இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், ஜூலை 30, 2012

கிருஷ்ணவேணி பஞ்சாலை


வெவ்வேறு வர்ணங்கள் கொண்ட நூல்கள்


எண்பதுகளில் தொடர்ந்து வெற்றிப்படங்கள் வழங்கிய கதாநாயகன் ஒருவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அவர் நடிப்பில் 19 திரைப்படங்கள் வெளியானதாகக் கூறினார். ஆச்சரியமாக இருந்தது. செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளின் வரவால் தமிழ் திரைப்படங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மனம் உணர்ந்து லேசாக அதிர்ந்தது. பெரும்பாலான தொலைக்காட்சிகள் சினிமாவை மையங்கொண்டுதான் இயங்குகின்றன என்றபோதும் திரைப்படங்களின் பொற்காலத்தை மங்கச்செய்துவிட்டன இந்த தொலைக்காட்சிகள். இப்போது ஒரு படம் பத்து நாள்கள் ஓடினாலே இமாலய வெற்றி எனப் பறைசாற்றப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப சாத்தியத்தின் எல்லை விரிந்துகொண்டே செல்கிறது. எண்பதுகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பவர்கள் தாய்க்குலங்களாக இருந்தனர். இப்போது வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பவர்கள் இளம்வயதினர் என்னும் நம்பிக்கை ஆழமாக வேரூன்றியுள்ளது. இளம் வயதினரைக் குறிவைத்தே பெரும்பாலான படங்களின் கதைகள் அமைகின்றன. கடந்த பத்தாண்டுகளாக ஐம்பதுகளை கடந்த இயக்குநர்கள்கூட யூத் சப்ஜெக்ட் தேடி உதவி இயக்குநர்களை விரட்டிவருவது நடைமுறை எதார்த்தம். 

ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெளியான, முற்போக்கு முகாம்களில் பெரிதும் சிலாகிக்கப்பட்ட திரைப்படம் ஒன்று ஏழு நாட்களுக்குப் பின்னே என்ன ஆனது என்பதே தெரியாமல் போனது. இந்தப் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது என்னும் பிம்பத்தை உருவாக்கியதில் சின்னத்திரைக்கு முக்கியமான இடமுண்டு. உண்மை இதற்கு நேரெதிராக இருந்திருக்கலாம் எனினும் சுற்றுக்குவிடப்பட்ட இந்த பிம்பம் அழிவற்றதாக வரலாற்றின் பக்கங்களில் நிலைத்திருக்கக்கூடும். கம்யூனிச சித்தாந்ததையும் சம கால பிரச்சினையையும் எதார்த்தமாக எடுத்துக்காட்டியது போன்ற பாவனையில் ரசிகர்களை லாவகமாகவும் சுலபமாகவும் சுரண்டியது அந்தப் படம். அதற்கு நேர்மாறாகப் படமாக்கப்பட்டிருந்தது ஜூனில் வெளியான கிருஷ்ணவேணி பஞ்சாலை. பஞ்சாலை குறித்த படம் எனக் கேள்விப்படும்போது எவையெல்லாம் நம் மனத்தில் தோன்றுமோ அவை எல்லாம் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன. விமர்சனத்துடன் கூடிய கம்யூனிச சித்தாந்தம், பஞ்சாலை அதன் மனிதர்கள் அவர்களுக்கிடையே எழுந்த உணர்வு, உறவுச் சிக்கல் போன்றவற்றை உள்ளடக்கி இருந்தது இதன் கதை. சிலாகிக்கப்பட்ட படம் சினிமாத்தனமான திரைக்கதையின் பலத்தில் எதார்த்தமான படமாகத் தோற்றம்கொண்டது; எதார்த்தமான படமோ சினிமாத்தனமற்ற திரைக்கதையால் உரிய அடையாளத்தைக்கூடப் பெறவில்லையோ எனத் தோன்றியது. யோசித்தால் திரைக்கதை என்பது ஒரு ஏமாற்றுவேலை; நுட்பமாக ஏமாற்றுவதுதான் திரைக்கதையின் தாரக மந்திரம. இங்கு வெற்றிபெறுவது அறிவுஜீவித்தனம் அல்ல புத்திசாலித் தனம்.


