இயக்குநர் விருமாண்டியின் க/பெ. ரணசிங்கம் திரைப்படம் பல்வேறு வகையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. சிலர் படத்தைத் தூற்றுகிறார்கள். சிலர் படத்தைப் போற்றுகிறார்கள். உண்மையில் இந்தப் படம் என்ன சொல்கிறது? இது தூற்றத்தக்கதா, போற்றத்தக்கதா என்பதைப் பார்க்கலாம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடலுக்குச் செல்பவர்களின் சிக்கல்களைப் பேசிய படங்கள் வந்துள்ளன. அதே மாவட்டத்தில் கடல்கடந்து சென்றவர்களின் பிரச்சினையைப் பேசும் படம் இது. இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் கிராமத்தில், அரிய நாச்சியின் தண்ணீருக்கான அலைச்சலில் படம் தொடங்குகிறது. தொடரும் காட்சிகள் அரியநாச்சியின் கணவன் வெளிநாட்டில் வேலைபார்ப்பதைச் சொல்கின்றன. அத்தை, மாமனார், நாத்தனார், குழந்தை ஆகியோருடன் பொறுப்பாகக் குடும்பத்தைக் கவனித்துவருகிறாள் அவள். இந்த வேளையில் வரும் செய்தி ஒன்று அரியநாச்சியையும் அவளுடைய குடும்பத்தாரையும் நிலைகுலைய வைக்கிறது. குடும்பத்துக்காக உழைக்கப்போன இடத்தில் ஏதோ ஒரு போராட்டத்தில் ஈடுபட்ட ரணசிங்கம் அங்கே நடந்த கலவரத்தில் இறந்துவிட்டதாகத் தகவல் வருகிறது.
பணம் செலவழித்து ரணசிங்கத்தின் உடலைக் கொண்டுவர முடியவில்லை என்றால் அங்கேயே இறுதிச் சடங்குகளை முடித்துவிடலாம் என்கிறார் ரணசிங்கத்தை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர். எப்பாடுபட்டாவது தன் கணவனின் சடலத்தை இங்கே கொண்டுவர வேண்டும் என்று அரியநாச்சி சொல்கிறாள். ஏனெனில், அவனை வெளிநாட்டுக்கு அனுப்பிய யோசனையே அவளுடையதுதான். ஒருவகையில் அவனை அனுப்பியது தான்தானே எனும் குற்றவுணர்வு அவளைப் பீடித்திருக்கக்கூடும். இனி, படம் அரியநாச்சி சடலத்தைக் கொண்டுவர எடுத்துக்கொண்ட முயற்சியையும் இறுதியில் அவளுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் அப்படியே காட்சிகளாக எடுத்துவைத்திருக்கிறது.
ரணசிங்கம் எப்படிப்பட்டவன், அவனுடைய இழப்பு உண்மையிலேயே அரியநாச்சிக்கு இழப்புதானா? இவற்றையெல்லாம் விவரிக்கின்றன காட்சிகள். வேதிப் பொறியியலில் டிப்ளமோ படித்தவன் ரணசிங்கம். நீரோட்டம் பார்ப்பதன் மூலம் சம்பாதிக்கிறான். ஊரில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளைச் சமூக அக்கறையுடன் தீர்த்துவைக்கிறான். தேவைப்பட்டால் அதற்கான போராட்டங்களிலும் ஈடுபடுகிறான். இப்படியானவனை அங்கே உள்ள எல்லோருக்குமே பிடித்துப்போய்விடுகிறது. அவனது குணங்களால் அரியநாச்சியும் ஈர்க்கப்படுகிறாள்.
ரணசிங்கமும் அரியநாச்சியின் மீது காதல் வயப்படுகிறான். அவர்களது திருமணமும் நடைபெறுகிறது. இங்கே தான் எதிர்பாராத சிக்கல் உருவாகிறது. ஊரில் நடைபெற்ற போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் 144 தடையுத்தரவு போடப்பட்டிருந்த நாள் ஒன்றின் இரவுப் பொழுதில் அவர்களது திருமணம் நடைபெறுகிறது. திருமணம் நடைபெற்றதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை. சாமானிய மனிதர்களின் வாழ்வில் அரசு ஆவணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? சில வேளைகளில் மிகச் சாதாரண ஆவணம் கூட அவர்கள் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போட்டுவிடுகிறது என்பதற்கு அரியநாச்சின் கதை உதாரணம்.
