25, 1761இல் பிறந்த மன்றோ ஒரு சிப்பாயாக 1780இல் சென்னை வந்தார். தனது அயராத உழைப்பால் படைத்தலைவன் ஆனார். கம்பெனி நிர்வாகத்தில் இழைக்கப்படும் அநீதிகளை இவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறினார். சென்னை மாகாணத்திற்கு முதன்முதலில் ஓர் எல்லையை நிர்ணயித்து அதற்கு உருவம் கொடுத்தவர் மன்றோதான். விவசாயத் துறையில் ரயத்வாரி திட்டம் என்ற முக்கியமான சீர்திருத்தத்தை இவர் கொண்டுவந்தார். விவசாயிகளுக்குத் தங்கள் நிலத்தில் சகல உரிமைகளையும் வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம். கிராமப் பஞ்சாயத்து முறைக்கும் உயிரூட்டியவர் இவரே. 1827ஆம் ஆண்டு ஜூலையில் பெல்லாரிக்கு அருகிலுள்ள பெட்டிகொண்டா என்னும் கிராமத்தில் இவர் காலமானார்.
மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்
அடுத்ததாக ஐந்தாம் ஜார்ஜ் மன்னரது சிலை. பூக்கடை காவல் நிலையத்திற்கருகே ஆஜானுபாகுவான இவரது முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஜார்ஜ் டவுன் என அழைக்கப்படும் இந்த இடத்திற்கு வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் பிளாக் டவுன். இந்தக் கறுப்பர் நகரம் என்ற பெயரை எப்படியாவது மாற்ற வேண்டும் எனப் பாடுபட்டவர் விவேக சிந்தாமணி என்னும் தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியரான சி.வி.சுவாமிநாதய்யர். 1906இல் ஜார்ஜ் இளவரசராக இருந்தபோது சென்னைக்கு வருகை புரிந்தார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தற்போது சிலை இருக்கும் இடத்தில் நடைபெற்ற விழாவில் பிளாக் டவுன் என்னும் பெயர் ஜார்ஜ் டவுன் என மாற்றப்பட்டது. 1910இல் ஜார்ஜ் மன்னரானார். இவருக்கு 1911இல் சிலை வைக்கப்பட்டபோது சிலையை தற்போதைய இடத்தில் வைக்கும்படி யோசனை கூறியதும் சுவாமி நாத அய்யர்தான். இந்தச் சிலை கோவிந்தாஸ் சத்தூர்பூஜாதாஸ் என்பவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
ஐந்தாம் ஜார்ஜ் மன்னரது ஆட்சியின் வெள்ளி விழாவையொட்டி யுத்த வெற்றி நினைவுச் சின்னத்திற்கு அருகே மற்றொரு சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலை தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நன்கொடையில் உருவாக்கப்பட்டது இச்சிலை. இதே போன்று சென்னை ராஜாஜி ஹால் இருக்கும் எஸ்டேட்டில் ஏழாவது எட்வர்டு மன்னருக்குச் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சிலையும் தற்போது சென்னை அருங்காட்சியகத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது.
