சர்வதேச திரைப்பட விழா
15.12.2013 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு கேஸினோ திரையரங்கில் The photograph படம் பார்த்தோம். போலந்து நாட்டைச் சேர்ந்த படம். மிக இயல்பான படம். திரைக்கதையில் பெரிய திருப்பங்கள் என எவையும் இல்லை. ஆனால் தீவிரமான சம்பவங்களைக் கொண்ட படம்.
ஒரு சாதாரணக் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை காட்சிகளாக வரித்திருந்தது இப்படம். பல இடங்களில் அமைதியின் அழகை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பார்வையாளனுக்கான இடத்தை அளிப்பதில் மௌனக் காட்சிகளுக்கு ஈடுஇணையே இல்லை. படத்தைப் பார்வையாளன் மனத்தில் ஓட்டிப் பார்க்க வாய்ப்பளிப்பவை பின்னணி இசைகூட இன்றி மௌனமாக நகரும் சட்டகங்களே. சத்தங்களால் பூசப்படாமல் மௌனங்களால் மெருகேற்றப்பட்டிருந்த காட்சிகள் மனத்திற்கு அமைதியையும் திரைப்படம் பார்த்த முழு ஆசுவாசத்தையும் அளித்தன. தன் தாய் கர்ப்பம் தரித்திருக்கும் போது அவளை நெருங்கி நின்று அணைத்தபடி நிற்கிறான் அந்நிய ஆண் ஒருவன். இப்படி ஒரு புகைப்படம் 17 வயது இளைஞனுக்குக் கிடைக்கிறது. அதன் விவரம் அறிய அவன் பயணப்படுகிறான். பயணத்தின் முடிவில் பல அனுபவங்களைப் பெற்றவனாகிறான். அந்த அனுபவங்கள் வாயிலாக ஒரு வாழ்க்கை விவரிக்கப்பட்டது.
அடுத்ததாக உட்லண்ட்ஸில் Puppy love என்னும் திரைப்படம்.
இது சொல்லிக்கொள்ளும்படியான படம் அல்ல. பதின்பருவ வயது பெண்ணின் பாலியல் செயல்பாடுகள் பற்றிய படம். அவளது தோழி ஒருத்தி வந்த பின்னர் அவள் வாழ்வில் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தாம் கதை.
அடுத்து பார்த்த சீனப் படம் A Touch of Sin. கேன் பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்ற படம், அப்படி இப்படி என ஏகத்துக்கு இப்படம் குறித்த செய்திகள் கசிந்திருந்தன. ஆனால் படம் ஏமாற்றமான ஒன்றே.
மிஷ்கின் டைப் படம் எனக்கூடச் சொல்லலாம். சமகால சீனா அரசியல் பொருளாதார சமூக மட்டத்தில் மிகவும் சீரழிந்துபோய் உள்ளது என்பதை காட்சிகளால் சொல்லிய படம். ஆனால் பார்த்துப் பார்த்து சலித்துப்போன காட்சிகளால் ஆன இப்படம் மிகவும் சுமாரான படமே.
இறுதியாக பார்த்த படம் Young and Beautiful .
இப்படத்தில் 17 வயது பெண் ஒருத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். ஒரு சுவாரசியத்திற்காக அதில் ஈடுபடுகிறாள். வீட்டில் உள்ளவர்களுக்கு இது எதுவுமே தெரிவதில்லை. ஒருமுறை தனது முதிய வாடிக்கையாளரை சந்திக்க விடுதிக்குச் சென்றபோது அவர் இவளுடன் கூடலில் ஈடுபட்ட தருணத்தில் உயிரை விட்டுவிடுகிறார். எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் செய்வதறியாது அவ்விடத்தை விட்டு ஓடி விடுகிறாள். இதைத் தொடர்ந்து அவள் எதிர்கொள்ளும் சிக்கல்களே படம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக