இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், மே 11, 2015

எது நடந்ததோ . . .


பெரு நகரத்தில் சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் வசித்துவரும் நவீன மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தனக்கு வாய்த்திருக்கும் குறுகிய கால அவகாசத்தில் இக்குறும்படம் அழகியல் மிளிரக் காட்சிப்படுத்துகிறது. இவற்றின் வாயிலாக அவர்களுக்கேற்படும் அகச் சிக்கல்களைக் காட்சிகளின்றி உணர்த்திவிடுகிறார் இயக்குநர் அருணிமா ஷர்மா. ஏறக்குறைய 35 பாவங்களை வைத்துக்கொண்டு சுமார் 17 வருடங்களைத் தொலைக்காட்சி நடிப்பில் செலவிட்ட நடிகர் சமர் கிருஷ்ணராக நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் மனைவி நினா பற்றிவந்த திடீர்த் தகவல் அந்நாடகத்தை இடையிலேயே முடிவுக்குக்கொண்டுவருகிறது. மனிதனான அவருக்கு நேர்ந்த பிரச்சினையைச் சமாளிக்கக் கடவுள் அவதாரத் தோற்றத்தில் அந்த இரவில் புறப்படுகிறார். மனைவியைக் கண்டுபிடித்தாரா இரவு எப்படி விடிந்தது அவருக்கு என்னும் கேள்விகள் ஊடாக நகர்ந்துசெல்லும் காட்சிகள் மாநகரின் இரவுப் பொழுதை; வெவ்வேறு பிரதேசங்களைப் பல்வேறுபட்ட கோணங்களில் பார்வையாளனின் முன்னிறுத்துகின்றன.

தனி மனித வாழ்வில் கலைக்கும் உறவுகளுக்கும் இடையில் அகப்பட்டுக்கொண்டு ஊடாடும் கலைஞனின் அகத்தில் நிகழும் உணர்ச்சிக்கொந்தளிப்புகளை ஆரவாரங்களோ ஆடம்பரங்களோவின்றி அப்படியே வெளிக்கொணர்ந்துள்ளது இக்குறும்படம். புராணக் கடவுள் பாத்திரமான கிருஷ்ணராக நடித்தவர் மனைவியைப் பிரிவதை எண்ணித் துக்கப்படுவது அவளை மீண்டும் கைப்பற்றிவிடத் துடிப்பது என்பனவெல்லாம் முரண்நகைதாம். ஆனால் என்ன செய்ய இருபதாண்டுக் காலம் அவரை நேசித்த அவருடைய காதல் மனைவி மற்றொருவருடன் காதல் கொண்டு இவரிடமிருந்து விலகிச் செல்லும்படியான சூழலை உருவாக்கிவிட்ட அந்த இரவையும் அந்தத் துக்கத்தையும் அவர் கடந்தாக வேண்டுமே. விமான நிலையம் வரை சென்றும் வெறும்கையோடு திரும்பும் நடிகரை அடையாளம் கண்டு அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளைக் கேட்கும் வாடகைக் காரோட்டியிடம் அவை காரணமாக ஏற்பட்ட மதிப்பிழப்பின் காரணமாகவே தன் மனைவியை இழந்ததாக எப்படி அவர் சொல்ல முடியும்? அவரது தவிப்பை, ஏக்கத்தை, புழுக்கத்தை வெறும் புகையாகப் பரப்பிவிட்டபடி அவற்றைக் கடக்கிறார்.


விஷ்ணு பிரசாத் என்பவர் காவலனாகப் பணிபுரியும் தானியங்கிப் பணம் வழங்கும் மையத்தில் பணமெடுக்கச் செல்கிறார் சமர். அங்கே பணமெடுத்துத் திரும்பும் விளம்பரப் பட நடிகை ஒருவர் இவரது தோற்றம் கண்டு வேடிக்கையாகச் சிரிக்கிறார். உள்ளே பணமெடுத்துக்கொண்டிருக்கையில் வெளியே சிறு விபத்தொன்று நிகழ அதில் காவலர் விஷ்ணுவின் கண்ணாடியும் நாற்காலியும் உடைந்துவிடுகின்றன. நடிகையின் நண்பிதான் விபத்தை நிகழ்த்தியவர். கண்ணாடிக்கு மாற்றாகத் தனது கண்ணாடியை விஷ்ணுவுக்கு அளித்ததோடு அருகிலிருந்த தனது வீட்டிலிருந்து நாற்காலி ஒன்றையும் அவருக்குத் தருகிறார் நடிகை. அந்தப் பயணத்தில் சமருக்கும் நடிகைக்கும் இடையே நெருக்கம் உருவாகிப் பின்னர் அது காதலாகப் பரிணமிக்கிறது. ஒருவருக்கு உடைந்துபோன நாற்காலிக்கும் கண்ணாடிக்கும் மாற்றுக் கிடைக்கிறது மற்றொருவருக்கோ மனைவிக்குப் பதில் காதலி கிடைக்கிறாள். எல்லா அதிசயங்களையும் அபத்தங்களையும் தனக்குள் அடக்கியபடி இரவு நகர்கிறது.

