இந்த வலைப்பதிவில் தேடு

சனி, ஜூலை 18, 2020

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்!


திரையில் எழும்பும் கும்பிட்ட கைகளுடன் ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற குரல் ஒலிக்கும்போதே திரையரங்குகளில் கைதட்டல்கள் தொடங்கும். அது அடங்க சில நிமிடங்களாகும். நடிகர்கள் பெற்றுவந்த அந்தக் கைதட்டலை ஓர் இயக்குநருக்கான கைதட்டலாக மாற்றிய அந்தக் கரத்துக்குச் சொந்தக்காரரான இயக்குநர் பாரதிராஜாவுக்கு இன்று பிறந்தநாள். பெரும்பாலான தமிழர்களைப் போலவே பாரதிராஜாவுக்கும் இரண்டு பிறந்தநாள்கள் உண்டு. ஒன்று கல்விச் சான்றிதழ்படி, அதுதான் 1941 ஜூலை 17. ஆனால், உண்மையில் அவர் பிறந்தது 1942 ஆகஸ்ட் 23. இதை பாரதிராஜாவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். என் இனிய தமிழ் மக்களே என்பது ஒரு குறுகிய வட்டம் அல்ல அது பாசத்துக்கும் நேசத்துக்கும் உரியது என்று கூறும் பாரதிராஜாவுக்கு அப்பா இட்ட பெயர் சின்னசாமி. அம்மா அவரைப் பால் பாண்டி என்பாராம். பிறகெப்படி பாரதிராஜா ஆனார்? அவருடைய தங்கையின் பெயர் பாரதி அண்ணனுடைய பெயர் ஜெயராஜ். இவற்றிலிருந்து அவர் உருவாக்கிக்கொண்ட பெயரே பாரதிராஜாவாம்.

பாரதிராஜா மூன்றாம் வகுப்புப் படித்தபோது அவருடைய ஆசிரியர் அவரைக் குறத்தி வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார். ஐந்தாம் வகுப்புப் படித்தபோது மாறுவேடப் போட்டியில் பெண் வேடமிட்டுப் பரிசு (சோப்பு டப்பா) வென்றிருக்கிறார். ஒன்பதாம் வகுப்புப் படித்தபோது, அவருடைய தமிழாசிரியர் ராமலிங்கம் என்பவரின் ஊக்கத்தால் பள்ளியில் தமிழாசிரியர் எழுதிய தமிழ்ச்செல்வம் என்னும் நாடகத்தை ஏற்ற இறக்கமாகப் பேசிக் காட்டியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பள்ளி விழாவில் நாடகம் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த நாடகத்துக்காகச் சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் போன்ற பெருமையுடன் 5 ரூபாய் பரிசையும் பெற்றிருக்கிறார். அன்று விழுந்த அந்தச் சிறிய புள்ளி விஸ்வரூபமாக வளர்ந்து நமக்கு பாரதிராஜா என்னும் கலைஞனைக் கொடுத்திருக்கிறது.

அப்பாவின் பையிலிருந்து நாலணா திருடி ‘பூலோகரம்பை’ படம் பார்த்து வீட்டில் அடி, உதை வாங்கியிருக்கிறார் பாரதிராஜா. ஐம்பதுகளின் தொடக்கத்தில் வெளியான ’பராசக்தி’, ’மனோகரா’ போன்ற படங்களில் எழுதப்பட்ட மு.கருணாநிதியின் வசனங்களும் சிவாஜி கணேசனின் நடிப்பும் அவரைப் பாதித்துள்ளன. அத்தகைய படங்களின் வசனங்களைப் பேசியே பொழுதைக் கழித்திருக்கிறார். பாரதிராஜாவுக்குச் சிறுவயதில் ஓவியம் வரைவதிலும் ஈடுபாடு இருந்திருக்கிறது; அரசியல் ஆர்வம் இருந்திருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்து அவருக்கு நடிகனாகும் ஆசையைத் தந்திருக்கிறது. நடிகனாகும் ஆசையில்தான் பாரதிராஜா சென்னைக்கு வந்திருக்கிறார். ஆனால், இங்கே ஏற்பட்ட அனுபவங்கள் அவரை இயக்குநராக மாற்றிவிட்டன. அவர் நடித்த ‘கல்லுக்குள் ஈரம்’கூட அவருக்கு மோசமான அனுபவமே என்கிறார். அதை நினைவுபடுத்தக்கூட பாரதிராஜா விரும்புவதில்லை. 

தமிழ்த் திரையில் ஒரு டிரெண்ட் செட்டர் என்ற பெயரை வாங்கிக்கொடுத்த ‘16 வயதினிலே’ படம் உருவான கதையே ருசிகரமானதாக உள்ளது. பாபுநந்தன் கோடு இயக்கிய தாகம் படத்தில் பாரதிராஜா உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் அவர், கிராமத்துப் பெண்ணின் அபிலாஷைகளை வைத்து ஒரு லட்சம் ரூபாய் செலவில் படமொன்று எடுக்கலாம் என மயில் என்ற கதையை எழுதியுள்ளார். ரோஜா ரமணி, நாகேஷ் ஆகியோரை நடிக்கவைத்து கறுப்பு வெள்ளைப் படமாக எடுக்கலாம் என்று கருதி, அரசுக்குச் சொந்தமான ஃபிலிம் ஃபினான்ஸ் கார்ப்பரேஷனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். அவர்கள் அந்தத் திரைக்கதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. அப்படி அரசால் மறுக்கப்பட்ட திரைக்கதையே பின்னர் அவர் பல அரசு விருதுகள் பெறக் காரணமானது என்பது நகைமுரணே.

