இந்த வலைப்பதிவில் தேடு

சனி, செப்டம்பர் 28, 2013

ஆனா ஆவன்னா...

சர்வதேச எழுத்தறிவு நாள் செப்டம்பர் 8

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். எழுத்தறிவு என்பது வாழ்க்கையை நடத்த தேவைப்படும் அடிப்படை அறிவு. பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் பாடங்களைப் படிக்காவிட்டாலும் இந்த அடிப்படை அறிவு வாழ்வதற்கு அவசியமான ஒன்று. எழுத்து மூலமாகச் சொல்லப்படும் ஒரு விஷயத்தை படித்து, புரிந்துகொள்வதுடன் அடிப்படையான கணக்கிடுதல் போன்றவற்றை உள்ளடக்கியது எழுத்தறிவு.  

எழுத்தறிவு அவ்வளவு முக்கியமா என்றால் கண்டிப்பாக, அது நமது அடிப்படை உரிமை. வாழ்க்கையை கடைசிவரை வாழ நமக்கு கைகொடுப்பது அது தானே. (எங்கு சென்றாலும் அது அவசியம் அல்லவா. பேருந்தில் சென்றால் ஊர் பெயர் பார்க்கத் தெரிய வேண்டும், கடைக்குச் சென்றால் பொருள்களை விலை கொடுத்து வாங்கி பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் அடிப்படை அறிவு தேவை என்பதை மறுக்க முடியாதே. அந்த அடிப்படை அறிவு இல்லாவிட்டால் நாம் ஒவ்வொரு விஷயத்திற்கும் மற்றவரைச் சார்ந்து இருக்க வேண்டிய ஆரோக்கியமற்ற நிலைமை உருவாகிவிடும்.)


ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவருக்கும் எழுத்தறிவு இருப்பது அவசியம் தானே. ஆனால் இன்னும் உலகில் முழுமையான நூறு சதவிகித எழுத்தறிவு வரவில்லை. ஒன்றும் ஒன்றும் எத்தனை எனக் கேட்டால் ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட இரண்டு என எளிதாகச் சொல்லிவிடும். ஆனால் எழுத்தறிவு முற்றிலும் இல்லாத மக்களுக்குச் சொல்லத் தெரியாது. அதற்குக் கூட அவர்களுக்கு மற்றவர்களின் துணை தேவை.

ஆகவே அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்களாக மாற வேண்டும் என்பதற்காக எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்த சர்வதேச எழுத்தறிவு நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 8 அன்று கொண்டாடப்படுகிறது. முதன்முதலில் 1966ஆம் ஆண்டு இந்த நாள் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் இது அரசு விடுமுறை நாள் அல்ல. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு முழக்கத்தின் அடிப்படையில் இந்த நாள் கொண்டாடப்படுவது வழக்கம், இந்த ஆண்டின் முழக்கம் 21ஆம் நூற்றாண்டுக்கான எழுத்தறிவு. அடிப்படை எழுத்தறிவு குறித்த விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை முன்னிறுத்துவதே இந்த முழக்கத்தின் நோக்கம்.

உலகத்தில் சுமார் 400 கோடி பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். ஆனால் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் இன்னும் 77.4 கோடி பேர், குறைந்தபட்ச எழுத்தறிவு பெறாதவர்களாகவே உள்ளனர். இதில் 12.3 கோடி பேர் 15 இலிருந்து 24 வயதுக்குட்பட்டவர்கள். ஆண்களில் ஐந்தில் ஒருவரும் பெண்களில் மூன்றில் இருவரும் எழுத்தறிவு பெறவில்லை. உலகம் எங்கும் தொடக்க கல்வி பெற வேண்டிய நிலையில் உள்ள 25 கோடி குழந்தைகள் எழுத்தறிவு திறன் அற்றவர்களாக உள்ளனர். இவர்களும் எழுத்தறிவு பெறுவது அவசியமல்லவா. இதற்காகத் தான் கல்வி, அறிவியல், பண்பாட்டுக்கான ஐநா அமைப்பான யுனெஸ்கோ எழுத்தறிவு தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகிறது. இப்படி எல்லாம் கொண்டாடுவது மட்டும் எழுத்தறிவை வளர்த்திடுமா? அது எப்படி வளரும். அதற்காக எழுத்தறிவு தருவது தொடர்பான நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின். அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த உந்து சக்தியும் தேவை என்பதால் அவற்றில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு உலக எழுத்தறிவு விருது வழங்கப்பட்டுவருகிறது. மொத்தம் ஐந்து விருதுகள் இவ்வாறு வழங்கப்படுகின்றன.


