இந்த வலைப்பதிவில் தேடு

சனி, ஜூன் 11, 2011

சிலைகளின் சரித்திரங்கள்

வ.உ.சிதம்பரம் பிள்ளை
சென்னை துறைமுக பொறுப்புக் கழக மைய வளாகத்தின் முன்னே நிறுவப்பட்டுள்ளது வ.உ.சியின் சிலை. 1968இல் உலக தமிழ் மாநாடு நடைபெற்றபோது காமராஜர் சாலையில் சிலைகள் வைக்கப்பட்டன. அப்போது வைக்கப்பட்ட சிலைதான் இதுவும். 1968, ஜனவரி 2 அன்று அப்போதைய உணவு, வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.மதியழகன் தலைமையில் தமிழ்வேள் பி.டி.ராஜன் திறந்துவைத்தார் இச்சிலையை. 


வ.உ.சி.
வ. உ. சிதம்பரம்பிள்ளை செப்டம்பர் 5, 1872இல் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் பிறந்தார்.  சட்டக்கல்வியைத் திருச்சியில் பெற்று 1895இல் வழக்கறிஞரானார். உரிமையியல், குற்றவியல் ஆகிய சட்டத் துறைகளில் சிறந்து விளங்கிப் பொருள் குவித்தார். விவேகபானு என்கிற மாத இதழை நடத்திவந்தார். 

வ.உ.சி கைத்தொழில்சங்கம், தருமசங்கம், நூல்நூற்பு நிறுவனம், தேசியப் பண்டகசாலை ஆகியவற்றை நிறுவி சுதேசியம் வளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனத்தைப் பறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்திகாகப் பாடுபட்டார். ஆங்கிலேய  கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906ஆம் ஆண்டு சுதேசி நாவாய்ச் சங்கம்என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் ஆனார். அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார். அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார்.

தொடர்ந்த இவருடைய சுதந்தரப் போராட்ட நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருந்த ஆங்கிலேய அரசு, 1908ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று விபின் சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவுசெய்து, அரச நிந்தனைக்கு 20 ஆண்டுகள், சுப்ரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள், மொத்தம் 40 ஆண்டுகள். அதுவும் அந்தமான் சிறையில் என இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தது.  தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே. அந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கே தான் செக்கிழுக்க வைக்கப்பட்டார். தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு 1986இல் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது இவருடைய பெயர் தான் அந்த மாவட்டத்துக்கு வைக்கப்பட்டது. இந்திய அரசும் இவரைக் கௌரவித்து அஞ்சல் தலை வெளியிட்டிருக்கின்றது. நவம்பர் 18, 1936 இல் வ.உ.சி காலமானார்.

இராஜகோபாலாச்சாரியார்
சென்னை பாரிமுனையில் உயர் நீதிமன்ற வளாகத்தையொட்டி நிறுவப்பட்டுள்ளது ராஜாஜியின் முழு உருவச் சிலை. இதை 1978, டிசம்பர் 24 அன்று இந்திய துணை ஜனாதிபதி பி.டி.ஜாட்டி திறந்துவைத்தார். அந்நிகழ்ச்சிக்கு ஆளுநர் பிரபுதாஸ் பி பட்வாரி முன்னிலை வகித்தார்; முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.


மூதறிஞர் ராஜாஜி

ராஜாஜி 10 டிசம்பர், 1878இல் சேலம் மாவட்டத்தில் தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரஸில் பெரும் பங்கு வகித்தவர். 1952 வரையில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட மதராஸ் (சென்னை) மாகாணத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.

இராஜாஜியின் கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1900இல் தமது வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார்.பின்னர் அரசியலில் ஈடுபட்டு சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகரதந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்திச் சிறை சென்றார். 1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார். 1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1947 முதல் 1948வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். மாநிலங்கள் சீரமைப்பிற்கு முன்பான சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1954வரை பதவிவகித்தார்.  1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.  நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர்.

ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி, இரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணாஇவர் இயற்றிய பாடலே. 1954ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது பெற்றார். 1972, டிசம்பர் 25அன்று தமது 94ஆவது வயதில் காலமானார் இவர்.

உ. வே. சாமிநாதய்யர்

சென்னை மாநிலக் கல்லூரியில் உ.வே.சாமிநாதய்யரின் சிலைநிறுவப்பட்டுள்ளது.     உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் சுருக்கமாக உ.வே.சா பிப்ரவரி 19, 1855 அன்று கும்பகோணமருகே உத்தமதானபுரத்தில் பிறந்தார். இவரது தந்தையாரான வேங்கட சுப்பையர் ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசையையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் அவர் 17 வது வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதினத்தில் தமிழ் படிப்பித்துக்கொண்டிருந்த புகழ் பெற்ற தமிழறிஞர் மகாவித்துவான் என அழைக்கப்பட்ட திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழை 5 ஆண்டுகளாக பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதையர் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டு பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சா குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் செழுமையையும் அறியச் செய்தார். உ.வே.சா 90 க்கும் கூடுதலான புத்தகங்களை அச்சுப்பதிப்பதித்தது மாத்திரமன்றி 3000 க்கும் கூடுதலான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்தேடுகளைச் சேகரித்தும் இருந்தார்.


உ.வே.சாமிநாதய்யார்
இராமசாமி முதலியார் என்பவரே  பின்னை நாட்களில் உ.வே.சா ஏட்டுசுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சேற்றும் பணியே மேற்கொள்ள கால்கோலியவர். இவரால் உ.வே.சாவுக்கு கையளிக்கப்பட்ட சீவக சிந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் செழுமை அக்காலகட்டத்தில் சமயக்காழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களை பற்றி அறியும் ஆவலையும் அதை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் அவருள் தூண்டியது. பலவிதமான சமண இலக்கியங்களைத் தேடி சேகரித்தார். 1887இல் சீவக சிந்தாமணியை பதிப்பித்து வெளியிட்டார். அடுத்து பத்துப்பாட்டு வெளிவந்தது. இவ்வாறு தொடக்கம் பெற்ற உ.வே.சாவின் தமிழ் இலக்கியங்களின் மூலச் சுவடிகளை தேடி சேமித்து, பகுத்து, பாடபேதம் கண்டு, தொகுத்து வழுநீக்கி அச்சிலேற்றும் பணியானது அவர் 84 வயதில் காலமாகும் வரை தொடர்ந்தது. இதற்காக அவர் பல ஊர்களில் ஏட்டுச் சுவடிகளை தேடியலைந்து கிடைத்தவற்றை அச்சேற்றினார்.


உ. வே. சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்பு முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய அரசு பிப்ரவரி 18, 2006இல் இவரது நினைவு அஞ்சல் முத்திரை வெளியிட்டுள்ளது. உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950ல் தனிப் புத்தக வடிவம் பெற்றது. ஏப்ரல் 28, 1948அன்று காலமானார் உ.வே.சா.

சனி, ஜூன் 04, 2011

அழகர்சாமியின் குதிரை


பிரச்சாரப் பொதி சுமக்கும் மரக்குதிரை 



கிராமியக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படமான அழகர்சாமியின் குதிரைக்கு இசையமைக்க ஹங்கேரி இசைக் குழுவைச் சார்ந்த ஐவர் இளைய ராஜாவால் அழைத்துவரப்பட்டிருந்தனர் என்னும் தகவல் இப் படத்தின் மீது சிறு ஈர்ப்பை உருவாக்க, உலகத் திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்படுவதற்காக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதை அதிகப்படுத்த ‘இந்தப் படத்தின் இசையைக் கேட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்காவிட்டால் நான் இசையமைப்பதையே நிறுத்திவிடுகிறேன்’ என்ற இளையராஜாவின் அதிரடி அறிவிப்போ குதிரை இதுவரை நாம் அனுபவித்தறியாத, பயணப்பட்டிராத ஏதோ ஒரு புதிய உலகிற்கு நம்மை அழைத்துச்செல்லக்கூடும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியதால் மிகுந்த ஆர்வத்தோடு கவனத்தை எல்லாம் ஒருமுகப்படுத்தி அந்தப் பரவச அனுபவத்திற்காகக் காத்திருக்க நேர்ந்தது.  

