இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், மே 27, 2019

நட்சத்திர நிழல்கள் 7: மேரி ஓர் இந்துப் பெண்

மிஸ்ஸியம்மா


தமிழ்த் திரைப்படங்களில் முன்னோக்கி நகர வேண்டிய பெண் கதாபாத்திரச் சித்தரிப்புகள் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்துகொள்ளப் பழைய திரைப்படங்களைப் பார்த்தாலே போதும். முற்போக்கான பெண்களைப் பழைய திரைப்படங்களில்தான் காண முடிகிறது. 1955-ல் வெளியான ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் அப்படியொரு அதிசயமான பெண்ணை நம்மால் காண முடியும்.

எல்.வி பிரசாத் இயக்கத்தில் சாவித்திரி, ஆர்.கணேஷ் (ஜெமினி கணேசன்) நடிப்பில் வெளியான ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தின் கதையையும் திரைக்கதையையும் எழுதியிருப்பவர் சக்ரபாணி. வசனத்தையும் பாடல்களையும் தஞ்சை ராமய்யாதாஸ் எழுதியிருந்தார். இந்துக் குடும்பத்தில் பிறந்த மகாலட்சுமி என்னும் சிறுமி நான்கு வயதில் மாசி மகத்தன்று கும்பகோணத்தில் தொலைந்துபோகிறார். இறை வழிபாட்டுக்கென்று போன இடத்தில் மகாலட்சுமியின் குடும்பத்தினர் குழந்தையைத் தொலைத்துவிடுகிறார்கள். கடவுளும் இதைக் கண்டுகொள்ளவில்லை. பதினாறு ஆண்டுகளாகக் கடவுளுக்கும் வேறு வேலை போல. குழந்தையைக் குடும்பத்துடன் சேர்க்க அவரால் முடியவில்லை. தவறவிட்ட குழந்தை மகா லட்சுமியின் நினைவாக ஓர் ஆரம்பப் பள்ளியை நடத்திவருகிறார் அவளுடைய தந்தை. இந்த வேடத்தைச் செய்திருப்பவர் எஸ்.வி.ரங்காராவ்.

கழுத்தில் புலி நக மாலை அணிந்திருந்த சிறுமி மகாலட்சுமியின் வலது காலில் காசளவு மச்சம் ஒன்று உள்ளது. இந்தக் குழந்தையை நாம் அவளது இருபது வயதில் மேரியாகத் தான் சந்திக்கிறோம். கிறித்தவக் குடும்பத்தில் வளர்ந்த மகாலட்சுமி மேரியானதுடன் பி.ஏ. வரையான படிப்பையும் முடித்திருக்கிறார். அதே வேளையில் பெற்றோருடன் வசித்த மகாலட்சுமியின் தங்கை சீதாவோ பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை; சங்கீதம் கற்றுக்கொள்வதில் மட்டும் ஆர்வமாக இருக்கிறார். வீடுகளுக்குச் சென்று டியூசன் எடுத்து அதில் கிடைக்கும் வருமானத்தில் மேரி பெற்றோரைக் காப்பாற்றுகிறார். அவரது குடும்பத்துக்கு டேவிட் என்னும் மனிதன் கைமாற்றுக்குப் பணம் கொடுத்து உதவுகிறான். மேரியின் மீது அவனுக்குப் பயங்கரக் காதல். ஆனால், மேரியோ அவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.


தன்னுடைய படிப்புக்கு உதவியவன் என்ற காரணத்துக்காக டேவிட்டை மனதாரக் காதலிப்பது போன்ற எந்த அபத்தத்திலும் மேரி ஈடுபடவில்லை. அவனிடம் பெற்ற பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றால் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறான் டேவிட். ஆனால், மேரியோ சிறிதும் அசைந்துகொடுக்கவில்லை; மனத்துக்குப் பிடிக்காத டேவிட்டைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என விடாப்பிடியாக நிற்கிறாள். இரண்டு மாதங்களில் அவனது பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக உறுதிபடத் தெரிவித்துவிடுகிறாள். மேரியின் தாய் தந்தையும் திருமணம் என்பது மேரியுடைய முடிவு என்று சொல்லிவிடுகிறார்கள். இந்தப் படம் வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. சமூகத்தில் இன்னும் இந்த நிலைமை வந்திருக்கிறதா? பெண்களின் திருமணத்தைப் பெண்களே முடிவுசெய்ய முடிகிறதா? அப்படி நடந்திருந்தாலே பல ஆவணக் கொலைகள் தவிர்க்கப்பட்டிருக்குமே? இவ்வளவுக்கும் இந்தப் படம் பெண்களின் பேராதரவுடன் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. திரைப்படத்தில் ரசிக்கும் ஒரு கதாபாத்திரத்தை நிஜ வாழ்வில் ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் சமூகம் தத்தளிக்கிறது போலும்.