ஒன்று, யுனெஸ்கோவின் கன்பூஷியஸ் விருது

2005ஆம் ஆண்டு முதல் சீன அரசு சீன அறிஞர் கன்பூஷியஸ் பெயரில் மூன்று விருதுகள் அளித்துவருகிறது. வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் இவற்றுடன் ரொக்கமாக தலா 20 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது 13 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். அதனுடன் சேர்ந்து சீனாவின் எழுத்தறிவு திட்டங்களுக்கான ஆய்வுப் பயண வாய்ப்பும் அளிக்கப்படும். கிராமப்புற பெண்கள், குழந்தைகள் எழுத்தறிவை மேம்படுத்திய அரசு சாரா நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

 அடுத்தது, யுனெஸ்கோவின் மன்னர் செஜாங் எழுத்தறிவு விருது

மன்னர் செஜாங் பெயரில் இரு விருதுகள் 1989இலிருந்து வழங்கப்பட்டுவருகின்றன. இதை வழங்குவது தென்கொரிய அரசு. கொரிய எழுத்துகளை 1443ஆம் ஆண்டு உருவாக்கிய மன்னர் பெயரில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் இவற்றுடன் ரொக்கமாக தலா 20 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது 13 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். பல்வேறு மொழிகளில் எழுத்தறிவுக்கு ஆதரவு நல்கும் நிறுவனத்திற்கு இந்த விருது வழங்கப்படும்.

எழுத்தறிவு திட்டத்தைச் சிறப்புடன் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு இந்த விருதுகளைப் பெறும் தகுதி உண்டு. விண்ணப்பிக்கும் நிறுவனங்களில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.







இந்தியாவின் எழுத்தறிவு 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 74.04 சதவிகிதமாகும். 2001இல் 65.38 சதவிகிதமாக இருந்த எழுத்தறிவு சுமார் 9 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஆண்கள் எழுத்தறிவு 82.14 சதவிகிதம்., பெண்கள் எழுத்தறிவு 65.46 சதவிகிதம். இந்தியாவிலேயே அதிகமாக கேரள மாநிலம் 93.9 சதவிகித எழுத்தறிவு பெற்று முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் எழுத்தறிவு 80.3 சதவிகிதம் ஆகும். எழுத்தறிவு பெற்ற ஆண்களின் சதவிகிதம் 86.8, பெண்களின் சதவிகிதம் 73.9 ஆகும். சென்னையின் எழுத்தறிவு 90.18 சதவிகிதம். ஆண்களின் எழுத்தறிவு 93.7 சதவிகிதம் பெண்களின் எழுத்தறிவு 86.64 சதவிகிதம்.


ஆல் இந்தியா ரேடியோவுக்காக எழுதியது.

வெள்ளி, செப்டம்பர் 27, 2013

ஜன கண மன என ஜதி சொல்லும் நேரம்...