மூன்றாண்டுகளாக அழகர் கோவில் திருவிழா நடைபெறாத காரணத்தால் மழை தண்ணீரின்றிப் பஞ்சத்தால் மல்லையாபுரம் ஊர் வாட, பிழைக்க வழியற்ற மக்கள் குழந்தைகளைத் திருப்பூர் பனியன் கம்பனிக்கு வேலைக்கனுப்பும் வறட்சியான சூழலைப் பிரதிபலிப்பதாகப் படம் தொடங்குகிறது. திருவிழா நடத்தினால்தான் ஊருக்கு விமோசனம் என்று கோடாங்கி குறி சொன்னதால் விழா எடுக்கும் உறுதியோடு வரி வசூலித்து வரும் தருணத்தில் அழகரைச் சுமந்து செல்லும் வாகனமான மரக்குதிரை காணாமல்போகிறது. தங்களது திருவிழாக் கனவின் முக்கியக் கண்ணி அறுபட்டதை உணர்ந்த கிராம மக்கள் குதிரையைக் கண்டு பிடிக்கப் போராடுகின்றனர். காவல் நிலையத்தில் புகார் அளிப்பதோடு மலையாள மந்திரவாதியை அழைத்து வெற்றிலையில் மை போட்டுப் பார்க்கின்றனர். மரக்குதிரைக்குப் பதில் நிஜக் குதிரை ஒன்று கிடைக்கிறது. மற்ற படங்களில் இருந்து இது மாறுபட்டதோ என்னும் எண்ணத்தை ஏற்படுத்தும் திருப்பம் இது.

அழகரின் திருவிழாவிற்கு அழகரே தந்த பரிசது என்ற மாந்திரீகவாதியின் பொய்வாக்கை உண்மையாக நம்பிய மக்கள் அதை அழைத்துவந்து திருவிழா கொண்டாட்டத்தில் மீண்டும் ஈடுபடுகிறார்கள். குதிரை வந்துசேர்ந்த நேரம் ஊரில் நல்ல நிகழ்வுகள் பல நடந்தேறுகின்றன. இந்தச் சமயத்தில் காணாமல்போன குதிரையைத் தேடி வந்துவிடுகிறான் அதன் சொந்தக்காரன். மீண்டும் திருவிழா தடைபட்டுவிடுமோவெனும் பயத்தில் குதிரையை அவனிடம் ஒப்படைக்க மறுக்கும் ஊர்க்காரர்களுக்கும் குதிரை இல்லாவிடின் தனக்கு நடைபெற இருக்கும் திருமணம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் எப்பாடுபட்டாவது குதிரையைக் கொண்டுபோய்விட வேண்டுமென்பதில் குறியாய் இருக்கும் உரிமையாளனுக்கும் இடையில் நாட்டாமை செய்யும் உள்ளூர் போலீஸார் திருவிழா முடியும்வரை அவனை அந்தக் கிராமத்தில் தங்கியிருக்கும்படியும் அதன் பின்னர் அவன் குதிரையை அழைத்துக்கொண்டு கிளம்பலாம் என்றும் கூற அதற்குச் சம்மதித்தவன் அங்கேயே தங்குகிறான். இறுதியில் குதிரை அவனுக்குக் கிடைத்ததா அவனது திருமணம் நடந்ததா போன்ற கேள்விகளுக்கு விடையாய் விரியும் திரைக்கதையினூடே உயர்சாதி பையனுக்கும் தாழ்ந்த சாதி பெண்ணுக்குமான பிரச்சாரக் காதல் ஒன்றும் ஊடுசரடாகப் புரள்கிறது. 