மேரிக்கு பாலு என்ற இளைஞன் அறிமுகமாகிறான். அவனும் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டிருப்பவன்தான். இருவரும் ஒரே வீட்டில் டியூசன் எடுக்கிறார்கள். அதனால்தான் இருவருக்கும் பழக்கம். அவர்கள் டியூசன் எடுத்துவந்த குடும்பத்தலைவருக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிவிட்டதால் இருவரும் ஒரே நேரத்தில் வேலையிழக்கிறார்கள். வேறு வேலைக்கு முயன்றுகொண்டிருக்கும் நேரத்தில் மகாலட்சுமி ஆரம்பப்பள்ளி சார்பாக அறிவிப்பு ஒன்று நாளிதழில் வெளியாகிறது. பி.ஏ. படித்த இருவர் ஆசிரியர் வேலைக்குத் தேவை என்றும் அவர்கள் தம்பதியாக இருக்க வேண்டும் என்றும் கணவனுக்கு ஊதியம் ரூ.200. மனைவிக்கு ரூ.250 என்றும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. இதைக் கண்ட பாலு, மேரியிடம் இது குறித்து நயந்து பேசுகிறான். முதலில் கோபம் கொள்ளும் மேரி ஓரிரவு முழுவதும் யோசித்துவிட்டுக் கணவன் மனைவியாக நடிக்கச் சம்மதிக்கிறாள். எப்படியும் ஓ.சி. டேவிட்டிடம் வாங்கிய ரூ.400 கடனை அடைக்க வேண்டும் என்பதாலும் எம்.டி. பாலு ஓரளவு மட்டு மரியாதை தெரிந்தவன் என்று நம்புவதாலும் இதற்கு ஒப்புக்கொள்கிறாள்.

மேரி கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த பற்றுக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு கிறிஸ்து மேல் மட்டுமே நம்பிக்கை இருக்கிறது. பாலுவுக்கோ சாதி, மதம் போன்ற எதன் மீதும் பெரிய மரியைதோ மதிப்போ இல்லை. தந்தையின் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் சாதியின் பெயரைத் தன் பெயரின் பின்னே அணிந்துகொள்ள விரும்பாமல் உதறித் தள்ளிய பாலு பிறப்பால் இந்து. ஆக, இந்து ஆணான பாலுவும் கிறிஸ்தவப் பெண்ணான மேரியும் ஒரே வீட்டில் கணவன் மனைவியாகத் தங்கி மகாலட்சுமி ஆரம்பப் பள்ளியில் பணிக்குச் செல்கிறார்கள். கிட்டத்தட்ட லிவிங் டுகதர் என்பது மாதிரியான வாழ்க்கை.
‘மிஸ்ஸியம்மா’ படத்தைப் பொறுத்தவரையில் மகாலட்சுமி என்ற மேரியின் கதாபாத்திரச் சித்தரிப்பு மிகவும் முன்னோடிப் பண்புகள் நிறைந்தது. பொதுவாக, பிழைப்புக்காகக் கிராமத்திலிருந்து நகரத்துக்குச் செல்வதுதான் வழக்கம், ஆனால் இந்தப் படத்தில் குயின் மேரிஸ் கல்லூரியில் படித்த மேரி பணிக்காக ஆண்டிப் பேட்டை என்னும் கிராமப் பகுதிக்குச் செல்ல நேர்கிறது. இன்றும்கூட ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பது கண்கூடு. ஆனால், பாலுவைவிட மேரிக்கு ஐம்பது ரூபாய் அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. பள்ளி மேலாளர் சம்பளப் பணத்தையும் கணவனிடம் தராமல் மனைவியிடமே தருவார்.

தங்க நகைகள் போட்டுக்கொள்வதில் பிரியமற்ற பெண்ணாகவே மேரி இருப்பார். அர்த்தமில்லாமல் தன் மீது பாசம் காட்டும் மனிதர்களைக் காட்டுப்பூச்சிகள் எனக் கடுமையான சொற்களால் குறிப்பிடும் அளவுக்குத் தனது விருப்பங்களிலும் உரிமைகளிலும் மதிப்பு வைத்திருக்கும் பெண் அவர். ஆனால், நெருக்கடியான சூழல் காரணமாக தனது மதத்தை மறைத்துத் தான் இந்துப் பெண் என்று நடிக்குமளவுக்கு இங்கிதம் தெரிந்தவராகவும் இருக்கிறார்; பொட்டு வைத்துக்கொள்கிறார். சீமந்தம் என்றால் என்ன என்பதே தெரியாத அளவுக்கு சடங்குகளின் அறிமுகமே இல்லாமல் இருபது வயதை அடைந்திருக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தை வியக்காமல் எப்படி இருக்க முடியும்?  பெண் முடியும் என்றால் முடியாது முடியாது என்றால் முடியும் என்பதுபோன்று இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஓரிரு கருத்துகளைத் தவிர்த்துவிடலாம். இந்தக் கருத்து தவறு என்பதைக் காலம் நிரூபித்திருக்கிறது.

கிறிஸ்தவப் பெண்ணும் இந்து ஆணும் ஒரே வீட்டில் வசிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியதால்தான் இந்தப் படத்தில் முதலில் நாயகியாக நடிக்கவிருந்த பானுமதி விலகிக்கொண்டார் என்று ஒரு தகவல் உலவுகிறது. அது உண்மை என்றால், ஒருவகையில் பானுமதி திரையுலகுக்கு நல்லதுதான் செய்திருக்கிறார். இல்லையென்றால் இரண்டாம் நாயகியாக நடிக்கவிருந்த சாவித்திரி கதாநாயகி அந்தஸ்தை அடைந்திருக்க மாட்டார். தமிழ்நாடும் ஒரு நல்ல நடிகையைப் பெற்றிருக்காது. ஆனால், இந்தப் படத்தில் கதாநாயகியாக உயர்ந்த சாவித்திரி இந்தப் படத்தால் வாழ்க்கையில் பெற்ற ஸ்தானத்தை நினைத்தால் வருத்தமே மிஞ்சுகிறது.