அடுத்து தனக்குக் கிடைத்த தயாரிப்பாளரிடம் சிகப்பு ரோஜாக்கள் கதையையும், ஒரு இசைக்கலைஞர் பற்றிய கதையையும் பாரதிராஜா கூற, அவற்றை எல்லாம் விரும்பாத அவர், மயில் கதையைப் பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். அது எளிய கதை. கலைத்தன்மையான படமாகும் தன்மை கொண்டது. அது வணிகரீதியான படமாக வராது. ஆகவே, அதில் பாடல்களை எல்லாம் சேர்த்திருக்கிறார் பாரதிராஜா. அப்படி உருவான 16 வயதினிலே 32 ரோல்களில் 30 நாட்களில் ஷூட் பண்ணப்பட்டிருக்கிறது. தமிழ்த் திரையுலகின் என்றும் 16 என்று சொல்லத்தக்கப் படமாக அது இன்றும் இருக்கிறது.

கிராமத்து வாழ்க்கையை அணுவணுவாக ரசித்துப் பார்த்து வந்த பாரதிராஜாவுக்கு அந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இயல்பான மனிதர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். ஆனால், சினிமாவோ அழகான மனிதர்களையே பாத்திரங்களாகப் படைக்கும் போக்கைக் கொண்டிருந்தது. அதை முதலில் உடைக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியதால் தான் நமக்கு விதவிதமான கதாபாத்திரங்கள் கிடைத்தன. அடுத்ததாக ஸ்டுடியோவில் அடைபட்ட திரைப்படத்தைப் பரந்த வெளிக்குக் கொண்டுவந்து சேர்த்தார். டெண்ட் கொட்டகையில் திரைப்படம் பார்த்த அசலான மனிதர்களைப் போன்ற கதாபாத்திரங்கள் திரைப்படங்களிலேயே இடம்பெறத் தொடங்கின. அழகான மனிதர்கள் மட்டும்தான் நடிக்க வேண்டுமா சராசரியான மனிதர்கள் நடிக்கக் கூடாதா என்ற கோபம் அவருக்குள் எழுந்திருந்த காரணத்தால் தான் அவர் பாண்டியன் போன்ற பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். கதைக்குப் பொருத்தமான முகங்களை அவர் தேடித் தேடி பயன்படுத்தியிருக்கிறார்.

அவருடைய புதுமுகங்களைப் பற்றிச் சொல்லும்போதே ’ர’கர வரிசைக் கதாநாயகிகள் குறித்து நம் மனத்தில் எண்ணம் எழும். கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகாவை அறிமுகப்படுத்தினார். படம் பெரிய வெற்றி. அதனால் அவர் அறிமுகப்படுத்திய அடுத்தடுத்த கதாநாயகிகள் தங்களுக்கும் ’ர’கர வரிசைப் பெயரைக் கேட்டார்கள். சினிமாவில் இப்படியான நம்பிக்கைகள் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்துகிறதே. அவரும் ராதா, ரேவதி, ரஞ்சனி, ரேகா, ரஞ்சிதா எனப் பெயரிட்டுக்குக்கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் அப்படிப் பெயரிடுவதை நிறுத்திவிட்டார். ஆனால், அவர் எப்போதும் ரகர வரிசையில் பெயரிடுவார் என்னும் ஐதீகம் நிலைத்துவிட்டது.  அதே போல் நடிகர்களின் குரல் கதாபாத்திரங்களுக்கு பாரதிராஜா எதிர்பார்க்கும் உணர்வைத் தராதபோது அவரே அவர்களுக்காக டப்பிங் பேசத் தொடங்கினார். பாரதிராஜாவின் குரல் என ரசிகர்கள் அடையாளம் கண்ட பின்னர், அப்படிக் குரல் தருவதையும் நிறுத்திவிட்டார்.

பூமிக்குள் நீர் இருப்பதுபோல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நடிப்பு இருக்கிறது அதைத் தோண்டி எடுப்பது ஓர் இயக்குநரது வேலை என்று சொல்லும் பாரதிராஜா, அதன் அடிப்படையிலேயே நடிகர்களிடம் தனக்குத் தேவையான நடிப்பைப் பெறுகிறார். அவற்றுக்கு மக்கள் அங்கீகாரமும் கிடைக்கிறது. வலுவான கதைகளையும் வசனங்களையும் பாடல்களையும் அவருக்குக் கிடைத்த எழுத்தாளர்கள் தந்த காரணத்தால் அவரால் அவற்றை வைத்து சிறப்பான படங்களை உருவாக்க முடிந்திருக்கிறது. வாழ்வில் எதிர்கொண்ட சம்பவங்கள் தந்த அனுபவத்தால் அவரால் ஒரு காட்சியை எப்படி ரசனையுடன் அமைப்பது என்று நுட்பம் புரிந்திருக்கிறது. அந்த நுட்பம்தான் அவருக்கே உரித்தான தனித்துவம். அதன் உதவியுடன் அவர் தனக்குக் கிடைத்த கதையை, வசனத்தை மிகச் சரியான விதத்தில் தனது திரைக்கதையில் ஆங்காங்கே பொருத்தி ரசனைமிகு திரைக்காட்சிகளாக உருவாக்குகிறார். படத்தின் சுவாரசியம் கூட்டத் தேவைப்படும் இடங்களில் சுகமான பாடல்களை இணைக்கிறார். இளையராஜா, ரஹ்மான் போன்ற எனும் இசைஞர்கள், வைரமுத்து போன்ற கவிஞர்கள், நிவாஸ், கண்ணன் போன்ற ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரது கூட்டு முயற்சியில் தனது இயக்கத்தில் ரசிக்கத்தக்க பல படங்களை உருவாக்கியுள்ளார்.  

