இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜனவரி 31, 2010

செவ்வாய் தோஷம்

சுருங்கிய தோல் படிந்த முகத்தின்
உலர்ந்த உதடுகளால்
ஒத்தடம் போல்
புறங்கையில் முத்திடுவாள்
ஆச்சி

நெகிழ்ச்சிமிகு தருணங்களில்
ஆவிசேர்த்தணைத்து
திலகமாய்
நெற்றியில் முத்துவாள்
அம்மா

உற்சாகப் பொழுதுகளில்
வார்த்தைகள் வலுவிழக்க
இறுக்கியணைத்து
உதடு குவிப்பர்
நண்பர்கள்

யாருமறியாமல்
சூடான சுவாசம் கலந்து
இதழெட்டும் இடங்களில்
ஊற்றி மகிழ்வாள் முத்தத்தை
அந்த அக்கா

இவையெல்லாம்
இறகுகளாய் மிதக்க
நெஞ்சை அழுத்துவதோ
அவள் தராமல்போன
ஒற்றை முத்தம்

(அடப்பைத்தியக்காரா நீயெல்லாம் திருந்தவே மாட்டியாடா)

வெள்ளி, ஜனவரி 29, 2010

ஒரு மருத்துவமனைக் குறிப்பு

இந்த மருத்துவமனைக் குறிப்பு உங்களில் பலரது அநுபவமாக இருக்கலாம். எல்லோருக்குமே இதைப் போன்ற சமயத்தில் வரும் எரிச்சலும் கோபமும் எனக்கும் வந்தது. உங்களுக்கெல்லாம் செய்வதற்கென நிறைய வேலைகள் உள்ளதால் இதைத் துடைத்துப்போட்டு விட்டுப் போய்விடுகிறீர்கள். உருப்படியான வேலை இல்லாததால் கொஞ்சம் அதிகமாகப் புலம்புகிறேன். அவ்வளவுதான். மேலும் இப்போதான ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேன். புதுச் செருப்பு. புதுப் பொண்டாட்டி. புது பைக். விஷயம் அது தான். அட உருப்படாமப் போறவன எதோ குறிப்பு கிறிப்புன்னியே அது என்ன எழவுடான்னு உங்களுக்கு ஒரு கோபமாவது வரணும். வரும் ஆனா வராது அதுதான நம்ம நிலைமை.

பொங்கலுக்கு முந்தைய தினம். இயல்பா விடியல எனக்கு. இந்தக் காலத்துல யாருக்குடா தம்பி நல்லா விடியுது. எல்லாருக்கும் அப்படித்தாண்டா தம்பி. பொறுத்துக்கோடா அப்படின்னுல்லாம் சொல்ல ஆள் யாரும் இல்ல. ஆங் எங்கவிட்டேன். திடீர் திடீர்னு எல்லாம் மறந்துபோயிருது. என்ன வியாதியோ தெரியல. எதாவது ஹிந்தி படம் எடுத்தாத் தான் தெரியும் இதோட பேரு. இப்போதைக்கு ஞாபகம் வந்துட்டுது. காலையிலயே உடம்பெல்லாம் வலிக்கிற மாதிரி இருந்தது. காய்ச்சல் வேற லேசா இருந்தது. எதையும் சுத்தி வளைத்துச் செய்வதில் நான் சமர்த்துன்னு பேர் வாங்கியவன். பக்கத்துலயே எதாவது ஒரு டாக்டரப் பாத்திருந்தா அவரும் இந்தக் காய்ச்சல் அந்தக் காய்ச்சல்ன்னு சொல்லி ஊசியப்போட்டு அனுப்பி இருப்பாரு. ஒருவேளை சரியாகி இருக்கலாம். ஆனால் அதை நான் செய்யல. வழக்கமாகப் பார்க்கும் ஹோமியோ டாக்டரைத் தான் பார்ப்பேன்னு அடம் பிடித்து அவரைப் பார்க்கச் சென்றேன். மிக நிதானமான டாக்டர் அவர். பாம்பு கடித்தே சென்றால் கூட கண்மூடி யோசித்து உதட்டுல பேனாவில் தட்டி தட்டி ஆறேழு மருந்து எழுதுவது அவர் பழக்கம். ஆனால் நானோ சாதாரணக் காய்ச்சலுக்காகத் தானே சென்றேன். வழக்கம் போல அவரும் மருந்து கொடுத்தார். மருந்தோ அவரைவிட நிதானம். காய்ச்சலோ நமீதாவைப் பார்த்த விடலைமாதிரி சூடு சும்மா ஜிவ்வுன்னு ஏறியிருச்சு.