ஆங்கிலேயே ஆட்சியை அகற்றி அந்த இடத்தில் அமர்ந்து நம்மவர்கள் சவாரியைத் தொடங்கிய சில வருடங்களுக்குப் பிறகு  -அதாவது ஐம்பதுகளில் - தமிழகத்தின் கொங்குப் பகுதியில் உடுமலைப்பேட்டை என்னும் ஊரில் ஊர்மக்களை ஒரு கூரையின் கீழ் இணைக்கும் வேலையை தொடங்கியது பஞ்சாலை ஒன்று. சாதி வேறுபாடுகள் கொண்ட சமூகத்தில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட ஆலையில் எல்லாச் சமூகத்தினரும் ஒரே இடத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பு சமூகத்தில் நிலவிவந்த சாதி வேற்றுமையைத் தடயமற துடைத்திருக்கலாம்தான். ஆனால் தனி மனித வீராப்பு சகலத்தையும் அழித்துவிடும் அளவுக்கு வீரியம் கொண்டதாக இருக்கும்போது சமூகப் புரட்சியின் முனை மழுங்கிப் போவது குரூரமான எதார்த்தம். 

இந்தப் படத்தில் ஒரு பஞ்சாலையும் ஒரு சமூகச் சூழலும் இணைகோட்டில் பயணிக்கிறது. இறுதியில் இரண்டுமே தடம்புரண்டு தடுமாறுகின்றன. தன்னிடம் இருக்கும் பணம் தனது மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பணக்காரர் ஒருவர் பஞ்சாலையைத் தொடங்குகிறார். அறிவு உள்ள இடத்தில் நயவஞ்சகமும் எளிதாக குடியேறிவிடும் என்பதற்கிணங்க அந்த ஆலையை நடத்தும் மேலாளர் செயல்படும்போது உரிமையாளர் கோபம் கொள்கிறார். பாமரனின் கோபம் எப்போதும் பதவிசாக வெளிப்படுவதில்லையே. மேலாளரையும் கொன்று தன்னையும் மாய்த்துக்கொள்கிறார் பெரியவர். அவரின் உயில் பிரகாரம் அவருடைய மகன் பஞ்சாலைக்குப் பொறுப்பேற்க நேர்கிறது. வெளிநாட்டில் வசித்துவந்த மகன் சொந்த ஊருக்குத் திரும்புகிறான். காதல் மனைவியை பிரிந்த பிறகு அவனுக்கு எல்லாமே அவனது ஆலை என்றாகிவிடுகிறது. இந்த ஆலை அதைச் சார்ந்த மனிதர்கள் அவர்களைச் சுற்றி பின்னப்பட்ட சம்பவங்கள் மூலம் இயக்குநர் தான் அறிந்த ஒரு வாழ்க்கையை அதை அறியாத பார்வையாளர்களுக்குத் திரைமொழியில் வெளிப்படுத்துகிறார்.  


இப்படத்தின் கதையில் நாம் இறங்கிச் செல்ல படிகள் பல  காணக்கிடைக்கின்றன. வெற்று செண்டிமெண்ட் அற்ற புரிதலோடு சித்தரிக்கப்பட்டுள்ளன பல கதாபாத்திரங்கள். பொதுவாக தமிழ் சினிமாவில் அம்மா என்றால் அவள் மிகப் புனிதமானவளாக எல்லா அறங்களையும் பழுதின்றிப் பின்பற்றுபவளாகவே சித்தரிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் அம்மா அப்படியானவள் அல்ல. அவளுக்குத் தன் குழந்தைகளைவிடச் சாதி முக்கியமானதாகப் படுகிறது. அவளது சாதி அபிமானத்தால் குரூரமான முடிவுகளை எடுக்கிறாள். அவளது வீராப்பு அவளது கடைசிச் சொட்டுக் குருதியையும் குடித்துவிட்டுத்தான் சாந்தமடைகிறது. பஞ்சாலை தொடங்கிய பெரியவரின் வீராப்பு அவரது மூச்சுக்காற்றை எரித்துவிட்டுத்தான் அடங்குகிறது. ஆலையை நடத்தும் மகனின் வீராப்பு பஞ்சாலையை காற்றில் பறக்கவிட்டுவிடுகிறது. தொழிலாளர்களின் வீராப்பு அவர்களது வேலையை பதம் பார்த்தபின்னர் ஓய்கிறது. 