லார்டு ரிப்பன்
சென்னை கார்ப்பரேஷன் கட்டடத்தில் நுழைந்தவுடன் இடப் பக்கத்தில் கிழக்கே பார்த்து பிரம்மாண்டமாக நிற்கும் சிலை லார்டு ரிப்பனுடையது. ரிப்பன் எங்கள் அப்பன் என இந்தியர்களால் பிரியத்தோடு அழைக்கப்பட்ட இவரது சிலை முதலில் மவுண்ட் ரோட்டில் இருந்ததாம். அப்போது ரவுண்டானா என அழைக்கப்பட்ட இடத்தில் பதினாறு கால் மண்டபத்தின் முகப்பில் இருந்திருக்கிறது இச்சிலை. அம்மண்டபம் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் 1928இல் அது இடித்துத்தள்ளப்பட்டது. அப்போது சிலை அருகே நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கேயும் அது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததால் சிலையை கார்ப்பரேஷன் கட்டடத்திற்கு மாற்றியுள்ளனர். 1827, அக்டோபர் 24 அன்று பிறந்த லார்டு ரிப்பன் ஜூலை 9, 1909வரை உயிர் வாழ்ந்தார். 1880இலிருந்து 1884வரை இந்திய வைஸ்ராயாக இருந்துள்ளார். இங்கிலாந்து அனுப்பிவைத்த வைஸ்ராய்களில் மிகவும் புகழ்பெற்றவர் இவர். நீதித்துறையில் நிலவிய இனப்பாகுபாட்டை ஒழிக்க முயற்சியெடுத்தது, நாட்டுமொழி செய்தித்தாள் சட்டத்தை திரும்பப்பெற்றது, தல சுய ஆட்சியை அறிமுகப்படுத்தியது, மைசூரைத் திரும்ப வழங்கியது போன்ற நடவடிக்கைகள் இந்தியர்களிடையே அவரது புகழை மேலும் உயர்த்தியது.
விக்டோரியா மகாராணி
சென்னை பல்கலைக்கழக வளாக செனட் மண்டபத்தின் தெற்குப் புறத்தில் விக்டோரியா மகாராணியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது இங்கிலாந்தில் வடிக்கப்பட்டு இங்கே கொண்டுவரப்பட்டது. சலவைக்கல்லால் ஆன சிலை இது. விக்டோரியா மகாராணி சக்ரவர்த்தினியாக பதவி ஏற்றபோது இந்தியர்களுக்கு மத சுதந்திரம் அளித்துப் பிரகடனம் செய்தார். இதற்கான நன்றிக்கடனுக்காகவே இச்சிலை வைக்கப்பட்டுள்ளது.
டாக்டர் அன்னிபெஸண்ட்
அடுத்து, டாக்டர் அன்னிபெஸண்ட் சிலை. இவரது திரு உருவச் சிலை சென்னை விவேகாநந்தர் இல்லத்தின் அருகே கடற்கரைக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்திய விடுதலைக்காகப் போராடிய ஐரிஷ் மாதரசியின் சிலை இது. அன்னிபெசண்ட் 1847 அக்டோபர் 1 அன்று லண்டனின் க்ளாஃபார்மில் பிறந்தவர். 1916இல் ஹோம் ரூல் இயக்கத்தை தொடங்கியவர். த சீக்ரெட் டாக்ட்ரின் என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரை பாரிசில் 1889 ஆம் ஆண்டில் சந்தித்தார் அன்னிபெசண்ட். இது இவரது வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திக வாதத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சபையில் உறுப்பினரானார். இதனை அடுத்து மார்க்சியவாதிகளுடன் தனக்கிருந்த உறவுகளைத் துண்டித்துக்கொண்டார். 1891 இல் பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்து பிரும்மஞானத்தில் ஒரு முக்கிய புள்ளியானார் அன்னி பெசண்ட். அச்சபையின் சார்பில் 1893 ஆம் ஆண்டில் சிகாகோவில் இடம்பெற்ற உலக கொலம்பிய கண்காட்சியில் கலந்து கொண்டார். 1893 ஆம் ஆண்டில் பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக இந்தியா வந்தார் அன்னிபெசண்ட் அம்மையார். சென்னை அடையாரில் பிரும்மஞான சபையின் தலைமை நிலையத்தை நிறுவினார். சென்னையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து இந்தியாவின் சுதந்திர இலட்சியத்துக்காக, ஆன்மிக மறுமலர்ச்சிக்காக பாடுபட்டவர் அன்னிபெஸண்ட் அம்மையார். காசியில் இவர் தோற்றுவித்த ஹிந்து கல்லூரிதான் பிற்காலத்தில் காசி ஹிந்து பல்கலைக்கழகமாக பிரசித்தி பெற்றது. செப்டம்பர் 20, 1937 அன்று அடையாரில் காலமானார் அன்னிபெசண்ட் அம்மையார்.