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, கிழக்குச் சீமையிலே போன்ற அவரது வெற்றிப்படங்கள் மட்டுமல்ல; நிழல்கள், காதல் ஓவியம், என் உயிர்த் தோழன், நாடோடித் தென்றல் போன்ற அவரது தோல்விப் படங்களும் இன்னும் பேசப்படுகின்றன. வசூலில் வெற்றி என்பதைத் தாண்டி ஒரு படைப்பாளியாக அவர் உருவாக்கிய படங்கள் என்றுமே சோடை போனதில்லை. வேதம் புதிது வெளியான நேரம் சரியில்லாததால் பெரிதாக வெற்றிபெற வில்லை. ஆனால், இன்றுவரை அந்தப் படத்தைப் பற்றி யாராவது பேசுகிறார்கள்.  சமூகம், அரசியல், பண்பாடு எனப் பல கருப்பொருள்களில் பாரதிராஜா திரைப்படங்களை உருவாக்கியுள்ளபோதும் பாரதிராஜாவின் பெயரைத் தமிழ்த் திரை காதல் அத்தியாயத்தில் கவனமாகப் பொத்திவைத்துக்கொள்கிறது. அவரது பெரும்பாலான திரைப்படங்களில் காதலெனும் மயிலிறகு ரசிகர்களுக்குச் சாமரம் வீசிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பருவத்திலும் மனத்தில் பசும்பரப்பில் தோன்றும் மெல்லிய காதலை  அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், முதல் மரியாதை எனப் பல படங்களில் காட்சிகளாக்கி ரசிகர்களைக் காதல் மழையில் நனைத்துள்ளார் அவர். 

உணர்வுத்தளத்தில் இயங்கும் உயிரோட்டமான கலைஞனான பாரதிராஜாவைத் தமிழ்த் திரையுலகம் தன் ஆசை மகனாக உச்சிமோர்வதில் எப்போதுமே பெருமை கொள்ளும். அந்தக் கலைஞனின் பிறந்தநாளான இன்றும் அவரைப் பற்றிப் பேசியும் எழுதியும் தமிழ்கூறும் நல்லுலகம் மகிழ்ச்சிகொள்கிறது. இந்த டிஜிட்டல் யுகத்திலும் தன் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் இமயத்துக்கு உள்ளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

இந்து தமிழ் திசை இணையதளத்தில் வெளியான கட்டுரை

புதன், ஜூலை 15, 2020

இபாஸ், டோல்கேட் : சாமானியனின் துயரங்கள்


சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பதால் பொதுச் சமூகத்தின் மனத்தில் உருவாக்கப்பட்ட பயம் கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கிவிட்டது. சென்னை பாதுகாப்பான நகரமல்ல எனக் கருதிப் பலரும் தங்களது சொந்த ஊர்களை நோக்கிப் பயணப்படுகிறார்கள். அவர்களில் ஒருவராக நானும் சென்னையிலிருந்து தென்காசி செல்வதற்காக, தமிழக அரசு இ-பாஸ் பெறுவதற்காக அறிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பாஸ் பெற்றுக்கொண்டு, வாடகை கார் ஒன்றை அமர்த்தி வயதான பெற்றோருடன் கிளம்பினேன். இரவின் பயணம் ஆபத்தென்று கருதி அதிகாலை ஐந்தரை மணி அளவில் புறப்பட்டோம்.

வழியெங்கும் கிட்டத்தட்ட பெருங்களத்தூர் தொடங்கி விழுப்புரம்வரை பலர் இருசக்கர வாகனத்திலும் நான்கு சக்கர வாகனத்திலும் குடும்பம் குடும்பமாக விரைந்துகொண்டிருந்தனர். முகக் கவசம் அணிந்துகொண்டும் வண்டியில் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் சுமைகளைத் திணித்துக்கொண்டும் தனி மனித இடைவெளியைப் பேண வாய்ப்பில்லாதபடியும் சென்றுகொண்டிருந்தார்கள். பின்னிருக்கைகளில் அமர்ந்திருந்த பலர் கைகளில் தொலைக்காட்சிப் பெட்டிகளை ஏந்தியிருந்தார்கள். தொண்ணூறுகளுக்குப் பின்னே கட்டில், மெத்தை, மேசை, நாற்காலி வரிசையில் ஒரு எளிய குடும்பத்தின் அத்தியாவசியப் பொருள் பட்டியலில் அதுவரைக்கும் ஆடம்பரப் பட்டியலில் இடம்பெற்றிருந்த தொலைக்காட்சிப் பெட்டி இடம்பெறத் தொடங்கியது இங்கு நினைவுகொள்ளத்தக்கது. எனவே, தொலைக்காட்சிப் பெட்டியை ஏந்திச் செல்லும் பலர் சென்னையைவிட்டு விலகிச் செல்கிறார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

பரனூர் முதல் திருமங்கலம் வரையிலும் பரந்துவிரிந்திருந்த சுமார் ஏழெட்டு டோல் கேட்களில் வாகன வரிசையில் காத்திருந்து பணம் செலுத்த நேர்ந்தது. திருமங்கலம் வரையிலும் பெரிய தொந்தரவு இல்லை. அங்கிருந்து தென்காசி செல்லும் சாலையில் கார் திரும்பிய பின்னர் எதிரில் மோதுவதுபோல் விரைந்துவந்த வாகனங்கள் அச்சமூட்டின. பொதுவாக, அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் பெரிய விசாரணையின்றி சுலபமாக அனுமதித்துவிட்டார்கள். மதியம் இரண்டு மணிவாக்கில், தென்காசியின் நுழைவாயிலான சிவகிரியில் அமைந்திருந்த சோதனைச் சாவடியில் நாங்கள் நுழைந்தபோது, சிக்கல் ஏற்பட்டது.

சென்னையில் கரோனா தொற்று நாள்தோறும் ஆயிரம் பேருக்கு மேல் பரவத் தொடங்கியதால் சென்னையிலிருந்து வருவோரை முறையான பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்க வேண்டும் என்பது ஆட்சியரின் உத்தரவு என அங்கிருந்த அலுவலர்கள் தெரிவித்தனர். சென்னையில் இருந்து வந்தவர்களைக் காத்திருக்கவைத்தனர். நினைத்தபடி எளிதாக ஊர் திரும்ப இயலாதோ என்னும் அச்சம் மெதுவாக அரும்பத் தொடங்கியது.