இந்த அழிவுகள்,  தோல்விகள் அனைத்துமே மிக எளிதாக தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஏன் அப்படி அமையவில்லை? மனிதர்கள் எங்கே சறுக்குகிறார்கள் எனச் சிந்திக்கவைக்க விரும்பியுள்ளார் இயக்குநர். சிந்தனையைத் தூண்ட விரும்புபவர்கள் அனைவருமே மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் நாமறிந்த வரலாறு. கம்யூனிஸ சித்தாந்தம் என்னவென்று அறியாத அரைகுறை, மூலதனத்தைப் படித்தால் எல்லா நோய்களும் நீங்கிவிடும் என்று நம்பும் மூடன்தான் கிட்டு. இவனைப் போன்றவர்கள் தொழிற்சங்கத் தலைவர்களானால் எப்படி ஒரு தொழிற்சாலை உருப்படும்? தொழிற்சாலையில் அதிகப்படியான லாபம் வந்தபோது வாரிக்கொடுத்தவர் எதிர்பார்த்த லாபம் கிடைக்காத பொழுதில் போனஸைக் குறைக்கும்போது தொழிலாளி வெகுண்டெழுகிறான். தான் சுரண்டப்படுவதாய்ப் போதிக்கப்படுகிறான். புரட்சிக்குக் குரல் கொடுக்கிறான். தான் படித்த வசனங்களை முழங்குவதற்கு வாய்ப்பு கிடைத்ததெனப் பொழிந்துதள்ளுகிறான். நீடித்த புரட்சியால் வீட்டின் அடுப்பில் பூனை குடியேறிவிடுகிறது. வயிறு காயும்போது உண்மை எனும் சித்தாந்தம் விளங்கத் தொடங்குகிறது. மெல்லப் படி இறங்குகிறான். நிலைமை இப்போது கைமீறிப் போய்விட்டது. இரக்கம் காண்பித்த ஆலை உரிமையாளர் கூட எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நாசியை மூழ்கடித்து நிற்கிறது வெள்ளம்.

சித்தாந்தங்களைத் தங்களுக்கு வாகாகப் பயன்படுத்திக்கொள்ளும் மனிதர்களை, அவர்களது அறியாமைகளைத் துணிச்சலோடு அடையாளங்காட்ட முயன்றுள்ளார் தனபால். முற்போக்கு முகமூடிகளை சுலமாகக் கழற்றிவிட முடியுமா என்ன? பணக்காரர்கள் எல்லோரும் பூர்ஷ்வாக்கள் ஏழைகள் அனைவரும் இறைவனின் குழந்தைகள்; நேர்மையாளர்கள் அவர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வருகிறார்கள் என்ற பலமான நம்பிக்கையின் வேரை அசைப்பது அவ்வளவு எளிதல்ல. அத்தகைய முயற்சியை மேற்கொண்டதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். புரட்சிப் போராட்டம் வென்று இறுதிக் காட்சியில் பஞ்சாலையிலேயே அதன் உரிமையாளரைத் தொழிலாளிகள் ஒன்றுதிரண்டு கூறுபோட்டிருக்கலாம் அந்தக் காட்சியின் முடிவில் கார்ல் மார்க்ஸின் புகைப்படத்தை மெதுவாக ஜூம் இன் செய்திருக்கலாம். தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக என முழங்கியிருக்கலாம்தான். ஆனால் எதார்த்தமாக என்ன நடக்குமோ அதைக்காட்டும்போது அதை எப்படி எதிர்கொள்ள முடியும்? புரட்சி என்ற ஒன்று தோல்வியில் முடிவதை என்னருமைத் தோழர்களே எப்படித் தாங்கிக்கொள்ள இயலும்? தனிமனிதர்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் அவர்களையே பலிகொள்ளும் அபத்தத்தை விளங்கவைப்பது தேவையில்லாத வேலைதானே? அதைத் தான் செய்துள்ளார் தனபால் இந்தப் படத்தில். 


ஒரு குடும்பத்துக்குள்ளேயே சுற்றிசுற்றி வந்து தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும் அம்மாக்களில் ஒருத்தி ரேணுகா. சமையல் செய்வது, ஒயர் கூடை பின்னுவது என்று வாழும் அவளுக்குள் இருக்கும் சாதிப் பிடிமானம் சார்ந்த வைராக்கியம் ஏற்படுத்தும் விபரீதங்கள் சமூகத்தின் நிலவும் சாதிக்கொடுமையைச் செயல்களால் விவரிக்கின்றன. மனிதர்களின் ஆழ்மனத்தில் புதைந்துள்ள சாதி வேர்களைச் சுத்தமாக அறுப்பது என்பது சாத்தியமே அல்ல என்னும் உண்மை செரிக்க இயலாததாக நெஞ்சுக்கு மேலே எழுப்பிக்கொண்டே இருக்கிறது. வறட்டு கௌரவத்தால் நாம் பல விஷயங்களை இழந்துவருவதை ரேணுகா பாத்திரம் மூலம் விளக்குகிறார் இயக்குநர். தன் கணவனுடன் தான் வாழ்ந்த வீட்டை விட்டு அவள் வெளியேற வேண்டிய அவசியத்தை உருவாக்கியது வெறும் வறட்டு கௌரவம் அன்றி வேறென்ன? சாதிசார்ந்த சகிப்பின்மையைக் கைக்கொள்வதைவிடப் பாடையை ஏற்றுக்கொள்வது மேல் என சராசரியான ஒரு குடும்பப் பெண்ணை எண்ணவைக்கும் சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்பதை மறுக்க முடியவில்லை. 