திங்கள், மே 20, 2019

நட்சத்திர நிழல்கள் 6: தேன்மொழி ஒரு பொங்குமாங்கடல்

அச்சமில்லை அச்சமில்லை


திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்த பெண் கதாபாத்திரங்களைச் சித்தரித்ததில் கே.பாலசந்தருக்கு முதன்மையான இடம் உண்டு என்பது ஐதிகம். உண்மை என்னவாக இருந்த போதும், வங்காளப் படங்களில் இடம்பெற்றது போன்ற அழுத்தமான, அழியாப் புகழ்படைத்த பெண் கதாபாத்திரங்களை அவர் உருவாக்கியுள்ளார் என்பது தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் ஆழமான நம்பிக்கை. அப்படியான பல கதாபாத்திரங்களில் ஒன்று தேன்மொழி.

தேன்மொழி திருநெல்வேலி மாவட்டத்தின் மலையோரக் கிராமம் ஒன்றைச் சேர்ந்தவள். இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த நாள் அவளைப் பொறுத்தவரை ஒரு துக்க நாள். அரசியலால் வெறுப்படைந்து அவள் அதைத் துக்க நாளாகக் கருதவில்லை. அவளுக்கு அந்த அளவுக்கு அரசியல் ஞானமெல்லாம் இல்லை. அவள் ஆசையுடன் விரும்பிக் கட்டிக்கொண்ட கணவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த நாள் அது என்பதாலும் தனது திருமணநாள் அன்றே தான் கொலைசெய்த நேர்ந்த துயரத்தாலும் அவள் அதைத் துக்க நாளாகக் கருதுகிறாள். 

அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்துக்கு நடிகை சரிதா உயிர் கொடுத்திருந்தார். தேன்மொழியின் உடல்மொழியிலும் அன்றாட நடவடிக்கைகளிலும் பாலசந்தர் தலைகாட்டிக்கொண்டே இருப்பார். அதையும் மீறி சரிதாவின் அகலமான கண்களும் அதில் வெளிப்படும் கோபம், தாபம், ஆசை, நிராசை உள்ளிட்ட பாவங்களும் தேன்மொழியை மறக்க இயலாமல் செய்திருக்கின்றன. 

தேன்மொழி ஒரு நூற்பாலையில் பணியாற்றிவருகிறாள். அவள் செல்லும் வழியில் ஊசிமலை என்னும் கிராமத்தில் ஒரு வீட்டின் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் கரும்பலகையில் தினந்தோறும் நல்ல வாசகம் ஒன்று எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறாள். அந்த வாசகங்களின் வழியே அவற்றை எழுதிவைக்கும் உலகநாதன் அவளுக்கு அறிமுகமாகிறான். தினமும் யாருக்காவது ஒரு நன்மையாவது செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்துவரும் அவனது பண்பு காரணமாக நெக்குருகி விடுகிறாள் தேன்மொழி. அவளுடைய உள்ளத்தில் இடம்பிடித்துவிடுகிறான் உலகநாதன். 


துறு துறுவென்ற விழிகள், ஜிமிக்கித் தோடு, இடப்பக்க மூக்குத்தி, வலக்கையில் சோறு கொண்டுபோகும் தூக்குச்சட்டி, இடக்கையில் துணிப்பை, பின் கொசுவச் சேலைக்கட்டு, தலையில் சூடிய ஆவாரம்பூ, நீளமான ஒற்றைச் சடை அதன் நுனியில் ஒரு ரிப்பன் எனக் கிராமத்து அழகுடனும் மலையருவி போல் பொங்கிவழியும் சூட்டிகையான பேச்சுடனும் துள்ளித் திரிந்துவரும் தேன்மொழியையும் உலகநாதனுக்குப் பிடித்துப்போய்விட்டது. ஒருவரையொருவர் விரும்பிய காரணத்தால் இருவரும் இல்லற வாழ்வுக்குள் பெரியவர்களுடன் ஒப்புதலுடன் நுழைகிறார்கள். 

பிறருக்கு நன்மை செய்யும் தன் பண்பு காரணமாக உலகநாதன் இளம் வயதிலேயே அக்கம்பக்கத்துக் கிராமத்தினரிடையே பெரும் செல்வாக்குப் படைத்தவனாக இருக்கிறான். அவன் என்ன சொன்னாலும் கேட்பதற்கு அந்த மக்கள் தயாராக இருந்தார்கள். இதனாலேயே அவனைத் தங்கள் கட்சிகளில் இணைத்துக்கொள்ள மஞ்சள் கட்சியும் ஊதாக் கட்சியும் போட்டி போட்டன. எல்லாவற்றையும் மறுத்து வந்தான் உலகநாதன். அதையெல்லாம் கண்டு தேன்மொழிக்குத் தன் கணவனை நினைத்துப் பெருமிதமாக இருந்தது. ஆனால், காலத்தின் கணக்கு மாறிக்கொண்டே இருக்குமே. 

தேன்மொழியின் பிரியத்துக்குரிய உலகநாதனுக்கு மஞ்சள் கட்சி மந்திரி பதவி எனும் ஆசை வார்த்தை காட்டியது. போதாதற்குச் சன்மானமாக ஒரு அட்டியலை வேறு கொடுத்தது. அதுவரை திடமாக நின்றுவந்த உலகநாதனின் மனத்தில் ஆளும் ஆசை விருட்சமாக எழத் திடுமென்று விழுந்துவிட்டான். மஞ்சள் கட்சியில் சேர்ந்துவிட்டான். தன் அன்புப் பரிசாக அவளுக்கு அந்த அட்டியலையும் தந்தான். கணவன் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் வாங்கிய பரிசு எனப் பூரித்துப்போன தேன்மொழிக்கு அது வந்துசேர்ந்த அரசியல் பாதை புலப்பட்டபோது வெகுண்டெழுந்தாள். கடவுள் நம்பிக்கை கொண்ட, திருநீற்று நெற்றிக்காரனான உலகநாதனின் அரசியல் முடிவு பெரிய குங்குமப் பொட்டிட்டுத் திரிந்த தேன்மொழியைக் கடுமையாகப் பாதித்தது. அவர்கள் இல்லற வாழ்வின் விரிசலுக்கு அரசியல் அச்சாரமிட்டது.