சற்று வித்தியாசமான கதை மாறுபட்ட பாதையில் பயணிக்கும் என்னும் பார்வையாளனின் எதிர் பார்ப்பு படம் தொடங்கிய பத்திருபது நிமிடத்திற்குள் நீர்த்துப் போய்விடுகிறது. சாதி, கடவுள் மறுப்புக் குறித்த பிரச்சார நெடியடிக்கும் காட்சிகளும் கோனார் தமிழ் உரை போன்று விளக்கங்களை அள்ளித் தெளித்து தொடர்ந்து முன்னேறும் வளவளா வசனங்களும் படத்தோடு பார்வையாளனை ஒன்றவிடாமல் பார்த்துக்கொள்கின்றன. நகைச்சுவை என்னும் பெயரில் மேற்கொள்ளப்படும் அரைவேக்காட்டுத் தனங்கள் வேறு பாடாய்ப்படுத்துகின்றன.

1982ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில் நடைபெறும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்தைத் திரையில் காட்சியாகக் கொண்டு வருவதற்காக அப்போதைய காசு பணம் முதற்கொண்டு அவ்வாண்டில் அறிமுகமான சத்துணவுத் திட்டம் வரையிலும் காட்சிப்படுத்தியதோடு ஓரிரு காட்சியின் பின்னணியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ்ச்சேவையை ஒலிக்கவிட்டிருக்கின்றனர். புரோட்டாக் கடையில் மதிநுட்ப மிக்க சிறுவன் பிரபு சாப்பிடும் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் திசை மாறிய பறவைகள் படத்தில் இடம்பெற்ற ‘கிழக்குப் பறவை மேற்கில் பறக்குது அது கிழக்கு வானை மறைக்கப்பார்க்குது’ பாடல் அச்சசல் தமிழ்ச்சேவை பாடல். 

சவ்வு மிட்டாயைக் கையில் வாட்ச் போல் கட்டுவது, வை ராஜாவை சூதாட்டம், டைனமோவில் மஞ்சள் துணியும் இரு சக்கரங்களின் நடுவிலும் கலர் பூவும் சுற்றிய சைக்கிள், பேப்பர் விசிறி, வில்வண்டி, தந்தை தைத்துத் தரும் தொளதொளா சட்டை போன்ற எண்பதுகளை நினைவூட்டும் பொருள்களாலும் சம்பவங்களாலும் காட்சிகளைப் பூசி மெழுகியுள்ளனர். இத்தகைய மெனக்கெடல்கள் படத்திற்கு விழுதுகளாயிருக்கின்றன. ஆனால் உயிரோட்டமான காட்சியமைப்புகளும் ஜீவன்மிக்க வசனங்களும் தாம் படத்தின் இயல்பான பயணத்தில் பார்வையாளர்களை அரவணைத்து உடன் அழைத்துச் செல்லும். தட்டையான காட்சியமைப்புகளும் தொலைக்காட்சித் தொடருக்கென எழுதியது போன்ற வசனங்களும் பார்வையாளனைப் படத்தின் அருகில்கூட வரவிடாமல் துரத்துகின்றன. 