பஞ்சாலையை ஆழமாக நேசிப்பவராகவும் அதன் ஊழியர்களை சொந்த குழந்தைகள் போல பாவிக்கும் உரிமையாளரால் எப்போதும் அப்படி இருக்க முடியவில்லை. ஏதோவொரு தருணத்தில் அவருக்குள்ளும் வீம்பு குடிகொண்டு விடுகிறது. ஆலை போனாலும் பரவாயில்லை எனத் தனது முடிவில் உறுதியாக இருந்துவிடுகிறார். 


படத்தின் கதைகளில் மெல்ல மெல்ல ஆழம்வரை இறங்க முடிந்த நம்மால் அதன் திரைக்கதையில் அழுத்தம் எதையும் காண முடியவில்லை. பார்வையாளன்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக காட்சிகள் அமையாதது திரைக்கதையின் மிகப் பெரிய பலவீனம். கருத்தியல் ரீதியில் தான் தேர்ந்தெடுத்த கருத்துக்கு வலுசேர்க்கும் இந்தப் படம் காட்சியல் ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ளது. ஒரு கதைக்கும் அதன் திரைக்கதை வடிவத்திற்கும் இடையில் சாமானியர்களால் புரிந்துகொள்ள முடியாத மாயாஜாலம் நிகழ்த்தப்பட்டிருந்தால் மட்டுமே திரைக்கதை பார்வையாளனின் மனத்தில் நிலைபெறும் சித்திரங்களாக உரு மாற இயலும். ஒரு சாதாரணக் கதையை பார்வையாளனை மிரண்டுபோகச் செய்யும் வித்தை அதன் திரைக்கதையிடம் தான் ஒளிந்திருக்கிறது. திரைக்கதை உருவாக்கம் காமத்தைக் கையாளுவது போல் நுட்பமானது; அது ஒரு தேடிக்கண்டடைதல். கற்றுத்தந்த, கற்றுக்கொண்ட எல்லா வழிமுறைகளும் காலாவதியாகும் மாய பயிற்சி அது. அறிவால் கண்டடைய முடியாததது அந்த நுட்பம். ஆனால் அது கைவரப்பெற்றால் மட்டுமே ஒரு சாதாரண கதை கூட ரசனைமிகு திரைப்படமாக மிளிரும். கதை வாசிப்பனுபவம் சார்ந்தது. வாசகன் தனக்குப் பிடித்த ரூபங்களை விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களுக்குக் கொடுத்து தன்னைக் கதையோடு பிணைத்துக்கொள்வான். திரைப்படத்தில் அவை அனைத்தும் இயக்குநரால் - திரைக்கதையையும் இயக்குநரே உருவாக்கும்போது - தீர்மானிக்கப்படுகிறது. வெவ்வேறு வகையான பார்வையாளர்கள் ஒரு குடையின் கீழ் வரும்போது அவருக்கான பொறுப்பு கூடுகிறது. அதைச் சரிவர நிறைவேற்றும்போது பார்வையாளனை அவரால் பரவசப்படுத்த முடியும். திரைக்கதையோடு பார்வையாளனுக்கு உருவாகும் நெருக்கம்தான் படத்தை வெற்றிப்பாதைக்கு - வணிகரீதியான, கலைரீதியான வெற்றி இரண்டையும் உள்ளடக்கிய பாதை - அழைத்துச்செல்லும். பஞ்சாலையும் அதன் மனிதர்களையும் பார்வையாளன் மனத்தில் நிலைபெற்றிருக்கச்செய்வதில் திரைக்கதை கைகொடுக்கவில்லை; அதைப்போலவே நடிகர்களும் - ஷிப்டில் பணியாற்றுவது போல வந்துவிட்டுப்போய்விட்டார்கள். அதனால் இந்தப் படத்தை பார்த்துவிட்டு வரும்போது இது ஒரு நாவலாக எழுதப்பட்டிருந்தால் மிக நேர்த்தியான நாவலாக உருவாகியிருக்குமோ என்னும் எண்ணம் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு நல்ல படம் தர வேண்டும் என்ற இயக்குநரின் ஆசையை படத்தின் உருவாக்கத்தில் உணர முடிகிறது; ஆனால் சிறந்த படத்திற்கு அது மட்டும் போதாதே?