ஆணாதிக்கச் சிந்தனையால் தடித்துப்போன உலகநாதனின் செவியில் தேன்மொழியின் நல்லெண்ணப் பேச்சுகள் ஏறவேயில்லை. எல்லோருக்கும் நன்மை செய்தே பழக்கப்பட்டிருந்த உலகநாதன் பிறருக்குத் தீமைசெய்யக் கவலைப்படாதவனான். பிறர் நலமே வாழ்வாகக் கொண்டிருந்த அவனுக்கு தன்னலமே பிரதானமாகிப்போனது. மிதிவண்டியில் வலம் வந்துகொண்டிருந்தவனுக்கு புது புல்லட் கிடைத்தது. மஞ்சள் கட்சியிலிருந்து ஊதாக் கட்சிக்கு மாறினான். சிறிய வீடு பெரிய காரவீடாக மாறியது. அரசியல் செல்வாக்கு அவனைச் செல்வந்தனாக உயர்த்தியது. ஆனால், அவனிடம் குடிகொண்டிருந்த நல்ல பண்புகள் ஒவ்வொன்றாகக் காலாவதியாகிக்கொண்டே இருந்தன. அவனது சிந்தையில் நஞ்சு கலந்தது கண்டு தேன்மொழி செய்வதறியாது திகைத்தாள். அடுப்பாங்கரைக்கும் படுக்கையறைக்கும் பொண்டாட்டி போதும் எனும் முடிவுக்கு வந்தவனிடம் எதிர்த்துப் பேசிப்பார்த்தாள் தேன்மொழி. எதுவும் அவள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. 


பெண்டாட்டியை ஓரங்கட்டிவிட்டு வேறொரு பெண்ணுடன் அதே வீட்டில் வாழத் தொடங்கினான். கணவன் ஊராருக்குக் கெடுதல் செய்யும்போது எதிர்க்கேள்வி கேட்ட தேன்மொழி அவன் தனக்குத் துன்பமிழைத்தபோது பொறுத்தே போகிறாள். தேன்மொழி ஏன் அப்படிப் பொறுத்துப்போக வேண்டும்? அதுதானே மரபு! அவள் என்னதான் பெண்ணுரிமை பேசினாலும் மரபைக் கைவிட முடியாதே? பெண்ணெனப் பட்டவள் தட்டுக்கெட்டுத் திரியும் கணவன் தீயவழிக்குப் போகும்போது எல்லாத் துயரங்களையும் பொறுத்துக்கொண்டு அவனுக்கு நல்வழி காட்ட வேண்டியதிருக்கிறதே. வந்தவள் வலுத்தாள் இருந்தவள் இழந்தாள் என்ற கதையாக ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறாள் தேன்மொழி. 

சொல்வாக்குத் தவறும் தனது போக்கு காரணமாக ஊராரிடையே செல்வாக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறான் உலகநாதன். ஆனால், அரசியலால் கிடைத்த அனுகூலங்களை அனுபவித்தவன் அதை இழக்க விரும்பவில்லை. அவற்றைத் தக்கவைக்க தகாத வழிகளில் தயங்காமல் நடைபோடுகிறான். பழிபாவத்துக்கு அஞ்சாமல் கொலைபாதகத்தில் ஈடுபடுபவனாக மாறுகிறான். இளம் பெண்ணொருத்தியைக் கொன்று சாதிச் சண்டைக்கு வித்திடுகிறான். இவை எல்லாம் தேன்மொழியில் காதுக்கும் வருகின்றன. தேனாக உலகநாதனுக்குத் தித்திப்பை வழங்கியவள் தேளாக மாறி விஷம் கொட்ட வேண்டிய சூழலும் வருகிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தேன்மொழி பொங்குமாங்கடலாகிறாள். அந்தச் சுதந்திர நாளன்று மேடையில் ஆர்ப்பரிக்கும் அருவியாக உரை நிகத்தும் உலகநாதன் பொங்குமாங்கடலில் சிக்குகிறான். அவனுக்கு மாலையிடச் சென்ற தேன்மொழி அவனை மீளா உலகத்துக்கு அனுப்பிவைக்கிறாள். அவனிடமிருந்து அந்த ஊரை விடுவித்துவிட்டு, திருமண பந்தத்திலிருந்து விடுதலை பெற்ற தேன்மொழி சிறைக்குச் செல்கிறாள். இப்போதெல்லாம் உலநாதன்களுக்குப் பஞ்சமில்லை தேன்மொழிகள் எங்கே மறைந்திருக்கிறார்களோ? 

கல்யாணப் பொண்ணு போல் பொட்டுவைத்து பூச்சூடி கணவனைக் கொல்ல மேடைக்கு வந்த தேன்மொழி அவனைக் கொன்றுவிட்டு பூவையும் பொட்டையும் இழந்து சிறைக்குச் செல்லும் கோலம் தான் தேன்மொழியின் கதாபாத்திரத்தைச் சிதிலப்படுத்துகிறது. அதே கல்யாணப் பொண்ணு கோலத்திலேயே அவள் சிறைக்குச் சென்றிருக்கலாம். எதற்கும் அச்சப்படாத தேன்மொழிக்கு ஏன் அந்தக் கைம்பெண் கோலம்?

