திரைப்படத்தைப் பொறுத்தவரை புதிய கதைகள் என எவையுமே இல்லை. எல்லாவற்றையுமே நம் முன்னோடிகள் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள். திரைக்கதையில் மட்டும்தான் புதிது புதிதாக எதையாவது சொல்ல முடியும். எத்தனையோ திரைக்கதைகளைப் படித்துவிட்டு எவ்வளவோ திரைப்படங்களைப் பார்த்துவிட்டு ஒரு திரைக்கதை அமைக்க அமர்ந்தாலும் உருவாகப்போகும் புதிய திரைக்கதை பழையவற்றிலிருந்து மாறுபட்டு அமைய வேண்டும். இல்லையென்றால் திருப்தி கிடைக்காது. திரைக்கதைகளைப் படிப்பதும் திரைப்படங்களைப் பார்ப்பதும் ஏற்கெனவே எந்தெந்தக் கருப்பொருட்களில் எல்லாம் படங்கள் வந்துள்ளன என்பதை அறிந்துகொள்ள மட்டுமே உதவும். அவற்றைப் பார்த்துக் காட்சிகளை அப்படியே சுடும்போது படைப்பாளியின் தராதரம் வெளிப்பட்டுவிடும். ஷங்கர் பெரிய இயக்குநர் என அறியப்பட்டிருக்கிறார். ‘அந்நிய’னில் விக்ரமை ‘தி செவன்த் சீ’லின் மரணக் கதாபாத்திர கெட்டப்பில் வெளிப்படுத்தும்போது சட்டென்று எரிச்சல் ஏற்பட்டுவிடுகிறது. யோசிக்கவே மாட்டார்களா அப்படியே எடுத்துவைத்துவிடுகிறார்களே எனச் சலிப்பாக இருக்கிறது. ஒரு கதாபாத்திர வடிவமைப்புக்கே இப்படி என்றால் முழுப் படத்தையும் உருவிப் படம் பண்ணினால் ரசிகர்கள் படைப்பாளிகளை எப்படி மதிப்பார்கள்?
தமிழில் வித்தியாசமான படங்களுக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால், தமிழ்ப் படைப்பாளிகளாலோ படங்களின் தலைப்புக்குக்கூட மெனக்கெட முடிவதில்லை. ஏற்கெனவே வந்து வெற்றிபெற்ற படங்களின் தலைப்புகளை அப்படியே வைத்துக்கொள்கிறார்கள். எழுபது எண்பது வருடங்களுக்கு முன்னர் வந்த படங்களின் தலைப்புகளை மறுபடி பயன்படுத்தினால் பரவாயில்லை. எண்பதுகளில் வந்த படங்களில் தலைப்புகளையே மறுபடியும் பயன்படுத்திவிடுவது புதிய விஷயங்களை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு அவை கிடைக்கும்போது சட்டென்று பற்றிக்கொள்வார்கள். எப்போதுமே இந்திப் பாடல்களில் மூழ்கிக் கிடந்த சினிமா ரசிகர்களைத் தமிழ்ப் பாடல்களைக் கேட்கச் செய்ய முடிந்திருந்தது இளையராஜாவால். இளையராஜாவை மிஞ்சி என்ன செய்துவிட முடியும் என எண்ணியிருந்தால் ஒரு ஏ.ஆர்.ரஹ்மான் உருவாகியிருக்க மாட்டார். மாஸ்டர்களை மதிக்க வேண்டும் அதே நேரத்தில் அவர்களை மிஞ்சும் வகையில் படங்களை உருவாக்க முயல வேண்டும்? தமிழில் மிக அரிதான வகையிலேயே வித்தியாசமான களங்களில் படங்கள் உருவாக்கப்படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்றொரு படம் வந்தது. பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து, நடித்த படம். அது வணிகரீதியாக வெற்றிபெற்ற படமல்ல. ஆனால், புதிதாக எதையாவது தர வேண்டும் என்ற உந்துதலில் உருவாக்கப்பட்ட படம். அதுவரையிலும் தமிழ் இயக்குநர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தையும் கல்லிடைக்குறிச்சியையும் சுந்தரபாண்டிய புரத்தையும் குற்றாலத்தையும் அழகாகக் காட்டி வந்தார்கள். ‘ஆரஞ்சு மிட்டா’யில் அதே திருநெல்வேலி மாவட்டம்தான். அதே அம்பாசமுத்திரம்தான். ஆனால், அந்தப் படத்தில் தென்பட்ட நிலம் வேறு படங்களில் தென்படாத நிலம். 108 ஆம்புலன்ஸ் என்னும் புதிய வரவைத் திரைக்கதையின் மையமாக்கி ஒரு படத்தை உருவாக்க முடிந்த தன்மை புதிது. அதன் திரைக்கதை பெரும்பான்மையோருக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். அதெல்லாம் வேறு விஷயம். ஆனால், அதன் நோக்கம் புதிய படத்தை உருவாக்க வேண்டும் என்பதே. ஒரு நடிகராக மட்டுமல்லாமல் நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவும் அவர் இருப்பதாலேயே ‘சூதுகவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவரையும் ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களின் டெம்ப்ளேட் கதாபாத்திரங்களில் அடக்கிவிடவே திரையுலகம் முயலும். அதில் நாயகர்கள் ஜாக்கிரதையாக இருந்தால் தமிழ்ப் படங்களுக்கு நல்லது.