கணவன் இறந்தபிறகு அவனுடைய உடலை இந்தியா கொண்டுவர அவள் முயலும்போதுதான் அவள் அரசாங்கத்தையும் அரசு அதிகாரிகளையும் புரிந்துகொள்கிறாள். முதலில் அவள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு வட்டாட்சியரை எதிர்கொள்கிறாள். இந்த வட்டாட்சியர் சாமிநாதன் என்ற பார்ப்பனர். அவர் மிக நிதானமாக மனுவை வாங்கிப் பார்க்கிறார். அரியநாச்சி ரணசிங்கத்தின் மனைவி என்பதற்கான சான்று கேட்கிறார். அதைத் தொடர்ந்து அவர் பேசும் வார்த்தைகள் அரியநாச்சிகளைக் குத்திக்கிழிப்பவை. திருமணப் பதிவு அலுவலகம் செல்கிறாள் அரியநாச்சி. அங்கேயும் அவளுக்கு நல்ல பதில் கிடைக்கவில்லை.
இந்தப் போராட்டத்தின் இடையே தன் கணவன் ரணசிங்கம் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் இறந்த விஷயம் அவளுக்குத் தெரியவருகிறது. வழக்கறிஞர் ஒருவரைப் பார்க்கிறாள். அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கச் சொல்கிறார். நீதிமன்றத்திலும் அவளுக்கு நீதி கிடைக்கவில்லை. ரணசிங்கத்தின் பழைய போராட்ட விவரங்களெல்லாம் விவாதிக்கப்பட்டு அரிய நாச்சியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அப்போது அரியநாச்சியும் அவளுடைய குடும்பத்தினரும் மேற்கொள்ளும் வெளிநடப்பு முக்கியமான காட்சி. இந்த அமைப்புகள் சாதாரணரை எப்படி நடத்துகின்றன என்பதற்கு உதாரணம் இந்தக் காட்சி.
கணவனின் உடலைக் கேட்டு அரியநாச்சி பிடிவாதம் பிடிப்பதால் அவளுடைய குடும்பத்தைப் பணம் கொடுத்து அமைதியாக்கிவிடலாமா என அரசுத் தரப்பு முயல்கிறது. ஆனால், அதுவும் அரியநாச்சியிடம் பலிக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை அவள் தன் கணவனின் உடலைக் கொண்டுவர வேண்டும் என்று குறியாக இருக்கிறாள். அதற்காக அவள் சென்னை செல்கிறாள். அதற்கான அலுவலகம் செல்கிறாள். இந்த முயற்சியில் அவள் மத்திய அமைச்சரின் காரின் முன்னே விழுகிறாள். மத்திய அமைச்சர் அவளுடன் செல்பி எடுத்துப் பகிர்கிறார். ஆனாலும், வேலை நடக்கவில்லை. அரியநாச்சி இப்போது டெல்லி செல்கிறாள். அவளுடைய தற்கொலை முயற்சியில் பிரதமரையே சந்திக்கிறாள். அவரும் அவளுடைய கோரிக்கைக்குச் செவிசாய்க்கிறார்.
ரணசிங்கத்தின் உடல் கீழத்தூவல் வருகிறது. அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அங்கே காத்திருக்கிறார்கள். சடலம் எரியூட்டப்படும்போது, அந்தச் சடலத்தைப் பார்க்கிறாள் அரியநாச்சி. அவளுக்குப் பெரிய அதிர்ச்சி. ஆனாலும், அரசு அதிகாரிகள் தந்த ஆவணத்தில் கணவனின் சடலத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கையெழுத்துப் போட்டுக்கொடுத்துவிடுகிறாள். இப்போது அவள் கணவன் புகைப்படத்தின் முன் அமர்ந்து அழுதபடியே தான் ஏமாற்றப்பட்ட கதையைச் சொல்கிறாள். அப்போது அவள் தன்னை ஏமாற்றிய அத்தனைபேரையும் வசைச்சொல் ஒன்றைப் பிரயோகித்துக் காறி உமிழ்கிறாள். அந்த வசைச் சொல் ஆணாதிக்கச் சொல், ஆகவே அது உவப்பாக இல்லை, அதே வேளையில் அந்தச் சொல் வெளிப்படக் காரணமான அவளுடைய கோபம் உண்மையானது, நியாயமானது. படம் முடிவடைகிறது. படத்தில் இறுதி டைட்டிலில் வெளிநாடு சென்ற இந்தியர்களின் மரணச் செய்திகளின் வழியே அவர்கள் எதிர்கொண்ட அவலங்கள் சொல்லப்படுகின்றன.