திங்கள், மே 13, 2019

நட்சத்திர நிழல்கள் 5: சகுந்தலாவின் பாதையில் வந்த ராதா

விதி


திரைப்படத்தைக் கண்களால் காணும் தலைமுறைக்குக் காதுகளால் திரைப்படம் கேட்ட கதை தெரியுமோ தெரியாதோ? சினிமாவைக் கேட்ட அனுபவம் கொண்டவர்கள் ஒலிச்சித்திரத்தை நினைவில் தேக்கிவைத்திருப்பார்கள். சரஸ்வதி சபதம் கதை வசனம் ஒலிக்காத தெருக்கள் தமிழகத்தில் இருக்குமா? அதைப் போலவே சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம் படமும் கதை வசனத்தில் கொடிகட்டிப் பறந்தது. அந்த வரிசையில் வைக்கத்தக்க படம் கே விஜயன் திரைக்கதை இயக்கத்தில் சுஜாதா, பூர்ணிமா ஜெயராம் மோகன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் 1984-ல் வெளியான விதி. இதன் வசனம் ஆரூர் தாஸ்.

இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள்கூட இந்தப் படத்தின் நீதிமன்றக் காட்சிகளைக் கதை வசனமாகக் கேட்டிருப்பார்கள். இந்தப் படத்தை அறியாத ஒருவர் தமிழ்நாட்டில் இருந்தால் சந்தேகமே வேண்டாம் அவர் தொண்ணூறுகளுக்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். பெண்ணுரிமையை மையமாகக் கொண்ட இந்தக் கரு தெலுங்கு எழுத்தாளர் டி.காமேஸ்வரியின் மனத்தில் உதித்தது. அவரது கதையே நியாயம் காவலி என்னும் பெயரில் சாரதா, ராதிகா, சிரஞ்சீவி உள்ளிட்டோர் நடித்த திரைப்படமாகி 1981-ல் வெளிவந்தது. இதன் மறு ஆக்க உரிமையைப் பெற்றே தயாரிப்பாளர் கே. பாலாஜி இந்தப் படத்தைத் தமிழில் தயாரித்திருக்கிறார்.

ராதா எனும் இளம்பெண்ணை ராஜா எனும் இளைஞன் துரத்தித் துரத்திக் காதலிக்கிறான். தமிழ்ப் பெண்ணான ராதா முதலில் மறுக்கிறாள். வழக்கமாகத் தமிழ் ஆண்கள் எடுக்கும் அதே ஆயுதத்தை ராஜா எடுக்கிறான். அவள் இல்லாவிட்டால் தான் இறந்துவிடுவதாக மிரட்டுகிறான். ராதா அதற்கு இரங்காமல் இருந்திருந்தால் அவனுக்கு இணங்க வேண்டிய தேவை எழுந்திருக்காது. ஆனால், ராதாவோ உண்மையிலேயே அப்படிச் செய்துவிடுவானோ எனப் பயந்து அவனைப் பார்க்கச் சென்றுவிடுகிறாள். அங்கிருந்து தொடங்குகிறது அவளது துயரம்.

 
யாரைக் கல்லால் அடித்துத் துரத்தவைத்தாளோ அந்த ராஜாவைக் காதலிக்கத் தொடங்குகிறாள். அவனது தூண்டுதலில் மகாபலிபுரம் செல்கிறாள். இருவரும் கடலில் குளிக்கிறார்கள். ஈர உடையுடன் உல்லாச விடுதியில் அறை எடுத்துத் தங்குகிறார்கள்; சுகம்காண்கிறார்கள். அதுவரையான அவனது மனச்சுமை குறைந்துவிடுகிறது அவளது சுமை கூடிவிடுகிறது. திருமணத்துக்காக ராஜாவை ராதா வலியுறுத்துகிறாள். ராஜா நழுவுகிறான். அவனது சுயரூபம் தெரியத் தொடங்குகிறது. ராதாவின் வீட்டில் உண்மை தெரிந்து கலவரமாகிறது. இதனிடையே தான் கர்ப்பமானது தெரிந்து அதிர்கிறாள் ராதா.

அப்படியே ஒடுங்கிப்போக ராதாவின் தன்மானம் இடம்கொடுக்கவில்லை. தன்னை நம்பவைத்து ஏமாற்றிய ராஜா போன்ற ஆணின் கயமைத்தனத்தைச் சந்தி சிரிக்கவைக்காமல் விடப்போவதில்லை என்ற எண்ணம் அவளது மனத்தை ரௌத்திரப்படுத்துகிறது. கொந்தளிப்பான மனநிலையில் அர்த்த ராத்திரியில் வழக்கறிஞர் சகுந்தலா தேவியை நாடிச் செல்கிறாள். பெண்ணுரிமைக்காகப் போராடுவதற்காகத் திருமணத்தைக்கூடத் தவிர்த்துவிட்டு வாழும் பெண்மணி அவர். ராதாவின் கதையைக் கேட்ட சகுந்தலா துணுக்குறுகிறார். அவளுக்கு உதவுவதாக வாக்களிக்கிறார். ராஜாவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கிறார்.