சென்னையில் இருந்து வந்தவர்களின் ஆவணங்களைச் சோதித்துவிட்டு முதலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதித்துப் பார்த்தனர். பின்னர் அருகில் உள்ள தனியார் கல்லூரிக்குச் சென்று கரோனா தொற்றுப் பரவலுக்கான சோதனையை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரினர். அலுவலர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வழிகாட்டிச் சென்றார். அவரைப் பின் தொடர்ந்து வாகனங்களில் சென்றோம். சோதனைக்கென அழைத்துச் சென்ற தனியார் கல்லூரியில் இருந்த அரசு ஊழியர்கள் சிலர் மேசை மீது நீளமான நோட்டுப் புத்தகங்களை வைத்துக்கொண்டு ஒவ்வொருவரது பெயரையும் குறித்துக்கொண்டனர். ஆனால், கரோனா சோதனைக்கான எந்த முன்னெடுப்பும் அந்த மையத்தில் இல்லை. அதன் பின்னர் தான் இன்று கரோனா சோதனை நடைபெறாது என்பதையும் அது நாளைக்குத் தான் என்பதையும் தெரிவித்தனர். அதுவரை முகாமில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில் எல்லோரும் தங்கவைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்கள். 

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனித் தனி அறை ஒதுக்கப்படும் என்று சொல்லி அந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். உள்ளே நுழைந்தவுடன் ஒரு அறையும் அதைத் தொடர்ந்து மற்றோர் அறையும் இருந்தன. தனிமைப்படுத்தலுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மையத்தில், ஒரு வாயில் இரு அறைகள். அறையில் ஒரு இரும்புக் கட்டிலும், பெஞ்சு ஒன்றும் அடுத்தடுத்து இணைத்துப் போடப்பட்டிருந்தன. இரண்டு நாற்காலிகளும், மேசை ஒன்றும் காணப்பட்டன. கூரையில் மின் விசிறி ஒன்று இருந்தது. அந்த அறையையும் அறைக்கு வெளியே இருந்த பொதுவான கழிப்பறையும் பார்த்தபோது அங்கே தங்குவது கடினமாக இருக்கும் என்ற எண்ணமேற்பட்டது.

அம்மா (69), அப்பா (74) இருவரது முகத்திலும் அச்சரேகைகள் அடர்ந்து பரவத் தொடங்கின. இங்கே எப்படிடா தங்க முடியும்? என்று பலவீனமாக முணுமுணுத்த அவர்களது பதற்றத்தையும் பயத்தையும் தணிப்பதற்காகச் சில சமாதான மொழிகளைச் சொன்னேன். ஆனால், நிலைமை கட்டுக்குள் இல்லை என்பது தெரிந்தது. ஊழியர்களிடம் இங்கே தங்க முடியாது என்றும் எனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு மறுநாள் வந்து கரோனா சோதனை எடுக்க அனுமதிக்கும்படியும் கேட்டுக்கொண்டேன். ஆனால், அரசின் விதிமுறைகளில் இந்த வேண்டுகோளுக்கு இடமிருக்கவில்லை. அலுவலர்கள், “நாங்க இதுல ஒண்ணும் பண்ணமுடியாது சார். எங்களுக்கு என்ன சொல்லியிருக்காங்களோ அதைத் தான் செய்ய முடியும் வேறு ஏதேனும் சொல்ல வேண்டுமென்றால் உயரதிகாரிகளிடம் பேசிக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டனர்.

முகாமில் இருக்க மனம் ஒப்பாதவர்கள் ’பெய்டு குவாரண்டைன்’ என்று சொல்லப்பட்ட தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளலாம் என்று அலுவலர்கள் அறிவித்தார்கள். தென் மாவட்டங்களில் தனிமைப்படுத்துதலுக்காக இப்படி ‘பெய்டு குவாரண்டைன்’ அனுமதிக்கப்படுகிறது என்கிறார்கள். வீட்டிலிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வாய்ப்பிருப்பவர்களிடம், எக்காரணத்தைக் கொண்டும் வீடுகளில் சென்று தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்க இயலாது என்று தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்துவிட்டார்கள். சென்னையிலிருந்து சொந்த காரில் வந்த ஒருவர் தனது குடும்பத்துடன் தனியார் விடுதியில் தங்கச் சம்மதம் தெரிவித்துச் சென்றுவிட்டார். எல்லோரையும் அப்படி உடனே முடிவெடுக்கவிடவில்லை பொருளாதாரச் சூழல். 

அடிப்படை வசதிகளே முறையாகப் பராமரிக்கப்படாத அந்த அறையில் தங்கினால் நிச்சயம் கரோனா தொற்றிவிடுமோ என்னும் அச்சவுணர்வு மேலெழுந்தது. இதற்கு முன்னர் அந்த அறையில் யார் தங்கியிருந்தார்களோ, அறையை முறையாகச் சுத்திகரித்திருப்பார்களா என்பன போன்ற சந்தேகங்கள் எழுந்தன. ஏனெனில், அங்கிருந்த ஊழியர்களே சானிடைஸரைத் தங்கள் சொந்தச் செலவில் வாங்குவதாகத் தெரிவித்தனர். தனியார் விடுதிக்குச் செல்லவா, வேண்டாமா என்ற குழப்பம்வேறு சேர்ந்துகொண்டது. இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரிந்தவழிகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி முயன்றுபார்த்தேன்.