ஒவ்வொரு திரைப்படமும் ஏதோ ஒரு கருத்தைச் சொல்வதற்காகவே உருவாக்கப்படுகின்றன. இயக்குநர் தான் நம்பும் ஒரு விஷயத்தைச் சொல்வதற்கான ஊடகமே திரைப்படம். இந்தப் படத்தில் இயக்குநர், அரசும் அரசு அதிகாரிகளும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கை குறித்த விஷயங்களில் எவ்வளவு மெத்தனமாக இருக்கிறார்கள், இதனால் சாமானியர்களின் வாழ்க்கை எவ்வளவு அலைக்கழிப்புக்கு உள்ளாகிறது, என்பனவற்றைத் தாம் காட்சிகளின் வழியே புரியவைக்க முயன்றிருக்கிறார்.
இறந்தபோன ஒருவன் தன் கணவன் என்பதை நிரூபிக்க அவள் படாதபாடு பட வேண்டியதிருக்கிறது. நடிகை ஒருவர் அதே துபாயில் இறந்திருக்கிறார். அவருடைய உடல் 72 மணி நேரத்தில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. ஆனால், தன் கணவனின் உடலைக் கொண்டுவர மாதக்கணக்கில் அரியநாச்சி அலைய வேண்டியதிருக்கிறது. ஒரு சினிமாவில் நடைபெறும் சம்பவங்கள் போன்று அரியநாச்சிக்கு எல்லா உதவிகளும் கிடைக்கின்றன. கிராம நிர்வாக அலுவலர் முதல் பிரதமர் வரை எல்லோரையும் அவள் பார்த்துவிட்டாள். அவள் கேட்டது நலமான வாழ்வு அல்ல; கணவனின் சடலம். அந்த விஷயத்திலேயே அவள் ஏமாற்றப்பட்டிருக்கிறாள் எனும்போது இந்த நாடும் இதன் ஆளும் வர்க்கமும், அரசு அதிகாரிகளும் யாருக்காகச் செயல்படுகிறார்கள்? சாமானியன் ஒருவன் இந்த நாட்டில் எப்படிப் பிழைப்பான்? அரசு கூறும் எல்லா விதிமுறைகளிலும் விதிவிலக்கு உண்டு. அந்த விதிவிலக்கு அதிகாரபலம் உள்ளவர்களுக்கே பயன்படுகிறது; சாமானியர்களுக்கு மறுக்கப்படுகிறது.
அரியநாச்சியின் வழியே இயக்குநர் எல்லாவற்றையும் பொட்டில் அடித்தாற்போலக் கேள்வி கேட்கிறார். இந்தப் படத்தை ஆளும் தரப்புக்கு ஆதரவான படம் என்று எப்படிப் புரிந்துகொள்ள முடிகிறது என்பது தெரியவில்லை. படத்தின் நீளத்தை ஒரு குறையாக முன்வைக்கிறார்கள். படத்தின் நீளத்தைப் பொறுத்தவரைய்யில் இந்தக் கதைக்கு அவசியமாகத் தான் தோன்றுகிறது. இந்த நீளத்தையே புரிந்துகொள்ள முடியாதவர்களால் அரியநாச்சிகளின் துயரத்தையும் வலியையும் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? படம் தன்னளவில் தான் எடுத்துக்கொண்ட கருத்துக்கு வலுச்சேர்க்கும் காட்சிகளைத்தான் கொண்டிருக்கிறது. படம் பார்வையாளர்களின் உணர்வைச் சுரண்டவில்லை. சாமானியர்களுக்குப் பயன்படும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகள் எப்படிச் சாமானியர்களைத் தங்களுக்கு வாகாகப் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதைப் படம் எடுத்துரைக்கிறது.