மதியம் மூணு மணி வரை அவர் கொடுத்த மருந்தை சாப்பிட்டுக்கொண்டே இருந்தேன். பலனில்லை. காலையிலிருந்தே ஒண்ணும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் மருந்தைச் சாப்பிட்டதாலோ என்னவோ மூன்று மணியையொட்டி வாந்தி எடுத்துவிட்டேன். வாந்தி எடுத்தால் தலைவலி சரியாகும். காய்ச்சலும் விடக்கூடும் என்று வாய்க்குள் கையை விட்டு வாந்தி எடுத்தேன். லேசான இரத்த நிறத்தோடு வாந்தி வர அவ்வளவுதான். ஓ ராமா என அம்மா அலற... நமது திரைப்படங்கள், சீரியல்கள் புண்ணியத்தில் ஏதோ பெரு வியாதி மகனுக்கு எனப் புலம்பத் தொடங்க என்ன செய்வது என்ற குழப்பம் எனக்கு. இனி அவர்கள் வழியில் செல்வது மட்டும் என் முன்னே இருந்த வழி. அருகிலேயே இருக்கும் 24 மணி நேர கிளினிக் செல்லலாம் என முடிவு செய்தோம். அதற்குள் நண்பர் பழனி நண்பர் ஜின்னாவுக்கு தகவல்தர அவர் ஆட்டோ எடுத்து வந்துவிட்டார் வீட்டுக்கு. இந்த விரைவு நடவடிக்கைகளுக்கு அம்மா தெரிவித்த தகவலான ‘ப்ளட் வாமிட்’ தான் காரணம் என்பது பின்னால் தெரிந்தது.

போன உடனே அங்கே மருத்துவமனை வராண்டாவில் செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்துக்கொண்டிருந்த இளவட்டம் ஒருவரிடம் டாக்டர் இருக்கிறாரா எனத் தங்கை வினவ. அவர் உள்ளே அழைத்துச் சென்றார். டாக்டருக்கென இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். அவர் தான் டாக்டர் என்று இப்போது நான் சொன்னால் அது சீரியல் டயலாக் போல் ஆகிவிடும். நான் ஹோமியோ சென்று வந்த கதையைச் சொல்லி முடிப்பதற்குள் தங்கை அவள் பங்கிற்கு ப்ளட் வாமிட் பற்றிச் சொல்லவும் கார்த்தி மீது ஒட்டிக்கொண்ட ரீமாசென் போல் பச்சக்கென ஒட்டிக்கொண்டார் டாக்டர். டிபிஆ அதுவா இதுவா என கேள்விகளை அடுக்கியதோடு ஹோமியோ மருத்துவத்தில் ஸ்டீராய்டு கொடுப்பாங்க என்ன மருந்து கொடுத்தோம் என்பதையும் சொல்ல மாட்டாங்க என அங்கலாய்த்தார். உடனே அட்மிட் பண்ணனும் எனச் சொன்னார். காய்ச்சல் நேரத்தில் குளுகோஸ் ஏற்றினால் ஒத்துக்கொள்ளுமா என தங்கை அவளது சந்தேகத்தைக் கேட்கவும். அது குளுகோஸ் இல்ல அது ஒரு fluid அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள் என எரிச்சல் பட்டார். வராண்டாவில் கேட்ட கேள்விக்கு எதிர்வினையோ என்னவோ.