இப்படியான முகாமில் தங்கித்தான் ஆக வேண்டும் என்னும் அரசின் பிடிவாதமான முடிவு எந்தவகையில் கரோனா பரவலுக்கு உதவும் என்பதை எவ்வளவு யோசித்தும் உணர்ந்துகொள்ள இயலவில்லை. வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வழியற்றவர்களுக்கு அரசு ஒரு முகாமை ஏற்படுத்தித் தருவது சரிதான். ஆனால், அனைவரையுமே போதுமான அடிப்படை வசதியற்ற முகாமில் தங்கச் சொல்லி வற்புறுத்துவது என்ன நியாயம்? 

எளிதாக ஊர்திரும்பிவிடலாம் என்றிருந்த எண்ணமே என்னைப் பகடிசெய்யத் தொடங்கியது. ஒரு புறம் பெற்றோரின் பரிதாபமான தோற்றம், மறுபுறம் அடிப்படை வசதிகளே பூர்த்திசெய்யப்பட்டிராத முகாமின் தங்கும் அறை, இன்னொரு புறம் பூகோள உருண்டைபோல் மனத்துக்குள் சுழன்றுகொண்டிருந்த கரோனா வைரஸ் உருவம், இது போதாதற்கு எங்களைப் பத்திரமாக அழைத்துவந்த வாகன ஓட்டுநர் வேறு முடிந்தவரை விரைவில் அங்கேயிருந்து புறப்பட்டுவிட வேண்டும் இல்லையென்றால் தன்னையும் முகாமில் வைத்துவிடுவார்களோ என்னும் பயத்தில் நச்சரிக்கத் தொடங்கியது எல்லாமுமாகச் சேர்ந்து நெருக்கடி நிலையை வலுப்படுத்தத் தொடங்கியது.

நமது அரசும் அதன் அமைப்புகளும் கரோனா குறித்துப் பொது ஊடகங்களில் அளித்துவரும் நம்பிக்கைகளுக்கும் யதார்த்த நிலைக்கும் இடையே பாரதூரமான வேறுபாடு இருந்தது. தொடர்ந்து பல்வேறு வகையான முயற்சிகளுக்குப் பிறகு, எனது சொந்த ஊரில் உள்ள ஒரு முகாமுக்குச் செல்ல அதிகாரிகளிடம் அனுமதி கிடைத்தது. அங்கே சென்றுவிட முடிவெடுத்துப் பெற்றோருடன் புறப்பட்டேன். குறைந்தபட்சம் சொந்த ஊருக்காவது சென்றுவிடலாமே?

தென்காசியில் அமைந்திருந்த தனிமைப்படுத்துதல் முகாமுக்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது, மணி எட்டரை இருக்கும். தொடர்ந்த அலைச்சலால் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், கண் அழுத்த நோய் போன்ற சில பாதிப்புகளைக் கொண்ட அம்மாவும் வயது காரணமாக அப்பாவும் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்கள். முகாமில் இருந்த சீருடை அணிந்த காவலர் ஒருவர் எனது பெயர் பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றுக்கொண்டார். எந்தச் சூழலிலும் வாகனத்தைவிட்டு நாங்கள் இறங்காமலும் அவரது அருகில் சென்றுவிடாமலும் பார்த்துக்கொண்டார். சென்னையிலிருந்த வந்தவர்களை கரோனா தொற்றுப் பரவியவர்களோ எனக் கருதும் அச்சவுணர்வு சொந்த மாவட்டத்து அரசு அலுவலர்களிடம் பரவியிருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டேன். 

அந்தக் காவலர், ”அடுத்த நுழைவாயில் வழியே சென்று மாடியில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குச் செல்லுங்கள். அது தனி அறைதான் டாய்லெட், பாத்ரூம் எல்லாம் தனியாக உள்ளது” என்று சொன்னார். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை அமைக்கப்பட்டிருந்த மாடிக்குச் செல்லும் படிகளின் முன்னே பத்துப் பதினைந்து இளைஞர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். வயதான பெற்றோருடன் சுமைகளைத் தூக்கிக்கொண்டு நடுத்தர வயதுக்காரன் வாகனத்திலிருந்து இறங்கி நடந்து வந்த காட்சி அவர்களது இரக்கத்தைப் பெருமளவில் சுரக்கச் செய்திருக்கக்கூடும். அந்த முகாமில் பெற்றோருடன் நாங்கள் தங்குவது எங்களுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தாக முடியக்கூடும் என்பதை அவர்கள் விலாவாரியாக எடுத்துக்கூறினார்கள். நாங்கள் தங்கயிருந்த அறையை ஒட்டிய அறையில் இருந்த ஒருவர் அன்று காலையில்தான் கரோனா பாஸிட்டிவ் என்று அடையாளம் காணப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார் என்று அவர்கள் கூறியவுடன் கிட்டத்தட்ட நிராதரவான நிலையில் வயதான பெற்றோருடன் நின்றுகொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். ஆபத்து சூழ்ந்துள்ளது. ஆனாலும், போராட வேண்டுமே ஒழிய அங்கே தங்கக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

அங்கிருந்து மீண்டும் காவலர் அமர்ந்திருந்த இடத்துக்கு முழுமையாக களைத்துப்போய்விட்ட பெற்றோருடன் நடக்கத் தொடங்கினேன். இரண்டிடங்களுக்கும் இடையே சுமார் எண்ணூறு மீட்டர் தொலைவு இருக்கும். இரவு நேரம். மேடு பள்ளமான சாலை, இருளான சூழலில் ஒரு கையில் சுமைகள், மற்றொரு கையில் அம்மாவைப் பிடித்துவர, அருகே அப்பா என மூவரும் கைபேசி வெளிச்சத்தில் நடந்துவந்தோம்.