காணாமல்போன தனது குதிரையைக் கண்ட ஆனந்தத்தில் சைக்கிளை அப்படியே விட்டுவிட்டு ஓடிவரும் அழகர்சாமியின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் காவல்நிலைய வாசலிலும் சைக்கிளை நிறுத்த முயலாமல் அப்படியே போட்டுவிட்டு ஓடும் பதற்றத்திற்கான காரணம் பிடிபடவில்லை, அதைவிடக் கொடுமை கிராமத்தானுக்குக் கைதிக்கும் போலீஸுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன, நேரடியாகச் சென்று கைதியிடமா முறையிடுவான்? எண்பதுகளில் இவ்வளவு அப்பாவியான மனிதர்கள் இருந்தார்களா என்ன? தான் தொலைத்த குதிரையைக் கண்டுபிடித்து அதைக் குழந்தையைப் போல் கொஞ்சி முடித்து அதை அவிழ்த்துப்போக முற்படும் சமயத்தில் ஊரார் ஒன்றுதிரண்டு அழகர்சாமியை மொத்து மொத்தென்று மொத்தும்போது நமது இதயம் படபடக்கவில்லையே, சிறு வேதனைகூட வரவில்லையே? எந்த ஒரு காட்சியிலும் கதாபாத்திரங்களின் உணர்வு பார்வையாளனுக்குள் கடத்தப்படவே இல்லை. இசையும் காட்சிகளும் வெவ்வேறு அடுக்கிலிருக்க இரண்டுக்கும் நடுவில் உள்ளீடாக நிரம்பியுள்ள வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்புவது? 

திருடன் ஒருவனை அடித்துத் துவைத்த ஊர் மக்கள் அவனைக் கட்டிப்போட்டுவைத்திருக்க, அவனருகிலே கொஞ்சம்கூட இரக்கமற்றுக் காவலர்கள் இருவரும் பெருந்தீனி தின்க, அதைக் கண்ட அழகர்சாமி திருடன்மேல் பரிதாபப்பட்டு ‘அண்ணன் பசிக்குதாண்ணன்’ எனக்கேட்டு அவனுக்கென அந்த அக்காவிடம் சோறு வாங்கிக் கொண்டு வருவதில் வெளிப்படும் மனிதநேய உணர்வை ஓரளவு உள்வாங்கிக்கொள்ள முடிகிறது, ஆனால் அந்தத் திருடனை அன்புப் பிரவாகத்தோடு ‘திருடண்ணன்’ என அவன் விளிக்கும்போது வசன கர்த்தாவின் கைவிரல்களை மானசீகமாக முத்தமிட்டு அடங்குகின்றன இதழ்கள், என்னவொரு பரிவு! இறுதியாகக் குதிரையை பிடித்துக் கொண்டு அழகர்சாமியை ராமகிருஷ்ணன் கிளம்பச் சொல்லும் சமயத்தில் அதை மறுத்துத் திருவிழா முடியும்வரை தான் போகப் போவதில்லை, இந்தத் திருவிழாவை நம்பி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை எடுத்துரைத்து ஊர் மக்களின் சந்தோஷத்திற்காகத் தன் வாழ்க்கை பற்றிய கவலை இன்றி முடிவெடுக்கும் அழகர்சாமியிடமிருந்து பொங்கிப் பாயும் நல்லுணர்வு திரையை நனைத்துவிடுமோ என்னும் அளவுக்கு அச்சத்தை உருவாக்குகிறது. எண்பதுகளில் மனிதர்கள் எவ்வளவு உயர்வான குணநலன்கள் கைவரப்பெற்றிருந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை உணரும் தருணத்தில் கண்கள் தாமாகக் கண்ணீர் உகுக்கின்றன.  

அழகர்சாமியின் குதிரைக்குத் தான் எத்துணை அறிவு? தன் எஜமானனை அடிக்கும்போது துன்பமிகுதியால் கணைக்கிறது, ஊரைவிட்டு யாருக்கும் தெரியாமல் சென்றுவிடலாம் என அழகர்சாமி அழைக்கும்போது நல்லுணர்வின் காரணமாக மறுத்துவிடுகிறது, கடைசியில் எஜமானனைக் காப்பாற்றுவதற்காகத் தீமை புரிந்தவர்களை வதம்செய்து நன்மையை நிலைநாட்டி எல்லாம் உணர்ந்த ஞானிபோல் அமைதியாக மண்டபத்தில் வந்து அமர்ந்துவிடுகிறது. அழகர்சாமிக்கும் குதிரைக்கும் இடையிலான ஆத்மார்த்த உறவுக்கான காட்சிகள் சரியாக வளர்த்தெடுக்கப்படாமல் மேம்போக்கானவையாகச் சுருங்கிவிட்டன.  எனவே தேவர், ராம நாராயணன் போன்றோரது திரைப் படங்களை மட்டுமே நினைவூட்டிச் செல்கிறது இந்த மாற்றுப்படக் குதிரை. 