அரசாங்கம், அரசு, நீதிமன்றம் இப்படியான எல்லா அமைப்புகளும் மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், அவை யாருக்குப் பணிசெய்கின்றன? அதிகாரம் கொண்டவர்களால் மட்டுமே அணுகக்கூடியவையாக அவை இருந்தால் சாதாரண மனிதன் எப்படி அவற்றால் பயனடைவான்? இத்தகைய நிலைமை தீர என்னதான் தீர்வு? நமது உரிமைகளைப் போராடிப் பெற்ற நாட்டில் போராட்டம் என்பதே அரசுக்கு எதிரானது எனப் புரிந்துகொள்ளப்படுவது ஏன்? இப்படியான பல கேள்விகளைப் படம் எழுப்புகிறது. அதுதான் இந்தப் படம் செய்திருக்கும் பணி. இந்தப் பணிக்காக இந்தப் படத்தில் பங்குகொண்ட அத்தனை கலைஞர்களையும் பாராட்டலாம்.
படத்தில் சாதி அடையாளம் உள்ளது; ஆனால் சாதிப் பெருமை பேசப்படவில்லை. வீரம் என்பது என்ற வியாக்கியானம் எதுவுமில்லை. ஆனால், சாமானியப் பெண் ஒருவர் நெஞ்சுரத்துடன் அரசு அமைப்புகளின் அலைக்கழிப்புகளை எதிர்கொள்கிறாள். கணவனைக் குலசாமி, தெய்வம் என்று சொல்வதெல்லாம் சற்று அதீதமாகத்தான் படுகிறது. ஆனாலும் பொறுத்துக்கொள்ள முடிகிறது. சடங்குகளும் சம்பிரதாயங்களும்கூட விமர்சிக்கப்படுகின்றன.
இதைப் போலவே சாயல் கொண்ட சிங்களப்படம் 'டெத் ஆன் எ ஃபுல் மூன் டே'. பிரசன்ன விதனகே இயக்கியது. அதில் ராணுவ வீரன் ஒருவன் இறந்துவிட்டதாகக் கூறி அரசாங்கம் அவனது உடலை அனுப்பிவைக்கும். குடும்பத்தினரும் ஊரில் உள்ளவர்களும் இறந்த வீரனை நல்லடக்கம் செய்துவிடுவார்கள். ஆனால், அவனுடைய தந்தையான அந்தப் பார்வையற்ற மனிதர் மட்டும் தன் மகன் இறக்கவில்லை என்று நம்பிக்கொண்டே இருப்பார். அதனால் அவர் மகனுக்காக வழங்கப்படத் தயாராக இருக்கும் இழப்பீட்டை வாங்காமல் காலம் தாழ்த்துவார். இறுதியில் அவர் கல்லறையைத் தானே திறக்க முயல்வார். பின்னர் அனைவரும் வந்து உதவுவார்கள். தோண்டிப் பார்த்தால் உள்ளே சடலம் இருக்காது. அரசாங்கம் சாமானிய மனிதரை எப்படி ஏமாற்றியிருக்கிறது என்பதை உணரும்போது பகீர் என்று இருக்கும் இந்தப் படத்தின் தாக்கத்தில் க/பெ. ரணசிங்கம் உருவாக்கப்பட்டிருக்கலாம். என்றபோதும் இரண்டின் திரைக்கதையும் வேறு வேறு.
ஒரு படம் அது உருவாக்கப்பட்ட நோக்கத்தை உணர்த்திவிட்டால் அது நல்ல படம் என்று சொல்லிவிடலாம். அப்படிப் பார்க்கும்போது இந்தப் படத்தை நல்ல படம் என்று சொல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. இதில் உள்ள லாஜிக் குறைகளை இது சொல்ல வந்த கருத்துக்காகப் பொறுத்துக்கொள்ளலாம் என்றுதான் தோன்றுகிறது. மொத்தத்தில், அரசு அமைப்புகளுக்கு எதிராக சாமானியப் பெண்ணான அரியநாச்சி உரக்க எழுப்பியிருக்கும் குரலே க/பெ. ரணசிங்கம்.