காவலருக்கும் அங்கே இருந்த மற்றோர் ஊழியருக்கும் எனக்குமான உரையாடல் முடிவில் அந்த நாள் எங்களுடைய ஆயுளில் இறுதிநாளாக அமைந்துவிடுமோ எனும் கொடுங்கனவு எழுந்தது. சற்று அதீமான எண்ணம்தான். என்ன ஆனாலும் பரவாயில்லை இங்கே தங்க இயலாது என்றும் அதுதொடர்பான போராட்டத்தில் ஒருவேளை மூவரும் இறந்தாலும் பரவாயில்லை அது இந்த வெட்டவெளியிலேயே நிகழட்டும் என்றும் அந்த நெருக்கடி நிலைக்கு எங்களை ஒப்புக்கொடுத்துவிட்டோம்.

ஒரு சாமானியன் தேர்ந்தெடுக்க எந்த நிகழ்தகவும் வாய்ப்பளிக்காத நிலையில் இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பைத் தான் அவன் தேர்ர்ந்தெடுக்க வேண்டும் என்னும் யதார்த்தம் சம்மட்டியாக உள்மண்டைக்குள் உயர்ந்து தாழ்ந்துகொண்டிருந்தது. இது என் ஒருவனின் துயரம் அல்ல. சென்னையிலிருந்து ஆசை ஆசையாக தென் மாவட்டத்துக்குத் திரும்பும் பலரும் இப்படியான பல துன்பங்களை எதிர்கொள்கின்றனர்.

இப்போது என்னிடம் சில கேள்விகள் எழுந்தன. கரோனா தொற்றுப் பரவிவிடக் கூடாது என்ற அரசின் எச்சரிக்கையுணர்வுக்கும் பரவலைத் தடுப்பதற்குமான அரசின் நடவடிக்கைகளுக்கும் இடையே உருவாகியிருக்கும் பெரும்பள்ளத்தில் தொடர்ந்து சாமானியர்கள் விழுந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதை எப்படி அரசு உணராமல் இருக்கிறது? கரோனா தொற்று சமூகத் தொற்றாகிவிடக் கூடாது என்பதற்காகத் தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைப்பதன் மூலம் ஒருவருக்கு கரோனா தொற்று பரவக்கூடிய சாத்தியம் பெருமளவில் உள்ள சூழலை எப்படிப் புரிந்துகொள்வது? கரோனா பரிசோதனைக்கு முன்னரே ஒருவரை தொற்றுப் பரவியவர் என்பதுபோல் நடத்துவது என்ன நியாயம்? வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளபோதும் அவர்களைச் சொந்த வீடுகளில் தங்க அனுமதிக்காமல் கண்காணிப்புக்கு ஏதுவானது என்ற சப்பையான காரணத்துக்காகத் தனியார் விடுதிகளுக்கு மடைமாற்றுவதன் பின்னணியிலுள்ள மறைபொருள் எது? கரோனா தொடர்பான விழிப்புணர்வுக்குப் பதிலாக அது தொடர்பான அச்ச உணர்வைப் பொதுச் சமூகத்தில் உருவாக்கிய ஊடகங்கள் இந்த நிலைமைக்கான தங்களது பங்களிப்பு குறித்து சிறிதாவது நாணவுணர்வு கொண்டுள்ளனவா? வெறும் புள்ளிவிவர ஆவணங்களுக்காகவும் ஆட்சியர்களின் நிர்வாகத் திறமைக்கான சான்றுகளுக்காகவும் சாமானிய மனிதரின் வாழ்க்கை பந்தாடப்படுவது சரிதானா? உண்மையிலேயே இங்கு என்ன நடக்கிறது நாம் காப்பாற்றப்படுகிறோமா, கைவிடப்படுகிறோமா? நம்கண் முன்னே கரைந்துகொண்டிருக்கும் நமது இயல்பான சூழலை உயிர்ப்புடன் மீட்கப் போகிறோமா சடலமாகப் புதைக்கப் போகிறோமா? பெருந்துயரம் எது? கரோனாவா? அதை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் அரசின் நடவடிக்கைகளில் தென்படும் பல குளறுபடிகளா? இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்த இரவு எப்படி விடியப்போகிறது?

இந்து தமிழ் திசை இணையதளத்தில் ஜூன் 9 அன்று இதன் எடிட் செய்யப்பட்ட பிரதி வெளியானது. 

வெள்ளி, ஜூலை 03, 2020

பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்

ஜெயராஜ், பென்னிக்ஸ்

அண்மையில் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தையும் மகனும் காவல் துறை அதிகாரிகளின் சித்திரவதையைத் தொடர்ந்து, உயிரிழந்துள்ள விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையினரின் அத்துமீறல் சாமானிய மக்களைக்கூடக் கோபம் கொள்ளவைத்துள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் தமிழ்த் திரைப்படங்களில் உருவாக்கப்பட்ட போலீஸ் கதாபாத்திரங்கள் குறித்தும், அவை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்தும் பலமான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. சமூகத்தில் எந்தத் தீங்கு நடைபெற்றாலும் அதில் திரைத்துறையைத் தொடர்புபடுத்த வேண்டுமா என்று கேட்கலாம். ஆனால், நம் சமூகத்தில் திரைப் பிரபலங்களுக்கு இருக்கும் செல்வாக்கு, புறந்தள்ளக்கூடியதல்ல. திரைப்படங்களில் முப்பது நாற்பது ஆண்டுகள் நடித்த அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அரசியலில் இறங்கி, ஆட்சியைப் பிடிக்க நடிகர்கள் துணிந்து கால்பதிக்கும் காலம் இது. இப்படியான காலத்தில் திரைத்துறையினரது பங்களிப்பு குறித்துக் கேள்வி எழுவதும் இயல்பான ஒன்றுதான்.