தேனிக்கருகில் இருக்கும் இந்த மல்லையாபுரத்துப் பெண்கள் கடின உழைப்பாளிகளாகவே இருக்க வேண்டும். பெரும்பாலான காட்சிகளில் பெண்கள் வீதிகளில் துணி துவைத்துக்கொண்டோ பாத்திரம் கழுவிக்கொண்டோ இருக்கிறார்கள். திருவிழா சமயத்து இரவில் மாவு இடிப்பதும் இட்லிக்கு மாவாட்டுவதும்கூடத் தெருவில்வைத்துத்தான். அந்த மைனருக்குப் பெண்களை மடக்குவதைத் தவிர வேறு வேலையே இல்லை போல. ஆனாலும் படத்தில் எந்தப் பெண்ணையும் அவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தவில்லை. பெண்கள் அனைவரும் அவரின் கண்ணசைவுக்கு மயங்கி விருப்பத்தோடு தங்களை மைனரோடு இணைத்துக்கொள்ளும்போது அழகர்சாமியின் குதிரை மைனரை மட்டும் தாக்குவது அதிலும் தவறுக்கு முக்கியக் காரணமாக இருந்த ஆதார சுருதியின் வேரறுத்தது ஓரவஞ்சனையில்லையா?

பெண் பார்க்க வந்த அன்று அழகர்சாமி, குதிரையிடம் இவ்வளவு அழகானவள் தனக்கு மனைவியாக வர வேண்டாம், தன்னைப் போல் தானே அந்தப் பெண்ணுக்கும் வரக்கூடிய கணவன் குறித்தான கற்பனை இருக்கும், தன்னால் அது தகர்ந்து போய்விடக் கூடாது என்று கூறுவதைக் கேட்ட மாத்திரத்தில் அவனை முழுமனத்தோடு ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிட்டாளே அந்தப் பெண் ராணி! சாத்தியம் தானா அது என்னும் சந்தேகம் எழுவதைத் தடுக்க முடியவில்லை. அதன் பின்பு ஒருமுறை அவளைத் தொட்டுப்பார்க்க அனுமதி கேட்டு தொட்டதால் உற்சாகம் கொள்கிறான் அவன். இந்த வெகுளித் தனத்தில் தன் மனத்தைப் பறி கொடுத்திருப்பாளோ என்னவோ! குதிரை காணாமல்போய் விட்டதைக் கூற வந்திருக்கும் அழகர்சாமிக்கு ஆறுதல் தருவதோடு அவன் பூ வைத்த தினத்திலிருந்து அவனையே புருஷனாக எண்ணி வாழ்ந்துவருவதாகவும் குதிரையுடன் வராவிட்டால் செத்துவிடுவதாகவும் சொல்லும் காட்சியின் - குதிரை திரும்பக் கிடைத்தால் அழகர்சாமியை இந்தப் பெண் மணமுடிக்க வேண்டியதிருக்குமேவெனும் பயம் பார்வையாளனைப் பதைபதைக்க வைக்கிறது - முடிவில் கேமரா கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து உச்சிக் கோணத்தில் வந்து நிற்கிறதே. இந்த இடத்தில் உயர்ந்து நிற்பது பெண்மையின் பெருமையா திரைப்படத்தின் தரமா என்பதைக் கணிக்க இயலாமல் தடுமாறிப் போய் விடுவான் பார்வையாளன். கிராமத் தலைவரின் மகனும் கோடாங்கியின் மகளும் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட தகவலைக் கேட்ட மாத்திரத்தில் இனி இந்த ஊரில் மழையே பெய்யாது என அவர் அளிக்கும் சாபத்திற்காகவே காத்திருந்ததுபோல் கொட்டித் தீர்த்துவிடுகிறதே அந்த முற்போக்கு மழை. உணர்வுக்கும் எதிர்வினைக்குமான கால அவகாசமே தரப்படாததால் செயற்கையானதாக மாறிவிடுகிறது அந்த மழை.