அடுத்த கட்டமாக ப்ளட் டெஸ்ட்டுக்கு ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சினாங்க. மலேரியா பாஸிடிவ்ன்னு சொன்னாங்க. அது பசிக்கு ரத்தத்தை உறிஞ்சிருக்கு கொசுவும். உறிஞ்சுதல் எல்லாமே பிழைப்பின் நிமித்தம் தானே. மாடியில் ஒரு ரூமில் கொண்டு படுக்கவைத்தார்கள். கதவைத் திறந்ததும் எதிரே ஒரு அலமாரி மூடியிருந்தது. அதன் பக்கத்திலிருந்த கட்டிலில் படுத்தேன். மூடியிருந்த அலமாரி அலமாரியல்ல அது தான் டாய்லட் என்பது பின்னர் தெரிந்தது. தலைமாட்டுக்கு பக்கத்தில் இருந்த சன்னலில் நெட் லான் கொசுவலை அடிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த emergency exit வழியே ஏகப்பட்ட கொசுக்கள் வந்த நோயாளியை நலம் விசாரிக்க ஆலாய்ப்பறந்தன. நோயாளிகளை ஆஸ்பத்திரியின் நிரந்தர வாடிக்கையாளர் ஆக்குவதே கொசுக்களின் நோக்கம் போலும். அவர்களின் யூனியனுக்கும் மருத்துவமனைக்கும் ஏதோ ஒரு அண்டர்க்ரவுண்ட் ஒப்பந்தம் இருக்கலாம். யாரறிவார்? படுத்தபடியே பார்பதற்கு வசதியாக நேரெதிரே ஒரு டிவி. நோய்த் தன்மையை நோயாளி மறந்து வீட்டில் இருப்பதைப் போன்ற ஒரு சூழல் உருவாக்க அது உதவியது. அதற்கும் சேர்த்துத் தான் பில்லும் பழுக்குமே.


சகட்டுமேனிக்கு ஊசிகள் போடப்பட்டன. என்ன ஊசி எதற்கு அது என்பதெல்லாம் சத்தியமாக எனக்குத் தெரியாது. முழுமையாக ஒரு நாள் அந்த மருத்துவமனையில் இருந்தேன் நான். Duty டாக்டர் ஒரே ஒரு முறை வந்தார். ரொம்ப வீக்கா இருக்கீங்க. நல்லா சாப்பிடுங்க. இட்லி இடியாப்பம் போன்ற அவித்த உணவு வகைகள் சாப்பிடுங்க என்றார். அவ்வளவு தான். பில் வந்தபோது அதற்கான தொகை 350ரூ. படித்தால் மருத்துவம் தான் படிக்க வேண்டும். சாப்பிடச் சொன்னதற்கே 350ரூ வாங்க முடிகிற தொழிலாக இருக்கிறதே.


மருத்துவமனையிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதற்கு மூளையைக் கசக்க வேண்டியிருந்தது. அய்யா சாப்பிட்டு நாலு நாளாச்சுய்யா எனும் ரீதியில் பஞ்சப் பாட்டுப்பாடி கெஞ்சிக்கூத்தாடி கிட்டத்தட்ட மூவாயிரம் ரூபாயை கட்டி முடித்து வெளியில் வந்து சுதந்திரக் காற்றைச் சுவாசித்தேன். மலேரியான்னு சொன்னாங்க. என்ன மருத்துவம் தந்தாங்கன்னு தெரியாது. எந்தவிதமான ரிப்போர்ட்டும் தரவில்லை. பதில் தெரியாத பல கேள்விகள் நம்மிடம் இருந்தும் டாக்டர்கள் கேள்விகள் மட்டுமே கேட்கத் தெரிந்த தருமிகளாகவே திரிகிறார்கள். இந்த இந்த வியாதி இதனால் வருகிறது. உங்களுக்கு வந்த வியாதி இது. இதன் காரணம் இது. இதைத் தவிர்க்க இதையெல்லாம் செய்யலாம். இதற்கான மருந்து இது. இந்த மருத்துவத்தைத் தான் உங்களுக்கு தந்திருக்கிறோம். இப்படியான தகவல்களை ஏன் எந்த மருத்துவரும் சொல்வதில்லை. எல்லாவற்றையும் வெளியே சொல்லிவிட்டால் அவர்களது மரியாதை குறைந்துவிடும் என்ற பயமா அல்லது படித்த திமிரா எனக் கேட்க நினைத்தும் கேட்கவில்லை. இப்படி பதில் சொல்லாமல் இருப்பதும் ட்ரீட்மெண்ட் தானோ டாக்டர் என ஒரு தெனாலிக் கேள்வி மட்டும் எவ்வளவு அடக்கியும் அடங்காமல் வந்து விழுந்துவிட்டது. பதில் சொல்லத் தெரியாத தருமிகள் சொல்வார்களா?