2003ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் செப்டம்பர் 10 சர்வதேச தற்கொலைத் தடுப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ”அவமானம்: தற்கொலைத் தடுப்பின் மிகப் பெரிய தடை” ("Stigma: A Major Barrier for Suicide Prevention.") என்பதே இந்த ஆண்டுக்கான மையப்பொருள் அல்லது கரு. தற்கொலைத் தடுப்புக்கான சர்வதேச அமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து உலக தற்கொலைத் தடுப்பு நாளை அனுசரிக்கிறது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் முக்கிய மனநலப் பிரச்சினையாக தற்கொலை உள்ளது. வளரும் நாடுகளிலும் தற்கொலை செய்துகொள்தல் அதிகரித்துவருகிறது. உலகம் எங்கும் நடைபெறும் மரணங்களில் தற்கொலை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். உலகத்தில் ஒவ்வோர் ஆண்டும் பத்து லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். சராசரியாக 40 விநாடிகளுக்கு ஒருவர் தற்கொலைசெய்துகொள்கிறார். கொலை, போர் ஆகியவற்றால் இறப்பவர்களைவிட அதிகமானோர் தற்கொலையால் உயிரிழக்கிறார்கள். தற்கொலையால் இறப்பவர்களைவிட அதிகமானோர் தற்கொலை முயற்சியை மேற்கொள்கிறார்கள்.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரத்து நானூற்றி நாற்பத்தைந்து பேர் (1,35,445) தற்கொலை செய்துள்ளார்கள். தினசரி 371 பேர் அதாவது 242 ஆண்களும் 129 பெண்களும் தற்கொலையால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் பதினாறாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தியேழு பேர் (16,927) தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்துகொண்டவர்களில் 37 சதவிகிதத்தினர் தூக்கிட்டுக்கொண்டனர், 29.1 சதவிகிதத்தினர் விஷம் குடித்துள்ளனர், 8.4 சதவிகிதத்தினர் தீயிட்டுக்கொண்டனர். தமிழ்நாட்டில் 5,393 பேர் தூக்கிட்டும், 3,459 பேர் விஷம் குடித்தும், 2,349 பேர் தீயிட்டும் தற்கொலை செய்துகொண்டனர். சென்னையில் மட்டும் 282 பேர் தீயிட்டுத் தற்கொலை புரிந்துள்ளனர்.

தற்கொலை செய்துகொள்பவர்கள் பெரும்பாலும் மனநலப் பாதிப்பின் காரணமாகவே இந்த முடிவுக்கு வருகிறார்கள். அடுத்த இருபது வருடங்களுக்குள் மனநலப் பிரச்சினை காரணமாக உருவாகும் நோய்கள் உலக நோய்களுள் 25 சதவிகிதமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்று நோயைவிட இதய நோயைவிட மனநலம் சார்ந்த நோய்களே உலகத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். தற்கொலை செய்பவர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்யும் தருணத்தில் உடல்நல, சமூக ஆர்வலர்களின் ஆலோசனைகளை நாடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தேவையான நேரத்தில் போதுமான உதவிகள் கிடைப்பதில்லை.



தற்கொலை எண்ணம் மூளும் சமயத்தில் அன்புக்குரியவர்கள் அருகில் இல்லாததால் பலர் மனத்தில் அந்த எண்ணம் உருவாகிறது. மனநலப் பாதிப்புடன் அவமான உணர்வும் சேர்ந்து தற்கொலை எண்ணத்தை வலுப்படுத்திவிடுகிறது. அவமானம் என்னும் உணர்வு பல சமூகங்களில் வேரோடியுள்ளது. பொதுவாக கல்வி அறிவு இல்லாதது அதாவது அறியாமையே அவமானம் என்னும் உணர்வு தோன்றுவதற்கு முக்கியக் காரணமாகும். அறியாமை காரணமாக உருவாகும் அவமானம் என்னும் உணர்வை முறையான கல்வி நிகழ்ச்சிகளின் மூலம் அகற்றிவிடலாம். பொதுவாக ஒரு சமூகத்தில் வயது சார்ந்த கல்வி சார்ந்த, மதம் சார்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே இது காணப்படும். மனநலம் பாதிக்கப்பட்டுத் தற்கொலை எண்ணம் கொண்டோரிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இத்தகைய கல்வி நிகழ்ச்சிகளின் நோக்கம்.

