இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், செப்டம்பர் 24, 2009

செந்தமிழே வணக்கம்

செந்தமிழே வணக்கம்...னு தொடங்கும் இந்தப் பாட்டு ஊர்ல எல்லா விஷேச வீட்டுலயும் மொத பாட்டா இருக்கும். உங்கள் வீட்டில் நடக்கும் கல்யாணம் சடங்கு மற்றும் சகலவிதமான வைபங்களுக்கும் சிறந்த முறையில் ஒளி ஒலி அமைக்க நீங்கள் நாட வேண்டியது ... ஒலி ஒளி அமைப்பகம் எனப் பேசிய கிராமத்தானுக்கு கருணாநிதி, பாரதிராஜா கனவுகள் தானே இருந்திருக்கும் மனதில். ஒரு சில ராசைய்யாக்கள் தானே இளையராஜாக்கள் ஆகின்றனர். ஏனையோர் எங்கே? வாழ்வின் சிலந்தி வலையில் சின்னாபின்னமாகி விட்டனரோ? இந்த மாதிரியான நினைப்புனால தான் இந்த வலைப்பதிவைத் தொடங்கனும்னு நினைத்தேன். (நீ நென, நன... காயப்போடு! அதைப் பத்தி எங்களுக்கு என்ன?)

நான் கொஞ்சம் மொக்கப் பார்ட்டி தான். சீரியஸ்ஸா எதையும் எனக்கு எழுதத் தெரியாது .எழுதவே தெரியாதுங்கறதுதான் உண்மை. ஆனா ஆசை மட்டும் வந்துருச்சு. ஆஹா வந்துருச்சு ஆசையில் ஓடி வந்தேன் வாடி என் கப்பங்கிழங்கேன்னு ஆரம்பிச்சுட்டேன். முன்னோடிகளோட ஆசிர்வாதத்தோட (பெரியப்பாட்ட கோட்ட எடுத்துட்டு ஓடின பாரிஸ்டர் ரஜினி மாதிரியான ஆசிர்வாதம்தான்) உங்கள அடிக்கடி (பயப்படாதீங்க! சொல்லுவேன் ஆனால் செய்ய மாட்டேன்.) சந்திக்கிறேன். பிள்ளையார் சுழியாக நான் எழுதிய சில காதல் (என்ன கண்றாவியோ) கவிதைகளைப் படிச்சுப்பாருங்க. (கிழிக்க முடியாதுல்ல...கிளம்பிட்டேன்யா கிளம்பிட்டேன்) எவ்வளவு நாள் தான் அதை நான் மட்டுமே படிச்சிட்டு இருக்கிறது. (இப்ப மட்டும் என்னவாம்)

நீ

என்னுள் நிலமதிர

நடக்கின்றாய்.

நான்

உன்னுள் பூனை போலாவது

நகர்கின்றேனா?

(திருட்டுப்பய வேற எப்படிப் போவான்)


எனக்கு

உன் மீது காதலில்லை

நிச்சயமாய்த் தெரியும்.

ஆந்தைகளும், வௌவால்களும்

அலையும் அர்த்த ராத்திரியில்

உன் இல்லத்தை

வலம் வந்த பின்பே

படுக்கைக்குள் சுருள்வதின்

பொருள் மட்டும் புரியவில்லை.

(தூக்கத்துல நடக்குற வியாதிடா சனியனே)


வந்த மணித்துளிக்கும்

வருவதாய்ச் சொன்ன மணித்துளிக்கும்

இடைப்பட்ட கணத்தில்

கடந்துபோன கடிகார முட்கள்

உதிர்த்துப்போன அமிலத்துளிகள்

உனது புன்னகை பூசிய

மன்னிப்பால்

ஒருபோதும் உலர்ந்து போகா.

(டேய் கிரிமினல் நீ எதுக்கு அடி போடுறன்னு தெரியுதுடா)


தொட்டுக்கொள்ளும் தூரத்தில்

தொடமுடியாத சோகத்தில்

தண்டவாளங்கள்!

(தட தடன்னு ரயில் ஓடுற தண்டனை போதாதா தண்டவாளத்திற்கு)

இந்தக் கவிதைகளைப் பார்த்து எரிச்சலாகி அடிக்க வராதீங்க. இது அறியாப் பருவத்துல தெரியாம செஞ்ச தவறு. எப்போதுமே நாம செஞ்ச தப்ப முதல்ல சொல்லிர்றது நல்லதுதான அதனால சொன்னேன். மற்றவற்றைப் பிறகு பார்க்கலாம். பயப்படாதீங்க. துணிச்சலோடு தொடர்ந்து வாங்க. கவிதையெல்லாம் (தைரியம்தான்) இனிவராது. ஆமா நீங்க இனி வருவீங்களா?