புதன், ஜனவரி 20, 2010

பேசும் கண்கள்

மீன்களின் மொழி நீர்ப்பரப்பில் எழுதப்படுகிறது

குடிகாரக் கவிஞனின் உளறலோடு
குழந்தையின் மழலையும்
குமரியின் குறும்பும்
கலந்த
மொழியது

கூர்ந்த அவதானிப்பைக் கோரி நிற்கும்
அம்மொழி
அடுத்தடுத்த
புள்ளிகளில்
தோன்றி மறைவதால்
சிறு கவனக் குறைவும்
தவறான புரிதலுக்கு வழிவகுக்கும்

தம் மொழி பற்றிய பிரக்ஞையற்று
தம்மைச் செரிக்கக் காத்திருக்கும்
இரைப்பைகள் குறித்த வருத்தங்களை
எழுதிச்செல்கின்றனவோ
நீரில் மீன்கள்

திங்கள், ஜனவரி 11, 2010

அறிவுப் புரட்சி 2010



சென்னைப் புத்தகக் காட்சி 2010 கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய்க்கு விற்பனை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறதாம். நல்ல வியாபாரம் தான். புத்தகக் காட்சிக்குச் செல்பவர்களில் பெரும்பாலான பேர் புத்தகங்களை வாங்கிக் குவிக்கின்றனர். கூட்டம் கூட்டமாக நண்பர்களோடோ குடும்பத்துடனோ வந்து அள்ளிச் செல்கின்றனர். வீடுகளில் தனித்தனியாக அலமாரியில் அடுக்கி வைத்துக்கொள்ளலாம். வந்து பார்ப்பவர்கள் பிரமிப்போடு பார்ப்பார்கள். அலமாரித் தொழிலும் வளரும். புத்தக உற்பத்தி பெருகும். அறிவுப் புரட்சி விண்ணை முட்டும். எழுதித் தள்ளிய எழுத்தாளர்களது எண்ணங்கள் தொடர்ந்து பொங்கியபடியே இருக்கும். அறிவுப்பசிக்கு தீனிபோட மாட்டாமல் அச்சகங்களும் இணையமும் விழிபிதுங்கும். இணைய தளங்களில் புத்திசாலி எழுத்தாளர்கள் சாமர்த்திய சண்டைகளைத் தொடருவார்கள். அறிவுக் களஞ்சியங்களைப் பின்தொடரும் வாசக வட்டங்கள் பூதக் கண்ணாடி கொண்டு அர்த்தம் தேடி அலையும். அறிந்தோ அறியாமலோ குழாயடிச் சண்டையைக் கூடிக் களித்த சந்தோஷம் கிட்டும். சண்டையை மற்றவர்கள் பார்ப்பதால் வீறு கொண்டு வீர வசனங்களை இலக்கியத் தரத்தோடு வெளிப்படுத்தி மகிழ்வர் எழுத்தாளப் பிரம்மாக்கள். படைப்பதனால் நான் இறைவன் பாடிய கண்ணதாசனுக்கு ஐய்யோ.