சகுந்தலா கடந்துவந்த பாதையிலேயே ராதாவும் நடந்துவந்திருக்கிறாள். இருவரது மனத்திலும் ஒரே முள் தைத்திருக்கிறது. ராதாவின் கதை சகுந்தலாவின் கதையை ஒத்ததாகவே இருக்கிறது. சகுந்தலாவும்  ஒருவனால் பாதிக்கப்பட்ட பெண்ணே. ராதாவை ஏமாற்றிய அந்த ராஜாவின் தந்தையான வழக்கறிஞர் டைகர் தயாநிதிதான் சகுந்தலாவின் வாழ்வுடன் விளையாடியவர். தான் ஏமாற்றப்பட்ட நேரத்தில் கொதித்து எழ முடியாத சகுந்தலாவுக்கு ராதாவின் தைரியம் நம்பிக்கை அளிக்கிறது. அந்த நம்பிக்கை தந்த துணிச்சலால் எல்லோரும் நிறைந்த நீதிமன்றத்தில் தன் வாதத்தை ஆணித்தரமாக வைக்கிறாள். தான் பலியாடப்பட்ட கதையையும் நீதிமன்றத்திலேயே தெரிவிக்கிறாள். அதுவரை தன் மகளையே வளர்ப்பு மகள் என்று சொல்லிவந்த பரிதாபக் கதையை ஊரறிய உரைக்கிறாள்.


வாதத் திறமையால் ராதாவுக்கு வெற்றி தேடித் தருகிறாள். ராஜாவுக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவிக்கிறது. ராஜா ராதாவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் ராஜாவைத் திருமணம் செய்துகொள்வதும் மறுப்பதும் அவளது விருப்பம் என்றும் நீதிமன்றம் கூறுகிறது. ராதாவைப் பொறுத்தவரை அந்த ஏமாற்றுக்காரனைக் காதலனாக வரித்தது தான் செய்த தவறு என்பதால் அதே கயவனைக் கணவனாகக் கொள்வதில் அவளுக்கு விருப்பம் இல்லை. அவள் மறுத்துவிடுகிறாள். ஆனால், தன் குழந்தைக்குத் தகப்பன் ராஜா தான் என்பதை அறிவித்த நிம்மதியில் தன் சொந்த வாழ்வைத் தொடர்கிறாள். வழக்கில் வெற்றி தேடித்தந்த மகிழ்ச்சியில் தன் மகள் மேகலையை ராதா கையில் ஒப்படைத்துவிட்டுக் கண் மூடிவிடுகிறாள் சகுந்தலா.

தான் கற்பிழந்துவிட்டதாகவும் களங்கப்பட்டுவிட்டதாகவும் ராதா குமுறுகிறார். ஆனால், ஒரு காட்சியில்கூட ராஜா தன் கற்பு பறிபோனதைப் பற்றிக் கவலைப்படவேயில்லை. மீண்டும் மீண்டும் அதைப் பறிகொடுக்க அவன் தயாராகவே இருக்கிறான். இதுதான் நமது சமூகம். இப்படித்தான் இருக்கிறது நமது பண்பாடு. தவறிழைத்த ராஜாவின் குடும்பத்தில் அவனுடைய தந்தை டைகர் தயாநிதி தன் மகனுக்குப் பக்கபலமாக இருக்கிறார். மகன் செய்த தவறைப் பெரிதுபடுத்தாமல் அவனுக்காக வழக்கில் தானே ஆஜராகிறார். ராதாவுடைய தந்தையோ குடும்ப மானமே பறிபோய்விட்டதாகப் புலம்புகிறார். தன் பெண்ணை ஒருவன் ஏமாற்றியபோது அது வெளியில் தெரிந்துவிடக் கூடாதே என்பதுதான் அவரது  கவலையாக இருக்கிறது. அவளுக்குக் கருக்கலைப்பு செய்து திருமணம் செய்து கொடுத்துவிடவே துடிக்கிறார். அதற்கு ராதா சம்மதிக்காவிட்டால் தான் இறந்துவிடுவதாக மிரட்டுகிறார். எப்படியாவது அதிலிருந்து தன் குடும்பம் தப்பித்தால் போதும் என்ற பரிதவிப்புதான் அதில் மேலிடுகிறது. தன் பெண்ணை ஒருவன் நம்பவைத்துக் கழுத்தறுத்திருக்கிறானே என்ற கோபம் அவருக்குத் துளிக்கூடவரவில்லை.

சகுந்தலாவை வஞ்சித்த டைகர் தயாநிதியும் வேறொரு திருமணம் செய்துகொள்கிறார்; ராதாவை வஞ்சித்த ராஜாவும் இன்னொரு பெண்ணை மணந்துகொள்கிறார். ஆனால், சகுந்தலாவும் ராதாவும் தனிமரங்களாகவே வாழ்கிறார்கள். சகுந்தலாவுக்கும் ராதாவுக்கும் தத்தமது குழந்தைகளை வளர்ப்பதே ஆத்ம திருப்தி தரும் பணியாக  மாறிவிடுகிறது. அதுவும் வஞ்சித்தவர்களின் வழியாக வந்த வாரிசுகளை. சகுந்தலாவும் ராதாவும் ஏன் வேறொரு திருமணம் செய்துகொள்ளாமலே வாழ வேண்டும்? அவர்கள் செய்த தவறுதான் என்ன?

ராஜா செய்தது தவறு என்று தெரிந்தும் டைகர் தயாநிதி தன் மகனைத் தட்டிக்கேட்டிருந்தால் ராதா நீதிமன்றத்தின் படியேற நேர்ந்திருக்காதே. ஒருவேளை தன் மகளுக்கு ராதா நிலைமை ஏற்பட்டிருந்தால் தயாநிதி என்ன செய்திருப்பார்? சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளுக்குக் காரணம் விதி என்று யாரும் தப்பிக்க இயலாது ஆண் குழந்தையைப் பெற்ற பெற்றோர் தங்கள் குழந்தையை வளர்ப்பதில் காட்டும் மெத்தனமே அத்தகு நிலைமைக்குக் காரணமோ என்ற நினைக்கவைக்கிறது விதி. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி எனும் இந்த ஓரவஞ்சனை சமூகத்தில் ஏன் தொடர்கிறது எனும் கேள்வியை விதி எழுப்புகிறது.