நல்லவன் வாழ்வான் தீயவன் அழிவான் என்று காலகாலமாய்ச் சொல்லப்படும் அதே கருத்தை உணர்த்துவதில் என்ன புதுமையைக் காண முடிகிறது என்பதே புரியவில்லை. அசலான கிராமம் என்னும் பெயரில் எதார்த்தத்தோடு எந்தவகையிலும் ஒட்டாத கதா பாத்திரங்கள் குறுக்கும் நெடுக்கும் வந்துபோகும் செயற்கையான கிராமம் தமிழ் சினிமாவின் அடிப்படைக் குணத்தில் எந்த மாற்றமுமின்றி வந்து செல்கிறது. தொடர்ந்து தமிழ்த் திரைப்படம் பார்க்கும் யாராலும் எளிதாகச் சொல்லிவிட முடியும் அந்தக் குதிரையின் சொந்தக்காரனது பெயர் கண்டிப்பாக அழகர்சாமியாகத்தான் இருக்கும் என்பதை. அவனுக்கு வேறு ஒரு பெயரை வைக்கக்கூடத் துணியாமல் தமிழ் சினிமாவின் எந்தச் சூத்திரத்தையும் கொஞ்சம்கூட மாற்றாமல் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை மாற்றுப்பட வரிசையில் வைத்துப் பார்க்க முயலும்போதுதான் இதன் அசல் தன்மை குறித்து ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 1977இல் வெளியான 16 வயதினிலே, 1978இல் வெளியான முள்ளும் மலரும், 1979இல் வெளியான உதிரிப்பூக்கள் போன்ற படங்களில் கண்டுணர்ந்த அசல் கிராமத்தையும் மனிதர்களையும் அவர்தம் உணர்வுகளையும் 2011இல் வெளியாகியுள்ள 82இல் நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிய இந்த அழகர்சாமியின் குதிரையில் தரிசிக்க முடியாததன் ஏக்கம் படிப்படியாக வளர்ந்து இறுதியில் திரையரங்கைவிட்டு வெளியில் வருகையில் இந்தப் படத்தின் மீதான எதிர்மறை உணர்வைக் கொண்டுவந்து சேர்க்கிறது.   

ஒப்பனையற்ற, ரத்தமும் சதையுமான அசல் மனிதர்களைக் காட்டி விட்டாலே அது தமிழ் வாழ்வு, தமிழர் கலாச்சாரம் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் நல்ல படம் போன்ற பாசாங்கைக் கொண்டிருக்கும் படங்களையும் மாற்றுத் திரைப்பட வரிசையில் வைக்கத் துணிவதென்பது தமிழ்த் திரைப்படம் குறித்த நமது குறை மதிப்பீட்டைக் காட்டுவதாக அமைந்துவிடும். அத்தகைய ஒரு முடிவு ஒருபோதும் திரைப்படங்களுக்கோ இயக்குநர்களுக்கோ வலுச் சேர்ப்பதாக அமையாது. அங்காடித் தெரு, நந்தலாலா போன்ற பாசாங்குப் படங்கள் வரிசையில் ஒன்றாகத் தன்னையும் இணைத்துக்கொண்டுவிட்டது இந்த அழகர்சாமியின் குதிரை. 

(காலச்சுவடு ஜூன் 2011 இதழில் http://kalachuvadu.com/issue-138/page73.asp பிரசுரமாகியுள்ள விமர்சனம் இது.)