உலகெங்கிலும் சிதறுண்டு கிடக்கும் தமிழ் வாசகப் பரப்புக்கு இலக்கிய சுகம் தர சதா உழைத்துக்கொண்டே இருக்கும் எழுத்தாளனை இன்னும் தமிழகம் சரியாகப் புரிந்துகொள்ளாத வருத்தத்தால் எரிச்சலால் அவர்கள் தமிழகத்தில் பிறந்த அபத்தத்தை தமிழ் வாசகன் தலையிலேயே கொட்டுகிறார்கள். சினிமாவில் வெளிப்படும் வடிவேல் வழி வந்த அநியாயத்திற்கு நல்லவர்கள் அவ்வளவையும் தாங்கிக்கொண்டு பின்னூட்டம் அனுப்புகிறார்கள். வாய்ப்புக் கிடைக்கும்போது எழுத்தாளர்களின் பாதம் பட்ட மண்ணை எடுத்துப் பூசிக்கொள்கிறார்கள். இதையெல்லாம் காணச்சகிக்காமல் தானே எழுத வந்தார்கள் என எண்ணும் பைத்தியக்காரர்கள் இருக்கலாம். அப்போது அவர்கள் வாசகர்கள். இப்போது அவர்கள் எழுத்தாள பிரம்மாக்கள். இதைப் புரிந்துகொள்ள வேண்டும் ஞானசூன்யங்கள். எழுத்தாளர்கள் என்பவர்கள் யார்? கருத்துகளை உருவாக்குபவர்கள். ஆய்வுகளை மேற்கொள்பவர்கள். புண்ணாக்கு பற்றி எழுதினாலும் அவற்றின் அத்தனை வரலாற்றோடு அக்கு வேறு ஆணி வேறாக புண்ணாக்கை மேய்ந்து விடுபவர்கள். அவர்களின் அறிவைக் கண்டு அரண்டுபோய் அப்படியே பின் தொடர்வதைத் தவிர வேறென்ன செய்வான் வாசகன்.

இவையெல்லாம் வெற்றுப்புலம்பல்கள். இது வியாபார உலகம். சந்தையில் எல்லாமும் விற்கப்படும். சந்தையில் கிடைக்காத பொருள்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவது தான் நல்ல சந்தை. வாங்குவதற்கு ஆள் உள்ள போது எதையும் யாரையும் விற்கலாம். மனிதர்களை விற்கும் சந்தை இருந்தால் அங்கே வியாபாரத்தைப் பெருக்க மகளை மகனை மனைவியை குடும்பத்தினரை விற்கலாம். அச்சந்தையை ஒட்டி தத்து எடுப்பது பெருகலாம். பலபேரை ஒருவர் மணக்கலாம். எல்லாம் சந்தைப் பொருள்கள். புத்திசாலி மட்டுமே நல்ல விற்பனையாளனாவான். பாரதியும் தான் கணக்குப் போட்டான். அவனுக்கு வியாபாரம் தெரியவில்லை. அல்லது அது வியாபாரத்துக்கான தருணம் இல்லை. ஆனால் அவனது பொருள் சந்தை மதிப்பு மிக்கது என்பது இப்போது புரிகிறது. வாங்கத் தெரிந்தவன் வாங்கும் தகுதி உள்ளவன் வாங்கித் தள்ளும்போதே விற்கத் தெரிந்தவன் விற்பது தானே முறை. இதிலென்ன தவறு. இன்னும் சமூக அக்கறை அது இதுவெனப் பேசி வீணாய்ப்போனவர்களைக் கழுவிலேற்றுங்கள். சந்தையில் கலகத்தை உண்டுபண்ணும் அவர்களுக்குப் பைத்தியக்காரர்கள் என்ற பேட்ஜைக் குத்திவிடுங்கள் மற்றவற்றை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். வாழ்க பாரதி! வாழ்க காந்தி! வாழ்க பாரத moneyத்திருநாடு!