திங்கள், மே 06, 2019

நட்சத்திர நிழல்கள் 4: ஆனந்தியின் வாழ்வு ஒரு செய்தி

விடுகதை


சமூகத்துடன் இணைந்து வாழ்பவர்களுக்குப் பெரிய சிக்கல்கள் எழுவதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதன் கருத்துகளுடன் ஒத்துப்போய்விடுகி்றார்கள். அவர்களுக்கு அவ்வப்போது எழும் சின்னச் சின்ன சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும் சமூகம் தானாகவே முன்வந்து கைகொடுக்கும். ஆகவே, பெரும்பாலானோர் சமூகம் முன்வைக்கும் மரபுகளைப் பின்பற்றியே வாழ்ந்து மடிந்துவிடுகிறார்கள். அதற்கு மாறாகச் சிந்திக்க அவர்களது மனம் துணிவதில்லை. ஆனால், சிலரது மனமோ மரபு வலியுறுத்தும் விதிமுறைகளை மீறுவதற்கு எத்தனிக்கும். அத்தகைய மனம் வாய்க்கப் பெற்றோர் சமூகம் அதிகம் விரும்பாத வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் விருப்பம் கொண்டுவிடுகிறார்கள். அந்தச் சிலர் மீது சமூகத்தின் பார்வை பட்டபடியே இருக்கும். அப்படிச் சமூகத்தின் பார்வைக்குத் தப்பாத இளம்பெண் ஆனந்தி.

1997-ல் வெளியான ’விடுகதை’ திரைப்படத்துக்காக ஆனந்தியை உருவாக்கியவர் இயக்குநர் அகத்தியன். ஆனந்தியாக உலவியவர் நடிகை நீனா. ஆனந்தியின் வாழ்க்கை அவள் வயதையொத்த இளம்பெண்களின் வாழ்விலிருந்து பேரளவு வேறுபட்டது. ஆனந்தி சரியான அப்பா பொண்ணு. அவரிடம்தான் அவள் எல்லாக் கதைகளையும் பேசுவாள். அவர்கள் உலகத்தில் அவரும் அவளும்தான். தந்தையின் நண்பர்கள் அவளுக்கும் நண்பர்கள். அவர்களுடன் வாயாடுவதிலும் அவளுக்குப் பிரியம் உண்டு. ஆக, ஆனந்திக்கு வாய்த்ததெல்லாம் வயதைத் தாண்டிய சிநேகம்தான்.

அவளுடைய தந்தையான ராமநாதன் ஒரு மனோதத்துவ நிபுணர். வாழ்வை மிகவும் அதன் போக்கில் வாழும் மனிதர். அவரது கவனிப்பிலும் அக்கறையிலும் ஆனந்தி துணிச்சலுடனும் வெட்கப்படவே தெரியாமலும் வளர்ந்திருந்தாள். கல்லூரியில் அவளுடன் படிக்கும் மாணவர்கள் ஓரிருவர் அவள்மீது மையல் கொண்டு மயக்கத்துடன் அவளை அணுகியபோது, அதைச் சரியாக எதிர்கொண்டு அது காதல் அல்ல என்பதை அவர்களிடம் விளக்கி அவர்களிடமிருந்து விலகியவள். அந்த அளவுக்கு வாழ்க்கை பற்றிய, ஆண் பெண் உறவு பற்றிய புரிதலைப் பருவ வயதிலேயே பெற்றுக்கொண்ட பெண் ஆனந்தி. 

இரண்டு முறை மாரடைப்பை எதிர்கொண்ட ராமநாதன் எப்போது வேண்டுமானாலும் வரவிருந்த மரணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கிக் காத்திருந்த மனிதர். மரணம் எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டும் என்பதால் அவர் உறங்கும்போதுகூடக் கதவைப் பூட்டாமல் வெறுமனே சாத்திவைத்து உறங்கும் பழக்கம் கொண்டவர். அப்பாவைப் பிரியப்போவது குறித்து ஆனந்திக்கு வருத்தமோ பயமோ எழும்போதெல்லாம் அவர் ஆனந்தியை உற்சாகப்படுத்துவார். மரணம் இயல்பானது என்பதையும் அது நிம்மதியானது என்பதையும் உணர்த்துவார். ஆனந்தியும் அதைப் புரிந்துகொண்டு அத்தகைய சம்பவங்களை மிகவும் இயல்பாக எதிர்கொள்ளத் தன்னைப் பழக்கப்படுத்தியிருந்தாள்.


ஆனந்தி பயந்த நாளும் ராமநாதன் எதிர்நோக்கிய நாளும் எதிர்பட்டபோதுகூட அவள் அதைச் சாதாரணமாக எதிர்கொண்டாள். தந்தை மரணமடைந்த அன்று அவர் கையெழுத்திட்டுத் தந்திருந்த வங்கிக் காசோலையைப் பணமாக மாற்ற வங்கிக்குச் சென்றுவந்தாள். தந்தையின் மரணத்துக்காக அவள் பெரிய கும்பலைக் கூட்டவில்லை; பெரிதாக அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. சொல்லப்போனால் அவள் அழக்கூடவில்லை. வயதுக்கு மீறிய பக்குவத்துடன் நடந்துகொண்டாள். மறுநாளே கல்லூரிக்கு வந்துவிட்ட அவளை எல்லோரும் வியப்புடன் பார்க்கிறார்கள். அவள் இயல்பாக இருந்தபோதும் அவளைச் சுற்றியிருந்த மனிதர்கள் அவளை இயல்புக்கு மாறான நடத்தை கொண்ட பெண்ணாகவே பார்க்கிறார்கள். அது அவளைச் சற்றுப் பாதித்தது. ஆனாலும், அவள் அதை சட்டை செய்யவில்லை.