ஆக்ரோஷமான காவல் துறை அதிகாரிகளை நாயகர்களாகக் கொண்டு நான்கைந்து படங்களை உருவாக்கியவர் இயக்குநர் ஹரி. “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்றா பார்க்கிறியா?” என்று ஆக்ரோஷமாக நடிகர் சூர்யா, ஹரியின் ‘சிங்கம்’ படத்தில் பேசிய வசனம் தமிழர்களின் காதைப் பதம் பார்த்தது. இவரது ‘சாமி’ திரைப்படத்தில் ‘நான் போலீஸ் இல்ல பொறுக்கி’ என, டெபுடி கமிஷனர் ஆஃப் போலீஸ் திருநெல்வேலி, ஆறுச்சாமி வெறியுடன் முழங்குவார். ‘சாமி’ திரைப்படத்தில் ஆறுச்சாமி வலக் காலால் செங்கலை உதைக்க அது படுவேகமாகப் பாய்ந்து சென்று தவறிழைத்த காவல்துறை அதிகாரி அமர்ந்திருக்கும் போலீஸ் ஜீப்பின் கண்ணாடியைத் துளைத்துச் செல்லும்.


நிஜத்தில் இப்படிச் செங்கல்லை உதைத்திருந்தால் அந்த நடிகரின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். குறைந்தது ஒரு மாதமாவது மருத்துவமனையில் கட்டுப் போட்டுப் படுத்திருப்பார். யதார்த்தத்துக்குச் சற்றும் பொருந்தாமல் இப்படித்தான் திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரங்கள் அயோக்கியர்களைத் தெறிக்கவிடுபவையாகவும் அநீதி கண்டு பொறுக்க முடியாமல் நீதியை நிலைநாட்டத் துடிப்பவையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால், நிஜத்தில் பெரும்பாலான காவலர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்? காவல்துறையைப் பெருமைப்படுத்திப் படங்களை உருவாக்கிய இயக்குநர் ஹரியே அதற்காகத் தான் வேதனைப்படுவதாகத் தெரிவித்துள்ளார் எனில், காவல் துறையினரைத் திரைத்துறை எந்த அளவுக்கு விதந்தோதியுள்ளது என்பது தெள்ளத்தெளிவு.

ஆறுச்சாமிக்கெல்லாம் அப்பன் என்று சொல்லத்தக்க பாத்திரத்தில் நடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். ‘மூன்று முகம்’ திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த டி.எஸ்.பி. அலெக்ஸ் பாண்டியன் ‘ஷீலா ஷீலா’ என மனைவியை அழைத்தபடி திரையில் நடந்துவரும்போதே தீப்பொறி பறக்கும். மிடுக்கும் கம்பீரமும் குரலில் தொனிக்க முறுக்கிவிட்ட இரும்புக் கம்பி போல் விரைப்புடன் அவர் நடந்துவரும் காட்சிகளில் திரையரங்குகளில் விசில் சத்தம் காதைக் கிழிக்கும். மனைவியிடமே இப்படி நடந்துகொள்கிறார் என்றால் வில்லன்களை விட்டா வைப்பார், சும்மா பந்தாடிவிட மாட்டாரா? அலெக்ஸ் பாண்டியனின் ஆர்ப்பாட்டத்தை வெளிப்படுத்த, இப்படத்தில் காவல் நிலையத்தில் வில்லன் செந்தாமரையிடம் அவர் பேசும் காட்சி ஒன்றுபோதும். இதே ரஜினி காந்த் நடித்த ‘தர்பார்’ படத்தில் மனித உரிமை அதிகாரிக்கே மிரட்டல் விடுப்பார். அதை விடுங்கள், மணி ரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த ‘தளபதி’ படத்தில் தவறிழைத்த காவல் துறை அதிகாரியை நடு ரோட்டில் கையை வெட்டும் சூர்யா கதாபாத்திரம். “தப்பு செஞ்சா வெட்டு அவன் கையை இனி ஒரு பொண்ணத் தொடுவானா” என வீரம் சொட்டச் சொட்ட வசனம் பேசுவார் ரஜினி காந்த். இந்த ரஜினி காந்த் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது செய்தியாளர்களிடம் என்ன பேசினார், எப்படிப் பேசினார் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.


திரையில் போலீஸ் அக்கிரமத்தைத் தட்டிக்கேட்ட ரஜினி காந்த் நேரில் அரசின் கரத்தை வலுப்படுத்தும் மனிதராகத்தான் முகம் காட்டினார் என்பதை மறந்துவிடக் கூடாது. ஏனெனில், ஏறக்குறைய 20 படங்களில் போலீஸ் கதாபாத்திரமேற்று நடித்த ரஜினிக்குத் திரையில் எப்படி நடிக்க வேண்டும், நேரில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற தெளிவு உண்டு. இந்தத் தெளிவு பார்வையாளர்களுக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி. பார்வையாளர்கள் திரையில் போலீஸ் கதாபாத்திரங்களின் அடாவடியை ரௌடிகளை அடக்கியாளும் துணிவை நேரிலும் பார்க்க விரும்பத் தான் செய்கிறார்கள். ஆனால், நேரில் அப்படியெல்லாம் செய்துவிட முடியாது என்னும் புரிதல் பெரும்பான்மையான பார்வையாளர்களிடம் இல்லை. அதிலும், இளவயதில் காவல் துறையில் பணியில் சேரும் அதிகாரிகளிடம் இந்தப் புரிதல் எந்த அளவுக்கு இருக்குமோ? திரைக்கும் நிஜத்துக்குமான வேறுபாடு அறியாத இளைஞர்களிடம் அதிகாரமும் ஆயுதமும் கிடைக்கும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவை மக்களைப் பாதுகாக்க என்னும் எண்ணத்தைவிட அவற்றைப் பயன்படுத்திப் பார்க்கும் ஆவலை இப்படியான திரைப்படங்கள் தூண்டிவிடுகின்றன.