சகலகலா வல்லவன் கமல் ஹாசனை நாம் ‘ஹே ராம்’, ‘மகாநதி’ போன்ற படங்களுக்காகத் தான் நினைவுகூர்கிறோம். காலத்தால் முந்தைய அத்தகைய படைப்புகள் மட்டுமே அவரது அடையாளம். வணிகரீதியாக வெற்றிபெற்றதா என்பதை எல்லாம் மீறி கமல்ஹாசன் திரைத்துறையை எவ்வளவு நேசித்தார் என்பதற்குச் சான்றாக அப்படியான படங்கள் நிலைத்திருக்கும். ‘காதல் கோட்டை’ படத்தின் மூலம் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்ற அகத்தியனுக்கு தனது தயாரிப்பு நிறுவனத்தில் வாய்ப்பு கொடுத்தார் கே பாலசந்தர். அப்போது அகத்தியன் உருவாக்கிய படம் ‘விடுகதை’. அது ஒரு தோல்விப் படம்தான். ஆனால், மரணம் பற்றி ஆக்கபூர்வமாகப் பேச முயன்றிருந்தார். மரணத்தை யதார்த்தமாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் பற்றிப் படம் பேசியது. அது பெரிதாக வரவேற்கப்படவில்லை. மீண்டும் அவர் ‘காதல் கோட்டை’ சாயலிலே ‘காதல் கவிதை’, ‘வசந்த மாளிகை’ பாதிப்பிலே ‘கோகுலத்தில் சீதை’ என்று சென்றுவிட்டார். மணிரத்னத்திடமிருந்து வெளிவந்த சுசிகணேசனின் முதல் படம் ‘விரும்புகிறேன்’. அவர் மிக விருப்பத்துடன்தான் படத்தை உருவாக்கினார். நல்ல சப்ஜெக்ட்தான். வணிகரீதியில் வெற்றிபெறவில்லை. ஆனால், சுசி கணேசனை நினைவுபடுத்த அந்தப் படம்தான் உதவும். மணிரத்னத்திடமிருந்தோ கமல்ஹாசனிடமிருந்தோ ஒருவர் ஆக்கபூர்வமான ஆளாக வெளிப்படுவதே அபூர்வம். அப்படி வெளிப்பட்ட சுசி கணேசன் ‘கந்தசாமி’, ‘திருட்டுப் பயலே’ போன்ற படங்களின் வழியேதான் வெற்றிபெற்ற இயக்குநரானார்.
‘உதிரிப்பூக்கள்’ தொடங்கி ‘சுப்ரமணிய புரம்’, ‘சூது கவ்வும்’, ‘ஆரண்ய காண்டம்’, ‘மதயானைக் கூட்டம்’ போன்ற சில திரைப்படங்கள் மட்டுமே சட்டென்று நினைவில் வருகின்றன. இதற்கிடையே ‘சேது’, ‘அழகி’, ‘ஆட்டோகிராப்’ போன்ற சில படங்கள் வழக்கத்திலிருந்து வேறுபட்டவையாக உள்ளன. இந்த எல்லாத் திரைப்படங்களுமே ஏதாவது ஓர் கருத்தை எடுத்துக்கொண்டு அதை உணர்த்துவதற்கான திரைக்கதையை அமைத்துக்கொண்டுதான் பயணப்பட்டிருக்கின்றன. பார்வையாளர் சொல்லப்பட்ட திரைக்கதையின் வழியே உணர்த்தப்பட்ட கருத்தை உள்வாங்கிக்கொள்கிறார். ஆகவே, திரைக்கதை சுவாரசியமாக இல்லையென்றால் எதையுமே பார்வையாளரால் உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் படத்திலிருந்து விலகிவிடுகிறார்கள். இங்கே கருத்து என்பது ஒரு செய்தி அவ்வளவுதான். அதை நன்னெறி என்பதாக மட்டும் உள்வாங்கிக்கொள்ள வேண்டியதில்லை. கருத்து சொல்வதற்காகப் படம் எடுக்கவில்லை என்று இயக்குநர்கள் சொன்னாலும் படங்கள் ஏதாவது ஒரு கருத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. கருத்தை வெளிப்படையாகச் சொன்னால் அடப்போங்கப்பா என ரசிகர்கள் அலுத்துக்கொள்வார்கள். ஆகவே, அதை உணர்த்தும்படியான திரைக்கதை அமைக்கும்போது ரசிகர்கள் அதை உணர்ந்துகொள்வார்கள்.
படம் ஒரு விஷயத்தை உணர்த்த வேண்டுமே தவிர அதையே போதிக்கக் கூடாது. போதனை கட்டுரையின் தன்மை, திரைப்படத்தின் தன்மை உணர்த்துதலே. போதனைத் தன்மைக்கு உதாரணமாக சேது மாதவன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த ‘நம்மவ’ரைச் சொல்லலாம். திரைக்கதையின் காட்சிகள் அனைத்துமே மையக் கருத்தை உணர்த்துவதற்கான பயணமாக இருக்கும்போது படம் சுவாரசியமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் ருசிகரமாகச் சொல்லி உணர்த்த வேண்டிய செய்தியைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துவதில்தான் திரைக்கதை அமைப்பின் சவாலே அடங்கியுள்ளது. அதை முடிந்தவரை நுட்பமாகச் செய்ய வேண்டும். ரஜினி காந்த் படத்து ஓபனிங் காட்சி போல் அமைந்துவிடக் கூடாது. அது ரஜினிக்கு சரி. நல்ல படத்துக்குச் சரியாக அமையாது.
(இந்து தமிழ் திசை நாளிதழின் இந்து டாக்கீஸ் இணைப்பிதழில் 45 வாரங்கள் வெளிவந்த இத்தொடர் இந்த அத்தியாயத்துடன் நிறைவுபெறுகிறது.)
(இந்து தமிழ் திசை நாளிதழின் இந்து டாக்கீஸ் இணைப்பிதழில் 45 வாரங்கள் வெளிவந்த இத்தொடர் இந்த அத்தியாயத்துடன் நிறைவுபெறுகிறது.)
< சினிமா ஸ்கோப் 44 >