அப்படியான சூழலில் 18 வயதான ஆனந்தியின் வாழ்க்கைக்குள் வருகிறார் நீலகண்டன். அவருக்கு வயது 41. ராணுவத்தில் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வில் வந்திருக்கும் மனிதர் அவர். ஆனந்தியின் வீட்டுக்கு வாடகைதாரராக வருகிறார் அவர். கிட்டத்தட்ட தன் தந்தை வயது கொண்ட நீலகண்டனை ஆனந்திக்குப் பிடித்துப்போய்விட்டது. தனிமையில் இருக்கும் நீலகண்டனுக்கும் ஆனந்தி ஒரு சாய்வாக இருந்தாள். ராணுவத்திலிருந்தே அவருடன் ஒட்டிக்கொண்ட உணவுக்கு முன்னான குடிப்பழக்கத்தைக்கூட அவள் பொருட்படுத்தவில்லை. அவர் மது அருந்தும்பொழுதில் அவரருகிலேயே இருந்து உரையாடுவாள். தன்னை மறந்து நீலகண்டன் தன் வாழ்வு குறித்து புலம்புவதற்குக் காது கொடுப்பாள்.

தனக்கான துணையாக நீலகண்டனே இருப்பார் என ஆனந்தி முடிவெடுத்தபோது, நீலகண்டன் முதலில் அதை மறுக்கிறார். வயது காரணமாக அவர் தயங்குவதைப் புரிந்த ஆனந்தி தன் மனத்தை அவருக்கு உணர்த்தி, சம்மதம் பெறுகிறாள். அவளுடைய தந்தையின் நண்பர்களுக்கே அந்த முடிவு சிறிது அதிர்ச்சியைத் தரத்தான் செய்தது. ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்த ஆனந்தியின் மனத்தை மாற்ற அவர்களாலும் முடியவில்லை.

திருமணத்துக்காகப் பதிவு அலுவலகம் சென்றபோது, அவளுக்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் நான்கு மாதம் இருந்ததால் உடனடியாகப் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதை விளக்குகிறார் பதிவுத் துறை அதிகாரி. ஆனால், ஆனந்திக்குத் திருமணம் என்ற சடங்கில் பெரிய நம்பிக்கை இல்லை. மனம் ஒத்துப்போனபின் இத்தகைய சடங்குகளுக்காகக் காத்திருக்க வேண்டுமா எனக் கேட்டபடி நீலகண்டனுடன் வாழ்வைத் தொடங்க முடிவுசெய்துவிட்டாள். சட்டம், திருமணம் போன்ற மரபுவழிவந்த சடங்குகளுக்காகத் தன் வாழ்வின் இன்ப துன்பங்களைப் பலிபீடத்திலேற்ற அவள் விரும்பவில்லை. சட்டரீதியான பாதுகாப்பு தனக்குத் தேவையில்லை என நம்புமளவுக்கு அவளுக்கு நீலகண்டன்மீதும் வாழ்க்கை பற்றிய தனது புரிதல் மீதும் நம்பிக்கை இருந்தது. ஆகவே, இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கிவிட்டார்கள்.  

அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தபோதும் நான்கு பேர் நான்குவிதமாகத் தான் பேசினார்கள். கல்லூரிப் பேராசிரியர் அவள் தவறான முடிவெடுத்துவிட்டதாகச் சொல்கிறார். ஆனந்தி நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பாளா என்ற சந்தேகம் அவளுடைய கல்லூரி நண்பர்களுக்கு எழுந்தது. அந்தச் சந்தேகம் நீலகண்டனுக்கே வந்தபோது, ஆனந்தி அதிர்ந்துபோனாள்; ஆனாலும் சுதாரித்துக்கொண்டாள். வெளியில் தங்களை ஜோடியாகப் பார்ப்பவர்களுக்குத் தாங்கள் அப்பாவும் பொண்ணுமாகவே தோன்றுகிறோமோ எனும் சந்தேகம் தரும்படியான ஓரிரு நிகழ்வுகள் நீலகண்டனைப் பாதித்தன. அவருக்குத் தான் தவறு செய்துவிட்டோமோ எனும் எண்ணம் ஏற்படுகிறது. ஆனந்தியைத் தன்னால் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியுமா என்ற ஐயம் அதிகரிக்கிறது. அவளிடமிருந்து விலகிட முடிவுசெய்துவிட்டார். அவளுக்கு ஏற்ற ஒருவனை அவள் திருமணம் செய்துகொண்டால் அவளுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறார். அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆனந்தி ஒத்துழைக்கவில்லை.

திருமணம் என்பதை உடம்புக்கானது என்று மட்டும் ஆனந்தி நினைக்கவில்லை. அதை அவள் நீலகண்டனுக்கு உணர்த்தி அவரைத் தன்னுடனேயே தங்கவைக்கிறாள். வாழ்க்கையெனும் விடுகதைக்கு விடை தெரியாமல் தடுமாறுபவர்களுக்கு மத்தியில் ஆனந்தி அந்த விடுகதையின் விடையை அறிந்தவளாக இருக்கிறாள். நான்கு பேர் சொல்வதற்காகவெல்லாம் நமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டே இருக்க முடியாது நம் மனதுக்குச் சரியென்றுபடுவதன்படி செயல்படுவது நல்லது எனும் தெளிவு ஆனந்தியிடம் இருந்தது. அந்தத் தெளிவுதான் ஆனந்தி அவளைப் போன்ற பெண்களுக்குத் தரும் செய்தி.