திரைப்படங்களில் அவர்கள் கண்ட ஆர்ப்பாட்டமான, துடிப்பான வசனங்கள் அவர்களை உசுப்பேற்றியுள்ளன. ஆனால், திரையில் போலீஸ் கதாபாத்திரங்கள் வீராவேசமாகவும் நெருப்பைக் கக்குவது போலவும் பேசுவதும் சண்டையிடுவதும் தங்களைவிட வலுவான மனிதர்களிடம், சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆள்களிடம். திரையில் போலீஸ் கதாபாத்திரங்களிடம் வெளிப்படும் வன்முறைக்கு நியாயமான காரணத்தை இயக்குநர்கள் புகுத்திவிடுவார்கள். எந்த நியாயம் இருப்பினும், ஒரு மனிதரை அடிப்பதோ, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதோ மனித உரிமைகளுக்கு எதிரான செயல் என்பதை போலீஸ் கதாபாத்திரங்களும் புரிந்துகொள்வதில்லை; பெரும்பாலான நிஜக் காவலர்களும் புரிந்துகொண்டதுபோல் தெரியவில்லை. 


நிஜத்தில் இப்படிக் காவல் துறை அதிகாரிகளால் பணபலம், அரசியல் செல்வாக்கு கொண்ட மனிதர்களிடமோ ஆளுமைகளிடமோ சவாடலாகப் பேசிவிட்டுப் பணியில் இருக்க முடியுமா? ஆனாலும், அவர்கள் உள்ளே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் சினிமா போலீஸ் அவர்களைத் தொடர்ந்து தூண்டிக்கொண்டேதான் இருப்பார். ஆகவே, அவர்கள் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் அதைப் பயன்படுத்திப் பார்க்கிறார்கள். எளியவர்கள் கையில் கிடைக்கும்போது, அதிகாரத்தின் ருசியைச் சுவைக்கிறார்கள். அடிப்பதில் குரூர இன்பம் காண்கிறார்கள். கையில் தரப்பட்டிருக்கும் லத்தியும் இடுப்பில் மாட்டப்பட்டிருக்கும் துப்பாக்கியும் ஆபத்துக் காலத்தில் தங்களைக் பாதுகாத்துக்கொள்வதற்குத்தான் என்பதை மறந்துவிட்டு, எளிய மனிதர்கள்மீது அவற்றைப் பிரயோகப்படுத்தி சமூகத்தின் அச்சுறுத்தலாக மாறுகிறார்கள்.

போலீஸ் அதிகாரி என்றால் அவர் சிரிக்கக்கூட மாட்டார், எப்போதும் இறுக்கமாகவே இருப்பார் என்பது போன்ற சித்திரத்தை உருவாக்கியதில் திரைக்கதாபாத்திரங்களுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த இடத்தில் சத்யராஜ் நடித்த ‘வால்டர் வெற்றிவேல்’ திரைப்படத்தை நினைவுகூருங்கள். திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரங்கள் வணிக வெற்றிக்காக நாயக பிம்பத்துடன் உருவாக்கப்படுகின்றன. அதில் ஆண் நடித்தாலும் சரி பெண் நடித்தாலும் சரி, பெரிய நடிகர் முதல் சிறிய நடிகர்வரை எந்த வேறுபாடும் இல்லை. எல்லாவற்றுக்கும் உதாரணங்கள் உண்டு. விஜயசாந்தி நடித்த, மொழிமாற்றப்படமான ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ போன்றவற்றிலும் போலீஸ் கதாபாத்திரம் அப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கும். இயக்குநர் மணி ரத்னம் உருவாக்கிய ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தில் குடும்பப் பகை காரணமாகத் தனது போலீஸ் பதவியைப் பயன்படுத்தும் அசோக் என்னும் கதாபாத்திரம். இப்படியான காட்சிகள் சராசரியான மனிதர்கள் மனத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தீர்த்துக்கொள்ளலாம் எனும் எண்ணத்தைத் தோற்றுவித்துவிடக்கூடும்.

தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினி பேட்டி
என்கவுண்டர் என்ற விஷயத்தையே ‘காக்க காக்க’ திரைப்படம் சமூக விரோதிகளை அழிப்பதற்கான குறுக்குவழியாக முன்வைத்தது. ஆனால், வெற்றிமாறன் தான் இயக்கிய ‘விசாரணை’ திரைப்படத்தில் என்கவுண்டர் என்னும் காவல் துறையின் நடவடிக்கையில் அப்பாவிகள் எப்படி வசமாக மாட்டிக்கொள்கிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தார். போலி வழக்குகள் மூலம் சாமானியர்கள் எப்படிச் சிதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு பாலாஜி சக்திவேலின் ‘வழக்கு எண் 18/9’ சரியான உதாரணம். ‘கிருமி’, ‘காளிதாஸ்’ போல் காவல் துறையின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தும் படங்கள்தாம் காலத்தின் தேவை. ஆனால் என்ன, இவை எண்ணிக்கையில் சொற்பம். சமீபத்தில் வெளியான அமேசான் வெப் சீரிஸ் படமான ‘பாதாள் லோக்’கில் முதன்மைக் கதாபாத்திரமான ஹாதி ராம் சௌத்ரியிடம், காவல் துறை அதிகாரி என்பதைத் தாண்டி ஓரளவு மனிதத்தன்மை வெளிப்படும். அப்படியான மனிதத்தன்மையை வெளிப்படுத்தும் வகையிலான படங்கள் உருவாக்கப்பட வேண்டும். சாமானியர்களைப் பாதுகாத்து, சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் துறை தனக்கான பொறுப்பை மறுப்பதோ மறப்பதோ சமூகத்துக்கு ஊறு விளைவிக்கும். சட்டப்படி நடக்க வேண்டிய காவல் துறையினர் சட்டத்தை மீறித் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வது ஆபத்தானது. இவற்றை எல்லாம் உணர்ந்து, பார்வையாளர்களுக்குச் சரியான புரிதலை ஏற்படுத்தும்வகையில் இனியாவது திரைத்துறையினர் தமது போலீஸ் கதாபாத்திரங்களைச் சற்றுப் பொறுப்புடன் உருவாக்கினால் நல்லது.