விஷ்ணு தனது அறைக்கு வந்த உடன் இரவு முழுவதும் தூங்காமல் பணிசெய்த களைப்பால் காலுறையைக்கூடக் கழற்ற அவகாசமின்றி அப்படியே உறங்கச்செல்கிறான்; சமர் தனது ஒப்பனையைக் கலைக்கக்கூடப் பொறுமையின்றி மனைவியைத் தேடி அப்படியே ஓடுகிறார். மாநகர வாழ்க்கை ஆற அமர எந்தவொரு செயலையும் செய்ய அனுமதிக்காமல் மனிதர்களை விரட்டிக்கொண்டே இருக்கிறது. விளம்பரப் படத்தில் மற்றொரு நடிகையின் உதடுகளை நீளவாட்டில் பொத்திய ஆள்காட்டி விரலும் அதன்பின் கன்னத்தை வருடியபடி வழுக்கிக் கீழிறங்கும் விரல்களும் மட்டும் தனதென அந்நடிகைக்கும் யூனிட்டில் உள்ளவர்களுக்கும் தானே தெரியும். இந்த ஏமாற்றை அறிந்தால் பார்வையாளன் விளம்பரத்தை ரசிக்கமாட்டான். இங்கே ஏமாற்று என்பது தொழில்ரீதியான புத்திசாலித்தனம். காரில்வைத்து ஒரு நாற்காலியை எப்படிக் கொண்டுவருவது என்பதைக்கூடச் சரிவரச் செய்ய இயலாத நகரத்து மனிதர்கள். இப்படிப்பட்டவற்றைக் காட்சிபடுத்தியிருக்கும் விதம் மாநகர வாழ்க்கை குறித்த நுணுக்கமான எள்ளல்களாகவும் விமர்சனங்களாகவும் காட்சிகொள்கின்றன.


ஏறக்குறைய இருபத்தி மூன்று நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் பலாப்பழம் போன்ற மனித வாழ்வின் தனிச் சுளை. காட்சி ஊடகத்தின் அறிவார்த்த திரைமொழி நேர்த்தியாக இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அநாவசியமாக ஒரு துண்டுக்காட்சிகூடப் படத்தில் இடம்பெறவில்லை. நடிகர்கள் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். வசனங்களும் மிக மிகச் சொற்பம். ஒளியும் இருளும் பலகாட்சிகளில் இணைந்தே காணப்படுவது இன்பம், துக்கம் இரண்டுமே இணைந்த வாழ்க்கையைக் குறிப்பதுபோல் உள்ளது. வழக்கமான கேமராக் கோணங்களை இயன்றவரை தவிர்த்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜி. முரளி. அவசியமான இடங்களில் தேவைக்கேற்ற அளவு மட்டுமே ஒளி பயன்பட்டுள்ளது. நுட்பமாக ஒளியைக் கையாண்டுள்ள தன்மை படத்தின் அழகியல் கூறை அதிகரிக்கிறது; இரவின் ரம்யத்தையும் அழகையும் தனிமையையும் தனிப்பட்ட குணாம்சங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது. அடர்த்தியான தனிமை நிறைந்த இரவில் பெருநகர வீதிகளில்  வாழ்க்கை குறித்து அசைபோட்டபடி சுற்றிய திருப்தியை ஏற்படுத்தும் இக்குறும்படத்தைக் கவனத்துடன் பார்க்கும் பார்வையாளனின் நினைவுவலைகளில் இது வட்டமிட்டுக்கொண்டேயிருக்கும்.

படக் குழுவினர் விருது பெறும் காட்சி
ஷ்யாம் ராத் ஸேஹெர்
இயக்கம்: அருணிமா ஷர்மா
ஒளிப்பதிவு: ஜி. முரளி
மொழி: இந்தி, ஆங்கிலம்
நேரம்: 22:30 நிமிடம்      

நண்பர் முரளியின் அடவி இதழில் வெளியானது