தனி ஒருவனாகப் பயணங்களில் ஈடுபடும் புகைப்படக் காரரான கே.ராமச்சந்திரன் (விஜய் சேதுபதி) திடீரெனத் தான் படித்த பள்ளிக்குச் செல்கிறார். பழைய நண்பர்களைப் பார்க்கத் தோன்றுகிறது. எல்லோரையும் வாட்ஸ் அப் வழியே பிடிக்கிறார். நண்பர்கள் ஒரு ரீயூனியனுக்குத் திட்டமிட்டு அதை நடத்துகிறார்கள். இதன் வழியே பள்ளிப் பருவத்து நாட்களை அசைபோடுகிறார்கள். பத்தாம் வகுப்பில் பிரிந்த ராமச்சந்திரனும் ஜானகிதேவியும் (திரிஷா) மீண்டும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். ஓர் இரவு முழுவதும் ஒன்றாக நாளைச் செலவிடுகிறார்கள். இந்தத் தருணத்தை ஒரு சிறுகதைபோல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
மிகவும் சாதாரணக் கதை தான். ஆனால் திரைக்கதையில் சில தருணங்களைச் சுவாரசியமான தன்மையில் தந்திருப்பதால் படம் தப்பித்துவிடுகிறது. ரீ யூனியனில் நண்பர்கள் அனைவரையும் விட்டுவிட்டு ராமும் ஜானுவும் ஒன்றாகக் கழிக்கும் அந்த இரவுதான் படத்தின் பலம். அதுவும் ராமின் மாணவிகள் சூழ்ந்திருக்கும் காட்சியில் தன்னை ராமின் மனைவியாகவே காட்டிக்கொண்டு திரிஷா பேசும் காட்சி ருசிகரம்.
பள்ளிப் பருவத்தில் ராமச்சந்திரனாக நடித்திருக்கும் ஆதித்யா பாஸ்கர், ஜானகியாக நடித்திருக்கும் கௌரி உள்ளிட்ட அனைவரும் பலருக்கும் பள்ளிப் பருவ நினைவுகளைக் கிளறிவிட்டுவிடுகிறார்கள்.
பள்ளியில் பலமுறை ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டும் ஒரு முறைகூடப் பாடாத யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே பாடலை அந்த இரவில் ஜானு பாடும் தருணமும் ராமின்பரவசமும் ரசனையானவை. காதலித்தவனைத் தனக்குத் திருமணமான பிறகு சந்திக்கும் வேளையில் ஏற்படும் அத்தனை உணர்வுகளையும் கொட்டியிருக்கிறார் திரிஷா. நிறைவேறாத காதலை நினைத்தபடியே வாழ்வைக் கடக்கும் ராமச்சந்திரனாக விஜய் சேதுபதிக்கு வித்தியாசமான வேடம். அதை முழுமையாக்கிக் கொடுத்திருக்கிறார். விஜய் சேதுபதியும் திரிஷாவும் படத்தை முழுமையாகத் தோளில் தாங்கி நகர்த்தியிருக்கிறார்கள்.
இரவில் ராம், ஜானு இரவும் வரும் நகர்வலக் காட்சிகளில் ஒளிப்பதிவும், இசையும் காட்சிகளை அழகுபடுத்தியிருக்கின்றன.கல்லூரியில் ஜானுவை ராம் சந்திக்க முயலும் ஒரே சம்பவத்தை மூன்று கோணங்களில் காட்டும் அம்சம் திரைக்கதையில் மெருகு. தொண்ணூறுகளில் தேவாவும் ஏ. ஆர். ரஹ்மானும் வந்துவிட்டார்கள் என்றபோதும் இளையராஜா பாடல்களையே வைத்து அந்தக் காலக் கட்டத்தைக் காட்டியிருப்பது நெருடல்.
காதலை அளவுக்கு அதிகமாகப் புனிதப்படுத்தியிருப்பதும், மெலோ டிராமாவைத் திகட்டத் திகட்டத் தந்திருப்பதும் அலுப்பு. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ரசிகர்களுக்கு ஒரு ஆட்டோகிராப் தேவைப்படுகிறது. அதை உணர்ந்து, காதலுக்கு முன்னர் காலம் எம்மாத்திரம் என்ற பம்மாத்தைப் பரவசமான அனுபவமாகத் தந்திருக்கும் படம் 96.