ஒரு சுய தம்பட்டம்


நீங்கள் தெரியாத்தனமாகவோ முகதாட்சனியத்துக்காகவோ இப்பக்கத்திற்கு வந்திருக்கலாம். ஒருவேளை இப்பக்கத்தைப் படிக்கவும் கூடும். ஒரு நம்பிக்கைதான். அப்படிப் படிக்கும் உங்களுக்கு என் வணக்கம். வணக்கத்துக்கே இவ்வளவு சுத்தி வளைக்கானேன்னு வெறுத்துப் போயிறாதீங்க. என்னைப் பற்றி சொல்ல பெருசா எதுவும் இல்லை. கொஞ்சமாவாது சொல்லணுமேங்கிறதால சொல்றேன்.

ஸ்கூல் படிப்பு திருநெல்வேலி மாவட்டம், தென்காசி தாலுகாவிலுள்ள இலஞ்சி கிராமத்துல. வேலை கிடைச்சிடுச்சுன்னு ஒரு படம் வந்தது. அந்தப் படம் எங்க ஊர்லதான் ஷூட் பண்ணாங்க. பச்சைப் பசேல்லுன்னு இருக்குற அந்தக் கிராமத்துல பிழைக்கத் தெரியாம (எங்க போனாலும் எனக்குப் பிழைக்கத் தெரியாது) எப்போதும் தகிக்கிற பட்டணம் வந்து சேர்ந்தேன். காலேஜ் படிப்பு கீழக்கரை முகம்மது சதக் இஞ்சினியரிங் காலேஜ்ல. ஸ்கூல்லயோ காலேஜ்லயோ காதல் செய்ய வாய்ப்பு இல்ல. ஸ்கூல் கோயட் தான். நமக்குத் தான் எந்தக் குடுப்பினையும் இல்ல. காலேஜ்ல பசங்க மட்டும்தான். பாடம் நடத்த சில பெண்கள் வந்துட்டுப்போனது அழியாத கோலங்களா மனசுல இருக்கு. குரு தெய்வம்தான் ஆனால் பலர் அநியாயத்துக்கு அழகான தெய்வங்களா இருந்தது யார் குற்றம்? இதெல்லாம் உருப்படவா என சில நல்லவர்கள் முணுமுணுக்கலாம். என்ன செய்ய ஆசையும் அவதியும் இறைவன்செயல்.

மெட்ராஸ் வந்த பிறகு, அப்பல்லாம் மெட்ராஸ்தான் இப்பதான் சென்னை, மந்தைவெளி, ஆவடி, பழவந்தாங்கல் போன்ற பல இடங்களில் தங்கியிருந்தேன். கடைசியா இப்போ திருவல்லிக்கேணியில் வாசம். டிகிரி முடித்து கிட்டத்தட்ட பதினைந்து வருஷம் ஆகிய போதும் சொல்லிக்கொள்ளும் படியான ஒரு வேலை கிடையாது எனக்கு. அதற்கான முயற்சியும் கிடையாது என்னிடம். ஏதாவது ஒரு உப்புமா கம்பெனியில் கிடைக்கும் ரவை தூவும் வேலையைக் கிடைப்பதற்கரிய சிறப்பான வேலையாய் செய்வேன். எதன் மேலும் பெரிய மரியாதையோ விருப்பமோ இல்லாத ஒரு வாழ்க்கையே எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை விருப்பமாகவே வாழ்கிறேன் அல்லது அப்படி நினைக்கிறேன். சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளே ஜால்ராவை சுருதி சுத்தமாக இசைக்கிறார்கள். எனவே ஜால்ரா ஒரு சிறந்த கருவி என்பது புரிந்தும் அதை இசைக்கக் கற்றுக்கொள்ளாமல் வாழ்க்கையை வீணடித்துவிட்டேன். கூடிய விரைவில் கற்றுக்கொள்வேன் என நம்புகிறேன்.

நான் புத்திசாலி என நினைத்து ஒவ்வொரு செயலையும் செய்கிறேன். ஆனால் விதியோ தொடர்ந்து நான் முட்டாள் என்பதை நிரூபித்துச் செல்கிறது. விதிக்கும் எனக்குமான கண்ணாமூச்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தொடந்து தோற்றபோதும் வெற்றிவரும் என்ற நம்பிக்கையில் சூதாடும் ஒரு சூதாடி நான். வெற்றியோ தோல்வியோ விளையாடப் பிடித்திருக்கிறது. விளையாடுகிறேன். (ஓவர் பில்ட்டப்பாத்தான் இருக்கு)