ஆனால் அவமான உணர்வை வெற்றிகொள்ள அறிவு மட்டும் போதாது. பொதுவாக பல சமூகங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட, தற்கொலை எண்ணம் கொண்ட தனிநபர்கள் குறித்து எதிர்மறையான எண்ணம் உள்ளது. மனநலப் பாதிப்பு, தற்கொலை எண்ணம் குறித்த கல்வியால் இத்தகைய எதிர்மறை எண்ணத்தை மாற்ற முடியாது. உண்மையைச் சொன்னால், மனநலப் பாதிப்புக்குள்ளாகி தற்கொலை எண்ணம் கொண்ட நோயாளிகளைக் கையாளும் மனநல நிபுணர்களே நோயாளிகள் குறித்த எதிர்மறை எண்ணங்களையும் முன்முடிவுகளையும் கொண்டுள்ளார்கள். இதன் விளைவாக தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு நெருக்கடி நேரத்தில் கிடைக்க வேண்டிய அனுசரணையான உதவிகள் கிடைக்காமல் போகின்றன. ஒரு சமூகத்தின் கலாச்சாரங்களில் ஊடுருவியிருக்கும் இந்த எதிர்மறையான எண்ணங்களை மாற்ற பெரும் முயற்சிகள் தேவை. கூடவே மனநல நிபுணர்கள் வழங்கும் சிகிச்சை முறைகளிலும் மாற்றம் வேண்டும்.

அவமானம் என்னும் உணர்வு காரணமாகவே மனநலப் பாதிப்பு காரணமாகத் தற்கொலை எண்ணம் கொண்ட தனிநபர்களது சுதந்திரம் விஷயத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இத்தகைய பாரபட்சம் தனிநபர், சமூகம், நிறுவனம் மட்டங்களில் உருவாகிறது. தற்கொலை முயற்சியைக் குற்றமாகக் கருதுவது இத்தைய பாரபட்சத்திற்கு உதாரணம்.



தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டவர்கள் தகுந்த நேரத்தில் சிகிச்சை பெற்றதன் மூலம் உயிர் பிழைத்து பழைய வாழ்க்கைக்கு திரும்புவதை இத்தகைய பாரபட்சமான எண்ணம் தடுத்துவிடும். மேலும் தற்கொலை முயற்சியைக் குற்றமாகப் பார்ப்பது என்பது மனநலப் பாதிப்பு கொண்ட தற்கொலை எண்ணம் உடையவர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும். பிழைத்தால் தண்டனை கிடைக்கும் என்பதாலேயே கண்டிப்பாக இறந்துவிட வேண்டும் என எண்ண வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்த உடல்நலப் பிரச்சினைகளை ஒப்பிடும் போது தற்கொலைத் தடுப்பு விஷயத்தில் அரசின் நிதி ஒதுக்கீடு குறைவான அளவிலேயே உள்ளது. இந்த விஷயத்தில் நிதிதிரட்டு முயற்சியும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஏனெனில் தற்கொலை அவமான காரியம் என்பதால் தற்கொலைக்கு எதிரான முயற்சிகளுக்கு நிதி தர தனிநபர்களோ, அரசுகளோ, சர்வதேச நிறுவனங்களோ பெரிய ஆர்வம் காட்டுவதில்லை.

சமூகத்தில் நிலவும் அவமானம் என்னும் உணர்வை ஒழிப்பதில் அனைவரும் ஒன்று திரண்டு புதிய உத்திகளைக் கையாண்டு பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்த உலக தற்கொலைத் தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவமானம் என்னும் உணர்வை ஒழிக்காதவரை தற்கொலையைத் தடுப்பது கடினம். இந்த வருடத்தின் தற்கொலைத் தடுப்பு தினத்தை முன்னிட்டு சர்வதேச தற்கொலை தடுப்பு நிறுவனம் சைக்கிளில் உலகம் முழுவதையும் சுற்றும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.


தற்கொலை தடுப்பில் சிறப்பாக பணிபுரிபவர்களை ஊக்குவிக்க, ஸ்டெங்கல் ஆராய்ச்சி விருது, ரிங்கல் சேவை விருது, ஃபார்பெரோ விருது, டி லியோ நிதி விருது ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

ஆல் இந்தியா ரேடியோவுக்காக எழுதியது.